கதாபாத்திரங்களுக்கிடையே இருக்கக்கூடிய பிக்கல் பிணக்குகள், பிரதேச/வர்க்க/சாதிய/பாலின வேறுபாடுகள் பற்றிய கரிசனையின்றித் தன்பாட்டில் நகர்கிற காலத்தைப் பற்றிய உணர்வை, திகதியிடல் ஏற்படுத்திவிடுகிறது. தனியன்களை மீறிய கால உணர்வை (sense of time) நாம் ஊகித்துக் கொண்டுவிடுகிறோம். நம்மால் ஊகிக்கமுடிகிற, ஆனால் கதாபாத்திரங்கள் புரிந்துகொள்ள சிரமப்படும் இதுவே தேசத்தின் காலம். தனிப்பட்ட மனிதர்களின், பாலினங்களின், சாதிகளின், குழுக்களின் கால உணர்வு படிப்படியாக தேசிய காலத்துக்குள் உள்ளெடுக்கப்படுகிறது. சயந்தனின் கதாபாத்திரங்கள் வேறு வேறு வித்தியாசங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழர்களாக இறந்து போவதன் அடிப்படை இந்த கால-ஒருங்கிணைப்பு சார்ந்த ஒன்று. காலத்தைக் குலைத்துப்போடும் நொன் லீனியர் உத்திகள் `ஆதிரை`க்குத் தேவைப்படாதிருப்பதும் இக் கால-ஒருங்கிணைப்பின் பாற்பட்ட ஒன்றுதான். இல்லை. 1977இல் ஆரம்பித்து, 2013இல் முடிகிற மூன்றரை தசாப்தங்களை, மலையகம், வட/கிழக்கு இலங்கை, தலைநகரம் கொழும்பு, லண்டன் என்று பல்வேறு நிலப்பரப்புகளில் விநியோகித்து, இணைத்துப்போடுகிற நாவலின் கால ஒழுங்கின் கிரகிக்க முடிகிற தன்மையை சயந்தன் உறுதிசெய்தாகவேண்டியிருக்கிறது. காரண-காரியத் தொடர்பாலும், இடையறாத பரவலாக்கத்தாலும் இறுதியில் இக்கால ஒழுங்கு சகலருக்குமானதாகி விடுகின்றது. பண்பு-உடலங்கள் எல்லோரும் இப்போது தமிழர்கள்.
3/இனத்துவ தேசியத்துக்கான தன்னிலைகள்
இனத்துவ தேசியத்தின் அசாத்தியம் வன்முறையாக கற்பிக்கப்பட்ட பின்னர் குடிமைசார் தேசியத்தைத் தேர்ந்து முன்வைப்பது தமிழ் அரசியலின் தற்போதைய பொதுப் போக்காக இருக்கிறது. ஆனால், இனத்துவம் என்ற சடலத்தை, அதன் நினைவை என்ன செய்வது? கைவிடுதலும் நகரலும் அரசியலுக்குச் சாத்தியம். ஆனால், இலக்கியத்துக்கு? தவிர்க்க முடியாமல் காலில் இடறும் சடலத்தின் உடலில் இனத்துவ, குடிமைப்பண்புகளை, மானுடத்தை ஏற்றி வாசிக்க முயல்கிறது `ஆதிரை`. கழிவிரக்கம் தாங்க முடியவில்லை. போராட்டத்தையும் அதன் தார்மீகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய ஒரு ideal figureஐச் சடலத்தினின்றும் செதுக்கி எடுத்து, அதி சிறந்த இனத்துவத் தன்னிலை எதுவாக இருக்கமுடியும் என்பதை, ஒரு தொகை சாம்பிள் தன்னிலைகளை விநியோகித்து, அவற்றின் சாய்வுகளை நிர்வகிப்பதன் மூலம் நிகழ்த்திக்காட்ட `ஆதிரை` பக்கம் தோறும் முயல்கிறது.
லட்சுமணன் சிங்கமலைக்கு மலையகம் பிறப்பிடம். இயக்க உறுப்பினனாகி இப்போது பிடிபட்டிருக்கிறான். சிங்களம் பேசவருகிறது, சிங்கள உணவு உண்கிறான், சிங்களக் கிழவியின் வீட்டில் வாடகைக்கு வசிக்கிறான். `தூயதமிழ் பேசுகிற` நிலாம்தீனும், ‘நிலாம்தீனைப்போலவே ’தூயதமிழ்` பேசுகிற இன்னொருவனும், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து லட்சுமணனைச் சித்திரவதை செய்கிறார்கள். `தோட்டக்காட்டானுக்கு முல்லைத்தீவில் என்ன வேலை?` என்று இந்த முஸ்லிம்களிடம் வசவுவாங்குகிறான். `எங்கள் சனங்களின் கண்ணீர் உன்னைச் சும்மா விடாது` என முஸ்லிம் சித்திரவதையாளர்கள் கண்ணீர் விடுகிறார்கள். விசாரணையின் போது நிர்வாணமாக்கப்பட்ட “தமிழர்களின் சாமான்” எள்ளிநகையாடப்படுகிறது. லட்சுமணனை வாடகைக்கு வைத்திருந்த சிங்களக் கிழவியை, சிங்களச் சிப்பாயொருவன் துன்புறுத்துகிறான்; துரோகியென்று சிங்களத்தில் வசைகிறான்.
நாவல் கதாபாத்திரங்களாக அன்றி, கணித்து அடுக்கப்பட்ட சதுரங்க ஏற்பாடுகளாக சிங்கள, முஸ்லிம், தமிழ், மலையக அடையாளங்கள் வந்து போகும் இந்த முதலாவது அத்தியாயம் லெட்சுமணன் சிங்கமலையை அறிமுகம் செய்கிறது. `வீடற்றவனின்` (சி.வி. வேலுப்பிள்ளை) கருத்துருவக விஸ்தரிப்பாக ‘நாடற்றவன்’ என்று சயந்தன் இந்த அத்தியாயத்துக்குத் தலைப்பிடுகிறார். முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் `பாதிக்கப்பட்டோர்` அந்தஸ்து, இயக்க உறுப்பினர் வகைமாதிரி, துரோகி கதையாடல் பற்றிய பொது மனச்சித்திரங்களைக் குழப்பியடித்தபடி ஆரம்பிக்கிறது நாவல். `தோட்டக்காட்டான்` ஒருத்தன் விடுதலை இயக்கப் போராளியாயிருக்கிறான். அவன் தட்டையான `தமிழன்` அல்ல. சிங்களவருடன் அன்பு பாராட்ட வல்ல, ஆனால் வேற்றுமையின் ஆழம் அறிந்த ஒருத்தன். `எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்` என்று பிரபாகரன் மட்டும் சொல்லவில்லை. சிங்களச் சிப்பாய், சிங்களக் கிழவியை நோக்கி சொல்வதும் இதைத்தான். நீங்கள் நாவலோடு நகரவேண்டுமானால், புலிகள் இயக்கம் குறித்த அறிவுச்சூழலின் பொதுப்புத்தியை ஒத்திப் போட்டாக வேண்டும்.
முன் கதைக்கு பின்னரான நாவலின் தொடக்கம், லட்சுமணின் 7/8 வயதுக்கு எங்களை அழைத்துச் செல்கிறது. குறிப்பாக, மலையகம், 1977. லட்சுமணனும், 12 வயதான சகோதரி வல்லியாளும், அவர்களது தகப்பன் சிங்கமலையும் இனவெறித் தாக்குதலுக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்களுடைய லயம் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றது. மனைவியையும், வீட்டையும் இழந்து மலையகத்தமிழரின் உருவாய் நிற்கும் தகப்பன் சிங்கமலை, ’நாடற்ற, அப்பன் இல்லாத பேடி’யென அவமானப் படுத்தப்படுகிறான். அவனுக்கு தன் மூதாதையரின் மொழி (வடுகு) மறந்துபோய்விட்டிருக்கிறது. ஏதிலிகளாக மலையகத்தை விட்டுநீங்கி, முல்லைத்தீவு காட்டுப்புலவில் குடியேறுகிறார்கள். ’பாட்டன், பூட்டன் பூமி’ (இந்தியா) ‘அப்பன் பூமி’ (மலைத்தேசம்) இரண்டில் எதையுமே எட்டமுடியாத, லட்சுமணனின் அப்பாவித்தனத்துடன் காட்டையும் அது சார்ந்த ’தமிழ்ச்சனங்களையும்` அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். தந்தை நிலம் தவறிப் போக வன்னிக்காடு தாய் நிலமாகிவிடுகிறது. பிரஜாவுரிமையற்ற கூலித்தொழிலாளர்களின் பின்புலம், சமகாலம் பற்றியெல்லாம் நாவல் விஸ்தரிக்கப்போவதில்லை, மாறாக எரிகிற லயத்திலிருந்து சில கொள்ளிகளையும், ஒரு கருத்துருவகத்தையும், சில ஏதிலிகளையும் காவிக்கொண்டு வன்னிக்குள் வந்துவிடுகிறது.
முன்னாள் கம்யூனிஸ்ட் அத்தார், வேட்டைக்காரன் சங்கிலி என்று இரு முக்கிய பாத்திரங்களை அடுத்துச் சந்திக்கிறோம். வெள்ளாள முதலாளி ஒருத்தரின் மகளைக் (சந்திரா) காதலித்து மணம் செய்த அத்தார், யாழ்ப்பாணத்தின் சாதிய/வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பிடிக்காமல் இங்கு வந்து குடியேறியவன். சங்கிலிக்கு காடு பரம்பரைக் கொடுப்பினை. அதைவிட்டு வெளியேறியதில்லை அவன். அத்தார் நாடு, சங்கிலி காடு. இந்த இரு பாத்திரங்களும் லட்சுமணனுக்கு இடையறாது பாடமெடுக்கிறார்கள். இருவருக்குமிடையான கூட்டிணைப்பில் லட்சுமணன் சமூகவயப்படுகிறான். ஆண்மைய, தந்தைமுதல்வாத நேர்கோட்டில் மதிநுட்பம் கடத்தப்படுகிறது. “நான் பதினொண்டில அப்பூப்பனோட காட்டுக்கு இறங்கீட்டன். காடும் எனக்கொரு உலகமாகி இருவத்திரண்டு வரிசமாகுது. இன்னும் பத்து வரிசத்தில [மகன்] இறங்கிடுவான்.“ என்று சங்கிலி சொல்கிறபோது, அவன் `கண்கள் இறந்தகாலத்திலும் எதிர்காலத்திலுமாக` நுழைந்து வெளியேறுகின்றன.
இவர்களுடன் சுற்றும் பதின்மூன்று வயது லட்சுமணன் குதூகலிக்கிறான். ‘காடு பெரியது’ என்று பிரமிக்கிறான்.
மீண்டும் சங்கிலி: “காட்டை நம்பின ஒருவன் அதிட மடியில கால்வைச்சானென்டா, காடு ஒரு தாயைப் போலத்தான் அவனை அரவணைக்கும். நீ காட்டின்ர பெறாமகன். தாயைக்கண் கொண்டு பார்க்காமல் மனசாலயும் உணரலாம்.”
”காட்டின்ர பிள்ளைகளை சிங்கம் தின்னப்போகுது” அத்தார் சலித்துக்கொண்டான். மறைபொருளில் வார்த்தைகள் எரிச்சலடைந்திருந்தன.
….
”சிங்கமும் காட்டின்ர குழந்தைதான்”
“சிங்கம் இங்கின இருக்குதா?” லட்சுமணன் வியப்போடு திருப்பிக் கேட்டான்.
“சிங்கம் இல்லை. சிறுத்தையள்தான் இருக்கு.” என்றான் அத்தார். வார்த்தைகளில் ஏதோ ஒரு பெருமை.
இந்தரக உரையாடல்களைக் கேட்டுக்கொண்டு லெட்சுமணன், கைகளைப் பருந்துபோல விரித்துக்கொண்டு ‘ஊஊ’ எனச்சப்தமிட்டபடி ஓடுகிறான். காட்டின் பிரமாண்டத்துக்குள் உடல் புதுவிதமாக மாற்றமடைகிறது. பிரமையுறுகிறான். கண்களைச் சொருகி அதை ஆழ அனுபவிக்கிறான். நிலைகொள்ளாத பெருமிதம். திடீரெனப் பெரியமனிதனாகிவிட்டேன் என்று பூரிக்கிறான். காடு அவனுக்கு பெண்ணுடலையும், பெண்மையையும் நினைவூட்டுகிறது; கிறக்கம் தருகிறது. காடு = தாய்(பெண்) என்பதைப் போலவே, ’மிருகக் கூட்டங்களை வழிநடாத்துறது எப்பவுமே தாய் உயிர்தான், தாய்தான் எல்லாம்’ என்றும் அவனுக்குச் சொல்லித்தரப்படுகிறது. எப்படித்தான் வழிநடாத்தினாலும் `சிலதுகள் தனித்துப் போகும்` என்பதும் சொல்லித்தரப்படுகிறது.
லெட்சுமணனுக்கு வல்லியாள் என்றொரு சகோதரி இருக்கிறாள் என்பது தகவல். இந்தப்பக்கங்களிலோ வல்லியாள் பற்றி பெரிதாக எதையும் நாம் காண்பதில்லை. லட்சுமணனையே நாங்கள் தொடர்கிறோம். அவனை சந்திரா-அத்தார் தம்பதியினர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். வல்லியாளோ ’மலையகத்தான்’ சிங்கமலையுடன் தங்கிவிடுகிறாள். இரண்டாவது அத்தியாய முடிவில் வல்லியாள் திடுதிப்பென எட்டிபார்க்கிறாள்:
சிங்கமலை நிலத்துக்கு எல்லைகள் இட்டான். குடிசைபோட்டான். ,,, கூரை வேய்ந்தான். அடுப்புக் கட்டினான்.
அன்றிலிருந்து நான்காவது மாதத்தில் வல்லியாள் பெரியவளானாள். (பக் 38).
அத்தியாயம் சட்டென்று முடிந்து விடுகிறது.
இன்னும் இரண்டு பக்கங்கள் கழித்து, பக்.41இல் பரமக்குடியைப் பூர்வீகம் கொண்ட கணபதியைச் சந்திக்கிறோம். திடுதிப்பென்று இவனுக்கும் வல்லியாளுக்கும் அதேபக்கத்திலேயே திருமணமாகிவிடுகிறது. லெட்சுமணனுக்கு வாய்த்ததைப் போன்ற தமிழாக்கமோ, அதுசார்ந்த அரசியலுணர்வோ வல்லியாளுக்குக் கிட்டுவதில்லை. அவளின் பிள்ளைகள் வந்து அவர்கள்தான் இயக்கத்தில் இணைகிறார்கள். லெட்சுமணன் இப்படியில்லை, அவன் fast-track தமிழ்வயப்படுகிறான். சந்திராவை அம்மா என்று அழைக்கிற லெட்சுமணன், அத்தாரை அப்பா என்றழைப்பதில்லை வைத்திருக்கிறான் (இது குறித்துத் தகப்பன் சிங்கமலைக்கு ஒரு இரகசியப் புளகாங்கிதம்). தகப்பன் பூமி, தாய் நிலம் போன்ற உணர்வூட்டங்கள் நெருக்கமான உறவுகளால் பெறுமானப்படுத்தப் படுகின்றன. லெட்சுமணன் வளர்கிறான். காட்டுப்புலவுக்குள் சிங்களச் சிறைக்கைதிகளை குடியேற்றும் முயற்சியும், அதற்கெதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பும் தொடங்குகின்றன.