அஷேரா – 15

நிலத்தைச் சுற்றி வளைத்திருந்தது இருட்டு. தூரத்தில் எங்கோ நாய்கள் குரைக்கின்ற சத்தம். தெருவில் யாரும் இல்லை. நெஞ்சுப் படபடப்பு இப்போதுதான் கொஞ்சம் தணிந்திருக்கிறது. பிள்ளையார் கோயில் கிணற்றடியிலிருந்து புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே புலிகள் மறித்துவிட்டார்கள். இந்தத் தடவை சாவு நிச்சயம் என்றுதான் நினைத்தான். அநியாயமாக அவனை ஏற்றிவந்த சைக்கிள்காரரையும் கொல்லப் போகிறார்கள். ‘அவரை மட்டும் விட்டுவிடுங்கள். தயவுசெய்து விட்டு விடுங்கள்.’ கையில் காலில் விழுந்தாவது கெஞ்ச வேண்டும். பண்ணையார், மோகன்லால், இந்த சைக்கிள்காரர்.. ஒவ்வொருவரையும் சாகக் கொடுத்து இந்த உயிரைக் காப்பாற்றி..போதும். இந்த உயிர் போய்த் தொலையட்டும். இங்கே வைத்தே சுட்டுக் கொல்லட்டும்.

“எங்க போறீங்கள்?” புலிகள் அதட்டினார்கள். “கோயிலுக்குப் போட்டுப் போறம்.” என்றான் சைக்கிள்காரன். அற்புதம் அமைதியாக இறங்கி நின்றான். இருவரது உடலையும் தடவிச் சோதனை செய்தார்கள். “குறை நினைக்க வேண்டாம். கிட்டு அண்ணைக்கு யாரோ துரோகிகள் குண்டெறிஞ்சு போட்டாங்கள். அதுதான் செக் பண்ணுறம். நீங்கள் போட்டு வாங்கோ.” அந்த புலிப் பெடியனுக்கு பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுதான் இருக்கும்.

அற்புதம் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான். இருவரும் வழி முழுவதும் கதைக்கவில்லை. சைக்கிள் ரயரின் கிர்ர் என்ற இரைச்சல் வழிகாட்டியைப்போல முன்னாலே ஓடிக்கொண்டிருந்தது. நகரத்திற்கு வெளியே ஏதோ ஒரு கிராமமாக இருக்க வேண்டும். குடி மனைகளைக் கொண்ட தெரு. சைக்கிள்காரன் நிறுத்தினான். அற்புதத்திற்கு இடது கால் விறைத்திருந்தது. இறங்கும்போது அதை நிலத்தில் ஊன்ற இயலாமல் அந்தரத்திலேயே வைத்திருந்தான். சைக்கிள்காரருடைய கையை நன்றியுணர்வுடன் பற்றினான். “உங்களைச் சாகும் வரைக்கும் மறக்க மாட்டன். உங்கட பெயர் என்ன?”

சைக்கிள்காரன் கையைத் தயக்கத்தோடு விடுவித்தான். “சொல்ல மாட்டன். எனக்குப் பயமா இருக்கு.” என்றான். “நீங்கள்தான் கிட்டு அண்ணைக்கு குண்டு எறிஞ்சனீங்களோ எண்டு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. நீங்கள் கோயில் கிணத்திடியில சேர்ட்டில ரத்தத்தைக் கழுவினதை நான் பார்த்திருக்கிறன். புலிப் பெடியங்களிட்டை ஓடிப் போய் சொல்லுவமோ எண்டுதான் நினைச்சன். ஆனால் உங்கடை கையில ஒரு பிஸ்ரல் இருக்குமெண்டும், அந்தக் குண்டு என்ரை முதுகைப் பிய்க்கும் எண்டும் பயம். இப்ப கூட என்னைப் போக விட்டுட்டு சுடுவீங்களோ எண்டு நடுக்கமா இருக்கு. உங்களைக் கெஞ்சிக் கேக்கிறன். அப்பிடி ஒண்டும் செய்ய வேண்டாம். சாகும் வரைக்கும் உங்களை மறக்க மாட்டன்.”

