எங்கள் ஊரில் மொட்டைமாடியென்ற ஒன்று கிடையாது. பெரும்பாலும் ஓட்டுக் கூரைகள்தான். சில இடங்களில் சிமெந்து பிளேட் வைத்த கூரைகளும் உண்டு. ஆனால் அவற்றுக்கு மொட்டைமாடிக் குரிய வரைவிலக்கணங்களை யாரும் அப்ளை பண்ணுவதில்லை. எண்பதுகளின் இறுதியில் சியாமச்செட்டி ரக பொம்பர்களது குண்டுவீச்சுக்களுக்கும் உலங்கு வானுார்திகளின் துப்பாக்கிச் சூடுகளுக்கும் அந்தப் பிளேட்டுகளுக்கு கீழே பதுங்கிக் கொள்ள ஊரில் ஒரேயொரு வீடு இருந்தது. அப்படியான சமயங்களில் பொட்டுக்களுக்கால் புகுந்தும் ஊர்ந்தும் புரண்டும் அங்கே போவோம். ஊரே திரண்டு நிற்கும். அப்படியான களேபரங்களிலும் கொறிப்பதற்கு பகோடாவோ பருத்தித்துறை வடையோ யாரேனும் கொண்டு வந்திருப்பார்கள். பொம்பர் எங்கேயோ குண்டு வீசுகிற சமயங்களில் பதட்டமெதுவும் இருக்காது. ஒரு ஒன்று கூடல் மாதிரி பேசிப் பறைந்து விட்டுக் கலைவார்கள். இளந்தாரிப் பெடியள் ஒரு ரேடியோவைக் கையில் வைத்து அங்கையிங்கை திருப்பி வருகிற இரைச்சல் சவுண்டுகளையும் புரியாத மொழிகளையும் பைலட்காரர் கதைப்பதாகச் சொல்வார்கள். அது உண்மைதானா அல்லது இலங்கை வானொலியின் சிங்களச் சேவையில் போன ஏதும் வயலும் வாழ்வும் நிகழ்ச்சிதானா என இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
Continue Reading
மொட்டை மாடிக் கனவுகள்..
திருச்சிக் காரங்க யாராவது இருக்கீங்களா
யுத்தம் எங்களை ஒவ்வொரு இடத்திலிருந்தும் தூக்கித் தூக்கி எறிந்தது என்று சொல்வதை, யுத்தம் எங்களுக்கு புதிய புதிய இடங்களை அறிமுகப் படுத்தியது என்று சொல் என்றார் ஒருவர். தனி விருப்பற்ற சமயத்தில், தக்க காரணங்கள் ஏதுமின்றி, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு புதுப் புது இடங்களுக்கு அலைவதை நேர் எண்ணத்தில் நினைப்பதை எந்த வகைக்குள் அடக்குவது எனத் தெரியவில்லை.
ஆனாலும் யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்துக்குள் கிடந்த என்னை, பாடசாலைக்குக் காலை வருவதும் மதியம் திரும்புவதுமென வாழ்ந்த என்னை, எப்போதாவது யாரோடாவது ஐஸ்கிரீம் குடிக்கவும் உடுப்புக்கள் வாங்கவும் மட்டுமே நகரத்துக்கு வந்து போன என்னை, கிளாலி கடநீரேரிக்கு அப்பால் உலகொன்றிருப்பது குறித்து எந்த அக்கறையும் இன்றிக் கிடந்த என்னை என்னைப் போன்றோரை, யுத்தம் தூக்கி ஒவ்வொரு ஊராகத் துரத்தியதென்பது, துயரும் வலியும் நிறைந்ததெனினும் அதுவே மற்றுமொரு வகையில் புதிய அனுபவங்களை, புதிய மனிதர்களை, புதிய நினைவுகளை எனக்குள் தந்தது என்பதையும் குறித்தாக வேண்டும்.
இல்லாவிட்டால் காடுகளிலிருந்து தோட்டங்களுக்குள் நுழையும் யானைகளை கலைப்பது எப்படி என தெரிந்திருக்க முடியுமா? முல்லைத் தீவின் அலைகளுக்குள் நீந்தியிருக்க முடியுமா..? இலுப்பைக் கடவையிலும் நாச்சிக் குடாவிலும் நீர்க்குட்டைகளுக்குள் குளித்திருக்க முடியுமா..? ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்கா மடம், திருச்சியென திரிந்திருக்க முடியுமா..?
