விமர்சனங்கள் எந்த அடிப்படையில் உருவாகின்றன என்பதற்கு பொருத்தமான இரண்டு வழிகளைச் சொல்ல முடியும். அவை நேரடி அனுபவத்தின் ஊடான தர்க்க ரீதியான சிந்தனையின் அடிப்படையில் உருவாகின்றனவாகவும், இன்னொரு வழியில் நேரடியான அனுபவமோ தொடர்போ அற்ற நிலையில் அது குறித்து அறியப்படும் செய்திகளினூடு உருவாக்கிக் கொள்ளும் கருத்துருக்களாகவும் அமைகின்றன. இவற்றோடு தனி விருப்பங்களும் இணைவதுண்டு.
இன்னொரு வழியில் ஏற்கனவே எடுத்து விட்ட முடிவின் அடிப்படையில் விமர்சனங்களை உருவாக்கிக் கொள்வோரும் உண்டு. அவர்கள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் தமக்கிருக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.
ஆயினும் மேற்சொன்ன இருவழிகளில் ஒன்றான செய்திகளின் அடிப்படையில் தமக்கான கருத்துருவாக்கங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது, அவர்கள் அறிந்து கொள்ளும் செய்திகளில் மட்டுமே தங்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டு மேலே செல்லலாம்.
பொதுவாக ஈழப் போராட்டம் தொடர்பாக தமிழில் சொல்லப்படும், எழுதப்படும், அளவுகளில் வேற்று மொழிகளில் சொல்லப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை நான் பலரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நான் உட்பட பலரும் அவற்றிற்கான முழு முயற்சிகளில் இது வரை இயங்கியதாக இல்லை. அதிலும் குறிப்பாக, அறிந்த பிற மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்தது என்ற நிலை மாறி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில், இன்று பல நாடுகளில் வாழும் இளைஞர்களுக்கு பிற மொழிகள் தெரிந்திருக்கும் நிலையில் அதற்கான முன் முயல்வுகள் என்பது அசாதாரண வேகம் எனச் சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை.
உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் தமிழர் அல்லாதவருக்கு, ஊடகங்கள் சென்றடையும் ஒருவருக்கு, அரச இயந்திரமொன்றில் சம்பந்தமற்ற ஒருவருக்கு இலங்கை தமிழர்கள், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள், அதற்கான முடிவுகள் குறித்து பரந்த அளவில் தெரியாத நிலையில் நமது போராட்டம் உலக மயமாகி விட்டது எனச் சொல்லி விட முடியுமா..? என்ற கேள்விகள் என்னிடம் உண்டு.
இவை, தமிழர்களுக்கு போதுமான அளவு சொல்லியாகி விட்டது என்ற எண்ணத்திலும், தொடர்ந்தும் நமக்குள்ளேயே சொல்வதும், எழுதுவதும் ஒரு வித ஒப்பாரி நிலையைத் தோற்றுவிக்கிறது என்ற நிலைப்பாட்டிலும் எனக்குள் ஏற்பட்ட கருத்துக்களாயினும், அவற்றை மீள்பரிசீலனை செய்ய வேண்டியேற்பட்ட அனுபவம் ஒன்றைக் குறித்துச் சொல்ல வேண்டும்.
அண்மையில் ஒரு தமிழ் களத்தில் தமிழக நண்பர் ஒருவர் கேட்டிருந்த சில கேள்விகள், ஈழத் தமிழரின் நியாயங்கள் மட்டுமல்ல.. ஈழத் தமிழர் குறித்த பொதுவான செய்திகளே இன்னும் தமிழர்களிடத்தில் சென்று சேரவில்லையென்ற சோர்வு நிலையை எனக்குள் தோற்றுவித்தது. அயலிலே வெறும் முப்பது கிலோ மீற்றர்கள் தூரத்தில் இருந்து கொண்டு மொழியால், பண்பாட்டுத் தொடர்புகளால் ஒத்திசைவு உள்ள ஒரு இனத்திடம் கூட நம்மைப் பற்றிய செய்திகள் சென்று சேரவில்லையே.. இந்த லட்சணத்தில் உலகின் பார்வைக்கு நம்மைப் பற்றிக் கொண்டு செல்வதா என்ற ஏமாற்ற உணர்வினை நான் அனுபவித்தேன்.
இணையத்தில் இப்போதும் பார்வைக்கிருக்கும் அக் கேள்விகளை இங்கே மீளப் பதிப்பிப்பதென்பது யாரையும் புண்படுத்தவோ, குத்திக்காட்டவோ இல்லையென்பதை அனைவரும் புரிவீர்கள் என நம்புகிறேன். அந்த நண்பரின் கேள்விகளில் விவரிக்க முடியாத அதிர்ச்சியையும் ஒருவித அயர்ச்சியையும் ஒருங்கே தந்த கேள்விகள் இவைதான்.
1. வாழச் சென்ற நாம் தனி இடம், அரசாங்கம் கேட்பது நியாயமா?
2. 50 வருடங்களுக்கு முன் நாம் கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறி, இன்று கலிபோர்னியா மாகாணம் மட்டும் நமக்கு தனியாக கொடுத்து, சுய ஆட்சி தரவேண்டும் என்று சொன்னால் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா. நீங்கள் அமெரிக்கராக இருந்தால் உங்கள் நாட்டிற்கு வந்தவர்களுக்காக ஒரு பகுதியை வெட்டி தானம் செய்வீர்களா?
3. குடியேற சென்ற தமிழர்கள் இலங்கை முழுவதும் பரவி, அவர்களுடைய கலாச்சாரத்தில் கலந்திருந்தால் இந்த பிரச்சனை நேர்ந்திருக்குமா. தமக்கென்று தனியே ஒரு இடத்தை அமைத்து அதில் வாழ முற்பட்டதாலேயே இந்த தனியிட கோரிக்கைகளும், தமிழர் இருக்கும் இடம் பார்த்து அவர்கள் தாக்க முடிவதும்
4. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக் செல்பவர்கள் தொழிலுக்காக சென்ற அந்த நாட்டிலிருந்தே ஒரு பகுதியை கேட்பது நியாயமா?
ஈழத்திலே 50 வருட கால இனமுரணும், இருபத்தைந்து வருட கால ஆயுதப்போரும் நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அவர்களின் இருப்பு என்ன எனவும், அவர்களது பூர்வீகம் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பும், வெறும் ஐம்பது வருட வரலாற்றினையே அவர்களுக்கு கொடுக்கும் இக் கேள்விகள் குறித்து என்ன உணர்கிறீர்கள்.
ஆரம்பம் தொட்டே ஈழத்தில் தமிழ் பூர்வீகக் குடிகள் இருந்தனவென்பதும், சிங்கள மேலாதிக்க வரலாற்று அல்லது புராண நூலான மகாவம்சம் கூட சிங்களவர்கள் இலங்கை நாட்டிற்கு ( இந்தியாவிலிருந்து) வந்த போது அங்கு ஆதிக் குடியினம் ஒன்று இருந்ததாகச் சொல்லும் செய்திகளும் எப்படிக் கடலைக் கடக்காமல் போயின?
தமிழகத்தில் இருந்து அவ்வப்போது நடத்தப்பட்ட படையெடுப்புக்களினால் ஏற்கனவே அங்கிருந்த மக்கட் கூட்டத்தினோடு சில திருமண உறவுத் தொடர்புகள், பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டனவே தவிர படையெடுப்புக்களினூடு மக்கள் சென்று குடியேற்றப் பட்டார்கள் என்ற செய்திகளை நான் அறிந்திருக்க வில்லை. தவிரவும் ஈழத்தில் நடந்த பல தொல்லியல் ஆய்வுகளும் தமிழர் பகுதிகளில் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்திருக்கின்றன.
உண்மையில் இக் கேள்விகளை ஏதோ திட்டமிட்ட விசமத்தனமான கேள்விகள் என நான் கருதவில்லை. ஒருவர் தான் அறிந்து கொண்ட செய்திகளின் அடிப்படையில் தனக்கான ஒரு கருதுகோளை எடுத்ததன் வடிவமே இது. அதாவது தமிழர் போராட்டம் நியாயமானதா அற்றதா என்பதற்கு அவர் அறிந்து கொண்ட செய்திகளினூடு முடிவினை எடுத்துக் கொள்கிறார். இங்கேதான் உண்மையானதும் சரியானதுமான செய்திகளின் தேவை முதன்மை பெறுகிறது.
ஆரம்பத்தில், ஒரு சிலரிடம் மட்டுமே இவ்வாறான நிலைப்பாடுகள் இருக்கலாம் என்றிருந்த எனக்கு, அண்மையில் ரவிசங்கர் ஒரு ஒலிப்பதிவிலும், பாரி அரசு ஒரு பின்னூட்டத்தில் மிகப்பரந்து பட்ட அளவில் இந்த எண்ணம் தமிழகத்தில் உள்ளதாகச் சொன்னார்கள்.
ஓர் அறியும் ஆர்வத்திற்காக இந்தக் கேள்வி. தமிழகத்தின் தமிழர்களின் அதே வரலாற்றுக் காலம் தொடக்கம் ஈழத்திலும் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை ஏற்கனவே நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா.. ? இல்லையெனில் ஐம்பது வருடங்களிற்கு முன்னர் சென்றவர்கள் போன்ற செய்திகளை எப்படி அறிந்து கொண்டீர்கள்..?
(இங்கே ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டங்களிற்கு வேலைக்காக கூட்டிச் செல்லப்பட்ட தமிழர்கள் குறித்த குழப்பங்களும் ஏற்பட்டிருக்கலாம். அவர்கள் ஈழத்தில் தமிழரின் பாரம்பரிய நிலங்களான வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து நேரடி நிலத் தொடர்பற்ற மத்திய பகுதிகளில் தமக்கென தனியான அரசியல் தலைமைகளுடன் செயற்படுகிறார்கள். நடந்து முடிந்த சில பல கலவரங்கள் காரணமாக அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழர் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்து சென்று இன்று தமிழர் போராட்டத்தின் பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் ஆகி விட்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தில் நேரடிப் பங்களிப்பவராகவும் உள்ளார்கள்.)
இந்த மாதிரியான தவறான முடிவுகளுக்கான தவறான செய்திகளுக்கு என்ன காரணம்..?
சரியான செய்திகளை கொண்டு வராதவர்களின் தவறா?
சரியான செய்திகளை தெரிந்து கொள்ள ஆர்வமற்றவர்களின் தவறா..?
அல்லது இவ்வாறான செய்திகளை வேண்டுமென்றே திட்டமிட்டுப் பரப்பும் சில அதிகாரங்களா..?