அற்புதம் பொத்தென்று தெருவிலேயே உட்கார்ந்துவிட்டான். அவமானத்தில் மனம் குன்றிப் போயிற்று. பொங்கிப் பொங்கி அழுகை. உதடுகள் அரற்றின. தெருப்புழுதியை அள்ளித் தனக்கு மேலேயே வீசினான். “நீங்கள் போங்கள்.. நீங்கள் போங்கள்.. நான் இப்பிடியே இதிலேயே இருக்கப் போறன். விடிய எந்த இயக்கக்காரன் முதல்ல வாறானோ அவனே என்னைச் சுடட்டும். நீங்கள் போங்கள்.” சைக்கிள் ரயர் உருள்வது கேட்டது.

தடித்த சாக்குப்போல இருட்டுத் தொங்கியது. அதை விலக்குவதைப்போல கைகளால் அளைந்தான். காலை நீட்டித் துளாவியபோது ஒரு சுவர் தட்டுப்பட்டது. மதிலாக இருக்க வேண்டும். தவழ்ந்து சென்று அதில் முதுகைச் சாய்த்தன். இரு கால்களையும் விரித்து வைத்துக்கொண்டான். காலையில் நெற்றிப் பொட்டிலிருந்து வழியப் போகிற இரத்தம் கால்களுக்கு இடையில்தான் ஒரு பாதையைக் கண்டுபிடிக்கும். இருட்டு, நாக்கைத் தொங்கப் போட்ட நாயைப்போல முன்னாலேயே உட்கார்ந்திருக்கிறது. நான் எங்கேயும் ஓடிவிடாதபடி காவல் காக்கிறதா? அல்லது யாரும் பார்த்துவிடாதபடி காப்பாற்றுகிறதா? இன்னும் ஐந்தாறு மணி நேரத்தில் வெளிச்சம் எட்டிப் பார்க்கும். அப்போது வெளிச்சத்திடம் காட்டிக் கொடுத்துவிடும். இருட்டு வெளிச்சத்தின் அடியாள்.

மோகன்லாலுக்கு என்ன ஆகியிருக்கும்? அவனைக் கண்ணிலிருந்து மறைத்து ஆறேழு மாதங்கள். இருக்கிறானா இல்லையா ஒன்றும் தெரியாது. அற்புதத்தை வட்டுக்கோட்டையிலிருந்த அவர்களுடைய முகாமுக்கு அழைத்துச் சென்ற பிறகு அவனும் வெளி நடமாட்டங்களைக் குறைத்திருந்தான். வெளியே நிலமைகள் சுமுகமாக இல்லை. காய்ந்த சருகில் தீப் பற்றியதைப்போல நாளுக்கு நாள் தீவிரம் அதிகரித்தது. மற்றைய இயக்கங்களைப் புலிகள் தடை செய்யப் போவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. “பிரச்சினைகளைக் கதைச்சுத் தீர்க்கலாம்.” என்றுதான் மோகன்லால் நம்பினான். அவனுக்கு  முகாமிலிருந்த பன்னிரெண்டு பேரையும் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பு. யார் யாருக்கோ எல்லாம் தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தான். எதுவுமே கைகூடவில்லை.

ஒருநாள் நடுசி, திடீரென்று துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. புலிகள் வந்துவிட்டார்கள். திருப்பித் தாக்கக் கூடாது என்றும் சரணடையத் தயாராகுமாறும் மோகன்லால் ஏற்கனவே சொல்லியிருந்தான். “தமிழ்ப் பெடியங்களின்ரை சாவுக் கணக்கை பன்னிரெண்டுக்கு மேல போக விடாமல் பாத்துக் கொள்ளுறதுதான் என்னால முடிந்த ஒரே காரியம்.” அற்புதம் பரிதாபமாக மோகன்லாலைப் பார்த்தான். இரண்டொரு நிமிடங்களில் புலிகள் காவற் கூண்டை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவார்கள்.
அவர்களைக் கண்டவுடன் ஓடிப் போய், ‘ஐயோ காப்பாற்றுங்கள். நான் ரெலோ இல்லை’ என்று காலிலேயே விழுந்துவிட வேண்டும். அவனையும் அறியாமல் தோன்றிய நினைப்பு அது. வெட்கக் கேடு. கேவலம். அவனிலேயே அருவருப்பு நுரைத்தது. மோகன்லாலுக்கும் மிச்சப் பன்னிரெண்டு பேருக்கும் என்ன நடக்குமோ அதுவே எனக்கும் நடக்கட்டும்.

