நேற்று ஒரு செய்தி கேட்டன். இலங்கையில சுனாமியாலை பாதிக்கப்பட்ட இடங்களில அபிவிருத்தி பணியளை செய்யிறதுக்கு உலக நாடுகள் குடுக்கிற நிதியை சரியா பங்கிடுறதுக்கு பொதுக்கட்டமைப்பு ஒண்டை புலிகள் முன் மொழிஞ்சிருந்தவையெல்லோ. அதின்ரை பேரை அதாவது பொதுக்கட்டமைப்பு எண்ட பேரை முகாமைத்துவ வியூகம் எண்டு மாத்துறதுக்கு இலங்கையின்ரை அதிபர் ஆலோசிக்கிறாவாம்.
சுனாமி அடிச்சு ஆறு மாசம் ஆகப்போகுது. சரியா பாதிக்கப்பட்ட நிறைய இடங்கள் இலங்கை அரசின்ரை நிர்வாகம் நடக்காத புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியள் எண்டதாலை சுனாமிக்கு வெளிநாடுகள் வழங்கிற நிதியினை சரியா பங்கிட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெண்டதாலை புலிகள் பொதுக்கட்டமைப்பு யோசினை ஒண்டை நோர்வே நாட்டுக் கூடாக முன்வைச்சினம்.
அதுக்குள்ளேயே ஆயிரம் இழுபறியள் வந்து கடைசியா (களைச்சுப் போய்) நோர்வேயும் சில திருத்தங்களை செய்து ஒரு யோசினையை முன்வைக்க சரியெண்டு புலிகள் அதை ஏற்றுக்கொண்டினம்.
புலிகள் ஏற்றுக்கொண்ட நாளிலை இருந்து சந்திரிகாவும் ஏற்றுக்கொள்ள போறன்.. இந்தா ஏற்றுக்கொள்ள போறன்.. எண்டு சொல்லி இப்ப ஏற்றுக்கொண்டிட்டன்.. இனி நடைமுறைப்படுத்த போறன் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறா.
அதுவும் கடைசியா கண்டியில நடந்த ஒரு மாநாட்டில( மாநாடு எண்டு தாங்களே தங்களுக்குள்ளை நடத்தினவை. இது ஒரு….. என்னெண்டு சொல்லுறது..? கிட்டத்தட்ட கட்சி மாநாடு மாதிரி) தன்ரை உயிரைக் குடுத்தெண்டாலும் பொதுக்கட்டமைப்பை கொண்டு வருவன் எண்டு சொல்லியிருக்கிறா.
இலங்கைய ஆளுற கட்சியிலை சந்திரிகா இப்பிடி சொல்ல அதே கட்சியில இருக்கிற ஜே வி பி அதெல்லாம் குடுக்க முடியாது. குடுக்கவும் கூடாது எண்டு துள்ளுது.
உண்மையில அமெரிக்கா உட்பட்ட பல நாடுகள் பொதுக்கட்டமைப்புக்கு தங்கடை ஆதரவை தெரிவிச்சிட்டினம். (இந்தியா அதை விரும்பவில்லை எண்டு வெளிப்படையா சொல்லிட்டுது. நல்லது.நன்றி)
தமிழ்ச்செல்வன் தமிழீழ தேசிய தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டியொண்டில காலத்தை இழுத்தடிக்கிறதுக்காகவே சந்திரிகாவும் ஜே வி பி யும் மாறி மாறி இப்பிடி நடந்து கொள்ளுகினம் எண்டும் மற்றும்படி அவைக்குள்ளை நல்ல நெருக்கம் இருக்கெண்டும் தாங்கள் நம்புறதாக சொல்லியிருக்கிறார். ஆரும் ஏன் பொதுக்கட்டமைப்பு இன்னும் சரிவரேல்லை எண்டு கேட்டால்.. பொறுங்கோ அதைப்பற்றி எங்கடை கட்சிக்குள்ளேயே பிரச்சனை இருக்குது. அதை முடிச்சுப் போட்டு வாறம் எண்டு சொல்லுறதுக்கு தான் உந்த கூத்தெல்லாம் எண்ட சாரப்பட தமிழ்ச்செல்வன் சொல்லிருக்கிறார்.
இதுக்கிடையில தான் உந்த பெயர் மாத்துற செய்தியை நேற்றுக் கேட்டன். ஒருவேளை பொதுக்கட்டமைப்பு எண்டுறது ராசியில்லாத பேரோ? எண் சாத்திரப்படி சரியில்லையோ தெரியேல்லை. அது தான் உப்பிடி இழுபடுதோ..
சரி.. இப்ப முகாமைத்துவ வியூகம் எண்ட பெயர் வைக்க ஆலோசிக்க, ஜே வி பி விடுதோ இல்லயோ ஆர் கண்டது.
என்னவோ, எனக்கு தெரிஞ்ச அளவில ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமி மாதிரி ஏதாவது ஒரு அழிவு வருமாம். இதுக்கு முதலும் பெரிய கடல் கோள் வந்து நிறைய இடங்கள் அழிஞ்சதாம்.
அடுத்த சுனாமி வர முதல் உந்த பொதுக்கட்டமைப்பை ஒருக்கா பாத்து முடிச்சால் இலங்கை அரசாங்கத்தக்கு புண்ணியமாப் போகும்.
புலிகளை இதில சேத்துக் கொண்டால் அவங்களை பெரிய மனிசர் ஆக்கிப்போடும் எண்டு நினைக்காமல், அல்லது எங்களுக்கு பக்கத்தில ஒரு இயக்கம் இப்பிடி வளருகிறது என்பது எங்கடை தேசிய பாதகாப்பிற்கு அச்சுறுத்தல் எண்டு நினைக்காமல்..
எல்லாத்தையும் இழந்து போய், ஏதேனும் உதவியள் கிடைச்சால் திரும்பவும் ஒருக்கா வாழ முயற்சிக்கலாம் எண்ட நம்பிக்கையோடை இருக்கிற சனத்தையும் யோசிச்சுப் பாத்தினம் எண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்.