அஷேரா – 13

அன்றைக்கு அற்புதம் மட்டக்களப்பிற்குப் போகவில்லை. எங்கோ தமிழ்நாட்டின் ஒரு மூலையிலிருந்து அவனைத் துரத்திக்கொண்டு வருபவர்களுக்கு மட்டக்களப்பு கூப்பிடு தொலைவுதான். நேராகக் கதவைத் திறந்து வந்து சுடுவார்கள். ஒரேயொரு வழி, திரும்பவும் ரெலோக் காரரர்களிடம்தான் தஞ்சம் கோரினான். அவர்கள் அளவெட்டியிலிருந்த ஒரு மூதாட்டியின் பராமரிப்பில் அவனை வைத்திருந்தார்கள்.

ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ஓலைக் குடிசை அது. தலை நரைத்த கிழவி ஒருத்திதான் அங்கு இருந்தாள். குட்டித் தேகம். வீட்டில் இருக்கிறபோது பச்சை, சிவப்பு நிறங்களில் கைலியைக் கட்டி மேலே வெள்ளைச் சட்டை போட்டிருப்பாள். வெளியே போகும்போது வெள்ளைச் சேலை. அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. நிறையக் காலத்திற்கு முன்னரே கணவர் இறந்துவிட பக்கத்தில் இருக்கின்ற கோவில்களிலும் அந்தோனியார் ஆலயத்திலும் கச்சான் கடலை விற்பதுதான் தொழில். பெரிய தாச்சிச் சட்டியில் செம்பாட்டு மண்ணைப் பரவி கச்சான் வறுப்பாள். சோளக் கொட்டைகள் டப் டப் என்று வெடித்துத் துள்ளிப் பொரியும். பாடுவாள். ‘ஒரு கல் எறியவே ஒரு கிளி பறக்கவே.. இரு கல் எறியவே இரு கிளி பறக்கவே..’ யாரும் கேட்டறியாத பாடல்கள். 

ஆறேழு நாட்களிலேயே அற்புதத்தோடு நல்ல வாராப்பாடாகி விட்டாள். அவனுக்கு என்ன இக்கட்டு என்று புரியாவிட்டாலும் ஏதோ பிரச்சினை என்று தெரியும். “நீ ஒண்டுக்கும் யோசிக்காதை. கடவுளில பாரத்தைப் போட்டுட்டுச் சும்மா இரு. மிச்சத்தை அவர் பாப்பார்.” அக்கறையாகச் சொல்வாள். “நீ என்ன நட்சத்திரம்? கோயில்லை ஒரு அரிச்சினை செய்துகொண்டு வாறன்.” இரவு திருநீறைக் கொண்டுவந்து பெருவிரலால் நெற்றியில் தீட்டுவாள். தொட்டு ஆசீர்வதிப்பதைப்போல இருக்கும். ‘ஒருவேளை கிழவி எங்கயாவது அந்த நோட்டீஸை வாசிச்சால் என்ன செய்யும்?’ ‘நரகத்து முள்ளே.. நாசமறுத்தவனே.. வெளிய போடா.. என்று துரத்துவாளா?’ யாரென்றே தெரியாத கனிட்டாவில் வெஞ்சினம் பற்றியது. முகம் அறியாத புகையுரு அவள். ஏன் இப்பிடிப் பொய் சொன்னாள்? அவளை மட்டும் நேரில் கண்டால் நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு கேள்வி கேட்க வேண்டும். நீயும் ஒரு பொம்பிளையா?’  யோசனையைச் சட்டென்று துண்டித்தான். ‘கனிட்டா என்ற ஒருத்தி உண்மையிலேயே இருந்திருப்பாளா? உயிரோடு இருப்பவர்களை இல்லாமல் செய்கிறவர்கள் இல்லாத ஒருத்தியை உருவாக்கியிருக்க மாட்டார்களா? அப்படித்தான் செய்திருப்பார்கள் நாசமாப் போனவர்கள்.’ இப்படி நினைக்க ஓரளவு ஆறுதலாக இருந்தது. நகரத்தின் எல்லாச் சுவர்களிலும் அவனுடைய புகைப்படம், கற்பழித்த குற்றத்திற்காக என்ற சொற்களின் கீழ் தொங்குகிறது. அந்த வார்த்தை, கற்பழித்த குற்றம், அதைத்தான் தாங்க முடியவில்லை. திருடிய குற்றத்திற்காக என்றாவது அறிவித்திருக்கலாம்.

ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த மோகன்லாலும் அண்ணாச்சியும் அவ்வப்போது வந்து பார்த்துப் போனார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. “இதுக்குப் பின்னாலை டம்பிங் கண்ணன்தான் இருக்கிறான். அவன் கதைக்க மாட்டான். அவனுக்கு மேல உள்ள யாரோடையும்தான் கதைக்க வேணும். அது யாரெண்டதுதான் குழப்பம்.” என்று மோகன்லால் ஒருநாள் சொன்னான். அவன் அண்ணாச்சி மாதிரி இல்லை. அண்ணாச்சி சரியான அமைதி. சதா சிந்தனை வயப்பட்டதைப்போன்ற தோற்றம். ஒரு புன்னகை மட்டும்தான் பேசும். ‘எப்படி இருக்கிறீங்கள்?’ ‘ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.’ தைரியமாக இருங்கள்.’ ‘போயிட்டு வாறம்.’ இது எல்லாவற்றையும் அது பேசி முடித்துவிடும். மோகன்லால் அப்படியே தலைகீழ். எப்போதும் உரையாடலுக்குத் தயார் என்ற மாதிரியான சுபாவம். “கதைச்சுத் தீர்க்க முடியாத பிரச்சினை என்ற ஒன்று இல்லை. கதைக்கக் கூட்டிட்டு வாறதுதான் இங்க பிரச்சினை. அதுக்குத்தான் நாலு தட்டுத் தட்ட வேண்டியிருக்குது.”

கனிட்டாவைப் பற்றிய சம்சயத்தை அற்புதம் மோகன்லாலிடம் சொன்னான். “கனிட்டா என்ற ஒருத்தி இல்லையென்றுதான் நான் நம்புறன். அது டம்பிங் கண்ணனும் மற்ற ஆக்களும் சேர்ந்து எழுதின கதை.”

“ஏன் தோழர் அப்பிடிச் சொல்லுறீங்கள்?” இப்படித் தோழர் என்று அவன் விளிக்கும்போது அது தன்னில் பொருந்தாத மாதிரி அற்புதம் கூச்சப்படுவான், அதற்குத் தகுதி இல்லாத ஆள்போல.

“பொம்பிளையள் பொய் சொல்ல மாட்டினம்.”

மோகன்லால் சிரித்தான். “அமைப்பில ஆம்பிளை, பொம்பிளை என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இது அமைப்பின் குரல். அமைப்புக்குத் தேவையெண்டால் யாராக இருந்தாலும் பொய் சொல்லுவார்கள்.”

அன்றைக்கு இரவு நித்திரை வரவில்லை. மோகன்லால் மறுபடியும் குழப்பிவிட்டான்.  ‘கனிட்டா’ என்றொருத்தி இருக்கிறாள் என்றால் யார் அவள்? அமைப்பில்தான் இருக்கிறாளா? என்னைத் தெரிந்திருக்குமா? நான் தப்பி ஓடியதை அவளுக்கு நிச்சயம் சொல்லியிருப்பார்கள். அந்தக் கோபத்தில்கூட பொய் சொல்லியிருக்கலாம். இல்லை. காரணமெல்லாம் தேவை இல்லை. பொய் சொல் என்றால் சொல்லப் போகிறாள். அமைப்பின் பொய். என்னை உயிரோடு பிடித்தால் சாட்சி சொல்ல அவளைக் கூட்டி வரக் கூடும். சனங்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அவள் என்னை நோக்கி கையை நீட்டுவாள். ‘இந்த ஆள் என்னைக் கற்பழிச்சவர்.’ அந்த நேரம் நான் அவளைப் பார்க்க வேண்டும். நீயெல்லாம் ஒரு பொம்பிளையோ எண்டு.. திரும்பத் திரும்ப ஏன் பொம்பிளைக்குள் போய்ச் செருகுகிறேன் என்று தெரியவில்லை.

வெளியே கிழவி சுருக்குப் பையிலிருந்த சில்லறைகளை சாணி மெழுகிய தரையில் கொட்டி எண்ணிக் கொண்டிருந்தாள். நாணயங்கள் கிணு கிணுத்தன. கோவிலில் நல்ல வியாபாரம் நடந்திருக்க வேண்டும். அற்புதம் எழுந்து வந்து அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். 

“உங்களை ஒண்டு கேக்கட்டா?”

நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் நாணயக் குற்றிகளைத் தரம் பிரித்தாள். அதுதான் ‘கேள்.’ என்ற அனுமதி.

“பொம்பிளையள் பொய் சொல்லுவினமா?”

கிழவியின் குட்டித் தேகம் குலுங்கிச் சிரித்தது. “சொல்லுவினம். தங்களுக்குத் தேவையெண்டால் தாண்டாத கோடெல்லாம் தாண்டுவினம். ஆனால் அது தங்களுக்காகத்தான். வேற யாருக்காகவும் இல்லை.” தரையில் பரவிக் கிடந்த சில்லறைகளில் ஓர் ஐந்து ரூபா நாணயத்தை எடுத்தாள். “இதைப் பார். இந்த வருசம், எண்பத்து ஆறு எண்டு இதில இருக்குதா? இந்தக் காசில கொஞ்சத் தங்கப் பவுண் கலந்திருக்கு எண்டு முட்டாசுக்கார சின்ராசு சொன்னவன். என்னட்டை இப்பிடி பத்துப் பன்னிரெண்டு இருக்குது. உன்னைச் சந்திக்க வாற இயக்கப் பெடியங்களுக்கு வேணுமெண்டால் சொல்லு.”

ஐந்தாறு மாதங்கள் ஆகியிருக்கும். இயக்கங்களுக்கு இடையில் முறுகல்களும் வாய்த் தர்க்கங்களும் ஏற்படுவதாக அற்புதம் அரசல் புரசலாக அறிந்திருந்தான். இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது? ஒரு விதத்தில் நிம்மதியும்தான். இந்தச் சச்சரவுகளுக்குள் அவனை மறந்துவிடுவார்கள். நகரச் சுவர்களில் ஒட்டிய அறிவித்தல்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து உரிந்து விழுந்திருக்கும். அவற்றுக்கு மேலே வேறு நோட்டீஸ்களை ஒட்டியிருப்பார்கள். ‘துரோகிகளை இனம் காணுங்கள்.’ ‘பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு உரிமை கோருகிறோம்.’ ‘ஐக்கியம் முக்கியம்.’ ‘இந்தியாவே எங்களை ஏமாற்றாதே.’ ‘மாபெரும் புத்தாண்டு மலிவு விற்பனை.’ ‘இன்ப உலகில் திளைக்க வைக்கும் வயது வந்தோருக்கான திரைப்படம்.’ இவற்றுக்குக் கீழே அவனுடைய முகம் மறைந்து போயிருக்கும்.

திடீரென ஒருநாள் நன்றாக இருட்டிய பிறகு மோகன்லால் வேலிப் படலையில் நின்று கூப்பிட்டான். சைக்கிளில் இருந்து இறங்கவும் இல்லை. “இங்கயிருந்து உடன வெளிக்கிட வேணும்.” என்றான். கிழவி அந்தோனியார் கோவில் பெருநாளுக்குப் போயிருந்தாள். இன்னும் வரவில்லை. “ஆச்சி வந்ததும் சொல்லிட்டுப் போவம்.” என்றான் அற்புதம்.

“அதுக்கு நேரமில்லை. இயக்கங்களுக்கிடையில பிரச்சினை வெடிக்கும்போல கிடக்கு. இங்க எந்த இயக்கம் வந்தாலும் கிழவி, வாருங்கோ பிள்ளைகளே எண்டுதான் கதவைத் திறப்பாள்.”

அற்புதம் உடுத்த உடுப்புடன் சைக்கிளில் ஏறினான். கொடியில் காய்ந்த கைலிகளை எடுக்கவோ, படலையை மூடவோ ஒன்றும் தோன்றவில்லை. ‘சோறு தின்ற தட்டிலே பீயை வைச்சிட்டு போறீங்களேடா..’ என்று கிழவி கத்துவது மட்டும்தான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. நடுங்கினான். சைக்கிள் பிரதான வீதிகளைத் தவிர்த்துவிட்டு குச்சொழுங்கைகளில் விரைந்தது. இரு புறமும் கிடுகுகளாலும் பனை ஓலைகளாலும் அடைக்கப்பட்ட வேலிகள். இலை தழைக் கதியால்கள். இதெல்லாம் யாழ்ப்பாணத்தின் சீதன ஒழுங்கைகள் என்று மோகன்லால்தான் ஒருநாள் சொன்னான். இரண்டு மூன்று மகள்களைப் பெற்ற தகப்பன்மார், காணிகளைப் பிரித்து பிரித்துச் சீதனமாகக் கொடுத்தபோது உருவாகிய குறும் வீதிகளாம். “வரைபடத்தில கூடக் கிடையாது.   யாழ்ப்பாணத்தாருக்கு மட்டும்தான் எதில புகுந்து எதுக்கால வரவேணும் எண்டு தெரியும்.”

அற்புதத்தை ஏற்றிச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாச்சி வரவில்லைப்போல. “அண்ணாச்சி எங்க?” என்று கேட்டான். வனாந்தர வெளி ஒன்றிற்குள் சைக்கிள் நுழைந்தது. குப்பென்று ஆடு மாடு செத்த நாற்றம். மூக்கைப் பொத்தினான். வாயைத் திறந்தால் குமட்டியது. நகரத்துக் குப்பைகளை இங்கேதான் கொட்டுகிறார்கள்போல. இன்னொரு புறத்தில் தரவைக் கடல். சதுப்பு நிலக் கரையோரம். அற்புதம் மறுபடியும் “அண்ணாச்சி எங்க?” என்று கேட்டான். காற்றின் ஊ என்ற இரைச்சலில் மோகன்லாலுக்குச் சரியாக கேட்கவில்லைப்போல. அவனுடைய கைலியில் காற்று டப டப என்று சத்தம் எழுப்பிற்று. எதிர்க் காற்று. உன்னி உன்னி மிதித்தான். ‘இரண்டு பேருக்கும் என்னைக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை, என்றாலும் கஸ்ரப்படுகிறார்கள். விதி என்னை இந்த இயக்கத்துக்கே கொண்டு போயிருக்கலாம். சீரழிந்திருக்கத் தேவை இல்லை. இவர்களைப்போல எனக்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். இப்பவும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, வரப்போறன் என்றால் வேண்டாம் என்றா சொல்வார்கள்? நிச்சயம் மோகன்லால் கேலி செய்வான். ‘நாங்கள் என்ன தஞ்ச மடமா கட்டி வைத்திருக்கிறோம் தோழர்?’  அண்ணாச்சி என்ன சொல்வார்? ஒரு மாதிரித் தலையைச் சாய்த்து ஆழமாகப் பார்ப்பார். அதே புன்னகை.’ 

“அண்ணாச்சியைச் சுட்டுப் போட்டாங்கள்.” என்றான் மோகன்லால். காற்று ஓய்ந்திருந்தது. அற்புதத்திற்குத் தலை தொங்கிவிட்டது. ‘அவர் அதிர்ந்து கூடக் கதைக்க மாட்டாரே? ஒருவேளை என்னைத் தேடி வந்த இடத்தில.. ஐயோ..’