1997 இல் மண்டபம் முகாமில் குறிப்பிடத் தக்க காலம் இருந்த பிறகு, திருச்சி சென்று குடியேற விண்ணப்பித்திருந்தோம். ஆனாலும் அதற்கான விசாரணைகள், வில்லங்கங்கள் என கொஞ்சக் காலம் இழுத்தடித்த பிறகும், மண்டபத்திலும் திருச்சியில் ஒரு பொலிஸ் நிலையத்திலும் கறந்து விட்டுத் தான் திருச்சி செல்ல அனுமதித்தார்கள். அந்தக் காலத்தில்த் தான் இந்தியன் தாத்தாவின் வருகையினால் எல்லோரும் லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்தியிருந்தார்கள் இந்தியன் படத்தில். ஆமாங்க படத்தில்த் தான்.
திருச்சிக்கு செல்வதற்கு முன் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு அகதிகளாக வருபவர்களில் ஓரளவு வெளிநாட்டு உறவகளின் பணபலம் உள்ளவர்களாலேயே அவர்கள் விரும்புகின்ற சிலவற்றைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அந்தவாறான எந்த உதவியுமற்று சின்னச் சின்னக் கூலி வேலைகள் செய்தும், முகாமில் கொடுக்கின்ற மலிவு விலை உணவுப்பொருட்களையும் பணத்தையும் மட்டுமே நம்பியும் வாழ்க்கையை இன்னமும் கொண்டு நடாத்துகிறார்கள். தினமும் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்க்க வலிக்கும். உயிரை மட்டுமே வைத்திருப்பது தான் வாழ்க்கையா.. ?
(இவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உதவியுடன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் போன்ற ஏதாவது அமைப்புகளினூடாக உதவிகள் செய்ய முடியாதா என்பதற்கு அதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார்கள். விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். )
நீண்ட காலத்திற்குப் பிறகு நிலையான மின்சாரம், தொலை பேசிப் பாவனை, கணணியை நேரே பார்த்தது, திரையரங்குகளில் புதிய படங்கள் என பல முதன்முதல் அனுபவங்களை (வேறை ஒண்ணும் இல்லைப்பா) திருச்சி எனக்குத் தந்தது. நாங்கள் காஜாமலைக் colony என்ற இடத்தில் குடியிருந்தோம். காஜாமலை என்பது ஒரு கற்குன்று. அவ்வாறான ஒரு உயர்ந்த கற்குன்றை மலையைக் கூடப் பார்ப்பது அப்போது தான் முதற்தடவை.
திருச்சியின் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 88 ம் இலக்க பஸ் எடுக்க வேண்டும். வரும் வழியில் சிம்கோ மீட்டர் கம்பனிக்கு முதல் ஸ்டாப்.. யாருக்காவது தெரியுமா..?
திருச்சியில் எனது பாடசாலைக்கு இணையும் முயற்சிகள், பாடசாலைகளின் விதிப்படியும், எனது தலைவிதிப்படியும் தள்ளித் தள்ளியே போனது. பாடசாலை விடுகைப் பத்திரம் என்னிடமிருக்க வில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஓரிரவில் ஓடிவரும் போது விடுகைப்பத்திரத்திற்கு எங்கு போக முடியும்? அந்த இடம் பெயர்வின் சன சமுத்திரத்தில் நமது பாடசாலை அதிபரைக் கூட கண்டிருக்கிறேன். அவரும் தனது குடும்பம் குழந்தைகளுடன் இடம் பெயர்ந்து கொண்டிருந்தார். அன்றைக்கு அவரிடம் கேட்டிருக்கலாமோ..?
முல்லைத் தீவின் உடையார் கட்டு மகாவித்தியாலத்தில் நான் உட்பட இடம்பெயர்ந்த எவரும் உத்தியோக பூர்வமாக இணையவில்லை. 95 இல் எந்த வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்டு விட்டு 96 இல் அதற்கடுத்த வகுப்பில் இருந்து படியுங்கள் (உண்மையிலேயே இருந்து தான் – நிலத்தில் ) என விட்டார்கள்.
