12
அருள்குமரனுக்குத் திரும்பவும் ஒரு கடிதம் வந்தது. லவகுசராசா “ஐயோ.. உம்மட முடிவை கான்சல் பண்ணிப் போட்டாங்களோ?” என்று அங்கலாய்த்தான். இந்த முறை சமூக உதவித் தொகையை வழங்கும் திணைக்களத்திடமிருந்து அழைப்பு. எதிர்பார்த்ததுதான். மதியம்போல போனான். அங்க நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அவனுடைய உதவித் தொகையை அதிகரிக்கப் போவதாகச் சொன்னார்கள். அதுபோலவே அகதி முகாமிலிருந்து வெளியேறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தால் அந்தச் செலவையும் பொறுப்பேற்பதாகச் சொன்னார்கள். ஆனால் வாடகை தொளாயிரம் பிராங்குகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். தவிர அருள்குமரன் விரும்பினால் ஜேர்மன் மொழியும் ஏதேனும் தொழில்கல்வியும் படிக்கலாம், மூன்று வருடங்களுக்குத்தான். அல்லது இப்பொழுதே ஏதாவது வேலையைத் தேடிக் கொள்ளலாம். அவனுக்குப் படிப்பதைப் பற்றி ஒரு யோசனையும் இருக்கவில்லை. முதலில் வீடு, அடுத்தது வேலை. “வேலை ஏதும் கிடைச்சால் போ. ஆயிரம் ரெண்டாயிரம் என்று சேர்ந்தால் எனக்குத் தா..” நெதர்லாந்திலிருந்து வின்சன் அண்ணா நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். இப்போது அவரில் கோபம் வருவதில்லை. அந்தப் பணம் ஒருநாளும் அவருக்குச் சும்மா வந்திருக்காது. திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.
“நான் புதிதாக ஒரு வீட்டைத் தேடுவதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் ஒருவரோடு பகிர்ந்து கொள்ளலாமா?” அருள்குமரன் கேட்டான். அப்படியொரு நினைப்பு அவனுக்கு சமீபத்தில்தான் தோன்றியது, அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகு. இன்னமும் அற்புதத்திடம் அதைப்பற்றிக் கேட்கவில்லை.
“உங்களோடு வீட்டைப் பங்கிட அவர்கள் தயாரென்றால் எங்களுக்குச் சம்மதம்தான். அவர்களிடம் கேட்டீர்களா?”
“நான் அவரிடம் பேசிவிட்டு தகவல் தருகிறேன். நன்றி.”
“நன்றி. இன்றைய நாள் நல்ல நாளாகட்டும்.”
அருள்குமரன் முகாமுக்குத் திரும்பினான். அறையில் இரண்டு பேரையும் காணவில்லை. நல்லதாகப் போயிற்று. எங்கேயோ களவாக வேலைக்குப் போகிறார்கள்போல. அந்தத் தமிழ்க் கடையாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கு வியாழக்கிழமை, மீன் வந்திருக்கும். ஐயரம்மாவின் நினைவு புன்சிரிப்பை அழைத்துவந்தது. கோதுமை மாப்போல நிறமாம். வாய்விட்டுச் சிரித்தான். ஜன்னலின் இரண்டு இரும்புக் கதவுகளையும் திறக்க காற்றும் வெயிலும் கட்டிப்பிடித்துக்கொண்டு நுழைந்தன. பறந்துகொண்டிருந்த திரைச் சீலையை ஒரு கரையாக ஒதுக்கிவிட்டு கட்டிலில் சாய்ந்தான். அற்புதத்தோடு சென்று தங்குவதைப் பற்றி யோசனை ஓடியது. ஏனென்று தெரியவில்லை, அது ஒரு ராசியான வீடு. அங்கு போகும்போது மட்டும்தான் அந்தரத்திலிருந்து இறங்கித் தரையில் கால்களை ஊன்றி நிற்பதைப்பொல தோன்றுகிறது. பழகிய ஒழுங்கைக்குள் சைக்கிள் ஓடுவதைப்போன்ற அனுபவம். அற்புதத்திற்கும் அப்பிடி இருந்திருக்க வேண்டும். ஒருநாள் சொன்னார். “இப்பதான், உன்னோடை கதைக்கத் தொடங்கின பிறகுதான் வயிறும் மனசும் உலை ஆறின மாதிரி அமைதியா இருக்கு.” அருள்குமரன்தான் அவருக்கும் சேர்த்துச் சமைக்கின்றான். தேங்காய்த் துருவலையும் கறுவாப் பட்டையையும் வறுத்து அரைத்துக் கூட்டாக்கி வைக்கின்ற உறைப்பான நண்டுக் கறி என்றால் அவருக்குக் காணும். அதுவும் தடிமன் நாட்களில் அப்படியொரு அவா. நண்டின் கால்களை பற்களுக்கு இடையில் உடைத்து உறிஞ்சும்போது “எவளோ ஒருத்தின்ரை வயித்துக்குள்ளாலதான் நீ அவளின்ரை இதயத்துக்கை போகப் போறாய்.” என்று சிரிப்பார்.