“தாஸ் குழுவுக்கும், பொபி குழுவுக்கும் பிரச்சினை போய்க்கொண்டு இருந்தது. ரெண்டு பேரையும் சமாதானம் செய்து வைக்கிற ஒரு ஏற்பாடு. யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலதான் பேச்சுவார்த்தை. ஆஸ்பத்திரி எண்டதால ஆயுதங்கள் இல்லாமல் வெறும் கையோடதான் தாஸ் போயிருக்கிறார். அவரோடை அண்ணாச்சியும் காளியும் கூடப் போயிருக்கினம். நம்ப வைச்சுக் கழுத்தறுத்த மாதிரி பொபி ஆட்கள் ஆஸ்பத்திரியில் வைச்சே அவங்களைச் சுடத் தொடங்கிட்டாங்கள். தாஸுக்கும் அண்ணாச்சிக்கும் நெஞ்சில சூடு விழுந்திட்டுது. அவங்களோடை ஒரு ஆஸ்பத்திரி நேர்ஸ்ஸும் மருந்தெடுக்க வந்த ரெண்டு பொது சனமும் செத்திட்டினம்.” 

அற்புதம் மொத்தமும் சோர்ந்து போனான். “யார் தாஸும், பொபியும்?” கேட்ட பிறகுதான் தோன்றியது, தெரிந்து என்ன ஆகப் போகிறது?

மோகன்லாலிடமிருந்து பெருமூச்சு வெளியேறிற்று. “ரெண்டு பேருமே எங்கடை இயக்கத்தில இருந்த ஆட்கள்தான். ரெலோவின் ராணுவத் தளபதிகள்.”

அதற்குப் பிறகு இரண்டு பேருமே பேசிக் கொள்ளவில்லை. விரிந்த வயல் வெளியின் நடுவே ஒற்றைப் பாம்புபோல தெரு நீண்டது. வழியில் ஒரு வைரவர் கோவில். மோகன்லால் சைக்கிளை நிறுத்தினான். அடர்ந்த நிழல் தரு மரத்தின் கீழே பட்டுகள் சாத்திய வைரவர் சூலம். ஒன்றிரண்டு சில்லறை நாணயங்களை உண்டியலில் போட்டான். திருநீற்றுக் குறி இட்டான். வட்டக் கல்லில் தண்ணீர் தெளித்து சந்தனக் கட்டையால் தேய்த்தான். நடுவிரலால் தொட்டு ஒரு பொட்டு. அவனைப் பார்த்தால் முதல்தடவையாகக் கடவுளைக் கும்பிடுபவன் மாதிரி இருந்தது. அற்புதத்தில் நெற்றியிலும் பொட்டு வைத்தான்.

வட்டுக்கோட்டையில் இருந்த ரெலோ முகாமிற்கு இரண்டு பேரும் வந்து சேர்ந்தார்கள். நாற்புறமும் மதில் சுவர் உள்ள பெரிய வீடு அது. வாசலில் மண் மூடைகளை அடுக்கிய சோதனைக் கூண்டில் துப்பாக்கிகளோடு ஒன்றிரண்டு பேர். பலத்த பாதுகாப்புத்தான். ஆனால் யாரிடமிருந்து பாதுகாக்க? மோகன்லால் “உள்ளை வாங்கோ தோழர்.” என்றான்.

அன்றிலிருந்து இரண்டாவது மாதத்தில் ரெலோ இயக்கத்தை, புலிகள் தடை செய்தார்கள். ‘இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமிழீழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம். அவர்களைச் உடனடியாகச் சரணடையுமாறு எச்சரிக்கிறோம். எச்சரிக்கையை மீறினால் மரண தண்டனை.’ என்று எழுதப்பட்ட புதிய சுவரொட்டிகள் தெருவெங்கும் முளைத்தன.   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *