அஷேரா – 14

14

சூரிச் நகரத்தில் ஒரு பார்பிக்யூ கடையில் வேலை இருப்பதாக பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த லவகுசராசா சொன்னான். அவனுக்கும் யாரோதான் சொல்லியிருக்கிறார்கள். “நான் செய்யேலாது. விசா இல்லை. நீர் நேர போய்க் கேளும்.” என்றான். அருள்குமரன் அன்றைக்கே போய்விட்டான். தொடருந்து நிலையத்தின் உள்ளேயே, இறங்கி வரும் பயணிகளைப் பார்த்த மாதிரி ஒரு சின்னக் கடை. கண்ணாடித் தடுப்புக்கு உள்ளே வாயு அடுப்பில் வாட்டப்பட்ட ஸொசைச்சேஸ் இறைச்சிகள் கிடந்தன. வெட்டிய பாண் துண்டுகள், குளிர் பானங்கள்.. பெரிதாகக் கஸ்ரம் இருக்காது என்று நினைத்தான். இல்லை, பனிக் காலத்தில் இந்தத் திறந்த வளாகத்தில் குளிர் குத்திக் கொல்லும். அதற்கு மூன்று நான்கு மாதங்கள் இருக்கிறது. அப்போது பார்த்துக்கொள்ளலாம். அங்கே ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்தவன் பங்களாதேஷியாக இருக்க வேண்டும். “முதலாளி எங்கே?” என்று கேட்டபோது “வருவார். காத்திரு.” என்றான். நிமிர்ந்து கூடப் பார்க்காத அளவுக்கு வேலையில் மும்மரம். அருள்குமரன் பக்கத்திலேயே நின்று பார்த்தான். வரிசையில் சனங்கள். முதலில் ‘நல்ல நாளாகட்டும்.’ என்று பங்களாதேஷி ஆரம்பிக்கிறான். ‘என்ன விரும்புகிறீர்கள்?’ என்று கேட்க வாடிக்கையாளர் எதையோ சொல்கிறார். கண்ணாடிக் கடதாசியில் ஸொசைச்சேஸ் இறைச்சியைச் சுற்றுகிறான். காகிதத் தட்டில் வைத்து பாண் துண்டைச் சேர்க்கிறான். அமுக்கினால் வெளியே பிதுங்கக் கூடிய மாதிரி இரண்டு சுவையூட்டிகள் தொங்குகின்றன. கீழே பிடித்துக்கொண்டு மறுபடியும் ‘என்ன விரும்புகிறீர்கள்?’ பதிலைப் பொறுத்து அமுக்குகிறான். வாடிக்கையாளரிடம் கொடுக்கும்போது ‘நன்றி மீண்டும் சந்திப்போம்.’ அவ்வளவும்தான். ஒரு நிமிடத்திற்குள் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாவது ஆளிடம் ‘நல்ல நாளாகட்டும்.’ என்றான். ஐயோ.. மணித்தியாலத்திற்கு அறுபது ‘நல்ல நாளாகட்டும். அறுபது மீண்டும் சந்திப்போம்.’

முதலாளி “டொச் தெரியுமா?” என்று கேட்டான். நல்ல நாளாகட்டும், என்ன விரும்புகிறீர்கள், நன்றி மீண்டும் சந்திப்போம்.. இந்த மூன்றும்தானே.. “தெரியும்.” என்றான்.

“இன்றைக்கே தகுதி காண் வேலையைச் செய்து பார். பிடித்திருந்தால் சேர்த்துக் கொள்கிறேன்.”

அருள்குமரனை வேலையில் சேர்த்துக் கொள்ளவில்லை. அவனுக்கு உற்சாகம் போதாதாம். வாடிக்கையாளர்களோடு சிரித்துப் பேசி வேறேதாவதும் வேண்டுமா என்று கேட்டு அவற்றையும் தலையில் கட்ட வேண்டுமாம். அதற்கு நேரம் எங்கே இருக்கிறது? சனங்கள் நிவாரணத்திற்கு வரிசையில் நின்றதைப்போல நிற்கிறார்கள். இரண்டு மணித்தியாலம் கூடத் தாண்டவில்லை. திணறத் தொடங்கிவிட்டான். இறைச்சி வகைகளுக்கு ஏதேதோ பெயர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி உச்சரித்தார்கள். ‘மன்னிக்கவும், தயவுசெய்து இன்னொரு முறை’ என்றால் முகத்தில் சினந்தார்கள். முதலாளி நிறுத்திவிட்டு வெளியேறுமாறு சொன்னான். “இன்னொரு முறை பார்ப்போம். போய் வா.” என்று பக்குவமாகச் சொன்னான். 

திரும்பி வரும்போது சஞ்சலமாக இருந்தது. எத்தனையோ வேலைகளுக்கு எழுதி எழுதிப் போட்டாயிற்று. யாரும் அழைக்கவில்லை. ‘உங்களுடைய தகுதி இந்த வேலைக்குப் பொருத்தமானதாக இல்லை. மன்னிக்கவும். பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்.’ என்று மூன்றாவது நாளே பதில் வந்துவிடுகிறது. தொழிற்சாலைகளில் பொதி செய்வது, உணவகக் குசினிகளில் பாத்திரம் கழுவுவது, அதிகாலையில் பேப்பர் போடுவது.. ஒன்றுக்குக் கூட அவன் தகுதி இல்லை. போனகிழமை, இன்னொரு வேலை வந்தது. முதலாளி தமிழ் என்றதும் தயங்கினான். பயண நிறுவனம் வைத்திருக்கிறாராம். சென்னையிலிருந்து சினிமாப் படப்பிடிப்புக்கு வருவோருக்கான தங்குமிட ஏற்பாடுகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்போல. அவருக்கு அருள்குமரனை உடனேயே பிடித்துவிட்டது. “நாளைக்கே வேலைக்கு வாரும்.” என்றார். வேலை ஒப்பந்தம், சம்பளம் எதைப்பற்றியும் கதைக்கவில்லை. “நடிகைகள், நடிகர்கள், ரெக்னீசியன்கள் எல்லாருக்கும் நீர் ஒரு மனேஜர் மாதிரி. சந்தோசம்தானே?” என்றார். சந்தோசம்தான். ஆனால் சம்பளம்? தயக்கத்தை உடைத்துக் கேட்டே விட்டான். முதலாளி நாயைப் பார்த்ததுபோல அவனைப் பார்த்தார்.

“அவனவன் நயன்தாராவையும் திரிஷாவையும் கண்ணால பார்த்திட மாட்டமா எண்டு நாயா அலையிறான். நீர் நாள் முழுக்க அவள்களோடயே திரியப் போறீர். எவ்வளவு கொடுப்பினை தெரியுமோ? சம்பளம் எல்லாம் பிறகு பார்க்கலாம். நாளைக்கு ஏழு மணிக்கு வாரும்.”

அவன் போகவில்லை.

நிறுத்தத்தில் இறங்கினான். பகல் இன்னமும் நீண்டது. வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை. சும்மா இருந்தால் யோசனை யோசனையாக வரும். கொஞ்சம் சிரித்துப் பேசி ஸொசைச்சேஸ் இறைச்சிகளை விற்றிருக்கலாமோ? ‘வாங்க.. வாங்க.. ஒருக்காச் சாப்பிட்டால் விடமாட்டீங்க..’ ஐயரம்மாவின் நினைப்பு வந்தது. சிரித்துக்கொண்டே ஏரியை நோக்கி நடந்தான். கால் மிதிப் படகுகளில் சுற்றுவதையும் இளசுகள் குதித்துக் குதித்து நீச்சல் அடிப்பதையும் பராக்குப் பார்க்கலாம். பொழுது போகும். இங்கு வந்து ஒருநாள் நீந்த வேண்டும். வெறும் மேலுடன் குளிப்பதில் கூச்சம் ஒன்றும் இல்லைத்தான், ஆனால் நெஞ்சில் புசு புசு என்று மயிர் காடு மாதிரி வளர்ந்திருக்கிறது. வெள்ளைக் காரர்கள் நக்கலாகப் பார்ப்பார்களோ?

ஏரிக்கரையில் அபர்ணா உட்கார்ந்திருந்தாள். ஒரு கணம் ‘திரும்பிப் போவமோ?’ என்று தோன்றிற்று. அதை அலட்டிக்கொள்ளாமல் அருகாகப் போனான். அவள் காதில் ‘இயர்போன்’ மாட்டியிருந்தாள். கையில் ஏதோ ஒரு புத்தகம். இவனைக் கண்டுவிட்டு “ஓ.. அருள்குமரன்.” என்றாள். கை புத்தகத்தை மடித்துத் தொடையில் வைத்தது. அட்டையில் ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ என்று ஏதோ தலைப்பு. தன் அருகைக் கண்களால் சுட்டி “இருங்கள்” என்றாள். “இண்டைக்கு வேலை இல்லையா?”

அருள்குமரன் ஓர் இடைவெளி விட்டு உட்கார்ந்தான். “வேலை இல்லையே.. இப்பதான் தேடிக் கொண்டிருக்கிறன்.”

“ஓ..” அவள் ஏரியை வெறிக்கத் தொடங்கினாள். அமைதி. அது சற்று அந்தரமாக இருந்தது. அரங்கன் தேடி வந்து கழுத்தைப் பிடித்து அடித்ததைச் சொல்ல நினைத்தான். அது சரியாகப்படவில்லை. ‘என்னாலதானே..’ என்று கவலைப்படுவாள். அதனாலேயே கதைக்காமலும் விடக்கூடும். ‘அதனால் என்ன?’ என்று யோசிக்க ஏமாற்றமான உணர்வுகள். பனிப் புகார் கவிந்திருக்கிறபோது ஏரி கொஞ்சத் தூரத்திலேயே காணாமல் போய்விடும். இன்றைக்கு எதிர்க் கரையிலிருந்த மலை அடிவாரங்களில் முடிவது வரை தெரிந்தது. அதைக் கண்ட பிறகு ஏரியின் பிரமாண்டமே சுருங்கிப் போய்விட்டது. எல்லையைக் காணும் வரைதான் பிரமிப்பு. கண்ட பிறகு வடிந்து விடுகிறது. இது கடலுக்கு நிகழ்வதில்லை.

அபர்ணா எதிர்க் கரையை நோக்கி கையை நீட்டினாள். “வெள்ளை வெள்ளையா கட்டிடங்கள் தெரியுதா? அங்கதான் நான் வேலை செய்யிறன்.” என்றாள். மலை அடிவாரங்களில் தீப்பெட்டிகளை நிமிர்த்தியும் கவிழ்த்தும் வைத்ததைப்போல குட்டிக் குட்டியாக நிறையக் கட்டிடங்கள். வானுயர்ந்த கட்டிடங்கள் என்று ஒன்றுமே இல்லை. இந்த நாடே ஒரு பெரிய கிராமத்தைப்போலதான் இருக்கிறது. “ரெண்டு வருசமா இங்கதான் வேலை.” அபர்ணா சொன்னாள். அது முதியோர்களுக்கான காப்பகம். அங்கு அவளுக்கு உதவிச் செவிலியராகப் பணி. “அதுக்கு முதல் சைனீஸ் ரெஸ்ரோரன்ரில வேலை செய்தனான். இந்த ரெண்டுமே நான் கொழும்பில செய்த வேலைக்குக் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததுகள். அங்க நான் அபான்ஸ் கொம்பனியில எக்கவுண்டன்ட்.”

“நீங்கள் கொழும்பா?” அருள்குமரன் கூவாத குறையாகக் கேட்டான்.

“பிறந்தது யாழ்ப்பாணத்திலதான். அப்பாக்கு கொழும்பில வேலை, ஐஞ்சு வயசிலயே குடும்பத்தோடை வந்திட்டம்.”

“குடுத்து வைச்சனீங்கள். உங்களுக்கு இந்தியன் ஆமி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், பொம்பர், கிபிர், ஆட்லெறி, யாழ்ப்பாண இடப்பெயர்வு, வன்னி, ஓயாத அலைகள், ஆழ ஊடுருவும் படை.. எதைப்பற்றியும் தெரியாது, என்ன? கடைசியில அற்புதம் நடந்தே விட்டது. குண்டு, ரத்தம் எண்டு கதைக்காத ஒராளை கண்டுபிடிச்சிட்டன். அற்புதம் அண்ணைக்கு இதைச் சொல்ல வேணும்.” அவன் உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டே இருந்ததை அபர்ணா புருவங்களைச் சுருக்கி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“கொழும்பில இருந்திருக்கிறன். குண்டு வெடிப்புக்களைத் தெரியாமல் இருக்குமா?” என்று கேட்டாள்.

சோர்ந்து போனான். மறுபடியும் ரத்தம்.

“கடவுள் அருள். எதையும் நேரில பாக்கேல்லை. நியூஸ்ல பாத்ததுதான். எவ்வளவு சாவு.. எவ்வளவு அழிவு.. அநியாய வேலைகள்.”

“உங்களுக்கும் புலிகளைப் பிடிக்காதா?”

“சொல்லத் தெரியேல்லை. அனுபவங்கள்தானே ஒவ்வொன்றையும் தீர்மானிக்கும். நான்தான் அவையளை நேரிலேயே கண்டதில்லையே. அதனால அபிப்பிராயம் இல்லை. எண்டாலும்..” அபர்ணா நிறுத்தினாள். முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை பரவிற்று. “பிரபாகரனைப் பிடிக்கும். இப்ப இருக்கிறவரை இல்லை. அவருடைய பழைய படங்கள்.. ஸ்ரைலா போஸ் குடுத்துக்கொண்டு இருப்பாரே.. கையில் சிறுத்தைக் குட்டிகளை வைச்சுக் கொண்டு.. அந்தப் பிரபாகரனை ரசித்திருக்கிறன்.” அவளுடைய குரல் திடீரென்று தண்ணீரில் மூழ்குவதைப்போல அமிழ்ந்தது. தலை குனிந்து நிலத்தை வெறித்தாள். உதட்டைச் சுழித்து ஒரு துயரப் புன்னகை. “இதையே அரங்கனுக்கு சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? அண்டைக்கு இரவு முழுக்க நித்திரை வராத விசர் நாய் மாதிரி சுத்திக்கொண்டு திரிஞ்சிருப்பார். சாமத்தில என்னை எழுப்பி வேற யாரையெல்லாம் இப்பிடி ரசிச்சிருக்கிறாய் எண்டு கேட்டிருப்பார்.”

அருள்குமரன் அந்தக் கதையைத் தொடர விரும்பவில்லை. அவர்களுடைய நெருக்கத்தைக் கேட்க வேண்டாமே என்று தோன்றிற்று. “உங்களுடைய ஹோம் இல் ஏதாவது வேலை கிடைக்குமா?” என்று பேச்சை மாற்றினான்.

அபர்ணா நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் அதுக்குடனே நீர்க்கசிவு. அது ஒன்றுமில்லை என்பதைப்போல புறங்கையால் துடைத்தாள். “என்ன மாதிரியான வேலைகளைத் தேடுறீங்கள்?”

“ஏதாவது டொக்டர்.. அல்லது இஞ்சினியர்..” என்று ஆரம்பித்தவன் இடையில் நிறுத்திவிட்டுச் சிரித்தான். சிறியதொரு கப்பல் நடுவே போய்க்கொண்டிருந்தது. அதைக் காட்டி “இதைத் தண்ணியில இறங்கித் தள்ளுற வேலையெண்டாலும் செய்வன்.” என்றான். “ஆனா மீன் விக்கிற வேலை மட்டும் வேண்டாம். ஐயரம்மாக்களைச் சமாளிக்க முடியாது.” அந்தக் கதையை முழுவதும் கேட்ட அபர்ணாவிற்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெடிச் சிரிப்புக்கு கண்களில் தண்ணீரே வந்து விட்டது. “எவ்வளவு நாளாச்சுது இப்பிடிச் சிரிச்சு.” என்றாள்.

“மீன் விக்க வேண்டாம். மீனைச் சமைக்க ஓம் தானே? ஹோம் கிச்சின்ல வேலை கேட்டுப் பாக்கவா? நூறு பேருக்கு ஒரு நாளைக்குச் சமைக்க வேண்டி இருக்கும்.”

“ஒரு காலத்தில மாசத்தில மூண்டு முறை எண்டாலும் நூறு பேருக்குச் சமைச்சுப் போட்டவன் நான். தெரியுமா?” 

0

அபர்ணாவும் அரங்கனும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். தெரிந்த நண்பர்களை அழைத்து சிறிதாக ஒரு விருந்துபசாரம் மட்டும் வைத்துக்கொண்டார்கள். மண்டபம், சடங்கு என்று  பெரிதாகச் செய்யவில்லை. அபர்ணாவைப் பயண முகவர் ஊடாக அழைத்த கடனே சுளையாக முப்பதாயிரம் பிராங்குகள். அதில் அவனுக்குப் பெருமை வேறு. “ஒரே பிளைட்ல வந்து இறங்கிறதுக்கு எவ்வளவும் செலவழிக்கலாம். இல்லாட்டி கூட்டி வாற வழியில ஏஜென்ட்காரன் பதம் பாத்திட்டுத்தானே கொண்டுவந்து விடுறான்.” அருவருப்பான கதைகள். கேட்கக் காசு கூசும். அவனுடைய சம்பாத்தியத்தில் அரைவாசியை வீட்டு வாடகை தின்றது. பிறகு மருத்துவக் காப்புறுதி, தண்ணீர் மின்சாரம் தொலைபேசிக் கட்டணங்கள் என்று மூச்சு முட்டிய வாழ்க்கைச் செலவு. அபர்ணா சீன உணவகமொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள். துப்பரவுப் பணிதான். இரவு உணவகத்தை மூடும் தறுவாயில் சென்று சமையலறை, பாத்திர பண்டங்கள், உணவருந்தும் கூடம் எல்லாவற்றையும் பளிச் என்று சுத்தம் செய்துவிட்டு வரவேண்டும். இரவு பன்னிரெண்டு மணி ஆகும். நடை தூரத்திலேயே இருந்ததால் போக்குவரவுப் பிரச்சினை இல்லை. ஒரே ஒரு பயம். பாதையில் ஒரு மயானம் இருந்தது. இடுகாடு என்று நம்பவே முடியாது. பல வர்ணப் பூ மரங்களும் இளைப்பாறும் இருக்கைகளுமாக அசப்பில் பூங்கா மாதிரியான தோற்றம். சாமத்தில், அதுவும் பன்னிரெண்டுச் சொச்சத்திற்கு உறைந்த நிசப்தத்தில் கிடக்கும். பளிங்காலான நினைவுக் கற்களில் வெண் புகை உருவங்கள் உட்கார்ந்தபடி, படுத்தபடி, எங்கேயோ வெறித்தபடி.. தறிகெட்டு அலையும் கற்பனைகள். முதுகுத் தண்டு சில்லிடும். போகப் போகப் பழகிவிடும் என்றுதான் நினைத்தாள். இல்லை. சாவுப் பயம் ஒவ்வொரு முறையும் புத்தம் புதியது.

துப்பரவு வேலைச் சம்பளம் வெறும் கைச் செலவுக்குத்தான்போதுமாக இருந்தது. ஒரு முழு வேலையைத் தேட வேண்டும். உணவகத்தில் பரிசாரகியாக வேலை செய்த தாய்லாந்துப் பெண் உதவிச் செவிலியருக்கான ஒரு வகுப்புக்குப் போவதாகச் சொன்னாள். அபர்ணாவிற்கும் ஆசையாக இருந்தது. பகல் வகுப்புகள். நேரச் சிக்கல் இல்லை. அரங்கனிடம் சொன்னபோது “தாய்லாந்துக்காரிக்கு வேற தொழில்கள் தெரியுமே.. அதில இதை விட கூட உழைப்பாளே?” என்றான். ‘சைக்.. எப்ப பாத்தாலும் புத்தி முழுக்க பொம்பிளையின்ரை தொடைக்கு நடுவிலதான்.’ இப்படி நிறையப் பார்த்தாயிற்று. ‘இது ஒரு வருத்தம்.’ வருத்தம் என்று யோசிக்க அவனில் பரிதாபமாகவும் இருக்கும். ‘கல்யாணத்துக்கு முதல் அவன் கதைக்கும்போது இந்த ஊத்தைக் குணத்தை ஒரு பொறியாகக் காட்டியிருந்தால் கூட சுதாகரித்திருக்கலாம். ஒருவேளை அவன் அதையெல்லாம் காட்டியும் நான்தான் கல்யாணக் கிறக்கத்தில் கிடந்தேனோ? யாரையாவது காதலிச்சனீரோ என்று அவன் கேட்டபோது நான் துடிச்சுப் பதைத்து இல்லை என்றுதானே சொன்னேன். ஆதவனுடைய கதை ஒரு பகிடிக் கதைதான், என்றாலும் அதைக்கூட நான் சொல்லவில்லை. நான் ‘நல்லவள்’ என்று நிரூபிக்கிற அவசரம். மாசாத்தைத் தனம். இந்த மாசாத்தை என்ற வார்த்தையை அம்மா அடிக்கடி பாவிப்பாள். ‘மாசாத்தை, நடிக்காதை.’

அபர்ணா முதியோர் காப்பகத்தில் வேலைக்குச் சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆகியிருந்தன. உதவிச் செவிலியராக முதியோர்களைப் பராமரிக்கும் பணி. ஒவ்வொருவரும் தொன்னூறு, தொன்னூற்றைந்து வயதைத் தாண்டியவர்கள், ஒரு விதத்தில் குழந்தைகள். அதனாலேயே குளிக்க, சாப்பிட, மருந்துபோட எல்லாவற்றுக்கும் அடம் பிடித்தார்கள். ஒரு தாயைப்போல அவர்களை அணுக வேண்டும். அபர்ணாவிற்கு வேலை நிறையப் பிடித்திருந்தது. ஒன்றே ஒன்றைத் தவிர. கை அணைத்துத் தூக்கினால் பஞ்சு போன்ற தேகம், நூறு வருட வரலாற்றை கிறுக்கி வைத்த மாதிரியான தோல் சுருக்கங்கள், கண்களை இடுக்கி இடுக்கி பொக்கை வாயால் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். நேற்று வரை அவர்களுக்கென்று ஒரு பெயர். இன்றைக்கு ‘உடல்.’ அப்படி எத்தனை பெயர்கள்..