‘அற்புதம் அண்ணன் ஒருநாளும் வேண்டாம் என்று சொல்லமாட்டார். இப்பவேகிழமையில் இரண்டு மூன்று நாள் அங்கதான் தங்குகிறேன். இட்டுமுட்டான வீடுதான், ஆனால் அவர் பெரும்பாலும் இரவுப் படுக்கைக்குத்தானே வருகிறார். மேலே இருக்கிற வீட்டுக்காரக் கிழவனும் கிழவியும்தான் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.’ அருள்குமரனுக்கு நித்திரை சுழட்டி அடித்தது. அப்படியே தூங்கிப்போனான். இடையில் ஒருதடவை விலுக் என்று உடல் விதிர்த்தது. இந்தப் பழக்கம் இன்னமும் இருக்கின்றது. எங்கோ உயரத்திலிருந்தோ, கட்டிலின் விளிம்பிலிருந்தோ விழுவதைப்போன்ற நினைப்புக்கு தேகம் சட்டென்று வினையாற்றுகிறது. கண்ணைத் திறந்தால் அப்படி ஒன்றும் இல்லை என்ற ஆசுவாசம். கொஞ்ச நேரத்தில் மறுபடியும் விலுக்.. லவகுசராசாதான் நித்திரையில் கிடந்தவனை உலுப்பினான். அவனுக்கு வேலை முடிய பின்னேரம் ஆறு மணி ஆகுமே.. ஆறு மணி ஆச்சுதா.. துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தான். “உம்மைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கினம். வெளிய வரட்டுமாம்” என்றான் லவகுசராசா.
தலைமயிரை விரல்களால் சரிப்படுத்திக்கொண்டு வெளியே வந்தான். உச்சிப் பொழுதுபோல வெயில். வாசலில் யாரையும் காணவில்லை. சற்றுத் தூரத்தில் நினைவாலயத்திற்குச் செல்லும் வழியில்தான் ஒருவன் நின்றான். அவனை நோக்கி நடந்தான். கிட்ட நெருங்கியதும் “என்னையா தேடி வந்தீங்கள்?” என்று கேட்டான். அவனுக்கு நல்ல தும்புக்கட்டை மீசை. மழித்த கன்னங்கள். இந்த மாதிரி ஆட்களைக் கண்டால் ‘அரசியல்துறைக்காரர் மாதிரி’ என்ற நினைப்பு அதுவாக வருகிறது. முன்னரும் யாரையோ இப்படி யோசித்திருக்கிறான். இல்லை, இவன் அப்படி அல்ல. இவனுடைய கண்களில் போதையின் இருள். ஆளுக்கு நிறை வெறி.
அருள்குமரனைக் கண்ட மாத்திரத்திலேயே அவன் ஓடிவந்து தொண்டைக் குழியில் பிடித்தான். “டேய் மயிராண்டி.. புருசன் பெஞ்சாதிக்கை எப்ப சண்டை வரும். இடையில பூந்து பொம்பிளையை மடக்கலாம் எண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு திரியிறியா?” அவனுக்கு வார்த்தைகள் உளறின.
இவன் அரங்கன், அபர்ணாவின் புருஷன் என்று சட்டென்று புரிந்துவிட்டது. அருள்குமரன் அவனுடைய விரல்களைக் கழுத்திலிருந்து பிய்த்தெடுக்க முயன்றான். அதற்கிடையில் மடக்கிய வலது முட்டியால் அடுத்த குத்து மூக்கிலேயே விழுந்தது. நரம்பு மண்டலம் நொருங்கிப் போயிற்று. தலையைச் சிலுப்பினான். இருண்ட கண்களுக்குள் வண்ண அரிசி மணிகள் பறந்தன. பொய் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது. கையால் மூக்கைத் தேய்த்தான். உள்ளங்கை எல்லாம் இரத்தம், நஜிபுல்லா தன்னுடைய கையைக் கிழித்து வைத்த மாதிரி.
“உங்களுடைய மனிசி உதவி கேட்டா. அதைச் செய்தேன். மற்றும்படி அவ உண்மையைச் சொன்னாவா.. பொய்யைச் சொன்னாவா எண்டெல்லாம் எனக்குத் தெரியாது.”
“இஞ்ச பார். ஒருத்தி வேசை விளையாட்டுக்கள் காட்டிக்கொண்டு உன்னட்டை வந்தால், நீ வீட்டுக்கு வழிகாட்டித்தான் விடவேண்டுமே ஒழிய வீர விளையாட்டுக்கள் காட்டக் கூடாது.” தொண்டைக் குழியை விரல்கள் நெரித்தன. அருள்குமரனுக்கு நாக்கு வெளியே வந்தது, ஓங்காளிக்குமாற்போல. அழுங்குப் பிடிதான். தனித்துச் சமாளிக்க முடியாது. யாராவது உதவிக்கு வந்தால் நல்லது. லவகுசராசாவும் மற்றவனும் வாசலிலேயே பார்த்துக் கொண்டு நின்றார்கள். இன்னொரு முறை குத்து விழுந்தால் குண்டு வெடித்த பாலத்தைப்போல முகம் பிய்ந்துவிடும். “மரியாதையாகக் கையை எடுங்கள்.” என்றான். மண்டைக்குள் அப்போதுதான் பற்ற வைத்த நெருப்பின் மென் சூடு.
