பதுங்கு குழியும் நானும்

By சினிமா

யுத்த காலத்தில் நடந்தவையாயினும் சில சம்பவங்கள் சுவாரசியமாயும் நகைச்சுவையாயும் அமைந்து விடுகின்றன. அவ்வாறான நான் அனுபவித்த அல்லது கேட்ட சில சம்பவங்களை அடுத்தடுத்து தரமுடியும் என்று நம்புகின்றேன்

இலங்கை அரசு தன்னுடைய ஆயுத வளத்தை காலத்திற்கு காலம் நவீனப்படுத்த அப்பாவிகளாகிய பொது மக்களும் தங்களுடைய காப்புக்களை நவீனப்படுத்தி கொண்டு வந்தார்கள்.

ஆரம்பத்தில் துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் சாதாரண குண்டு வீச்சுக்களின் போது வீடுகளின் சீமெந்து சுவர்களே போதுமாயிருந்ததாம். எங்கள் வீட்டு சமையறை கட்டப்பட்ட போது பாதுகாப்பினை மனதில் வைத்தே மிகத் தடிப்பிலான சீமெந்து தட்டுக்கள் கட்டப்பட்டனவாம்.

காலம் கடந்தது. சாதாரண துப்பாக்கி சன்னமே சீமெந்து சுவரை சின்னாபின்னப்படுத்தும் அளவுக்கு அரசு நவீனமடைந்தது. இனி சுவரை நம்ப முடியாது. வீட்டுக்கொரு பதுங்கு குழி அமைக்க வேண்டும்.

வீட்டு வளவில் நின்ற இரண்டு பனை மரங்களும் தறிக்கப் பட்டன. நிலத்தை நீள் சதுர வடிவில் கிடங்காக்கி அதன் மேலே சிறு சிறு துண்டுகளாக்கப் பட்ட பனையை அடுக்கி அதன் மேல் மணல் மூடைகளை போட்டு மணல் பரவி பதுங்கு குழி தயார். தூர நின்று பார்த்தால் அண்மையில் புதைத்த சடலத்தின் சமாதி போல இருக்கும். (வேறு உதாரணமே இல்லையா)

விமானச் சத்தம் கேட்டாலோ ஷெல்லடியில் முதலாவது சத்தம் கேட்டலோ உடன் ஓடிப்போய் சிறிய வாசல் வழியாக அந்த இருட்டுக் குகைக்குள் புகுந்து விட வேண்டும். உள்ளை பாம்பு நிக்குமோ வேறேதாவது நிக்குமோ என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

ஒரு வழியாக எங்கள் வீட்டு பதுங்கு குழியும் கட்டிமுடிக்கப்பட்டாலும் இன்னும் குடிபூரல் நடத்துவதற்கான நாள் கிட்ட வில்லை. அட ஒருத்தரும் வந்து குண்டு போடவில்லை. ம்…. (ஆசையாசையாய் பார்த்திருந்த) அந்த நாளும் வந்தது. அது வரையும் கேட்டிராத விமானச் சத்தங்களோடு வனைக் கிழித்து வந்தன விமானங்கள்.

(விமானச் சத்தங்கள், துப்பாக்கிச் சத்தங்கள் இவற்றை கேட்டே அவை எந்த விதமான விமானங்கள் என்ன வகைத் துப்பாக்கிகள் என்றெல்லாம் சொல்லும் அசாத்திய திறமை எங்கடை குஞ்சு குருமன் எல்லாத்துக்கும் இருந்தது.)

இரைச்சல் காதைக் கிழிக்குது. ஒண்டில்லை. ரண்டு மூண்டு பிளேன். இண்டைக்கு எல்லாரும் சமாதி தான்

என்ரை கையை பிடிச்சுக் கொண்டு அம்மா பதுங்கு குழிப் பக்கம் ஓடுறா.. ஹே…ஹ… இண்டைக்கு எங்கடை பங்கருக்கு குடிபூரல். அதுக்கு முன்னரும் கள்ளன் பொலிஸ் விளையாடேக்கை நான் பங்கருக்குள்ளை ஒளிஞ்சிருக்கிறன் எண்டாலும் இண்டைக்குத்தான் அதிகாரபூர்வ விஜயம் எண்டு சொல்லலாமோ?

நான் அம்மா அம்மம்மா எல்லாரும் மெழுகுவர்த்தியை கொழுத்திப் போட்டு உள்ளை இருக்கிறம். சத்தம் விடேல்லை. என்ன நடக்குதே எண்டு தெரியேல்லை. ஆனால் ஒரு அதிசயம் குண்டு சத்தம் ஒண்டும் கேட்கேல்லை. ஏன் இன்னும் குண்டு போடேல்லை.

வந்தமா குண்டைப் போட்டமா என்றுவிட்டு போக வேண்டியது தானே. புலிக்கு மட்டும் தான் குண்டு போடவேணும் எண்டு அரசு ஒருக்காவும் யோசித்ததில்லையே. அது ஆடோ மாடோ சுப்பனோ சுப்பியோ ஆரிடையாவது தலையிலை தள்ளிப்போட்டு செய்தியிலை மட்டும் புலியை போட்டுத் தள்ளினன் எண்டு போடும்.

அப்ப இன்னும் ஏன் குண்டு போடவில்லை. எனக்கெண்டால் வெறுத்துப் போச்சு. மெதுவா அம்மா வெளியிலை வந்து பார்த்தா. அட மேலை பிளேன் அறம்புறமாச் சுத்துது எண்ட எந்த சிந்தனையும் இல்லாமல் சனம் றோட்டுகளிலை கூலாக ஓடித்திரியுது. இதென்ன அதிசயம். சாகத்துணிதல் எண்டிறது இதைத்தானோ

அப்ப தான் ஒரு அன்ரி வந்தா- உங்களுக்கு விசயம் தெரியுமே.. நான் றேடியோவிலை இப்ப தான் கேட்டன். இந்தியா பிளேனிலை வந்து சாப்பாடு போடுதாம். சனத்தை பயப்பிட வேண்டாமாம். எண்டு அவ சொன்னா

நான் வானத்தை ஆ வெண்டு பாத்தன். அப்ப இனி ஒவ்வொரு நாளும் சாப்பாடு போடுமோ பள்ளிக்குடத்திலை போடுறது மாதிரி

அதுக்கு பிறகு அந்த பதுங்கு குழிக்குள் நான் குண்டு வீச்சுக்காக போனதில்லை. கொஞ்ச நான் கவனிப்பாரற்று அது கிடந்தது. பிறகு அதை மூடி விட்டம். உண்மையில் அதற்கான தேவையும் இருக்க வில்லை. பதுங்கு குழி என்பது எங்கிருந்தோ வீசும் ஷெல்களிலிருந்தும் எட்ட நின்று பொழியும் குண்டுகளிலிருந்தும் மட்டும் காப்பாற்றவே.

Last modified: February 8, 2006

10 Responses to " பதுங்கு குழியும் நானும் "

  1. Anonymous says:

    If I remember right the operation was called “Operation garland”.

  2. Anonymous says:

    If I remember right the operation was called “Operation garland”.

  3. Anonymous says:

    wah?

  4. Anonymous says:

    wah?

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Balaji

    இந்த மாதிரி ஒரு அனுபவத்தை தமிழ் நாட்டு அமைதிப்புறாக்கள் அனுபவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நொடி கற்பனை பண்ணினேன் . . .

    10.4 8.2.2006

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Balaji

    இந்த மாதிரி ஒரு அனுபவத்தை தமிழ் நாட்டு அமைதிப்புறாக்கள் அனுபவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நொடி கற்பனை பண்ணினேன் . . .

    10.4 8.2.2006

  7. Anonymous says:

    இந்த மாதிரி ஒரு அனுபவத்தை தமிழ் நாட்டு அமைதிப்புறாக்கள் அனுபவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு நொடி கற்பனை பண்ணினேன் . . .

  8. Anonymous says:

    எழுதிக்கொள்வது: oliyinile

    வாசிக்க சிரிப்புதான் வருகின்றது!!! அனுபவிக்கேக்கிள்தான் தெரியும்!!!

    16.39 8.2.2006

  9. Anonymous says:

    எழுதிக்கொள்வது: அனானி

    “பூமாலை”யைப் போட்டு எத்தனை பேரின்ரை தாலியை அறுத்தாங்கள்.

    12.38 9.2.2006

  10. Haran says:

    சயந்தன்,
    கிட்டத்தட்ட இதே மாதிரியான எனது அனுபவம் சார்ந்த பதிவொன்றினை நான் அண்மையில் முன்பு நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததனை தமிழில் மொழி பெயர்த்துப் எழுதி இருந்தேன்… http://gowrykaran.blogspot.com/2007/04/blog-post.html

    மறக்க முடியாத அனுபவங்கள்…

× Close