ஆறு புலிப் பெடியன்கள்தான் வந்திருந்தார்கள். மோகன்லால் கைகளை மேலே உயர்த்தினான். “நீங்கள் என்னை திலீபனிடம் கூட்டிக்கொண்டு போங்கள். நான் அவனோடு கதைக்க வேணும். எனக்கு அவனில நம்பிக்கை இருக்கு.” என்று சொல்லி வாய் மூடவில்லை, வந்திருந்த ஒருவன் “வாயைப் பொத்தடா.” என்று கத்தினான். “நீங்கள் எங்கடை லிங்கம் அண்ணையைப் பிடிச்சுக்கொண்டு போய் வைச்சிருந்த நேரம் கதைச்சுத் தீர்க்கலாம் எண்டுதானே நாங்களும் கேட்டம். அப்ப என்ன செய்தனீங்கள்? அந்தாளைச் சுட்டுப் புதைச்சிட்டீங்கள்.” இடையில் இப்படி ஏதோ நடந்திருக்கிறது. அற்புதத்திற்குச் சரியாகத் தெரியவில்லை. நேற்றோ முந்திய நாளோ யாரோ ஒரு புலிப் பெடியனை ரெலோக்காரர்கள் கடத்திக்கொண்டுபோய் கொலை செய்திருக்கிறார்கள். மோகன்லாலுக்குக் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தலை குனிந்து நின்றான்.

முகாமைச் சல்லடையிட்டுத் தேடினார்கள். கைப்பற்றிய துப்பாக்கிகளையும் இந்திய ரக கிரேனைட் குண்டுகளையும் சாக்குகளில் சுற்றி எடுத்துக் கொண்டார்கள். பன்னிரெண்டு பேர்களுடைய கைகளும் பின்னால் வைத்துக் கட்டப்பட்டன. யாரேனும் ஒருவராவது ‘இந்த ஆள் எங்கடை அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை.’ என்று சொல்வார்கள் என்று அற்புதம் எதிர்பார்த்தான்.

அற்புதத்தையும் மோகன்லாலையும் முன்னுக்கும் பின்னுக்குமாக ஒரே சைக்கிளில்தான் கூட்டிப் போனார்கள். ஏற்றிச் சென்றவனுக்கு மூச்சு வாங்கியது. அதே வயல் வெளி, அதே வைரவர் கோயில். அவனும் சைக்கிளை நிறுத்தி திருநீறைப் பூசினான். சந்தனக் கட்டையை அரைத்துப் பொட்டு வைத்தான். பாவம் வைரவர். எல்லோருக்கும் அருள் பாலிக்க வேண்டும்.

தாவடியில் ஒரு வீட்டில்தான் சிறை. அன்றைக்குச் சரியான மழை. நாச்சார் வீடு, மழை நடு வீட்டிலேயே கொட்டியது. அற்புதத்தை வெறும் உள்ளாடையுடன் மழையில் நிற்கச் சொன்னார்கள். நனைந்த கோழியைப்போல நின்றான். கூன் முதுகில் கிருபன் என்ற புலிகள் இயக்கப் பொறுப்பாளன்,  திருக்கை வாலால் வீசியபோது, அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “ஐயோ.. மோகன்லால்.. பார்த்துக்கொண்டு நிக்காமல் உண்மையைச் சொல்லுங்கள். நான் ரெலோகாரன் இல்லை. நான் ரெலோகாரன் இல்லை.” மோகன்லால் துயரமாகத் தலையை அசைத்தான்.

இரண்டோ மூன்று வாரங்களில் மோகன்லாலை அங்கிருந்து கூட்டிச் சென்றுவிட்டார்கள். அதற்கு முதல் ஒருநாள் மெல்ல முணுமுணுத்தான். “அமைப்பின் குரல் எண்டு ஒண்டு இல்லைப்போல. யார் யார் முடிவெடுக்கிறாங்களோ.. அந்த நேரம் அதுதான் குரல்.”

அற்புதத்தை மூன்று மாதங்களுக்கு அங்கேயே சிறை வைத்தார்கள். அவன் உண்மையிலேயே புளொட் தானா அல்லது வேறேதாவது ‘குட்டி இயக்கமா’ என்று அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. திடீரென்று ஒருநாள் கூட்டிச் சென்று ‘கந்தன் கருணை’ இல்லத்தில் அடைத்தவர்கள், பிறகு என்ன நினைத்தார்களோ அங்கிருந்து யாழ்ப்பாணம் மகளிர் கல்லூரிக்கு அருகில் இருந்த மேல் மாடி வீட்டுக்கு மாற்றினார்கள். அங்கே ஐம்பதுக்கும் மேலே கைதிகள்.      

