அஷேரா – 18

முள்ளிக்குளத்தில் இருந்த புளொட் இயக்க முகாம் ஏக்கர் கணக்கில் விஸ்தீரணமானது. உள்ளே அந்த இயக்கத்தைச் சேர்ந்த எண்பது போராளிகள் தங்கியிருந்தார்கள். அவ்வப்போது இந்தியப் படைகளோடு ரோந்து போவார்கள். பல நேரங்களில் முகாமிற்குள்ளேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும். வெளியே புலிகளுடைய அச்சுறுத்தல் இருந்தது. அவர்களிடமிருந்து உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும், அதுதான் ஒரே ஓர் இலக்கு. உயிரின் ஆதாரமே அதுதானே. ஓர் எறும்பை நசுக்கிக் கொல்லும் கடைசி நொடி வரையும் அது தப்பிச் செல்ல முடியுமா அல்லது யாராவது காப்பாற்றுவார்களா என்பதைப் பற்றியே யோசிக்குமாம். இப்போதெல்லாம் இந்தியப் படைகள் அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை மெல்ல மெல்லக் கரைந்து போகிறது.  அவர்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ்வினர்தான் செல்லப் பிள்ளைகள். சற்றுத் தொலைவில் சிலாவத்துறையில் சிங்கள இராணுவ முகாம் ஒன்று இருந்தது. புலிகளும் பிரேமதாசாவும் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பிறகு அவர்களையும் நம்ப முடியாது. இதற்கிடையில் டம்பிங் கண்ணனும், ஒரு சில தளபதிகளும் தென்னிலங்கைக் காடுகளில் அரசுக்கு எதிரான சிங்கள ஜேவிபி கிளர்ச்சியாளர்களுக்குப் பயிற்சி கொடுக்கப் போய் வருவதாக முகாமிற்குள் பேச்சு இருந்தது. அதற்காக ஜேவிபி காரர்கள் வந்து காப்பாற்றுவார்களா..?

அற்புதம் அவ்வப்போது யோசித்துப் பார்ப்பான். ஒன்றரை வருடங்களாக இந்த முகாமிற்குள் நான் யாராக இருக்கிறேன்? தஞ்சமடைந்த ஒரு பொதுமகனாகவா? அல்லது புளொட் போராளியாகவா? அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே கொழும்புக்கு போவதுதான் நோக்கமாக இருந்தது. அங்கிருந்து யாருடைய காலைக் கையைப் பிடித்தாவது சவுதிக்கோ ஓமானுக்கோ போய்விட வேண்டும். அதுவரைக்கும் பாதுகாப்பாகத் தங்க வேண்டும். அப்படித்தான் இந்த முகாமிற்குள் வந்து விழுந்தான். ஆனால் அங்கிருந்து வெளியேறுவதைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை. பயம். டம்பிங் கண்ணனுக்குப் பயம். அவன் கண்ணுக்கு முன்னால் சப்பறத்தையும் பண்ணையாரையும் சுட்டவன். சுழிபுரத்தில் ஆறு புலிகளைக் கண்டதுண்டமாக வெட்டி அவர்களுடைய ஆண்குறிகளை வாயில் செருகி வைத்தவன். சில நாட்களுக்கு முன்னர் பண்டிவிரிச்சான் என்ற இடத்தில் காய்ச்சலில் படுத்திருந்த இரண்டு புலிகளைக் கொன்று மண்டை ஓட்டை உடைத்து மூளையை நடுரோட்டில் வைத்துவிட்டு வந்தவன். நான் போகப் போகிறேன் என்று சொன்னால் என்ன சொல்வான்..?   

ஒரேயொரு நம்பிக்கை, இந்த முகாமிற்குள் யாராலும் நெருங்கிவிட முடியாது. கிழக்கே குளத்தின் அணைக்கட்டு ஓர் இயற்கை அரண். மேற்கில் இந்து மா கடல். எறிகணைத் தளங்கள், கலிபர் தானியங்கித் துப்பாக்கிகள், சுற்றி வரப் புதைக்கப்பட்ட கிளைமோர் வெடிகள், சிலின்டர் கண்ணிவெடிகள்.. பதினைந்து மைல் தொலைவில் முருங்கன் என்ற இடத்தில் இந்தியப் படை முகாம். “இத்தனை பலத்தைத் தாண்டி புலிகளால் மயிரைத்தான் பிடுங்க முடியும்.” என்று டம்பிங் கண்ணன் அடிக்கடி சொல்வான். ஒருநாள் அதிகாலை ஐந்து மணி இருக்கும், அவர்கள் வந்துவிட்டார்கள், மயிரைப் பிடுங்க.

மேற்கே கடற்கரைக்குப் போகும் வழியில் நான்கு பெரிய புளிய மரங்கள் நின்றன. இரண்டு மூன்று பேர் சேர்ந்தும், கட்டிப்பிடிக்க முடியாத பருமன். நிழலில் நிலக் கீழ் காவலரண்களை அமைத்திருந்தார்கள். அற்புதம் அங்குதான் காவலுக்கு நின்றான். கையில் எஸ் எஸ் ஆர் துப்பாக்கி.

நிலம் வெளிக்காத இருள். ஐந்து அல்லது ஐந்தரை இருக்கலாம். தெற்குப் பக்க வயல் நிலத்தில் பட பட என்று துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. யோசிக்க ஒன்றுமே இல்லை. புலிகள் நுழைந்துவிட்டார்கள். அற்புதம் நடுங்கிப் போனான். இப்படித்தான் அருணா ஒருநாள் நுழைந்தான். கணுக்கால் அளவுக்கு மிதந்த ரத்தம்.. சா ஓலம்.. உயிர் பிரியும் முனகல்.. துவக்கை இறுகப் பற்றித் தோளோடு பொருத்தினான். கண்ணுக்கு முன்னால் இருட்டுத்தான் தெரிந்தது. இருட்டுக்கு அப்பால் கடல். “டேய் சுடுடா..” யாரோ கத்துகிறார்கள். ‘யாருக்குச் சுடுவது..’ அற்புதம் ரிக்கரை அழுத்தினான். தவித்த கணம். தோளை உதைந்து உதைந்து சன்னங்கள் துப்புப்பட்டன. நல்லவேளை.. இருட்டு ஒரு வசதிதான். திடீரென்று ஒரு புலிப்பெடியன் கண்ணுக்கு முன்னால் வந்து நின்றால் என்ன செய்வது? பதற்றமாகிவிட்டது. ‘தோழர்.. ரெயினிங் முடிச்சு நாட்டுக்கு போய், சிங்கள ஆமியைச் சுடு என்றாலும் இப்பிடித்தான் அழுது கெஞ்சுவீரா?’ சப்பறத்தில் குரல் எங்கோ ஒலிக்கிறது. தமிழ்ப் பெடியனைச் சுடவேண்டி வரும் என்று யாருமே சொல்லவில்லையே..  

தெற்கில் எறிகணைகள் விழுந்து வெடித்தன. அது தரிசாகக் கிடந்த வயல் நிலம். நெல் மணிகளுக்குப் பதில் கண்ணிவெடிகளைத்தான் விதைத்து வைத்திருந்தார்கள். திடீரென ஓர் அமைதி. டம்பிங் கண்ணன் கத்தினான். “அந்தப் பக்கத்தால புலிகளை அடிச்சுத் துரத்திட்டம். நீங்கள் சுடுறதை நிப்பாட்ட வேண்டாம். கடலால வந்து இறங்குவாங்கள். இண்டைக்கு டம்பிங் கண்ணன் எண்டால் யாரெண்டு அவங்களுக்குக் காட்டுறன்.”

புளிய மரத்தின் கீழிருந்து கலிபர் துப்பாக்கிகள் மேற்குத் திசையைத் துளைத்தன. அற்புதம் இருட்டு ஒரு பூதம் என்று நினைத்தான். அதன் கழுத்திலும் நெற்றியிலும் மார்பிலும் கால்களிலும் சுட்டுக்கொண்டே இருந்தான். சூடுபட்டு, சூடுபட்டுச் சிவப்பதைப்போல விடிந்தது. வெளிச்சம் பரவியது. மேற்கில் ஒரு நாய் கூட இல்லை. ஓ என்று கிடந்தது. ‘என்னை ஏனடா சுடுகிறீர்கள்?’ என்பதைப்போல கடல் பயந்து பயந்து அலைகளை அனுப்பியது. 

0

அத்தனை பேரும் ஒரு பெட்டிக்குள் அடைபட்டு நின்றார்கள். கடல் மட்டும் திறந்து கிடந்தது. அணைக்கட்டை ஏறிக் கடந்த புலிகள் அங்கிருந்த காவலரண்களைக் கைப்பற்றி விட்டார்கள். அங்குதான் சடும் சண்டை. நிலக் கீழ்க் கண்ணிவெடிகள் வெடித்துச் சிதறின. இதற்கிடையில் தெற்கு வயல்களுக்கு ஊடாக திரும்பவும் புலிகள் வருகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. அற்புதத்தின் அணியை அங்கே போகும்படி சொன்னார்கள். அவனைப் பொறுத்தவரை ஒரு சின்னச் சந்தர்ப்பம் கிடைத்தாலும் தப்பிச் சென்றுவிட வேண்டும். அதற்கு புலிகளைத் தோற்கடிக்க வேண்டும். வயல் நிலம் ஒரு பெரிய வெளியாக விரிந்தது. மரங்களோ, மண் அணைகளோ இல்லை. அற்புதம் அதை நோக்கியதாகக் காப்பெடுத்துக் கொண்டான். அவனோடு இன்னமும் எட்டுப் பேர் ஆங்காங்கே நிலையெடுத்திருந்தார்கள்.     தூரத்தில் புலிகள் வரப்புக்களுக்குப் பின்னால் மண்ணோடு மண்ணாகப் பதுங்கிக் கிடக்க வேண்டும். எறிகணைகள் விழுந்து நிலத்தைக் கொத்திச் சிதறின. ஒரே புகை மூட்டம். திடீரென்று யாரோ “ஆமிக்கு அறிவிச்சதா?” என்று கத்தினார்கள். “எந்த ஆமிக்கு?” என்று அற்புதம் கேட்டான். அவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்தியப் படையினரும் சிங்கள ராணவத்தினரும் பக்கத்தில்தான், புறப்பட்டால் இருபது நிமிடத்திற்குள் வருகிற தூரத்தில் இருந்தார்கள். காலையில் சத்தங்கள் கேட்கத் தொடங்கியபோது நினைத்திருந்தாலே இத்தனைக்குள் வந்து சேர்ந்திருக்கலாம். கைவிட்டு விட்டார்கள். சோர்ந்து விடக் கூடாது. எட்டு மணிக்கே வெயில் எரித்தது. கண்ணுக்கு முன்னால் எல்லாமே ஒரு மாதிரிக் கலங்கலாக.. திடீரென்று மண்ணிலிருந்து முளைத்த மாதிரி ஆறேழு புலிகள் துள்ளி எழுந்து முகாமின் எல்லையில் நின்ற வேம்புகளை நோக்கி ஓடிவருவது தெரிந்தது. ஒரேயொரு கணம்தான், அற்புதம் “அம்மாளாச்சியே..” என்று முனகினான். அவனையும் அறியாமல் துப்பாக்கி சடசடத்தது. பார்த்துக்கொண்டிருந்த போதே ஒரு புலிப் பெடியன் ஸ்தம்பித்து நின்றான். அடுத்த நொடியில் யாரோ உதைந்ததைப்போல சுருண்டு விழுந்தான். அற்புதத்திற்கு தேகம் பதறியது. யாருடைய குண்டு அவனைத் தைத்திருக்கும்? அவனுக்கு எத்தனை வயதிருக்கும்?

எல்லாம் முடியப் போகிறது. புலிகள் வேம்புகளுக்குப் பின்னால் நிலையெடுத்து விட்டார்கள். கிழக்கிலிருந்த அரண்கள் மொத்தமும் அவர்களிடம் விழுந்துவிட்டன. கண்ணிவெடிகளுக்கான மின்சார இணைப்புக்களை அவர்கள் கத்தரித்துவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம்தான் தாக்குப் பிடிக்க முடியும். அதற்கிடையில் ஓர் அதிசயம் நடந்தால்..

திடீரென்று ஹெலிச் சத்தம் கேட்டது. யாரோ வருகிறார்கள். காப்பாற்றப் போகிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்தான். காற்றாடி காற்றை வெட்டுகிற சத்தம்தான் கேட்கிறது. இந்திய எம் ஐ 24 ஹெலியாக இருக்க வேண்டும். நிச்சயமாகத் தரையிறங்க முடியாது. என்ன செய்யப் போகிறார்கள்? கயிற்று ஏணியால் கொமாண்டோக்களை இறக்கப் போகிறார்களா? அப்படி ஏதும் நடந்தால் திடீரென்று ‘எங்கள்’ கை ஓங்கிவிடும். ஓ.. ‘எங்கள்’ கை என்றா நினைத்தேன். அந்த நேரத்திலும் சிரிப்பு வந்தது அவனுக்கு. ஹெலி இன்னமும் மேலே வட்டமிடுகிறது. ஒருவேளை ஏற்றிக்கொண்டு போகப் போகிறார்களோ? எத்தனை பேர் என்று ஏற்ற முடியும்? இருபது? இருபத்தைந்து? நிச்சயமாக ‘என்னை’ விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். டம்பிங் கண்ணனுக்கும் ஐந்தாறு பெரிய தலைகளுக்கும் இடம் உண்டு. அவர்களுடைய கை காலைப் பிடித்தாவது கெஞ்சி ஏறிவிடவேண்டும் என்று ஒரு பொழுது நினைத்தான். அடுத்த பொழுது அப்படித் தேவையில்லை என்று தோன்றிற்று. செத்துவிடலாம். ஒரேயொரு துவக்குக் குண்டு நெற்றியிலோ, நெஞ்சிலோ ஏன் முதுகிலாவது துளைக்கட்டும். நொடி நேர வலி. பிறகு பறவையைப்போல சிறகடிக்கும் விடுதலை. சப்பறத்திற்குப் பயந்து.. அருணாவுக்குப் பயந்து.. டம்பிங் கண்ணனுக்குப் பயந்து.. கனிட்டா என்ற வெறும் பெயருக்கே பயந்து..போதும். இனி ஆனந்த சுதந்திரம்.

காட்டுப் பக்கமாக ‘ஷ்ஷ்’ என்று இரைந்து வெடிக்கும் குண்டுச் சத்தங்கள் கேட்டன. அற்புதம் திடுக்கிட்டு நிமிர்ந்தான். ஹெலியிலிருந்து ரொக்கெட்டுக்களை ஏவியிருக்க வேண்டும். யாருமற்ற காடு, ஏதோ வந்த கடனுக்கு அள்ளிக் கொட்டிவிட்டு ஹெலி விலகிப் போனது. நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டார்கள். அற்புதம் மறுபடியும் கடற்பக்கமாக ஓடினான். அங்கேயிருந்த நிலக் கீழ் அரண்களுக்குள் நுழைந்து பதுங்கிக்கொள்ள வேண்டும். செத்துப் போகக் கூடாது. தப்பிப் போக வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் பிரேதங்கள் சிதறிக் கிடந்தன. இரத்தம் பரவி மறைத்த முகங்களின் கண்களும் பாழ்.. கனவுகளும் பாழ்.. செத்தது புலியா? புளொட்டா? ஒன்றும் தெரியவில்லை.

“யாரும் சரண்டர் பண்ணக் கூடாது.” என்று டம்பிங் கண்ணன் உத்தரவிட்டான். “கடைசி ஆள் இருக்கும் வரைக்கும் சண்டை பிடிப்பம்.” எஞ்சியிருந்தவை நிலக் கீழ் அரண்கள்தான். அவ்வளவு இலகுவாக யாராலும் நெருங்க முடியாத பாதுகாப்பு என்று நம்பத்தான் அற்புதம் ஆசைப்பட்டான். ஆனால் அது உண்மை அல்ல. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது ஓரளவு புரிந்துவிட்டது. இதோ புலிகள் வந்துவிட்டார்கள். நாங்கள் கடலை நோக்கி ஓடுவோம். முதலில் காற்பாதங்கள் புதையும். இடுப்புப் புதையும். தோள்கள் புதையும். தலைகள் புதையும். பிறகு பிரேதங்கள் தண்ணீரில் மிதக்கும்.

‘மெகாபோன்களில்’ புலிகளுடைய குரல்கள் கேட்கத் தொடங்கின. “மரியாதையாச் சரண்டர் பண்ணுங்கள்.” டம்பிங் கண்ணன் இன்னமும் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருந்தான். “ஒருத்தனும் கிட்ட வரக்கூடாது. சுட்டுக்கொண்டே இருங்கோ.” புலிகள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. முகாம் முழுவதுமாக அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. கடல் பக்கமாக இனி நடந்தே வருவார்கள். நிலக் கீழ் அரண்களுக்குள் குதித்து ஒவ்வொருவராகச் சுட்டுத் தள்ளுவார்கள். அற்புதம் மண் மூடைகளுக்கு இடையிலான துவாரத்தில் கண்ணை வைத்து தன்னுடைய சாவு வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று சலசலப்பானது. பக்கத்து அரணில் இருந்த யாரோ ஒருவன் பாய்ந்து எழுந்து கடலை நோக்கி ஓடினான். இன்றைக்கு டம்பிங் கண்ணனிடம் அவன் செத்தான் என்று தோன்றவும் அற்புதம் அவனையும் அறியாமல் தலையை உயர்த்தினான்.

“டேய்.. டம்பிங்தான் எழும்பி ஓடுறான்..” என்று யாரோ கத்தினார்கள். அது அவன்தான். குள்ளமும் பருமனுமான உடல் திரும்பியும் பார்க்காமல் ஓடியது. பாவம்.. அவனும் ஒரு எறும்புதான். நசித்துக் கொல்லும் கடைசி நொடி வரைக்கும்.. என்ர அம்மாளாச்சியே.. டம்பிங் கண்ணன் வயிற்றைப் பொத்திக்கொண்டு சுருண்டு விழுந்தான். ஏனென்று யாருக்கும் தெரியாது, அற்புதத்திற்குக் கண் நிறைந்து வழிந்தது. அவன் கையிலிருந்த எஸ் எஸ் ஆரை தூக்கி வீசினான். கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்தான். அவனும் ஓர் எறும்பு..

“வெளிய வாடா..” என்ற குரல் அதட்டியது. எழுந்து தலையைக் குனிந்தவாறு மேலே வந்தான். “கையைத் தூக்கடா..” இரண்டு கைகளையும் உயர்த்தினான். சுற்றிலும் சுடுகாடுபோல கருகியிருந்தது. புகை மணம். முறிந்த மரங்கள். குருதி ஊறிய நிலம். வயிறு பிளந்த மண் மூட்டைகள். பார்வை அலைந்த திசைகளில் எல்லாம் சாவுகள். நாற்பத்தியிரண்டு புளொட் போராளிகள். பதினொரு புலிப் போராளிகள். இந்தியாவைப் பொறுத்தவரை, அல்லது சிங்களவர்களைப் பொறுத்தவரை ஐம்பத்துமூன்று தமிழ் இளைஞர்கள். சொற்ப நேரத்தில் ஐம்பத்து நான்கு ஆகிவிடும்.    

முன்னால் துவக்கை நீட்டிக்கொண்டு நின்றவனுடைய விரல் அசைவிலேயே சாவுக்கும் அற்புதத்திற்கும் இடையிலான தூரம் எஞ்சி இருந்தது. அற்புதம் தலையை மெல்ல உயர்த்தினான். புனிதவதி ரீ்ச்சருக்கு ஒரு மகன் பிறந்திருந்தால் இவனை மாதிரித்தான் இருந்திருப்பான் என்று ஏனோ தோன்றியது. இன்னும் எத்தனை வினாடிகளுக்கு உயிர் வாழ்வு? “அண்ணை.. இந்த சென்ரியில ரெண்டு கலிபர் துவக்குக் கிடக்கு.” யாரோ துப்பாக்கிதாரியின் கவனத்தைக் கலைத்தார்கள். அவன் “கொண்டு வா பாப்பம்.” என்றான். சாவு சற்றுத் தள்ளிப் போனது. அதற்கிடையில் ஓர் அதிசயமும் நடந்துவிடாதுதான், என்றாலும் ஒரு நிமிடம் என்றாலும் உயிரை நீட்டிக்க யாருக்குத்தான் ஆசையில்லை? இன்னமும் எத்தனை நிமிடங்களுக்கு உயிர் வாழ்வு?

அற்புதத்தின் நெஞ்சில் வைத்து துவக்கு முனையை அவன் அழுத்தினான். அற்புதம் கண்களை மூடிக்கொண்டான். பேரண்ட இரைச்சல் சட்டென்று தணிந்ததைப்போல அமைதி. இமைகளுக்குள் நீர் திரள்கிறது. திறந்தால் வழியும். இப்பொழுது இந்த அமைதியைக் குதறியவாறு ஒரு சத்தம் கேட்கும். எச்சிலை விழுங்கினான். அதுதான் கடைசி ஆகாரம். மரணத்தின் இறுதி நொடியில் சந்தித்த மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருமாமே.. அவனுக்கு அப்படி ஒன்றும் வரவில்லை.

“கண்ணைத் திறவடா..”

அற்புதம் மெல்லத் திறந்தான். முன்னால் நின்றவனுடைய கண்களில் பீயை மிதித்த அருவருப்பு. துப்பாக்கியை கீழே இறக்கி வைத்திருந்தான். கிட்டத்தட்ட முகத்திலேயே துப்புவதைப்போல எச்சிலைக் கூட்டி நிலத்தில் துப்பினான். “ஒருத்தனைக் கொல்லுறதுக்குக் கூட அவனுக்கு ஒரு தகுதி வேணும். நீ அதுக்குக் கூட வக்கத்த ஆள். நடைப் பிணம்.” என்றான் அவன்.

0

அற்புதம் கையில் வைத்திருந்த மதுக் குவளையை ஓங்கி வீசினார். அது ‘சலிங்’ என்ற சத்தத்தோடு சிதறியது. “இந்த முகத்தைப் பார்.. இது வாழுறதுக்கும் வக்கில்லை. சாகிறதுக்கும் வக்கில்லை. அப்பிடியொரு பிறப்பு இது” போதை ஏறி வார்த்தைகள் புரண்டன. “ஒண்டுக்கும் வக்கில்லாத ஆளடா நான்.” தன்னிரக்கத்தில் தேய்ந்த குரல் சட்டென்று உக்கிரமானது. “நாசமாப் போவாங்கள்.” கையால் தரையை அறைந்தார். உடைந்த கண்ணாடித் துண்டுகள் கீறிக் கிழித்தன. சாணி மெழுகுவதைப்போல தேய்த்தார். இரத்தம் அரை வட்டங்களை வரைந்தது. அருள்குமரன் எழுந்து ஓடிச்சென்று பழைய துணிகளை எடுத்துவந்து இரத்தத்தைத் துடைக்கத் தொடங்கினான். மாதத்தில் ஒருமுறையாவது இப்படி ஆகிவிடுகிறது. ஏதாவது ஒரு தனியறை வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போயிருக்கலாமோ என்று அவனுக்குத் தோன்றும். அடுத்த கணமே ‘அவரை யார் கவனிப்பார்கள்?’ என்ற யோசனை வந்துவிடும். இத்தனை நாட்கள் அவரை யார் கவனித்தார்கள்? பரவாயில்லை. அவர் தனிய இருந்ததுபோதும். அவனுக்கே ஆச்சிரியம்தான். சாதாரணமாக, பாதையில் அறிமுகமான ஆள் தவிர்க்கவே முடியாத ஆளாக எப்படி ஆகிப் போகினார்? கிட்டத்தட்ட அப்பா வயதுள்ள மனிதரை நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற இந்தப் பொறுப்புணர்வு ஏன்? ஒருவேளை அவர் ஒரு பழைய புளொட் என்பதை இன்றைக்கு ரொக்கெட் உயிரோடு இருந்து அறிந்தால் என்ன சொல்வான்? உனக்கு மானம் மரியாதை இல்லையா என்று திட்டுவானா? அப்படியென்றால் அவனிடம் ‘வரலாறு இப்படித் தான் இயங்கும். அது இந்த இடத்தில்தான் வந்து நிற்கும்.’ என்று நான் சொல்லுவேன்.

இரத்தம் ஊறிய அற்புதத்தின் கையை அருள்குமரன் வலுக்கட்டாயமாக உயர்த்திப் பிடித்தான். நஜிபுல்லாவின் இடது கை இன்னமும் துரத்துகிறது. அவனால் தாங்க முடியவில்லை. அழுகை விம்மி வெடித்தது. அவருடைய கையை கண்களில் ஒற்றி அரற்றத் தொடங்கினான். “என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க.. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க..” ஒரு மாதிரி மயக்கம் வருமாற்போல இருந்தது. அற்புதம் கையை உதறினார். “உயிரே போனாலும் உங்களை மன்னிக்க மாட்டனடா..” உன்மத்தமான குரல். அருள்குமரன் தலையைச் சிலுப்பினான். சுள்ளென்ற கோபத் தீயா அது? இல்லை. கூடாது. “இது அவ்வளவு பெரிய காயம் இல்லை. ஈரத் துணியாலை துடைச்சால் ரத்தம் நிண்டிடும்.” எழுந்து நடந்து துணியை ஈரப்படுத்திக்கொண்டு வந்தான். சேறு அளைந்த குழந்தையின் விரல்களைச் சுத்தப்படுத்துவதைப்போல அற்புதத்தின் ஒவ்வொரு விரல்களையும் துடைத்துவிட்டான். உண்மையாகவே பெரிய காயம் இல்லைத்தான். மெல்லிய குருதிக் கசிவு. அதே துணியைக் கிழித்துக் கட்டினான்.

அற்புதத்திற்கு நாக்குக் குழறிற்று. வாயிலிருந்து எச்சில் வழிந்தது. நாவைத் துளாவித் துளாவி துடைத்தார். கண்களில் மிளகாய்ச் சிவப்பு. காற்றை அளைவதைப்போல கைகள் தடுமாறின. “ஒரு க்ளாஸ் எடுத்துட்டு வா.” என்று கட்டளையிட்டார்.

“வேண்டாம். காணும்.” என்றான் அருள்குமரன். நள்ளிரவு பன்னிரெண்டு தாண்டியிருந்தது. “ரீவி போடவா?”

அற்புதம் அவனைப் பார்த்துக் கேவலமாகச் சிரித்தார். “நீ எனக்குப் பொம்பிளை ஆசை காட்டுறியா?” எழ முயன்றபோது கால்கள் பின்னிக்கொண்டன. சரிந்து விழுந்தார். அவரைத் தூக்கி சோபாவில் கிடத்தினான். கழன்று கிடந்த கைலியை வயிற்றுக்கு மேலே இளகலாகக் கட்டிவிட்டான். போர்வையை எடுத்துவந்து கழுத்துவரை போர்த்தினான். இனித் தூங்கிவிடுவார். பக்கத்திலேயே உட்கார்ந்தான். மழித்துச் சவரம் செய்த முகத்தில் முட்கள்போல ஓரிரு நாள் ஆயுட்கால நரைத்த முடிகள்.. கண்ணுக்குக் கீழே திட்டாகக் கறுத்த நிறம்.. பொம்பிளை ஆசை காட்டுறியா என்ற அந்தக் குரல் நினைவில் மோதிக்கொண்டே இருந்தது. அமந்தாவைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். அது என்ன வகையான உறவு என்று தெரியவில்லை. உண்மையில் அது அவருக்கும் தெரியாது. கொத்துரொட்டி, தோசை எல்லாம் கொண்டு போவாராம். தோசைக்கு சம்பல்தான் நல்ல சுவையூட்டி என்று ஒருநாள் சொன்னபோது, அவள் ‘எல்லாச் சாப்பாடுகளுக்கும் பசிதான் மெச்சத்தக்க சுவையூட்டி’ என்று சொன்னாளாம்.

பிரேசில் நாட்டில், ஏதோவொரு இடம் சொன்னார், அங்கே ஏழைக் குடும்பத்தில் பிறந்தது முதல் அவள் படாத பாடுகள் இல்லை. பதினைந்து பதினாறு வயதுகளிலேயே கடற்கரைக் களியாட்ட விடுதியில் ‘ஸம்பா நடன மங்கை.’ அங்கே அடிக்கடி வருகிற ஒருவன் அவளைக் காதல் வயப்படுத்தி மெக்சிக்கோவிற்கு அழைத்துச் சென்று விற்றுவிட்டான். அப்படித்தான் ‘ப்ரோகிராமா’ தொழிலுக்குப் பழக்கமானாள். நெடுங்காலத்திற்குப் பிறகு அங்கிருந்துதான் இத்தாலிக்கு வந்தாள். ஓர் இத்தாலிக்காரன், மூன்று மாதங்களுக்கென விலை பேசி அழைத்து வந்தவன், மூன்றே நாட்களில் துரத்திவிட ஏதோ ஒரு ரெயினில் ஏறியிருக்கிறாள், அது  சூரிச்சில் வந்து நின்றது.

‘நாங்கள் ரெண்டு பேருமே அகதிகள்’ என்றார் அற்புதம். “நான் எதுக்கு அங்க போனன் எண்டு உனக்குத் தெரியும். ஆனால் அங்க போய் சும்மா கதைச்சிட்டுத் திரும்பி வந்த நாள்களும் இருக்கு. சில நேரம் அவள் வேற யாரோடயோ மேல இருக்கிறாள் எண்டு சொல்லுவாங்கள். சரி.. வேலை முடிஞ்சு வரட்டும் எண்ட மாதிரி நான் காத்திருப்பன். அந்த ஒரு நாளுக்காக காத்திருக்கிறது, ஏதோ வாழ்க்கையில பிடிப்பு வந்த மாதிரி இருந்தது. அவளுக்கு விசாப் பிரச்சனை இருந்தது தெரியும்தான். ஆனால் திடீரெண்டு ஒருநாள் அவளைப் பிடிச்சுத் திருப்பி அனுப்புவாங்கள் எண்டது தெரியாது. நான் வழமைபோல போனன். அவள் இனி வரமாட்டாள், வேற ஒருத்தி இருக்கிறாள் எண்டு சொன்னாங்கள். நான் திரும்பி வந்திட்டன். அதுக்குப் பிறகு அங்க போனதில்லை. எப்பவாவது இப்பிடிக் குடிக்கிற நேரம் அவளிட ஞாபகம் வரும். மற்றும்படி மறந்தும் போயிட்டன். பச்.. ஒரு பொம்பிளையைத் தொடாமல் நான் செத்திடக் கூடாது எண்டதுக்காகவே கடவுள் அவளைக் காட்டியிருக்க வேணும்.”

அருள்குமரன் தூங்கி வழிந்தான். உள்ளே போய்ப் படுக்க எழுந்தபோது அற்புதம் அவனுடையை கையைப் பிடித்துக்கொண்டார். கண்கள் அரைவாசிக்குத் திறந்து ஏக்கமாகப் பார்த்தன. “டேய்.. குஞ்சு.. நீ என்னைக் கொல்ல மாட்டாய்தானே?” என்று அவர் கேட்டபோது நெஞ்சு வறண்டுவிட்டது. “உன்ரை பேர்ஸுக்குள்ளை ஒரு புலிப் பெடியன்ரை படத்தைப் பார்த்திருக்கிறன். ரெண்டாம் லெப்டினன்ட் நீதியரசன் எண்ட பெயர். உண்மையைச் சொல்லடா.. என்னைக் கொல்லுறதுக்கு உன்னை யாரும் அனுப்பி வைச்சிருக்கிறாங்களா?”

அருள்குமரன் நிலைகுலைந்து போனான். கண்ணீர் முட்டிவிட்டது. அவருடைய நெற்றியை ஆறுதலாக வருடினான். பேர்ஸிலிருந்த ரொக்கெட்டின் புகைப்படத்தைத்தான் அவர் பார்த்திருக்க வேண்டும். அதை நூலகம் இணையத்திலிருந்த ஈழநாதம் பத்திரிகையை அச்சிட்டுக் கத்தரித்து வைத்திருந்தான்.

“ஒண்டுக்கும் யோசிக்காமல் படுங்கோ. விடியக் கதைக்கலாம்.”

“பழைய பிரச்சனை ஒண்டையும் மனசில வைச்சிருக்காதை.”

“ஒண்டு தெரியுமா? நீங்கள் புளொட்டில சேர்வதற்குப் படகேறிய நேரம், நான் அப்பதான் பிறந்து தவழவும் தொடங்காத குழந்தை. நமக்குள் என்ன பழைய பிரச்சனை? கண்ணை மூடிப் படுங்க.”

“அதுவும் சரிதான்.” என்றார் அற்புதம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *