அப்படியொருநாள் தட்டிலிருந்து கவளம் சோற்றை வாயருகில் கொண்டு போனபோது சோற்றையிட்டவர் சொன்னார். “கஸ்ரப்பட்டு இந்தக் குளிரிலையும் பனியிலையும் உழைத்த காசையெல்லாம் உங்களை நம்பித்தானே அனுப்பி வைத்தோம். கரியாக்கி விட்டீங்களே”அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு தொண்டைக் குழிக்குள் எனக்கு எப்படிச் சோறு இறங்கும். அதன்பிறகு நான் கோயிலுக்குப் போறதில்லை. அண்ணன், யாருக்காக நாங்கள் துப்பாக்கிகளைத் தூக்கினோம்? கடைசியில் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும்தானா..?”
காக்கா அமைதியாகி நகத்தைக் கடிக்கத்தொடங்கினான். ரொக்கெற் தன்னுடைய கால்களைத் தூக்கி மடித்து சோபாவில் குந்தினான். சாதாரணமாக கால்களை விரித்து நீண்டநேரம் அவனால் உட்காரமுடிவதில்லை. அவனைச் சிறைப்பிடித்த மூன்றாவது மாதம் ஒரு விசாரணையில் உடலைச் சுழற்றி சுவரோடு வீசியதால் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
“இயக்கம் இருந்திருந்தால் நாடு கிடைத்திருக்குமா என்பதை சரியாச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் அனாதைகள் ஆயிருக்க மாட்டோம்.” காக்கா அழத்தொடங்கினான். “ச்சீ, என்ன இது சின்னபிள்ளைமாதிரி அழுகின்றேன் ” என்று பிறகு அவனே சொன்னான். அழுகையை அடக்க சொண்டுகளைக் கடித்தபடி கண்களை மூடியிருந்தான. “ஒவ்வொருநாளும் விடியும்போதும் பழகிச்சிரித்த யாரோ ஒருவனது நினைவு நாளாகத் தொடங்குகிறது. பகல் அவமானங்களோடு போகிறது. இரவு அழுகையோடு முடிகிறது. பயிற்சி பயிற்சியென்று உடம்புக்கு மட்டும் வைராக்கியம் தந்துவிட்டு மனதை அப்பிடியே பஞ்சுபோல விட்டுவிட்டார்கள் ” அவனால் ஒருபோதும் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதான். ரொக்கெற் காத்திருந்தான்.
“நாங்கள் எங்கட வாழ்க்கை முழுவதும் சாவைத்தாண்டித்தான் வந்திருக்கிறம். உண்மையில் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்ந்தேயிருக்கிறம். யோசித்துப்பார்த்தால் நாங்கள் மட்டுமில்லை. எல்லோரும் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். சாவு தன்பாட்டில் நடக்கட்டும். அப்படித்தான் முந்தியும் நடந்தது என்று நினைச்சுக்கொள்ளுங்க. கனக்க யோசிக்க வேண்டாம்” என்றான் ரொக்கெற். பின்னர் பேச்சை மாற்றும்பொருட்டு “இப்ப எங்கையிருக்கிறீங்கள்”என்று கேட்டான்.
“நிறையத் தூரத்தில் மலையில் ஒரு வீடு. மூன்று பேர் தங்கியிருக்கிறோம். தொலைவுக் கிராமமென்பதால் ஒருமணிநேரத்திற்கொரு பஸ்தான் போகும். இரவில் ஒன்பது மணிக்குப் பிறகு பஸ் இல்லை. வேலைமுடிந்து நடந்துதான் போவேன். குளிர்காலங்களில் பயங்கரம். இன்னமும் விசா கிடைக்கவில்லை . அதற்கொரு வழிபிறந்தால் நல்லதொரு வேலையும், வேலைக்குப் பக்கத்தில் வீடும் எடுக்கலாம்”
“எல்லாம் சரியாகிவிடும்”
“ஆயுதப்போராளிகளுக்கு விசா அனுமதி கொடுக்கமாட்டார்களாம் என்று அன்றைக்கு சலுானில் பேசிக்கொண்டார்கள்.”
“அதொன்றுமில்லை. நான் இங்கேதானே இருக்கின்றேன்.”
“நீங்கள் பதினொரு வருஷம் சிறையில் இருந்தீர்கள். செஞ்சிலுவைச் சங்கம்தானே உங்களை அனுப்பி வைச்சது. அதனால் அவர்களின் தலையீடு இருந்திருக்கும். எங்களுக்கு அப்பிடியில்லைத்தானே. உங்களுக்கு இளங்கீரனைத் தெரியுமா. அவர் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவுக்காரர். அவர் ஆயுதத்தோடு பயிற்சி செய்யும் காட்சி முன்னர் பி.பி.சியில் ஒளிபரப்பானதாம். அதனாலேயே அவருக்கும் இன்னமும் விசா கொடுக்கவில்லை. அவர் அன்றைக்கு கடைக்கு வந்திருந்தார். மட்டக்களப்பிலேயே இன்னமும் இருக்கின்ற மனைவியையும் மகளையும் எங்காவது ஆபிரிக்க நாடொன்றுக்காவது அவசரமாக எடுக்கவேண்டுமென்றார்.”
ரொக்கெற் “சாப்பிடலாமா”என்றான். குசினிக்குச் சென்று பீங்கான் கோப்பையில் சோறிட்டு கறிகளை மேலே ஊற்றி கொண்டுவந்தான். ஒரு முட்டை அவித்திருக்கலாம் அல்லது மீனைப்பொரித்திருக்கலாம் என்று அப்பொழுததான் தோன்றியது.
காக்கா தொடைகளின் மேலே கோப்பையை வைத்து மெதுவாக விரல்களால் அளைந்தான்.
“வெட்கப்படாமல் சாப்பிடுங்க”
முதற்கவளத்தை வாயிலிட்ட காக்கா தொடர்ந்து பேசலானான்.
“பதிவு செய்யாமல்தான் தமிழ்க்கடையில் வேலை செய்கிறேன். கள்ள வேலை. இன்னமும் இரண்டுபேர் வேலை செய்கிறோம். அவர்களிடமும் விசா இல்லை. விடிய ஒன்பது மணிக்குத் தொடங்கும் வேலை, கடையை மூடி கழுவித்துடைத்து முடிவதற்கு இரவு எட்டுமணியாகும். பரவாயில்லை. நேரக்கணக்குப் பார்த்தா இயக்கத்தில் வேலை செய்தோம். ஆனால் எங்கட பொறுப்பாளர்கள் எப்போதாவதுதானே திட்டியிருக்கிறார்கள். இங்கே முதலாளி எப்பவும் திட்டுகிறார். எல்லோருக்கும் இறைச்சியை விற்றனுப்பு, மீனை விற்றனுப்பு என்றால் என்ன செய்யிறது. ஒருநாள், ஒரு ஐயரம்மாவிடம், நிறைய நாளுக்குப் பிறகு முரல் வந்திருக்கின்றது. சொதி வைத்துக் கொடுத்தால் கணவர் சமைத்த கையிற்கு மோதிரம் போடுவார் என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். ஐயரம்மா சன்னதமாடிவிட்டா. அவவின் முகத்தைப் பார்த்தால் உனக்கு ஐயராட்கள் என்று தெரியவில்லையா என்று முதலாளி என்னைத் திட்டித் தீர்த்தார். உண்மையில் அப்படித் தெரியுமா அண்ணன்”என்று நிறுத்தினான். ரொக்கெற் சிரித்தான்.
“கால்வாசி சம்பளம்தான் கிடைக்கிறது. பதியாமல் வைத்திருப்பது முதலாளிக்கும் ரிஸ்க் என்பதனால் அந்தச் சம்பளமாம். ஆனால் அவருக்கு விசா இல்லாத ஆட்கள்தான் வேண்டியிருக்கிறது. எனக்கென்ன கவலையென்றால் விசா இல்லையென்பதற்காக எனது உழைப்பின் பெறுமதி மற்றாட்களை விடவும் காற்தூசியாகிவிட்டது என்பதுதான். விசா கிடைத்தால் முதல்வேலையாக ஒரு வெள்ளைக்காரனிடம் வேலைக்குச் சேரவேண்டும்”
“முதலாளிகளில் தமிழென்ன, வெள்ளையென்ன.. எல்லோரும் ஒரேமாதிரித்தான். என்னை மட்டும் சும்மாவா விடுகிறான் வெள்ளைக்காரன். பிழிந்தெடுக்கின்றான். அதிலும் இரண்டு வேலை. இரண்டு முதலாளி. பின்னச் சொல்லவா வேணும்”
“வெள்ளைக்காரன் நல்ல சம்பளம், பென்சன், இன்சுரென்ஸ் எல்லாம் தருவானே”
“அவர்களுக்கு சிஸ்ரமாகச் சுரண்டுவது எப்படி என்று நல்லாத் தெரியும். தமிழனுக்கு அந்தப் பக்குவம் இல்லை. வேலைக்காரனை சாதி குறைந்தவன் என்று பார்க்கிற மனதுதானே தமிழனுடையது”
காக்கா சற்று நேரம் அமைதியாயிருந்தான். பிறகு “இன்றைக்கு பென்சன், இன்சுரென்ஸ் என்றெல்லாம் யோசிக்கின்றேன். இயக்கத்தில் இருந்தபோது பிற்காலத்தில் என்ன செய்யிறதென்ற நினைப்பே இருந்ததில்லை. ஒரு நம்பிக்கை இருந்தது. செத்துவிடுவோம் அல்லது அண்ணை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை.”
காக்கா பின்னேரம் தான் புறப்பட்டுப்போனான். பிறகு நீண்டநாட்களாக அவனைக் காணவில்லை. ரொக்கெற்றும் கடைப்பக்கம் போகவில்லை. கோடைகாலத்தில் ஒருநாள் அவனைக் கண்டபோது அவன் அந்தரமாயும் பதற்றமாயும் இருந்ததாக ரொக்கெற் உணர்ந்தான்.
குளக்கரையின் நடைபாதை வாங்கில் காக்கா அமர்ந்திருந்தான். கையில் கால்ஸ்பெர்க் பியர் போத்தலொன்றை வைத்திருந்தான். கண்கள் ஒருவகை மிதப்பில் நிலையற்று அலைந்தன. ரொக்கெற்றைக் கண்டதும் போத்தலைப் பின்னால் ஒளிக்க முயற்சித்து பிறகு கைவிட்டான்.
“இந்தக்கருமம் சரியான கய்ச்சல் அண்ணன் ”குழந்தையொன்றின் வார்த்தைகளாக அவையிருந்தன. ரொக்கெற் அவனது தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டு நின்றான். “தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று கடிதம் வந்திருக்கிறது அண்ணன். எனக்குப் பயமாக இருக்கிறது.” குரல் உடைந்திருப்பதாகப்பட்டது.
ரொக்கெற்றிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “எல்லாருக்கும் இங்கை அப்படித்தான். முதல்ல சறுக்கும். நம்பிக்கையோடு இருங்கள். தெரிந்த லோயர் இருக்கிறார். அப்பீல் செய்யலாம். மனதை உற்சாகமாக வைத்திருக்க வேணும்.” காக்காவைப் பற்றிய ஓர் எச்சரிக்கையுணர்வு அவனில் தொற்றியிருந்தது.
“புத்தகங்கள் படிப்பீரா, இங்கையிருக்கிற லைபரெறியில் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன.”
காக்கா அமைதியாக இருந்தான். மெதுவாக “விடுதலைப்புலிகள் பேப்பர் மட்டும் முன்னர் படிப்பேன். ” என்று சொன்னான்.
இரண்டாவது வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. காக்காவை விட்டுப்போகத் தயக்கமாயிருந்தது. காக்கா அவனின் முன்னாலேயே ஒரு மிடறு பியர் குடித்தான்.
“செத்துப் போகலாம் போல இருக்கிறது.” என்றவன் “சாவது என்றால் எப்பிடி.. கடிப்பதற்கு குப்பியா இருக்கின்றது..” என்று சிரித்தான்.
உதடுகள்தான் சிரித்தன. மனதின் அலைச்சலை ரொக்கெற் முழுமையாக உணர்ந்திருந்தான். அவன் சிறையிருந்த நாட்கள் நினைவில் மிதந்துகொண்டு வந்தன. சாவு பெரும் விடுதலை எனத் தோன்றிய நாட்கள் அவை. உடலின் உச்சபட்ச வலியைத் தாங்கும் எல்லையை சித்திரவதைகள் கிழித்துத் தாண்டும் ஒவ்வொரு கணத்திலும், சாவு தன்னை விடுவிக்கப்போகிறது என்று அவனது மனது கொந்தளிப்பை அடக்கி தெளிந்த நீரைப்போல ஆகியிருக்கிறது. மூச்சுக்கள் சீராகியிருக்கின்றன. வாயில் இலேசாக புன்னகையும் கசியும். ஆனால் ஒவ்வொருமுறையும் சாவு அவனை ஏமாற்றியது.
“உங்களுக்குப் பாலனைத் தெரியுமா” திடீரென்று காக்கா கேட்டான்.
“அவன் அம்பாறைப் பெடியன். இப்ப ஆள் இல்லை. மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குப் போன ஒரு கடற்பயணத்தில் அவனும் போனான். இரவுப்பயணம். திருகோணமலைக் கடலில் நேவி மறித்து அடிக்கத்தொடங்கியதில் படகு சிதைந்துபோனது. பாலனைத்தவிர ஒருவரும் மிஞ்சவில்லை. அவன் நீந்தினான். ஓயாமல் நீந்தினான். அதிகாலை வெளிச்சம் பரவமுதலே கரையைத் தொட்டவன் அப்படியே மயங்கிப்போனான். கண்விழித்தபோது ராணுவம் கைது செய்திருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் குப்பி இல்லை. இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்கிவிடும். பாலன் ஒரு கரும்புலி. விசாரணையின் கொடுமை தாங்கமுடியாமல் எதையாவது சொல்லிவிடுவேன் என்று அவன் அஞ்சத்தொடங்கினான்.
அப்பொழுதுதான் பாலன் அதைச் செய்தான். அவன் நாக்கை வெளியில தள்ளி பல்லால் கடித்தபடி தாடையை நிலத்தில் ஓங்கி அடித்தான். நாக்குத் துண்டாயிற்று. ஆமி அவனைத் தூக்கிச்சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. எப்படியும் தன்னிடமிருந்து இரகசியங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று பாலன் நம்பினான். அவன் இன்னுமொன்றையும் செய்தான். ஆஸ்பத்திரியில் அவனை வளர்த்தியிருந்த கட்டிலின் தலைமாட்டின் இரும்புக் கம்பியில் தலையை மோதி உடைக்கத்தொடங்கினான். ஆறாவது தடவை மோதிய கணத்தில் அவனது கண்கள் மேலே செருகி மண்டை ஓடு சிதைந்து செத்துப்போனான்.”
ரொக்கெற் பெருமூச்சொன்னை விடுவித்தான். இப்படிப்பலதும் நடந்தாயிற்று.
“நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் சாகவேணுமென்று முடிவுசெய்தால் குப்பிதான் அவசியமென்றில்லை”
0 0 0
02.12.2012 பனி உருகிய காலை
காக்காவின் அறை வாசலை மஞ்சள் நிறத்தாலான பிளாஸ்ரிக் வரியல்களால் மூடியிருந்தார்கள். மூன்று பொலிஸ்காரர்கள் மிகச் சாதாரணமாக நடமாடினார்கள். அருணின் முகம் இன்னமும் திகைப்பிலிருந்தது. காக்காவின் உடலை சற்றுமுன்னரே அம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதாக அவன் சொன்னான். ரொக்கெற் அறைவாயிலில் நின்று பார்த்தான்.
பெரிதாகப் பொருட்கள் இல்லை . மூலையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. ஒருவர் மட்டுமே படுக்க முடிகிற மெத்தையொன்று சுவரோரமாகத் தரையில் கிடந்தது. நீலநிறப் போர்வை கால்மாட்டில் குமைந்திருந்தது. மெத்தையின் அருகே தரையில் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் தெரிந்தது.
மொழிபெயர்ப்பாளர் வந்திருந்தார். பொலிஸ் அருணிடம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தார்கள்.
“அகதி முகாமிலிருந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு இந்த வீட்டிற்கு வந்தோம். எனக்கும் தீபனுக்கும் காக்காவிற்கும், இல்லை அது அவரது பட்டப்பெயர். உதயகுமாருக்கும் இந்த வீட்டை நகரசபை ஒதுக்கியிருந்தது. நானும் தீபனும் ஒரு அறையில் தங்கினோம். அவர் எங்களோடு பெரிய நெருக்கமில்லைத்தான் ஆனால் பிரச்சனையொன்றுமில்லை. நாங்கள் கொஞ்சம் ஜொலிப் பேர்வழிகள். அவர் அப்படியல்ல. யாராவது அவரது மனம் நோகும்படி கதைத்தால் அன்றைக்கு முழுவதும் எதையாவது யோசித்துக் கொண்டிருப்பார். பழசெல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்று நான்கூட ஒன்றிரண்டு முறை சொல்லியிருக்கிறேன். அதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு தோழனின் நினைவு நாளாகவே விடிகிறது. பழையதை எப்படி மறக்க என்று கேட்டார். நேற்று இரவு நானும் தீபனும் படம் பார்த்துவிட்டுத் திரும்பியபோது இரவு ஒரு மணியாகவிட்டது. கொஞ்சம் குடித்திருந்தோம். விடிய பாத்ரூமுக்கு எழும்பிப் போனபோதுதான் லைற் போட்டேன். உதயகுமார் மெத்தைக்கு வெளியே கையை நீட்டியபடி படுத்திருந்தார். கீழே ரத்தமாயிருந்தது. கையிலிருந்து ரத்தம் வடிவது நின்றிருந்தது. அவர் அப்பவே செத்துப்போயிருந்தார். எனக்கு என்ன செய்யிறதென்று தெரியவில்லை. பயந்தும்போனேன். தீபன்தான் வெளியே ஓடிப்போய் இரண்டு சுவிஸ்காரர்களைக் கூட்டிவந்தான். நான் ரொக்கெற் அண்ணைக்கு சொன்னேன்.”
ரொக்கெற் நேரத்தைப் பார்த்தான். ஐந்து நிமிடத்தில் பஸ் எடுத்தால்தான் மட்டுமட்டான நேரத்திற்கேனும் வேலைக்குச் செல்லமுடியும். அவன் சோர்ந்துபோயிருந்தான். உடலுக்கு முடியவில்லை. இன்று வரமுடியாதென்று சொல்லலாமா என யோசித்தான். செப் நூறு கேள்விகள் கேட்பான். பிறகு சுடுதண்ணியை மூஞ்சையில் கொட்டியவன் போல நாளைக்குக் கடுகடுப்பான்.
ரொக்கெற் பஸ்ஸில் ஏற் உட்கார்ந்தான். வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கண்களை மூடியபோது கைகளை மெத்தையின் வெளியே நீட்டியபடி காக்கா நிமிர்ந்துகிடந்தான். கைகளிலிருந்து இரத்தம் ஒவ்வொரு துளியாக தரையில் சொட்டியது. காக்காவின் திறந்துகிடந்த உறைந்த கண்களின் பார்வைக் கோணத்தில் சுவரில் எம் 16 ரகத் துப்பாக்கியோடு சீருடையில் பிரபாகரனின் சிறிய படமொன்று கொழுவியிருந்தது. கத்தையான மீசை. இரண்டு சயனைட் கயிறுகள், இடது பொக்கற்றில் செருகப்பட்டிருந்தன. இடுப்பில் பிஸ்டல் துப்பாக்கி…
ரொக்கெற் படரும் எண்ணங்களை அழிக்கமுயற்சித்தான்.
பஸ் அவனது வீட்டைக்கடந்தபோது தன்னிச்சையாக மணியை அழுத்தி அடுத்த இறக்கத்தில் இறங்கினான். கால்கள் தம்பாட்டுக்கு நடந்து வீட்டுக்கு ஏறின. கதவைத்திறந்து நுழைந்து சோபாவில் விழுந்தான். கண்களில் உடைத்துக்கொண்டு நீர் பொங்கத்தொடங்கியது. கைகளை நெஞ்சிலடித்து மெல்லிய தீனக்குரலில் அழுகை வெடிப்புற்றது. கேவிக்கேவி அவன் ஒப்பாரி வைக்கலானான்.
“பாடையில நாயகமா நீ படுத்தால் இந்த நாடே கதறியளும் என் ராசா, ஆருமில்லாப் பிணமா நீ போய்ச்சேர்ந்தாய், இங்கை அழுது துயர் கரைக்க ஒரு ஆளில்லையே…. ”
காலச்சுவடு 2014 பெப்ரவரி இதழில் வெளியானது
ஓவியம்: ஞானப்பிரகாசம்