சரி..TC தான் இந்தப் பாடு படுத்துகிறதே என்றால் சாதிச் சான்றிதழ் அடுத்த கொளுக்கி போட்டுப் பிடித்தது. அதை நான் யாரிடம் எடுப்பது..? எப்படி எடுப்பது..? அதற்கு என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு கோதாரியும் எனக்கு விளங்கியிருக்கவில்லை. ஒரு பாடசாலையில் அதனை எமது சொந்த ஊரிலிருந்து வாங்கித் தரும் படி சொன்னார்கள். ஊரிலையெண்டால் விதானையிடம் தான் கேட்க வேண்டும். கேட்கிறவரை விதானை இயக்கத்திடம் பிடித்துக் கொடுக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்..:))
இப்படி இது ஒரு பக்கத்தால் நடந்தாலும், நாங்கள் வந்த காலப்பகுதியிலேயே வந்து, திருச்சியில் தங்கியிருந்த இரண்டு அண்ணன்களைப் பழக்கம் பிடித்து காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா ஒவ்வொரு திரையரங்குகளிலும் புதுப்படங்கள் பார்ப்பதை வாடிக்கையாக்கியிருந்தேன். பெரிய இடத்து மாப்பிளை, சூரிய வம்சம், நேருக்கு நேர் இவையெல்லாம் உடன் நினைவுக்கு வருகின்ற படங்கள். மீனா மோனா என்ற ஒரேயிடத்தில் அமைந்த ஒரு தியேட்டர் ஞாபகத்தில் உள்ளது.
உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வாராவாரம் செல்வது வழமை. மேலே உச்சியில் நின்று கொண்டு அடிக்கும் காற்றிலிருக்கும் குளிரை அனுபவித்துக் கொண்டே இருக்கலாம்.
ஆடிப் பெருக்கொன்றின் போது காவேரிக் (காவேரிதானே..) கரைக்கு சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் ஆறுகள் கிடையாது. வழுக்கையாறு என்ற ஒரு நீரோட்டம் மழைக் காலங்களில் இருக்கும். அது கூட யாழ்த் தாய் சத்திரசிகிச்சையில் பெற்றெடுத்த குழந்தையென்று சொல்வார்கள்.
திருச்சியில் அப்போது ஒரு ரூபாய்க்கு சாம்பார் கறிக்கு தேவையான அனைத்து மரக்கறிகளையும் வாங்கலாமென்றிருந்தது எனக்குப் பெரிய அதிசயம் தான். அதுமட்டுமல்லாமல் பொதுவாகவே பொருட்களின் விலைகள் நமக்கு அதுவரை பழக்கத்திலிருந்த விலைப் பெறுமதிகளிலிருந்து பெருமளவு வேறு பட்டிருந்தன. நான் வழமையாக செல்லும் கடைக்காரர் எனனைச் சிலோன் தம்பி என்பார். அவரைப் போன்றோருடன் பேசும் போது நானும் தமிழக பேச்சு வழக்கில் பேச முயற்சித்தேன்.
திருச்சியில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் இருப்பதாகச் சொன்னார்கள். ஒருமுறை இலங்கையர் ஒருவரின் திருமண நிகழ்வொன்றில், இருவரைக் காட்டி அதோ அவங்கள் தான் தலைவரின் அப்பாவும் அம்மாவும் எனக் காட்டினார்கள். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.
ஆயினும் இந்தவாறான எதிர்காலம் என்னவென்று தெரியாத வாழ்க்கை மீது கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வரத் தொடங்கி விட்டது. பாடசாலைக்கான அனுமதிகள் மறுக்கப் பட்டு விட்டன. எரிச்சல் மெதுவாக கிளம்பத் தொடங்கியது. கனவுகள் கலைந்து விட்ட ஏமாற்றம் தான் எஞ்சியது. ஆரம்பத்திலிருந்த சுற்றித் திரியும் ஆர்வம் அற்றுப் போய் வீட்டில் முடங்கத் தொடங்கினேன்.
