அவர்கள் சாப்பாட்டிற்கு அடிக்கடி போகும் ஒரு வீடிருந்தது. அது சியாமளா அக்கா வீடு. வீதியிலிருந்து விலகி உள்ளே போகின்ற குச்சொழுங்கையில் நான்கு வீடுகளே இருந்தன. ஒழுங்கையின் முடிவில் சியாமளா அக்காவின் வீடு தொடங்கியது. பின்னால் நெடிய பனை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த கூடலொன்றிருந்தது. பிறகு வயல் விரிந்தது. தப்பியோடுவதற்குப் பொருத்தமான வீடு.
சியாமளா அக்கா எங்கேனும் வழியில் இவர்களைக் கண்டாலும் “இன்றைக்குச் சாப்பிட வாருங்கள்” என்று அழைத்துச் செல்வார். வீட்டின் புறத்தால் பந்தி இறக்கி கிடுகு வேய்ந்திருந்தார்கள். மாட்டுச்சாணத்தினால் மெழுகிய நிலத்தில் உச்சிவெயிலிலும் குளிர்ச்சியாக இருக்கும். கீழே புற்பாய் விரித்து உட்கார்ந்து சாப்பிடுவார்கள். சியாமளா அக்காவின் அப்பா முன்விறாந்தையில் ஒரு வாங்கில் எப்பொழுதும் படுத்திருப்பார். பேசமாட்டார். சுருக்கங்கள் விழுந்த முகத்தில் வாய் ஒரு பக்கம் கோணியிருக்கும். இவர்களைக் கண்டால் சிநேகமாக தலையை அசைப்பார்.
அன்று காலையிலிருந்து இடியும் மின்னலுமாயிருந்தது. கருமேகங்கள் திரண்டு இராட்சத மிருகங்களாக அலைந்தன. தூரத்துக் கிராமமொன்றில் நான்கு இராணுவத்தினரை முடித்தாயிற்று என்ற செய்தியோடு மூன்று துப்பாக்கிகளையும் கொண்டுவந்திருந்தான் மிரேஸ். எப்போதாவது அவன் இவர்களைச் சந்திப்பதுண்டு.
அம்மப்பா துப்பாக்கிகளை வாஞ்சையோடு தடவிப்பார்த்தான். அவற்றிலொன்றைத் தோள்களில் தாங்கி தலையைச் சரித்து கண்களைப் பொருத்தி ரொக்கெற்றைக் குறிபார்த்துச் சிரித்தான். பின்னர் துப்பாக்கியை அழுத்தி முத்தமிட்டான்.
துப்பாக்கிகளை பொலித்தீனால் சுற்றினார்கள். சீமெந்து மணக்கும் பையொன்றில் வைத்து மடித்தார்கள். பத்தானைக் கேணிக்குப் பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்கு எடுத்துச் சென்றார்கள்.
மேகங்கள் அப்பொழுது மழையாக கொட்டத்தொடங்கின. உரைப்பையை தலையில் முக்காடிட்டபடி மிரேஸ் காவலுக்கு நின்றான். அம்மப்பாவும் ரொக்கெற்றும் உள்ளே சென்றார்கள். வெள்ளம் தேங்கத்தொடங்கவில்லை. குழிதோண்டியபோது நிலம் சேறும் சகதியுமாயிருந்தது. புதைத்து முடித்தபோது மதியம் தாண்டி மூன்று மணியாயிருந்தது.
“பசிக்கிது. சியாமளா அக்கா வீட்டிற்குப் போகலாம்.” என்றான் அம்மப்பா. “சிலநேரம் அவர் இன்றைக்கு சுறா வறை செய்திருப்பார் என்று என்ர மனசு சொல்லுது” பசியைச் சொல்லும்போது அவனது விரல்கள் வயிற்றைத் தடவின.
ரொக்கெற் மிரேஸை ஏற்றிக்கொண்டான். அம்மப்பா தனியே வந்தான். பார்த்தால் இயக்கமென்று அனுமானிக்க முடியாத மூன்று அமைதியான இளைஞர்கள் சைக்கிளில் பயணித்தார்கள்.
சியாமளா அக்கா வீட்டின் ஒழுங்கை தெருவில் ஏறுமிடத்தில் பச்சை உடைகளை அம்மப்பா கண்டபொழுதிற்தான் நாய்களும் குரைக்கத்தொடங்கின. சப்பாத்துக்களைத் தொடும் பச்சை நிறத்தாலான மழைக்கோர்ட்டை அணிந்தபடி பதினைந்துக்கும் மேலான இந்திய இராணுவத்தினர் ஒழுங்கையிலிருந்து ஏறினார்கள்.
ரொக்கெற் பிரேக்கை அமத்தினான். “பதறாதே, சூட்டு வளையத்திற்குள் நிற்கிறோம். அப்படியே வா” என்று அம்மப்பா அருகாக வந்து கிசுகிசுத்தான். அவர்கள் தொடர்ந்தும் பயணித்தார்கள். துணுக்குற்ற ஒரு சிப்பாய் மிரேஸை அடையாளம் காணும்வரைக்கும் இராணுவத்தினர் இயல்பாகத்தான் நடந்தார்கள். ஆனால் அந்தச் சிப்பாய் இந்தியில் கத்தத் தொடங்கிய கணத்தில் துப்பாக்கிகள் ஒரு சொட்டுத் தாமதமுமின்றி வெடிக்கத் தொடங்கின. வெளியேறிய ரவைகள் எவையும் வீணாகவில்லை. அவை அம்மப்பாவைத் துளைத்தன. முதற் குண்டுகள் பசித்த அவனது வயிற்றில் நுழையும் ஒவ்வொரு கணத்திலும் புயற் காற்றைப்போல உடலை பின்தள்ளிப் பின்தள்ளி விழுத்தின. வானத்தைப்பார்த்தவாறு அம்மப்பா விழுந்து கிடந்தான். மழை பெய்துகொண்டிருந்தது.
ரொக்கெற்றிலும் மிரேஸிலும் ஒரு சன்னம் தன்னும் உரசவில்லை என்பதற்கு இந்திய இராணுவத்தின் கவனக்குவிப்பிற் பழி சொல்லுங்கள். உயிரோடும், உயிரற்றுமிருந்த அம்மப்பாவின் உடலைக் குறிவைத்தே அவர்கள் இயங்கிக்கொண்டிருக்க பாய்ந்து இறங்கிய ரொக்கெற்டும் மிரேசும் கருக்குமட்டை வேலியை ஒரே பாய்ச்சலில் கடந்தார்கள். வாளின் பற்களையொத்த கருக்கின் விளிம்புகள் மிரேஸின் வலது தொடையை ஆழத்துக்கு இழுத்துக் கிழித்தன. நாய்கள் குரைத்துக்கொண்டேயிருந்தன.
மழை நீண்டுகொண்டிருந்த அன்றைய இரவில் எங்கோ தொலைதூரத்தில் ரொக்கெற் கொட்டக்கொட்ட விழித்திருந்தான். அவ்வப்போது தலை தன்னிச்சையாகத்திரும்பி பின்னால் அம்மப்பாவைத் தேடியது. அவன் அழவில்லை.
அம்மப்பாவைக் கொன்ற துப்பாக்கிகள் அதற்குச் சற்று முன்பாகத்தான் சியாமளா அக்காவையும், முதிய தந்தையையும் சல்லடையிட்டுத் துளைத்திருந்தன என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை. அறியநேர்ந்தபோதும் அழவில்லை.
12.07.1991 சாவுகளை வழியனுப்பிய காலம்
ரொக்கெற் வருடத்தின் தொடக்கத்திலேயே கொழும்பிற்கு அனுப்பப்பட்டிருந்தான். அவனுக்குள் ஒரு மிருகம்போலிருந்த ஓர்மமும், அதனைச் சிறு அசைவிற்கூட வெளிச்சொல்லாத முகபாவமும் அவனை அங்கு அனுப்பின. வெகு சீக்கிரமே தன்னில் ஒரு நாகரீகத் தோற்றத்தை அவன் உடுத்திக்கொண்டான். ஓர் உல்லாசப்பேர்வழியின் நடை உடை பாவனைகள் அவனில் மிகச்சரியாகப் பொருந்தின.
குண்டுத்தாக்குதல்களின் இணைப்பாளனாக ரொக்கெற் இருந்தான். பயிற்சிகள் மட்டக்களப்பில் நடந்தன. தயாரானவர்கள் புதுப்புதுப்பெயர்களில் கொழும்பிற்கு வந்தார்கள். வெடிமருந்து நிரப்பிய லொறிகள் எங்கெங்கோ இருந்து வந்தன. மனிதர்களையும் லொறிகளையும் ரொக்கெற் ஒருங்கிணைத்தான். துண்டுதுண்டாய்க் கிடைக்கிற தகவல்களைச் சீர்செய்து இறுதிவடிவத்தை உறுதிசெய்தான்.
