முருகபூபதி

வன்னி  மக்களின்  ஆத்மாவைச் சொல்லும்  சயந்தனின் ஆதிரை

போருக்கு  முன்னரும்  போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும்  தொடரும்  தமிழ்  மக்கள்  அவலங்களின் ஆவணம்

வன்னிக்காடுறை  மனிதர்களின்  நிர்க்கதி வாழ்வைப்பேசும்    ஆதிரை

இலங்கை  மலையகம்  பலாங்கொடையில்  எனது   உறவினர்கள்  சிலர் sayanthanவசித்தார்கள். எனது  அக்காவை   அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு  ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்)   மணம் முடித்துக்கொடுத்தார்கள்.  1966 ஆம் ஆண்டில்   நீர்கொழும்பில்  அக்காவின்  திருமணம்  நடந்தபொழுது நான்தான்    மாப்பிள்ளைத்தோழன்.

அக்கா   மலையகத்தில்  குடியேறியதனால்  அங்கு  உறவுகள்  பிறந்தன. ஒருவர்  எனது  அக்காவின்   கணவரின்  தங்கையை    மணம்முடித்தார். அவருக்கும்    பாலங்கொடையில்  ஒரு   வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி  வேலை.

1981  இல்  மலையகத்தில்  இரத்தினபுரி,   காவத்தை, பெல்மதுளை, இறக்வானை,   தெனியாய  ஆகிய  ஊர்கள்  சிங்கள   இனவாதிகளினால்    தாக்கப்பட்டபோது   பலாங்கொடையும் தப்பவில்லை.

அக்கா  குடும்பம்   வவுனியாவில்  காணி  வாங்கி  குடியேறியது. அதுபோன்று   அந்தச்சாரதியின்   குடும்பமும்   (எனக்கு  அண்ணா –  அண்ணி   முறை  உறவு)  பூவரசங்குளத்தில்   ஒரு  துண்டு  காணி வாங்கி  குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது.    அவருக்கு  வேப்பங்குளத்தில்  ஒரு  அரிசி ஆலையில்   லொறிச் சாரதி  வேலை   கிடைத்தது.

1985  இல்  ஒருநாள்  அதிகாலை   வழக்கம்போன்று  மனைவி  தந்த இடியப்பப்பார்சலுடன்   வேலைக்குச்சென்ற  அவரை,  இரண்டு  நாட்கள் கழித்து    வவுனியா  ஆஸ்பத்திரி  சவச்சாலையில் சூட்டுக்காயங்களுடன்   சடலமாக  மீட்டோம். புலிகள்  வேப்பங்குளத்தில்  மன்னார்  வீதியில்  நடத்திய  கண்ணிவெடித்தாக்குதலில்  சில  இராணுவத்தினர்  கொல்லப்பட்டதன் எதிரொலியாக  நடந்த  துப்பாக்கிச்சூட்டில்  வேப்பங்குளத்தில் கொல்லப்பட்ட  பல  அப்பாவிகளில்  ஒருவர்  அந்த பலாங்கொடையிலிருந்து   இடம்பெயர்ந்து  வந்த   நான்கு பெண்குழந்தைகளின்   தந்தை.

இது  இவ்விதமிருக்க,  எனது  மச்சானின்  மற்றும்  ஒரு  சகோதரியின் மகன்  தாய்,  தந்தை  இறந்த  பின்னர்  எனது  தங்கையின்  பராமரிப்பில்   வவுனியாவில்  பூவரசங்குளத்தில்  உயர்தர வகுப்பில் படித்தான்.   அவன்  ஒரு  விடுதலை  இயக்கத்தில்  இணைந்து  அதன் வகுப்புகளுக்கு    செல்கிறான்  என்பது  அறிந்து  அவனை  எமது ஊருக்கு  அழைத்து,   கொழும்பு  விவேகானந்தா  கல்லூரியில் சேர்ப்பதற்கு   (அதிபர்  எனது  நண்பர்)  முயற்சித்தேன்.

நேர்முகத்தேர்வுக்கும்  அழைத்துச்சென்றேன்.   கொழும்பில்  படிக்க சம்மதித்தான்.   வவுனியா  சென்று  தனது  உடைகளை எடுத்துவருவதாக   உறுதியளித்துச்சென்றவன்  காணாமல் போனான். எதிர்பாராதவிதமாக  அவனை  யாழ்ப்பாணத்தில்  1986  ஆம் ஆண்டு   இறுதியில்  அந்த  இயக்கத்தின்  பயிற்சிபெற்ற  போராளியாக,  யாழ். கோட்டையிலிருந்து   இராணுவம்  வெளியேறாதவகையில் ஆயுதத்துடன்   சென்ரியில்  நிற்கும்   களப்போராளியாக மாறியிருந்தான்.

இறுதிவரையில்   தனது  இயக்கத்தின்  தலைமைக்கு  விசுவாசமாக நின்ற   அவன்,  1989  இல்  கொழும்பின்  புறநகர்  பகுதியில்  அந்தத் தலைவர்    கொல்லப்பட்டதையடுத்து,   எதிலும்  நம்பிக்கையற்று  தனது   எதிர்காலம்  குறித்த  கனவுகளுடன்  அய்ரோப்பிய நாடொன்றுக்குச்சென்று,  திருமணம்  முடித்து  மனைவி பிள்ளைகளுடன்   அமைதியாக  வாழ்கின்றான்.

