ஹரி ராசலெட்சுமி

என்னதான் புதிய கதாபாத்திரங்களாக இருந்தாலும், அதே ஆண்-பெண் வார்ப்பு. சந்திரா-அத்தாரிடம் பேச்சுக் குறித்து இருந்த அதே பிரச்சனை சாரகனுக்கும் உண்டு. “நீட்டி முழக்கிக் கதைக்கத் தெரியாது. நினைக்கிறதையெல்லாம் வெளிப்படையாய் சொல்லத் தெரியேல்லை“ என்கிறான். நாடகீயத்தனமான சொற்களை சொல்லித் தீர்ப்பது அவனுக்கு சங்கடமாயிருக்கிறது (432). எதிர்பார்க்கக் கூடிய மாதிரியே, சாரகன் ஆண், ஏ/எல்-இல் வர்த்தகப் பிரிவு. நாமகள் பெண், ஏ/எல்-இல் கலைப் பிரிவு. இன்னொரு காதல்சோடியான ஸ்ரீஸ்கந்தராஜா-மலரை எடுத்துக்கொண்டால், அவர் டொக்டர், இவா நர்ஸ். அவர் நகரம்+பண்பாளர், இவா காடு+சாகசக்காரி.

கதையில் பிறக்கிற எல்லா ஆண்குழந்தைகளும் தப்பாமல் தகப்பன்மாரை உரித்து வைத்துப் பிறக்கிறார்கள். பெண் குழந்தைகள் அம்மாக்களை மாதிரி. பால்நிலையைத் தவிர எல்லாக் கதாபாத்திரங்களுமே ஒன்றையொன்று பதிலீடுசெய்யக்கூடிய வார்ப்புருக்கள். சாதியைப் பற்றிய பேச்சை, அத்தாரோ சாரகனோ அனுமதிப்பதில்லை என்பதால் அதைக் குறித்தும் எதுவும் சொல்வதற்கில்லை. முஸ்லிம்கள் என்று எடுத்துச் சொல்வதற்கு யாரும் இல்லை. ஒரு இடத்தில் யாரோ ஒரு `அப்துல்காதர் அண்ணை`யின் மகன் செத்துப்போகிறான். இன்னொரு இடத்தில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றம் பற்றிய பேச்சு வருகிற போது, அத்தார் `ம்` கொட்டுகிறான். மற்றபடிக்கு சித்திரவதையாளர்களாகவும், கொலைகார ஊர்காவற்படையாகவுமே முஸ்லிம்கள் இடைக்கிடை தலைகாட்டுகிறார்கள். மலையகத் தமிழர்கள் மட்டும் தமிழ் அடையாளத்துடன் நீக்கமறக் கலந்துவிடுகிறார்கள். தொப்புள் கொடி உறவு!

ஆதிரை கட்டமைக்கிற இனத்துவ சுயம், வித்தியாச/பன்மைத்துவ அழிப்பின் பெருவெற்றியால் மாத்திரமே சாத்தியமாகக் கூடிய ஒன்று. நாவலின் இறுதிப் பக்கங்களில் சயந்தனின் எழுத்து, அவல மிகுதியையும், தமிழ்த்தேசியத்தின் பாசாங்குகள் மீதான விமர்சனத்தையும் எதிரெதிரே நிறுத்துகிறது. சராசரி விமர்சனக் `கருத்தொன்றைச்` (அது கருத்தாக அல்ல, கேள்வியாகவே முன்வைக்கப்படுகிறதென்பது வேறு விசயம்) செவிமடுக்கும் இளைஞன் வெறுப்பின் உச்சத்துக்குப் போய்விடுகிறான்: “சனங்கள் வெந்து சாகுதுகள்… இவங்கள் தங்கட கருத்துகளையும் கணக்குகளையும் கடைவிரிக்கிறாங்கள்“ என்று பொருமுகிறான். அதே மூச்சில், தான் ஒன்றும் `சின்னப்பையன்` இல்லை என்றும், புலிகளின் தவறுகளைத் தெரிந்தே அவர்கள் வெல்லவேண்டும் என்று விரும்பியதாகவும் சொல்லிவைக்கிறான். அவனால் கோர்வையாகப் பேசமுடியவில்லை. நிறுத்துகிறான். “ஆயிரமாயிரம் பொம்பிளை பிள்ளைகளும் சேர்ந்து நடத்தின விடுதலை போர்“ என்று எதையோ நிரூபிக்க முயல்கிறான். உன்மத்தத்துடன் `அந்த வீரத்துக்கும், விவேகத்துக்கும் முன்னால வெற்றி தோல்வியெல்லாம் பொருட்டே இல்லை` என்று முடிக்கிறான். (587)

சனங்கள் வெந்து சாகிற போது, சரி/பிழைகள் வேண்டாம் ஆனால் வீர விவேக உன்மத்தமெல்லாம் மட்டும் வேண்டிக்கிடக்கோ என்று கேட்பதற்கு அத்தாரோ, கூட இருப்பவர்களோ யோசிப்பதில்லை. கதை துன்பியல் அழிவின் மிகையான எடுத்துரைப்புகளை நோக்கி நகர்ந்துவிடுகிறது. ஷோபாசக்தியின் `ம்`இல் ஒரு கதாபாத்திரத்துக்கு உதடுகளை மீறித் தோல் வளருகிறது. ஆதிரையில் அத்தாரின் காதுகளை தடித்த தோல் வளர்ந்து மூடிக் கொள்கிறது. பேசவோ, கேட்கவோ தன்னிலைகள் தயாரில்லை. காட்சியும் உணர்வு மிகுதியும் என்று விதிக்கப்பட்ட நிலவரத்தின் கீழ் எதை எப்படிப் பேசுவது?

4) மறுமை அரங்கும் மற்றமையின் உடல்களும்

சனங்கள் வெந்து சாவதையும், அதுசார்ந்த கண்ணீரையும் விவரிக்கும் நாவலாக நான் ஆதிரையை வாசிக்கப் போவதில்லை.என்னைப் பொறுத்தவரை, நாவலின் அடிப்படையான தன்னிலைகள் இரண்டு: 1) தகப்பன் (/அண்ணன்) 2) வளர்பராயத்து ஆண் (மகன்) இந்த இரண்டு தன்னிலைகளுமே நினைவின் காடுள்ள மிருகங்களாகத் தம்மைக் கற்பிதம் செய்து கொள்வதை விரும்புகின்றன. நாடு பற்றிய அறிவு, காட்டின் அனுபவத்திலிருந்தே பிறக்கிறது. பெண்கள், எதிரிகள் பற்றிய அறிவும் இதன்பாற்பட்ட ஒன்றே.

பெண்கள் மீது தாய்மை, கனிவு போன்ற ஒருதொகைப் பண்புகள் ஏற்றி வாசிக்கப்படுகின்றன. மலர், நாமகள், சந்திரா ஆகிய பெண் கதாபாத்திரங்களுடைய சுயாதீனமும், ஆற்றலும் அவர்தம் ஆண்களை வசீகரிப்பதாலேயே எடுத்துரைப்பில் வந்துபோகிறது. மலர்-இன் சுயாதீனம், `சாகசக்காரித்தனம்` எல்லாம் விவரணைக்குள்ளாகிறதென்றால், அதற்குக் காரணம் ஸ்ரீஸ்கந்தராஜா அதை ரசிப்பதால் (அதன்வழி அங்கீகரிப்பதால்) மட்டும்தான். ஆனால், ஆண்களுடைய வல்லபமோ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வர்ணனைக்குள்ளாகிறது. மனிதாபிமானம் தவிர்ந்த `தீவிரமான` அரசியல் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பவர்களும், அதுசார்ந்து முறுக்கிக் கொள்கிறவர்களும் ஆண்கள் தான். ஆண் போராளிகள் தான் பிள்ளையைத் தரும்படி கேட்கிறார்கள், தராவிட்டால் கன்னத்தில் அறைகிறார்கள். பெண் போராளிகளோ எதிரியை அழித்துவிடும் வல்லமை கொண்டிருந்தாலும், உடலங்களைப் பத்திரமாகப் புதைக்கிறார்கள், ஆறுதல் சொல்கிறார்கள், மருந்திடுகிறார்கள், காதலிக்கிறார்கள், இந்த ஆண்களைக் கனிவோடு பார்த்துக் கொள்கிறார்கள். `நாங்கள் சைக்கோ ஆகிவிடவில்லை` என்று கண்ணீருடன் உறுதிசெய்கிறார்கள். ஆங்காங்கே படிமீறுகிற ஒருசில பெண்கள் வேறு தப்பாமல் குடும்பத்துக்குத் திரும்பி வந்து விடுகிறார்கள்.

தந்தை/தனயன் ஆண் தன்னிலைகள் இரண்டுமே 2009உடன் முடிந்துபோய் விடுகிறார்கள். பெண்களும், ஊனமுற்ற வறிய ஆண்களும் அவர்தம் குழந்தைகளும் உயிர்பிழைத்திருக்கிறார்கள். `எங்கள் வாழ்க்கையை நாங்கள்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்` என்று உறுதி கொள்கிறாள் மலர். வெள்ளையனை வறுமையும் ,வடுவும் (உடலும் உள்ளமும்) பிய்த்துத் தின்கின்றன. நிலவரம் இப்படியிருக்க, நம்பிக்கைக்காக வளர்பிராயத்து ஆணிடமே திரும்பப் போய் நிற்க முடியாது, கூடாது என்று நல்லவேளை சயந்தனுக்கு உறைத்திருக்கிறது. ஆக, நாவல் முடியும் பக்கங்களில் சிவராசன் கண்டெடுக்கும் உடல் பெண் போராளியினுடையதாக இருக்கிறது. அந்த உடல் `ஆதிரை`யினுடையது.

நாவலின் இறுதி அத்தியாயத்துக்கு வருகிறோம். `அணங்குகள் ஆயிரம்` என்கிறது தலைப்பு. எழுத்துருவால் வேறுபடுத்தப்பட்ட பின்னிணைப்பாகத் தோற்றமளிக்கும் இந்தப் பக்கங்களில் ஆதிரையை உயிருடன் முதல் முதலாகச் சந்திக்கிறோம். இயக்கப் பெயர் ஆதிரை. சிவனின் ஜென்ம நட்சத்திரத்தின் பெயர். பிறந்த இடம் யாழ்ப்பாணம் இல்லை, அம்பாறை. இயற்பெயர் ஜோன் தமிழரசி. பிரான்ஸில் புரட்சிக்காரியின் பெயர். மதம் சைவம் இல்லை, வேதம். ஆதிரையின் அப்பாவை முஸ்லிம் ஊர்காவற்படையினர் காட்டுக்குள் இழுத்துச் சென்று வெட்டி எரித்திருக்கிறார்கள். லெட்சுமணனுக்குப் பிறப்பிடம் மலையகம். வளர்ந்தது தலித் கையில். அவனது அப்பாவை சிங்களவர்கள் கொன்றார்கள். பக்.301இல் அநாதரவாகக் கிடத்தப்பட்டிருக்கிற உடலம் பிட்டமாதுறுவவைச் சேர்ந்த வீரய்யா கருணாநிதியினுடையதாக இருக்கிறது.

மற்றமைகளைச் சரியான சரிவிகிதம் பார்த்துக் கலந்து, இழப்புக்குப் பாத்திரமான உடல்களில் ஆவியாக ஏற்றி விடுவதன் மூலம் – கொலையுண்ட தமிழ்த்தேசிய உடல் பற்றிய இன்னொரு வரலாற்று நினைவை, அதன் வழியாக இன்னொரு மறுமையை ஊகிக்க முடியுமா என்று முயன்று பார்க்கிறது `ஆதிரை`. நாவலுடைய கரிசனை மக்களோ, அவர்களது இழப்புகளோ, சிங்கள அரசின் வன்முறையோ அல்ல. நாவலுடைய கரிசனை அடிப்படையில் தேசிய உருவாக்கம் பற்றியது. பெண்கள், தலித்துகள், மலையகத் தமிழர்களை தமிழ்த் தேசியத்துக்குள் இடப்படுத்துவது எப்படி சிந்திக்கிறது ஆதிரை. முஸ்லிம்கள் சாவகாசமாக விலக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியத்தின் யாழ்ப்பாண-மையவாதத்திலிருந்து விலகிய சேர்ந்த ஜோன் தமிழரசியின் உடல், சயந்தன் காணவிரும்புகிற hybridityயின் பண்புடலம். பெண்மை, கிறிஸ்தவம், ஃப்ரெஞ்சுப் புரட்சியின் பிம்பச் செல்வாக்கு என்று `பிறம்பான` `நல்ல` விடயங்களைச் சுமக்கும் இந்த உடலும், அந்த உடல் சந்திக்கும் அவலமும் தேசிய புத்துயிர்ப்புக்கான கச்சாப் பொருட்கள். பெண்மை உறுதி செய்கிற உயிர்மை (organic vitality) லெட்சுமணனை விட, ஆதிரையைப் பெறுமதியுள்ள சடலமாக (`விதையுடலாக`) மாற்றிப்போடுகிறது. சுருங்கக் கூறினால், இழவு அரசியல்.