ஹரி ராசலெட்சுமி

சங்கிலி அசல் காட்டுக்காரன். முப்பாட்டனுக்கு முப்பாட்டன் வாழ்ந்த காட்டிலேயே பிறந்திருந்தும் கூட, தன் பிறப்பைத் தற்செயலாக உணர்ந்துகொள்கிறான். நிலவுடமை சார்ந்த காணிப்பிரிப்பில் சங்கிலிக்கு நம்பிக்கையில்லை. அவனைப் பொறுத்தவரை காடு எல்லாரையும் வரவேற்று வாழவைக்கிறது. ‘துவக்கைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் யாரும் வரவேண்டாம்’ என்கிறான். இதற்கு மாறாக அத்தார், ’இயக்கர் நாகரென்று தமிழ் மூதாதைகள் வாழ்ந்த நிலம் இது, அந்த வாழ்வின் எச்சங்களை இந்தக்காடு மூடிப்பாதுகாத்து வைத்திருக்கிறது’ என்று சொல்கிறான். நிலத்துக்கெண்டு அடையாளம், மொழி, பண்பாடெல்லாம் இருக்கு. அதை மாத்த விடேலாது என்று உறுதியாகச் சொல்கிறான். இதைச் சவால்விடும் நோக்கில் சங்கிலி, அத்தாரின் சொந்த வாழ்சரிதத்தைச் சுட்டுகிறான்: ‘நீ யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து, தோட்டம் செய்கிறேன் என்று காடழித்தாயே, அது எப்படி? இதோ இந்த லட்சுமணன், மலையகத்திலிருந்து வந்து இங்கு வாழ்கிறானே அது எப்படி?` என்று கேட்கிறான். அத்தார் கொள்கையளவில் நிலம் எல்லோருக்குமானது (முன்னாள் கம்யூனிஸ்ட்!) என்பதை ஒத்துக் கொண்டாலும் ‘இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் ஒருத்தனைத் துரத்தி, இன்னொருத்தன் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது’ என்று ’இறுதிச் சொற்களை அழுத்தமாக முடிக்கிறான்”.

இந்த `இறுதி அழுத்தத்துக்குப்` பிறகு, நாவல் உரையாடலை வளர அனுமதிப்பதில்லை. அதற்கு வேறு சோலிகள் (வாசிக்க – தேசிய உணர்ச்சியை கட்டி எழுப்புவதை நிர்வகித்தாக வேண்டும்). ‘அவ்வளவு யோசிக்கிற பக்குவம் எனக்கு இல்லை என்றே வைச்சுக்கொள்’ என்று சங்கிலி கதாபாத்திரம் பின்வாங்குகிறது. `நேரம் சுணங்குகிறது புறப்படலாம்` என்று சொல்கிறது. இதையெல்லாம் அமைதியாய் செவிமடுத்துக்கொண்டிருக்கிற லெட்சுமணன், புறப்படுகிற போது வேட்டைத்துப்பாக்கியை கேட்டு வாங்கித் தோள்களில் கொழுவிக் கொள்கிறான். கருத்துருவங்களின் மோதலை அத்தார் அடிக்கடி ஒத்திப்போடுகிறான். இக்கருத்துருவங்களின் அறம் அத்தாரை மீறும் போது, ஏதாவது வன்முறை நடந்து, அத்தாரின் தணிக்கையின் நியாயப்பாட்டை, அதற்கான அவசரத்தேவையை உறுதி செய்துவிடுகிறது.

லட்சுமணனைச் சாட்சியாக வைத்துக் கொண்டு மிருகம், இயற்கை பற்றிய ஊடான மறைபேச்சுகள் அவிழ்கின்றன. `வேட்டையில் தர்மம்/ஒழுக்கம் எல்லாம் இருக்கிறது; அழகாகக் காதல் செய்யும் மான்களைக் கொல்ல மனம் வருவதில்லை, ஆனால் பன்றிகள் செய்யும் நாசம் தாங்கமுடிவதில்லை. அதனால் கொல்வதில் நியாயம் இருக்கிறது` என்றொரு தர்க்கத்தை முன்வைக்கிறான் சங்கிலி. அத்தார் பிரேரிக்கும் சக-மனித வன்முறையை நிராகரிக்கும் சங்கிலி, இயற்கையின் உள்ளார்ந்த வன்முறையை, அழகு, தேவை, நீதி போன்றவற்றுடன் தொடர்புறுத்துவதைக் காண்கிறோம். பன்றியை வெட்டி, பிளந்து, படையல் செய்கிறான் சங்கிலி. இந்த வகையான பலியிலும் படையலிலும் அத்தாருக்கு ஈடுபாடில்லை (அலட்சியமாக நிற்கிறான், சலிக்கிறது, கொட்டாவி வருகிறது). சமைத்த இறைச்சியைச் சாப்பிடும்போது:

