ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..

ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?)

சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.

ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)

வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )

அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே 🙁 )

இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.

அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும்.

பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..

அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது 🙂

8 Comments

  1. // ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ? //

    ஆமாங்க சயந்தன்!

  2. நான் உண்மையில் ராஜராஜசோழனைப் பத்தித்தான் ஏதோ எழுதப்போறீங்கன்னு ஆசையாசையாப் படிச்சேன்.

    மொக்கை மொக்கை.

  3. பொரியல் நிபுணர் சனாங்களுக்கும், ஊருக்க்கும் பேரு மாத்தி பொழப்பு நடத்தறத விட அவரது பெயரை மாத்திட்டா வளமா வாழமுடியாதா?

    ஊரை ஏமாற்ற இப்படியும் ஆட்கள்!

  4. அந்த நிகழ்ச்சிக்குப் பெயர் ‘பாமரன் பேட்டை’.
    பெயரியல் நிபுணருடனான நிகழ்ச்சியை நானும் பார்த்தேன்.
    நீர் சும்மா மேலோட்டமாச் சொல்லிப்போட்டீர்.
    முப்பை, டெல்லி போன்றவற்றின் பெயர்மாற்றங்கள்,
    ஜோர்ஜ் புஷ்ஷின் பெயர் மாற்றம்,
    இந்தியச் சிறைகளில் இருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்னிடம் ஒப்படைக்கும்படி கூறியது,
    திருநாவுக்கரசர் மற்றும் விஜய ரி. ராஜேந்தரின் பெயர்மாற்றம்,
    2001 இல் ராஜேந்தர் மிகப்பெரிய அரசியற்றலைவராக தமிழகத்தில் வருவாரென்ற கதை,

    இப்படி நிறைய சுவாரசியமானவை அந்த நிகழ்ச்சியில இருக்கு.

    சரி, நானே தனிப்பதிவாப் போடுறன்.

  5. //முப்பை, டெல்லி போன்றவற்றின் //
    அதை மும்பை எண்டு வாசிக்க வேணும்.
    //2001 இல் ராஜேந்தர் மிகப்பெரிய அரசியற்றலைவராக //
    அதை 2011 இல் எண்டு வாசிக்க வேணும்.

  6. /அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார்/

    என்ன கொடும சார்..ஒருவேள வழக்கத்த விட அன்னிக்கு அதிகமாகி இருக்குமோ

  7. சயந்தன் அவர் சொன்னதை நம்புகிறோமோ இல்லையோ சிறீ பெயர்தான் பிரச்சனையின் அடிப்படிக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் சிலோன் ஆக இருந்த நாட்டை(அது கூட வெளிநாட்டவர் அழைத்த பெயர் என்றாலும்)தனிச்சிங்கள நாடாக சிறீலங்கா என்று பெயர் மாற்றியது இனப்பகைமை பெரிதாகவே வழிவகுத்தது

  8. //ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார்.//

    உந்தக் கேள்விக்கு நீர் தான் பதில் சொல்ல வேணும். அப்பிடியோ

Comments are closed.