ஒருநாள் அருணா கையில் எம் 16 இயந்திரத் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தான்.   

0

சட சட என்று செட்டையடித்து ஒரு சேவல் கூவியது. அற்புதம் துணுக்குற்று விழித்தான். அவன் மதில் சுவரிலேயே சாய்ந்து நல்ல நித்திரை. தெருவில் புளுணிக் குஞ்சுகள் தத்தித் தத்திக் கீச்சிட்டன. கிழக்குப் பக்க அடிவானத்தில் வெளிச்சம் சோம்பல் முறித்தது. சொற்ப நேரத்தில் முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டு எழுந்து வரும். இருட்டு, நிம்மதியாக உட்காரவாவது அனுமதித்தது. வெளிச்சம் எழுப்பித் துரத்தும். பெரிய பொறுப்பாளன் என்ற நினைப்பு அதற்கு. ‘மசிர் பொறுப்பாளர்கள்.’ முணுமுணுத்தான். அவனுக்கு சுழிபுரம் கடற்கரையிலிருந்து படகேறிய அந்த முதல் நாள் நினைவுக்கு வந்தது. அன்றைக்கு அவனைக் கடல் பிரமிப்புடன் எட்டி எட்டி அல்லவா பார்த்தது. அதுதான் முதலும் கடைசியுமான நாள். அவன் நடைப் பிணமாகத் திரும்பி வந்தபோது அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நக்கலாகச் சிரித்திருக்கும். இந்த வெளிச்சமும் கொஞ்ச நேரத்தில் அப்படித்தான் சிரிக்கும். வெறும் கேலிப் பொருள் நான். வெட்டை, அரட்டை, டம்பிங் கண்ணன், பண்ணையார், பொன்னுரங்கம், தாம்பரம் துர்க்கை அம்மன், கச்சான்காரக் கிழவி, அண்ணாச்சி, பொபி, தாஸ்.. எல்லோரும் சிரிக்கிறார்கள். கோபம் சுள் உன்று பற்றியது. யாரில் என்றே தெரியாத வெறி. “என்னைப் பற்றி என்னடா நினைச்சுக் கொண்டிருக்கிறீங்கள்?” வாய் விட்டுக் கத்தினான். தெருவைக் கையால் அறைய புழுதி கிளர்ந்தது. “அற்புதம் எண்டால் யாரெண்டு உங்களுக்குக் காட்டுறன்டா.” எழுந்து நின்றான். நிலம் வெளிக்கத் தொடங்கியிருந்தது. இள வெயிலைப் பார்த்துக் குரூரமாகப் புன்னகைத்தான். பூவரசம் குழைகளை ஏற்றிய மாட்டு வண்டில் ஒன்று அவனைத் தாண்டிப் போனது. பால் போத்தல்களோடு சைக்கிளில் போன யாரோ ஒருவர் அற்புதத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார். “என்னடா..” என்றான். அவர் சைக்கிளை வேகமாக மிதிக்கத் தொடங்கினார். அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

மதில் சுவரின் ஓரமாக நேற்று மாலை குப்பை எரித்திருக்க வேண்டும். எரிந்தும் எரியாத மரக் கட்டைகள் கிடந்தன. ஏதோவொரு தீர்மானத்தோடு அதில் ஒன்றை எடுத்தான். ஒரு சாண் அளவிற்கு வரும். யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு சட்டென்று சேர்ட்டைத் தூக்கி இடுப்பில் செருகினான். யாராவது பார்த்தால் அச்சு அசல் பிஸ்ரலை வைத்திருப்பதைப்போல தோன்றும். மதில் சுவரை நிமிர்ந்து பார்த்தான். உச்சி விளிம்பிலே உடைந்த கண்ணாடித் துண்டுகளும் ஆணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணக் கல் வீடுகளின் மதில்கள் இப்படித்தான் இருக்கின்றன. நடந்து வாசலுக்கு வந்தான். நீல நிறத்திலான பெரிய இரட்டைக் கதவுகள். இருபுறமும் தாமரைப் பூ வடிவம். அதற்கு மட்டும் சிவப்புப் பூச்சு. நடுவில் ஆமைப் பூட்டுத் தொங்கியது. இன்னமும் கதவைத் திறக்கவில்லை. அற்புதம் உள்ளே பார்த்தான். வீட்டின் வாசல்படி வரைக்கும் நேர்த்தியான குரோட்டன் செடிகள். நடுவே பெரிய சாடியில் துளசிச் செடி. சற்றுப் பெரிய வீடுதான்.

ஈரத்துவாயை முறுக்கிப் பிழிந்து கேசத்தில் குடுமியாகக் கட்டியிருந்த அவளுக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம். வாசற்படியிலிருந்து இறங்கி துளசிச் செடியைச் சுற்றி வணங்கினாள். அந்த நேரத்தில் அற்புதம் இரும்புக் கதவில் ஏறி உள்ளே குதித்தான். ‘தொம்’ என்ற சத்தம். அவள், அச்சத்தில் சறுக்கிவிழப் பார்த்தவள், சுதாகரித்துக்கொண்டு “ஐயோ.. கள்ளன்” என்று அலறினாள். திரும்பவும் வீட்டுக்குள் ஓடப் பார்த்தவளை அற்புதம் பாய்ந்து சென்று நிறுத்தினான். “வாயைப் பொத்து. இல்லாட்டிச் சுடுவன்.” இடுப்பில் ஒளிந்திருந்த விறகுக் கட்டையைத் தொட்டுக் காட்டினான்.   

0

நாளாக நாளாக பகலின் நீளம் குறைகிறது. குசினியிலிருந்த ஜன்னலால் அருள்குமரன் வெளியே பார்த்தான். இரவு எட்டு மணி. மந்தாரமான வெளிச்சத்தின் மேல் இருள் ஏறுகிறது. இனி ஏழு, ஆறு, ஐந்து என்று பகலை விழுங்கும். வேக வைத்த உருளைக் கிழங்கையும் காளானையும் சோயா சோஸ் விட்டுத் தட்டில் எடுத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான். அற்புதம் ஏற்கனவே சாப்பிடத் தொடங்கியிருந்தார். நன்கு வெந்த கோழித் தொடை. வாயில் ஒரு கடி. பிறகு ஒரு மிடறு மது. மதுக் குவளையை கைவிட்டார் இல்லை. கண்களில் போதை எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. தேகம் ஏதோவொரு தாள லயத்தில் அசைந்தது.

“குடிச்சது காணும். சாப்பிட்டுட்டுப் படுங்கோ. நான் கோப்பையைக் கழுவி வைக்கிறன்.” என்றான் அருள்குமரன். அற்புதத்திடமிருந்து மதுக் குவளையை வாங்க முயற்சிக்க, அவர் மறுக்க, அது வெளியில் சிந்தியது.

“நீ என்னடா மசிராண்டி எனக்கு ஓடர் போடுறது?” அருள்குமரன் திகைத்துப் போகவில்லை. இந்த ஐந்தாறு மாதங்களில் இது பழகிப் போய்விட்டது. அற்புதம் மதுப்போத்தலைத் தூக்கி இடுப்புக் கைலியில் சொருகினார். “நீ பொறுப்பாளர் எண்டால் பெரிய புடுங்கியா? நான் யார் தெரியுமா?” இடுப்பில் கிடந்த போத்தலைத் தொட்டுக் காட்டினார். “கனக்கக் கதைச்சாய் எண்டால் சுட்டுத் தாட்டுவிடுவன்.” ஒரு குழந்தை அடம்பிடிப்பதைப்போல இருந்தது. அருள்குமரன் உள்ளூர ரசித்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் குள்ளமான, தடித்த மீசை வைத்திருக்கிற, பின் மண்டையில் முடி உதிரத் தொடங்கிய, பகல்களில் அச்சமுற்ற கண்களைக் கொண்டிருந்த மனிதரில் இன்னதெனத் தெரியாத ஏதோ ஓர் ஈர்ப்பு. ஒருவேளை அவருடைய கடந்த காலத்தின் பாடுகளைக் கேட்கிறபோது ஏற்படுகிற குற்ற உணர்ச்சியைக் கடக்கத்தானா? எனக்கு என்ன குற்ற உணர்ச்சி? என்னைப் போன்றோரை சின்ன வயதிலேயே நெருப்பிற்குள் தள்ளிவிட்ட யுத்தத்தை ஆரம்பித்த அற்புதம் மாதியான ஆட்கள்தான் குற்ற உணர்ச்சியில் துவள வேண்டும்.

