அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி

ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம்.

அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி, அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று வாழ முற்படுகிறார்கள்.

அவர்கள் இளமையில்,கண் முன்னே கண்ட கோரத் தாக்குதல்கள். இனப் படுகொலைகள். இயக்கங்கள், அவைகளின் முரணான செயல்பாடுகள், அதன் விளைவால் அவர்கள் பெற்ற வலிகள் இவற்றைப்பற்றியும் விரவாக இப்புதினம் பேசுகிறது.

மனிதன் தப்பி ஒடிப் புதியவாழ்கை வாழ முற்படலாம். மனதைப் புதுப்பிக்க முடியாது. அது ஒவ்வொரு நொடியும் பழைய வாழ்க்கையில் நின்று நெருஞ்சி முள்ளாய்க் குத்தும். அணுஅணுவாய் கொல்லும் என்பதைக் கதை நாயகர்களின் அகதி வாழ்வின் மூலம் சொல்கிறார் சயந்தன்.

அகதிகளாக அயல்நாடு வந்து இயல்பு வாழ்க்கை வாழ முற்படும் சூழலிலும் பழைய நினைவுகளால் துரத்தப்படும் மனம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பமுடியாமல் அலக்கழிக்கும் அவலம். ஒவ்வொரு நிமிடமும் பழைய வாழ்வின் நினைவு இயல்பை வாழவிடாமல் செய்வதால் நிலைதடுமாறித் தவிக்கும் மனங்களைச் சித்திரிக்கிறது இந்நாவல்.

அபர்ணாவின் இணக்கமான அன்பு எதார்த்தத்தில் தன்னைப் புகுத்திக்கொண்டு வாழும் மனம் புதினத்திற்கான சுவையைக் கூட்டுகிறது . அவந்தி எனும் போராளியின் வாழ்வும் விறுவிறுப்பாகவும், எதிர்பார்ப்பு மிக்கதாகவும் இருக்கிறது.

போரின் சுவடு அறியாத ஒரு முகத்தைக் காணத்துடிக்கும் அருள்குமரனின் மனம் பழைய நினைவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள விழைவதைக் காட்டுகிறது.

புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடும் போது குடித்துவிட்டு போதையில் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்று பேசுவதும். பின்னர் அவரவர் வேலையில் ஈடுபடுவதையும் பகடிசெய்கிறார்.

முதல் தலைமுறையைச் சேர்ந்த அற்புதம் , அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அருள்குமரன் புலியின் இயக்கத்தைச் சேர்ந்தவர் என அறியும்போது தன்னைக் கொல்வதற்காகப் புலிகளால் அனுப்பப்பட்ட ஆளோ எனச் சந்தேகிக்கிறார். புலம்பெயர்ந்து வாழும் போதும் உயிரச்சத்துடன் வாழும் அவலத்தை இது காட்டுகிறது.

சயந்தன் புதினத்தை நகர்த்தும் பாங்கு அழகு.

நனவோடை உத்தி மிகையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எளிய, கவித்துவமான நடை அழகு. தொடக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பும் , எதிர்பார்ப்பும் சுவையும் குறையவில்லை. ஈழத்தின் இன்னொரு முகம் வெளிப்பட்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது.

சயந்தனுக்கு இதயம் நிறைந்த வாழ்த்து