விஷ்மர் இறந்து இரண்டு மாதங்களாகிறது. “ஹேய்.. எனது பெயர் விஷ்மர் இல்லை. வைஷ்மர்.” ஒவ்வொரு முறையும் அதட்டித் திருத்துவார். “நான் வேண்டுமானால் பீஷ்மர் என்று கூப்பிடட்டுமா?” அபர்ணா கேட்பாள்.

“யார் அவன்?”

“அவன் பெரிய பலசாலி, உங்களைப்போல இல்லை.”

“ஹ.. நான் எவ்வளவு பலசாலி என்று அந்தக் காலப் பெண்களிடம் போய்க் கேள்.”

அவர் இறந்த பிறகும் அடுத்தடுத்த நாட்களில், அந்த நினைப்பே இல்லாமல் அபர்ணா அவர் இருந்த அறைக்குள் நுழைந்து விடுவாள். தலை சாய்க்குமிடம் சற்று உயர்த்தப்பட்ட கட்டில் அப்படியே இருக்கும். துயர நாடகம் முடிந்த மேடைத் திரையைப்போல ஜன்னலின் திரைச் சீலை. “அபர்ணா.. குத்தெ மோர்ஹென்.” உற்சாகமான அந்தப் பொக்கை வாய்க் குரல் காற்றில் எங்கோ கரைந்துவிட்டது. வெறுமையும் அந்தரமுமாக உணர்ந்தாள்.

விஷ்மருக்குப் பார்வைக் குறைபாடு இருந்தது. பற்கள் இல்லை. தலை முழுவதுமாக உதிர்ந்து காதோரத்தில் மட்டும் பென்சிலால் வரைந்த மாதிரி நரை. இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தொன்னூற்று ஆறு வயதென்று யாராலும் சொல்ல முடியாது. அவர் காலையிலேயே எழுந்து விடுவார். அபர்ணா வேலையை ஆரம்பிக்கிற நேரத்தில் குளித்து புதிய ஆடை அணிந்து  உட்கார்ந்திருப்பார். போர்வை சீராக மடித்து விரிக்கப்பட்டிருக்கும். கதவைத் திறந்து “உள்ளே வரலாமா திரு விஷ்மர்?” என்று கேட்பாள். 

“வா.. வா.. உன்னைக் கண்ட பிறகுதான் காலையே விடிகிறது.” வெட்டி வைத்த சதுரத் துண்டுகளைப்போன்ற ஜெர்மன் வார்த்தைகள். 

அவள் அவருடைய இரத்த அழுத்தத்தை, ஒட்சிசன் அளவை எல்லாம் தேவைக்கு ஏற்ப பரிசோதிப்பாள். அமைதியாக ஒத்துழைப்பார். மற்றவர்களைப்போல குழப்படி செய்வதில்லை. சில சமயங்களில் திடீரென்று “வெள்ளை உடை ஒரு தேவதையின் ஆடைதான். இல்லையா?” என்று கேட்பார். “இருந்தாலும் நீ ஒரு முறை இந்தியப் பெண்களைப்போல சேலை உடுத்தி வா. அழகாக இருக்கும்.”

“அதற்கென்ன.. ஒருநாளைக்கு வருகிறேன்.”

“நாங்கள் இந்திய உணவகத்திற்குப் போவோம். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு அருந்துவோம்.”

அபர்ணா சிரித்துக்கொண்டு ‘பெரிய ஜெமினி கணேசன் என்ற நினைப்பு’ என்று முணுமுணுப்பாள்.

விஷ்மருக்கு இரத்த அழுத்த நோய் இருந்தது. திடீரென்று தாறுமாறாக அதிகரிக்கும். “என்ன நடந்தது?” என்று கேட்டால் “கடந்த காலத்தை நினைத்துவிட்டேன்” என்று சொல்வார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. “அதற்காக இளமையைத் தொலைத்துவிட்டேன் என்று அர்த்தமில்லை.” பொக்கை வாயின் குறும்புச் சிரிப்பு. நல்ல நினைவாற்றல். அவருடைய வாழ்வில் குறுக்கிட்ட எல்லாப் பெண்களையும் ஞாபகம் வைத்திருந்தார்.

“முதற் பெண்ணைச் சந்தித்தபோது எனக்குப் பதினேழு வயது. அவள் இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜேர்மனியிலிருந்து தப்பி வந்தவள். என்னுடைய கண்களில் காதல். அவளுடைய கண்களில் அழிவும் துன்பமும். நீயே சொல்லு. தீராக் கதைகளை யார்தான் கேட்பார்கள்? எனக்குச் சலித்தே விட்டது, அவளையும் தான். உன்னுடைய நாட்டில் கூட யுத்தம் நடக்கின்றதல்லவா? ஹாஹா நான் சந்தித்த கடைசிப் பெண், யுத்தத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.” அவருக்கு இலங்கையைப் பற்றிய ஒரு குழப்பம் இருந்தது. அது இந்தியாவிற்குச் சொந்தமான தீவு என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். இல்லை என்று மறுத்துப் பேசினால், “சரி விடு. பக்கத்தில்தானே இருக்கிறது. எல்லாம் ஒன்றுதான்.” என்பார். அபர்ணா மல்லுக்கட்டுவாள். “அப்படியெல்லாம் விட முடியாது. சுவிஸும் ஜேர்மனியும் ஒரே நாடுகளா?”

“நாசமாய்ப்போன எல்லைகளைப் பற்றி என்னோடு பேசாதே.”

ஒருநாள் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் அபர்ணா சொன்னாள். “முதுமையின் வருத்தங்கள் அண்டாத ஆரோக்கியமான ஆள் நீங்கள். இந்த மாதிரி முதியோர் காப்பகத்தில்தான் இருக்க வேணும் என்ற தேவையே இல்லையே..”

அவருடைய இடது கையில் இரத்த அழுத்தமானித் துணி  சுற்றப்பட்டிருந்தது. அது காற்றால் நிரவி தசைகளை இறுக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் “ஒருவேளை என்னுடைய இறந்த உடல் நாறத் தொடங்கும் முன்னரே பொலிஸிற்குத் தகவல் சொல்ல யாராவது இருந்தால், நான் இங்கே இருக்க வேண்டிய தேவை இல்லைத்தான்.” என்றார். 

அபர்ணாவிற்குப் பதறிவிட்டது. “சே..சே.. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்கத் தேவை இல்லை. நூறு வயதுவரை இருப்பீர்கள்.”

“அதற்கு இன்னமும் நான்கு வருசங்கள்தானே இருக்கின்றன.”

விதம் விதமான வாசனைத் திரவியங்களை உடலிலே பூசிக் கொள்வதில் அவ்வளவு பிரியம். அதனாலேயே அந்த அறைக்கு என்று நிரந்தரமான வாசம் இருந்ததில்லை. அபர்ணா, அவருடைய பிறந்த நாளுக்கு ஒரு ‘சென்ட் போத்தல்’ பரிசளித்தாள். கவர்ச்சிகரமான கண்ணாடிக் குப்பி அது. உள்ளே தங்க  நிறத் திரவம். விஷ்மருக்கு சந்தோசம் தாங்கவில்லை. “இப்படி ஒரு பரிசுப் பொருளை வாங்கி ஐம்பது ஆண்டுகளாகி விட்டன.” என்றார்.

“பொய் சொல்லக் கூடாது திரு விஷ்மர். ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு ரோஜாப் பூக்களும் வைன் போத்தலும் கிடைக்கின்றன அல்லவா..”

“நான் காதலியிடமிருந்து கிடைத்தைப் பற்றியல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன்.” குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார், ஒரு குழந்தைப் பிள்ளையைப்போல.

அதுதான் கடைசிச் சிரிப்பு. அதுதான் கடைசிப் பிறந்த தினம். அடுத்தடுத்த நாட்களில் அவருடைய தலையில் இரத்தம் தடைப்படத் தொடங்கியிருந்தது. மருத்துவர் பரிசோதித்துவிட்டு இறுதிப் பயணத்திற்குத் தயாராகிறார் என்றார். அன்று மாலை அபர்ணா அவருடைய அறைக்குச் சென்றாள். ஆழ்ந்த தூக்கத்தில் வைத்திருக்கும் மருந்துகள் விஷ்மருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. ஒருக்களித்துப் படுத்திருந்தார். ஈரத் துணியால் அவரைச் சுத்தமாக்கினாள். புத்தாடை அணிவித்தாள். அவரது நெற்றியில் சற்று நேரம் கையை வைத்திருந்துவிட்டு வெளியேறினாள். காலையில் செய்தி வந்திருந்தது. “திரு விஷ்மர் இறந்து விட்டார்.”

அபர்ணா அன்றைக்கு லீவு போட்டாள். ஒரு மாதிரி மனக் கிலேசமாகவே இருந்தது. காப்பகத்தில் வேலை செய்கிற மற்றவர்கள் இந்த மாதிரிச் சாவுகளை காலால் எத்துவதைப்போல தாண்டிப் போய் விடுகிறார்கள். அவளுக்குத்தான் இயலவில்லை. நேற்று இதே நேரம் இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்ற மாதிரியான நினைவுகள் அலைக்கலைத்தன. யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் ஆறுதலாக இருக்கும் என்றுதான் அரங்கனிடம் சொன்னாள்.

“நல்ல மனுசன். நான் எண்டாக் காணும். தேவதை எண்டும், காதலி எண்டும் ஒரே பாச மழைதான். அந்தக் காலத்தில பெரிய காதல் மன்னனா இருந்திருப்பார்போல.”

“ஓ..”

அந்த ‘ஓ’வின் தொனி அவளுக்குத் தெரியும். தேகம் பூராகவும் எச்சரிக்கைப் பூச்சிகள் ஊரத் தொடங்கின. இவருக்குச் சொன்னது மொக்கு வேலை. கதையை வளர்க்கக் கூடாது. அபர்ணா எழுந்து குளியல் அறைக்குள் போனாள். தலையில் தண்ணீர் கொட்டியது. அதையும் மீறி அந்த ‘ஓ..’  இரைந்தது. இன்றைக்கு லீவு போட்டிருக்கக் கூடாது. வேலைக்குப் போயிருக்க வேண்டும். அரங்கனுடைய இந்தக் கோளாறை தொடக்கத்தில் எதிர்கொள்ள முடியாமல் அழுது தீர்த்திருக்கிறாள். பக்குவமாக அவனுக்கு எடுத்துச் சொல்ல  முயன்ற போதெல்லாம் தோல்விதான். “கள்ளம் இல்லாட்டி மனசு ஏன் குறுகுறுக்க வேணும்?” என்று கேட்பான். ஒரேயொரு வழி. அமைதி. அப்போதும் “கள்ளம் பிடிப்பட உடனை வாயைத் தைச்சாச்சு.” என்ற குத்தல். இந்த லட்சணத்தில் விஷ்மரைப் பற்றிக் கதைத்த எனக்குத் தான் பைத்தியம்.

தலையைத் துவட்டிய துவாயை உடலில் சுற்றிக் கொண்டு குளியலறைக் கதவைத் திறந்தாள். அரங்கன் வாசலையே வெறித்துக்கொண்டு நின்றான். கிட்டத் தட்ட அரை மணி நேரம். அப்பிடியே நிற்கிறானா..?

“அவன் ஆரெண்டு சொன்னீர்? கிழவனா? ஆளுக்கு எத்தினை வயசிருக்கும்?” இயல்பான குரல். நிதானமான தொனி. இப்படித்தான் ஆரம்பிக்கும்.

அபர்ணா “தொன்னூற்றாறு.” என்றாள். பதட்டம் உள்ளோடிப் பரவியது. இல்லை. இதை நீள விடக்கூடாது. சட்டென்று மலத்தை உழக்கிய அருவருப்பு. கண்களை இறுக மூடினாள். இமைகளுள் நீர்க் கரைசல். துவாயை உரிந்து கட்டிலில் எறிந்துவிட்டு பிஜாமாவும் ரீ சேர்ட்டும் அணிந்துகொண்டாள்.

“கிழவனுக்குச் சாப்பாடு தீத்துவது, குளிக்க வார்ப்பது எல்லாம் நீர்தானே செய்ய வேணும்?”

அபர்ணா கட்டிலில் உட்கார்ந்தாள்.

“குளிக்க வார்க்கிறபோது கிழவங்கள் உடுப்புப் போட்டிருக்கிறவங்களா?”

அரங்கனுடைய கையைப் பிடித்து அருகில் இருத்தினாள்.

“கிழவங்களை நம்ப முடியாது. உம்மட கையை எடுத்துத் தங்கடை சாமானில வைப்பாங்கள்.”

அரங்கன் களைத்த பிறகும் கொஞ்ச நேரத்திற்குக் கட்டிலிலேயே கிடந்தான். பிறகு எழுந்து உடுப்பைப் போட்டுக்கொண்டு வெளியே போனான். அன்றைக்குத்தான் முதல் தடவையாக அபர்ணாவிற்குத் தற்கொலையில் நினைவுகள் உருவாகின.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *