வெளியே கொட்டிக் கிடந்த உறை குளிரிலிருந்து வெட்டி எடுப்பதைப்போல வெப்பக் கணப்பு சூட்டைத் தள்ளியது. தொண்டைக் கரகரத்தது. முகத்தில் ஏதோ ஊர்ந்து திரிவதைப்போன்ற உணர்வு. அருள்குமரன் குசினியிலிருந்து வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் சோபாவிற்குப் பக்கத்தில் சுவரோடு உட்கார்ந்திருந்தார். அடிக்கடி கழுத்தை, கன்னங்களைத் தொட்டுப் பார்த்தார். “தேகம் கொஞ்சம் கணகணக்குது. குளிராவும் இருக்கு, உள்ளை எரியிற மாதிரியும் இருக்குது.” அருள்குமரன் கிட்டப் போய் கழுத்தில் புறங்கையை வைத்தான். கொதி இல்லை. உடற் சூடுதான். “ச்சே.. அதொண்டுமில்லை. வெளிய மைனஸ் ஆறில குளிர் இறங்கி நிக்குது. உள்ளை ஹீற்றரிட சூடு. இப்பிடித்தான் இருக்கும். தொண்டை கரகரக்கும், காய்ச்சல் வாற மாதிரி இருக்கும். ஒரு தபோல்கனைப் போட்டுட்டுப் படுங்கோ.” மாத்திரையும் தண்ணீரும் எடுத்து வரப் போனான். திரும்பியபோது அற்புதம் கழுத்துக்குக் கொஞ்சம் கீழே விரல்களால் தடவிக் கொண்டிருந்தார். “இதென்ன.. கொப்புளம்போல.. பார்.” என்று அழைத்தார்.
அருள்னுமரன் மங்கலான வெளிச்சத்தைப் பிரகாசம் ஆக்கிவிட்டு அவருக்கு முன்னால் முழந்தாளில் இருந்தான். அற்புதம் வருடிய இடத்தில் தோல், செவ்வரத்தம் பூவைப்போல சிவந்திருந்தது. ஒரேயொரு கொப்புளம், மினுங்கிய நீர்த்துளிபோல. அம்மை வருத்தமோ? அது இப்படித்தான் ஆரம்பிக்கும். பயிற்சி முகாமில் இருந்தபோது ஈர்க்குவாணத்திற்கு வந்திருந்தது. இங்கும் அங்குமாக சோள முத்துக்கள் பூப்பதைப்போல தொடங்கிக் கடைசியில் தேகத்தைக் கோழிக் குஞ்சுகள் கொத்தி வைத்ததைப்போல ஆக்கிவிடும். ஈர்க்குவாணத்தை தனிக் கொட்டிலுக்கு மாற்றினார்கள். ஒருவரையும் உள்ளே போக வேண்டாம் என்று ரொக்கெட் கட்டளையிட்டான். “இது அம்மாளாச்சியின்ர வருத்தம். மச்சச் சாப்பாட்டோட யாரும் உள்ள வரக் கூடாது. பயபக்தியா இருக்க வேணும். நான் அவனைப் பாத்துக்கொள்ளுறன்.” இம்மாதிரியான நேரங்களில் வாழ்க்கைப் பாடுகளில் அனுபவப்பட்ட மூதாட்டிகளின் ஆளுமை அவனில் தொற்றிக் கொண்டுவிடும். முதிரை மரத்தில் இலைகளை நொடித்து ஈர்க்குவாணத்திடம் கொடுத்தான். “நகத்தால விராண்டாத.. புண் ஆகிடும். இந்த இலைகளால தடவு. முறைக்கு வேப்பம் இலைதான் இதுக்குச் சரி. அதுக்கு எங்க போறது?” வேலிப் பருத்தி இலைகளைக் குவித்து கல்லால் குத்தி அரைத்தான். அந்தக் களிம்பை கொப்புளங்களில் மருதாணிபோல பூசிவிட்டான். ஈழநாதம் பத்திரிகையை மடித்து விசிறினான். ஒருநாள் ஈர்க்குவாணம், கண்ணீரை உகுத்தவாறே “நீ என்ரை அம்மா மாதிரி என்னைக் கவனிக்கிறாய்.” என்று சொன்னானாம். அதற்கு ரொக்கெட் “நீ உன்ரை அம்மா அப்பாவை விட்டுட்டு அண்ணையை நம்பி இங்க வந்திருக்கிறாய். அண்ணை இங்க இருக்கிற பெடியளையும் பிள்ளைகளையும்தான் நம்பி இருக்கிறார். அதனால உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியது என்ரை பொறுப்புத்தான்.” என்றானாம்.
