முதன்மை

அதிகாரப் பரவலாக்கலும் இலங்கைக்கான பொருத்தப்பாடும்

17 யூன் 2012 சுவிற்சர்லாந்து உரையாடல் அரங்கு நிகழ்வில் சசீவன் ஆற்றிய உரையாடலின் முழுமையான காணொளி. கீழ்வரும் விடயங்கள் குறித்து உரையாடல் அமைக்கப்பட்டிருந்தது.

Power : History and Devolution
அதிகாரத்தின் வரலாறு.

1. குடும்ப அமைப்பு மற்றும் குழுக்களிடையே அதிகாரம்.
2. நிலப்பிரபுத்துவகால அதிகாரம். (மன்னராட்சி மூலமான மத நிறுவனங்களின் அதிகாரம்)
3. அரசு என்ற எண்ணக்கருவும் அதிகாரமும்.
4. தேசிய இனங்களை மையப்படுத்திய அரசும் அதிகாரமும்.
5. பூர்த்தியடையாத தேசிய அபிலாசைகளும் அதிகாரப் பரவலாக்கமும்

அரசுகளை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல் என்னும் எண்ணக்கரு

1. தேசிய இனங்களை மையப்படுத்திய அதிகாரப் பரவலாக்கல்.
2. பின்காலனித்துவ காலப்பகுதி – அரசு – அதிகாரப் பரவலாக்கல்
3. பிரதேச அடிப்படையிலான அதிகாரப் பரவலாக்கல்
4. குடியுரிமையும் அதிகாரப் பரவலாக்கமும்
5. அடையாள அரசியலும் அதிகாரப் பரவலாக்கலும்

இலங்கையில் அதிகாரப் பரவலாக்கல்.

1. இலங்கை அரசியலில் அதிகாரத்தின் வரலாறு.
2. அதிகாரப் பகிர்வுக்கான கதையாடல்கள்
3. அதிகாரத்தைக் கையகப்படுத்தும் நோக்கிலான போராட்டம்
4. திம்பு உடன்படிக்கை, 13 அம் சட்டச் சீர்திருத்தம், சந்திரிக்காவின் தீர்வுப்பொதி, இடைக்கால நிர்வாக சபை மற்றும் சமஸ்டி பற்றிய உரையாடல்கள்
5. இலங்கையின் இன்றைய அதிகார வரைபடம்

எவ்வாறான தீர்வு பொருத்தமாக இருக்க முடியும்/கூடும்

1. நவீன இறைமைக் கோட்பாடும் தீர்வும்
2. தென்னாசியப் பிராந்தியத்தில் காணப்படும் அதிகாரப் பரவலாக்கம்
3. இந்திய மேலாதிக்கமும் 13 ஆம் சட்டக் கோவையும்
4. பின் – அடையாள அரசியல் காலமும் அதிகாரப் பரவலாக்கலும்
5. குடியுரிமை, மனித உரிமைகள், குழு அடையாளம், பால் சார்ந்த அடையாளங்கள் மற்றும் இனத்துவ ரீதியிலான அதிகார வரைபடம்.

மார்க்சிய நோக்கிலான அதிகார வரைபடம், மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் அதிகாரச் சமன்பாடு.

By

Read More

ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார்.
Audio Quality: Good – Video Quality: Poor

By

Read More

முதல் விமர்சனம்

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லையென்பதே காலம் எனக்களித்த கருணை:)

புடுங்கியிருக்கிறது என்ற சிறுகதையொன்றிற்காக கருணாகரன் அண்ணன் இந்த விமர்சனக் குறிப்பை 2009 ஓகஸ்டில் அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியாக அது எனக்குக் கிடைத்தது. எனக்கான முதல் விமர்சனமாக அமைந்ததினால் மட்டுமன்றி – அப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடாதபடி முகாம் வாழ்க்கையில் அவரது காலம் மூழ்கடிக்கப்பட்டிருந்த அச் சூழலில் அவர் எழுதியனுப்பிய அவ் விமர்சனக் குறிப்புக்கள் என்னளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன.

அதனை மூன்று வருடங்களுக்குப் பிறகு நண்பர்ளோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

குறிப்பிட்ட அந்தச் சிறுகதையை இங்கே வாசிக்கலாம்

அன்புள்ள சயந்தன்
தீபச்செல்வன் அனுப்பியிருந்த உங்களுடைய சிறுகதையை வாசித்தேன். இன்றைய புதிய வகை எழுத்துப் பிரதி அது. பின் நவீனத்துவப் பண்புடன் எழுதப்பட்டுள்ளது. மெய் விவரிப்பு அல்லது உண்மை நிகழ்ச்சிகளைப் பிரதியிடுதல் என்பது இன்றைய புதிய வகை எழுத்தில் முதன்மையாகிறது. யாழ்ப்பாண இடப்பெயர்வை மறை பொருளில் கலா பூர்வமாகச் சொல்லும் கதை அல்லது பிரதி. சிலர் இதனைக் கதை இல்லையென்றும் மறுக்கக் கூடும். மரபு ரீதியான வாய்ப்பாட்டுக்குள் அல்லது அணுகு முறைக்குள் நின்று பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். ஆனால் இது மெய் விபரிப்புக் கதை. அல்லது கதை சார்ந்த புனைவியல் சார்ந்த பிரதி.
நீங்கள் முன்னர் எனக்கெழுதியனுப்பிய கதைப்பிரதிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. எழுதும்போது அதிலும் இணையத்தில் எழுதும்போது ஒரு வகையான மொழிதலும் விவரிப்பும் ஏற்படுவதை பலரிடமும் பார்த்திருக்கிறேன். அது உங்களுக்கும் சாத்தியமாகியுள்ளது. இந்த மாதிரிப் பிரதிகள் முக்கியமானவை. அனுபவத்தை சேகரமாக்குவதிலும் தொகுப்பதிலும் வெற்றியடைந்துள்ளீர்கள்.

யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பற்றி அறிந்திராத பிற வாசிப்பாளர்களுக்கு கதை முழுதாகப் புரியாமலிருக்கலாம். அது எந்தத் தளத்தில் எந்தப் பின்னணியில் அல்லது எந்த மையத்தில் நிகழுதென்று தெரியாமல் விளங்காமல் இருக்கலாம். ஆனால் அந்த இடப்பெயர்வைத் தெரிந்தவர்களுக்கு அந்நாட்களின் அனுபவம் கண்முன் நிறுத்தப்படுகிறது.

முக்கியமானதென்னவென்றால் இந்தப் பிரதியில் பேசப்படும் விவகாரங்கள் கடுமையான விமர்சனத் தொனியும் உருவாக்கப்பட்ட புனைவு வெளிக்கெதிரானவையுமாகும். யாழ்ப்பாணத்தில் நிலை பெற்றிருக்கும் சாதீயக் கட்டுமானத்தை எந்தச் சக்தியாலும் சிதைக்க முடியவில்லை. அதே வேளை அது எவ்வாறு புதிய அதிகாரச் சக்திகளுடன் சமசரத்திற்கும் விட்டுக்கொடுப்பற்ற வகையில் போலி நடப்புடனும் இருக்கின்றது, இயங்குகின்றது என்பதை தெளிவாக சுவைபட எழுதியுள்ளீர்கள். இந்த மாதிரி எழுத்தில் ஷோபா சக்தி தேர்ந்தவர். ஆனால் அவரது எழுத்தில் நேரடியாக ஒரு தரப்பைக் குற்றம் சாட்டும் அல்லது கண்டிக்கும் இயல்பு துாக்கலாக இருக்கும். ஆனால் கலாபூர்வமாகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் எழுதுபவர்களில் அவர் முக்கியமானவர்.

உங்களுடைய இந்தக் கதையில் விமர்சனமும் உண்மைச் சுட்டுதலும் தெளிவாக முன்வைப்பட்டுள்ளன. அத்துடன் பிரதியின் உள்ளே கேலியும் நகைச்சுவையும் அதனோடிணைந்த துயரமும் இருப்பதையும் இயங்குவதையும் உணர முடிந்தது.

நண்பர் ஷோபா சக்தி ஒரு இடத்தில் குறிப்பிட்டதைப்போல பள்ளன் இல்லாத வேறு சாதியில் எவன் மரம் ஏறுகிறான்.. அம்பட்டனைத்தவிர வேறுயார் தலை மயிர் வெட்டுகிறார்கள்.. வண்ணானைத்தவிர வேறு சாதியில் எவராவது துணி வெளுக்கத் தயாரா.. பறையனை விட வேறு யாராவது மலம் அள்ளவும் பறை அடிக்கவும் வருவார்களா.. என்ற தொனி உங்கள் கதையிலும் ஒலிக்கிறது. போராட்டத்தின் போது சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற போலி அபிப்பிராயத்தையும் போலி நம்பிக்கையையும் மிகச் சாதாரணமாக மிக இயல்பாகச் சொல்லி வருகிறீர்கள்.. அசல் யாழ்ப்பாணத்துக் கதை. அசலான பாத்திரங்கள். அசலான நிகழ்வுகள். எதுவும் பாதிக்காத யாழ்ப்பாணம். அல்லது எந்தத் தாக்கத்திற்கும் ஈடுகொடுத்து தன் கரையாத தன்மையைக் காப்பாற்றும் யாழ்ப்பாணம் இதுதான்.

இதனால்தான் இந்தச் சிந்தனையாலும் மனப்பாங்கினாலும்தான் நமது அரசியலே இந்தளவுக்கு சேதங்களை விளைவிக்கும் படியானது. இதனாற்தானே ஐரோப்பா வரை அமெரிக்கக் கண்டம் வரை அவுஸ்ரேலியாவுக்கும் கூட யாழ்ப்பாணத்தின் சாதி போய்ச் சேர்ந்தது.

ஆனால் ஒரு விசயம் சயந்தன், யாழ்ப்பாணத்தை விட வலிகாமத்தை விட வசதிகளில் வாழ்க்கை அமைப்பில் தென்மராட்சி ஏதோ குறைந்த மாதிரி ஒரு அபிப்பிராயம் தொனிக்க கதை எழுதப்பட்டுள்ளதே.. நீங்கள் இதைத் திட்டமிட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் அப்படித் தோன்றுகிறது. குறிப்பாக மலசலத்துக்கு பற்றைக்குப் போவது. குளிப்பதற்கு மறைப்பு இல்லை. இது ரவியண்ணை வீட்டில் மட்டும்தானா அல்லது தென்மராட்சியின் குறியீடா.. அதே வேளை பத்மாக்காவை விடவும் ரவியண்ணை மேலானவராக இருப்பது மனப்பாங்கில் தென்மாராட்சியினர் வேறுபட்டவர்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள் என்றும் கொள்ளலாம்.

கதை மொழி மிகச் சுவாரசியமானது. அ.முத்துலிங்கம் ஷோபாசக்தி இருவரும் எனக்குப் பிடித்தவர்கள். அத்துடன் கருணாகரமூர்த்தியும். இது இன்னொரு வகையான தினுசு. இந்த மாதிரி சுவாரஸ்யம் ததும்ப உண்மை நிகழ்ச்சிகளை விவரிப்பதில் இரவி அருணாச்சலம் கெட்டிக்காரர். இப்போது சயந்தனும் இந்த வரிசையில்.. மகிழ்ச்சியே..

எழுதுங்கள் சயந்தன். இன்னொரு கதை பற்றி இன்று பிரபா சொன்னான். கிடைத்தால் வாசிக்கலாம்.

அன்புடன் கருணாகரன்
07/08/2009

By

Read More

பிரபாகரனுக்கு இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை – விகடன்

”இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் அவனுக்கு இருந்தன. அவற்றில் சதா காலத்துக்கும் ஒரேயரு கனவு மீதம் இருந்தது. அது தனி எரித்திரிய விடுதலை தேசம்!”

– தனது ‘ஆறாவடு’ நாவலின் இறுதி அத்தியாயத்தை இப்படி ஆரம்பிக்கிறார் சயந்தன். 50 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு கால ஆயுத யுத்தம் என நாடுநாடாக நிழல் தேடி ஓடிய ஈழ மக்களின் ஓட்டத்தையும் அதன் கொடும் வலியையும் மக்களின் பார்வையில் இருந்து தனது நாவலில் பதிவுசெய்திருக்கும் சயந்தன், அண்மையில் தனது நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதில் இருந்து…

”இடப்பெயர்வுதான் ஈழ மக்கள் சந்தித்த இரண்டாவது பெரும் யுத்தம். ஒரு பக்கம் இனவாத அரசு, இன்னொரு பக்கம் ஊரைவிட்டுத் துரத்தும் இடப்பெயர்வுகள் என இயற்கையோடு மோதிய உயிர் விளை யாட்டு அது. அப்படித்தான் எங்களின் இடப்பெயர்வும் நடந்தது. எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, 1983-ல் அப்பா சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்ந்தார்.

1995-ல் நடந்த மாபெரும் இடப்பெயர் வில் நானும் அம்மாவும் தங்கையும் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவில் காடு கள் சூழ்ந்த தேவிபுரம் எனும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தோம். மூன்று வருடங் களுக்குப் பிறகு ‘வெற்றி நிச்சயம்’ என்ற பெயரில் வன்னி மீது இலங்கை ராணுவம் பெரும் எடுப்பில் போர் தொடுத்தது. மீண்டும் உயிர் வாழ்க்கை நிச்சயமற்ற தாகியபோது, மன்னாரில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தோம். சற்றே பெரிய மீன்பிடி வள்ளத்தில் சுமார் 40 பேர் பயணித்தோம். வெறும் 18 மைல் இடை வெளியில் இந்தியாவும் இலங்கையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அகதிகளுக்கு அந்தத் தூரம் கொடும் அமைதி சூழ்ந்த பெருந்தூரம். வாழ்தலுக்கான கனவைக் கடலுக்குக் காவு கொடுத்திடாமல் தப்பிப் பிழைப்பதே இயற்கையோடு நாங்கள் நடத்தும் போராட்டம்தான். இரவு 10 மணிக்குப் புறப்பட்ட வள்ளம் மறு நாள் காலை 10 மணி அளவில் கடலில் வைத்து ராமேஸ்வரத்தின் வெளிச்சக் கோபுரம் ஒன்றை மெல்லிய ஒளிக்கோடாகக் காட்டியபோதுதான் மீண்டும் நம்பிக்கை துளிர்விட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து அழைத்துச் சென்று, எங்களை மண்டபம் அகதி முகாமில் தங்கவைத்து இருந்தார்கள்.

அங்கு காலையில் எழுந்ததும் கடலை வெறித்துப் பார்த்தபடி இருந்தோம். பின்னர் மதியம், அந்தியிலும் கடலையே பார்த்தோம். கடலைப் பார்ப்பதைத் தவிர, ஒரு குடிமைச் சமூகத்தின் உரிமைகளான கல்வியோ, வேலையோ யாருக்கும் வழங் கப்படவில்லை. பெரும்பாலான குடும்பங் கள், 200 ரூபாயோடும் கொஞ்சம் பருப்பு, அரிசியோடும் வாழ முடியாது இருந்தனர். இவ்வாறான நிலையில், வேறு வழி இல்லா  மல் நாங்கள் களவாக எங்கு இருந்து தப்பி வந்தோமோ, மீண்டும் அந்த தேசத்துக்குக் களவாகவே சென்றோம்.
இலங்கையில் இருந்து சுமார் 15 லட்சம் மக்கள் உலகெங்கும் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். சொந்த நாட்டைவிட்டு ஓடவைத்ததில்… குண்டுகள், ஷெல்லடிகள், கடத்தல்கள், கொலைகள், ஆயுதங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. இந்த ஓட்டம் நிம்மதியான பயணம் அல்ல. கனவை, காதலை, காணியை, பிறந்த வீட்டை, நாட்டை என எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் துரத்தியிருக்கிறது யுத்தம். 80-களின்தொடக்கத்திலேயே மனிதர்களை இலங்கையை விட்டுத் துரத்தத் தொடங்கிய யுத்தம், இன்னமும் துரத்தியபடியே இருக்கிறது!”

‘ஒரு பக்கம் போர் வெடிக்கும் என்கிறார்கள்… இன்னொரு பக்கம் ஈழம் சாத்தியம் இல்லை என்கிறார்கள்… நீங்கள் எந்தப் பக்கம்?”

‘நான் எந்தப் பக்கமும் இல்லை. சில காயங்கள், கவலைகள் இருந்தாலும் என் மனைவி-குழந்தையோடு சுவிஸ்ஸில் ஓரளவு நிம்மதியாகவே வாழ்கிறேன். போர் வேண்டும் என நான் சொல்ல விரும் பினால், முதல் துப்பாக்கியை என் குழந்தையின் கைகளிலேயே கொடுக்கும் யோக்கியனாக நான் இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் எல்லாம் முடிந்துவிட்டது என்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. யாருமே விரும்பாத ஓர் இடத்துக்கு வன்னி மக்கள் வந்துவிட்டார் கள். புலிகளை விமர்சித்தவர்கள்கூட வன்னி மக்களின் இந்தத் துயரத்தை விரும்பவில்லை. பெரும் மரணத் துயருள் சிக்கி, போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலை யிலும் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் தெரியவில்லை. யுத்தம் மக்களைத் தின்று தீர்த்ததே தவிர, அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. யுத்தத்தின்போது இருந்த அதே பதற்றமும் உயிர்க் கொலை அச்சமுமே அவர்களிடம் எஞ்சியுள்ளது. வன்னியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் காணாமல்போன யாரோ ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எஞ்சிய கனவைத் தவிர, வேறு எதுவுமே அவர்களிடம் இல்லை. ஆகக் குறைந்தது, வீடுகளுக்கு முன்னால் நிற்கிற ராணுவத்தினர் கொஞ்சம் அப்பால் நகர வேண்டும்!”

‘ஏகப்பட்ட தமிழ்த் தலைமைகள் ஈழ மக்களுக்காக உருவாகிவிட்டனவே?”

‘ஆமாம்… மக்கள் எண்ணிக்கையைவிட தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. துரோகி, கைக்கூலிப் பட்டங்களும் அதிகம். பிரபாகரன் எடுத்த காரியத்தில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தார். அந்த இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க பெரும்பாலான ஈழ மக்களால் இயலாது. பந்தயத்தில் நாமும் இருக்க வேண்டும் என்றுதான் சிலர் நினைக்கிறார்கள். எல்லோருக்கும் ஈழம்தான் கனவாக இருக்கிறது. ஆனால், அதை அடையும் வழி தெரியாமல் குழுக்களாகப் பிரிந்து மல்லுக் கட்டுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கோ, பிரபாகரனுக்கோ இருந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு, இப்போது எந்த அமைப்புக்கும் இல்லை என்பதுதான் உண்மை. கசந்துபோன மனநிலையில் இருக்கும் ஈழ மக்கள், இன்று சில உண்மைகளை உணர்கிறார் கள். இனப்படுகொலை அறிக்கையை ஐ.நா. வெளியிடுகிறது என்றால், ‘படுகொலையைத் தடுக்காத ஐ.நா. இப்போது அறிக்கை வெளியிடு கிறதா?’ என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்வி மட்டுமே எங்கள் மக்களின் நியாயமான உணர்வு என்று நான் நம்புகிறேன்!”

‘ஈழ மக்களின் இன்றைய தேவை என்ன?”

‘நிச்சயமாக அவர்களால் ஆயுதங்களை உண்ண முடியாது. உலகின் மிக மோசமான ஒரு ராணுவக் கண்காணிப்பின் கீழ் அவர் கள் வாழ்கிறார்கள். தமிழகத்தில் இருந்து சிலர், ‘ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கும்; பிரபாகரன் வருவார்’ என்கிறார்கள். இதை எல்லாம் துளியளவுகூட பாதிக்கப்பட்ட மக்கள் ரசிக்கவில்லை. ரசிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. அவர்களின் நிலம், உணவு, வேலை, கல்வி எனச் சகல வாழ்வுரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கின்றன. எங்கும் பௌத்த விஹாரைகளை நிறுவுகிறது இலங்கை அரசு. ஈழத் தமிழர் களைச் சூழ்ந்துள்ள இருண்ட மேகங்கள் கலையாத வரை அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது. அவர்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்பவும், இழந்தவற்றைப் பெற்றுக் கொடுக்கவுமே நாம் குரல் கொடுப்பது நேர்மையாக இருக்கும்!”

‘இந்தியா இலங்கையைப் பயன்படுத்துகிறதா? இலங்கை இந்தியாவைப் பயன்படுத்துகிறதா?”

”இந்தியா தன் அரசியல் ராணுவ நலன் களுக்காக இலங்கையைப் பயன்படுத்த முயல்கிறது. மிகக் குறைந்த தூரத்தில் இலங்கை இருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் அரசியல் ஆதிக்கம் இலங்கையில் அண்டவிடாமல் தனித்துவமிக்க ஒரு நாடாக இலங்கையைக் காத்துவருகிறார்கள் சிங்கள ஆட்சியாளர் கள். இது அவர்களின் தனித் திறமை என்றே சொல்லலாம். ஜெயவர்த்தனே தொடங்கி இன்றைய ராஜபக்ஷே வரை இலங்கை விரித்த வலையில்தான் தொடர்ந்து இந்தியா சிக்கியிருக்கிறது. வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு வரை செல்வாக்கு செலுத்தும் இந்தியாவை இலங்கை மிகத் தந்திரமாகக் கையாள்கிறது என்பதே உண்மை. தனக்குத் தேவையான எல்லா வற்றையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் தந்திரத்தை இலங்கை மிக நுட்பமாகச் செய்துவருகிறது என்றே நினைக்கிறேன்!”

”சரி, இந்தியாவிடம் ஈழ மக்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள்?”

‘என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா? எதுவுமே வேண்டாம்… ஆளைவிடுங்க… பட்டதே போதும்!”

By

Read More

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார்.

போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவினை இலக்கு வைத்து இலங்கையிலிருந்து புறப்பட்டபோது சுவிஸில் அவருக்கு விமான நிலைய மாறும் வழியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருந்தபோது என்னவோ இசகு பிசகாகி பொலீஸாரிடம் சிக்கிக் கொண்டுவிட கனடா போகும் கனவை அப்போதைக்கு வெளியே நிறைந்திருந்த பனியில் புதைத்து விட்டு விமான நிலையத்தில் வைத்து சுவிஸில் தஞ்சம் கோரினார் நண்பர். அப்பொழுது அவருக்கு பத்தில வியாழன் நடந்து கொண்டிருந்ததாம். அது எப்பொழுதும் பதிய விட்டுக் கிளப்பும் என்பதால் – இப்பொழுது சுவிஸ் முகாமில் பதிய விட்டு பின்னர் கனடாவிற்கு கிளப்பும் என்று அவர் நம்பியிருந்தார்.

நண்பரது கனவுகள் முழுவதும் கனடாவினால் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் கனடாவோடு ஒப்பிட்டே அவர் பேசினார். இங்கே குளிர், மைனஸ் பத்துக்களில் போனால், இதென்ன குளிர் அங்கே மைனஸ் நாற்பது வரை போகுமாம் என்பார். குளிர்காலப் பயணங்களில் காரில் தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தால், இப்படியெல்லாம் கனடாவில் குடித்துவிட முடியாது. தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும் என்பார். ஒருநாள் – தெரியுமோ கனடாவில் வின்ரரில் வெளியில் ஒண்டுக்குப் போவதென்றால் முறித்து முறித்துத்தான் எறியவேண்டியிருக்கும் என்றார். கனடாக்காரர் யாராவதுதான் இதன் சாத்தியத்தை விளக்க வேண்டும்.

சுவிஸில் அவரது வழக்கு விசாரிக்கப்படாமலேயே காலம் இழுவுண்டது. சுவிஸில் விசா அற்றவர்கள் வேலையொன்றை நினைத்தும் பார்க்க முடியாது. தஞ்சக் கோரிக்கை முடிவிற்கு முன்னாலான தற்காலிக தங்குமிட அனுமதி வைத்திருப்பவர்கள் வேலை செய்வதற்கு வேலை வழங்குனரின் அனுமதி மட்டுமின்றி பொலிஸாரினதும் அனுமதி தேவைப்பட்டது. பொலிஸார் அவ்வாறான அனுமதியினை முன்னரைப் போல இப்பொழுது வழங்குவதில்லை. அவருக்கான தங்குமிட வசதி, மற்றும் மருத்துவக் காப்புறுதிகளை அரசு வழங்கியிருந்தது. அதைத் தவிர்த்து வாராவாரம் எழுபது பிராங்குகள் அவருக்கு கொடுக்கப்பட்டன. சுவிற்சர்லாந்தின் தனிநபர் வருமானத்தோடு ஒப்பிடுகையில் அது பத்து வீதத்திற்கும் மிகக் குறைவான தொகையாயிருந்தது.

நண்பர் விட்ட இடத்திலிருந்து கனடாவினைத் துரத்திப் பிடிக்கத் தொடங்கினார். மள மளவென்று அதற்குரிய ஏற்பாடுகளைக் கவனித்தார். கனடாவிலிருந்தும் யாரோ கவனித்தார்கள். இங்கிருந்து போலந்து – பின்னர் அங்கு போடிங் “உடைத்துக்கொண்டு” கனடாவிற்கு விமானம் ஏறுவது என்பதே திட்டமாயிருந்தது. வெற்றிகரமாக சூரிச் விமானநிலையத்தை விட்டும் மேலே பறந்தார் நண்பர். இருபத்து மூன்று கிலோக்களையுடைய ஒரு பயணப்பொதியும் ஏழு கிலோ அளவில் இன்னொரு கைப் பொதியும் அவரிடமிருந்தன. அதைவிட ஆதவன் என்கிற தமன்னாவின் படம் போட்ட சுவிஸ் இதழ் ஒன்றும் அவர் வசம் இருந்தது. பயணத்தில் படிப்பதற்காக..

போலந்தில் போடிங் உடைப்பதற்கு முன்னதாகவே அவர் மூக்குடை பட வேண்டிய சிற்றுவேஷனுக்குள் நுழையவேண்டியதாய் ஆனது. சுவிஸ் பொலிஸாவது பரவாயில்லை ரகம் என்றார் நண்பர். போலந்து பொலிஸாரில் ஒருவன் அவரது செவிட்டைப் பொத்தி அறைந்த போது வெள்ளைக் காரங்கள் எல்லோரும் நல்லவர்கள் என்ற பிம்பமே விழுந்து உடைந்து சிதறியதாம். நண்பருக்கு அழுகை அழுகையாக வந்தது. அவர் எல்லாவற்றையும் ஒப்புவித்தார். அவரைத்துாக்கி போலந்தில் ஒரு சிறைக் கூடத்தில் மூன்று மாதங்களுக்குப் போட்டார்கள். அப்பொழுது ஏழரைச் சனியன் முற்கூறு வேறு அவருக்கு நடந்து கொண்டிருந்ததாம்.

நண்பருக்கு சிறை புதிது. அவரது தஞ்சக் கோரிக்கை கேஸில் ஐந்தாறு மாதங்கள் வெலிக்கடை மகசீன் சிறைக் ‘கதை‘கள் வந்தாலும் அனுபவத்தில் இதுவே முதற்தடவை. சிறையில் அவரது செல்லில் இன்னும் மூவர் தங்கியிருந்தார்கள். தனித் தனிப் படுக்கைகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன. வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்த நண்பர் தன் மீது பெரும் போர்வையைப் போல படியும் மனச்சோர்வை அகற்ற ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் ஆதவன் இதழில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தைக் கத்தரித்து தனது தலைமாட்டில் ஒட்டிக் கொண்டார். தலைவரைப் பார்க்கின்ற போதெல்லாம் தனக்கு உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வந்ததாகச் சொன்னார் நண்பர்.

இந்த இடத்தில் நான் இன்னுமொரு நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அட, அவரும் தற்பொழுது கனடாவில்தான் இருக்கிறார். அண்மையில் திருமணம் முடித்தவர் ஆதலால் பெயரைத் தவிர்த்துவிடுகிறேன். அவர் கொழும்பில் என்னோடு படித்த காலத்தில் ஒரு பெண்ணை விழுந்தெழும்பிக் காதலித்தார். ஒருபின்னேரப் பொழுதில் தன் காதலையெல்லாம் கடைந்து திரட்டி வாழ்த்து அட்டையில் எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்திருந்தார். அடுத்தநாள் காலை மற்றொரு பெண்ணொருத்தி வாழ்த்து அட்டையொன்றை அவரது கையில் திணித்தாள். “தங்கச்சி.. நான் உம்மோடு அப்படி நினைத்துப் பழகவில்லை” என்ற சொற்களை தயாராக வைத்துக் கொண்டு அட்டையைப் பிரித்துப் பார்த்தவருக்கு கரன்ட் கட்டாகி, உலகமே இருண்டு போனது. அது முன்னையநாள் அவர் தன் காதலிப்பெண்ணுக்கு கொடுத்த அதே அட்டை. அவள் அதை நிராகரித்து திருப்பி அனுப்பியிருந்தாள்.

நண்பர் தளரவில்லை. அடிமேல் அடி அடித்தால் அம்மியே நகரும் போது சிம்மி நகரமாட்டாளா என்றார் அவர். சிம்மி என்பது அவளுக்கு அவர் வைத்த செல்லப்பெயர். இப்படியிருக்க நண்பர் கனடாவிற்கு கிளம்பிவிட்டார். அங்கிருந்தும் அம்மிக்கு அடிக்கலாம் என்று அவர் ஐடியாப் பண்ணியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் நான் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். அவரது சிம்மியிடம் அவருக்காக நான் பேச வேண்டுமாம். (நண்பரது நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்) அடிப்படையில் அப்படியெல்லாம் பேசுகிற நபராக நான் இல்லை என்பதை அவருக்கு சொல்லியபடியிருந்தேன். எனக்குப் பயமாக இருக்கிறதென்றும் சிம்மி முன்னால் நின்றால் முழங்கால்கள் சிரட்டைகள் ஒன்றோடு ஒன்று தட்டி உதறல் எடுக்கிறது என்றும் நான் அவருக்கு எடுத்து விளக்கினேன்.

அப்பொழுதுதான் அவர் அந்த உளவியல் பாடத்தை எனக்கு நடாத்தினார். அவர் சொன்னார். “மனதைத் தளரவிடாதே.. அப்படி அவளுக்கு முன்னால் நின்று கதைக்கிற சமயங்களில் உனக்கு நடுக்கமாகவும் பயமாகவும் இருந்தால், மனதுக்குள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று சொல்லிப்பார். புதிய உற்சாகமும் துணிவும் பிறக்கும். பிறகு அவளோடு தயக்கமின்றி எனக்காகப் பேசமுடியும்.”

எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இந்த ரெக்னிக் என்னை ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடப்பண்ணியிருந்தது. “எடே.. இதைக் கேட்டால் அந்த மனுசன் இன்றைக்கே ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போடும்” என்றேன்.

“தலைவரைப் பற்றி அப்படிக் கதைக்காதே என்று நண்பர் என்னைக் கண்டித்தார். ஏனெனில் அவர் அப்பொழுது ஒரு செயற்பாட்டாளராக பரிணமித்திருந்தார்.

கனடா நண்பர் கைக்கொண்டதைப் போன்றதான ஒரு உளவியல் உத்தியைத்தான் போலந்துச் சிறை நண்பரும் முயற்சித்திருக்க வேண்டும். அப்படி மன உற்சாகத்தை பீறிட்டு வரவழைத்துக் கொண்ட நண்பர் பொழுதைப் போக்க ஆதவன் இதழே கதியென்றிருந்தார். தொன்னுாற்றெட்டுப் பக்கங்களின் சமாச்சாரங்களையும் ஒப்புவிக்கிற நிலைக்கு அவர் வந்திருந்தார். இப்படி அவர் இதழைப் பிரித்து வைத்துப் படிக்கிற நேரங்களில் அட்டையில் சிரித்தபடியிருந்த தமன்னாவை விழுங்கி விடுவதைப் போல அறையிலிருந்த ஆபிரிக்க நாடொன்றைச் சேர்ந்தவன் பார்த்தபடியிருந்திருக்கிறான்.

அப்படியொருநாள் அவன் ரொய்லெட் போனபோது, ஆதவனை இதழை அவன் வாங்கிப் போனானாம். போனவனை நீண்ட நேரமாகக் காணவில்லை. இது தின வழமையாகத் தொடங்கியது. முதலில் நண்பருக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அப்படியொருநாள் பிடிபட்டபோது அவன் இதழின் அட்டையைத் தண்ணீரால் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். நண்பர் முகத்தைச் சுழித்து நுனி விரலால் காதுகளில் பிடித்து முயலைத் துாக்குவது போல அதை வாங்கிக் காய வைத்திருக்கிறார். காய்ந்த பிறகு தமன்னா இப்பொழுது கொஞ்சம் மொட மொடப்பாய் முறுகியிருந்தா.

அடுத்தநாளும் அவன் தமன்னாவைக் கேட்டிருக்கிறான். நண்பர் தரமுடியாது என்றார். இன்னும் இரண்டொருதடவை அவன் கேட்டபொழுது இவர் ஒரேயடியாகத் தரமுடியாது என்று கையை விரித்தபோது அவன் கையை நீட்டியிருக்கிறான். அருந்தப்பில் மூக்குத் தப்ப தாடையில் அவனது உருண்ட கை மொளிகள் பதிந்தன. அழுது கொண்டே தமன்னாவைத் தாரை வார்த்தார் நண்பர். இம்முறை அவன் சரிவரக் கழுவிச் சுத்தம் செய்திருக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்று அவன் நினைத்திருக்கக் கூடும். தமன்னாவும் இனித் தாங்க முடியாதென்றோ என்னவோ உதட்டோரமாகக் கிழிந்து போயிருந்தா. நண்பருக்கும் தாங்க முடியாது போய்விட்டது. இதழில் இருந்து அப்படியே தமன்னாவைக் கிழித்தெடுத்து இந்தா பிடி என் அன்புப் பரிசு என்று கொடுத்து விட்டாராம். அவன் அதில் நெகிழ்ந்து மேலும் இதுமாதிரியான புத்தகங்கள் உள்ளனவா என்று கேட்டானாம்.

என்ன மனிசரப்பா என்று இந்தக் கதையை முடித்தார் நண்பர்.

அவனுக்குத் தமன்னாவைப் பார்க்கின்ற போது ஏதேனும் பீறிட்டுக் கிளம்பக் கூடாதா என்று நான் கேட்டேன்.

அதுக்கில்லையடாப்பா.. அவன் அப்பிடி அசிங்கப் படுத்திட்டுக் கொண்டு வந்து தந்த தமன்னாவை நான் இரவில தடவிக் கொண்டு படுத்ததை நினைக்கத்தான் வாந்தி வாந்தியா வருகுது என்று நண்பர் சொன்னதுதான் இந்தப் பதிவின் ஹைலைட்..

நண்பர் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் கனடாவுக்குப் பாய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். அடுத்த முறை அவர் புறப்படும்போது ஸ்ரேயா, ஸ்ருதி, திரிஷா, அசின் படங்கள் போட்ட ஆதவன் இதழ்களையும் கொடுத்து விடலாம் என்றிருக்கிறேன்.

0 0 0

ஆதவன் இதழில் நடிகைகளின் படத்தை வெளியிட்டபோது சில நண்பர்கள், ஏனிப்பிடி இதனால் யாருக்கு என்ன பிரியோசனம் என்று கேட்டிருந்தார்கள். அப்பொழுது என்னிடம் பதில்கள் இருக்க வில்லை. இனிக் கேட்கட்டும்….

சம்பந்தப்பட்ட அந்த ஆதவன் இதழ் இதுதான்

By

Read More

× Close