சினிமா

கண்ணே உனைத் தேடுகிறேன் வா

இது நான் இரண்டோ அல்லது மூன்றாவது வகுப்போ படிக்கும் போது நடந்தது என நான் குறிப்பிடுவது, உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். வழமையாக இதெல்லாம் பத்தோ அல்லது பதினொன்றோ படிக்கும் போது தானே நடக்கும் என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ஓம் அப்பவும் நடந்தது தான். (அது வேறை கதை) ஆனா இது அதெல்லாத்துக்கும் மூத்ததும் முதன்மையானதும் என்பது தான்.

வடிவாச் சொன்னால் அது நான்காம் ஆண்டு (வகுப்பு 3) படிக்கும் போது நடந்தது தான். என்னோடை படிச்ச ஆக்களில சிலரை இந்தக் கதைக்காக நான் ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பரந்தாமன், கண்ணதாசன், ஐயா (இவனை இப்படித்தான் கூப்பிடுறாங்கள். முழுப்பெயர் மறந்து போச்சு), பாமினி, ராதிகாவோ ரசிகாவோ, இவர்களோடு நான். இவர்கள் போதும். இதில ஒருவித போட்டி எனக்கும், கண்ணதாசனுக்கும், பாமினிக்கும் இடையில் இருந்தது. இப்ப யோசித்தால் அது எங்களுக்குள் இயல்பாக எழுந்த போட்டியில்லாவிட்டாலும், வெளியிருந்த ஆக்களால் ஏற்படுத்தப்பட்ட, அல்லது ஊட்டப்பட்ட போட்டிதான் அதுவெனப் புரிகிறது. அதுவும் அடுத்த வருசம் நடக்க இருந்த புலமைப் பரிசில் பரீட்சைக் காய்ச்சல் பெற்றோர்களூடாக எங்களுக்கும் தொற்றியிருந்த காலம் அது.

என்னுடைய கையெழுத்து கொஞ்சம் உறுப்பாக இருப்பதுண்டு. இது தான் அந்தச் சம்பவத்துக்கு காரணமாய் அமைந்தது. வகுப்பில் ரீச்சர் வராத ஒரு நாள் பரந்தாமன் தன்ரை கொப்பி நடுப்பக்கத்தில ஒரு காதல் கடிதம் எழுதித் தரச் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல நான் எழுதுவது தான் அவனுடைய திட்டம். அவனுக்குக் கடிதம் எழுதிக் கொடுப்பதால எனக்கு எந்த ஒரு இழப்பும் இல்லையெண்ட படியாலை நானும் அதுக்குச் சம்மதித்தேன்.

கடுமையாக யோசித்துப் பார்த்தாலும் அந்தக் கடிதம் முழுவதும் நான் என்ன எழுதினேன் என நினைவுக்கு வருகுதில்லை. ஆனால் இரண்டு விசயத்தை சொல்லலாம். அது கடிதம் எங்கும் பரந்தாமன் தன்னை, அத்தான் என விளித்து எழுதச் சொன்னான். அதாவது அன்பு அத்தான் எழுதுவது எண்ட மாதிரியும், இப்படிக்கு அத்தான் எண்ட மாதிரியும்.

அதை விட இன்னொரு விசயம் இன்னும் பம்பலா இருக்கும். கடிதத்தின் இடையே அவன் ஒரு பாடலின் வரிகளைச் சேர்க்க விரும்பியிருக்க வேண்டும். அதனாலை கடிதத்தின் முடிவில் ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என அவன் எழுதச் சொன்னான். எனக்கென்னவோ அந்த வரிகள் பிடிக்கவில்லை எண்டதால என்ர அபிப்பிராயத்தை சொல்லத் தொடங்கினன்.

உது பழைய பாட்டு. உதை விட கண்ணே உனைத் தேடுகிறேன் வா எண்ட பாட்டை எழுதினால் நல்லாயிருக்கும் என நான் சொல்ல, அதை அவனும் ஓமெண்டு ஏற்றுகொள்ள, கடைசியில கடிதம் முடிவுக்கு வாற நேரம் கண்ணதாசன் எல்லாத்தையும் குழப்பிட்டான். ஓம்.. அவன் நாங்கள் கடிதம் எழுதின விசயத்தை, அடுத்த பாடத்துக்கு வந்த ரீச்சரிட்டை போட்டுக் கொடுத்திட்டான். எங்கள் ரண்டு பேருக்கும் பப்ளிக்கில வைச்சு அடியோ அடி. ரீச்சர் பரந்தாமன் கேட்ட படியாலை தான் எழுதிக் கொடுத்தனான் எண்டு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவனுக்கு விழுந்த அதேயளவு அடி தான் எனக்கும் விழுந்தது.

இதெல்லாத்தையும் விட, அன்று விழுந்த அடிகள் எனக்கு எழுத்தறித்தவர்களின் கண்டிப்பை உடனடியாகவும், அதே வேளை அவையள் என்ன ஆக்கள்..? நீங்கள் என்ன ஆக்கள்? உதெல்லாம் தேவையோ என்ற ரீதியில் அவர்கள் சொன்ன வார்த்தைகள், அவர்களின் சமூக மனநிலையை, பின்னாளிலும் உணர்த்தின.

பின்னாளில் இந்தச் சம்பவம் மிகப் பிரபலமாகி ஊர் வரைக்கும் பரவி விட்டிருந்தது. இன்றைக்கும் எனக்கு நெருக்கமான நண்பர்களிடத்தில் மூன்றாம் ஆண்டில கடிதம் எழுதினவன் என்ற பெயரில் நான் விளிக்கப் படுவதுண்டு. மூன்று வயதில் தேவாரம் பாடிய சம்பந்தரைப் போல.

சில பிற்குறிப்புக்கள் : காட்டிக் கொடுத்த கண்ணதாசன் எனது நெருங்கிய உறவினன். அவன் மீதிருந்த கோபத்தை பின் நாட்களில் பாடசாலையில் செய்த நாடகங்களில், அவனுக்கு காக்கை வன்னியன், எட்டப்பன் வேடங்களைக் கொடுத்து தீர்த்துக் கொண்டேன். 2005 இல் அவனைச் சந்தித்து இந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அவன் சொன்னான் அதெப்படி நான் ஒருத்தன் அவளைக் காதலிக்க நீங்கள் கடிதம் குடுப்பியள்..?

இதேவேளை சோமிதரனை சந்தித்த எனது பாடசாலை நண்பர் ஒருவன் இதே கதையை வரலாற்றைத் திரிபு படுத்தி சோமிக்கு சொல்லியிருந்தான். அதாவது நிஜமாகவே நான் தான் கடிதம் எழுதியதாகவும் அகப்பட்ட நேரத்தில் அதனை பரந்தாமன் தலையில் கட்டிவிட்டதாகவும் அவன் சோமிக்கு சொல்லியிருந்தானாம். சோமி பாவம் . சந்தர்ப்ப சூழ்நிலைகள் சோமியை நம்ப வைத்திருக்கின்றன.

By

Read More

ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல்

நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது.

இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும் இதையும் செய்து தான் பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆர்வத்தில் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவுகள் இடையூறு இல்லாத, இரைச்சல் இல்லாத, வானொலித் தரத்தில் அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறில்லாமல் வெறும் இரைச்சல்களோடும், விக்கி விக்கியும், ஸ்.. என்ற சத்தங்களோடும் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது தொடர்ந்து கேட்கின்ற ஆர்வத்தைக் கொடுக்காது என்று நாமறிவோம்.

இந்த உரையாடல் ஈழத்தின் போர்ச் சூழலில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பேசுகின்றது. நமது இளைய நாட்களில், நாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழக சினிமா தடைக்கும், தணிக்கைக்கும் உட்பட்டிருந்த பொழுதுகளில் ஈழத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் மீது எமக்கு இயல்பாகவே ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதி, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார். (சோமிதரன் கேரளாவில் படப்பிடிப்புக்களில் இருப்பதனால் அறுவராகி அறுவாராகாமல் தப்பித்தோம்;)

இந்த ஒலிப்பதிவு கடந்த சித்திரைப் பொங்கலுக்கு வர இருந்தது. ஆயினும் இன்று வரை அதன் தொகுப்பு வேலைகள் முடியாத படியால்.. இப்படி ஒன்றைச் செய்தோமென, பிலிம் காட்டவாவது ஒரு முன்னோட்டமாக சில பகுதிகளை வெளியிடுகிறோம். (சிநேகிதியின் உரையாடல் தெளிவின்மையாக இருப்பதனை சி.ம கலையகம் கவலையுடன் உணர்ந்து கொள்கிறது:(



By

Read More

ஒரு பூனையின் வாக்குமூலம் – வீடியோ

தமிழ் இணையச் சூழலில் வீடியோப் பதிவுகள் எவ்வளவு தூரம் பரவல்த் தன்மை கொண்டதென்பது கேள்விக்குரிய ஒன்றாயினும், Google विडो, You tube போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் தமிழ் ஒளித் தொகுப்புக்கள் ஓரளவுக்கு அவற்றின் பரவல்த்தன்மையை எடுத்துச் சொல்கின்றன

வீட்டுப் பூனையை வைத்து இரு மாதங்களுக்கு முன்பொரு தடவை செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும் என ஒரு ஒளிப்படப் பதிவினை இட்டபோது, இவ்வாறே ஒரு வீடியோ பதிவிட்டால் என்ன எனத் தோன்ற அடுத்த வாரங்களிலேயே பூனையை வைத்து படப்பிடிப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, வீடியோ தொகுப்பினை அறிந்து கொண்ட காலங்களில் அதிலிருந்த ஆர்வம் பின்னர் அற்றுப் போனதெனும் நிலை வரை குறைந்து விட்டிருந்தது. அதனால் எடுத்த ஒளிக் காட்சிகளைத் தொகுத்தல், குரல் கொடுத்தல் என அலுப்படித்த வேலைகளில் ஈடுபடாமலே விட்டுவிட்டேன்.

மீண்டும் இப்போ பதிவுலகில் நான் மிச்சம் வைத்ததாக இருக்கக் கூடாது என்ற நினைப்பில் அவற்றைத் தூசி தட்டியிருக்கிறேன் கொஞ்சம் மினக்கெட்டால் இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும்

பிற்குறிப்பு: குளோஸ் அப் காட்சிகளில் பூனை மிரண்டு விடாமல் இருக்க நான் வீடியோ எடுப்பதனைத் தவிர்த்து வேஜினியாவிடம் கொடுத்திருந்தேன்। போஸ் கொடுக்கும் காட்சிகளில் பூனையும் ஒத்துழைப்புத் தந்தது. படத்தை தொகுத்து விட்டு பின்னர் ஓட விட்டு, குரலைப் பதிந்தேன். (இதனையும் சிறப்பாக செய்திருக்கலாம்)



By

Read More

இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்

ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: )

வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை பற்றி நெடுநேரம் பேசியிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட அந்த உரையாடலை அவ்வப் போது வெட்டித் தொகுப்பதுவும் பின்னர்.., அது அவருக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டு வரலாம் என, அவற்றில் மீண்டும் வெட்டுவதுமாகத் தொடர்ந்து, எஞ்சியவற்றை வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கு இப்போதுள்ள பதிவு வந்துள்ளது.

பேச்சினூடே 95 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்த போது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டது உட்பட பலதடவை சிறை சென்றதை வரவனையான் சொல்லியிருந்தார்.

ஒருவேளை இந்தியாவின் ஜனநாயகச் சூழல் இலங்கையின் ஜனநாயகச் சூழலைவிட ( அப்படியொன்று இருந்தால்) அதிகம் மேன்பட்டதாக இருக்கக் கூடும். ஆயினும் இலங்கைச் சூழலில் எவ்வாறான பேச்செல்லாம் உயிரைப் போக்கவோ, சித்திரவதையை அனுபவிக்கவோ வழிவகுக்கும் என்ற அளவு கோலில் வெட்டித் தொகுத்த இப்பதிவு வேறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்தது.



By

Read More

மொக்கை ஒன்று குறித்த விளம்பரம்

வலைப் பதிவில், வரப்போகின்ற ஒரு பதிவு குறித்து, இது வரை முன்கூட்டியே யாரேனும் விளம்பரம் கொடுத்திருப்பார்களா எள தெரியவில்லை. இல்லையெனின் அதனையும் முதற்செய்யும் பெருமிதத்தோடு..

இதுவரை உரையாடல்களில், இருவரை மட்டுமே இணைத்திருந்த நிலை மாற்றி மூன்று நபர்களோடு மொக்கையை ஆரம்பிக்கிறோம். வரவனையானுடனான இவ்வுரையாடலில் பல்வேறு பட்ட அவருடைய பார்வைகளை அறிந்து கொள்ள முடிந்தது. வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை, சமூக நிலையும் மாற்றங்களும் இவற்றோடு, வேறுபட்ட பிரதேசச் சூழல்களில் பேசப்படும் வட்டாரத் தமிழ் என பல தளங்களில் இந்த உரையாடல் விரிந்தது.

முழுமையாக வெட்டிக் கொத்தித் தொகுக்கத் தேவைப்படும் கால இடைவெளி சற்று அதிகமாக இருக்கும். ஆயினும் நாங்க இப்பிடிச் செய்தோமே என ஒரு பிலிம் காட்டும் பதிவு இது. அங்கங்கே வெட்டியெடுத்த துண்டுகளை இணைத்திருக்கிறேன்.

வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டக் கலாசாரம் என்பது குறித்து கடுமையான வாதப் பிரதி வாதங்கள் நடந்திருக்கிறது. ஆகவே கேட்கத் தவறாதீர்கள்.



By

Read More

× Close