அடிப்படைப் பயிற்சிகளின் பிறகு அருள்குமரனை நேரடியாகவே அரசியல் பிரிவில் இணைத்துவிட்டிருந்தார்கள். இப்போது முகாம் காடுகளில் இல்லை. ஊர் மனைக்குள் ஒரு கல்வீடு. யாரோ வெளிநாட்டுக்குப் போனவர்களின் வீடாகத்தான் இருக்க வேண்டும். பழ மரங்களும் பூ மரங்களும் சோலையாகப் பரவிய வளவு. அவனோடு பன்னிரெண்டு பேர் தங்கியிருந்தார்கள். வகுப்புக்களும் மக்கள் சந்திப்புக்களுமாக நாட்கள் நகர்ந்தன. திடீரென்று ஒருநாள் அவனை அரசியல் பிரிவிலிருந்து பிரித்து எடுத்து இன்னொன்றில் இணைத்தார்கள். அந்தப் பொறுப்பாளர் “அரசியலுக்கு சனத்தோடை கதைச்சு விசயங்களை அறிஞ்சுகொள்ள வேணும். இதுக்கு கதைக்காமல் வெறும் கண்ணாலேயே அறிஞ்சுகொள்ள வேணும்.” என்றார். ஒரு மாதிரியான மூடு மந்திர உலகம் அது. நடை உடை பாவனைகளில் சற்றுப் பகட்டாகவும் இருந்தது. அருள்குமரன் வெகு சீக்கிரத்திலேயே அதற்குள் பொருந்திப் போனான். ஆறாவது மாதத்தில் அவனைக் கொழும்புக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்கள். பல வழிகளிலும் யோசித்திருக்கக் கூடும். சனத்தோடு சனமாக அவனும் எல்லையைத் தாண்டலாம். கடல் வழியாக புத்தளத்திற்குச் சென்று இறங்கலாம். மட்டக்களப்பிலிருந்து அடர்ந்த கானகங்களைக் கடந்து நடந்தே போகலாம். ஆனால் அந்த நேரத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. அதற்குப் பிறகுதான் இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து கொழும்பிற்குப் போவது என்று முடிவு செய்திருக்க வேண்டும். அது ஒரு ரகசிய நடவடிக்கைதான். அவனுக்குக் கூட அவ்வப்போதுதான் தகவல் சொல்லப்பட்டது. அதுவும் முழுமையாக அல்ல, துண்டு துண்டாக.
வலைப்பாடு, ஒரு மீனவக் கிராமம். அங்கிருந்துதான் புறப்பட வேண்டும். அருள்குமரன் கடலோரத்தில் ஒரு வாடிக் கொட்டிலில் தங்கியிருந்தான். பனை ஓலையால் வேய்ந்த குடில். சுவர் இல்லை, பதிலுக்கு பாய்களால் அடைத்து மறைத்திருந்தார்கள். கீழே சுடு மணலில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட நீல நிற ப்ளாஸ்ரிக் விரிப்பு. நெருப்பு வெயிலில் உருகி வழிந்து கால்களில் ஒட்டிக்கொள்வதைப்போல தகிக்கும்.
எப்போது புறப்படுவது என்பதைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது. ‘வலைப்பாட்டுக்குப் போ’ என்பதுதான் உத்தரவு. இப்படி ஒவ்வொன்றாகத்தான் உத்தரவு வரும்போல. இப்போதைக்கு இந்த வாடிக் கொட்டிலை விட்டு வெளியே எங்கும் போகக் கூடாது. அருள்குமரன் காலையில் நிலம் வெளிக்க முன்னேரேயே சற்றுத் தொலைவில் நாகதாளிப் பற்றையும் பூவரசும் அடர்த்தியாக நின்ற நிலத்தில் ஒரு பனைக்குப் பின்னால் குந்தி எழும்புவான். கரையோர மாதா கோவில் கிணற்றடியில் ஒரு வாளி தண்ணீர் அள்ளி தேகத்தைக் கழுவிவிட்டு வந்துவிடுவான். இரண்டு மீனவர்கள் சாப்பாடு கொண்டுவந்து தருவார்கள். அவர்கள் மீனவர்கள்தானா? அல்லது இயக்கக் காரர்களா..?
ஒரே ஒரு பைதான் அவனிடம் இருந்தது. முதுகில் தூக்கி மாட்டக் கூடிய பை. ஐந்தாறு சோடி உடுப்புக்களையும் உள்ளாடைகளையும் அடைந்து வைத்திருந்தான். அவற்றுக்கிடையில் பொலித்தீனால் உறையிடப்பட்ட பிறப்புச் சான்றிதழ். அதைக் கவனமாக வைத்திருக்க வேண்டும். போலியாகத் தயாரித்தார்களா அல்லது வேறு யாரோ ஒருவருடையதா என்பதைப் பற்றித் தெரியவில்லை. அதிலேதான் அவனுடைய பெயர் அருள்குமரன் என்று இருந்தது. அப்பாவுக்குத் தியாகராஜா, அம்மா கலாவதி, பிறந்த இடம் யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு. அதைப் பார்க்கிற போதெல்லாம் அம்மாவின் பெயரைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தான். அருள்குமரன் என்ற பெயரை மனதிலே இருத்த வேண்டும். புதிய இடத்தில் பழைய பெயரை அறிந்த யாருமே இருக்க மாட்டார்கள். கெனடி என்று கூப்பிட ஆராதனாவும் இல்லை, நிலவன் என்று அழைக்க ரொக்கெட்டும் இல்லை. அருள்குமரன் என்று என்னை அழைக்கப் போகும் அந்த முதலாவது ஆள் யார்? யாரோ ஓர் இந்திய அதிகாரியாகத்தான் இருப்பார். அதற்கு முதல் என்னை நானே அழைத்துக்கொள்ள வேண்டும். நான்தான் அருள்குமரன்.
கடந்த காலங்களை அதே பெயரில் நினைக்கலானான். ‘அருள்குமரன்.. அருள்குமரன்..’ ஆராதனா முணுமுணுக்கிறாள். அவளுடைய கண்கள் மோனத்தில் திளைத்திருக்கின்றன. உடல் சோர்ந்து ஒடுங்குகிறபோது ‘கெட்ட குமாரா..’ என்று சிரிக்கிறாள். திடீரென்று கிணற்றடியில் நின்று அமலி அக்கா கூப்பிடுகிறாள். ‘டேய் அருள்குமரன்.’
தமிழ்நாட்டிலிருந்து எரிபொருட்களையும், மருந்துகளையும் கொண்டுவரும் மீன்பிடிப் படகுகளை ‘தம்பி சரக்கு வண்டி’ என்று பேசிக் கொள்வார்கள். அப்படியொரு ரோலர் படகில்தான் அருள்குமரன் போக வேண்டும். இன்னும் சில நாட்கள் தாமதமாகும்போலதான் தோன்றியது. கடல் என்னவோ அமைதியாகத்தான் இருந்தது, ஒரு பாயை விரித்துவிட்ட மாதிரி. நீர்ப் படுக்கையில் கலங்கலோ புகாரோ இல்லை. இங்கிருந்து பார்த்தபோதே இரணைதீவு தெரிகின்ற தெளிவு. தம்பி சரக்கு வண்டி வருவதில்தான் ஏதோ சிக்கலாக இருக்க வேண்டும். அவர்கள் திரும்பிச் செல்லும்போது அருள்குமரனையும் அழைத்துச் செல்வார்கள். அவனை தனுஸ்கோடிக்கு அருகாக, ஒரு மண் திட்டில் கண்டு ஏற்றிக்கொண்டு வந்ததாக ராமேஸ்வரம் பொலிஸ்காரர்களுக்குச் சொல்வார்கள். அருள்குமரன் அதுதான் உண்மை என்று ஆமோதிப்பான். மன்னாரைச் சேர்ந்த ஒரு படகோட்டி அவனை அழைத்துவந்து மண் திட்டில் இறக்கிவிட்டுத் திரும்பிவிட்டதாகவும் சொல்வான். அவனுக்குச் சுளையாக இருபதாயிரம் ரூபாய்களைக் கொடுத்ததாகவும்..
மூன்றாவது நாள். அதிகாலையிலேயே தேகம் நச நசத்தது. தோல் முழுக்க உப்புப் படை. மாதா கோவில் கிணற்றடியில் தண்ணீரை தள்ளி தலையில் வார்த்தான். சொரசொரத்த மண்ணை வாரி அக்குளிலும் வயிற்றிலும் தொடை இடுக்குகளிலும் ஊத்தையைத் தேய்த்தான். தண்ணீரால் கழுவிவிட்டு வாடிக் கொட்டிலுக்குத் திரும்பியவனை, உள்ளேயே ஒளிந்து நின்ற மூன்று இயக்கப் பெடியங்கள் பாய்ந்து கீழே தள்ளினார்கள். தடாரென்று முகக் குப்புற விழுந்தான். அவனுக்கு மேலே ஏறி உட்கார்ந்தார்கள். அசைய முடியாது. கண்ணுக்குள் மண் புகுந்து எரிந்தது. அவனுடைய கைகளை முதுகில் வைத்து மடக்கிப் பிடித்திருந்தார்கள். “இந்தியாக்குப் போகவா வந்திருக்கிறாய்?” ஒரு குரல் அதட்டிக் கேட்டது. சம வயதுக் குரல்தான். அருள்குமரன் “ஓம்.” என்றான். மணலுக்குள் தலையை அழுத்துகிறார்கள். வாயெல்லாம் மண். எச்சிலைத் துப்பித் துப்பி வெளியேற்றினான்.
“இயக்கத்தில் இருந்தனியா?”
“ம்ம்.”
“கள்ள மயிராண்டி.. தப்பி ஓடுறியா?” குண்டியில் ஓர் உதை விழுந்தது.
அவனையும் அறியாமல் உடல் அனிச்சையாகத் திமிறிக் கொண்டிருந்ததை அப்போதுதான் கவனித்தான். சட்டென்று ஓய்ந்தான். இனி ஒவ்வொரு வார்த்தையையும் உற்றுக் கவனிக்க வேண்டும். நிதானமாக மூச்சை விடுவித்தான். இப்போது ஒரு சிங்கள ராணுவ வீரன் என்னைக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான் என்றுதான் யோசிக்க வேண்டும். ‘இனிமேல் மனசாட்சிதான் உன்ர பொறுப்பாளர். எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது எண்டு கட்டளையிட பக்கத்தில ஒரு பொறுப்பாளர் நிக்க மாட்டார். ஒவ்வொண்டுக்கும் நீதான், உன்ர மனசாட்சிதான் பொறுப்பு.’ என்று தென்னவன் சொன்னதை நினைவுபடுத்தினான். ஒருவேளை இது தென்னவனுடைய வேலையாக இருக்குமா? உதட்டோரம் புன்னகையின் கசிவு. ‘தென்னவன் அண்ணை.. என்னைச் சோதிச்சுப் பாக்கிறீங்களா?’
“சொல்லடா.. வாய்க்குள்ள என்ன கிரேனைட்டையா வைச்சிருக்கிறாய்? இயக்கத்தில இருந்து தப்பி ஓடுறியா?”
“ஓம்..”

அவனைப் பந்துபோல உதையத் தொடங்கினார்கள். பற்களைக் கடித்து வலியைத் தாங்கிக்கொண்டான். வலையைக் கிழித்துக் கைகளைக் கட்டினார்கள். மணிக்கட்டு நரம்பை நைலோன் கயிறு அழுத்த நடுவிரல் மட்டும் துடித்தது. தூக்கி நிறுத்தினார்கள். ஈர நெஞ்சில் அப்பிவிட்டதைப்போல மண். கடை வாயில் வீணிர் வழிந்தது. மெல்லத் தலையை உயர்த்தினான். அவனைச் சூழ்ந்த நின்றவர்களுக்கும் பத்தொன்பது, இருபது வயதுகள்தான் இருக்கும். கடல் நீலத்தில் கறுப்புப் புள்ளிகள் வைத்த சேர்ட் அணிந்திருந்தார்கள். கடற்புலிகள்தான் இந்த மாதிரி உடுப்புக்களைப் பாவிக்கிறார்கள்.
“எந்த முகாமில இருந்து வாறாய்?” என்று ஒருவன் கேட்டான். அருள்குமரன் சொன்னான்.
“இது யாருடைய வாடிக் கொட்டில்?”
“தெரிஞ்ச அண்ணையின்ர.”
“இயக்கத்தில இருந்து தப்பி ஓட உனக்கு வெட்கமா இல்லையா?” என்று கேட்டவனை அருள்குமரன் திரும்பிப் பார்த்தான். அவனையும் அறியாமல் ஓர் எள்ளல் கண்களில் மின்னியது. இயக்கப் பெடியன் அதைக் கண்டிருக்க வேண்டும். ஓங்கி ஓர் அறை விட்டான். “நான் கேக்கிறது உனக்கு நக்கலா இருக்கா?” பொறி கலங்கிவிட்டது. கண்ணுக்குள் குறுக்கு மறுக்காக மின்மினிப் பூச்சிகள். காதுகளில் கடலின் இரைச்சல். அருள்குமரனுக்கு நெருப்பு மூண்டது. “புடுக்குப் பயல்களே.. நான் யாரெண்டு தெரியுமா?” தொண்டைக் குழி வரை வந்த குரலை மென்று விழுங்கினான். தலையைக் குனிந்தான். ‘தென்னவன் அண்ணை.. இவங்கள் எல்லை மீறிப் போகிறார்கள்.. பொறுமைக்கும் ஒரு அளவுண்டு’
அன்றைக்கு முழங்காவிலில் இருந்த கடற்புலிகளுடைய முகாமில் அருள்குமரன் தடுத்து வைக்கப்பட்டான்.
0
அடுத்த நாள் காலையில் ஈழநாதம் பத்திரிகையின் இரண்டாவது பக்கத்தில் ரொக்கெட்டின் புகைப்படம் ஒரு முத்திரை அளவில் வெளியாகி இருந்தது.
வீரச்சாவு
2ம் லெப்டினென்ட் நீதியரசன்
மன்னார்
மண்ணில் 27.09.1978
மண்ணிற்காக 18.08.1997
பெரியமடுவில் இராணுவ மினிமுகாம்களைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் வீரச்சாவு.
இயக்கத்தில் அறிமுகமாகி ஒன்றாகப் பழகியவர்களில் இவன்தான் முதன் முதலாக வீரச்சாவு. மனம் தத்தளிப்பாகவே இருந்தது. ஒவ்வொருநாளும் போராளிகள் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவராக தன்னையோ நண்பர்களையோ அருள்குமரன் ஒருநாளும் பொருத்தி யோசித்ததில்லை. அப்படி ஒன்று நடந்த பிறகுதான் அந்தரமாக இருந்தது. ரொக்கெட்டுடன் காவல் கடமையில் நின்ற காலங்கள்.. அவனிடம் திட்டு வாங்கிய நாட்கள்.. அவனுடைய கனிவான வார்த்தைகள்.. நினைவுகள் சூழ்ந்தன.
காலையில் சாப்பிடவே பிடிக்கவில்லை. கடற்புலிகளின் சமையற் கூடத்திலிருந்து அழைத்தார்கள். “பெடியங்கள் பிடிச்சிட்டு வந்ததை மனசில வைச்சுச் சாப்பிடாமல் இருக்க வேண்டாம்.” கடற்புலிகளின் இரண்டாம் நிலையிலிருந்த பொறுப்பாளர் வந்து பேசினார். இரவே விசாரணைகள் முடிந்துவிட்டன. பெரிதாக ஒன்றும் இல்லை. பெயர் விபரங்களைக் கேட்ட பிறகு ‘பேச வேண்டிய இடங்களுக்குப்’ பேசியிருப்பார்கள். கிடைக்க வேண்டிய தகவல்கள் கிடைத்திருக்கும். “நீ உன்ர பொறுப்பை சரியாச் செய்தாய். அவங்கள் தங்கட பொறுப்பைச் சரியாச் செய்தாங்கள். யாரிலுமே பிழை இல்லை. இரவுக்கு இங்கை தங்கு. விடிய கூட்டிக்கொண்டு போக வருவாங்கள்.”
அருள்குமரன் மறுபடியும் பத்திரிகையைப் புரட்டி ரொக்கெட்டின் முகத்தைப் பார்த்தான். ஒன்றரை வருட இடைவெளியில் அவனுக்குக் கத்தையான மீசை முளைத்திருந்தது. அடிப்படைப் பயிற்சிக் காலத்தில் வெறும் அரும்பு மீசைதான்.
“மீசை முளைக்கிறதுக்கு நல்லெண்ணைய் ஏதாவது பூசுறியா?” என்று ஒருநாள் அருள்குமரன் கேட்டான்.
“ஓமோம். மேலயும் கீழயும்.” அலட்சியமான பதில்.
அருள்குமரனுக்கு அழகுணர்ச்சியில் சற்று ஈடுபாடு இருந்தது. சும்மா நடந்துகொண்டிருக்கும் போதே நிழலைப் பார்த்து தலை மயிரை விரல்களால் சரி செய்து விடுவான். எண்ணெய் வைக்கப் பிடிக்காது. ரொக்கெட் அதற்கு எதிர்மாறு. ஒட்ட நறுக்கிய மொட்டைத் தலை. எண்ணெய் வழியும். சவர்க்காரம் கூடப் போட்டுக் குளிப்பதில்லை. புற்று மணல்தான். அழகுணர்ச்சிகளில்தான் அந்த மாதிரியான விட்டேத்தித் தனம். கடமை என்று வந்துவிட்டால் கொஞ்சமும் நெகிழாத கடுமை அவன். “இவனை விடவும் ரெயினிங் மாஸ்ரர் பரவாயில்லை.” என்று போராளிகள் பேசிக்கொள்வார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கு முதலாவது விசில் ஒலிக்கும். அதற்கு முன்னரே ரொக்கெட் எழுந்து இருட்டில் உட்கார்ந்திருப்பான். சத்தம் கேட்டதும்தான் தாமதம் அத்தனை பேரையும் உலுப்பி எழுப்பி விடுவான். இரண்டாவது விசில் கேட்கும் வரைக்குமான காலத்தை எச்சரிக்கைக் காலம் என்று சொல்வார்கள். அதாவது தாக்குவதற்கோ அல்லது தப்பி ஓடுவதற்கோ அணிகள் தயாராக இருக்கின்றன என்று அர்த்தம். எல்லோருமே விறைப்பாக இருப்பார்கள். இரண்டாவது விசிலில் அது ஓயும். காலைக் கடன்களுக்காக ஓடுவார்கள். இருபது மீற்றர் நீளமும் இரண்டு மீற்றர் அகலமும் உள்ள ஆங்கில ஐ வடிவக் கிடங்குக்கு மேலே குறுக்காகத் மரக் கட்டைகளைப் போட்டு அமைத்த கழிவிடம். கட்டைகளுக்கு மேலே பாதங்களை ஊன்றிக்கொண்டு பத்து, இருபது பேர் ஒன்றாகவே உட்காரலாம். அவ்வப்போது கிடங்குகளில் குப்பையைப் போட்டுக் கொழுத்த வேண்டும். பெடியங்கள் “ஐயோ.. குண்டி எரியுதே..” என்று அப்போது நடித்துக் காட்டுவார்கள்.
தொடக்கப் பயிற்சியின்போது துப்பாக்கிகளுக்குப் பதிலாக மரக் கொட்டான்களைத்தான் கொடுத்தார்கள். ரொக்கெட் அதைக்கூட ஒரு துவக்குப்போல பராமரித்தான். கையாளும்போதே ஒரு ராணுவ மிடுக்கு. வரிசை நிற்பதற்கான விசில் ஒலித்ததும் ஓடிச் சென்று கொட்டானைப் பெருவிரலில் வைத்து நிமிர்த்திப் பிடித்தபடி நிற்பான். ஒவ்வொரு நாளும் உறுதி மொழி எடுக்கிறபோது அவனுடைய குரல் மட்டும் தனியாக பயிற்சி மைதான எல்லைகளில் எதிரொலிக்கும்.
“எமது புரட்சி இயக்கத்தின்..
மேன்மைமிகு குறிக்கோளாம் பொதுவுடமைத் தன்னாட்சித் தமிழீழ விடுதலைக்காக
எனது உள்ளம், உடல், உடமை அனைத்தையும் ஈந்து
உறுதியுடன் போராடுவேன் என்றும்
எமது தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்
வழிநடத்தலை உளமார ஏற்று
அவருக்கு என்றும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயலாற்றுவேன் என்றும்
இதனால் உறுதி எடுக்கின்றேன்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ரொக்கெட்டுக்கு ஒரு நாளும் களைத்ததில்லை. ஓடும்போதும், தவழும்போதும், பாயும்போதும் வேகம்.. வேகம்.. அதனால்த்தான் அவனுக்கு ரொக்கெட் என்று பெயர். அருள்குமரனுக்கு மூச்சு வாங்கும். இடை நடுவில் முழந்தாளில் கையை ஊன்றிக் குனிந்து நிற்பான். நாயைப்போல நாக்குத் தொங்கும். வேர்த்து வழியும். தொண்டை வரண்டிருக்கும். பயிற்சி ஆசிரியர் கத்த முன்னரே ரொக்கெட்டின் குரல் அதட்டும். “போ.. போ.. ஓடு.. ஓடு..”
கடமை நேரங்களில்தான் இப்படி. இதுவே ஒரு வருத்தம், துன்பம் என்றால் கருணை பொருந்திய மாதாவாக மாறிவிடுவான். “காய்ச்சல் காயுதா? நீ படுத்திரு. நான் ரெயினிங் மாஸ்ரரிட்ட சொல்லுறன்.” “தலை இடிக்குதா? இந்தா சுடு தண்ணிச் சீலை. நெத்தியில வைச்சுப் பொத்திப் பிடி.” “கெதியாச் சமையுங்கடா.. பெடியங்கள் பசி பொறுக்க மாட்டாங்கள்.” அவனுக்குக் கட்டுப்படுகிற மாதிரியான ஒரு மனநிலை இயல்பாகவே அருள்குமரனிடம் ஏற்பட்டிருந்தது. “இதென்ன.. காகக் கூடு மாதிரித் தலைமயிர்.. வா.. வெட்டி விடுறன்.” அப்படி ஒட்ட நறுக்கக் கொஞ்சமும் பிடிக்காது, ஆனாலும் மறுத்துப் பேச மாட்டான். இயக்கத்தை விட்டுத் தப்பி ஓடத் தோன்றிய அன்று, பிறகு அந்த நினைப்பைக் கைவிட்டுவிட்டுத் திரும்பியபோது ரொக்கெட் விழித்துத்தான் இருந்தான். “எங்க போயிட்டு வாறாய்?” என்று கேட்டான். “ரொய்லெற்றுக்குப் போனன். நித்திரைக் குழப்பத்தில பாதை மாறிட்டுது.” அவன் மறு கேள்வி எதுவும் கேட்கவில்லை. “இயக்கத்தக்கு எண்டு ஒரு மானம் மரியாதை இருக்கு. அதைக் காத்தில பறக்க விட்டு விடாத.” என்று மட்டும் சொன்னான்.
ஒருமுறை அம்பகாமம் என்ற இடத்தில் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு காதலர்கள் ஒன்றாகத் தற்கொலை செய்ததாக ஒரு செய்தி, பயிற்சி முகாமிலும் அரசல் புரசலாகப் பரவியிருந்தது. அந்தப் பெண் பிள்ளையின் பொறுப்பாளர் ஏதோ ஒரு தருணத்தில் “நீ காதலிக்கிறதுக்கா இயக்கத்துக்கு வந்தனி?” என்று திட்டியிருக்க வேண்டும். அவள் மனமுடைந்து விட்டாள். இரண்டு பேரும் காட்டுக்குள் தனித்திருந்த அம்மன் கோவிலில் கட்டிப் பிடித்தபடி நெஞ்சுக்குள் கிரேனைட்டை வெடிக்க வைத்துச் செத்துவிட்டார்கள். ‘அண்ணை’ பொறுப்பாளர்களைத் திட்டித் தீர்த்தாராம். இரண்டு பேருடைய உடல்களையும் ஒன்றாக வைத்துப் புதைக்கும்படி சொன்னாராம். ஆனால் ரொக்கெட் அந்த இரண்டு பேரையும்தான் திட்டினான். “இயக்கத்தின் மானத்தைக் கப்பலேத்தத்தான் இந்த மாதிரி ஆக்கள் வாறாங்கள்.” என்று கத்தினான். அருள்குமரன் ஆராதனாவைப் பற்றி அவனிடம் மூச்சும் விட்டதில்லை.
இரண்டு பேருக்கும் அதிகாலைக் காவல் கடமை ஒன்றாக வாய்க்கும் நேரங்களில் ரொக்கெட் அவனுடைய அம்மாவை அடிக்கடி ஞாபகப்படுத்துவான். “சாக்கிலதான் அவவைக் கூட்டி அள்ளினம். அந்தச் சாக்கு மூட்டையை நான்தான் தூக்கிக் கொண்டு நடந்தன். பாரமே இல்லை. எரிக்கக் குடுத்திட்டு அப்பிடியே நான் இயக்கத்துக்கு வந்திட்டன்.” அந்நேரங்களில் அருள்குமரன் குமைந்து போவான். குற்ற உணர்ச்சி அழுத்தும். ‘அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள், பிற்காலங்களில் அற்புதமான காரியங்களைச் செய்தார்கள்.’ இராவணேசனின் அந்த வார்த்தைகள்தான் ஒரேயோர் ஆறுதல்.
பயிற்சி முகாமில் சூட்டுப் பயிற்சிகள் ஆரம்பித்தன. துப்பாக்கியையும் மூன்று குண்டுகளையும் கோயில் பிரசாதத்தைக் கண்ணில் ஒற்றுவதைப்போல ரொக்கெட் வாங்கினான். இலக்கிற்காக ஒரு ராணுவ உருவம் வரையப்பட்டிருந்தது. நெஞ்சில் கறுப்புப் புள்ளி. அதற்குப் புள் என்று பெயர். அந்த மையத்திலிருந்து ஒன்பது, எட்டு, ஏழு என்று வட்டங்கள் விரிந்தன. ரொக்கெட் தீவரமான முகபாவத்தோடு இலக்கைக் குறி வைத்தான். ‘டப்..’ குண்டுச் சத்தம் எதிரொலித்தது. முதற் குண்டு வட்டம் எட்டில் தைத்தது. பயிற்சி ஆசிரியர் முதுகில் தட்டிப் பாராட்டினார். இரண்டாவதும் மூன்றாவதும் சொல்லியடித்த மாதிரி புள். பயிற்சிக் காலத்தின் பிறகு ரொக்கெட் ஒரு ‘ரெயினிங் மாஸ்டர்’ ஆகலாம் என்று பெடியங்கள் பேசிக்கொண்டார்கள். அவன் அவர்களிடம் “மயிர்க்கதை கதைக்க வேண்டாம். நான் அடுத்த நாளே சண்டைக்குத்தான் போவன்.” என்றான்.