யாருக்குப் பயந்து வந்தோமோ அவர்களின் கோட்டையான கொழும்புக்கே போய் விடலாம் என்ற அடுத்த முடிவுக்கு காலம் துரத்தியது. சென்னை விமான நிலையத்தில் வைத்து அகதிகள் முகாமிலிருந்து அனுமதியின்றி செல்கிறீர்கள் என்ற நியாயமான குற்றச்சாட்டினை முன்வைத்த கியு பிரிவு அதிகாரி ஒருவர் நியாயமாய்க் கேட்ட தொகையை கொடுத்து விட்டு விமானம் ஏறினேன்.
நன்றி திருச்சி
நன்றி இந்தியா
(ஒரு கற்பனைக்கு.. திருச்சியில் எங்கேனும் பாடசாலை அனுமதி கிடைத்திருந்தால் எல்லாப் பாதைகளும் மாறி ஒரு வேளை நான் இப்பொது அங்கேயே செட்டில் (ஆமாங்க செட்டில்..) ஆகி விட்டிருப்பேனோ என்னவோ.. :))
யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது
வலைப் பதிவுகளில் நானும் சோமியும் அவ்வப் போது ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத ஏதாவது ஒன்றைப் பற்றி, நகைச்சுவையை மட்டும் மையப்படுத்தி அளவளாவுவோம். என்னை ஒரு மொக்கைப் பதிவு மன்னன் ஆகப் பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவை இருந்து வந்துள்ளன. இது குறித்து அவ்வப் போது சில பெரியவர்கள் நமக்கு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கூறுவார்கள். உங்களிடமிருந்து வரவேண்டியவை இவ்வாறான ஒலிப்பதிவுகள் அல்ல எனவும், இப்படியான பம்பல்களை விட்டுவிட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யலாம் எனவும் அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்கள் வருவதுண்டு.
ஆனால் இதன் அடிப்படையில் என்ன உளவியல் காரணமுண்டு என்பதை யாராவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? இடை நடுவில் பிரித்தெறியப்பட்டு எங்கெங்கோ தேசங்களில் இன்று சிதறுண்டு போய்க் கிடக்கும் இள வயதுள்ளவர்கள் ஏதோ ஒரு வழியில் இணையும் போது அங்கே கூத்தும் கும்மாளமுமே முதன்மையாய்த் தோன்றுவதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா..?
இவை குறித்து மேலும் பேசுவதற்கு முன்னர் ஈழத்தில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த சுமுக நிலை குறித்து பார்த்து விடலாம். அப்போதே அரசியல் ரீதியான முரண்கள் இருந்த போதும் இயல்பு நிலையென்பது பேணப்பட்டது.
இன்றைய பெரியவர்களாக இருக்கின்ற அன்றைய இளைஞர்கள் தம் வயதுக்கே உரிய அத்தனை கைங்கரியங்களையும் செய்திருப்பார்கள். பாடசாலைக் காலத்திலிருந்தே பிரியாத ஒரு நட்புக் கூட்டம் அவர்களுக்கு இருந்திருக்கும். அவர்கள் பூங்காக்களுக்கு நண்பர்களுடன் சென்றிருப்பார்கள். கடற்கரைகளுக்குச் சென்றிருப்பார்கள். ஒன்றாகத் திரையரங்குகளிற்கு சென்று படம் பார்த்திருப்பார்கள். நண்பர்கள் கூடி அரட்டையடித்திருப்பார்கள். நடுச் சாமத்தில் எந்தத் துப்பாக்கிப் பயமும் அற்று உலவியிருப்பார்கள்.
நமக்கு அந்த வாய்ப்புக்கள் கிடைத்தனவா..?
நாங்கள் பிறந்த போதே நிலம் எரிந்து கொண்டிருந்தது. பாலர் பாடசாலைக்குப் போகும் போதே ஊரடங்கு ஏதாவது உள்ளதா என ஆராய்ந்து தானே போக வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடப் பெயர்வுகளிலும் புதிது புதிதாக வந்து சேரும் நண்பர்கள் அடுத்தடுத்த வருடங்களில் பிரிந்து சென்று கொண்டிருப்பார்கள்.
மின்சாரமற்ற பத்துக்கும் மேலான வருடங்கள், எட்டுமணிக்கெல்லாம் அடங்கிவிடும் ஊர்கள், சிதைந்து போன திரையரங்குகள், உயிரின் நிச்சயமற்ற நாட்களென இந்த லட்சணத்தில் எங்கள் தலைமுறை எதை அனுபவித்திருக்க முடியும் ?
ஆயினும் இளமைக் காலத்தை இவ்வாறு இழந்த வருத்தமெதுவும் எனக்கு இருக்கவில்லை, கடந்த நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் சமாதானத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வரை.
2004 இன் நடுக்காலப் பகுதி
நான், சோமிதரன், நண்பர்கள் ஒரு சிலர் யாழ்ப்பாணத்தில் நிற்கின்றோம். அது என்றும் நான் பார்த்திராத யாழ்ப்பாணம். முற்றான சமாதானமென்றில்லாவிட்டாலும் சமாதானம் மீதான நம்பிக்கைகளே அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
நாங்கள் கடற்கரைகளுக்குச் சென்று பாணும் இறைச்சியும் சாப்பிட்டோம். எவரும் பிடித்து விட மாட்டார் என்ற நம்பிக்கையில் இராணுவ முகாம்களைக் கடந்தோம். ஏதாவது ஒரு உள்நுழைவில் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த புலிகள் மற்றும் இராணுவத்தினரைக் கண்டு ஆனந்தம் கொண்டோம். அடையாள அட்டை கேட்காத இராணுவத்தை நட்பாகப் பார்த்தோம்.
நடு இரவுகளில் கள்ளுக் குடித்தோம். கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என பாடிக்கொண்டு இரவின் வீதிகளில் எந்தப் பயமுமற்றுத் திரிந்தோம்.
அது போலவே கொழும்பில் சோதனைச் சாவடியற்ற பிரயாணங்களை அனுபவித்தோம். காலி முகத் திடல் கடற்கரையில் சாமம் தாண்டியும் கதைகள் பேசினோம். பொலிஸ் பதிவுகளை தூக்கி வீசியெறிந்தோம்.
அந்த ஒன்றிரண்டு நாட்களின் அனுபவங்களில் யுத்தமற்ற வாழ்வு எத்தனை மகிழ்ச்சியானது என்பதை அறிந்து கொண்டேன். இவையெதுவுமற்று இழந்த வருடங்களை எண்ணி வருந்தினேன். தங்கள் காலங்களை மகிழ்ச்சியாகக் களித்த அன்றைய இளைஞர்கள் மீது பொறாமை வந்தது.
வயதின் குறும்புகளுக்கு இடம் கொடுக்காத காலம் எங்களது. அந்த அனுபவங்களையெல்லாம் யுத்தம் எங்களிடமிருந்து அடித்துப் பறித்தது.
இதோ அந்த வயதுகளைக் கடந்து அடுத்த கட்டங்களிற்குள் உள் நுழைந்து விட்ட போதும் எப்போதாவது சிதறிக் கிடக்கின்ற நண்பர்களைக் காணுகின்ற போது கடந்த காலத்தினை அனுபவிக்கத் துடிக்கிறது மனது. அந்த அரட்டைகள், அந்த நக்கல்கள், கேலிப் பேச்சுக்கள் என மீண்டும் சிறு பையன்களாகி விடுகிறோம். அது நண்பர்கள் இணைந்த எந்த நிகழ்விலும் வெளித் தெரிகிறது. தவிர்க்கவும் முடியாதது.
சமாதானம் மீண்டும் தன் முகத்தை மறைத்துக் கொண்டு விட்டது. மீண்டும் யுத்தம், சாவு, கடத்தல்கள், அடையாள அட்டை, குண்டு வீச்சுக்கள், செல்லடி. அடுத்த தலைமுறையும் எங்களைப் போலவே வாழ வேண்டுமென்ற விதியாகி விட்டது அங்கே. அவர்களும் நட்பை இழந்து, அரட்டைகளை இழந்து, கடற்கரைகளை இழந்து, பூங்காக்களை இழந்து …..
யுத்தமற்ற நிமிர்ந்த வாழ்வு எவ்வளவு அழகானது..
ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்
ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.
ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.
செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.
ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.
நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.
எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.
ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.
அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை. இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.
நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள். ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.
நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.
ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?
அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.
அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா…
ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.
ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களுடைய ஞாபகம்தான் ஆனந்தன் அண்ணா.
நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?
திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.
ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.
ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.
நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.
பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.
ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.
இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)
என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?
ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..
முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..