அவன் வழியனுப்பி வைத்தவர்கள் திரும்பி வரவில்லை. ஆனால் எங்கோ சிக்கிய தடயமொன்றை சிக்கிக்கிடந்த நுாற் குவியலின் ஓர் இழையாய்ப் பற்றிக்கொண்ட இராணுவ புலனாய்வுக்காரர்கள் அதைப்பிடித்துப் பிடித்து கிட்டநெருங்கினார்கள். நூலிற்கு பல அந்தங்கள் இருந்தன. அதிலொன்று இவனாயிருந்தான். ஒன்பதாவது மாதத்தில் ஒரு கோழியை அமுக்குவதுபோல ரொக்கெற்றைக் கைது செய்தார்கள்.
அதுவரை அவன் மூன்று பேரை வழியனுப்பியிருந்தான். அவர்களது தோளைத்தட்டி “போயிற்று வாங்கோ”என்றிருக்கிறான். அவர்கள் போனபிறகு இரவில் கொட்டக்கொட்ட விழித்திருந்திருக்கிறான். அப்படியொரு இரவில் இரத்மலானையில் மழையும் பெய்தது. அம்மப்பாவின் நினைவுகள் கிளர்ந்தன. ஆனாலும் அழாமல் வெறித்திருந்தான்.
25.07.2011 வெம்மை தகித்த காலம்
காதலும் கனவும் பொங்கும் இந்தியச் சினிமாக்களின் நாயகர்களும் நாயகிகளும் தம் “கேரியரில்”ஒருமுறையாவது ஆடிப்பாடிய சுவிற்சர்லாந்தின் அழகிய நகர் அது. இந்துக் கடவுள் சிலையொன்றை பிரதிஷ்டை செய்தால் சுவாமி உள்வீதியில் வலம் வரும் விஸ்தீரணம் கொண்ட தமிழ்க்கடையொன்று அந்நகரத்தில் இருந்தது. அதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மிளகாய்த்தூளும், பாகிஸ்தானிலிருந்து அரிசியும், தூத்துக்குடியிலிருந்து மீனும் இறக்குமதியாயிற்று. மீன் விற்பனைப் பகுதியில் ரொக்கெற் காக்காவைக் கண்டான்.
வெண்ணிறப் பொலீத்தீனாலான அங்கியொன்றை பின்கழுத்தில் முடிந்து உடலின் முன்பக்கத்தை மறைத்திருந்தான் காக்கா. அங்கியில் மீனின் மினுங்கும் செதில்களும் சிவப்பு இரத்தமும் பரவலாக ஒட்டியிருந்தன. அவ்வப்போது புறங்கையால் அவன் நெற்றியைத் தேய்த்தான். அப்பொழுது நெற்றியிலும் செதில்கள் ஒட்டின.
“அக்கா வாங்க, என்ன வேணும். நல்ல பாலை மீன் வந்திருக்கிறது. சாப்பிட்டுப்பாருங்க, ருசியில் விடமாட்டீர்கள்” என்று தனக்கு முன் நின்ற பெண்ணிடம் காக்கா சொன்னான்.
“வேண்டாம் தம்பி, பாலை மீன் முழுவதும் முள்ளு.” அவள் தலையாட்டி மறுத்தாள்.
“அப்ப, அறக்குளா எடுங்கவன். இந்தா பாருங்க.. ரத்தச்சிவப்பு. இன்றைக்கு அரை மணிநேரத்திற்கு முதல் வந்தது.” கண்ணாடிப்பெட்டிக்குள் பரவியிருந்த குறுணிக் கற்களைப்போலான ஐஸ்கட்டிகளுக்கு மேலே சீராக அடுக்கப்பட்டிருந்த மீன்களில் ஒன்றின் காதினை விரித்து உள்ளே சிவந்த இறகுகளை காட்டினான்.
“நான் சின்ன மீனாகப்பார்க்கிறேன்”என்றாள் அவள்.
“பாரையும் விளையும் இருக்கின்றது. எத்தினை கிலோ என்று சொன்னால் வெட்டித்தருகின்றேன். ”
ஒரு முடிவுக்கு வராதவளாக அந்தப்பெண் யோசித்தபடி நின்றாள். அவ் இடைவெளியில் காக்கா ரொக்கெற்றிடம் திரும்பினான். “அண்ணன், பாலை மீன் வந்திருக்கிறது.” என்று முதலிலிருந்து ஆரம்பித்தான். பிறகு பதிலுக்குக் காத்திராதவனாக மீண்டும் “அக்கா, தலை வெட்டிச் சுத்தம் செய்த சூரை மீன் பைக்கிங் செய்திருக்கிறது. ஆணத்திற்கு நன்றாயிருக்கும்” என்று இரண்டு சிறு மீன் பொதிகளை பெண்ணிடம் நீட்டினான்.
“ஆணமோ, அதெல்லாம் நாங்கள் சமைக்கிறதில்லை”அவள் ஒரு வினோதப்பொருளைப் பார்ப்பதுபோல முகத்தைச் சுருக்கி காக்காவைப்பார்த்தாள். பிறகு “இல்லைத்தம்பி, ரண்டு கிலோ விளைமீனை வெட்டும்..” என்றாள்.
ஐஸ்கட்டிகளுள் புதைந்திருந்த ஒரேயளவான இரண்டு மீன்களை காக்கா இழுத்தான். மேசையில் அழுத்தி கூரான அரத்தினால் அவற்றின் உடலை இடமும் வலமுமாகத் தேய்த்தான். செதில்கள் மீனினின்றும் சொரிந்து விழுந்தன. கண்களுக்கு அருகாயிருந்த இறக்கைகளை கத்தரித்தான்.
“தம்பி, இது இலங்கை மீனா.. அல்லது இந்தியா மீனா..” கண்ணாடிப்பெட்டிக்கும் மேலாகத்தலையை உயர்த்தி அவன் மீன்வெட்டுவதைப்பார்த்தபடி கேட்டாள் அப்பெண்.
“சைனா மீன் அக்கா..” என்று சிரித்தான். பிறகு “உலகம் முழுதும் ஒரே கடல்தானே. அதில் மீனுக்கு என்ன நஷினாலிற்றி”என்று கேட்டான். பிறகும் ஏதோ சொல்ல வாயெடுத்தவன் அமைதியானான். வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு வேலையில் மூழ்கினான்.
மீன் வெட்டும் இயந்திரத்தை இயக்கினான். இரைச்சலோடு வாள் கீழிருந்து மேலாக ஓடியது. வாளிற்கு மீனைக் கையாற் தள்ளி துண்டுகளாக்கி அறுத்தான். சற்றுக் கவனம் பிழைத்தாலும் விரல்கள் துண்டாகிவிடும், ஆயினும் கண்களில் அவதானம் தெரியவில்லை. மீன் துண்டுகளின் உடலில் விரலால் நோண்டி கழிவுகளை வெளியிலெடுத்து கீழிருந்த வாளிக்குள் போட்டான். துண்டுகளை ஒருமித்து பொலித்தீன் பையொன்றினில் போட்டு பெண்மணியிடம் கொடுத்தான்.
“நன்றி அக்கா.”
ரொக்கெற்றைப் பார்த்து “அண்ணன் சொல்லுங்க..” என்றான்.
ரொக்கெற் அருகாகப் போனான். சற்று நேரம் காக்காவையே பார்த்தபடி நின்றான். ஐஸ் துகள்களை அள்ளி மீன்களின் மீது தூவிய காக்கா “என்ன வேணும் அண்ணன்” என்றான்.
“நீங்கள் கொம்பனி ஆள்த்தானே..”
காக்காவின் கண்களில் வெளிச்சம் ஒருகணம் ஒளிர்ந்து பின் கறுத்தது.
0 0 0
ரொக்கெற்றின் வீடு, ஓர் அறையை ஒரு பக்கத்திலும், இரண்டுபேர் ஒரே நேரத்தில் நின்றால் இட்டுமுட்டாகும் சமையலறையையும், குளியலறையையும் இன்னொரு பக்கத்திலும் கொண்டிருந்தது. இடையிலிருந்த ஒரு துண்டு வெளியில் பழைய ரிவியொன்றும், உட்புதைந்து, ஓரங்கள் முறுகிக் கிழிந்த, கருநிற சோபா ஒன்றும் இருந்தன. அதன் ஓர் ஓரத்தில் காக்கா உட்கார்ந்திருந்தான். அவன் பேசத்தொடங்கிய அரைமணி நேரத்தில் கண்ணீரைச் சிந்தலானான்.
அவன் கண்களில் வழிந்த தனிமையுணர்வு அவனிடத்தில் நெருக்கத்தை உருவாக்கிற்று. இருபத்தைந்து வயது இருக்கலாம். வயதிற்குத் தொடர்பின்றி குழந்தைமை முகத்தில் அப்பியிருந்தது. அன்றைக்கு கடையில் அவன் பேச அஞ்சினான். முதலாளிக்குப் பயம். தொலைபேசி இலக்கத்தை வாங்கிய ரொக்கெற் சமைக்கிற நாளொன்றில் அழைப்பதாகச் சொன்னான்.
ரொக்கெற் தினமும் சமைக்கிறவன் அல்ல. வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து குளிர்பதனப்பெட்டியில் நிறைத்து விடுவான். அதுபற்றி ரொக்கெற்றோடு வேலை செய்யும் தமிழ் மனிதர் சொல்வார். “நானும் முந்தி இப்படித்தான். ஒவ்வொருநாளும் சமைக்கிறதில்லை. பிறகு கல்யாணம் செய்து அவவைக் கூப்பிட்டாப் பிறகு தினச்சமையல்தான். இப்ப உடன்சோறு இல்லாட்டி உள்ளடாது. அதனால நீரும் ஒரு கல்யாணத்தைக் கெதியில செய்யும்.”
“ஏன். அவ வேலைக்குப் போறதில்லையா ”
“போறவதான். இந்த நாட்டில் இரண்டுபேர் வேலைக்குப் போகாமல் குடும்பத்தைச் சமாளிக்க முடியுமோ. பில் கட்டுறதுக்கே ஒருவர் தனியாக உழைக்க வேணுமெல்லோ”
ரொக்கெற் மீன் அல்லது கோழிக் கறியும் கீரையும் சமைப்பான். தமிழ்க் கடைகளில் இறைச்சிச் சரக்கு, கறி மசாலா எல்லாம் தாராளமாகக் கிடைக்கின்றது. கைப்பக்குவம்தான் வாய்க்கவில்லை. அது நேரக்கணிப்பிற்கும் மனநிலைக்கும் நடுவில் எங்கோ ஒளிந்திருக்கிறது. அவன் கோழி இறைச்சியை தடித்த விரலளவு துண்டுகளாக வெட்டி கறியில் இடுவான். அம்மா சமைக்கும்போது அப்படியல்ல. அவள் சோற்றோடு பிசைகிற மாதிரி இறைச்சியை சின்னஞ்சிறு துண்டுகளாக பொறுமையாக வெட்டி மண்சட்டியில் சமைப்பாள். இருபது வருடங்கள் கழிந்தும் சுவை நாவில் நிற்கிறது. சியாமளா அக்காவின் மீன்பொரியலும் வலு திறம். தலையைக் கத்தரித்த சிறிய சூடை மீன்களை எண்ணெயில் மொறு மொறுக்க பொரிப்பார். வெள்ளைச் சோற்றை வெறும் பால்சொதியோடும் மீன்பொரியலோடும் சாப்பிடலாம்.
காக்காவை அடுத்தநாள் சாப்பிட வருமாறு சனிக்கிழமை இரவு ரொக்கெற் தொலைபேசியில் அழைத்தான். அப்பொழுது ஒன்பது மணியாகியிருந்தது.
“அண்ணன். இன்னமும் வேலை முடியவில்லை. அரைமணி நேரத்தில் அழைக்கட்டுமா”என்று காக்கா கிசுகிசுத்தான்.
“இன்று சனிக்கிழமையல்லா. கடை நான்கு மணிவரைதானே..”
“கடையை மூடியாயிற்று. இன்னமும் கழுவி முடியவில்லை அண்ணன். சரி. நான் கூப்பிடுகிறேன்” பதிலுக்கும் காத்திராமல் காக்கா துண்டித்தான். பத்துமணிக்குப்பிறகு அழைத்தான்.
“மன்னிச்சுக் கொள்ளுங்க. முதலாளி நின்றவர். பிறகு அவர் திட்டுவார்.” என்றான்.
0 0 0
இருண்டு ஒடுங்கிய மரப் படிகளில் காக்கா தயங்கித் தயங்கியே மேலேறி வந்தான். கதவைத்திறந்து வாசலில் காத்திருந்த ரொக்கெற் அவனது கையைப் பற்றி உள்ளே அழைத்தபோது வெட்கப்பட்டு உடலைச் சுருக்கினான். சோபாவின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டான்.
“ஆளைப்பார்த்தால் அப்படிக் கறுப்பில்லையே. அதென்ன காக்கா என்ற பெயர்.. ” ரொக்கெற் கேட்டான்.
சுவாரசியம் ததும்பும் கதையொன்றைச் சொல்வதற்கு அந்தரப்பட்டிருந்தவன் போல காக்கா சட்டென வாய்திறந்தான். அக்கதை மேற்சுவரில் எழுதப்பட்டிருந்தது போல கண்கள் அங்கேயே நிலைகுத்தி நிற்க, ஆரம்பித்தான்.
“அதுவொரு பெரிய கதை. நான் மட்டக்களப்பிலிருந்து வந்தவன் என்பதையும், காக்கா என்ற பெயரையும் மட்டும் தெரிந்துகொண்டு என்னை மூஸ்லீம் பையன் என்று நினைத்தவர்களும் உண்டு. முகாமில் இயக்கம் என்று சொல்லி முஸ்லீம் பெடியனொருவன் வந்துள்ளான் என்றொரு கதையும் தொடக்கத்தில் உலாவியது. அது வேறொன்றுமில்லை. கானா.கானா உதயகுமார்தான் என்ற முழுப்பெயரின் முதற்பெயர்களே காக்கா ஆயின. முகாமில்தான் அப்படி அழைக்க ஆரம்பித்தார்கள். பிறகது பரவிற்று.”
ரொக்கெற் சிரித்துக்கொண்டேயிருந்தான். அவனின் தாத்தாவினதும் அப்பாவினதும் பெயர்கள் முறையே பெரியவன், புண்ணியம் என்றவாறாக இருந்தன. அவனது சிரிப்பு அறை முழுதும் பரவிற்று. காக்காவின் வார்த்தைகள் அவற்றை இறுக்கிச் சுருக்கின.
“எனக்கு இன்னுமொரு பெயரும் முன்னர் இருந்தது. தென்னவன். இப்பொழுது யாரும் அப்படி அழைப்பதில்லை. எனக்குள் மட்டும் அந்தப்பெயர் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது”
0 0 0
“நீங்களும் இயக்கத்திலிருந்து வந்தவர்தானே. கேட்கிறேன் என்று குறை விளங்காதீர்கள். அமைப்பிலிருந்து செத்துப்போகாத ஒருவனால் உயிரோடு எப்படி இந்தச் சனங்களின் நடுவில் நிற்கமுடிகிறது அண்ணன். அவர்கள் எங்களை அம்மணமான ஒருவனைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். அவர்களுடைய கேள்விகளை நாங்கள் அனுபவித்ததே இல்லையே. உங்களுக்குத் தெரியாமலா. நாங்கள் பனிஷ்ட்மென்டைக்கூட விளையாட்டாகத்தானே செய்தோம். நண்பனின் வீரச்சாவுச் செய்தியைச் சொல்லப்போனபோது சனங்கள் எங்களை அடித்துத் திரத்தியிருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் அநாதையாக உணர்ந்ததில்லையே. தோல்வி ஒரு பெரிய கொடுமை அண்ணன்.
முன்னாள் போராளி என்பதை அறிகிற ஒருவரின் முதற்கேள்வி எதுவென்று உங்களுக்குத் தெரியுமா. நீர் ஏன் சயனைட் சாப்பிடவில்லை என்ற அந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லமுடியும். சயனைட்டைக் கடித்திருக்கலாம் என்றுதான் நினைப்பேன்.
முதலாம் நம்பர் பஸ்ஸிட கடைசிக் ஹோல்ற்றுக்குப் பக்கத்துக் களஞ்சிய அறையின் கீழ்த்தளத்தில் ஒரு பிள்ளையார் கோயிலிருக்கின்றது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பூசை நடக்கும். போயிருக்கிறீங்களா. நான் தவறாமல் போனேன். ஏனென்றா அங்கு அரிசிச்சோற்றில் உருளைக்கிழங்கும் பயிற்றங்காய்க் கறியும் பருப்பும் குழைத்து சாப்பாடு போடுவார்கள். தயிரும் அப்பளமும் உண்டு.