அற்புதத்திடம் ‘இது அம்மை வருத்தம்’ என்று சொல்லத் தயக்கமாக இருந்தது. அவரைத் தனி அறைக்குள்ளே வைத்துப் பராமரிக்க வேண்டும். இரவுகளில் குடிக்காமல் இருப்பாரா? பயபக்தியோடு இருக்க வேண்டுமென்று ரொக்கெட் சொன்னானே.. ரீவியும் பார்க்கக் கூடாதுபோல. வேலிப் பருத்தி இலைகளுக்கு எங்கே போவது? வேப்பம் இலை தமிழ்க் கடைகளில் கிடைக்குமா? இங்கே அவற்றை எல்லாம் பாவிக்க மாட்டார்கள். மருந்துக் கடைகளில் ஏதாவது கிரீம் வாங்கிப் பூசலாம். அபர்ணாவிடம் கேட்டால் சொல்வாள். ஏனென்று தெரியவில்லை, அற்புதத்தையும் வைத்துக்கொண்டு அவளோடு கதைக்கத் தயக்கமாக இருக்கிறது. நேற்று முன்தினம், அவனும் அவளும் பேருந்திலிருந்து இறங்கியபோது நிறுத்தத்தில் அற்புதமும் நின்றார். குப்பை எறிய வந்திருக்க வேண்டும். அருள்குமரனுடைய லெதர் குளிராடையைத்தான் அவசரத்திற்கு அணிந்திருந்தார். “இப்பதான் வந்தன். நீ வாற நேரம் எண்டதால கூட்டிட்டுப் போகலாம் எண்டு நிண்டன்.”
மூன்று பேரும் ஒன்றாக நடந்தார்கள், ஆனால் அருள்குமரன் அபர்ணாவோடு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவளும் யாரோபோலதான் நடந்தாள். “அவரைக் கண்ட உடனை நறுக் எண்டு கதையை நிப்பாட்டி விட்டாய். பிறகு நானாக வந்து செருகிறதா?” என்று அடுத்த நாள் கேட்டாள்.
“அவர் ஏதாவது நினைப்பார்.. அதுதான்..” என்றான். என்ன நினைப்பார் என்று அவனுக்கே குழப்பம். “அமந்தா என்ற ஒருத்தி இடையில் வந்தாள், போனாள். அதுக்குப் பிறகு இண்டைக்குப் பத்துப் பன்னிரெண்டு வருசம்.. எந்தப் பொம்பிளையோடயும் சிரிச்சுக் கதைச்சதில்லை.” என்று ஒருநாள் சொல்லியிருந்தார். அருள்குமரனும் அபர்ணாவும் அவருக்கு முன்னால் சிரித்துப் பேசினால் தன்னிரக்கத்தில் குமைவாரோ என்று ஒரு தயக்கம். எப்போதாவது குடி போதையில் வெளிப்பட்டுவிடும். அதுவும், அவருடைய அந்தக் கண்ணீர் நெஞ்சை அறுக்கிற கூரிய வாள். அபர்ணாவிடம் சொன்னால் சிரிப்பாள். “ஆளுக்கு ஆள் உதவியாக இருக்கிறது நல்லதுதான்.. அதுக்காக ஒவ்வொருக்காவும் அவர் என்ன நினைப்பாரோ எண்டு யோசித்து யோசித்துச் செய்யத் தேவை இல்லை. அதுவும் ரெண்டு நண்பர்களுக்கிடையில..”
இந்த உறவுக்கு நட்பு என்றுதான் பெயரா? இத்தனை வயது வித்தியாசத்தில்..? நிச்சயமாக அப்பா மகன் உறவு கிடையாது. அப்பாவும் மகனும் ஒன்றாக உட்கார்ந்திருந்து இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகு தொலைக்காட்சி பார்க்க மாட்டார்கள். இதை யோசிக்கும் போதெல்லாம் ஏதோ இரண்டு இயக்கப் பெடியங்களுக்கு இடையிலான உறவுபோலத் தோன்றும். அவரிடம் சொன்னதில்லை. ஞாபகம் வைத்திருந்து போதை கூடியதும் பச்சைத் தூசணத்தில் திட்டுவார். பகலில் வெயில் ஏறிய பிறகுதான் கடல், பாறைகளில் மோதிச் சிதறும். இவர் இரவுக் கடல். உக்கிரம், அழுகை, ஏக்கம் எல்லாமுமாகச் சிதறுகிற மனிதர். இந்த மனிதரை உடையவிடாமல் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அருள்குமரன் யோசித்திருக்கிறான். ஒரேயொரு பதில்தான் எஞ்சி நிற்கும், அது உண்மை இல்லை என்றபோதும்.
அற்புதத்தின் கடந்த காலத்திற்கு நான்தான் பொறுப்பாளி. நான் தான் குற்றவாளி. நான்தான் கூனிக்குறுகிப் போய் நிற்கிறேன்.
0
இரண்டாம் நாள், உடம்பு முழுக்க தண்ணீரில் ஊறிய கடலைப் பருப்புக்களைத் தூவியதைப்போல கொப்புளங்கள். அற்புதம் அதிகாலையிலேயே அனுங்கத் தொடங்கிவிட்டார். அருள்குமரன் படுக்கை விரிப்பை மாற்றிச் சுத்தப்படுத்தினான். இரவே அபர்ணாவிடம் குறும்செய்தியில் கேட்டபோது “டொக்டரிடம் போகத் தேவையில்லை. நீ அவருக்குக் கிட்டப் போகாத” என்று பதில் அனுப்பியிருந்தாள். அப்படியெல்லாம் விட முடியாது. அவன்தான் அவரை அழைத்துச் சென்று படுக்கையில் வளர்த்தினான். இலைதழைகளால் உடலில் வருடினால் சுகமாக இருக்கும், ஆனால் வெளியே மரங்கள் உதிர்ந்து மொட்டையாக நின்றன.
“நீங்கள் கொஞ்ச நாளைக்கு சைவச் சாப்பாடுதான் சாப்பிட வேணும். நிறைய மோர் குடிக்க வேணும்.”
அற்புதம் அவனைக் கண் வெட்டாமற் பார்த்தபடி கைலியை மேலுயர்த்தி உள்ளாடையைக் கழற்ற முயற்சித்தார். அருள்குமரன் அதைக் கழற்றி உடுப்புக் கூடையில் போட்டான். இன்றைக்கு அவனுக்கு மத்தியானம் தொடங்குகிற வேலை. போகலாமா தெரியாது. அபர்ணாவிடம் கேட்டபோது “ஓம்.. இது தொற்று வருத்தம். வராத. நான் வேலையிடத்தில சொல்லிவிடுறன்.” என்று சொன்னாள்.
அன்று மாலையே தபாற்பெட்டிக்குள் களிம்பு மருந்தை வைத்துவிட்டு தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள். “அதை வெதுவெதுப்பான தண்ணியில கரைச்சு உடம்பில பூசச் சொல்லு. அவரே பூசட்டும். நீ தள்ளி நில்லு.” அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே சென்று மருந்தை எடுத்து வந்தான். அற்புதத்திற்கு சில கடிதங்களும் வந்திருந்தன. அவருக்குப் பக்கத்தில் வைத்தான். குப்புறப் படுத்திருந்தார். முதுகு முழுக்க அவிந்த கொண்டைக் கடலைகள் உரிந்ததைப்போல கொப்புளங்கள். சீழ் கசிந்தது. ஓரிரண்டு கொப்புளங்கள் காய்ந்து கிடந்தன. இனி மெல்ல மெல்ல உதிர்ந்து விழும். “பில்லுகளாகத்தான் இருக்கும், கொண்டு போய் ரீவிக்குக் கீழ வை.” அற்புதம் தலையை உயர்த்தாமலேயே சொன்னார்.
“அப்பிடியே படுத்திருங்கள். மருந்து பூசி விடுறன்.”
அற்புதம் உடலைத் திருப்பினார். ‘அது என்ன மருந்து?’ என்பதைப்போன்ற பார்வை. “யார் தந்தது?”
“அபர்ணா..”
“யாரது?”
அருள்குமரன் குசினிக்குள் சென்று சில்வர் பாத்திரத்தில் சுடுநீரை ஏந்தினான். களிம்பைக் கொஞ்சமாகப் பிதுக்கிக் கலந்தான். ‘யாரது?’ அந்தக் கேள்விக்கு ஒரு வார்த்தையில், பதிலைச் சொல்ல முடியவில்லை. அவள் யார்? ஆன்மாவிற்குக் கட்டளையிடும் அந்தக் குரலைக் கேட்கிறபோதெல்லாம் முன்னர் எங்கேயோ தொலைந்து, திரும்பவும் கிடைத்ததைப்போல தோன்றுகிறது. அது ஆராதனாவின் குரலா? ரொக்கெட்டின் குரலா? ஊரிலே ஒரு கன்னியாஸ்திரி டொக்டர் இருந்தாரே.. அவரின் குரலா? அல்லது அனைவரினதும் ஒற்றைக் குரலா? அவளுடைய அருகாமையை எதிர்பார்க்கிறானா என்று தெரியவில்லை, ஆனால் அவனைக் கேட்க அவளுடைய காதுகள் வேண்டியிருக்கிறது.
இரண்டு பேரும் சில நாட்களில் ஒன்றாகத்தான் வேலையிலிருந்து திரும்புவார்கள். பேருந்தில் அவர்கள் பேசிக்கொள்வது அச்சு அசல் பட்டிமன்றத்தைப் பார்த்த மாதிரி இருக்கும். அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் பயணிகள் நிறுத்தத்தை மறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. தீராத கதைகள் என்றால் பேருந்திலிருந்து இறங்கிய பிறகு ஏரிக் கரைக்குப் போவார்கள். கோடையில் இரவு ஒன்பது மணிவரையும் சனங்கள் குளித்துக் கொண்டிருக்கிற இடம் அது. சிறுவர்கள், நீளக் கழுத்துள்ள வாத்துக்களுக்கு பாண் துண்டுகளைப் பிய்த்து எறிவார்கள். இளையவர்கள் கூடியிருந்து பியர் அருந்துவார்கள். அவர்கள் பரவவிடும் துள்ளலான இசை நீரில் நனையும்.. இதுவெல்லாம் இவர்களுக்கு ஓய்வின் தருணங்களா? அல்லது வாழ்வின் தருணங்களா? என்று அருள்குமரன் யோசித்துப் பார்த்திருக்கிறான். ஏனோ இம்மாதிரியான இடங்களில் தமிழர்களை அதிகமும் காண முடிவதில்லை. அதைப்பற்றி ஒருநாள் கதைத்தபோது “அவங்கள் வேலையால வந்ததும் முதல் வேலையா ரீவியைப் போட்டு, எது போனாலும் பார்ப்பாங்கள். யாருக்காவது போனைப் போட்டு வேற யாரோவைப் பற்றி கதைப்பாங்கள். அவ்வளவுதான், படுத்து நித்திரையாகி விடுவாங்கள். சனி ஞாயிறில ஏதாவது சாமாத்திய வீட்டுக்குப் போய் எண்ணெய் மிதக்கிற ஆட்டுக் கறியை சோற்றில குழைச்சு அடிச்ச பிறகு, பொம்பிளைகள் புதுசா வந்த ப்ளவுஸ் டிசைனைக் கதைப்பார்கள். ஆம்பிளைகள் தனிய இருந்து தண்ணி அடிப்பார்கள். வெறி ஏறியதும் ‘சண்டையைத் தொடங்க வேணும், யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வேணும்’ என்று கத்துவார்கள். அவர்கள் இங்கெல்லாம் வரமாட்டார்கள்.” என்று அபர்ணா சொன்னாள். அருள்குமரன் சிரித்தான். “சாமத்திய வீட்டுக்கும், கல்யாண வீட்டுக்கும் தவறாமல் போய் வந்த ஒருவராலதான் இப்பிடிக் கச்சிதமாச் சொல்ல முடியும்.” அபர்ணா அதற்குப் பொய்க் கோபத்துடன் முதுகைக் குத்தினாள். இந்த நெருக்கம் அவளுடைய வீட்டுக்குப் போய் வந்த பிறகு இன்னமும் அதிகமாகிவிட்டது. அடிக்கடி அல்ல, ஒரேயொரு முறைதான் போயிருக்கிறான். போன ஓகஸ்ட்டில் ஒருநாள் “நாளைக்கு வீட்டை வா.” என்று அவள்தான் அழைத்தாள். அப்போது குளிர் தொடங்கவில்லை. கோடையின் இறுதி நாட்கள். மொறு மொறுத்த வெயில். வெளிச்சத்தின் உற்சாகமா? அல்லது அவளுடைய அழைப்பா? அவன் துள்ளித் துள்ளி நடந்தான். ‘பத்து மணிக்கெல்லாம் வந்துவிடு.’ என்று சொல்லியிருந்தாள். மதியத்திற்குப் பிறகு அவளுக்கு வேலை இருந்தது. “உனக்கு மீன் கறியோடு மரவள்ளிக் கிழங்குக் கறி பிடிக்கும்தானே?”
உயர்ந்த, வெளிர் பச்சை நிற அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில் வந்து நின்றான். அழைப்பு மணிப் பொத்தான்களுக்கு அருகிலே இருந்த பெயர்களைக் கண்களால் மேய்ந்தபோது அது தட்டுப்பட்டது. ‘அபர்ணா அரங்கன்’ திடீரென்று இருண்டதுபோல ஆகிவிட்டது. பொத்தானை அழுத்தாமல் நீண்ட நேரமாக அந்தப் பெயரையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏதோ ஒரு சோர்வு. கொஞ்ச நேரம் கழித்துப் போகலாமோ? எதுவும் வாங்கி வரவில்லை. வெறுங்கையோடு வந்திருக்கிறேன். திரும்பிப் போய் அப்பிள் பழங்களாவது வாங்கி வரலாமா? அல்லது இன்னொரு நாளைக்கு..? கால்கள் பின்னடித்தன. விரலோ அனிச்சையாகப் பொத்தானை அழுத்தியது. க்ர்ர் என்ற சத்தம். கதவைத் தள்ளித் திறந்தான்.
“லிப்ட் இல்லை. நாலாம் மாடிக்கு ஏறி வா..” ஏதோ குகையில் ஒலிப்பதைப்போல மேலே அபர்ணாவின் குரல் கேட்டது. ஏறினான். வாசலிலேயே நின்றாள். சீத்தைத் துணியாலான இரவு உடை. கலைந்த கேசத்தை அள்ளி உச்சியிலேயே கொண்டை. “உள்ளை வா..” காலணிகளைக் கழற்றியபோதே தலையை நிமிர்த்தி நோட்டம் பார்த்தான். வலப்பக்கமாக படுக்கை அறையும் மறுபக்கத்தில் குசினியும் குளியல் அறையும் இருக்க வேண்டும். நேராகப் போனால் வரவேற்பறை. நடந்து போனான். எதிர்பார்த்ததைப்போலவே தொலைக்காட்சி இருந்தது. அருகே இசைத்தென்றல் என்று எழுதப்பட்ட வீடியோ கசெற்றுக்கள் இருக்க வேண்டுமே.. அவற்றைக் காணவில்லை. அபர்ணாவும் அவனுக்குப் பின்னாலேயே வந்திருக்க வேண்டும், “கோலா குடிக்கிறாயா?” என்று கேட்டாள். “வேண்டாம்.” சோபாவில் உட்கார்ந்தான். அவள் ஜன்னல் திரையை நீக்கி வெளிச்சத்தை வர வைத்தாள். “ரீவி பார். நான் சமைச்சிட்ட வாறன். முடியுது.”
சோபாவின் மேலே சுவரில் ஒரு குழந்தையின் வண்ணப்படம் மாட்டப்பட்டிருந்தது. நான்கு அடி நீளமாவது இருக்கும். புல்வெளியில் உட்கார்ந்திருக்கிற குழந்தை.. வெள்ளைக் கத்தரிக்காயைப்போன்ற மொளு மொளுத்த கை கால்கள்.. பாலூறுகிற வாய்.. கன்னக் குழிச் சிரிப்பு.. இதேபோல ஒரு படம்தான் தமிழ்க் கடையிலும் மாட்டப்பட்டிருந்தது. வரவேற்பறையிலேயே ஒரு புத்தக இறாக்கை இருந்தது. ஆரம்பத்தில் அவளை ஏரிக் கரையிலும் பேருந்துகளிலும் பார்த்த நாட்களில் புத்தகங்களோடுதான் கண்டிருக்கிறான். எழுந்து புத்தகங்களைத் தட்டிப் பார்த்தான். ‘என் கதை’.. ‘பெண் என்னும் பொருள்’.. ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ – அதை எடுத்துப் புரட்டினான். நிறைய வரிகளுக்கிடையில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருந்தது. ‘…குழந்தைகளை அஷேராவின் மடிக் குருதிக்குள் கிடத்தினார்கள். சர்ப்பங்கள் கேசத்தினின்றும் இறங்கிச்சென்றன. குருதி பாலாகிற்று. அஷேரா முப்பத்தியெட்டுக் குழந்தைகளுக்கும் முலையூட்டத்தொடங்கினாள்…’ அஷேரா! அபர்ணா சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டபோது அவளுக்கும் இதுதான் பெயர். அஷேரா பற்றிக் பவுல்! “நீ கிறிஸ்ரியன் தானே? அஷேராவைத் தெரியுமா என்று ஒருநாள் கேட்டிருந்தாள். அந்தப் பெயரைக் கேள்விபட்டதே இல்லை. பண்டைய தாய்மைத் தெய்வமாம். கருவுறுதலின் குறியீடு. “பைபிளில் இருக்கக் கூடும். நான் படிச்சதில்லை.” என்றான்.
“இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக அவளை அழித்துவிட்டார்கள்.”
“ஏன்..?”
‘உனக்குத் தெரியாதா?’ என்பதைப்போல ஒரு புன்னகையை மட்டும் அபர்ணா சிந்தினாள். மௌனமானாள்.
தொலைக்காட்சியின் மேலே அபர்ணாவும் அரங்கனும் நெருக்கமாக அணைத்துக் கொள்வதைப்போல ஒரு படம் சட்டமிட்டு வைக்கப்பட்டிருந்தது. திருமண வரவேற்பு நிகழ்வுபோல. சிவப்பு வண்ணச் சேலை உடுத்தியிருந்தாள். கன்னங்கள் ஒடுங்கியிருந்ததால் பற்கள் மிதந்து வெளித் தெரிந்தன. பூரிப்பான சிரிப்பு. ‘இந்த இடத்தைவிட்டு எங்காவது போய்விட வேண்டும்.’ “பாத்ரூம் எங்க இருக்கு?” அவனையும் அறியாமல் குரல் உயர்ந்தது. “இது பெரிய அரண்மனைதானே? தேடிக் கண்டு பிடிக்கிறதுக்கு. குசினிக்குப் பக்கத்துக் கதவு.” என்றாள் குசினிக்குள் இருந்து.
கதவைத் திறந்துகொண்டு நுழைந்தான். நாசியில் பூக்களின் நறுமணம்.. இதுக்குப் பெயர் லவென்டரோ என்னமோ.. ஊதா நிறத்தில் பூத்திருக்கும். குளியல் தொட்டியை மறைத்திருந்த ப்ளாஸ்ரிக் திரையை நகர்த்தினான். பளிச் என்று இருந்தது. தேகம் உரஞ்சுகிற உருளைக் கல் ஓரமாகக் கிடந்தது. சுவரில் முகம் பார்க்கும் கண்ணாடி. கீழ்த் தட்டில் சீப்புகள், கூந்தல் கிளிப்புகள், முகக் க்ரீம்கள்.. ஒரு ஷேவிங் ரேஷரையும் கண்டான். கண்ணாடிக் குவளையில் இரண்டு பல் தூரிகைகள் ஒன்றை ஒன்று கட்டிப் பிடித்ததைப்போல இருந்தன. ஒரு மாதிரிப் படபடப்பானது. கொமோட் தண்ணீரை வெறுமனே அழுத்தினான். அது இரைச்சலிட்டு ஓய்ந்ததும் இன்னொரு முறை அழுத்திவிட்டு வெளியேறினான். திரும்பவும் வரவேற்பறைக்கு வந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அலைவரிசைகளை முன் பின்னாக மாற்றினான், நள்ளிரவில் அற்புதம் தேடுவதைப்போல.
யாரோ இரண்டு அரசுத் தலைவர்கள் கைலாகு கொடுக்கிறார்கள். அடர்ந்த காட்டில் ஒரு சிறுத்தைப் புலி மெதுவாக நடந்து போகிறது. கடலின் அடியில் பவளப் பாறைகளின் இடுக்கில் திரளாக வண்ண மீன்கள். இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் கெட்ட வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள். பாய்மரக் கப்பல் அலையில் தள்ளாடுகிறது. அருள்குமரன்போதும் என்பதைப்போல ரிமோட்டை கீழே வைத்தான். எஞ்சிய காட்சியில் கட்டிட இடிபாடுகள் தென்பட்டன. புகை, புயல் சுழியைப்போல மேலே எழுகிறது. சற்று முன்னர்தான் கட்டிடம் பொல பொல என்று சரிந்திருக்க வேண்டும். நிச்சயமாகக் குண்டுத் தாக்குதல்தான். பலஸ்தீனத்தின் காஸாப் பகுதி. தூசு படிந்த முகங்களோடு சனங்கள் நாலா புறமும் ஓடுகிறார்கள். அம்புலன்ஸ் வண்டிகளின் சத்தம் காதைப் பிளக்கிறது. ஒலியைத் தணித்தான். சிதறிய கொங்கிரீட் இடிபாடுகளை நான்கைந்து பேர் அவசர அவசரமாக அப்புறப்படுத்துகிறார்கள். ஒரு சதுரத் துவாரம் உருவாகிறது. ஒருவர் குதித்துக் கீழிறங்கிய சொற்ப நேரத்தில் பிஞ்சுக் குழந்தை ஒன்றைத் தாங்கிய இரு கைகளையும் மேலே உயர்த்துகிறார். சாம்பலில் குளித்த குழந்தை, கண்களை மூடியிருந்தது, ஒரு சின்னச் சிராய்ப்புக் காயம் கூட இல்லை. உயிரோடு இருக்கிறதா? ‘அல்லாவிற்கு நன்றி’ என்ற குரல்கள் கண்ணீரோடு எழுகின்றன. குழந்தை துணுக்குற்றுக் கண்களைத் திறந்தது. அருள்குமரன் தொலைக்காட்சியை அணைத்தான்.
அபர்ணா கோப்பைகளில் சாப்பாட்டை நிரப்பி எடுத்து வந்தாள். இரு கைகளாலும் வாங்கி இடது கையில் ஏந்திக் கொண்டான். “நீங்கள் சாப்பிடேல்லையா?”
“இல்லை. சாப்பிட்டால் வேலை நேரத்தில நித்திரை வரும்.” அவள் சோபாவின் மறு முனையில் அமர்ந்தாள். அவளுடைய பார்வை எதேச்சையாக அலைகிறபோது திருமணப் புகைப்படத்தில் சஞ்சரிக்கும் என்றும் அதனால் சஞ்சலப்படுவாள் என்றும் அருள்குமரனுக்கு தோன்றியது. அப்படி எதுவுமே இல்லை. அவள் இயல்பாக ரிமோட்டை எடுத்து “ஏன் ரீவி பாக்கேல்லயா?” என்று கேட்டாள்.
“எல்லாம் டொச் சனல்கள்.”
“இல்லையே.. தமிழ் ரீவி இருக்கே..”
அவள் எதையோ அழுத்தினாள். அந்த நொடியில் திரையில் இரத்தம் வழியத் தொடங்கிற்று. “சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் நடத்திய இந்த அரக்கத் தனமான குண்டு வீச்சுத் தாக்குதலில் செஞ்சோலை வளாகத்திலிருந்த எழுபதுக்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் சிதறிப் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.” ஒலித்துக் கொண்டிருந்த குரலையும் மீறிய சா ஓலம். படுகாயத்தின் கதறல். பள்ளிச் சீருடை எல்லாம் ரத்தம்.. இதோ.. இதோ கந்தக நெடி நாசியை அடைக்கிறது. சோற்றை அளைந்த விரல்களின் நடுக்கம்.. ரத்தம் மணக்கிறதா? அம்புலன்ஸ் வண்டிகளின் சத்தங்களில் காது செவிடாகிறது. தேகம் பாரம் இழக்கிறது. கண்கள் இருண்டுகொண்டு வந்தன. நான் இரத்தத்தை ஊற்றியா சோற்றுக்குள் பிசைந்து கொண்டிருக்கிறேன்? ஓர் உலுப்பல். சளீங் என்ற சத்தத்தோடு பீங்கான் கோப்பை கீழே விழுந்தது. தசைத் துணுக்குகளாக சோற்றுப் பருக்கைகள்.. “ஐயோ..”

“என்னடா உனக்கு?” அபர்ணா துடித்துக்கொண்டு எழுந்தாள். அவன் அவளைப் பொறுக்கச் சொன்னவாறு எழுந்தவன்தான் சுழன்று விழுந்தான். தலை ணங் என்று தரையில் மோதியது. ஒரு கால் சோபாவில் ஏறி நின்றது. ‘ஐயோ பிள்ளைகள் கத்துகிறார்கள்.. கத்திக் கத்திச் சாகப் போகிறார்கள். யாராவது ரீவியை நிப்பாட்டுங்கள்.’ என்று தோன்றுகிறது, ஆனால் குரல் இல்லை. இந்த இடத்தைவிட்டு ஓடி விட வேண்டும். வெயில் பட்டால் சரியாகிவிடும். இன்னமும் ரீவி அலறுகிறது. ஒவ்வொரு அலறலும் ஒவ்வொரு காட்சி. குழந்தையின் பிஞ்சுக் கால் வெண்ணிறக் காலணியோடு தனியக் கிடக்கிறது. இரட்டைப் பின்னலோடு துண்டிக்கப்பட்ட தலையின் ஒற்றைக் கண் இதோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இரத்தம் ஊறிய பள்ளிப் புத்தகங்கள்.. அருள்குமரன் பற்களை நருமினான். அவனுடைய உடலைப் புரட்டுவர் யார்? “அருள்குமரன்.. நான் கதைக்கிறது கேட்குதா?” ஆராதனாவா? அபர்ணாவா? நீரின் குளிர்த் துளிகள் முகத்தில் விழுகிறது. நெற்றியில் ஓர் உள்ளங்கைச் சூடு. அவன் கண் திறந்தான். அபர்ணா நெஞ்சில் கையை வைத்து “கடவுளே.. எனக்குப் போன உயிர் இப்பதான் திரும்பி வந்தது.” என்றாள். அவளைக் கலங்கலாகத்தான் தெரிந்தது. தண்ணீர்த் தாகம். எச்சிலை விழுங்க விழுங்க தொண்டைக் குழி சிரமப்பட்டு அசைந்தது. அபர்ணா பக்கத்திலேயே உட்கார்ந்தாள். அவனுடைய தலையைத் தூக்கி மடியில் கிடத்தி குவளையிலிருந்த தண்ணீரை வாயில் பருக்கினாள். “உனக்கு ஒண்டுமில்லையடா.. இயக்கத்தில இருந்த காலத்தில ரத்தத்தையும் சாவையும் பார்த்துப் பார்த்து உனக்கு இப்பிடியாகுது.” அபர்ணா அவனுடைய நெற்றியில் கை வைத்து வருடிக் கொண்டே இருந்தாள். அவளுடைய கைச் சூடு நெற்றியிலிருந்து தேகமெல்லாம் பரவியது.