“என்னடா.. ரோசம் பொத்துக்கொண்டு வருகுதோ?”
அருள்குமரன் உடலை இறுக்கிக்கொண்டு ஒரு தள்ளுத் தள்ளிப் பார்த்தான். அரங்கன் கொஞ்சம் அசைந்து கொடுத்தாலும் முழந்தாளை உயர்த்தி வயிற்றில் உதைந்து பார்க்கலாம். அவன் பிடரி அடியுண வழ வாய்ப்பிருக்கிறது. ஒரே பாய்ச்சலில் நெஞ்சில் காலூன்றி ஏறிக் குந்திவிட வேண்டும். கன்னத்தைப் பொத்தி நாலு அறைபோதும். வெறி வேறு. எழும்ப மாட்டான். ஆனால் அசைகிறானே இல்லையே. முதிரை மரம் மாதிரி நிற்கிறான்.
“எதுவாயிருந்தாலும் உங்கடை மனிசியோடை கதையுங்க. என்ரை தொண்டைக்குழியைப் பிடிக்கிறதால ஒரு புண்ணாக்கும் நடக்காது.” நெருப்பு பற்றத் தொடங்கிவிட்டது.
அரங்கன் நாக்கைக் கடித்தபடி இன்னொரு முறை கையை ஓங்கினான். கழுத்தைத் திருகிய விரல்கள் சற்றுத் தளர்ந்தன. அதுபோதும். நெருப்பு விளாசி எரியத் தொடங்கிவிட்டது. விரல் சொடுக்கு நேரம்தான். அரங்கனை ஒரே இழுவையில் இழுத்து நெஞ்சோடு கட்டிக் கொண்டான். காற்றும் நுழையாத இறுக்கம். வலது காலை நிலத்தில் உதைந்தான். நாயைப்போல வாயை ஆ என்றான். அவ்வளவுதான். அரங்கனின் இடது மார்பில் ஒரே கவ்வு. அவனுக்கு முதலில் கூசியிருக்கும்போல. சில நொடிகள் தாமதித்துதான் குழறத் தொடங்கினான். “விடடா.. விடடா..” வீரிட்டான். அவனுடைய தலை உயிருள்ள மீனைப்போல துடித்தது. “ஐயோ..”
அவனைச் சப்பிவிட்டுத் துப்பியதைப்போல அருள்குமரன் தள்ளிவிட்டான். கீழே விழுந்தவன் அழத் தொடங்கிவிட்டான். கேவிக் கேவி அழுகை, ஒரு சின்னப் பிள்ளையைப்போல. கண்ணீரைக் கண்டதும் ஒரு மாதிரியாகி விட்டது. பிடித்துத் தள்ளி விட்டிருக்கலாம். கடித்திருக்கக் கூடாது. நாய்ப் பழக்கம்.. சைக். சுய வெறுப்புக் கவிய அந்தரப்பட்டான். கையை நீட்டி ‘எழும்புங்க’ என்று கேட்கலாம். அவன் பற்றிக்கொள்ளா விட்டால்? இனிமேல் அபர்ணாவை எங்கு பார்த்தாலும் கண்டும் காணாததும் மாதிரிப் போய்விட வேண்டும். இவனுக்குத் தண்ணீர் வேண்டுமா என்று கேட்கலாம். வேண்டாம் என்றுவிட்டால்?
அரங்கன் மெல்ல எழுந்தான். கண்ணீரைத் திரும்பத் திரும்ப புறங் கையால் துடைத்தான். மௌனமாகத் திரும்பி நடந்தான். தூசணத்தில் என்றாலும் திட்டிவிட்டுப் போனால் கொஞ்சம் குற்ற உணர்ச்சி குறையும்போல இருந்தது. வெயில் நாளின் உற்சாகமே இல்லை. அருள்குமரன் முகாமிற்குத் திரும்பினான்.
“என்ன ஏதும் பிரச்சினையா?” வாயிலில் வைத்து லவகுசராசா கேட்டான்.
பதில் இல்லை. சலித்த முகத்துடன் உள்ளே போனான். பின்னாலேயே வந்தார்கள். “ஏதோ என்ரை மனிசி எண்டு அவன் கத்தினது காதில விழுந்தது.” லவகுசராசா கண்ணைச் சிமிட்டினான். “உனக்கும் அவன்ர மனிசிக்கும் ஏதாவது அப்பிடி இப்பிடித் தொடர்போ? அது அவனுக்குத் தெரிஞ்சிட்டுதோ?” அருள்குமரன் படுக்கையில் உட்கார்ந்தான். தொண்டைக் குழியில் கரகரத்தது. இரண்டொரு முறை இருமிப் பார்த்தான். கொஞ்சம் சுகம். “அப்ப ஏன் அவள் அவனை விட்டுப் பிரிஞ்சி போனவள்? வேற யாரோடயோ தொடர்பு எண்டுதானே?” இப்பொழுது மற்றவன் கேட்டான்.
இவர்கள் தங்களுடைய மார்புக் காம்பில் கடி வாங்காமல் ஓய மாட்டார்கள்போல.

0
கோடையின் உச்ச நாட்கள். இரவு ஒன்பது மணிக்குப் பிறகும் வெளிச்சம் படர்ந்திருக்கிறது. அருள்குமரன் தெருவின் குறுக்காக மஞ்சள் கடவையைக் கடந்தான். அவன் போகும் மட்டும் காத்திருந்த கார்ச் சாரதி புன்னகைத்தான். இவனும் கையை அசைத்துச் சிரித்தான். யாரோ ஒருவரின் சிறு சிநேகத்தில் ஒரு குட்டிப் பூரிப்பு. இம்மாதிரித் தருணங்களாலேயே அழகாகிறது நாள்.
அருள்குமரன் அற்புதத்தின் வீட்டுக்கு முழுவதுமாகக் குடி பெயர்ந்துவிட்டான். வரவேற்பறையில் இருந்த கணணி மேசையை அவர் அவருடைய படுக்கையறைக்கு நகர்த்தினார். அந்த இடத்தில் ஓர் ஒற்றை மெத்தை. பழைய பொருட்களை விற்கும் இடத்தில் வாங்கியது. காலையில் நிமிர்த்திச் சுவரோடு சாய்த்து வைத்துவிடலாம். வீட்டு வாடகையையும் மருத்துவக் காப்புறுதியையும் சமூக உதவி நிறுவனம் தானே செலுத்திவிடுவதாகச் சொன்னது. கைச் செலவுக்கு மட்டும் வங்கிக் கணக்கைத் திறந்து வைப்பில் இட்டார்கள். கொஞ்சம் உடுப்புக்கள் வாங்கினான். பயங்கர விலை. இதுவரைக்கும் கரித்தாஸ் நிறுவனம் கொடுத்த யாரோ பாவித்த உடுப்புக்கள்தான். அடுத்து வேலை தேட வேண்டும். அற்புதமும் அவருக்குத் தெரிந்த ஆட்களிடம் சொல்லி வைத்திருந்தார். என்றாலும் “அவங்கள் உதவிக் காசு தாறாங்கள் எண்டால் டொச் மொழியாவது படிக்கலாமே?” என்று அபிப்பிராயப்பட்டார். தேவையில்லை என்று தோன்றியது. அது பழகப் பழக வந்துவிடும். சிங்களம் வந்ததைப்போல. “இல்லை அண்ணை. இவங்களோடை தொங்கிக் கொண்டிருக்க ஏலாது.” என்று மறுத்தான். என்னதான் உதவித் தொகை என்றாலும் அவர்கள் ஒவ்வொன்றையும் கணக்கு வைத்திருப்பார்கள். முகாமில் தங்கிய நாட்களுக்கான வாடகை, இப்போது கொடுக்கிற வாடகை, மருத்துவக் காப்புறுதி எல்லாவற்றையும், வேலையில் சேர்ந்ததும் மாதா மாதம் பிடித்துக்கொள்வார்கள். ஒரு வகையில் அது நல்லதும்தான். முன்பு ஒரு நாள் இந்தியாவில் மண்டபம் அகதிகள் முகாமில் வைத்து ஒரு அதிகாரி சொன்னான். “அகதிங்களுக்கு இடம் கொடுத்துச் சோறு போடுறதே பெரிய விசயம், இதுல உங்களத் தொறந்து வேற விடணுமா எங்க வேணும்னாலும் போ.. அப்டீன்னு?” அன்றைக்குக் கூனிக் குறுகி நிற்க வேண்டியிருந்தது.
திருப்பத்தில் அபர்ணா வந்தாள். வர்ணங்களைச் சிந்திவிட்ட மாதிரி நெய்த நீளக் கவுண் அழகாகத்தான் இருந்தது. கோடைக்கான ஆடை. கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தாள். டொச்சில் நல்ல நாள் ஆகட்டும் என்று வணக்கத்தைச் சொல்லிவிட்டு நகர்ந்து போய்விட வேண்டும். வேண்டாம். தமிழ் ஆட்கள் திருப்பிச் சொல்வார்களோ தெரியாது. சொல்லாவிட்டால் ஒரு மாதிரி ஆகிவிடும்.
“அருள்குமரன்தானே? எப்பிடி இருக்கிறீங்கள்?” அபர்ணா எதிரில் நின்று கேட்டாள். அவளோடு பேசக் கூடாதென்று வெறும் இரண்டு நொடிக்கு முன்னர் தான் நினைத்திருந்தான்.
“நல்லாயிருக்கிறன். நீங்கள்?”
“இருக்கிறேன்.” என்று அழுத்திச் சொன்னாள். “இப்ப நான் வீட்டுக்குப் போயிட்டன்.”
“ஓ..”
“ம்.. அரங்கன் வேற எங்கயோ போய்த் தங்கியிருக்கிறார். நான் ஏழெட்டு நாள் ஷெல்டரில இருந்தன். அங்கயிருந்து வேலைக்குப் போகக் கஸ்ரம். அதனால வீட்டுக்கு வந்திட்டன். அண்டைக்கு நிறையப் பதட்டமா இருந்தது. ஒழுங்கா ரெண்டு வார்த்தையைக் கோர்த்துக் கதைக்கக் கூட முடியேல்லை. நீங்கள் செய்தது பெரிய உதவி. மறக்க மாட்டன்.” இரண்டாவது திருப்பத்தில் இடப் புறத்தைக் காட்டினாள். “அதில ஒரு கின்டர்கார்டன் பள்ளிக்கூடம் இருக்குதுதானே. அதுக்குப் பக்கத்திலதான் என்ர வீடு. சரி, இன்னொரு நாளைக்குச் சந்திப்பம்”
அருள்குமரனுக்குத் தொண்டை வரைக்கும் வந்துவிட்டது. “நானும் இப்ப இந்தப் பண்ணைக்குப் பக்கத்து வீட்டிலதான் இருக்கிறன். உயர்ந்த மர வீடு.” சொற்களை முழுங்கிவிட்டான். வேண்டாம். நாளைக்கே அவளுடைய புருசன் வீட்டு வாசலுக்கு முன்னால் நின்று ‘வெளிய வாடா.. மயிராண்டி.’ என்று கத்தினால் மரியாதைக் கேடாகிவிடும். கிழவன், கிழவி முகத்தில் முழிக்கவே முடியாது. கிழவன் அருமையானவன், கிழவிதான் ஒரு போக்கு. எதையும் முகத்துக்கு நேரே அடிக்கிற மாதிரிச் சொல்லுகிற பழக்கம்.
அற்புத்தோடு தங்குவதற்காக அவர்களிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. அருள்குமரனை அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினான். “இரண்டு பேரும் ஒன்றாக இருக்கலாமென்று நினைக்கிறோம். உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதென்று நினைக்கிறேன்.”
கிழவன் அதைப்பற்றிப் பிறகு பேசலாம் என்பதைப்போல அருள்குமரனைப் பார்த்தான். “உன்னுடைய அம்மா அப்பா எல்லாம் எங்கே?”
“நான் குழந்தைப் பிள்ளையாக இருக்கும்போதே அவர்கள் இறந்துவிட்டார்கள்.”
“யுத்தத்திலா?”
“ஆம்.” ஒரு கணமும் யோசிக்காத பதில்.
கிழவனிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளியேறிற்று. “இந்த உலகம் முழுவதும் விஷப் புகை.” என்று முணுமுணுத்தான். இனிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற முகத் தோற்றம். மௌனம்.
“எல்லாம் சரிதான், ஆனால் கீழே இரண்டு பேர் தங்குவதற்குரிய இட வசதி இல்லையே?” என்று கிழவி ஆரம்பித்தாள். அற்புதம் அதை எதிர்பார்த்திருந்தார்போல, அவளுடைய குரலைக் கேட்காதவராக கிழவனைப் பார்த்துச் சொன்னார். “இதை விடவும் சின்னக் கூடுகளில் வாழ்ந்தவர்கள் நாங்கள். பத்துக்குப் பத்தடி அறையில் பதினான்கு பேரோடு அடைபட்டுக் கிடந்திருக்கிறேன். இடவசதி ஒரு பொருட்டே இல்லை. இங்கே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தனிமை வாழ்க்கை, அதுபோதும் என்று நினைக்கிறேன். எனக்கொரு மகன் இருந்திருந்தால், அவனுக்கு இவனுடைய வயது. இன்றைக்கு இவனும் தனிக்கட்டை. நீங்கள் பெரிய மனது பண்ணி இவனைத் தங்குவதற்கு அனுமதிக்க வேணும்.”
அற்புதம் கதைத்து முடிக்கும் வரை அருள்குமரனையே பார்த்துக் கொண்டிருந்த வீட்டுக்காரக் கிழவன் “இவனும் நானும் ஒரே வயதில்தான் அம்மா அப்பாவை இழந்திருக்கிறோம்.” என்று வெறுமையான குரலில் சொன்னான்.
0
தொன்னூற்றி ஓராம் வருடம், இளவேனிற் காலத்தில் அற்புதம் சுவிற்சர்லாந்தில் காலடி வைத்தான். போலந்திலிருந்து ஜேர்மனிக்குள் நுழைந்தவனை காரிலேயே கடத்திக்கொண்டு வந்து சூரிச் நகரில் இறக்கினார்கள். அன்றிலிருந்து அகதி முகாம், அரசியல் தஞ்ச வழக்கு, உணவு விடுதியில் வேலை என்று காலம் நாலு கால் பாய்ச்சலில் தாவியது. நிமிர்ந்து பார்த்தால் நான்கு வருடங்கள் போனதே தெரியவில்லை.
அவனோடு வந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்யாணத்திற்கென்று பெண்களை அழைக்கத் தொடங்கியிருந்தார்கள். அதே ஆபத்தான பாதைகள். சோவியத் அப்போதுதான் உடைந்திருந்தது. அதுவொரு வாய்ப்போ என்னவோ, இலங்கையிலிருந்து டெல்லிக்குச் சென்று அங்கிருந்து தரை வழியாகவே வந்தவர்களும் உண்டு. வரும் வழியில், வாயில் பெயர் கூட நுழையாத நாடுகள். அவ்வப்போது செய்திகள் வரும். போலந்தில் ஆற்றில் உறைந்து இலங்கைப் பெண் சாவு, உக்ரேனில் இரும்புக் கொள்கலன்களில் கைவிடப்பட்ட இலங்கைப் பெண்கள்.. இந்த மாதிரிச் செய்திகளில் வராத சம்பவங்களும் உண்டு. பெண்களை அழைத்த பிறகு நேரில் அழகில்லை என்று மறுத்த ஆண்கள், வழியில் சக பயணியோடு அல்லது முகவரோடு காதல் வயப்பட்ட பெண்கள்..
அற்புதத்திற்கும் கல்யாணம் கட்டவேண்டுமென்ற ஆசை அவ்வப்போது வரும். அது உண்மையில் ‘பொம்பிளை ஆசைதான்’ என்றும் அவனுக்குத் தெரியும், கொஞ்சம் முயற்சித்திருக்கலாம், வெறும் நினைப்போடேயே நிறுத்திவிட்டான். நெருக்கமான நண்பர்கள் இருந்திருந்தால் ஆளும் பேருமாக நடத்தி முடித்திருப்பார்கள். யாருமே இல்லை. எந்த இயக்கத்தில் இருந்தவன் என்பது தெரிய வந்தால் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தயக்கத்திலேயே ஒதுங்கி இருந்து பழகிவிட்டான். முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. அப்படி ஒன்றும் பெரிய வயது இல்லைத்தான், என்றாலும் ஒன்றாக வேலை செய்கிற ஓர் இத்தாலிக்காரன் மனதைக் குழப்பிவிட்டான். “மூன்று வேளையும் பசிக்கும்தான், அதுக்காக இந்த உணவு விடுதியை விலைக்கு வாங்குவியா?” என்று அவன் அடிக்கடி கேட்பான். அவன்தான் அமந்தா என்ற பிரேசில்காரியை அறிமுகம் செய்து வைத்தான். “நீ மனதால் நினைப்பதை அவள் தன் உடலால் உனக்குச் செய்து காட்டுவாள். போகிறாயா?”
அகதி முகாமில் வேலை வெட்டி இல்லாமல் இருந்த காலத்திலேயே ஆட்கள் இப்படிப் போய் வந்திருக்கிறார்கள். அரசாங்க உதவித் தொகை கையில் கிடைத்ததும் ஆளையாள் மசிந்திக்கொண்டு ஏதாவது சாட்டுச் சொல்லி வெளியேறுவார்கள். ஒருமுறை இத்தாலிக்குச் செல்லும் எல்லைக் கிராமத்தில் குப்பை மலிவாம் என்று யாரோ சொல்லக் கேட்டு வாடகைக்குக் கார் பிடித்துக்கொண்டு போனவர்கள் இரவு திரும்பி வந்து கையும் கணக்கும் சரிதான் என்று புறுபுறுத்தார்கள். அவர்களில் திருத்தலம் என்ற பெடியனுக்குத்தான் சின்ன வயது. பத்தொன்பதோ இருபது. இனியில்லை என்ற குழப்படி. அந்த முகாமில் அவன்தான் எடுபிடி. பேஸ்ட், பிரஷ், கிரீம், மீன், மரக்கறி, இறைச்சி என்று எது தேவையென்று எழுதிக்கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வருவான். யார் யாருக்கு என்ன செலவு, எவ்வளவு மிச்சக்காசு என்பதெல்லாம் கச்சிதமான கணக்கு.
ஒருநாள் மதியம்போல அங்கிருந்த ஏழு பேரிடமும் தலைக்கு நாற்பது பிராங்குகள் வாங்கிக்கொண்டு போனவன்தான், பொழுது இறங்கியும் திரும்பி வரவில்லை. இரவுச் சமையலுக்கு அவன்தான் இறைச்சியோ மீனோ கொண்டு வர வேண்டியிருந்தது. “இன்னும் திருத்தலத்தைக் காணேல்லை.” என்று அற்புதம்தான் அங்கிருந்தவர்களுக்குச் சொன்னான். யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. “எங்கயாவது அலமலாந்திக்கொண்டு நிப்பான். வந்துடுவான்.” இரவு ஒன்பது மணிக்குப் பிறகுதான் யோசிக்கத் தொடங்கினார்கள். ‘பிடிச்சுத் திருப்பி அனுப்பிட்டாங்களோ?’ ‘வேற நாட்டுக்குப் பாய்ஞ்சிட்டானோ?’ வரும் வழியில் அகன்ற ஆறு ஒன்று இருக்கிறது. தண்ணீர் சுழித்துச் சுழித்துப் பாயும். ‘தவறிக் காலை வைச்சிருப்பானோ?’ இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது, பொலிஸிற்குச் சொல்வதென்று முடிவு செய்தார்கள். அப்போது பேயறைந்த முகத்தோடு திருத்தலம் வந்தான். வெறும் கை. பேய் முழி.
“எங்கையடா போனனி? இஞ்ச நெஞ்சுக்கை தண்ணி இல்லை. இரவுக்குச் சமையலும் இல்லை. நீ சாமான் வாங்கேல்லையா?”
“கொண்டுபோன காசை கள்ளர் பறிச்சுக் கொண்டு போட்டாங்கள்.”
“கள்ளரோ?”
“ஓமண்ணை. உங்களுக்குக் ஹிட்லரைத் தெரியும்தானே. அவன்ரை ஆக்கள். நாசிகள். இப்பவும் இருக்கிறாங்கள். பகலே அடிச்சிப் பறிச்சிட்டாங்கள், நான் இப்ப வரைக்கும் அவங்களைத் தேடித் திரிஞ்சிட்டுத்தான் வாறன்.”
யாரும் பேசவில்லை. சடுதியாக ஒரு நிசப்தம். சட்டென்று ஓர் அறை திருத்தலத்தின் கன்னத்தைப் பொத்தி விழுந்தது. அவன் “ஐயோ அம்மா..” என்று சுருண்டு விழுந்தான். யாரும் கேட்காமலேயே உண்மை வந்து விழுந்தது. “நான் லாங்ஸ்ராஸாவால போய்க்கொண்டிருந்த நேரம், ஒரு அக்கா என்னைக் கூப்பிட்டுக் கதைச்சவ. பிறகு உள்ள கூட்டிக்கொண்டு போனவ. முதல் முறை எனக்குச் சரியான பயமா இருந்தது. ரெண்டாம் முறை கொஞ்சமாத்தான் பயம். மூண்டாம் முறை காசு முடிஞ்சிட்டுது.”
அவனை எல்லோருமாகச் சேர்ந்து உதையத் தொடங்கிவிட்டார்கள். அவன் அவ்வளவு பேரையும் சமாளித்துக்கொண்டு எழுந்து நின்றான். “அம்மா மேலை சத்தியமாச் சொல்லுறன். நம்புங்கோ. எனக்கு வேலை கிடைச்சதும் முதல் சம்பளத்தில உங்கள் அத்தனை பேரின்ரை காசையும் வட்டியோடை திருப்பத் தருவன். நான் கணக்கு வழக்கில கச்சிதம்.”
0
அதே ‘லாங்ஸ்ராஸா’ தெருவிலேதான் அமந்தாவின் பாலியல் விடுதி இருந்தது. ஓர் ஆள் போய் வரத்தக்க அளவுள்ள மூடிய கதவு. அற்புதம் நீண்ட நேரமாக வாசலிலேயே நின்றான். அப்பால் ஒரேயொரு காலடியில் இரவுக் கற்பனைகளின் உலகம். இடையில் கண்ணுக்குத் தெரியாத கற்சுவரைப்போல ஏதோ ஒரு தயக்கம். ‘ஒருவேளை பயப்பிடுகிறேனோ?’ ‘அவனவன் ஊரில் பெஞ்சாதி பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாளுக்கு மூன்று வேளை போய்விட்டு வருகிறான். நான் ஏன் பயப்பட வேணும்? தனிக்கட்டை.’
கதவு திறந்து ஒருத்தி வெளியே வந்தாள். அவள்தான் அமந்தா என்று அடுத்த அரை மணி நேரத்திற்குள் அற்புதத்திற்குத் தெரிந்துவிடும். அவளுக்கு அச்சு அசல் தமிழ் முகம். மாநிறம். நடு உச்சி பிரித்து வாரிய கரும் கேசம். பெருத்த உதடுகள், கூரான நாடி, ஒப்பனையற்ற கண்கள். பிரேசில்காரியாக இருக்க வேண்டும். பெருத்த மார்புகள். அவள் லாவகமாக சிகரெட்டைப் பற்ற வைத்து நிதானமாகப் புகைத்தாள். ஏதோ யோசனை வசப்பட்டவள் போன்ற முகபாவம். இரண்டொரு முறை பார்வை அற்புதத்திலும் படிந்தது. சிகரெட் துண்டை காலில் நசித்துவிட்டு உள்ளே செல்ல எத்தனித்தவள், என்ன நினைத்தாளோ திரும்பி ‘வா..’ என்று சைகை செய்தாள். அதற்காகத்தான் காத்திருந்தவன்போல, எச்சிலை விழுங்கிக்கொண்டு நுழைந்தான். அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்று உட்கார வைத்தாள்.
இருட்டுக் குகையைப்போன்ற மதுக் கூடம். அடர்த்தியான சிவப்பு, நாவல் வண்ணங்கள் மின்விளக்குகளிலிருந்து கசிந்தன. இசை. அது ஸ்பானிய இசை என்பது ஐந்தாவது தடவை இங்கு வரும்போது அவனுக்குத் தெரிந்துவிடும். தரைத் தளத்திலிருந்து பச்சை நிறத்தில் ஒளிரும் படிகள் வளைந்து ஏறின. மேலே அறைகள் இருக்க வேண்டும். மூன்றாவது முறை கோப்பைக்குள் மதுவை ஊற்றிய அமந்தா மேலே போக வேண்டுமா என்று சிரித்தாள். அற்புதம் எழுந்தான்.
ஒடுங்கிய அறைதான். ஒற்றைக் கட்டிலில் தடித்த மெத்தை. தெருவைப் பார்த்த சுவரில் ஜன்னல் திறந்திருந்தது. நீல நிறத் திரைச்சீலையை காற்று தடவித் தடவி உள்ளே தள்ளிற்று. தாராளமான வெளிச்சம். அமந்தா மெத்தையில் ஏறி உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள். இடது காலை நீட்டியும் வலது காலை மடித்தும், ஏதோ தெய்வச் சிலைபோல. அற்புதத்திற்கு வெளிச்சம் அசூசையாக இருந்திருக்க வேண்டும். மெத்தையின் விளிம்பில் கால்களை ஒடுங்கிக்கொண்டு உட்கார்ந்தான். காமத்தின் நினைவு தோன்றிய நாளிலிருந்து சேர்த்து வைத்த கற்பனைகளில் தேகம் விறைத்தது.
அமந்த மெல்லிய சோர்வுடன் மேலாடையை கழுத்தின் வழியாக உருவினாள். சிவப்பு நிறக் கச்சை. தலையைக் கவிழ்த்தான். தொண்டை காய்ந்து போயிற்று. இங்கே தண்ணிர் கிடைக்குமா? மூச்சின் பேரோசை. வேகமாக.. வேக வேகமாக.. அமந்தா மெத்தையில் முழந்தாளில் எழுந்து நின்று கை தட்டினாள். தலையை நிமிர்த்தித் திரும்பிப் பார்த்தான். கை அளையும் தூரத்தில் இரத்தமும் சதையுமான பெண்ணுடல்.. எத்தனை வயதில் தோன்றிய கற்பனை இது. அவள் சட்டென்று கைகளை மெத்தையில் ஊன்றி அற்புதத்தை நோக்கித் தவழ்ந்தாள். பார்வை கச்சைக்கு வெளியே பிதுங்கிய முக்கால்வாசி மார்புகளில் பதிந்தது. அந்த ஒரு நொடிதான். நெற்றிப் பொட்டில் துவக்குச் சுட்டதைப்போல துள்ளி எழுந்தான். காலடிகள் பின்வாங்கின. “நில்லடா..” டம்பிங் கண்ணனுடைய குரல். இனி ஓட இடமில்லை. சுவரின் மூலையைப் பார்த்தபடி கும்பிட்ட கைகளோடு ஒதுங்கினான். அவனைத் துரத்திக்கொண்டு வருகிறார்கள். எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள். தலை கீழாகக் கட்டித் தொங்க விடுவார்கள். முதுகுத் தோலைக் கீறிப் பிளந்து உப்புக் கட்டிகளையும் மிளகாய்த் தூளையும் அடைவார்கள். மண்டையைப் பிளப்பார்கள். செத்துப் போனதும், காவிச் சென்று கடற்கரை மணலில் புதைப்பார்கள். ஐயோ.. அமந்தாவும் அநியாயமாகச் சாகப்போகிறாள். அவளுடைய பிள்ளைகள் அனாதையாகப் போகிறார்கள். ‘கற்பழித்த குற்றத்திற்காக அற்புதத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.’ இங்கேதான்.. இந்தச் சுவரிலே எங்கேயோதான் அறிவித்தலை ஒட்டியிருந்தார்கள். ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஆயிரம்.. லட்சம்.. ஒவ்வொன்றாகக் கிழித்து எறிய வேண்டும். ஒன்றையும் காணவில்லையே.. சுவர் முழுக்கத் தடவினான். ஏமாற்றம். கைகள் சுவரை அறைந்தன. நொந்தது. அழுகை. விக்கி விக்கி அழுகை.
அமந்தா அவனைத் தொட்டுத் திருப்பினாள். கொஞ்ச நேரத்திற்கு தோளில் அணைத்து வைத்திருந்தாள். அவளில் புதைந்து கிடந்த அற்புதம் கேவிய குரலில் “நான் உன்னை எப்பவாவது கற்பழிச்சிருக்கிறனா?” என்று கேட்டான். அமந்தா தலையைக் கோதி விட்டாள்.
