காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.
நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.
ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.
சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.
நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு பேசினான்.
தனக்கான கல்லறை யார் மனதிலும் வந்து போகாதென்பது அவனுக்குத் தெரியும்.
ஒரு நாளில்
தயாரானான்
புறப்பட்டுப்..
போனான்.. திரும்பவில்லை
தடைகள் தகர்த்தெறியப்பட்டன என இவன் தலையங்கம் எழுதினான்.
அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்தான்.
முக்கிய திருப்பங்களை குறித்தான்.
இறந்த நிகழ் மற்றும் எதிர்காலங்களில் இருந்து தரவுகள் சேர்த்தான்.
எழுத்தெங்கும் தன் இராணுவ மற்றும் அரசியல் ஆய்வுத்திறன் வியாப்பித்திருக்க விரும்பினான்.
முடித்து அனுப்பி வந்து சேரும் வாழ்த்து மற்றும் பாராட்டுக்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தான். –21/07/2002
முதல்ப் பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
மிக நல்ல ஆய்வு. மிகத் திறமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இரண்டாவது பின்னூட்டம் இவ்வாறு ஆரம்பித்தது.
உங்கள் ஆய்வு புதிய தகவல்களைத் தந்தது.. உங்களுக்குள் இத்தனை திறமைகளா.. பாராட்டுக்கள்
இவனுக்கு மனது குளிர்ந்தது. இப்போது நன்றிப் பின்னூட்டங்கள் எழுத ஆரம்பித்தான்.
பூச்சியத்துக்கு கீழான குளிரில் உடலும் குளிர்ந்தது. விறகெடுத்து மூட்டி வரும் நெருப்பில் கதகதப்பை உணர்ந்தான்.
அந்த விறகுகள் இவனுடையது இல்லை. – 05/04/2007