இனியன்
சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு மீண்டும் சென்னை வந்த பிறகு எவ்வளவு விரைவாக முடித்திட வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடித்திட வேண்டும் என்கிற முனைப்பில் துவங்கினால் சில பக்கங்களைக் கடந்திட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு அழுதும் அமைதியாய் இருந்தும் உணர்வுகளைக் கடந்து மெதுமெதுவாய் இருதினங்களுக்கு முந்தைய நள்ளிரவில் முழுவதுமாக முடித்தேன் அந்த 664 பக்க நாவலை.
ஏற்கனவே பலமுறை பலயிடங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “2௦ம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர்கள் சார்ந்த இலக்கியங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் விட மிஞ்சி நிற்கப் போவது 21ம் நூற்றாண்டில் படைக்கப்பட்டுக் கொடிருக்கக் கூடிய ஈழத்து இலக்கியங்கள் தான். அதுவும் முதல் 3௦ வருடங்கள் மட்டுமே. அதன் பிறகு வரிசையில் ஈராக், சிரியா, ரோஹிங்கியா என வரிசையில் காத்துக் கிடக்கின்றன.” அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து இலக்கிய வரிசையில் முக்கிய இடம் பிடித்திருப்பது சயந்தனின் ஆதிரை.
1977 நிகழ்த்தப்பட்ட இனகலவரத்தில் பாதிப்புகுள்ளானக் குடும்பம் ஒன்று ஈழத்தில் புலம் பெயர்வதில் துவங்குகிற கதைகளம். 2009 இன அழிப்பைக் கடந்து 2015 மக்களின் பன்பாட்டு அடையாள அழிப்பு என்கிற பெருந்துயர்மிகுப் பயணத்தில் வந்து முடிகிறது.
முப்பது ஆண்டுகால இப்பெரும் பயணத்தில் ஒரு நிலபரப்பின் பன்முகத்தன்மை, இயற்கை வளம், காடு, கடல், மக்களின் இனவேற்றுமை, சாதிய ஒடுக்குதல்கள், வர்க்க முரண்கள், இனக்கலவரங்கள், போராட்டம், போராட்ட வாழ்வியலின் உள்முரண்கள், சிதைவுகள், நம்பிக்கைகள் துரோகங்கள், வலிகள், விமர்சனங்கள், வதைமுகாம்கள், அடையாள அழிப்பு எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறது புத்தகம்.
சமகால ஈழத்துப் படைப்புகள் வாசிக்கிற போது புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாடு அல்லது எதிர் நிலைப்பாடு என்கிற அரசியல் புள்ளிகளில் இருந்து மட்டுமே எழுதப் படுகின்றன. ஆனால், ஆதிரை அவற்றிலிருந்து சற்றே மாறுபட்டு மக்களின் மனத்திலிருந்து இவையிரண்டையும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறார் சயந்தன்.
பெரும்பாலும் ஈழத்துப் படைப்புகளில் மறைக்கப்படுகிற விசையங்களாக நான் கருதுவது மக்களின் சாதிய மனோபாவம் மற்றும் மலையகத் தமிழர்களின் வாழ்வியல் என நினைக்கிறன். சிங்களவ இனவாதிகளுக்கோ அல்லது இனவாத அரசாங்கத்திற்கோ ஈழத்தமிழர் மற்றும் மலையகத் தமிழர் என்கிற பாகுபாடெல்லாம் இல்லை மொத்தமாகத் தமிழர் என்றால் தாக்குதல் தான் என்பதைச் சொல்கின்ற அதே வேளையில் ஈழம் மற்றும் மலையகத் தமிழர்களிடையிலான முரண்களையும் சாதிய வேற்றுமைகளையும் மிக நுணுக்கமாகக் கையாளப் பட்டுள்ளத்தாகவே தோன்றுகிறது. கதைகளமும் அதுதான் மலையகத்தில் இருந்து சிங்களத் தாக்குதலில் புலம்பெயர்ந்து ஈழம் நோக்கி வருகிற குடும்பம் ஒன்று எவ்வாறு அங்கு ஐக்கியமாகி இயக்கங்களில் இணைந்து இறுதிகட்டப் போர் மற்றும் போருக்குப் பிறகான வாழ்க்கை என்பது வரை எப்படியாக வளர்கிறது என்பதுதான்.
மலையகமும் ஈழமும் ஒன்றையொன்றுக் குறைச் சொல்லுகின்ற போக்கைதான் நண்பர்களுடனானப் பல உரையாடல்கள் மூலம் அறிமுகமாகியிருந்த எனக்கு இந்தக் கதைகளம் சற்றே வேறோருபார்வையை நோக்கித் திருப்புகிறது.
காலக்கோட்டு வரிசையில் சொல்லப்பட்டு நகர்கிறக் வரலாற்றுப் புனைவில் மக்களின் மனோநிலை மற்றும் போராட்ட வடிவங்களை 80களின் முற்பகுதியில் நடைபெற்ற கலவரங்களும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற புலம்பெயர்வுகளும், 80களின் பிற்பகுதியில் 87 செப்டம்பர் திலீபனின் மரணத்திற்குப் பிறகான எழுச்சி, இந்திய ராணுவத்தினரின் உச்சபட்ச வரையறையில்லா வன்முறை மற்றும் போர் அதனைத் தொடர்ந்தப் புலம் பெயர்வு, 90களின் மத்திய காலத்தில் நிகழ்த்தப்பட்ட போர் நிறுத்தம், 2001 முதல் 2004 காலம் வரையிலும். 2004 டிசம்பர் 26 ஆழிப்பேரலைக்குப் பிறகு துவங்கி 2009 இன அழிப்பு வரையிலான காலங்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கிற வகையில் மிகத் துல்லியமாக நிலவமைப்பு மற்றும் மக்களின் உரையாடல் மூலம் கையாளப் பட்டிருக்கிறது.
செப்டம்பர் 11. 2001 அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் தீவிரவாதம் ஒழிப்பு என்ற பிரகடனுத்துடன் மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் அனைத்தும் கரம் கோர்த்து ஆயுதம் தாங்கிய அமைப்புகள் அனைத்தையும் வேட்டையாடத் துவங்கிய நிலையில். பல நாடுகளில் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களையும் தீவிரவாதம் என்கிற பெயரில் அழித்தொழிப்புச் செய்து மறைமுக நில ஆக்கிரமிப்புக்கான வேலைகளைத் துவங்குகின்றன அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள். அதன் ஒரு பகுதிதான் புலிகள் இயக்க அழிப்பும் துவங்குகிறது. இருதரப்பிலும் சம அளவிலான வீரியம் கொண்ட ஆயுதங்கள் பயன்படுத்தபட்டபோது, மக்கள் கொல்லப்படுதல் என்பது எண்ணியளவில் குறைவாகத்தான் இருக்கிறது. போரும் இருபிரிவினரிடமும் மாற்றிமாற்றி இருபக்கமும் வெற்றி தோல்வி அடிப்படையில் மட்டுமே இருந்து வந்திருகிறது. ஆனால் தீவிரவாத அழிப்பு என்கிற பெயரில் அரசாங்கத்திடம் ஆயுத பலம் அதிகரிக்கப்பட்டு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தபடுகின்றனவோ அன்றுமுதல் திட்டமிடப்பட்ட இன அழிப்புத் துவங்கியிருகிறது. மேலும் தெற்காசிய நாடுகளின் கடற்பரப்புகள் சுனாமிக்குப் பிறகானக் காலகட்டங்களில் மிகப்பெரிய கவனம் பெறப்பட்டுச் சர்வதேசச் சந்தை ஆக்கிரமிப்புகள் அரங்கேறிடத் தேவையாக அமைகிறது ஈழ இன அழிப்பு. இது போன்ற நுண்ணரசியலை மிக லாவகமாகக் கையாளப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
உலகளவில் எந்தவொரு சித்தாந்தங்களும் இயக்கங்களும் விமர்சனத்துக்கு உட்பட்டவைதான். காலப்போக்கில் ஏற்றுகொண்டவர்களாலே விமர்சிக்கப்படுபவைதான் அதன் மூலம் திருத்தங்களும் ஏற்படக்கூடியவைதான். அதேபோல்தான் புலிகள் பற்றிய விமர்சனங்களை ஆங்காங்கே சில இடங்களில் உரையாடல்களின் மூலம் தெரியப் படுத்திகொண்டிருந்தாலும் இன அழிப்பு மற்றும் போரின் இறுதி நிமிடங்களில் மக்களின் மனோநிலையிலிருந்து நடத்தப்படுகின்ற உரையாடல்கள் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
அரசியல் பொதுவாழ்வில் ஈட்டுபட்டிருப்பவர்கள் செய்கின்ற சுயநலம் சார்ந்தோ அல்லது நிகழ்காலத்தில் எடுக்கப்படுகின்ற குழப்பமான முடிவுகளால் வரலாற்றில் நீங்காத பழிக்கு ஆளாகின்றார்கள். இன அழிப்பு விவகாரத்தில் கலைஞரின் நிலை அதுதான். சர்வதேச அளவிற்குச் சென்றுவிட்ட இனஅழிப்பினையும் இறுதிகட்டப் போரையும் நிறுத்தக்கூடிய அத்துனை அதிகாரமும் கலைஞரிடம் மட்டுமே இருப்பது போன்ற பிம்பம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதையும், போருக்கு பாசிச அரசாங்கத்துக்கு உதவிகள் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கம் மக்களைக் காக்கும் என மக்கள் நம்பிக்கொண்டிருந்ததைப் பதிவு செய்திருப்பது அறியாமைப் பொதுமக்களின் இறுதி எதிர்பார்ப்புக்கள் இவை தவிர வேறெதுவும் இல்லை என்பதாக இருந்திருகிறது என்பதைத் தெளிவு படுத்தியிருக்கிறார். அந்த எதிர்பார்ப்பின் ஏமாற்றம் இன்றைய வரைக்கும் உணர்வாளர்களால் கட்டமைக்கபட்டுக் கொண்டிருகிறது.
இனஅழிப்புக்குப் பிறகானக் கொடூர வதைமுகாம் பற்றிய கதைகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுக் கொண்டேயிருப்பதைப் போல்தான் இங்கும் சொல்லப்பட்டுள்ளன. வதைமுகாம் வாழ்விற்குப் பிறகானக் குடியமர்த்தப் பணிகளில் உள்ள NGOகள், பன்னாட்டுக் கம்பெனி நிறுவனங்களின் வாயிலாக ஒரு நிலவமைப்பின் வாழ்வியல் முறைகள் எவ்வாரெல்லாம் தன்மையிழப்புச் செயப்படுகின்றன. அவற்றையெல்லாம் விட இயக்ககங்களில் இருந்தவர்களது வாழ்வும் குடும்பமும் எப்படியெல்லாம் ஒடுக்கப்படுகின்றன என்பதையும். இலங்கை சிங்கள பாசிச அரசாங்கத்தால் கைதியாக்கப்பட்டுத் தொலைந்து போன மக்களின் உறவுகளின் சமகாலத் தொடர் போராட்டங்களை அரசாங்கமும் ஊடகங்களும் எவ்வாரெல்லாம் இருட்டடிப்புச் செய்கின்றன என்பது வரை இறுதிப் பக்கம் வரை ஒரு நிலப்பரப்பின் முப்பதாண்டுகால வரலாற்றினைச் சொல்லிச் சென்றிருக்கிறார் சயந்தன்.
புத்தகம் படித்து முடித்து எழுத்தாளர் சயந்தனிடம் பேசிய போது மூன்றாண்டுகள் தொடர் பயணங்கள் மேற்கொண்டு தகவல்கள் சேகரித்து எழுதியதாகக் குறிபிட்டார் எழுத்தாளர் சயந்தன். அவரது உழைப்புக்கான மிகப்பெரிய பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்து நிலபரப்பு மற்றும் வரலாறுகளை முற்றிலும் இல்லாவிடிலும் ஓரளவு அரசியல் புரிதலுடன் தெரிந்து கொள்ள நிச்சயம் “ஆதிரை” மிகப்பெரிய ஆவணமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.