அற்புதம் கடைசிச் சொட்டையும் குடித்து முடித்தார். இருந்தவாக்கிலேயே முதுகைச் சரித்து மல்லாந்து படுத்தார். அவருடைய பிடரியில் அருள்குமரன் தலையணையைச் செருகி வைத்தான். அவர் இரு கைகளையும் கோர்த்து நெஞ்சில் வைத்திருந்தார். அருள்குமரனுக்கும் இதே மாதிரித்தான் படுத்துப் பழக்கம். திடுக் என்று ரொக்கெட்டின் ஞாபகம் வந்தது. இப்படிப் பார்த்தான் என்றால் திட்டுவான். நித்திரையிலிருந்து தட்டி எழுப்பி “இப்பிடிப் படுக்காதை. இது செத்த ஆக்களை வளத்துற முறை. உனக்கு இன்னும் நாள்க் கிடக்கு.” இயக்கத்தில் இருந்த ஆரம்ப நாட்களில் இப்படித்தான் ஒவ்வொன்றையும் சொல்லிச் சொல்லித் திருத்துவான்.

அருள்குமரன் அற்புதத்தின் கைகளைப் பிரித்து வைக்க முயன்றான். அவர் தூங்கவில்லைபோல. இமைகளின் உள்ளே கண்மணிகளின் அசைவு. போதையில் இரவிரவாக இனி ஏதாவது அரட்டுவார். “எனக்குள்ளை இருந்த துடியாட்டமான ஆளை, புளொட்காரங்கள் உயிரோடை புதைச்சிட்டு ஒரு பயந்தாங்கொள்ளியை வெளிய விட்டாங்கள். அந்தப் பரிதாபச் சீவனை புலிகள் சுட்டுத் தள்ளிட்டு ஒண்டுக்கும் உதவாத ‘என்னை’ உயிரோட விட்டாங்கள்.”

அற்புதம் ‘என்னை’ என்றபோது ஐந்தாறு முறை கை நெஞ்சில் அறைந்தது.  

0

“வாயைப் பொத்து. இல்லாட்டிச் சுடுவன்.” என்று இடுப்பைத் தொட்டுக் காட்டியதுதான் தாமதம், அந்தப் பெண் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்தினாள். செவ்வரத்தம் பூக்கள் கையிலிருந்து சிந்தின. அழுகை முட்டிக்கொண்டு வெடிக்கப் பார்த்தது. அடக்கினாள்.

“வீட்டில யாருமில்லையா?” அற்புதம் அதட்டினான். அவள் உள்ளே என்பதைப்போல தலையை அசைத்தாள். “போ..” பொத்திய கையை நீக்கினாள் இல்லை, அப்படியே நடந்தாள். அற்புதத்திற்கு உலகத்தையே பழிவாங்கிய மிதப்பு. யாரோ ஒருத்தி என்னுடைய சொல்லுக்குப் பயந்து கூனிக் குறுகி நிற்கிறாள். அதிலொரு சுகம். வெளிச்சத்தைப் பார்த்துக் காறித் துப்பினான். அவளுடைய கணவன், அப்போதுதான் நித்திரையிலிருந்து எழுந்திருக்க வேண்டும், இவர்களைப் பார்த்தவுடன் “யார் ஆள்? நீர் ஏன் அழுகிறீர்” என்று பதறிக்கொண்டு கிட்ட வந்தான். அற்புதம் ஒரே பாய்ச்சலில் அவளுடைய கழுத்தைத் திருகுவதைப்போல பிடித்தான். “ஒரு அடி முன்னால காலை வைச்சாலும் இவவைச் சுடுவன். நான் லெபனானில் ரெயினிங் எடுத்த ஆள்.” கணவனுக்கு முகம் பயத்தில் வெளிறிவிட்டது. அப்பிடியே நின்றான். அசையவே இல்லை. அற்புதம் அவளை நடத்தித் சென்று கூடத்தின் உள்ளே கதிரையில் உட்காரவைத்துவிட்டுப் பக்கத்திலேயே நின்றான், ஒரு மெய்பாதுகாவலர்போல.

“இது எந்த இடம்?” மறுபடியும் அதட்டல்.

“அரியாலை.”

அந்தப் பெயரை முன்னப் பின்னே கேள்விப்பட்டிருக்கக் கூட இல்லை. அங்கிருந்து எப்படி, எங்கே போவது என்பதைப் பற்றி ஒன்றும் தோன்றவில்லை. இப்போதைக்கு சாவைத் தள்ளிப் போடுவோம்.

