கெளதமி

ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”)

இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கவும் வரலாற்றில் நம் நிலை என்ன இனி வருங்காலத்தில் நாம் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கும் இந்தப் பிரதிகள் ஒரு சிறு ஒளியையோ அல்லது பெரும் சூரியக் கதிரையோ வாசகன் மீது குவிக்கலாம் . அந்தவகையில் சயந்தனின் ஆதிரை நாவல் சில பல வாரங்களுக்கு முன்பு படிக்கக் கிடைத்தது. அண்மையில் படித்த தரமான படைப்பு என்று தைரியமாகச் சொல்வேன்.
அவசரமாக விமர்சிப்பதற்கான படைப்பு அல்ல என்பதால் காலம் எடுத்து நூல் பற்றிய வாசிப்பு அனுபவங்களை எழுதலாம் என்று யோசித்தேன். நான் இந்தப் பகுதியை எழுதும்போது பலரும் ஆதிரையை ஒரு அழகியல் நுட்பங்கள் கொண்ட செவ்வியல் படைப்பாகக் கொண்டாடிக் கொண்டிருப்பதை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு தொடர்கின்றேன்..

ஆதிரை நாவல் மலையகத் தமிழரின் இடபெயர்வில் தொடக்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்டு அதன் பின்பு புனர்வாழ்வின் இடர்பாடு வரை நம்மைக் கூட்டிச் செல்கின்றது. படைப்பியலை நோக்கினால் ஆதிரை கட்டமைப்பில் தன்னுடைய தனித் தன்மையை (Individuality) காத்திருக்கின்றது. பாத்திரங்கள் வாயிலாகக் காலத்தின் குரலை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். பன்முகப் பரிமாணங்களைக் கொண்டு யதார்த்தமாக அந்த காலப்பகுதியில் உலவிய கதாபாத்திரங்களை அதன் தனித்தன்மை சிதையாமல் படைத்திருக்கின்றார்.

அடுத்து கதைப்போக்கினூடாக அரசியல் நகர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளார் (Organic Plot Construction) படைப்பினுடைய சமூக முரண்பாடுகளும் மோதல்களும் வெளிக்காட்டுகின்ற வரலாற்றை முன் வைப்பது மட்டுமே படைப்பாளின் கடமை. தீர்வை முன் வைக்கும் கடமை படைப்பாளிக்கு இல்லை என்பதையும் இந்த நகர்வு உணர்த்துகின்றது.

“History is Bunk” என்னும் கூற்று அல்லது கருத்து மேலை நாடுகளில் உண்டு . அனால் எம்மைப் பொருத்தவரை வரலாறு என்பது நமக்கான அடையாளம். இருண்ட காலங்களில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விளக்கும் படைப்பியல்.

அடுத்து பிரதி விம்பம் பற்றி நோக்கினால் ஆதிரையில் சம்பவச் சித்தரிப்புக்கள் சம்பவத்தை வாசகனுக்கு கண்முன்னே விரிந்த காட்சியாக்கிக் காடவும் தவறவில்லை (எனக்கு காட்சிகள் தோன்றின என்பதன் அடிப்படையில்) காடும் காடு சார்ந்த பிரதேச விபரிப்பு ,வாழ்வியல் கோலங்களின் சித்தரிப்பு, இறப்பு அல்லது இழக்கப்படுதலின் பெரு வலி , சொந்தத் தேசத்தில் அகதியாய் நிர்க்கதியடைந்த மக்களின் துயர்கள், ஆற்றாமைகள் அத்தனையையும் கண்முனே காட்சிப்படுத்துகின்றது ஆதிரை.

கதையாடல் கருவிகளில் (Narrative devices) பெரும்பாலும் ஆசிரியரின் ஆதிக்கத்தை ஆதிரையில் காணக் கூடியதாக இருந்தது. பின் திரில் ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் வரலாற்றையும் சம்பவங்களோடு கோர்த்து சரியான பாதையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இலக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆதிரையை பிரதிக்குள்ளிருந்து படிக்க வேண்டிய தேவைப்பாடும் உள்ளது.

அது மட்டுமன்றி அந்த அந்த பிரதேசங்களுக்குரிய மொழிநடைகளையும் லாவகமாகவே கையாண்டுள்ளார் ஆசிரியர். மண்ணிற்காக மடிந்து போகும் மைந்தர்களை ஈன்றவர்களின் கதறல்கள் கதை முழுதும் உண்டு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடுகின்ற மானுடக் குரல் ஆதிரை.
“சண்டை முடிஞ்ச பிறகு” “சண்டை முடிஞ்ச பிறகு” என்னும் கனவுகளோடு எத்தனையோ ஆதிரைகள் விசக் குப்பிகளை அணைத்துக் கொண்டு மடிந்த மண் இது. தவிர்க்கமுடியாமல் சந்தர்ப்பவாதிகளாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இருந்தாலும் நமக்கான வரலாற்றை நாமே எழுதி வைத்துவிட்டாவது செல்வோம். இலையேல் எம் வரலாறு திரிபு பெறலாம். பொய்யர்கள் திரித்துக் கூறலாம். வரலாற்றின் முதற்பணியை ஏலவே ஈழத்து இலக்கிய உலகில் இலக்கிய கர்த்தாக்கள் தொடங்கியுள்ள நிலையில் ஆதிரை ஆசிரியரும் செவ்வனவே தொடக்கி வைத்துள்ளார். எழுதிய கரங்களுக்கு நன்றிகள்.

http://thanimambolg.blogspot.ch/2016/01/blog-post_5.html