“புலவுக்காரனுக்கு எத்தனை அழிவைச் செய்திருக்கும் இந்தப் பண்டி… அதின்ர ஈரலைச் சுட்டுத் திண்டால்தான் மனம் ஆறும்” சங்கிலி சிரித்துக்கொண்டு சொல்கிறான். அத்தார் அதற்காகவே காத்திருந்தவன் போல “ஓம், அழிவைக் கண்டது, காலம் பாத்து ஆறித்தானே தீரும்” என்கிறான்.

காட்டின் உள்ளார்ந்த நீதியை (சங்கிலி), நாட்டின் நீதி (அத்தார்) தன்னுடைய script-க்குள் கொண்டு வந்துவிடுகிறது. சயந்தனின் இலக்கிய டார்வினிஸம் அரசியல் பகுத்தறிவாக இதை மொழிபெயர்க்கிறது: விவரிப்பின் முடிவில் பன்றியின் குருதியை அள்ளி உடலெல்லாம் பூசுகிறான் லட்சுமணன். அவனுக்கு, கைகள் நடுங்குகிறது. சில பக்கங்கள் கழித்து இதே லெட்சுமணன் பொலீசார் ரத்தம் வழியச் சரிந்து கிடப்பதைப் போன்ற காட்சிகளை கற்பனை செய்கிறான். உற்சாகம் கொள்கிறான்.

சங்கிலியின் இயக்க எதிர்ப்பும், அத்தாருடனான அவனது முரணும் கதையின் போக்கில் இற்றுப் போய்விடுகின்றன. மயில்குஞ்சன் கிழவன் என்ற வேட்டைக்காரனின் அறிமுகம் இந்த இற்றுப்போதலை ஈடுசெய்கிறது. மயில்குஞ்சன் சங்கிலியைப் போலவே காட்டின் இன்னொரு பிரதிநிதி, ஆனால் இயக்கத்துடன் அவருக்கு எந்த முரணுமில்லை. தமிழருக்கு எதிரான கொடுமைகள் பலதின் சாட்சியாகவும் அவர் இருக்கிறார். புலிகளுடனேயே அல்லும் பகலும் கிடக்கிறார். அவர் புலியேதான்! `சிங்கமும் காட்டின் குழந்தைதானென்று` நினைவூட்டுகிற சங்கிலியின் தொல்லை ஒருவாறு ஒழிந்து விடுகிறது. `பொடியங்கள்` சங்கிலியை காட்டிலிருந்து வெளியேற்றிய அடுத்தநாளே, அத்தார் மயில்குஞ்சண்ணரைத் தேடிப்போய்விடுகிறான். இயற்கை = பெண்மை, தாய்மை அது இதென்று சொல்லித்தரும் சங்கிலியின் பாலபாடத்தை, மயில்குஞ்சண்ணர் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடுகிறார்: “ஆண்கள் தான் கூடுகட்டுவினம். ஆண்களுக்குள்ள போட்டிதான். எந்தக் கூடு பிடிச்சிருக்கோ அங்கதான் பெம்பிளைக்குருவி வாழப்போகும்“ லெட்சுமணன் ஆர்வத்தோடு செவிமடுக்கிறான்.

சங்கிலி-அத்தார் பண்புடலங்களுக்கிடையான மோதல், ஒதியமலை அபிவிருத்திச் சங்கக் கட்டிடப் படுகொலையின் பின்னான சித்தரிப்பில் ஒரு தீர்க்கமான புள்ளியை எய்துகிறது. சங்கிலியின் மூத்த அண்ணா கொலைசெய்யப்பட்டிருக்கிறார். வாய், கண், மூக்கென்று சன்னம் துளைத்துப் பிடரியால் வெளியேறி சிதைந்துபோயிருக்கிற அவரது உடலத்தை, அத்தார் முதலில் இனம்கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த உடலம், “தமிழனைத் துரத்தி வருகிற அழிவையும், பேயாட்டத்தையும்” காட்டுகிறது. சங்கிலியின் கோபமோ இராணுவத்தை நோக்கியன்றி அத்தாரையும், அவன் ஆதரவு தரும் இயக்கத்தையும் நோக்கித் திரும்புகிறது:

’`இந்தா பாருங்கோடா… எத்தினை உசிரைப் பொசுக்கிட்டுது. உன்ர நிலம் என்ர நிலமென்று இந்தக் காட்டை எரிக்க வேண்டாமென்று கதறினதை யாரும் கேட்கலயே”

அத்தார் சங்கிலியின் உலுப்பலில்’வெறும் காற்றுக்கூடு’ போல அசைகிறான். முன்னைய எடுத்துக் காட்டல்களில் வருவதைப் போலவே, லெட்சுமணன் “செய்வதறியாது பார்த்துக் கொண்டு“ நிற்கிறான். இதற்குப் பின்னால் சங்கிலி இன்னொரு வல்லியாள். விபரிப்பில் அதிகம் தென்படுவதில்லை. அத்தார்-சங்கிலி தொடர்பு அறுந்துவிடுகிறது. `இரண்டு சிநேகிதங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனை – சந்திச்சுக் கதைச்சால் சரியாய்ப் போய்விடும்’ என்று அத்தாரின் மனைவி சந்திரா சொல்கிறாள். ஆனால் சங்கிலியின் மனைவிக்கோ அந்த நம்பிக்கையில்லை; “சங்கிலி ஒரு பாறாங்கல்லைத் தனக்குள்ளே வளர்த்துக்கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறது கதை. அத்தாரிடம் என்ன வளர்கிறதென்று நாம்தான் ஊகித்துக் கொள்ள வேண்டும்.

`நூறுக்கு மேல ரெலோ பெடியங்களை புலிப் பெடியங்கள் சுட்டுட்டாங்களாம்` என்று அத்தார் கேள்விப்படுகிற பந்திக்கு அடுத்த பந்தியில் `லெட்சுமணனுக்கு இப்போது வேட்டையின் நுணுக்கங்கள் கைவரப்பெற்றிருந்தன` என்று எழுதுகிறார் சயந்தன். இலக்கிய டார்வினிஸம் அரசியல் பகுத்தறிவாய் மென்மேலும் உரப்படுகிறது. `இதைச் சந்திராவிடம் போய்ச்சொல்லி வைக்காதே` என்று தணிக்கையின் நாசூக்குகளையும் அத்தார் சொல்லிக்கொடுக்கிறான். சந்திராவோடு அத்தார் வாக்குவாதப்படுவதில்லை. பெண். அதுவும் யாழ்ப்பாண வெள்ளாள நாசூக்குள்ள பெண். சந்திரா வாயைத்திறந்தால் பெண்ணென்ற பொறுமையும், இனம்/குலம் கடந்த மனிதாபிமானமும் வசனம்வசனமாக வந்து விழுகிறது. ஆனால் அத்தாரோ, தவிர்க்க இயலாமல் ஆண். அதுவும் தலித் ஆண்! அவனுக்கு இந்த வித்தியாசமெல்லாம் அறிந்து முடிவெடுக்கிற அளவுக்கு அவகாசமோ, புத்தியோ இல்லை. அவனுக்கு புத்திசாலிகளின் புத்தியை மீறிய அனுபவப் புத்தி பொத்துக்கொண்டு வந்து விடுகிறது.

சந்திரா இரண்டு தரப்பிலும் மனித இழப்பைச் சுட்டிக்காட்டினால்,

“முதலடியை எடுத்து வைக்கிற துணிச்சலில்லாதவங்கள் எப்பவும் மற்றவங்களை குறை சொல்லிக்கொண்டிருப்பாங்கள்` என்று முணுமுணுக்கிறான். பாதிக்கப்பட்டவன் அவன். போராடத்தொடங்கும் போது பள்ளிக்கூடத்தில் பாட்த்திட்டத்தோடு தொடங்க மாட்டான். அனுபவத்தில சரியான வழியை அவன் தேர்ந்து கொள்ளிவான்.“ என்று பதில் சொல்கிறான்.