அபர்ணா வேலை செய்த முதியோர் காப்பகத்திலேயே அருள்குமரனுக்கும் சமையல் உதவியாளனாக வேலை கிடைத்தது. மூவாயிரத்து நூறு பிராங்குகள் சம்பளம். அபர்ணாதான் அப்படியொரு வேலை வந்திருப்பதாகவும் விண்ணப்பிக்குமாறும் சொன்னாள். “முந்தி நூறு பேருக்குச் சமைச்ச கொம்பனியின்ரை பெயரை மறக்காமல் எழுதுங்க.” என்றபோது அருள்குமரனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்புத்தான் வந்தது. “எல் ரி ரி ஈ எண்டுதான் எழுத வேணும்.” என்றான்.
அவளுக்கு சட்டென்று நம்ப முடியாத ஓர் ஆச்சிரியமாக இருந்திருக்க வேண்டும். “நீங்கள் இயக்கத்தில இருந்தீங்களா?” என்று கேட்டாள்.
எல்லோரும் கேட்டு முடித்த கேள்வி. முன்னர் என்றால் அதைத் தாண்டிக் கடந்துவிடவேண்டும், ஒளித்து மறைத்துவிட வேண்டும் என்றெல்லாம் தோன்றும். இலேசாகப் பதறும். அபர்ணாவிடம் அப்படி இல்லை. இயல்பாகவே சொன்னான். “அது கொஞ்சக் காலம்தான். பிறகு வெளிய வந்திட்டன்.”
“வெளிய எண்டால்?”
“தப்பி ஓடி வந்திட்டன்.” என்றபோது மறுபடியும் சஞ்சலம் தோன்றியது. இதைத் தாண்டிக் கடந்துவிட வேண்டும்.
“உங்கடை தலைவர் பிரபாகரனை நேரில பாத்திருக்கிறியளா?”
“இல்லை. உங்களை மாதிரித்தான். படங்களில பாத்திருக்கிறன். மீசையோடும், மீசை இல்லாமலும்.”
0
இப்போதுதான் சமையல் அறையைப் பளிச் என்ற மாதிரிச் சுத்தம் செய்துமுடித்துவிட்டு அருள்குமரன் வெளியேறினான். தொடர்ந்து எட்டு மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்ததில் நாரி நொந்தது. போகப் போகப் பழகிவிடும். நேரத்தைப் பார்த்தான். இரவு ஒன்பது பத்து. ஒன்பது இருபத்து மூன்றுக்கு ஒரு பஸ் இருக்கிறது. தவறினால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். உடை மாற்றும் இடத்திற்குப் போய் முதுகுப் பையை எடுத்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினான். காற்றில் குளிர் குழைந்திருந்தது. இனிமேல் சேர்ட்டுக்கு மேலே எதையாவது அணிந்தாக வேண்டும். பேருந்து ஏற்கனவே வந்துவிட்டிருந்தது. பாய்ந்து ஏறினான். ‘இனிய மாலை ஆகட்டும்.’ சாரதிக்குச் சொல்லிவிட்டு கடைசி இருக்கையைத் தேடிப் போய் உட்கார்ந்தான். இன்னொருவரால் சகிக்க முடியாத அளவிற்கு எண்ணையும், பச்சை இறைச்சியும் பிசுபிசுப்பாகத் தன்னில் மணக்கிறது என்ற நினைப்பு அனிச்சையாக உருவானது. முதுகுப் பையை பக்கத்து இருக்கையில் வைத்தான். தூங்குவதைப்போல பாசாங்காகக் கண்களை மூடிக்கொண்டால் யாரும் அதை எடுக்கச் சொல்ல மாட்டார்கள்.
பேருந்து புறப்படுவதற்கு ஓரிரு நிமிடங்கள்தான் இருந்திருக்கும். அபர்ணா வருவது தெரிந்தது. தெருவைக் கடப்பதற்காக பச்சை சமிக்கை விளக்கிற்காகக் காத்து நிற்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி வேலை நேரங்கள். சில சமயம் காலையில் ஆறுக்குத் தொடங்கி மதியம் முடியும். அல்லது மதியம் தொடங்கி இரவுக்கு முடியும். சில வேளைகளில் காலையில் நான்கு மணி நேரம், இரவு நான்கு மணி நேரமாகவும் அமைவதுண்டு. இன்று செவ்வாய்க்கிழமை. இந்நேரத்தில் முடியும். மனம் அதுவாகக் குறித்துக்கொண்டது. ஏன் ஆறுதலாக நடக்கிறாள். கொஞ்சம் கெதியாக வரலாமே.. பஸ் போகப் போகிறது. இன்னதெனத் தூலமற்ற பதற்றம். அருகே வந்துவிட்டாள். ஏறிவிட்டாள். அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்ததைப்போல மூச்சை விடுவித்தான். ஆறுதலாக இருந்தது.
அபர்ணா சாரதியிடம் சில்லறைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பியவள், இவனைக் கண்டிருக்க வேண்டும். உதடுகளில் புன்னகை விரிந்து சட்டென்று கலைந்து முகத்தில் கடுமை ஏறியது. அவள் சிரிக்கிற நேரங்களில் நெஞ்சில் ஊர்கின்ற ஒருவித நிச்சயமின்மையை அணைத்துத் தூங்க வைப்பதைப்போல இருக்கிறது. இப்போது என்ன ஆயிற்று? அவள் அவனை நோக்கி வந்தாள். யாராவது வெள்ளைக்காரர்கள் பக்கத்தில் உட்கார்ந்து இந்த சமையல் மணத்திற்கு முகத்தைச் சுழித்தால் அன்றைக்கு முழுக்க ஆற்றாமையாக இருக்கும். அதனாலேயே யாரும் இருந்துவிடக் கூடாதென்று விரும்புவான். ஆனால் அபர்ணா இருக்கலாம். அவள் இருக்கையிலிருந்த முதுகுப் பையை தூக்கி அவனிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தாள். “அருள்குமரன், ஆக்களுக்கு மணக்கும் எண்டுறதுக்காக இப்பிடி ஒளிஞ்சிருக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கள். பார்க்க எரிச்சலாக இருக்கு. சமையல் எண்டால் மணக்கத்தான் செய்யும். அதுக்கு ஏன் பயப்பிடுறீங்கள்?” அவளுடைய குரல் அதட்டியது. அருள்குமரன் எதுவும் பேசவில்லை. அவள் சொல்வது சரிதான். இந்த மாதிரியான உள்ளொடுங்கிய குணம் அவனையே அடிக்கடி தன்னிரக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. யாரையுமே தெரிந்திருக்காத கொழும்பில் அலைந்து திரிந்த போதெல்லாம் இப்படி இருந்ததில்லை. இங்கே வந்த பிறகுதான். ஒருவேளை வெள்ளைக்காரர்கள் என்பதால் உருவாகிற தாழ்வுச் சிக்கலோ? அபர்ணா சொல்வதைப்போல அவர்கள் ஏதாவது நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும், எனக்கு என்ன? என்றாலும் பக்கத்தில் உட்கார்ந்த யாரோ ஒரு சுவிஸ் கிழவி, மூக்கைப் பொத்திக்கொண்டு எழுந்து தூரச்சென்றால் அவமானமாகத்தான் இருக்கும்.
அருள்குமரன் பேருந்தின் ஜன்னலில் தலையைச் சாய்த்திருந்தான். வெளியே பின்னோடிய மரங்களின் இலைகள் பழுப்பு நிறமாகச் சாயம் போயிருந்தன. இன்னமும் ஓரிரு மாதங்கள்தான். பிறகு குளிர் அவற்றை உருவிக் கீழே விழுத்தும். குளிரிடம் உயிரோடு அகப்பட்டுவிடக் கூடாதென்றுதான் முன்னரே உதிர்கின்றனவோ..? தூரத்தில் ஏரியின் மேலே மம்பல் இருட்டுப் படர்ந்திருந்தது. ஒரே ஓர் ஏரிதான், மலைக்குன்றிலிருந்த அகதி முகாமில் தெரிவதும், பேருந்து நிறுத்தத்திற்கு பக்கத்தில் இருப்பதுவும், இதோ இந்தப் பயணத்தில் கூடவே நீள்வதும், ஒரே ஏரியின் வெவ்வேறு கரைகள்தான். யோசிக்கிறபோது ஆச்சிரியமாக இருக்கிறது, இத்தனை நாட்களில் இந்த ஏரியைக் காணாத ஒரு நாள் இல்லை. கண்ணுக்குத் தெரியாத கயிற்றால் கட்டிவிட்டதைப்போல இதைச் சுற்றிச் சுற்றித்தான் வாழ்வு அலைகிறது. ஏரிக் கரைகளின் நீளக் கதிரைகளில் இப்போது குளிர் ஏறி உட்கார்ந்து ஊருக்குள் நுழைவதற்கான நாளுக்காகக் காத்திருக்கும்போல. ஓரளவிற்குக் குளிர்ச் சனியனைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது மாலை நான்கு மணிக்கெல்லாம் இருட்டு என்ற நாயையும் கூட்டிக்கொண்டு வரும்போதுதான் மூளையை எடுத்து யாரோ கையில் வைத்துப் பிசைவதைப்போல ஆகிறது.
“என்ன யோசனை?” என்று அபர்ணா கேட்டாள். “ஒண்டுமில்லை.” என்றான். அவள் இரண்டொரு தடவை மூச்சை ஆழ இழுத்தாள். முகத்தில் ஒரு கமுக்கச் சிரிப்பு. “சமையல் மணக்கும் எண்டு நீங்கள் பயப்பிடுறதிலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. பச்சை இறைச்சி மணக்குது.” வேண்டுமென்றே அவள் தயங்கித் தயங்கி சொன்னபோது அருள்குமரனுக்கும் சிரிப்பு வந்தது.
கடைசி நிறுத்தத்திற்கு இன்னமும் நேரம் இருந்தது.
0
திருமதி சூமாஹர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். முகத்தில் ரேகைகளைப்போல தோல் சுருக்கங்கள் தெரிந்தன. காதுகளில் வெள்ளித் தோடுகள். வெண் பஞ்சுக் கேசத்தை ஒரு சிறுவனுடையதைப்போல வாரி விட்டிருந்தாள். ஒருநாள் இதைப்பற்றிக் கேட்டபோது ‘அந்தக் காலத்தில் நாங்களும் ஆண்களுக்குச் சமம் என்று காட்ட இப்படித்தான் எதையாவது செய்ய வேண்டி இருந்தது.” என்று அலுத்துக் கொண்டே சொன்னதாக நினைவு. குட்டித் தேகம், ஒரு பறவை இறகின் கனம்.
அபர்ணா ஜன்னல் திரைச் சீலைகளை இழுத்து வெளிச்சத்தைத் தருவித்தாள். சூமாஹரின் தலையைப் பரிவோடு வருடி “திருமதி சூமாஹர் இனி எழுந்து கொள்வோமா?” என்று கேட்டாள். அவளைப் பார்த்தால் ஒரு குழந்தை தூங்குவதைப்போலதான் தோன்றுகிறது. குழந்தைமையின் தனிமை! இந்த நினைவே அச்சமூட்டுகிறது. சூமாஹர் கண்களைத் திறந்தாள். வெறுமையான பார்வையால் ஓரிரு நொடிகளுக்கு அறையைத் துளாவினாள். பிறகு “யார் நீ? என்னுடைய அறையில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கேட்டாள். வழமையான கேள்விதான். அவளுக்கு அல்சைமர் நோய். அவளுடைய நினைவுகளை அது கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருந்தது. பாவம், முதுமையின் தனிமையில் அவளுக்கு நினைவுகள் கூடத் துணையாக இல்லை. பிள்ளைகளின் முகங்களையே நோய் அரித்துவிட்டது. அபர்ணாவிற்கு இன்னமும் நம்ப முடியாத அதிர்ச்சிதான். சூமாஹர் பெற்ற பிள்ளைகளையே மறந்துவிட்டாள் என்பதை அவர்கள் அறிகின்றபோது அழுது குழறிக் கூப்பாடு போடுவார்கள் என்றுதான் நினைத்தாள். ஒவ்வொருநாளும் இங்கு வந்து பக்கத்தில் அமர்ந்து தங்களை ஞாபகப்படுத்த முயற்சிப்பார்கள் என்றும் தோன்றியது. ஆனால் பிள்ளைகள் வருவதையே நிறுத்திவிட்டார்கள். தாய்க்கு இயற்கை மரணம் சம்பவிக்கின்றபோது அதை அனுமதிக்குமாறும் மருத்துவ உதவிகள் தேவை இல்லை என்றும் கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். இப்போது அம்மாவிற்கும் பிள்ளைகளுக்கும் உறவே இல்லை. உறவு என்பதே நினைவுகள்தானே? யாரோ ஒருவருடைய நினைவில் இன்னொருவர் இல்லாமற் போகிறபோது அவர்களுக்கு இடையில் நேசம், பாசம் எதுவுமே இல்லாமல் போய்விடுகிறது. அன்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான்.
“நீ கதவைத் தட்டி என்னிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் உள்ளே வந்தாயா?” சூமாஹர் எழுந்து சாய்ந்து உட்கார்ந்தவாறு கேட்டாள்.
“நீங்கள்தான் வரச் சொன்னீர்கள். பிறகு தூங்கிவிட்டீர்கள்.”
“அப்படியா.. சரி சரி.”
“இரவு உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக இரவுத் தாதி எழுதி வைத்திருக்கிறாள். இப்போது எப்பிடி இருக்கிறது? மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறதா?”
“அப்படி ஒன்றும் இல்லை. நீ உன்னுடைய நேரத்தை வீணாக்காதே.”
அபர்ணா சூமாஹரின் முதுகை அணைத்து அவளைக் கீழே இறக்கினாள். குளியல் அறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மறுபடியும் ஒரு முறை அவள் கேட்டாள். “உண்மையாகவே என்னிடம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் உள்ளே வந்தாயா?”
“கடவுள் மீது சத்தியமாக.” என்றாள் அபர்ணா.
“யார் அது? யாராக இருந்தாலும் என்னிடம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் வரவேண்டும்.”
“சரி.”
“இங்கே நில். திரும்பி நில். என்னுடைய கணவனுக்குக் கூட என்னை முழுதாகக் காட்டியதில்லை நான்.”
“அப்படியா? இந்த அழகைக் காணாமல் பிறகு எதற்கு அவனுக்குக் கண்கள் இருந்தன?” அபர்ணா பகிடியாகக் கேட்டாள்.
சூமாஹர் அப்படியே நின்றுவிட்டாள். அவளுடைய இடுங்கிய கண்கள் எங்கோ காலத்தில் புதையத் தொடங்கின. சன்னமான குரல் வெளிப்பட்டது. “உனக்கு அவனைத் தெரியுமா? எவ்வளவு அருமையான ஆண் அவன்.” எத்தனையோ முறை அவள் சொன்னதுதான். அவன், ஓர் உதைபந்தாட்ட வீரனாகத்தான் அவளுக்கு அறிமுகம் ஆகியிருந்தானாம். இருபது வருட குடும்ப வாழ்க்கை. நாற்பதுகளில் ஒரு விபத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான். இன்றைக்குக் கிழவிக்கு தொன்னூறு வயது. செல்லரித்துப்போன நினைவுகளுக்கு இடையில் நோய் தீண்ட முடியாத எங்கோ இரகசிய இடத்தில் அவனை உயிரோடு வைத்திருக்கிறாள் அவள்.
“ஒருபோதும் துயரம் என்ற பள்ளத்தாக்கிற்குள் ஒரு பந்தைப்போல அவன் என்னை உதைந்து தள்ளியதில்லை.” சூமாஹர் திரும்பத் திரும்ப முணுமுணுத்தாள். அந்த ஒரு நொடியில் அபர்ணாவிற்கு அவளில் பொறாமை நுரைத்தது. அதற்குப் பிறகு ஆற்றாமை.
0
நெற்றியில் கொப்புளங்கள் புடைத்துக்கொண்டு வந்துவிடுவதைப்போன்ற தலைக் கொதி. அடிக்கடி உள்ளங்கையால் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சிறுவயதில் தலை இடித்தால் உச்சி மண்டையில் மயிரைக் கொத்தாகப் பிடித்து இழுப்பான். சட்டென்று தலை இடி ஓடி விடும். அது வெறும் பிரமையாகத்தான் இருக்க வேண்டும். அப்பா விடுமுறையில் வந்திருந்தபோது கோடாலித் தைலம் கொண்டு வந்திருந்தார். தலை இடிக்கு, நெற்றியின் இரு புறமும் கொஞ்சமாகத் தொட்டுப் பூச சுகமாக இருக்கும். சும்மா நேரங்களில் பூசினாலும் விர் என்ற ஒரு கிறுகிறுப்பு. அந்த மணத்தை நினைத்தான். இன்றைக்குக் காலையில் தலை இடியின் ஓர் அசுமாத்தமும் இல்லை. வேலைக்கு வந்த பிறகுதான் ஆரம்பித்தது. யாரிடமாவது டபோல்கன் குளிசை வாங்கிப் போட வேண்டும். அபர்ணா வந்திருப்பாளா? அவிந்த உருளைக் கிழங்குகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாகத் தோலைச் சீவி வைக்க வேண்டும். அடிக்கடி நேரத்தைப் பார்த்தான். மாத்யூ வருவதற்கு இன்னமும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. அவன்தான் பிரதான சமையல்காரன். ஜெர்மனியன். அவன் வரும்போது எல்லாமும் தயாராக இருக்க வேண்டும். முதல் வேலையாக ஒவ்வொன்றாகச் சோதிப்பான். சீவிய உருளைக் கிழங்குகளில் ஒரு சின்ன தோல்க் கறையைக் கண்டால்போதும், நாய் மாதிரிக் கத்துவான். அந்த நேரத்தில் கையில் வைத்திருக்கிற கத்தியைத் தூக்கிக் காட்டி ‘வெட்டுவன்’ என்று ஒரு வெருட்டு வெருட்டினால்தான் என்ன என்று தோன்றும். அவ்வளவுக்குக் கொதிப்பு. நிச்சயமாக மிரண்டு விடுவான், ஆனால் பொலிஸ் வழக்கு ஆகிவிடும். அவர்கள் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு ‘கொலை நோக்கத்திற்கான காரணங்கள் என்ன’ என்று ஒவ்வொரு கோணங்களிலும் ஆராய்வார்கள். மூன்று மாதங்களுக்கு மாத்யூவைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீற்றர்களுக்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிடுவார்கள். வேலை போய்விடும். ஏதோ ஒரு மனக் கொந்தளிப்பில் இப்படிச் செய்து விட்டேன் என்று சொன்னால், மன நல மருத்துவரிடம் அனுப்பி வைப்பார்கள். அதுகூடப் பரவாயில்லை. கூப்பிட்டு வைத்து ‘வன்முறை தவறு’ என்று ஆளாளுக்கு வகுப்பு எடுப்பார்கள். இந்த மாதிரி ஆட்களுக்கு ரொக்கெட் தான் சரி. நாக்கைப் பிடுங்குவதைப்போல நாலு கேள்வி கேட்பான். இயக்க முகாமில் அவனோடு தங்கியிருந்த நாட்களில் ஒருநாள் ஒரு பத்திரிகைச் செய்தி. சுவிஸோ, பிரான்ஸ்ஸோ ஏதோ ஒரு ஐரோப்பிய நாடுதான், புலிகள் வன்முறைப் பாதையைக் கைவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அவன் அதை ஒரு நக்கல் சிரிப்புடன் படித்தான். “ஏதோ அமைதிப் பூங்கா, ஜனநாயகத் தொட்டில் எண்டெல்லாம் சொல்லுற இந்த நாடுகளின்ரை நிலத்தை நாலடி தோண்டிப் பார்த்தால் வண்டவாளம் எல்லாம் வெளிய வரும். கில்லெட்டின்ல வைச்சுத் துண்டாக்கின தலைகள்.. ரெண்டு காலையும் கிழிச்சே கொலை செய்த உடம்புகள்.. ஆயிரக் கணக்கு.. லட்சக் கணக்கு.. அதைக் கேள்வி கேட்டால், அங்க இருந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறம். அதுதான் வரலாற்றின் இயங்கியல் எண்டு சொல்லுவாங்கள். வெள்ளைக்காரனுக்கு மட்டும்தான் வரலாறு இயங்குமா? எங்களுக்கு அது ஒரே இடத்தில நிக்குமா? இருபது வருசத்துக்கு முதல் இங்கயும் ஒருவர் களவெடுத்தால் போஸ்ட்டில கட்டி மண்டையில சுட்டது உண்மைதான். ஆனால் இண்டைக்கு நீதிமன்றம், வழக்கு எண்டு அது ஏறி வந்திருக்கு. அப்பிடி எல்லாம் ஒரு நாளைக்கு ஏறி வரும்.”
தேகத்தில் அசதி பெருகுகிறது. கை கால் மூட்டுக்களில் நோவு. நிச்சயமாக இது காய்ச்சல் குணம்தான். சளி இருக்கிறதா என்று மூச்சை உறிஞ்சிப் பார்த்தான். உடல் நோவும் சளியும் என்றால் கடைசியில் காய்ச்சலில்தான் போய் முடியும். உருளைக் கிழங்குகள் கோழி முட்டை இடுவதைப்போல பெருகிக்கொண்டே இருப்பதாக ஒரு பிரமை. தலைக்கொதி. வேலைச் சுமை. சினம். உருளைக் கிழங்குகளைக் கண்டபாட்டுக்குச் சீவி எறிந்தான். இரண்டொரு நிமிடங்கள்தான், பிறகு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏற்கனவே சீவிய கிழங்குகளை மறுபடியும் முறையாகச் சீவி வைத்தான். எப்படித்தான் ஒழுங்காக வேலை செய்தாலும் மாத்யூ ஒரு தவறைக் கண்டுபிடித்துவிடுகிறான். அந்த நேரங்களில் அவனுடைய கண்களைப் பார்க்க வேண்டும். ஒரு குரூர திருப்தி அவற்றில் மிளிரும். இன்றைக்கு மட்டும் எனக்காக சலாட்டைத் தயார் செய்ய முடியுமா என்று அவனிடம் கேட்டுப் பார்க்கலாமா? அப்போது முகத்தை அப்பாவித்தனமாக, குழந்தைப் பிள்ளையுடையதைப்போல வைத்திருக்க வேண்டும். மறுபடியும் நேரத்தைப் பார்த்தான். குளிர்சாதன அறையிலிருந்து உறைந்த இறைச்சியை எடுத்துவந்து நீரில் அலசி வைக்க வேண்டும். சலாட் செய்ய வேண்டும். அடுத்தடுத்து வேலைகள்.. “உனக்கென்ன? வெறும் நூறு பேருக்குத்தான் சாப்பாடு. அதுவும் பல்லுப்போன கிழவன் கிழவிகளுக்கு மட்டும். என்ரை வேலை இடத்துக்கு வந்து பார். வெயில் நாளில ஐநூறு, அறுநூறு எண்டு சனம் அலைமோதும். அவ்வளவு பேருக்கும் அடுப்பெரிக்க வேணும். நெருப்பில கிடந்து நாள் முழுக்க வேக வேணும்.” என்று அற்புதம் சொல்வார். உண்மைதான், அவரோடு ஒப்பிடும்போது இது அவ்வளவு கஸ்ரம் இல்லை.
இன்றைய உணவுப் பட்டியலில் ரக்லெட்டும், வேக வைத்த இறைச்சியும், சலாட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். தொடக்கத்தில் ரக்லெட்டின் மணத்தை நினைத்தால் வயிற்றைப் புரட்டும். அவிந்த உருளைக் கிழங்கின் மேலே சீஸ் கட்டிகளை உருக்கி ஊற்றும்போது எலி செத்த நாற்றம். இப்போது மூக்குக்குப் பழகிவிட்டது. வெள்ளைப் பீங்கானின் அரைப் பகுதியில் பச்சை இலை குழைகளோடு காய்கறிகளை நறுக்கி வைத்து ஒரு சலாட். அருகில் வெந்தும் வேகாததுமான இறைச்சித் துண்டு. உருளைக் கிழங்கு ரக்லெட். இதை எல்லாம் ஒரு சாப்பாடு என்று நினைக்கவே முடியவில்லை. முதலில் இதைச் சமையல் என்றே யோசிக்க முடியாது. மூன்று சீமெந்துக் கற்களுக்கு இடையில் விறகுகளைப் போட்டு நெருப்பு மூட்டி, பெரிய கிடாரத்தில் தேங்காய் எண்ணையை ஊற்றி ‘தண்டனைக் காலத்தில்’ நிற்கிற பெடியங்கள் அரிந்து வைத்த வெங்காயத்தைக் கவிழ்த்து தளதளக்க வதக்கினால் அது பொன்னிறமாகும் நேரத்தில் ஒரு வாசம் வருமே.. அதுதான் அசல் சமையல். சதுரம் சதுரமாக வெட்டிய கத்தரிக்காய்களைத் தாய்ச்சிச் சட்டியில் கொட்டி எண்ணெய் மிதக்க மிதக்க அது வதங்கும் வாசத்திலேயே ஒரு கோப்பைச் சோறைத் தின்று முடிக்கலாம். ரொக்கெட்டின் கைப் பக்குவத்தில் கத்தரிக்காய் வதக்கல் கறிக்கு அப்படியொரு ருசி. இன்று திரும்பத் திரும்ப ரொக்கெட்டின் நினைவுகள்..
அந்த நாட்களில் சமையல் கூடத்திலிருந்து இயக்க முகாமிற்கு ஒவ்வொரு நாளும் சோறு கறியை எடுத்துப் போக வேண்டும். கிட்டத்தட்ட நூறு பேருக்கான சாப்பாடு. மாட்டு வண்டிலில்தான் கொண்டு வருவார்கள். அன்றைக்கு மாட்டு இறைச்சிக் கறி. எப்போதாவதுதான் இந்த அதிசயம் நிகழும். பெடியங்கள் கிடாரத்தில் சோறையும், அண்டாவில் மாட்டு இறைச்சியையும் நிரப்பி மாட்டு வண்டிலில் ஏற்றினார்கள். எடுத்துச் செல்ல ரொக்கெட்டுடன் அருள்குமரனும் இன்னொருவனும் வந்திருந்தார்கள். அவனை ஈர்க்குவாணம் என்றுதான் கூப்பிடுவார்கள். அவ்வளவு மெல்லிய உடல்.
ஒற்றை வண்டிலின் மாடு அன்றைக்கு ஏனோ முரண்டு பிடித்தது. தொடக்கத்திலிருந்தே நிலத்தை மணந்து மணந்து மூசிக்கொண்டிருந்ததே தவிர ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. மூக்கணாம் கயிற்றைப் பிடித்திருந்த ஈர்க்குவாணம் ‘ப்ச் பச்.. கிர் குர்.. த்தா.. டுர்..’ என்று எல்லாவித வினோத சத்தங்களையும் எழுப்பிப் பார்த்தான். மாடு அசையவே இல்லை. ரொக்கெட் மாட்டோடு பேச்சுவார்த்தையை ஆரம்பித்தான். “மூண்டு மணி ஆகுது. பெடியங்கள் பசி தாங்க மாட்டாங்கள். வெளிக்கிடு.” தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தான். “மாட்டு இறைச்சிக் கறி எண்டு தெரிஞ்சிட்டுதுபோல. அதுதான் அதுக்கு மனசு கேக்கேல்ல.” என்றான் அருள்குமரன். இப்ப இதற்கு நான் சிரிக்க வேண்டுமா என்பதைப்போல ரொக்கெட் அவனைப் பார்த்தான். இதற்கிடையில் ஈர்க்குவாணத்துக்கு ஏன் அப்படியொரு கோபம் வந்ததென்று தெரியவில்லை. வண்டிலில் இருந்து துள்ளி இறங்கினான். “பேச்சுவார்த்தையில் கெஞ்சிக் கொண்டிருக்கிறீங்கள்.” காலை ஓங்கி மாட்டின் குண்டியில் ஒரே ஓர் உதை. “அடியாத மாடு படியாது.” அவ்வளவுதான். மாடு வண்டிலை இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. “டேய்.. சோத்துக் கிடாரத்தைப் பிடியடா..” அருள்குமரன் கத்தினான். ஈர்க்குவாணம் ஓடிப்போய் துள்ளி ஏறினான், என்றாலும் மாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. திமிறிப் பாய்ந்தது. அருள்குமரனும் ரொக்கெட்டும் பின்னாலேயே ஓடினார்கள். யாரும் எதிர்பார்க்கவில்லை, மாடு திடீரென்று பக்கத்திலிருந்த நீரோடைக்குள் இறங்கி முன் இரு கால்களை மடித்துக்கொண்டு இருந்துவிட்டது. சோற்றுக் கிடாரம் வழுக்கிக்கொண்டு தண்ணீருக்குள் சரிந்தது. ரொக்கெட் ஒரே தாவலில் குதித்து கிடாரத்தை நிமிர்த்தினான். உள்ளே சேற்றுத் தண்ணீர். அவனுக்கு நெருப்புப்போல கோபம். “பேப்புடுக்கு.. இப்ப என்ன மயிருக்கு மாட்டுக்கு உதைச்சினி? நீ சாப்பாடு எடுக்கவாற அக்காமாருக்கு மூஸ் காட்டுறதுக்கு நூறு பேரிட சாப்பாட்டில சேத்துத் தண்ணியை ஊத்துவியா?” ஈர்க்குவாணத்தைப் பார்த்துக் கத்தத் தொடங்கினான்.
“இஞ்ச.. தேவை இல்லாமல் கதைக்க வேண்டாம். மாட்டோடை தண்ணீக்கை இறங்க வேணும் எண்டு எனக்கு என்ன கோயில் நேர்த்தியா?”
மூன்று பேருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரம் வேறு போய்க்கொண்டிருக்கிறது. முகாமில் பெடியங்கள் பசியால் துவளப் போகிறார்கள். ரொக்கெட் சட்டென்று “நீ சாறத்தைக் கழட்டு.” என்று அருள்குமரனிடம் சொன்னான். “பாத்துக்கொண்டு நிக்கேலாது. சோத்தை சாறத்தில கொட்டி வடிச்சுக்கொண்டு போவம்.”
“பொறுப்பாளர் கண்டுபிடிச்சாரோ.. மூண்டு பேரும் இரவிரவா மரங்களிலதான் குரங்குமாதிரி ஏறி இருக்க வேணும்.” ஈர்க்குவாணம் தலையைச் சொறிந்தான்.
“உதெல்லாம் நீ மாட்டுக்கு உதைஞ்ச நேரம் தெரிஞ்சிருக்க வேணும். அருள்குமரன் நீ சாறத்தைக் கழட்டு.”
அருள்குமரன் தயங்கினான். “இது அக்காமார் சாப்பாடு எடுக்க வாற நேரம்.” என்று முணுமுணுத்தான்.
ரொக்கெட் சற்றும் யோசிக்கவில்லை. சன்னதம் வந்தவனைப்போல தன்னுடைய பழுப்பேறிய பச்சை நிற நீளக் காற்சட்டையை உருவிக் கழற்றினான். “உங்களுக்கு நேரம் காலம் தெரியாமல்தான் சாமான் எழும்பும்போல. இந்தா இதைப் போட்டுக்கொண்டு உன்ரை சாறத்தைத் தா..” என்று நீட்டினான். அவனை உள்ளாடையோடு காண்பதற்கு அந்தரமாக இருந்தது.
நீரோடையிலிருந்து கிடாரத்தைத் தூக்கிக்கொண்டு ஏறினார்கள். பாதையின் நிலச் சூட்டில் சாறத்தை விரித்து சோற்றைக் கவிழ்ததுக் கொட்டினார்கள். ரொக்கெட் குந்தி இருந்து பரவிவிட்டான். ஆளுமையும் அக்கறையுமான உடல்மொழி அவனுக்கு. ஒவ்வொன்றிலும் தனிக் கவனம். கரிசனை. கண்டிப்பு. அவனும்தான் திட்டியிருக்கிறான், ஆனால் அவனும் மாத்யூவும் ஒன்றல்ல.
அருள்குமரன் கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். சூடாகக் கணகணத்தது. குளிர்சாதக அறைக்குப் போய் இறைச்சியை எடுத்துக்கொண்டு வந்தால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். மாத்யூ வந்தபிறகு அவனுக்கு எடுபிடியாக சிறு சிறு வேலைகளைச் செய்ய வேண்டும். பன்னிரெண்டு மணிக்கு பரிசாரகர்கள் தட்டுக்களில் உணவை எடுத்துச்சென்று விடுவார்கள். அதற்குப் பிறகுதான் சமைத்த பாத்திரங்களைக் கழுவ வேண்டும். தொட்டிக்குள் கவிழ்த்து உள்ளும் புறமும் சுடுநீரைப் பீய்ச்சியடிப்பதுதான் என்றாலும் வெப்பப் புகை மூச்சை முட்டும். இரண்டு மணி ஆகிறபோது உணவுத் தட்டுக்கள் வந்து சேரும். மீந்திருந்தவற்றை வழித்துக் கொட்டிவிட்டு ஒவ்வொன்றையும் பளிச் என்று கழுவித் துடைத்து அடுக்க வேண்டும். கண்ணாடிக் குவளைகள், கரண்டிகள், கத்திகளில் ஒரு சின்னப் பருக்கையைக் கண்டாலும் ஒரு திருடனைக் கையும் களவுமாகப் பிடித்ததைப்போல நாளைக்கு மாத்யூ கத்துவான்.
தேகம் முழுக்கச் சோர்ந்திருந்தது. நடக்கவே திராணி இல்லை. குளிர்சாதன அறையின் கதவைத் திறந்ததும் குப் என்ற உறைகுளிர். உடல் சூட்டுக்கு முதலில் நன்றாகத்தான் இருந்தது. பிறகு நடுங்கத் தொடங்கிவிட்டது. கதவை அடித்து மூடினான். காய்ச்சல் ஆரம்பித்துவிட்டது. இரு கைகளையும் மார்போடு கட்டிக்கொண்டான். உதடுகள் காய்ந்து வறண்டுவிட்டன. நாக்கால் துளாவித் துளாவி ஈரப்படுத்தினான். முகத்தை நீரால் கழுவினால் கொஞ்சம் சுகமாக இருக்கும் என்று தோன்றவும் ஓய்வறையை நோக்கி நடந்தான். இருபது முப்பது படிகளை ஏறி மேலே வரவேண்டும். அப்போதுதான் அபர்ணாவும் வேலைக்கு வந்திருந்தாள் போல, வாசலில் வைத்து அவனைக் கண்டாள். உச்சியைப் பக்கவாட்டாகப் பிரித்து வாரிய கேசம் முதுகில் புரண்டது. செவிலியர் உடைக்கு மாறிய பிறகு அதை கொண்டையாக முடிந்து கொள்வாளாக்கும். அருள்குமரனைக் கண்டதும் அருகாக வந்தாள். “என்ன ஒரு மாதிரியா இருக்கிறாய்?” அவள் அவனை ஒருமையில் அழைக்கத் தொடங்கி ஓரிரு மாதங்கள்தான் ஆகியிருக்கும். இயல்பாக அப்படி அமைந்தது. அருள்குமரனுக்கு அது பொருட்டாகவே இல்லை. அபர்ணா கையால் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ஆசீர்வதிப்பதைப்போன்ற தோரணை. அவளுக்குக் கோபம் சட்டென்று வந்தது. “முதல்ல வாயைத் திறந்து கதைக்கப் பழகு. காய்ச்சல் இந்தக் கொதி கொதிக்குது. எப்பிடி வேலை செய்ய முடியும்? என்னோடை வா. பெரியவளிடம் கதைச்சு லீவு எடுத்துத் தாறன். இண்டைக்கே டொக்டரிட்டைப் போ.”
அருள்குமரன் அவளைப் பின்தொடர்ந்தான். மந்திரத்திற்குக் கட்டுண்டவன்போல.
0
காலையிலிருந்தே பகலைத் துரத்திக் கொண்டிருந்த இருட்டு நான்கு மணிக்கெல்லாம் அதை முழுமையாக ஆக்கிரமித்துவிட்டது. இனி குளிர் பூச்சியத்தை நெருங்கும். இன்னமும் பனி கொட்டத் தொடங்கவில்லை. அதற்கு இரண்டொரு மாதங்கள் ஆகும்.
அபர்ணாவும் அருள்குமரனும் ஒன்றாகவே நடந்துவந்து பேருந்தில் ஏறினார்கள். தெருவிளக்குகளின் மஞ்சள் ஒளி அடர் இருளுக்குள் புதைந்ததைப்போல கசிந்தது. பேருந்தின் வாசலில் வைத்துக் குளிரைக் கிழித்து எறிந்ததைப்போல உள்ளே இதமான வெப்பக் கணகணப்பு. வெறுமையான இருக்கைகளில் அருகருகே அமர்ந்தார்கள். ஏதோ விட்ட இடத்திலிருந்து தொடர்வதைப்போல “அப்ப ஆராதனா இப்ப எப்பிடி இருக்கிறாள்?” என்று அபர்ணா கேட்டாள். அருள்குமரனுக்குத் தெரியும். அது ஒருவிதமான சீண்டல் கேள்விதான்.

இப்போதெல்லாம் இரண்டு பேரும் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. பெரும்பாலும் பேருந்துப் பயணங்களில்தான். பொழுதைப் போக்குவதற்கு கடந்த காலக் கதைகளைத்தான் இரண்டு பேருமே பகிர்ந்துகொண்டார்கள். அரங்கனின் அறிமுகம், திருமணப் பேச்சு, சிங்கப்பூரிலிருந்து பயணித்தது, அவனுடைய ‘வருத்தம்’, பட்ட துயரம்.. ஒன்றையும் மிச்சம் விடாமல் அபர்ணா சொன்னாள். அருள்குமரனும் ஆராதனாவைப் பற்றி, அவன் இயக்கத்துக்குப் போனதைப் பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறான். ஆனால் முழுமையாக அல்ல. சில கதைகள் இடை வழியிலேயே அந்தரத்தில் நின்றுவிடும். சிலவற்றைப் பொய்யாக முடித்துவைப்பான். இயக்கத்திலிருந்து தப்பி ஓடும் எண்ணத்தோடு செம்மண் சாலை வரை நடந்தவன், அந்த எண்ணத்தை கைவிட்டு மறுபடியும் இயக்கத்திற்கே போய்விட்டான் என்ற உண்மையை அவன் ஒருபோதும் அபர்ணாவுக்குச் சொல்லவில்லை. தப்பி ஓடி வந்துவிட்டதாகத்தான் சொன்னான். அபர்ணாவும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அவள் ஆராதனாவைப் பற்றித்தான் துருவித் துருவிக் கேட்டாள். “உனக்குக் காதலிக்க எல்லாம் தெரியுமாடா?” அவளுக்கு அவ்வளவு ஆச்சரியம். ஆனால் அருள்குமரன் ஆராதனாவைப் பற்றி சொல்லத் தொடங்கினால் ஒரு கட்டத்தில் சலிக்கத் தொடங்கிவிடுவாள்.
“சரி நிப்பாட்டு. இதெல்லாம் இளம் வயசில எல்லாருக்கும் வாற அனுபவம்தானே..”
அருள்குமரனுக்கு சுருக் என்றாகிவிடும். “இது நீங்கள் ஆதவனுக்கு முன்னாலயும் பின்னாலயும் திரிஞ்ச மாதிரி இல்லை.”
“அதுவொடு விளையாட்டுத்தனமான கதை. அண்டைக்குச் சொன்னதை இப்பவும் ஞாபகம் வைச்சுக் கேக்கிறாய் என்ன?” அவளுக்கும் ஒரு மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டு பேருமே ஒன்றும் கதைக்கவில்லை. இன்றைக்கு மறுபடியும் அவள் ஆரம்பிக்கிறாள்.
“ஆராதனா இப்ப யாரையாவது கல்யாணம் கட்டிச் சந்தோசமாத்தானே இருப்பாள்?” உள்ளோடிய நக்கல் எரிச்சலை மூட்டியது.
“அதுக்கென்ன? இப்பிடிக் கேட்டால் நான் பதறுவன் எண்டு நினைக்கிறீங்களா? இல்லை. அதுக்காக ஆதவன் மாதிரியான ஆக்களோடை அவளை ஒப்பிட வேண்டாம்.”
“பொய் சொல்லாத. அவள் சந்தோசமாக இருக்கிறாள் எண்டால் உங்களுக்கு உள்ளுக்குள்ள பதறும். கஸ்ரப்படுறாள் எண்டால் சந்தோசப்படுவீங்கள்” எள்ளல் குரல்.
உண்மையிலேயே ஆராதனா இப்போது யாரையாவது திருமணம் செய்திருப்பாள் என்ற நினைப்பு பதற்றமாகத்தான் இருந்தது. ‘சந்தோசமாகவும் இருப்பாள் அல்லவா?’ ஒரு மாதிரியான ஆற்றாமை. அபர்ணாவில் தாறுமாறாகக் கோபம் மூண்டது. அதெப்பிடி அச்சொட்டாகக் கண்டுபிடிக்கிறாள்? “நீங்கள் ஆதவனைக் காதலித்துவிட்டு அரங்கனோடு சந்தோசமாகத்தான் இருக்கிறியளா?” என்று கேட்டான். அவளுடைய உச்சி மண்டையிலேயே குட்டிய மாதிரியான திருப்தி. இனி அடங்கிவிடுவாள்.
அபர்ணாவும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. “இப்ப எதுக்குத் தேவை இல்லாமல் கதைக்கிறாய்?” என்றாள். பின்வாங்குகிறாள். விடக்கூடாது. “அது சரி, நீங்கள் சந்தோசமாத்தான் இருந்திருப்பீங்கள். அழுது கண்ணைக் கசக்குவீங்கள். வெளிய போடா எண்டு நாடகம் போடுவீங்கள்.. பிறகு அவன் கூப்பிட்டா எதுவுமே நடக்காத மாதிரி உள்ளை போய் அறையைப் பூட்டுவீங்கள்.” திடீரென்று ஞாபகத்தில் அம்மாவின் முகம். ஐயோ.. அருவருப்பான செதில்கள் முளைக்கின்றன. கடைவாயில் உன்மத்தம் வழிகிறது. குரல் உயர்கிறது. அபர்ணா “வாயைப் பொத்து” என்று கத்தினாள். பேருந்தில் இருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். குரலை அடக்கிக்கொண்டு “இதுக்கு மேல ஒரு வார்த்தை கதைச்சாலும் செருப்பைக் கழட்டி அடிப்பன்.” என்று உறுமினாள். கண்ணீர் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. தலையைக் குனிந்து புறங்கையால் துடைத்துவிட்டாள்.
அருள்குமரனுக்கும் குரல் தளதளத்தது. “ஆனால் ஆராதனா அப்பிடி இல்லை.” என்று முணுமுணுத்தான். அபர்ணா அவனுடைய கையை எடுத்து ஆதரவாகப் பொத்திக்கொண்டாள். “சரி.. அவள் அப்பிடி இல்லை.” என்றாள். அருள்குமரனுக்கு அழுகை உடையப் பார்த்தது. “நான் கண்ணாலயே பார்த்திருக்கிறனே.. அழுது ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பிறகு கிடந்து அனுங்கியதையும், இழுத்த பாட்டிற்கு அசைந்து கசங்கியதையும் நான் பார்த்திருக்கிறனே.. ஆனால் ஆராதனா அப்பிடியில்லையே..” உதடுகளைக் கடித்து அழுகையை அடக்கப் பார்த்தான். முடியவில்லை. அது கேவலாக வெடித்தது. “உங்களுக்கு என்ர காயம், சொந்த அம்மாவே உண்டாக்கின காயம் தெரியாது. இண்டைக்கு உலகத்தை அளந்த பிறகு ஒவ்வொன்றுக்கும் அவரளவில நியாயம் உண்டு எண்டு தெரியுது. ஆனால் அந்தக் குட்டிப் பெடியனுக்கு அதெல்லாம் தெரியாதுதானே.. என்ன பாடு பட்டிருப்பான்? அந்த அவத்தை ஆங்காரமாகி எல்லாப் பொம்பிளைகளிலும் பாய்ஞ்சிருக்கும். உங்களைக் கூட விட்டு வைச்சிருக்காது. நல்ல வேளையாக ஆராதனா வந்தாள்.”
பேருந்து கடைசி நிறுத்தத்தில் நின்றது. அபர்ணா பொத்தி வைத்திருந்த அவனுடைய கையை விட்டுவிடாமலேயே அழைத்துக்கொண்டு இறங்கினாள். “வா.. கொஞ்ச நேரம் லேக் சைற்றில இருந்திட்டுப் போவம்.” வெளிச்சமற்ற பாதையில் நடந்தார்கள். அருள்குமரன் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே வந்தான். கொஞ்சம் கொஞ்சமாகப் பாரம் இறங்குவதைப்போன்ற உணர்வு. ஓர் ஆறுதல். கரையோரமாக உட்கார்ந்தார்கள். நீரலைகள் படிக்கட்டில் முட்டி மடிந்து விழுகிற சத்தம் ‘மளுக் மளுக்’ என்று கேட்டது. குளிரில் சில்லிட்ட காற்று. காது மடல்கள் தடித்து விறைத்துவிட்டன. இன்றிரவு குளிர் பூச்சியத்திற்குக் கீழே பத்திற்குப் போகக் கூடும். அபர்ணா கைப்பையிலிருந்து கம்பளிக் குல்லாவை எடுத்து அணிந்துகொண்டாள். தன்னுடைய கழுத்துச் சால்வையைக் கழற்றி அருள்குமரனிடம் கொடுத்தாள். “காதுகளை மூடு.”
“சரவணபவன் அம்மாவின் காலில நெடுஞ்சாண் கிடையா விழுந்தான். கை இரண்டாலும் கும்பிட்டுக்கொண்டு அழுதான். அம்மா பதறிப் போனாள். தலையை ரெண்டு கையாலும் பொத்திக்கொண்டு அப்பிடியே இருந்துவிட்டாள். சரவணபவன் விறு விறு எண்டு அறைக்குள்ளை போய் கதவைச் சாத்தினான். அம்மா எழும்பி ஓடி வந்து கதவைத் தட்டினாள். ‘வெளிய வா பவன்.. வெளிய வா பவன்..’ என்று கத்தினாள். கதவு மெல்லத் திறந்தது. அறைக் கூரையின் தீராந்தியில் அம்மாவின் சீலையாலேயே தூக்குக் கயிறு மாதிரி கட்டியிருந்த சரவணபவன் கதிரையில ஏறி முடிச்சுக்குள்ள தலையை நுழைத்தான். ‘வேண்டாம்.. வேண்டாம்..’ என்று அம்மா கெஞ்சினாள். ‘நிப்பாட்டு’ என்று அதட்டினாள். அவனோ ‘ஒரே ஒருக்கா.. ஒரே ஒருக்கா..’ என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான். அம்மா தலையில் அடித்து அரற்றினாள். எனக்கு என்ன செய்யிறது எண்டு தெரியேல்லை. அங்கயும் இங்கயுமா ஓடிக்கொண்டிருந்தன். அம்மா என்னட்டை ஏதாவது உதவி கேட்பாள் எண்டு நினைச்சன். ரெண்டு பேருமாச் சேர்ந்து அவனைக் கீழ இறக்கக் கேட்பாளோ.. இல்லாட்டி வெளிய போய் யாரையாவது கூட்டிக்கொண்டு வரக் கேட்பாளோ.. நான் என்ன கேட்டாலும் செய்யிறதுக்குத் தயாராகத்தான் இருந்தன். அம்மா என்னட்டை அந்த உதவியைக் கேட்டாள். அழுத கண்களைத் துடைத்துக்கொண்டு கேட்டாள். ‘அப்பன்.. கொஞ்ச நேரம் வெளியில போய் நிக்கிறீங்களே.. நான் மாமாவுக்கு மருந்து போட்டுட்டு வாறன்.”
அபர்ணாவுக்கு குமுறலாக அழுகை வெடித்தது.
“நான் கேற்றடியில் ஓடிப் போய் நின்றேன். மனம் கேட்கவில்லை. ஜன்னல் பக்கமாக ஓடிப்போய் பார்க்கிறதும், திறப்பு ஓட்டைக்குள்ளை கண்ணை வைக்கிறதுமாக ஒரு பூனைக்குட்டி மாதிரி வீட்டைச் சுற்றிக்கொண்டே இருந்தேன், அம்மா வரும் வரைக்கும்.”
அபர்ணா அருள்குமரனுக்குக் கிட்டவாக வந்து அவனுடைய தோள்களை அணைத்துக்கொண்டாள். “அப்பதான் உனக்கு குரூரம் எண்டது அறிமுகமாகியிருக்க வேணும்.” நீந்திச் சென்ற இரண்டு வாத்துகள் அவளுடைய வார்த்தைகளைச் செவிமடுப்பதைப்போல நின்று கழுத்தைத் திருப்பிப் பார்த்தன. அருள்குமரன் நீரின் மேற்பரப்பையே வெறித்தபடி இருந்தான். முன்பொருநாள் நஜிபுல்லாவின் கண்களும் இப்படித்தான் இந்த நீரில் வெறித்துப் பார்த்திருக்கும் என்று தோன்றவும் மனம் நடுங்கியது. அபர்ணாவில் சாய்ந்துகொண்டான்.
அன்றைக்கு இரவு பத்து மணி இருக்கும். அவளிடமிருந்து ஒரு குறும் செய்தி வந்தது. ‘எனக்கு நித்திரை வரவில்லை. உனக்கு இப்பிடி நடந்திருக்கக் கூடாது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.’ என்று எழுதியிருந்தாள். அருள்குமரன் பதிலுக்கு எதுவும் எழுதவில்லை. நிச்சலனத்தில் தூங்கிப் போனான். காலையில் எழுந்து பார்த்தபோது இன்னொரு செய்தியும் அவளிடமிருந்து வந்திருந்தது, இரவு இரண்டு மணிபோல.
‘கற்பனை செய்ய முடியாத ஒரு காலத்தைக் கடந்து வந்திருக்கிறாய். அதற்காக ஆராதனாதான் உன்னை மீட்டுக்கொண்டு வந்தாள் என்பது உன்னுடைய கற்பனைதான்.’