அவளுடைய கணவன் மெல்ல வாய் திறந்தான். “தம்பி.. நீங்கள் என்ன கோபத்தில வந்திருக்கிறியள் எண்டு எனக்குத் தெரியேல்ல. எந்த இயக்கத்தில இருந்து வந்திருக்கிறீர் எண்டும் தெரியாது. ஆனா யாரோ பொய்யான தகவலைச் சொல்லித்தான் வந்திருக்கிறீர். எங்களுக்கு யாரோடும் பகை கிடையாது. எல்லாருக்கும் உதவி இருக்கிறம். பாரும், ரெண்டு மாசம் முதல் ஒரு இயக்கம் உதவி கேட்டு வந்தபோது, இவவிட மூக்குத்தியைக் கழட்டிக் கொடுத்தம்.” அவளுடைய மூக்கில் வெற்றுத் துளைதான், என்றாலும் அவன் அப்படி சகஜமாகக் கதைக்கத் தொடங்கியதைச் சகிக்க முடியவில்லை. என்னுடைய ஒவ்வொரு சொல்லுக்கும் இவர்கள் அச்சப்படவேண்டும். என்னிடம் கெஞ்ச வேண்டும். இடுப்பிலிருந்து பிஸ்ரலை உருவி மேசையிலிருந்த பூச்சாடியை, கூரையில் தொங்கிய மின் விளக்கை, சுவரிலிருந்த கண்ணாடி அலுமாரியை.. எதையாவது சுட்டுத் தள்ளினால்தான் பயந்து சாவார்கள். இடுப்பில் இருப்பது வெறும் எரிந்த மரக்கட்டைதான் என்பதை அற்புதமே மறந்துவிட்டிருந்தான். வேறு என்ன செய்யலாம்.. இவளுடைய கன்னத்தைப் பொத்தி அறைந்தால்போதும். நடுங்கிவிடுவார்கள். அந்த நினைப்பு உருக்கொள்ளப் பின்னடித்தது. ஓர் உன்மத்தமான, சினம் உச்சியில் ஏறிய தருணம் வேண்டும். பாவம், இவளில் எப்படிக் கோபப்படுவது. இதுவே டம்பிங் கண்ணன் என்றால்.. அருணா என்றால்.. கனிட்டா என்றால்.. இருக்கிறாளோ இல்லையோ, அந்தப் பெயரேபோதும், காலுக்கு அடியில் நெருப்பைக் கொளுத்திப் போட்டதைப்போல பற்றி எரியத் தொடங்கியது. கழுத்து நரம்புகள் சுண்டி இழுத்தன. பற்களின் நருமல், உதடுகளில் துடிப்பு. கண் மண் தெரியாத கோபம். “எழும்படி வேசை..” என்று கத்தினான்.

அவள் வாயைப் பொத்திய கைகளை விடுவித்தாள். நிதானமாகத்தான் எழுந்து நின்றாள். தேகம் சோர்ந்திருந்ததது. அற்புதம் பதட்டமாகத் தொடங்கினான். ‘அடியடா.. பார்த்துக்கொண்டு நிற்காமல் அடி.’ உள்ளிருந்து ஒரு குரல். கையை ஓங்கியபோதுதான் அவளுடைய கண்களைப் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லை. ‘உன்னை இந்த வயிற்றில் பெற்ற பாவத்திற்காக உன்னிடமிருந்து எந்த அடியையும் தாங்கத் தயார்’ என்னுமாற்போன்ற தாயின் பார்வை அது. பொன்னுரங்கத்திற்கு.. கச்சான்காரக் கிழவிக்கு.. எல்லோருக்கும் இதே கண்கள். கால்கள் நடுங்கின. கோயில் கொடி மரச் சீலை அவிழ்வதைப்போல அற்புதம் குலைந்துபோய் உட்கார்ந்தான். அழுகை உடைந்துவிட்டது. நான் சப்பறம் இல்லை.. நான் அருணா இல்லை.. நான் கிருபன் இல்லை.. “என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கள்.” இடுப்பிலிருந்த விறகுக் கட்டையை எடுத்து வெளியில் போட்டான். “புலிகள் என்னைத் தேடுகிறார்கள். இதுக்கு மேல் ஓடி ஒளிய எனக்குத் தெம்பு இல்லை. எப்பிடியும் இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க வந்துவிடுவார்கள். அதுக்கு முதல் ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா.. பசிக்குது.”          

அவர்களோடு பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தான் அற்புதம். இரண்டு பேருமே ஆசிரியர்கள். அவள், புனிதவதி, பக்கத்திலிருந்த அமெரிக்கன் மிஷன் பள்ளியில் கற்பித்தாள். அவர், கானமயில், நகரத்துப் பாடசாலை ஒன்றில் புவியியல் வாத்தியார். இரண்டு பேருக்கும் கல்யாணமாகி இருபது வருடங்கள் ஆகியும் பிள்ளைகள் இல்லை. ஒரு நாள் தட்டில் சோறு வைக்கும்போது புனிதவதி சொன்னாள். “பிறந்திருந்தால் உங்கட வயசுகளிலதான் இருந்திருப்பாங்கள். பிறகு அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் சுடுபட்டே செத்திருப்பாங்கள். நல்லவேளை. கடவுளுக்கு நன்றி.” அவள் பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்தாள். கானமயில்தான் பாடசாலைக்குப் போய் வந்தார். மறக்காமல் எல்லாப் பத்திரிகைகளையும் எடுத்து வருவார். ‘யாழ் மாவட்டத்தில் பொம்பர், ஹெலி, ஷெல் தாக்குதல். ஆறு பேர் பலி. நாற்பது பேர் காயம்.’ ‘யாழ் கோட்டையிலிருந்து ராணுவம் ஷெல் வீச்சு, தாலி கட்டிய சற்று நேரத்திலேயே மணமகன் சாவு.’ ‘வடமராட்சியில் முப்படையினருடன் புலிகள் நேரடி யுத்தம்.’  நேரத்தைப் போக்காட்ட ஒரே மாதிரியான செய்திகளைத்தான் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டியிருந்தது.

அற்புதம், யாழ்ப்பாண குடாவை விட்டே வெளியேறுவதுதான் நல்லதென்று கானமயில் அபிப்பிராயப்பட்டார். கடல் வழிதான் பாதுகாப்பானது. அரியாலையிலிருந்து படகில் புறப்பட்டால் கிளிநொச்சி மாவட்டத்திலிருக்கின்ற வேராவிலுக்கு இரவோடு இரவாகப் போய்விடலாம். மீன்பிடிப் படகென்றால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். அங்கிருந்து மன்னார், புத்தளம் என்று போய்விட வேண்டும். “இப்போதைக்கு தமிழீழத்தை விட்டே வெளிய போறதுதான் நல்லது.” என்றார் கானமயில். அவர்தான் இந்த ஏற்பாடுகளைக் கவனித்தார்.

ஒருநாள் இரவு அற்புதத்தைக் கூட்டிச் செல்ல இரண்டு மீனவர்கள் வந்தார்கள். விடைபெறும்போது அவனுக்குக் கண் கலங்கிவிட்டது. புனிதவதியையும், கானமயிலையும் கையெடுத்துக் கும்பிட்டான். புனிதவதி துளசி இலைகளை அவனுடைய சேர்ட் பொக்கெற்றில் வைத்து “ஒண்டுக்கும் யோசியாதை. இதை உன்னோடையே வைச்சிரு. ஒரு தீங்கும் அண்டாது.” என்றாள். கூடவே இரண்டு நூறு ரூபா தாள்களும். 

அன்றைக்கும் கடல் செத்த மாதிரிக் கிடந்தது. அலைகளே இல்லை. அதிகாலையில் கரையில் இறக்கிவிட்டார்கள். ஆறேழு மாதங்களாக அவ் இடங்களிலேயே அலைந்து திரிந்தான். கையில் கிடைக்கிற வேலைகளைச் செய்தான். சில நேரங்களில் காலத்தின் விசித்திரம் ஒரு கட்டுக்கதைபோல இருக்கும். அப்படித்தான் அற்புதம் முள்ளிக்குளம் என்ற இடத்திலிருந்த புளொட் முகாமிற்கு வந்து சேர்ந்தான். தெரிந்த பேயிடமே அடைக்கலம். அந்த முகாமிற்கு டம்பிங் கண்ணன்தான் பொறுப்பாளன். அவன் உடனேயே அடையாளம் கண்டுவிட்டான். “மச்சான் அற்புதம்.. எப்பிடியடா இருக்கிறாய்?” என்று கட்டிப்பிடித்து வரவேற்றான்.

“அண்டைக்கு சப்பறத்தையும் பண்ணையாரையும் சுட்டுட்டு ஓடேக்கைதான் ஞாபகம் வந்திச்சு.. அட உன்னைச் சுட மறந்திட்டன் எண்டு.”   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *