அஷேரா – 19

தனுஷ்கோடிக்குப் பக்கத்தில்தான் இந்த மணல்திட்டு இருக்கிறதென்று படகோட்டி சொன்னான். விடிந்தால்தான் தெரியும். இப்பொழுது இரவு இரண்டு மணியிருக்கலாம். தூரத்தில் வெளிச்சப் பொட்டுக்கள் தெரிந்தன. மீன்பிடிப் படகுகள். இந்தத் திட்டு தண்ணீருக்குள் முட்டை மிதப்பதைப்போல மிதக்கிறது என்று அருள்குமரனுக்கு ஏனோ தோன்றிற்று. முதுகுப் பையை நெஞ்சில் வைத்து அணைத்தபடி மணலில் உட்கார்ந்திருந்தான். ஈரலிப்பான மண். கடலின் அலைகள் பெரிய கிடாரத்தில் தளும்புவதைப்போல வந்து வந்து போயின. மெல்லிய வருடல்தான், இதுவே வருகிற வழியில் மூர்க்கமாக உதைந்து விளையாடியது. பிறகு சோர்ந்தது. படகோட்டி இயந்திரத்தை நிறுத்தினான். “இதுக்கு மேல வள்ளம் வராது. இறங்கிப் போ.” என்றான். சுற்றிவரத் தண்ணீர். எங்கு போவது?

“இடுப்பளவு தண்ணிதான். அந்தா பார். ஏழு வேட்டைக்கார நட்சத்திரங்கள்.. அதைப் பார்த்துக்கொண்டே நட. பத்துப் பதினைஞ்சு நிமிசத்தில நிலம் வந்திடும்.”

அருள்குமரன் தயங்கினான். அகதிகளைக் கூட்டிக்கொண்டுவந்து இந்த மாதிரி மணல் திட்டுக்களில்தான் இறக்கிவிடுகிறார்கள். காலையில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களோ அல்லது இந்தியக் கடற்படையோ அவர்களை அழைத்துச் சென்றுவிடுவார்கள். அப்படித்தான் அவனுக்கும் சொல்லப்பட்டது. என்றாலும் ஒரு தயக்கம். இங்கே ஐந்தாறு மணல் திட்டுக்கள் இலங்கைக்குச் சொந்தமானவையாம். சில நேரங்களில் அவற்றிலும் இறக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள். அந்த அகதிகளை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்து வைக்கிறது.

“ஒருவேளை நிலம் வராட்டி நான் செய்யிறது? திரும்பி வரும் வரைக்கும் இங்கேயே நிக்கிறீங்களா?” என்று அருள்குமரன் கேட்டான்.

“எனக்கு நாப்பது வருசமா இந்தக் கடலைத் தெரியும். எங்க திமிறும்.. எங்க அடங்கும்.. எங்க நிமிரும்.. எங்க பணியும்.. எல்லாம் தெரியும். நீ இறங்கி நட.” படகோட்டி உத்தரவிட்டான்.

“இந்தத் திட்டு இந்தியாடைதான் எண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?” அருள்குமரன் மறுபடியும் கேட்டான்.

படகோட்டி  சலித்துக்கொள்வது அவனுடைய குரலில் தெரிந்தது. “உனக்கு எல்லாத்தையும் சொல்லித்தானே ஏத்தினது?” என்றான். உண்மைதான், இரவு பாலைதீவிலிருந்து புறப்படும்வரைக்கும் அருள்குமரன் இதே கேள்விகளைத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தான். பாலைதீவு, பூநகரியிலிருந்து பன்னிரெண்டு மைல் தொலைவில் இருந்தது. தீவு என்று பெயர்தானே ஒழிய அது இன்றைக்கோ நாளைக்கு தண்ணீருக்குள் மூழ்கிப்போய்விடும் என்ற மாதிரியான வெறும் கட்டாந்தரைதான். ஒரேயொரு அந்தோனியார் கோவில் மட்டும் இருந்தது. முன்னர் வருடா வருடம் மக்கள் கூடி திருவிழா செய்வார்களாம். போருக்குப் பிறகு அவரைக் கைவிட்டு விட்டார்கள். பகலிலேயே பேயுலகு மாதிரி இருந்தது.

அருள்குமரனும் படகோட்டியும் நேற்று மதியம்போல பள்ளிமுனையிலிருந்து பாலைதீவுக்கு வந்தார்கள். அருள்குமரன் மீனவனைப்போல ஓட்டப் பந்தயக் காற்சட்டையும் பனியனும் அணிந்திருந்தான். படகோட்டி மடித்துக் கட்டிய கைலிதான். அவசரமென்றால் கழற்றி வைத்துவிட்டு கடலுக்குள் இறங்குவான்போல. அவனுக்கு அறுபது வயது இருக்கக் கூடும். பார்க்கிற நேரமெல்லாம் வெற்றிலையைச் சப்பிக்கொண்டே இருந்தான். “முடிஞ்ச வரைக்கும் உன்னைத் திட்டில இறக்கி விட்டுட்டு நான் வந்துவிடுவன். ஒருவேளை எங்களை இந்தியன் நேவி பிடிச்சிட்டுப் போனால் கூட மூண்டாவது நாள் நான் ஊருக்கு வந்திடுவன்.” அவன் களங்கண்ணி வலைக் கம்பு ஒன்றிலே படகைக் கட்டினான். இரண்டு பேரும் கரைக்கு நடந்தார்கள். இடுப்பளவு தண்ணீர். கீழே நிலம் சேறு மாதிரி வழுக்கியது. கரையில் சடைத்து வளர்ந்திருந்த புதருக்கு அருகில் கைலியை விரித்து உட்கார்ந்தார்கள். மண்டையைப் பிளந்த வெயிலுக்கு அந்த நிழல் ஆறுதலாக இருந்தது. நல்ல பசி. கொண்டுவந்த பாணையும் வாழைப்பழத்தையும் சாப்பிட்டார்கள். அருள்குமரன் எழுந்து தீவுக்குள் நடந்துவிட்டு, முக்கியமாக அந்த அந்தோனியார் கோவில் வரை போய் வரலாமென்று நினைத்தான். பிறகு அந்த எண்ணத்தைக் கைவிட்டான். யாருமற்ற தீவு, ஏதோவொரு அமானுஷயத்தில் புதைந்து கிடப்பதைப்போல தோன்றிற்று. ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு யாரெல்லாம் நடந்து திரிந்திருப்பார்கள்? யாரெல்லாம் ஆட்சி செய்திருப்பார்கள்? இந்தச் சிறு நிலத்தை யார் வைத்துக்கொள்வதென்று யுத்தங்கள் நடந்திருக்குமா? எத்தனை பேருடைய ரத்தத்தை இச் சுடுமணல் உறிஞ்சியிருக்கும்?

இரவு ஒன்பதைத் தாண்டியிபிறகு பாலைதீவிலிருந்து படகு புறப்பட்டது.    

0

குருதி பெருகும் கையால் அடிவானத்தை அளைந்ததைப்போல செந்நிறம் புலப்பட்டது. இதோ ஒரு புதிய நிலம். நாடற்ற அகதிகளின் கால்கள் மட்டுமே அடிக்கடி மிதிக்கும் இடம். அருள்குமரன் பரபரப்பானான். கீழ்வானம் வர்ணக் குழம்புகளாக ஜொலித்தது. சிவப்பு.. செம்மஞ்சள்.. சாம்பல்.. அத்தனையும் சொற்ப நேரத்திலேயே தண்ணீரில் கரைந்தன. குளிர்ந்த வெயில் ஏறியது. நாற்புறமும் தண்ணீர். நடுவில் வெறும் கடற்கரை மிதக்கிறது. தொம் என்று எகிறித் துள்ளினால் மூழ்கி விடுமோ? அதோ.. தகதகவென்ற சூரியன். இந்நிலத்தில் அவனுக்காகவே எழுகிறது. அவனை மட்டுமே கடல் சூழ்ந்திருக்கிறது. அவனுக்குத்தான் வானம் திறந்திருக்கிறது. ஒருவித கிளர்ச்சி. ஆனந்தக் கூத்தாடும் உன்மத்தம். துள்ளி எழுந்து நின்றான். இரு கைகளையும் அகல விரித்து வானத்தைப் பார்த்தான். எதைப்பற்றியும் யோசனை இல்லை. யாரைப்பற்றியும் கவலை இல்லை. அவனை அழைத்துச் செல்லப் போகும் மீனவர்கள், எதிர்கொள்ள வேண்டிய விசாரணைகள், அதிகாரிகள், பொலிஸ்காரர்கள், அகதிமுகாம்.. எல்லாமும் மறந்து போயின. பேரண்டத்தின் முன் நான் வெறும் துகள். ஒரு மயிர். நான்கு திசைகளிலும் ‘ஓ..’ என்று இரைய வேண்டும்போல தோன்றிற்று. ஆடைகளைக் களைந்து மல்லாந்து கிடந்து சுயகைமதுனம் செய்ய வேண்டும். 

எழு மணிக்கெல்லாம் முழு வெளிச்சம் பரவிவிட்டது. படகுகளைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அருள்குமரன் சேர்ட்டைக் கழற்றிக் காற்றில் அசைத்தான். அவனைக் கவனித்துவிட்டார்கள். பொறுத்திருக்கும்படி சைகை செய்தார்கள். ஆளரவத்தைக் கண்டபிறகு இந்த நிலம் ஒரு கொல்லைப் புறம்போல சுருங்கிவிட்டது. தண்ணீர்ப் போத்தலிலிருந்து ஒரு மிடறு குடித்தான். தரை சுட்டது. நடந்துவந்து பாதங்களை கடல் நனைக்கிற மாதிரி நின்றான். அலை, கிழிஞ்சல்களைத் தள்ளிவந்து விரல்களில் செருகியது. இரவில் கடல் வற்றுகிறபோது வெளியே வருகின்ற மண் திட்டுக்கள் பகலில் மறுபடியும் மூழ்கிவிடுமாம். காலடியில் நீர் மட்டம் அதிகரிக்கின்றதா? அது கணுக்கால் அளவு உயர்ந்தாலே காணாமல்போகிற ஈரத் தரை இது. கடல் எதுவரை உயரும்? முழங்கால் அளவிற்கு..? இடுப்பளவிற்கு..? நெஞ்சு..? கழுத்து..? அவனுடைய சிறு வயதில் படித்த சித்திரக் கதையொன்று ஞாபகத்தில் வந்தது. அன்றைக்கு முழுவதும் இதை ஏன் படித்தேன் என்று அந்தரித்துக்கொண்டு திரிந்தான்.  

கதை இதுதான். ஒரு தாய்க் குரங்கு தன்னுடைய குட்டியோடு இப்படி ஒரு மண் திட்டிலே அகப்பட்டுவிட்டது. திரும்பிய இடமெல்லாம் தண்ணீர். இரண்டுமே சோர்ந்து போய்விட்டன. விடியட்டும், யாராவது வருவார்கள் என்று தாய்க் குரங்கிற்கு நம்பிக்கை. பொழுது புலரத் தொடங்கியது. கடல் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. புல், பூண்டு, மரம், செடி, கொடி எதுவுமே இல்லாத நிலம். தண்ணீர் கால் வரை ஏறியது. தாய்க் குரங்கு குட்டியைத் தூக்கி இடுப்பில் வைத்தது. இப்பொழுது தண்ணிர் நெஞ்சைத் தொட்டது. குட்டியைத் தலைக்குக் காவியது தாய். கடல் ஓய்வதாக இல்லை. கழுத்து.. வாய்.. மூக்கு.. என்று உயர்ந்தது. தாய்க் குரங்கு மூழ்கிவிட்டது. அதற்கு மூச்சுத் திணறியது. அது அங்கும் இங்குமாகத் தத்தளித்தது. இதோ நெஞ்சு வெடிக்கப் போகிறது என்று யோசித்த கணத்தில் தாய்க் குரங்கு குட்டியைத் தூக்கிக் கீழே போட்டுவிட்டு அதன் மேலே ஏறி நின்றது. அருள்குமரன் மனம் சோர்ந்து போனான். குனிந்து இரு கைகளாலும் நீரைக் கோலி முகத்தைக் கழுவினான். உப்புக் கசத்தது. மண் திட்டுக்கு அருகாக ஒரு மீன்பிடிப் படகு வந்தது. அவனை நடந்துவருமாறு அழைத்தார்கள். இடுப்பில் கட்டியிருந்த சயனைட் குப்பியைக் கழற்றி கடல் மணலில் புதைத்தான். படகை நோக்கி நடந்தான்.

சொற்ப நேரத்தில் விஷம் ஊறிய நிலத்தைக் கடல் விழுங்கும்.

0

ராமேஸ்வரம் மீன்பிடித் துறையிலிருந்து இருபது நிமிட நடை தூரத்தில் பொலிஸ் நிலையம் இருந்தது. இரண்டு மீனவர்கள் அவனை அழைத்துச் சென்று பொலிஸ்காரர்களிடம் ஒப்படைத்தார்கள். அன்றைக்கு வேறேதோ படகிலும் அகதிகள் வந்திருந்தார்கள். அவர்கள் வந்த படகு பழுதடைந்து ஓர் இரவும் ஒரு பகலும் நடுக்கடலிலே தத்தளித்ததாம். காலையில் இந்தியக் கடற்படை கண்டு கட்டியிழுத்துக்கொண்டு வந்திருக்கிறது. அவர்களைப் பொலிஸ் நிலைய வாசலிலேயே வரிசையாக உட்கார வைத்திருந்தார்கள். அருள்குமரன் உள்ளே நுழைந்தபோது ஒரு மூதாட்டி “நல்ல வேளை. தெய்வம்போல வந்து காப்பாத்தினாங்கள். இல்லையெண்டால் கடலுக்குள்ளை பட்டினி கிடந்தே செத்திருப்பம்.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவன் பொலிஸ் நிலையச் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு வெளியில் வந்து உட்கார்ந்தான். யாரோ ஓர் இளம் தாய் பசி பொறுக்காது குழறிய தன்னுடைய குழந்தையை படகிலேயே அடித்துக் கொல்லப் பார்த்தாளாம். அவள் யாரென்று திரும்பிப் பார்த்தான். ஒரு மூலையாக ஒதுங்கி இருந்தாள். குழந்தையை இரு கைகளிலும் ஏந்தி ‘முட்டு.. முட்டு..’ என்று நெற்றியில் முட்டிச் சிரிப்பு மூட்டினாள். கிலுகிலுவென்று சிரித்தது குழந்தை. கன்னத்தில் முத்தமிட்டாள். ஒரு பொலிஸ்காரி வந்து “பாப்பாக்கு பால் கொடுக்கணும்னா எங் கூட வா..” என்று அவளையும் குழந்தையையும் அழைத்துப் போனாள்.

அத்தனை பேரையும் பேருந்தில் ஏற்றி மண்டபம் முகாமிற்குப் புறப்பட்டார்கள். காவலுக்கு முன்னும் பின்னுமாக இரண்டு பொலிஸ்காரர்கள். அருள்குமரன் ஜன்னல் ஓரத்தில் இடம்பிடித்தான். ராமேஸ்வரக் கோவிலின் கோபுரம் தெரிந்தது. வெளியே பரபரப்பான கடைத் தெருக்கள். நாமமும் குடுமியும் வைத்தவர்கள், ஈரச் சேலை காயக் காயப் பெண்கள், கட்டைக் காற்சட்டை அணிந்த வெளிநாட்டவர்.. என நடந்து திரிந்தார்கள். பெயர்ப் பலகைகள் கடந்து போயின. அக்கா மடம்.. தங்கச்சி மடம்.. பாம்பன் பாலம் ஆரம்பித்தது. எவ்வளவு நீளம்? ஒரு விமானத்தையே இறக்கலாம்போல. இரு புறமும் ஆழத்தில் கடல். குபுகுபு என்று காற்று. நித்திரை சொக்கிக்கொண்டு வந்தது. 

‘தாயகம் திரும்புவோருக்கான மறுவாழ்வு நிலையம்.’ என்ற பெயர்ப்பலகையை அருள்குமரன் ஆச்சரியத்தோடு பார்த்தான். இரட்டை இரும்புக் கதவுகள் வாசலை அடைத்திருந்தன. அருகில் இருந்த ஒற்றைப் பாதையில் ஒவ்வொருவராக நடந்துபோகச் சொன்னார்கள். “பொம்பளங்க குழந்தைக இந்தப் பக்கம் வாங்க.. ஆம்பிளைங்க தனியா நில்லுங்க..”

அலுவலகக் கட்டிட முன்றலில் ஆண்கள் ஒன்றானார்கள். வயது போன ஐயா ஒருவர், “இலங்கைப் பொலிஸ், இலங்கை ஆமி, இந்திய ஆமி, ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள் என்று எல்லோரும் என்னைச் செக் பண்ணிவிட்டாங்கள். இப்ப தமிழ்நாட்டுப் பொலிஸின் முறை.” என்று அலுத்துக் கொண்டார். உடற்சோதனை ஆரம்பமானது.

பொலிஸ்காரர் “கையைக் காட்டு.” என்றார். அருள்குமரன் முழங்கையை மடித்துக் காட்டினான். “சர்ட்டைக் கழட்டு.” கழற்றினான். “திரும்பு.” திரும்பினான்.

“வேற ஏதாச்சும் காயம் இருக்கா?”

“காற்சட்டைய கழட்ட வேணுமா?”

“வேணாம்.. போ..”

எல்லோரையும் நிற்க வைத்து நேராகவும் பக்கவாட்டிலும் படம் எடுத்தார்கள். அருள்குமரன் 2009 என்று எழுதப்பட்ட சிலேட்டை மார்போடு பிடித்துக்கொண்டு நின்றான். அதற்குப் பிறகு விசாரணை ஆரம்பித்தது. “உன் பேரென்ன?” அதட்டலான குரல். க்யூ பிராஞ் அதிகாரியாக இருக்க வேண்டும்.

“அருள்குமரன்.”

“நீ எல் டி டி ஈ எதிலயாச்சும் இருந்தியா?”

“இல்ல சேர்.. நான் சின்னப் பெடியன்.” முகத்தில் வெட்கத்தை வருவித்துக்கொண்டே சொன்னான்.

“சின்னப் பையன்களின் விளையாட்டைத்தான் ஐ பி கே எப் காலத்தில இருந்தே பாத்துக்கிட்டு இருக்கோமே..” குரல் சலித்துக்கொண்டது. “ஆமா.. தனியாத்தான் வந்தியா?”

“ஓம்..”

“என்ன ஓம்? ஆமான்னு சொல்லு. ஐடென்ரி டாக்கியூமென்ட் கொடு.”

“ஓம்..” அருள்குமரன் பிறப்புச் சான்றிதழை நீட்டினான்.

அதிகாரி அதை வாங்கி இரண்டு புறமும் பார்த்தான். “இதுல உன் படம் இல்லயே.. படம் இருக்கிற மாதிரிக் கொடு.”

“அப்பிடி இல்ல சேர். அங்க பதினெட்டு வயசானாத்தான் ஐடென்ரி கார்ட் தருவினம்.”

“உன் அம்மா அப்பா வரல்லயா?”

“அப்பா இல்லை சேர்.. இறந்திட்டார். அம்மாக்கு நான் ஒரேயொரு மகன். நான் உயிரோட இருந்தாலே காணும் எண்டு என்னை மட்டும் அனுப்பியிருக்கிறா.”

“அப்புறம் எதுக்கு அம்மா மட்டும் அங்க தனிய இருக்கிறா?”

“என்னை அனுப்பிறதுக்கே இருபதாயிரம் ரூபா செலவாச்சு. அதுக்கே நிறையக் கஸ்ரப்பட்டா.”

“சரி யோசிக்காத. இன்னொரு நாளைக்கு வந்துடுவா.. அங்க நிலமைகள் எப்பிடி..? எல் டி டி ஈ யால பிரச்சினை ஒண்ணும் இல்லயா?”

அருள்குமரன் அமைதியாக நின்றான். அதிகாரியில் ஓர் ஏளனப் புன்னகை முளைத்தது. “அவனுக என்ன பண்ணினாலும் விட்டுக்கொடுக்க மாட்டீங்களே..”      

அருள்குமரனுடைய கறுப்பு வெள்ளைப் புகைப்படம் மேசைக்கு வந்தது. மெல்ல எட்டிப் பார்த்தான். அப்பாவித்தனமான முகம். ‘சின்னப் பெடியன்’ தோற்றம். திருப்தியாக இருந்தது.

“பொழைக்கப் போன இடத்தில பொழைப்பப் பாக்காமல் வீணாச் சண்டை பிடிச்சுச் சாகிறீங்களே..” அதிகாரி அடையாள அட்டையில் படத்தை ஒட்டி கையெழுத்திட்டான். “சரி.. போ..” 

0

கரையை அடைய முன்னரே பாறைகளில் பட்டுச் சிதறும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிகாலை இருட்டில் இயற்கைக் கடனுக்காக இந்தப் பாறைகளில்தான் போய்க் குந்தி இருப்பான். அப்போதெல்லாம் கடல் இப்படிப் பொங்குவதில்லை. ஏதோ சுகம் விசாரிக்க வருவதைப்போல கால்களின் கீழே தலைகாட்டிவிட்டுப் போய்விடும். வெயிலைக் கண்ட பிறகுதான் சன்னதமாடுகிறது.

கடலோரமாகவே கிட்டத் தட்ட இருநூற்றைம்பது ஏக்கர் நிலம் இது. தொடர் குடியிருப்புக்கள், சிறுவர் பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடைகள், தெருக்கள், மரங்கள் என்று ஓர் ஊருக்குரிய தோற்றம். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்கு பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுசெல்லப்பட்ட சனங்களை பிறகு சிறிமா சாஸ்திரி காலத்தில் திருப்பி அழைத்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டதாம். ஒவ்வொரு திக்கிலும் பாழடைவின் அடையாளம். சுவர்களில் மஞ்சள் சுண்ணாம்பு தோல் மாதிரி உரிந்து கிடந்தது. பத்துக்குப் பத்து இருட்டு அறைகள், கருகிய சமையற்கட்டு, வெடித்துப் பெயர்ந்த தரை, தார்ச் சீற் கூரை, இரவும் பகலும் எரிக்கும் வெக்கை.. கடற்காற்றுத்தான் ஒரேயொரு ஆறுதல்.

அனல் வெயிலில் கடல் கலங்கியது. மத்தியானம் ஒரு மணி. தள்ளுவண்டியின் ‘கடாமுடா’ சத்தம் கேட்கிறது. மணிச் சத்தமும். ஒரு கூன் விழுந்த கிழவர்  வெற்று மேலோடு சாப்பாட்டுக் கிடாரத்தை தள்ளிக்கொண்டு வருவார். அருள்குமரன் உள்ளே போய் தட்டை எடுத்துக்கொண்டு வந்தான். இங்கே குடும்பமாக இருப்பவர்கள் தாமே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். இரு வாரங்களுக்கு ஒருமுறை உதவிப் பணம் கிடைக்கிறது. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணை வாங்கலாம். அருள்குமரன் அவர்கள் தருகிற சாப்பாட்டைத்தான் வாங்கிச் சாப்பிட்டான். தனி ஒராளுக்காக சமைத்துச் சாப்பிடுவது அலுப்புப் பிடித்த வேலை. பக்கத்தில் குடும்பத்தோடு குடியிருந்த சர்வம் “இவங்கள் தாற சாப்பாட்டைத் திண்டால் ஒருகிழமையில நாக்குச் செத்துப் போயிடும்.” என்று சொல்வான். அவனுக்கு முப்பது வயதிற்கு உள்ளாகத்தான் இருக்கும். மெலிந்த, நெஞ்சொடுங்கிய தேகம். நீண்ட தாடி மீசை என்று சாமியாரின் தோற்றம். தொன்னூறாம் வருடம், அவனும் மனைவியும் ஒரு கைக் குழந்தையோடு இந்த முகாமிற்கு வந்தார்களாம். இங்கேயும் அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகள். ஐந்து பேருமே இதே பத்துக்குப் பத்தடி அறைக்குள்தான் வாசம். சர்வம் கல் உடைக்கிற தொழில்களுக்குப் போய்வந்தான். எல்லா நாளும் வேலை இருப்பதில்லை. அந்நாட்களில் கடலை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான்.

“இந்தக் கடல் இப்ப டக்கெண்டு வத்திச்சுது எண்டால் நான் குழந்தைகளைக் காவிக்கொண்டு நடக்கத் தொடங்கிவிடுவன். இரவுக்கு முதல்ல ஊருக்கு போயிடலாம் என்ன?” திடீரென்று ஒருநாள் சர்வம் கேட்டான். அந்த நினைப்பே ஒருவித கிளர்ச்சியாக இருந்தது. ஒருமுறை ஆராதனாவின் கண்கள் மின்னிப் போயின. சர்வம் தொடர்ந்தான். “நான் நினைக்கிறன், கடல் வத்தினால் அங்கை இருந்துதான் சனம் ஆடு மாடுகளையும் இழுத்துக்கொண்டு இங்காலை ஓடி வருவினம். வழியில எங்களை மறிச்சு அந்தப் பிணம் தின்னி நாட்டுக்கு ஏன் போறீங்கள்? திரும்பி இந்தியாக்கே போங்கோ எண்டு துரத்துவினம்.” நிராசையான குரல்.

“எட்டு வருசமா இந்த அறைக்குள்ளைதான் அடைபட்டுக் கிடக்கிறீங்களா?”

“நாங்கள் பரவாயில்லை. எண்பத்துமூண்டாம் ஆண்டுக் கலவரத்தில வந்த சனமும் இன்னமும் இப்பிடித்தான் அடைஞ்சு கிடக்கினம்.”

இப்படியே காலத்தைக் கழிப்பதற்கு என்ன பெயர்? ‘வாழ்வு’ என்பது வெறுமனே உயிரோடு இருப்பது மட்டும்தானா? ஓர் இலக்கும், அதற்கான அலைச்சலும்தானே வாழ்வின் சுவாரசியம். இங்கே இவர்களுடைய இலக்கு எது? உயிரோடு இருப்பதுதான் இலக்கா? அதற்குத்தான் இத்தனை அலைச்சலுமா? வெறுமனே உயிரோடு இருப்பது ஒருநாள் சலித்துப் போகும். அருள்குமரனுக்கு நான்கு மாதங்களிலேயே சலித்துவிட்டது. எங்காவது வெளியே போய் வரவேண்டும். கல் உடைக்கவோ, கட்டிடக் கூலிக்கோ ஆள் வேண்டுமென்றால் நான் வரலாமா என்று சர்வத்திடம் கேட்டிருந்தான். காலையில் ஏழு, ஏழரைக்கெல்லாம் வேலையாட்கள் புறப்பட்டு விடுவார்கள். இரவு ஏழுக்கு முதல் திரும்பிவிட வேண்டும். தவறினால் ஆயிரத்தெட்டு விசாரணைகள். “என்னையேகிழமைக்கு ரெண்டு நாளுக்குத்தானே கூப்பிடுறாங்கள்.” என்றான் சர்வம். 

அருள்குமரன் காலையில் முகாம் நீளத்திற்கும் அலைந்து திரிவான். திரும்பத் திரும்ப ஒரே காட்சிகள்தான். கழிப்பறையில் பெண்களின் நீண்ட வரிசை நிற்கும். பெரும்பாலும் அவர்கள்தான் அதைப் பாவித்தார்கள். அது அடிக்கடி அடைத்துக்கொள்ளும்போல. மூக்கைப் பொத்திக்கொண்டு கிண்டிக் கிளறுவார்கள். சிறுவர்கள் அளவில்லாத தொள தொளத்த காக்கி நிற பாவாடையோடும் காற்சட்டையோடும் பள்ளிக்கூடம் போவார்கள். அலுவலக வாசலில் அதிகாரிகள் யாரையாவது மிரட்டுவார்கள். அவர்கள் “சரி சேர்.. சரி சேர்..” என்று குழைவர்கள். கணவன் மனைவிச் சண்டைகள் வெளியே கேட்கும். சட்டி பானைகள் உருளும். இறுதியில் ஒரு பெண் கத்துவாள். “இங்க வந்து உங்களிட்ட அடி வாங்கிறதுக்குப் பதில் ஊரில ஷெல் விழுந்து நான் செத்திருக்கலாம்.”

ஒரு மரத்தில் கட்டி வைத்த நாயைப்போன்ற வாழ்க்கை இது. சனங்கள் பாவங்கள். தமிழீழம் கிடைத்த உடனேயே இவர்களை அங்கே வரச் சொல்ல வேண்டும். வருவார்களா? சர்வமும் மனைவியும் ஓடி வருவார்கள். பிள்ளைகள்? அவர்கள் இங்குதானே பிறந்தார்கள். இங்கிருந்து அழைத்துச் செல்லும்போதுதான் அகதி என்று உணர்வார்களோ? சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் மலையக மக்களை அழைத்துவந்தபோது ஒப்பாரி வைத்து அழுதார்களாமே.. பிடுங்கி நட்ட மரமும் புதிய நிலத்தில் வேரை ஆழ விடத்தானே செய்யும். இவர்களை விடுவோம். இன்றைக்கு பிரான்ஸிலும், லண்டனிலும், கனடாவிலும் இருக்கின்ற அகதிகளை ‘தமிழீழத்திற்கு வாருங்கள்.’ என்றால் வந்துவிடுவார்களா? அவர்கள் மயிரைத்தான் வருவார்கள்.     

ஒருநாள் சர்வம் சொன்னான். அருள்குமரனுடைய அறையில் முன்னர் ஒரு தாயும் இரண்டு மகன்களும் தங்கியிருந்தார்களாம். “அவவிட புருசன் லண்டனில இருந்தவன். போன் கதைக்க மட்டும்தான் வெளியில போவினம். ஒருத்தரோடையும் கதைக்கிறதில்லை. திடீரெண்டு ஒருநாள் ஆக்களைக் காணேல்லை. இப்ப லண்டனில இருப்பினம்.” அவன் பணத் தாள்களை எண்ணுவதைப்போல விரல்களை அசைத்தான். “துட்டு சார்.. துட்டு.” அவனுடைய மூத்த மகனும், மகளும் இரவுப் படுக்கைக்கு அருள்குமரனுடைய அறைக்குத்தான் வருவார்கள். “நீங்கள் தனி ஆள்த்தானே.. இஞ்ச சரியான இட்டு முட்டு.” என்று கேட்டபோது மறுக்க முடியவில்லை. மகனுக்கு நித்திரைப் பாயிலேயே சிறுநீர் கழிக்கிற பழக்கம். பகல் முழுக்க கதவைத் திறந்து வைத்தாலும் மணம் தணியாது. அருள்குமரன் ஐந்தாறு நாட்கள் பொறுத்துப் பார்த்தான். அதற்கு மேல் தாங்க முடியாது. அவன் இரவு பதினொரு மணிக்கு அலார்ம் வைத்து எழுந்து பெடியனைத் தூக்கிக்கொண்டு வெளியே போய் சிறுநீர் கழிக்க வைத்தான். “அருள்குமரன் அண்ணா நான் ஒண்டுக்குப் போவதை நிப்பாட்டி விட்டார்.” என்று அவன் அக்கம்பக்கமெல்லாம் சொல்லித் திரிந்தான்.  

அப்படித்தான் ஒருநாள், அவனை மறுபடியும் படுக்க வைத்தபிறகு இருட்டுக்குள் கண்களைத் துளாவிக்கொண்டு கிடந்தான். நித்திரை வரவில்லை. வாங்கி வந்த ராணி வாரமலர் இருந்தது. வெளிச்சத்தைப் போட்டால் இவர்களுக்கு நித்திரை குழம்பிவிடும். ராணியில் ‘எங்களுக்கு’ ஆதரவாக எழுதுகிறார்கள். ஒருகாலத்தில் இங்கிருந்த எல்லாப் பத்திரிகைகளுமே ‘எங்களுக்காக’ எழுதியவர்கள்தானே.. எங்களுக்காகவா? தமிழீழத்திற்காகவா? மெதுவாகக் கண்ணைச் சொக்கியது. அப்போது கன்னத்தில் அறைந்ததைப்போல கதவைத் தட்டும் சத்தம்.. எச்சரிக்கை உணர்வு பாவிக்கொண்டது. எழுந்து நின்று காதைக் கூர்மையாக்கினான். கதவைத் திறந்ததும் பொலிஸ்காரர்களும் கியூ ப்ராஞ் அதிகாரிகளும் திபு திபு என்று நுழைந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்களோ? முகாமில் அடிக்கடி சோதனைகள் நடக்கின்றன. ஓரிரண்டு பேரைக் கைது செய்தும் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர், டெல்லியிலிருந்து ஓர் அரசியல் தலைவர் குடும்பத்தோடு ராமேஸ்வரத்திற்கு வந்தார். அன்றைக்கு முழுவதும் முகாமை இழுத்து மூடிவிட்டார்கள். யாரும் வெளியே போக முடியாது. யாரும் உள்ளே வரவும் முடியாது.  

இன்னமும் ஏன் கதவை உடைக்காமல் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அருள்குமரன் “யாரது?” என்று கேட்டான். “அது நான்தான் சர்வம்.” பதில் வந்தது. இந்த நேரம் எதற்கு வருகிறான்? வெளிச்சத்தை ஒளிரச் செய்துவிட்டு தண்ணீரை வார்த்துக் குடித்தான். கழுத்து வியர்த்திருந்தது. கதவைத் திறந்தபோது வெளியே மூன்றாவது மகனைத் தோளில் சாய்த்துக்கொண்டு சர்வம் நின்றான். எதுவும் புரியவில்லை. என்ன என்பதைப்போல பார்வையால் கேட்டான். சர்வம் தலையைச் சொறிந்தான். வெட்கப்படுவதைப்போல தோன்றியது. அவனாகவே உள்ளே நுழைந்தான். “இளந்தாரிப் பெடியன், உமக்கு விளங்கும்தானே.. என்ர மனிசி எப்பவாவதுதான் ஓம் எண்டுறாள். இவன் அடிக்கடி எழும்பி அழுது அதையும் குழப்பிறான். இண்டைக்கு மட்டும் இங்கை படுக்கட்டும்.” என்று மகனை வளர்த்தினான். அதற்குப் பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை கொண்டுவரத் தொடங்கிவிட்டான். அவனிடம்கிழமையில் ஒருநாள் மட்டும் கொண்டு வாருங்கள் என்று எப்படிச் சொல்வது?

தள்ளுவண்டிக் கிழவர் அருள்குமரனுக்கு முன்னால் நிறுத்தினார். களைத்த முகம் அவருக்கு. தலையில் கட்டியிருந்த துண்டைக் கழற்றி முகத்தைத் துடைத்தார். தண்ணிர் குடித்தார். தட்டைக் கொண்டுபோய் நீட்டினான். “தம்பி.. இராவுக்கும் எடுத்து வைக்கிறீயா?” இரண்டு கரண்டி சோறை வைத்துச் சாம்பாரை ஊற்றியபோது அவருடைய கை நடுங்கியது. ஒவ்வொரு முறையும் சோற்றுக் கிடாரத்தைப் பார்க்கிறபோது ரொக்கெட்டின் ஞாபகம். அந்த ஒற்றை மாட்டு வண்டி.. ஈர்க்குவாணத்தின் தூஷணம்.. கிடாரச் சோறு.. இனி ஒருநாளும் திரும்பாத காலம் அது. அருள்குமரன் “இல்லை ஐயா.. வேண்டாம்.” என்றான். அவர் போன பிறகு வாசலிலேயே உட்கார்ந்து சோற்றைப் பிசைந்தான். இங்கே வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அப்படியொன்றும் நாக்குச் செத்துவிடவில்லை. இயக்கத்திலேயே கிட்டத்தட்ட இப்படித்தான் சாப்பாடு. இங்கே தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை, அவ்வளவுதான் வித்தியாசம். அங்கேயும் இப்போது சேர்க்கிறார்களோ தொியாது. அவன் புறப்பட்டபோது இயக்கத்திற்குள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடியது. “இந்த மாதிரி வறுமையை இயக்கம் எண்டைக்கும் சந்திச்சதில்லை.” என்று பொறுப்பாளர்கள் பேசிக்கொண்டார்கள். உள்ளாடை கிழிந்தால் கூட ஊசி நூலால் தைத்துப் பாவிக்க வேண்டும். எல்லைகளில் காவல் நின்ற போராளிகள் ஒரேயொரு சீருடையைத்தான் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் மாற்றி மாற்றி அணிந்தார்கள்.

அருள்குமரன் எப்போதாவதுதான் சீருடை அணிய வேண்டியிருந்தது.   

0

இன்றைக்கு ஐந்தாவது இரவு. சர்வத்தின் மகனும் மகளும் பாயைச் சுருட்டிக்கொண்டு அருள்குமரனுடைய அறைக்குச் சென்று கதவைத் தட்டிப் பார்ப்பார்கள். பதில் இருக்காது. சற்று நேரம் அங்கேயே நின்றுவிட்டுத் திரும்புவார்கள். “அப்பா.. அருள்குமரன் அண்ணாவை இண்டைக்கும் காணவில்லை.” என்று மகன் சொல்வான். இன்னும் இரண்டோ மூன்று இரவுகளுக்கு சர்வம் அந்தப் பக்கமாக எட்டிப் பார்ப்பான். அவனுக்குத் தெரிந்துவிடும். காசுத் தாள்களை எண்ணுவதைப்போல விரல்களை அசைத்து “துட்டு சார்.. துட்டு..” என்று யாரிடமாவது சொல்லிக் காட்டுவான்.

அருள்குமரன் நேரத்தைப் பார்த்தான். எயர் லங்கா விமானம் புறப்படுவதற்கு இன்னமும் ஒரு மணி நேரம் இருக்கிறது. உடற்பரிசோதனைகள், குடியகல்வுச் சோதனைகள் எல்லாவற்றையும் முடித்தபிறகும் ஏதோவொரு நிச்சயமற்ற உணர்வு. விமானம் நிலத்திலிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்ட பிறகுதான் நிம்மதியாக இருக்கும். உள்ளத்தின் பதகளிப்பை உடல் காட்டிக் கொடுக்குமா? கையில் அன்றைய தினத்தந்தியை வைத்திருந்தான். காலுக்கு மேல் கால் போட்டு நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து ஓர் அலட்சியமான தோற்றத்தை உருவாக்கப் பார்த்தான். பத்திரிகையைப் பிரித்து வைத்துக்கொண்டான். ஒரு செய்தியிலும் மனம் ஒட்டவில்லை. ஒருவேளை முதல் பக்கத்தில் ‘இலங்கை இராணுவமும் எல் டி டி ஈயும் கடும் சண்டை’ என்ற மாதிரியாக ஏதாவது இருக்குமோ என்று தோன்றவும் பத்திரிகையை மூடி வைத்தான். வெறும் மூன்று நிமிடங்கள்தான் கடந்திருந்தது.

அவன் முகாமிலிருந்து புறப்பட்டது முதல் இப்போது வரை எழுதி வைத்த மாதிரி ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருக்கிறது. எந்தச் சிக்கலும் இல்லை. ஏதோ ஓர் அரூபம் எல்லாவற்றையும் வழிநடத்திக் கொண்டிருந்தது. திருச்சியிலிருந்த தூரத்து உறவினர் ஒருவரோடு ஐந்து நாட்களுக்குத் தங்கப் போவதாக முகாமில் அனுமதி வாங்கினான். அவனைத் தொலைபேசியில் அழைத்துத் தன்னைச் சதாசிவம் மாமா என்று அறிமுகப்படுத்தியவர் இந்த முகவரியைக் கொடுத்தார். ‘சிம்கோ மீற்றர் ரோட், காஜாமலைக் கொலனி, கேகே நகர், திருச்சி.’ முகாமுக்கு வெளியே இருந்த ‘சேதுபதி ஸ்டோர்’ என்ற மளிகைக் கடைக்குத்தான் தொலைபேசி அழைப்புக்கள் வரும். பெருமளவான அழைப்புக்கள் சுவிஸ், பிரான்ஸ் நாடுகளிலிருந்துதான் வந்தன. கடைக்காரப் பையன் அவற்றைக் குறித்துக்கொண்டு போய் ஆட்களை அழைத்து வருவான்.  கதைக்கும் நேரக் கணக்கைப் பொறுத்துக் காசு வாங்குவார்கள். அருள்குமரன் முதன்முதலாக தொலைபேசியைக் காதில் வைத்தபோது அது ‘வோக்கியைப்’போல க்ர்ர் புர்ர் என்று இரையுமென்றும் குரல் வெட்டி வெட்டித்தான் கேட்கும் என்றும் நினைத்தான். ‘சதாசிவம் மாமா’ அவன் எப்படிப் புறப்பட வேண்டும் என்ற விபரங்களைக் கொடுத்தார். காலையில் மண்டபத்திலிருந்து மதுரைக்குப் பேருந்து, பிறகு அங்கிருந்து திருச்சிக்கு.

அருள்குமரன் மத்தியானம்போல திருச்சியில் சென்று இறங்கினான். ஒரு வயதானவர், அவர்தான் சதாசிவம் மாமாவா தெரியாது, அவனை வரவேற்று ஒரு மென்ஷனுக்கு அழைத்துச் சென்றார். பயணம் எப்பிடி? மதுரையில் வெயிலா? இப்படிப் பொதுவான விடயங்களைத்தான் அவர் கதைத்தார். ஆளைப் பார்த்தால் இலங்கை ஆள்போலதான் தெரிந்தது, ஆனால் கதை அப்படியே தமிழ்நாட்டுக்காரர் மாதிரி. இலங்கை ஆள் என்று எப்பிடித் தெரிகிறது என்று யோசித்தான். அது ஓர் உள்ளுணர்வுதான். மண்டபம் முகாமில் ஒரு வயதான பொலிஸ்காரர் இருந்தார். சாதாரண கான்ஸ்டபிள்தான். ஒருநாள் அருள்குமரனிடம் கேட்டார். “நம்ம ஊருல ஒருத்தன் காதைப் பாத்து, மூக்கைப் பாத்தே அவன் என்ன சாதின்னு சொல்லிடுவோம்.. உங்க ஆளுக எப்பிடி எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறீங்க?”

அன்றைக்கே திருச்சியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்கள். இரண்டு வருடங்களாக அவன் சென்னையிலேயே இருப்பதைப்போன்ற காவல்துறைப் பதிவும், ஆவணங்களும் ஏற்கனவே தயாராக இருந்தன. இரண்டாம் நாள் இலங்கைத் தூதரகத்திற்குச் சென்று தற்காலிகப் பாஸ்போட் இற்கு விண்ணப்பித்தான். கண்ணாடித் தடுப்பிற்கு எதிர்ப் புறம் இருந்த அதிகாரி பொதுவான இரண்டொரு கேள்விகளைத்தான் கேட்டார். ஆவணங்களை வாங்கிச் சரிபார்த்தார். முகத்தில் திருப்தி. வெற்றிதான். சட்டென்று ‘ஒரு சிங்களவரை வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன்’ என்று அருள்குமரனுக்குத் தோன்றிற்று. அந்த உண்மையை ஒரு புன்னகையோடு எதிர்கொண்டான். ‘நன்றியை’ சிங்களத்தில் எப்படிச் சொல்வார்கள்.? அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. “மூணு மணிபோல வாங்க. பாஸ்போர்ட் ரெடியாகிடும்.” என்றார் அதிகாரி. தமிழில்தான் சொன்னார். அப்படியென்றால் சரி, “நன்றி” என்றான் அருள்குமரன்.    

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *