சந்திரா நிலவுடமையையும், அதன் வெளியாக்கங்களையும் காட்டி `யார்தான் தமிழர்` எண்டு கேட்டால்,
“சிங்கள ஆமி சாதி பார்த்தே அடிக்குது? ஒருவேளை அவன்ர கையில நான் அகப்பட்டிருந்தால் நானும் தமிழன் தானே? அடக்குமுறையின்ர வலி தெரிஞ்சவனுக்கு எல்லா அடக்குமுறையும் ஒண்டுதான். உன்னைவிட எனக்கு அடக்குமுறையின்ர வலி தெரியும்.“ என்கிறான்.
பிறகும் சந்திரா சொற்களை `மலைபோல குவிக்கிற` போது, அவன் அதற்குள் `நசுங்குகிறானே` தவிர – தனது சாய்வுகளை பரிசீலிப்பதோ, அல்லது அவளை எதிர்ப்பதோ கிடையாது. ஆண்மை, பெண்மை, சாதிப்புத்தி என்று பழகிப்போன குணச்சித்திரங்களில் வார்க்கப்பட்ட பாத்திரங்கள்.
தன்னுடைய சாதி நிலையை சாக்குக்கு இழுப்பது அத்தாருக்கு வாய்ப்பாடமாகிவிடுகிறது. கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம், தன்னுடைய சாதியை இழுத்துக்கொண்டுபோய் தமிழ்த்தேசியப்போராட்டத்தின் பின்னால் கொண்டு சென்று நிறுத்துவதுதான் அத்தார் கதாபாத்திரத்தின் ஒரே நோக்கமோ என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. அரசாங்கம் இலவச பாடநூல்களும், சீருடையும் வழங்குவதைப் பற்றி அத்தாருடைய அபிப்பிராயம் இப்படியாயிருக்கிறது:
“அரசாங்கம் படிப்பைத்தருகுது, அரசாங்கம் நிவாரணம் தருகுது, அரசாங்கம் தானே றோட்டுப்போடுது அதனால அரசாங்கத்தோட சண்டைபிடிக்கலாமோ எண்டு சில மொக்குக் கூட்டம் கேக்குது. கூலிக்கு வேலை செய்ய வந்தவன் சம்பளத்தைக் கேட்டால் உனக்கு ரண்டுவேளைச் சோறும் போட்ட பிறகு நீ கூலியும் கேக்கிறியோ எண்டு திட்டுகிற சாதித் திமிர் பிடிச்ச ஆக்கள்தான் அப்பிடிச் சொல்லுவினம்…“ (299)
வெள்ளாள மேலாதிக்கத்தின் மீதான அத்தாரின் கோபம் அடிக்கடி சந்திராவின் அப்பாவைக் கோபப்படுவதற்கும், அதன்வழியாக சந்திராவின் புலியெதிர்ப்பைக் காலிசெய்வதற்குமே பயன்படுகிறது. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இழப்பை அரசியலாக்க முனையும் அத்தார், சாதி தொடர்பான இழப்புகளை மாத்திரம் `தனிப்பட்டது` என்ற எல்லையைத் தாண்ட அனுமதிப்பதில்லை. சாதியம் தொடர்பாக வரும் உரையாடல்கள் எல்லாமே ஏதோ கத்தியின் மேலே நடக்கும் கவனத்துடன் எழுதப்பட்டிருக்கின்றன. அத்தாருடைய சாதி-சார்ந்த தன்னிலை அடிக்கடி பின்வாங்குகிறது. “சனங்கள் தாங்களாகவே உணரவேணும்“ என்று ஓரிடத்தில் சொல்கிறான். `வெள்ளாளக் குணம்தான் இப்படி யோசிக்கும்` என்று சட்டென்று சொல்லிவிட்டு, அப்படிச் சொல்லியிருக்கவேண்டாமோ யோசிக்கிறான். `ஆழ்ந்த உரையாடலுக்கு [சனம்] தயாரில்லை என்று முடிவெடுக்கிறான்.
அத்தாருடைய இயக்கச்சார்புக் கன்னையை, சந்திராவினுடைய ஐயப்பாடுகளுக்கு எதிராக எடுத்துநிறுத்த ஒருதொகைக் கதாபாத்திரங்கள் வந்துபோகின்றன. சந்திராவை நோக்கி மலர் சொல்கிறாள்: `அக்கா, உனக்கு அவங்களில் பிழை சொல்வதே வேலையாகிப் போய்விட்டது` பிழைவிடாதவள் யாரக்கா? நானும்தான் பிழைவிட்டேன்!` தனிப்பட்ட கதை தேசிய அறத்துக்கான கருத்துருவமாக மாற முனைகிறது. சந்திரா சளைத்தவள் அல்ல. `தனிமனிதப் பிழைகள் தனிமனிதரோடேயே போய்விடும், ஆனால் இயக்கம் விடுகிற பிழை பாரதூரமான சமூக விளைவுகளை ஏற்படுத்தும்` என்கிறாள். ஆனால், இந்த நியாயத்தைச் சட்டை செய்யாமல் மலர், தன் `பாதிக்கப்பட்ட` கதையை விலாவாரியாகச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறாள். `நான் இந்தளவுக்குப் பிழை விட்டிருக்கிறேன். நீயும் பிழைவிடக் கூடியவள். எங்களுக்குப் பிழை சொல்லும் அருகதை இல்லை` என்கிறாள். ஒருபக்கம் அத்தாரின் இறுக்கம், மறுபக்கம் இதர பெண்களின் கண்ணீர் மிகுதி என்று இரண்டிலுமே சந்திராவின் தரப்பு மேலோங்க வழியில்லை. புலிகளை விமர்சிக்கும் அருகதை தனிமனிதர்களுக்கில்லை என்றாகிவிடுகிறது.
புலிகளுக்கு எதிரான பேச்சின் மூலம் வெளியேற்றப்பட்ட சங்கிலியின் தமிழ்த்தன்மையைச் சீர் செய்யும் விதமாக அவனது மகன் வெள்ளையனை நாம் சந்திக்கிறோம். பதின்மூன்று வயதை மீறிய வளர்ச்சி. சங்கிலியை உரித்துப் படைத்தமாதிரியே நடை பாவனைகள் (291, 300). ஆனால், சாய்வோ புலிகளின் பக்கம். லட்சுமணனைப் போலவே, வெள்ளையனுக்கும் காடுகள், மிருகங்கள் பற்றித்தான் ஆர்வமும் விசாரணையும். `மதம்பிடித்த யானை கூட்டத்திலிருந்து ஏன் விலகிற்று` என்று நாள் பூராக யோசிக்கிறான் (309). வெள்ளையன் இயக்கத்தின் தன்னை இணைத்துக் கொண்டுவிடுகிறான். தகப்பன் சிங்கமலையின் தலை துண்டிக்கப்பட்ட முண்டத்தை லெட்சுமணன் காண நேர்கிறது. அத்தார் ஆறுதல் சொல்கிறான், ஆனால் அது போதுமாயில்லை. இதையடுத்து லெட்சுமணனும் இயக்கத்தில் இணைந்து கொண்டு விடுகிறான். துன்பியல் வர்ணனையை மீறி தகப்பன்/தலை, வெளியேற்றம்/துண்டிப்பு போன்றவற்றின் உளவியல் குறியீட்டு மிகுதியைக் கவனிக்க முடிகிறது.
நாவலில் வருகிற எல்லா ஆண்களுமே மிருகங்களை அடிக்கடி நினைத்துக்கொள்வது சர்வ சாதாரணம். அதுவும் பெண்கள் என்று வருகிற போது, இயற்கை/காடு/நீர்/மிருகம் சார்ந்த உவமைகள் தாராளமாக வந்துபோகின்றன. பெண்ணுடலை இரசிக்க வல்ல குரங்காக இருந்திருக்கலாம் என்று ஒரு கதாபாத்திரம் அங்கலாய்க்கிறது (பக்.254). நாவலின் ஆண்கள் காடு-நாடு, மனம்-உடல், மிருகம்-மனிதன் என்று பல்வேறு நிலைகளுக்கும் பெறுவழி கொண்டவர்களாயிருக்கிறார்கள். பெண்கள், அன்றாடத்தின் மிகுதிக்குள்ளும், உணர்வின் மிகுதிக்குள்ளும் அமிழ்ந்துபோய்விடுகிறார்கள். சங்கிலி `ஒரு இலக்கை வைத்து` நகர்பவன் என்பதை மகன் வெள்ளையன் பின்னாளில் நினைவுகூர்கிறான். அன்றாட விடியற்காலையின் பரபரப்பு சங்கிலியை ஒன்றும் செய்வதில்லை:
“அம்மா குசினிக்குள்ளை விறகுகளை இழுத்து விழுத்தாமல் அடுப்பு மூட்டுறதில்லை. ராணி அக்கா காரணமேயில்லாமல் கத்துவாள். தங்கச்சி திண்ணையில குந்தியிருந்து கறகறவெண்டு குப்பையை வறுகிறது போல தலையை வறுகுவாள். ஆனால், அய்யா இன்னுமொரு உலகத்துக்குள்ள எப்படியோ போயிருப்பார்“ (457).
லெட்சுமணனின் பதின்மம் தொலைந்ததை ஈடுகட்ட சாரகன் என்றொரு புதிய பாத்திரமும், அதற்கு பக்கவாத்தியமாக நாமகள் என்று இன்னொரு கதாபாத்திரமும் வருகிறார்கள். அத்தார்-சங்கிலியின் காடு-நாடு பிளவு இங்கே கிராமம்-நகரமாகக் கூர்ப்படைகிறது. லெட்சுமணனைப் போலவே சாரகனுக்கும் இயற்கைதான் கிளர்ச்சிக்கான கச்சாப்பொருள். சாரகன் கவிதை எழுதுகிறான். நாமகள் `தூர இடத்திலிருந்து வந்த என் ராஜகுமாரனுக்கு` என்று கடிதமெழுதுகிறாள். தேசியத்தைக் கற்றுத்தர அத்தார் தேவையில்லை. இப்போது தமிழ்த்தேசியம் ஒரு discernible apparatusஆகப் பரவலாகியிருக்கிறது. `இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி` என்ற பிரபாகரனின் வாசகத்தின் முன் சாரகனும் நாமகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய காதல் ஒருமிப்புக் கூட போராட்டம் பற்றிய செய்திக் குறிப்பில் தான் நிகழ்கிறது:
[சாரகன்] எதேச்சையாகக் கொப்பியை மூடினான். ஈழநாதம் பேப்பரில் உறைபோட்டிருந்தாள். கிளிநொச்சிச் சண்டையைப் பற்றிய பழைய செய்தி. … அச்செய்தியில் நாமகள் ஆங்காங்கே தனி எழுத்துக்களைச் சுற்றி வட்டங்கள் இட்டிருந்தாள். ஒரு குறுகுறுப்புச் சூழ கூர்ந்து பார்த்தான். … திரும்பத் திரும்ப எல்லா எழுத்துக்களையும் சேர்த்தான்… சாரகன்..நாமகள். (399-400)