சயந்தனின்  ஆதிரை  நாவலை  படித்துக்கொண்டிருக்கும்பொழுது,  குடும்பத்திற்காக   வவுனியாவுக்கு  இடம்பெயர்ந்து  சென்ற  அந்த மலையக   உறவினரான  சாரதியும்,   படிப்பை  குழப்பிக்கொண்டு  ஒரு இயக்கத்தை   நம்பிச்சென்ற  அந்த  இளைஞனும்  நினைவில் வந்தார்கள்.

அந்தச்சாரதியின்   நான்கு  பெண்பிள்ளைகளும்   சிரமங்கள் பொருளாதார  நெருக்கடிகளுக்கு  மத்தியில்  படித்து,  பட்டம்  பெற்று அதிபராயும்   ஆசிரியைகளாகவும்  அதே  வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும்   இன்று  பணியாற்றுகிறார்கள்.

படிப்பை   பாதியில்  குழப்பிக்கொண்டு   இயக்கத்தில்  இணைந்த இளைஞன்,  தனது  தலைமையின்  மறைவையடுத்து  தனது எதிர்காலத்தைத்   தேடி  புலம்பெயர்ந்து  சென்றான்.  அன்று  ஆயுதம் ஏந்தியவன்   இன்று  அய்ரோப்பாவில்  தனது  பிள்ளைகளின் கல்விக்காகவும்  அவர்களின்  எதிர்காலத்திற்காகவும்  ஓடி  ஓடி உழைக்கின்றான்.

இடம்பெயர்ந்தவர்கள்,    புலம்பெயர்ந்தவர்களின்  வாழ்வை  நீடித்த கொடிய   போர்  எவ்வாறு  புரட்டிப்போட்டது  என்பதற்காக இந்தத்தகவலை  ஆதிரையின்  வாசிப்பு  அனுபவத்தின்  ஊடாகவே இங்கு    பதிவுசெய்கின்றேன்.

————-
சயந்தனின்   ஆதிரை   நாவல்  1991  இல்  தொடங்கி,  2013  இல்  முடிகிறது.   முடிகிறது  என்றும்  சொல்ல  முடியாது.  எமது  கதை முடிவுறாதது.   சயந்தன்  எமது  கதையைத்தான்  சொல்கிறார்.  எமது தமிழினத்தின்    கதையை  மட்டுமல்ல  மானுடத்தின்  கதையையும் சொல்கிறார்.

ஆதிரையில்   தொடக்கத்தில்  வரும்  சிங்கமலை  லெட்சுமணன் மலையகத்தில்  தெனியாயவில்  பிறந்து,  எழுபத்தியேழு  கலவரத்தில் தந்தையின்   தோளிலே  அமர்ந்து  முல்லைத்தீவுக்காட்டுக்கிராமத்திற்கு   வந்த    நாடற்றவன்.    அவனில் தொடங்கும்   கதை  ஆதிரையில்  முடிகிறது.
———–
”  இங்க  புலி  அல்லது  புலிக்குச்  சப்போட்  பண்ணுறவுங்க  யாராவது இருந்தா   மaathiraiரியாதையா  சரண்டர்  ஆகுங்க.  இல்ல – சுடுபட்டுச்சாவீங்க”  கொச்சையான  மொழியில்  ஒருவன் மிரட்டியபோது,  மயில்குஞ்சன்  தன்னுடைய  சாவை உறுதிப்படுத்திக்கொண்டான்.    சாவைக்  குறித்துப் பதற்றமான எண்ணங்கள்   தனக்குள்  உருவாகாமல்  இருப்பதை  முதற்தடவையாக அவன்    ஆச்சரியத்தோடு  அவதானித்தான்.   உலகத்தின் பற்றுகளிலிருந்து    தன்னைத்துண்டித்துக்கொண்டு  வாழ்வதனால் அது   சாத்தியமாயிருக்கலாம்  என்றும்  மரணத்தின்  அச்சமென்பது அனுபவித்தவற்றை   இழக்கப்போவதினாலும்,   அன்பிற்குரியவர்களை மறுபடியும்    சந்திக்க  முடியாமற் போவதாலுமே  ஏற்படுகிறது  என்றும் நினைத்தான்.

இது  மயில்குஞ்சன்  என்ற  பாத்திரத்தின்  வாயிலாக  சயந்தன்  சுட்டும் மரணத்தின்  அச்சம்.

மரணபயம்தான்   எம்மவர்களை  ஊர்  விட்டு  ஊருக்கு இடம்பெயறச்செய்தது.    தேசம்  விட்டுத் தேசம்  புலம்பெயரவைத்தது. ஆதிரையை   எழுதிய  சயந்தனும்,  ஆதிரை  பற்றிய  வாசிப்பு அனுபவத்தை    தற்பொழுது  எழுதும்  நானும்  அந்த மரணபயத்திலிருந்து    வந்தவர்களே.  ஏன்,  நாவலின்  இறுதியில் தோன்றும்   ஆதிரையும்  அந்த  மரணபயத்தை  எதிரியிடமிருந்து சந்திக்கத்திராணியற்று   தனது  மார்பின்  குருதிச்சேற்றுக்குள் புதைந்திருந்த   நஞ்சுக்குப்பியை   வெகு  சிரமத்தோடு  இழுக்கிறாள். 664   பக்கங்களில்  நீண்ட  இந்நாவல்  அத்துடன்    முடியாமல்  முடிகிறது.

ஒரு   இலக்கியப்படைப்பு  அதனை  எழுதுபவரின்  இயல்புகளையும் வெளிப்படுத்திவிடும்.    அதேவேளையில்  அந்தப்படைப்பில்  வரும் பாத்திரங்களின்    இயல்புகளையும்  அதன்போக்கிலேயே சித்திரித்தும்விடுவார்.    சயந்தன்,  ஆதிரை   ஊடாக  எமக்கு அறிமுகப்படுத்தும்   பாத்திரங்கள்  அதனதன்   இயல்புகளிலிருந்து இறுதிவரையில்    மாறாதிருப்பதும்  இந்நாவலின்  தனிச்சிறப்பு.

அம்மக்கள்  வாழும்  வன்னிக்காடும்,   நீர்நிலைகளும்,   விலங்குகளும் பறவையினங்களும்  பயிர்களும்,   குடிசைக்குடியிருப்புகளும் ஆதிரையை   படித்து  முடித்த பின்னரும்  நினைவில் தங்கிவிடுகின்றன.    அத்தகைய  யதார்த்தச்சித்திரிப்பிலும்  இந்த நாவல்   வெற்றியடைந்துள்ளது.

இந்நாவலில்,   நினைவில்  தங்கிவிடும்  பல  பாத்திரங்கள்  வருகின்றன. சயந்தன்,   கருணாகரனுக்கு  வழங்கிய  நேர்காணலில்  ” தனக்கு ஆதிரையில்   வரும்   நாமகள்தான் பிடித்தமான  பாத்திரம்” எனச்சொல்கிறார்.   இவ்வாறு  ஒரு  நாவலாசிரியர்  சொல்வது  அபூர்வம்.

தாம்  படித்த  படைப்புகளில்  வரும்  ஒரு  பாத்திரம் பிடித்துக்கொண்டால்,   அந்தப் பெயரை  தமக்குப் பிறக்கும்  குழந்தைகளுக்கு  சூட்டுவதையும்  நான்  பலரிடத்தில்  பார்த்துள்ளேன்.

எனக்கு   இந்த  நாவலில்  வரும்  சந்திரா  மிகவும்   பிடித்தமான பாத்திரம்   என்பேன்.   அதற்கு  அவளுக்கிருந்த  சமூகப்பார்வையும், துணிச்சலும்,   கருத்தியலும்தான்  காரணம்.   சந்திராவின்  துணிச்சல்:- தனது   உயர்சாதிக்குடும்பத்தையும்  எதிர்த்துக்கொண்டு  ஒரு தாழ்த்தப்பட்ட  சமூகத்தின்  பிரதிநிதியான  அத்தாரை மணம்முடிப்பதிலிருந்து    தொடங்குகிறது.   இயக்கத்திற்கும் இராணுவத்திற்கும்    இடையில்  நடக்கும்  மோதலில்  சிக்கி கொல்லப்படும்    அப்பாவிகளையும் ,   அச்சத்தினால்  ஓடி  ஓடி அள்ளல்படும்    குடும்பங்களையும்  பற்றிச்சிந்திக்கிறாள்.

ஒரு காலத்தில்  கம்யூனிஸ்ட்  இயக்கத்திலிருந்து  முற்போக்குவாதம் பேசிய   கணவன்  அத்தாருடனும்  மற்றவர்களுடனும்  வாதிடுகிறாள்.

” சனங்கள்  கஸ்ரப்பட்டு  விடுதலை  வாங்கிறது  வேறை.   சனங்களைக் கஸ்ரப்படுத்தி  விடுதலையை  வாங்கித்தாறமெண்டுறது  வேறை.”

” எண்ணுக்கணக்கிலயா  இப்ப  தமிழற்றை  பிரச்சினையை அளக்கினம்”

” ஆரப்பா  இங்கை  பாதிக்கப்பட்டவை ?  நிலமெல்லாம்  பறிபோகுது எண்ட   கோஷத்துக்குப் பின்னால  சொந்தமா  நிலமேயில்லாமல் சனங்கள்   இருக்கிறதைப்பற்றியும்,   கொழும்பில  அடி  விழுகுது  என்ற ஓலத்துக்கு பின்னாலை  கொழும்பையே   தெரியாமல்  ஒரு கூட்டமிருக்கென்றதையும்   நான்  சொல்லித்தான்  நீங்கள் தெரியவேண்டுமெண்டில்லை.”

இவ்வாறெல்லாம்   அவள்  தனது  தரப்பு  வாதங்களை முன்வைக்கிறாள்.

”  முதலடியை  எடுத்து  வைக்கிற  துணிச்சலில்லாதவங்கள்  எப்பவும் மற்றவங்களைக்   குறை சொல்லிக்கொண்டேயிருப்பாங்கள்”   என்று எதிர்த்து   வாதிடும்  கணவன்  அத்தார், ”  பாதிக்கப்பட்டவன்  நேரடியாப்   போராடத் தொடங்கேக்க  பள்ளிக்கூடத்தில  உள்ள மாதிரி பாடத்திட்டத்தோட   தொடங்கமாட்டான்.   அனுபவத்தின்ர  போக்கிலே சரியான    வழியை  அவன்  எடுத்துக்கொள்ளுவான் ”  என்றும்  மேலும் சொல்கிறான்.

சந்திராவுக்கும்  அத்தாருக்குமிடையிலான  இந்த  வாதப்பிரதிவாதம் 1986   காலப்பகுதியில்  நடக்கிறது.   டெலோ  இயக்கத்தை  புலிகள் அழித்த   காலம்  இதுவென  அந்த  அத்தியாயத்தில்  பதிவாகிறது.

ஆதிரையில்   வருபவர்கள்  முழுமையான  பாத்திரச்சித்திரிப்புடன் உயிர்ப்படைகிறார்கள்.    பாத்திரங்களை   அவர்களின் இயல்புகளுடனும்   ஆசிரியர்  கூற்றாகவும்  சித்திரிப்பது முக்கியமானது.    சயந்தன்  பாத்திரங்களை  மிக  நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்.

ஆதிரை    நாவல்  வன்னிபெருநிலப்பரப்பின்  மையப் புள்ளியிலிருந்து  அதன்   ஆத்மாவையும்  பதிவுசெய்தவாறு,   இலங்கையின்  இதர பிரதேசங்களையும்    சர்வதேசத்தின்  சதுரங்காட்டத்தையும்  நோக்கி விரிகிறது.

பாம்பு   கடித்த  வள்ளியம்மா  கிழவியை  காப்பாற்ற  அந்த நடுச்சாமவேளையிலும்   முதலுதவி  செய்து,  தன்னந்தனியாக வன்னிக்காட்டை   ஊடறுத்துக்கொண்டு  நெடுங்கேணி ஆஸ்பத்திரிக்கு    சைக்கிளில்  சுமந்து  செல்கிறாள்  மலர்.   அவளுடைய    புத்திசாலித்தனம்  துணிச்சல்  யாவும்  வன்னிக்காட்டின் இயற்கையுடன்   இணைந்துவருகிறது.    212 – 234   பக்கங்களில் வாசகர்களை   அந்த  சைக்கிள்  பயணத்துடன்  அழைத்துவரும் சயந்தன்,   பதிவுசெய்யும்  இந்தப்பகுதி   இந்தியப்படை  அங்கு நிலைகொண்டகாலம்.

அதிகாலை  3.10  இற்கு  மலரின்  குடிசையை   முற்றுகையிடுகிறது இந்திய    இராணுவம்.   கடுகுநெய்யின்  வீச்சம்  மலருக்கு  குப்பென்றது. அவளை   மட்டுமல்ல  முதியவளான  அவள்  தாயையும் விட்டுவைக்காமல்   சூறையாடுகிறது  அந்த  அமைதிகாக்கவந்த  படை. ”  இந்தியன் ஆமி   வருகுது  எண்ட  உடன  சனங்கள்  பட்ட  சந்தோசம் இந்தக்கால்   அளவுதான்  அத்தார்.   அவங்கள்  திரும்பிப்போறாங்கள் எண்ட   உடனை  சனங்கள்  பட்ட  சந்தோசமிருக்கே  அது  இந்தக்காடளவு”   என்று  சொல்லும் மயில்குஞ்சன்   கைகளை  விரித்துக்  குலுங்கிக்  குலுங்கிச்சிரித்தான். ஈழத்தமிழ்   மக்கள்  இவ்வாறு  ஏமாந்து  ஏமாந்து காலத்தைக் கடத்தியவர்கள்   என்பதையும்  இந்நாவல்  சொல்லத்தவறவில்லை. எமது   தமிழ்  மக்கள்  நம்பி  நம்பி  மோசம் போனவர்கள். தமிழ்த்தலைவர்களை,   விடுதலை   இயக்கத்தலைவர்களை, சந்திரிக்கா   உட்பட  பல  சிங்களத்தலைவர்களை,   இந்தியாவை, தமிழ்நாட்டை,    புலம்பெயர்ந்தவர்களை,  வல்லரசுகளையெல்லாம் நம்பி    நம்பி  ஏமாந்தவர்கள்தான்.   இறுதியில்  இன்று  ஐ.நா. சபையை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இம்மக்கள்   இவ்வாறு  வைத்த  நம்பிக்கை  அவர்கள்  வணங்கும் கடவுள்களிலும்   நீடித்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து   பாரிய  இடப்பெயர்வுக்குள்ளாகும்  மக்கள் முதலில்    தென்மராட்சிக்கு  வந்து,  அங்கிருந்து  வன்னிக்காட்டில் எட்டேக்கர்   பகுதியில்  குடியேறி  வீடு கட்டுகிறார்கள்.   அவ்வாறு வரும்பொழுது   யாழ்ப்பாணத்து  வீட்டில்  தினமும்  வணங்கிய சாமிப்படங்களை    எடுத்துவரவில்லை.   காரணம்:  ” வீட்டில  இருந்து சாமியைக்கிளப்பக்கூடாது.   அது    நல்லதில்லைத்தானே ”

சாமிகளை   எங்கும்  எந்தக் காட்டிலும்   உருவாக்கமுடியும்  என்ற நம்பிக்கைதான்.   ஆனால்,  அந்தச்சாமிகள்  நடக்கும் அநியாயங்களைப்  பார்த்துக்கொண்டே    இருக்கின்றன  சர்வதேச சமூகம்போன்று.

சாமிபடங்களை   விட்டு வரும்  மக்கள்  சாதியை   அகத்திலும்  ரோச் லைற்பற்றறிகளை   தமது  உள் ஆடைகளுக்குள்ளும்  மறைத்து எடுத்துவருகிறார்கள்.  அவ்வாறு  கொண்டுவரும்போது இரண்டுதரப்பின்    கண்களிலும்  தூசு  இருக்கவேண்டும்.   ஒரு  புறம் இராணுவம்.    மறுபுறம்  புலிகள்.   இராணுவத்தின்  கண்களில் சிக்காமல்   கொண்டுவந்து,  புலிகளிடம்  பிடிபட்டால்,  ”  இவ்வளவு தொகையாக   கொண்டு வந்ததை  இயக்கம்  கண்டுதெண்டால் எப்படிக்கொண்டந்தனியள் ?  ஆமியோடை  என்ன  தொடர்பு ? ” எண்டெல்லாம்   விசாரிப்பாங்கள்.   இல்லாட்டி அரைவாசியைத்தாங்கோ   எண்டு  வாங்கிப்போடுவாங்கள்”

உயிரைக்கையில்   பிடித்துக்கொண்டு  இடம்பெயரும்  மக்கள் மத்தியில்   தோன்றும்  சமூகத்தலைவர்களின்  போலித்தனங்களையும் ஆதிரை   அம்பலப்படுத்துகிறது.

”  பள்ளிக்கூடச் சங்கத்தலைவராயிருக்கிறமாதிரி  கோவில் தர்மகர்த்தா  சபையில  தலைவராயிருக்கிறமாதிரி,   இந்தச்சமூகத்தில தனக்கொரு   அந்தஸ்தும்  பிரபலமும்  கிடைக்குமெண்டால் வெள்ளாளன்,   தான்  ஆரை  அடக்கி  ஒடுக்கினானோ, அந்தச்சனங்களுக்காகப்   போராடுறமாதரி   காட்டவும் தயங்கமாட்டான்.”

”  ஏன்  இப்ப  கத்துறியள்-  சாதி  குறைஞ்ச  சனங்களுக்காக வெள்ளாளன்   போராடக்கூடாதோ? ”

”  உலகத்தில  எங்கையாவது  கூலிக்காரனுக்காக  முதலாளி போராடினதா   சரித்திரம்  இருக்கோ- ” ( பக்கம் – 296)

ஆதிரை  இவ்வாறு  எமது  தமிழ்ச் சமூகத்தலைவர்களை  மட்டுமல்ல போருக்குப்பின்னர்   வெளிநாடுகளிலிருந்து  வரும் தொண்டுநிறுவனங்களையும்    காணமல் போனவர்கள்  பற்றிய செய்திகளை   பதிவுசெய்யவரும்  தொலைகாட்சி  ஊடகங்களையும் கேள்விக்குட்படுத்துகிறது.

”  அம்மா  நாங்க  இந்தியால  ஒரு  டீவில  இருந்து  வர்றோம். காணாமல் போனவங்க  பத்தி  ஒரு  செய்தித்தொகுப்பு  பண்றோம்.  இது  உங்க மகளாம்மா?”  படத்தைக்காட்டிக்கேட்கிறார்கள்.

”  எத்தனை  வயசம்மா? ”

” அம்மா –  உங்கபொண்ணு  தானா  எல்.டி.டி. இல விரும்பிச்சேர்ந்தாங்களா-   அல்லது கட்டாயப்படுத்திப்  பிடிச்சுக்கொண்டு   போனாங்களா?”

”  இங்க –  இங்க  காமெராவைப்   பார்த்துச்சொல்லுங்க”

அந்தத்தாய் –  வல்லியாள்  அவர்களின்  முன்னே  மகளின்  படத்தை வைத்துக்கொண்டு,  ” எம்  புள்ளைய  மீட்டுக்கொடுக்கணும் ” என்று தொடர்ந்தும்   கதறிக்கதறி  அரற்றிக்கொண்டிருந்தாள்.   கண்ணீர் வற்றிப்போய்விட்டது.

அவர்கள்   வேறு  கண்ணீரைத் தேடிப்போனார்கள். (பக்கம் – 637)

போர்   முடிவுற்றபின்னர்  அங்கு  சென்று   விடுப்புப்பார்க்கும் புலம்பெயர்ந்தவர்களையும்  இந்த  நாவல்  விட்டுவைக்கவில்லை.

“சந்திர  ரீச்சரிட்டைப் படிச்சதெண்டு  சுவிசிலிருந்து  சயந்தன்  எண்டு ஒருத்தன்    வந்தவன்.   கதை   எழுதுறவனாம்.   ரீச்சர்  எப்படிச்செத்தவ- நீங்கள்   எந்தப்பாதையால  மாத்தளனுக்குப்பேனீங்கள்- இயக்கப்பெடியங்களைப்பற்றி  என்ன  நினைக்கிறியள்- அவங்களில இப்பவும்  கோவம்  இருக்கோ  எண்டெல்லாம்  கேட்டு  தன்ரை ரெலிபோனில  ரெக்கோட்  செய்தவன்”

” ஏனாம் ? ”

” தெரியேல்லை – சனம்  உத்தரிச்சு  அலைஞ்ச  நேரம் கள்ளத்தோணியில   வெளிநாட்டுக்குப்போனவங்கள்  இப்ப  வந்து விடுப்பு கேக்கிறாங்கள்” ( பக்கம் – 624)
———–
வன்னியில்   மாவீரர்  படிப்பகத்தில்,  புலிகளின்  தலைவரின்  படம் சட்டமிடப்பட்டு  மாட்டப்பட்டிருந்தது.  அதில் ”  இயற்கை   எனது நண்பன்.    வாழ்க்கை   எனது  தத்துவாசிரியன்.  வரலாறு  எனது வழிகாட்டி”  என்ற  ஒரு  வாசகம்.  சுவர்களில்  கிட்டு,  திலீபன் முதலானோரின்    படங்களுமிருந்தன. ( பக்கம் – 430)

அவர்கள்   இன்றில்லை.    வன்னியின்   இயற்கை  அழிக்கப்பட்டு நஞ்சுண்ட  காடாக  மாறியது.   வாழ்க்கை  தந்த  தத்துவபோதனை என்னானது ?   எஞ்சியிருக்கும்  வரலாறாவது  எம்மவருக்கு வழிகாட்டியாக   இருக்கட்டும்.
———–
சமூகத்திற்காக  பேசுவதும்  சமூகத்தை  பேசவைப்பதுமே  ஒரு  நல்ல படைப்பாளியின்  பணி.  அதனை  சயந்தன் –  ஆதிரை  நாவலின் ஊடாக   சிறப்பாக  உயிரோடும்  உணர்வோடும்  அறிவார்ந்தும் படைத்துள்ளார்.

இந்த   நாவலின்  ஒவ்வொரு  பக்கத்தையும்  படித்து  முடிக்கும் பொழுது ஒரு  பெருமூச்சு  பிறந்தது.   நாவலைப்படித்து  முடிக்கையில்  எழுந்த பெருமூச்சு  அடங்குவதற்கு  சில  கணங்கள்  தேவைப்பட்டது. உறக்கத்திலும்   இயற்கை  வளம்  மிக்க  வன்னிக்காடும்  அம்மக்களும் வந்துசென்றார்கள்.

ஆதிரை   பாதிக்கப்பட்ட  மக்களின்  கதை.  அவர்களின் நம்பிக்கைகளை   கனவுகளை  ஏக்கங்களை  ஏமாற்றங்களை நிராசைகளை   பதிவுசெய்த  கற்பனையற்ற  கதை.

தமிழ்  ஈழத்தேசிய  கீதம்  எழுதித்தருவேன்,   ஈழகாவியம்  படைப்பேன்  என்றெல்லாம்   சொல்லும்  அண்டை  நாட்டு  வைரவரிக்காரரும் ஈழத்தில்   வேறு  எவரும்  கிடைக்காமல்  அவரை  அழைத்து தமிழ்ப்பொங்கல்  புசிக்கும்  தமிழ்த் தேசியத்தலைவர்களும்  அவசியம் ஆதிரையை   படிக்கவேண்டும்.

664  பக்கங்கள்  கொண்ட  இந்த  நாவலை  படிப்பதற்கு  அவர்களுக்கு நேரமும்   பொறுமையும்  இருக்குமா ?  என்பதுதான்  தெரியவில்லை.

இறுதியாக—   இந்நாவல்  தரும்  பேராச்சரியம்:

சுவிசில்  வதியும்  சயந்தன்,  வன்னியை  எப்படி  இவ்வாறு  அதன் ஆத்மா   குலையாமல்   சித்திரித்தார்  என்பதுதான்.

கலைத்துறைகளான  நடனம்,  இசை,  நாடகம்,  திரைப்படம், குறும்படம்,   ஆவணப்படம்  ஆகியனவற்றுக்கெல்லாம்  பயிற்சி நெறிகள்,   பயிலரங்குகள்  இருக்கின்றன.  ஆனால்,  சிறுகதை,  நாவல் முதலானவற்றுக்கு   அவ்வாறு  இல்லை.

இந்த   இலக்கியத்துறைக்கும்  பயிற்சி  நெறி  உருவானால் சமகாலத்தில்   தமிழில்  நாவல்  எழுதும்  உத்திமுறைக்கு – புதிய – பழைய    தலைமுறை  எழுத்தாளர்களுக்கு  ஆதிரையை சிபாரிசுசெய்யலாம்.

ஆறாவடுவும்  ஆதிரையும்  தந்த  படைப்பாளி  சயந்தனை இதுவரையில்   நான்  நேரிலும்  பார்த்ததில்லை.   பேசியதுமில்லை. அவருடைய   ஆறாவடு  முன்னர்  படித்தேன்.   தற்பொழுது  ஆதிரை படிக்கக்கிடைத்தது.   ஆதிரையை  படித்துப்பார்க்கத்  தந்த  இலக்கிய நண்பர்   தெய்வீகனுக்கும்  சயந்தனுக்கும்  எனது  மனமார்ந்த  நன்றி.

letchumananm@gmail.com

By

Read More

அமல்ராஜ் பிரான்சிஸ்

மூன்றுவாரப் பயணம்… இன்றுதான் கடைசிப் பக்கத்தில் முட்டி பெரும் கனத்தோடு நிமிர்ந்திருக்கிறேன்.

ஆதிரை..!

இது சுமார் இரண்டு தசாப்தகால ஈழத்து வாழ்வியலின் அடுக்கு. வன்னி, புலிகள், போராட்டம், இறுதியுத்தம், முள்ளிவாய்க்கால், மெனிக்பாம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் புலிகள், மீண்டும் வன்னி என சுழலுகின்ற ஒரு பேரிடர்க்காலத்தின் அறியப்படாத முகம்.

அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து அதிக எதிர்பார்ப்புக்களோடு வெளியாகிய போர் சார் படைப்புக்களில் ஆதிரை முக்கியமானது என்றபோதுதான் அதை அவசரமாக படித்து முடித்துவிடவேண்டும் என்கின்ற ஏக்கம் தொற்றியது. அதை வாங்கி கையில் ஏந்தியபோதே அது கனத்தது (664 பக்கங்கள்!). வாசித்து முடிந்து அதை அலுமாரியில் செருகிய பின்னரும் கனக்கிறது. நம் இனத்தினுடைய ஆயுதப்போராட்டத்தையும் அதன் வழிசார் வாழ்வியலையும் நேரடியாக பார்த்து வளராத என்னைப்போன்ற ஒரு “அரச கட்டுப்பாட்டு” சமூகத்திற்கு இந்த ஆதிரை ஒரு வரலாற்றுப் படிப்பினையை நிகழ்த்தியிருக்கிறது.

வாசித்துக்கொண்டிருக்கையில் உணர்வுகளை அடக்க முடியாமல் அவ்வப்போது புத்தகத்தை மூடிவிட்டு ஜன்னல் பக்கம் ஓட வைக்கிறது. போரின் கடைசி நிமிடங்களிலான மனித அவலத்தையும் பின்னர் ஆதிரை பற்றிய கதையையும் சயந்தன் சொல்லும்போது மண்டை வெடிக்கிறது. புலிகள் எனப்படும் ஒரு கட்டமைப்பின் அகவியல்புகள், அதற்குள்ளிருந்து ups & downs, ஈழப்போராட்டத்தின் மீது அந்த “தமிழ்” இளைஞர்கள் கொண்டிருந்த வேட்கை, கடைசி நிலமும் கைநழுவும் வேளையில் அவர்களுக்குள்ளிருந்த உணர்வு ரீதியான உளவியல் போராட்டங்கள் போன்ற சிக்கல்தன்மைகளை ஆதிரை அழகாகப் பேசுகிறது.

ஒரு புனைவிற்கும் ஒரு வரலாற்று குறுப்பிற்கும் இருக்கும் இடைவெளியை இது தீர்க்கமாக போக்கியிருக்கிறது என நினைக்கிறேன். ஒரு வரலாற்று பதிவை புனைவு என்னும் கருவியினால் (tool) அழகியல் மற்றும் யதார்த்தத் தளங்களை அடியில் கொண்டு கட்டமுடியுமாயின் அது “ஆதிரை” எனக்கொள்ளலாம். சம்பவங்களையும் பாத்திரங்களையும் timeline வழுவின்றி ஒட்டியும், புனைவு அழகியலின் மொழியை solecism பிறழாமலும் நகர்த்தப்படும் ஆதிரை அட்டகாசமானது.

ஒரு வரலாறாக, ஒரு புனைவு இலக்கியமாக, ஒரு போர்க்காலக் குறிப்பாக, ஒரு தன்னிலை பேசும் ஆவணமாக ஆதிரை தன் வேலையை திறமாகச் செய்கிறது. கதைக்கருவின் விஸ்தீரணம் அந்த கதையோட்டத்தை மிதிக்காமல் நகர்வது ஆசம். கதைசொல்லலில் இருக்கின்ற நுட்பங்களை ஒரு மாணவனாக படிக்கமுடிந்தது.

“ஆதிரை” தொலைக்கப்பட்ட ஆயிரமாயிரம் உணர்வுகளின் திரட்டு. பேசப்படாத, அறியப்படாத ஆயிரமாயிரம் ஈழக்கதைகளின் சாட்சி.

நல்லதொரு வாசிப்பனுபவத்திற்கு நன்றி Sayanthan Kathir. வாழ்த்துக்கள்ணே.

ஆதிரையை இலங்கையிலிருந்து “அன்பளிப்பாக” எனக்கு அனுப்பிவைத்த எங்கள் பிரபலம் அண்ணன் Vikey Wignesh, உங்களுக்கும் நன்றிகள்.

 

 

By

Read More

மோட்டார் சைக்கிள் குரூப்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு ஓலையால் கூரை வேயப்பட்ட நான்கு கூடாரங்களில், சற்றே பெரிய கூடாரமொன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

“ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை அநியாயமா மெஸ்ஸில் போட்டுட்டாரே ”

இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். சோற்றுப்பானையை கிணற்றடியில் உருட்டி உருட்டித் தேய்த்துக் கழுவியபோது கன்னத்திலும் மூக்கிலும் கைகளால் சொறிந்ததால் உண்டான கறுப்புக் கோடுகள் இவனை வேவுப்புலி ஆக்கியிருந்தன. முகம் அலம்பிவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிய நினைப்பினை “ஆர் பாக்கப் போகினம்..” என்று அழித்தான்.

நேற்றிரவு களவாக ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலை எண்ணிக்கையில் நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். நான்கு பேருக்குக் காய்ச்சல், சாப்பிடவில்லை. அவர்களை விட்டுப்பார்த்தால் நுாற்று முப்பத்து எட்டு சாப்பாடுகள்.

இந்த முகாமிற்கும் அருகில் பிள்ளைகளின் முகாமிற்கும் தினமும் குசினியிலிருந்து ஒரு மாட்டு வண்டியில் சப்ளை இருந்தது. காலையில் பாண்தான் நித்திய நிவேதனம். இண்டு மூன்று உரப் பைகளில் கொண்டுவருவார்கள். தொட்டுக்கொள்ள பருப்புக் கறி. மதியச்சாப்பாட்டுக்கு எப்படியும் மூன்று மணி தாண்டிவிடும். அடுப்பிலிருந்த பானையோடு அரிசிச் சோற்றினையும் பெரிய அண்டா ஒன்றில் கொதிக்கிற சோயாமீற் கறியும் வரும். பெடியங்களிடத்தில், சைவ இறைச்சியென்றே அது அழைக்கப்பட்டது. “சைவ இறைச்சியாடா..” என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. அவ்வப்போது மாட்டு இறைச்சியும் அமையும்.

குசினியிலிருந்து சாப்பாடு வருவதோடு மிகுதிப்பொறுப்புக்கள் மெஸ்ஸில் நிற்பவர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும். உணவினைப் பங்கிடுவது, விநியோகிப்பது, சுத்தம் செய்வது, சட்டிபானை கழுவி அடுக்குவதெல்லாம் அவர்களது தொழில். பெரும்பாலும் இரண்டு பேராவது நிற்பார்கள். கஸ்டகாலம், இன்றைக்கு இவன் தனியொருவனாய் நிற்கவேண்டியதாய்ப்போனது.

சிவராசண்ணை சொல்லியிருந்தார். “எல்லா ஆக்களுக்கும் சமனா சாப்பாடு போகணும் சரியா .. உண்ட கூட்டாளி எண்டோ ..பிடிக்காத ஆக்கள் எண்டோ பாக்கக்கூடாது ..அப்படியெண்டு ஏதும் கேள்விப்பட்டனோ ..” என்று அவர் முடித்திருந்தார். இவன் அதில் சரியாக இருக்கப் பிரயத்தனப்பட்டான். ஒரு மட்டுமட்டான கணக்குப்படி ஒரு நபருக்கு ஏழு சோயாமீற் துண்டுகள் சரிவரும் போலிருந்தது. கடைசித் தட்டு நீட்டப்படும் வரை பதட்டமாகவே இருந்தது. “யாருக்கும் பத்தாமல் போனால் என்ன செய்யிறது.. எப்பிடியும் அடுத்த பனிஸ்ற்மென்ற் ரொய்லற் டிப்பார்ட்மென்ட் ஆகத்தான் இருக்கும்..”

இறுதித் தட்டினை நீட்டியிருந்தவனுக்கு இவனது வயது இருக்கலாம். முகத்தை உம் என்று வைத்திருந்தான். அவனை அனுப்பிவிட்டு தலையை வெளியே நீட்டி யாருமில்லை என உறுதிசெய்த பின்னரே இறுக்கம் தளர்ந்தது.

இவன் மெஸ்ஸில் நிற்க வேண்டிய ஆளே கிடையாது. நேற்றுவரை மெடிக்ஸ்ஸில் நின்றவன். டொக்டர். அப்படித்தான் வயதிற் சிறிய பெடியங்கள் அழைத்தார்கள். இயக்கத்தில் இணைந்த முதல்நாள் பின்னேரம் இங்கு கொண்டுவந்தார்கள். மூன்றாம் நாள் மெடிக்ஸ்ஸில் நிற்கச் சொல்லி சிவராசண்ணை சொன்னார். அப்பொழுது ஸ்டெதஸ்கோப், ரெம்பரேச்சர் மீற்றர், பிரசர் மீற்றர் எல்லாம் தருவார்கள் என நினைத்தான். ஆனால் மலேரியாவிற்கு கொஞ்சம் குளோரோபோம் குளிசைகளும், சொறி சிரங்கு படர்தாமரைக்குப் பூசுகிற களிம்பும், ஐதரசன் பேரொட்சைட் தண்ணிர் மருந்தும் கொஞ்சம் பன்டேஜ்களும் மட்டும்தான் கொடுத்தார்கள். ஐதரசன் பேரொட்சைட்டினை அளவுக்கு மீறிப்பயன்படுத்த வேண்டாம் என்று சிவராசண்ணை சொன்னார். அம்மருந்து வன்னிக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து தருவிக்கிறார்கள் போல,

ஐதரசன் பேரொட்சைட்டை காயத்தின் மேல் ஒரு பஞ்சினால் ஒற்றித் தேய்த்தால் நுரைத்துக் கொண்டு வரும். “அழுக்கெல்லாம் கரைஞ்சு வெளியேறுது.. இனி புண் மாறும்” என்று சொல்லப்பழகிக் கொண்டான். படர்தாமரைதான் அங்கே பரவலான நோயாக இருந்தது. மற்றையது சூரை முட் கிழியல். மற்றைய முட்களைப் போலல்லாது சூரை முள்ளு மறு வளமாக ஒரு துாண்டிலைப் போல இருக்கும். தோள் அளவிற்கு வளர்ந்த செடிகளில் ஏகத்துக்கும் நிறைந்திருந்தது. தேவைகளுக்காக காடுகளில் நுழைந்து திரிகையில் கொழுவிக் கொழுவி இழுத்ததுப் பிராண்டியது. பூனையின் நகக்கீறல்களைப் போலிருக்கும். மருந்தெதுவும் கட்டுவதில்லை. ஓடிக்குளோனை தொட்டுத் தேய்த்து விடுவான்.

படர்தாமரையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலைத் தரும் கடி. எப்போ பார்த்தாலும் இடுப்பிற்கு கீழே கையை வைத்து சொறிந்து கொண்டு திரிந்தார்கள். “ரெண்டு உடுப்பெண்டாலும் கழுவி பாவியிங்க .., கட்டாயம் பென்ரரை ரெண்டு நாளைக்கொருக்கா எண்டாலும் கழுவணும். ஒவ்வொரு நாளைக்கும் குளிங்க ., இதெல்லாம் இப்ப முடியிற காலத்திலேயே செஞ்சிடணும்.. மாதக்கணக்கில குளிக்காமயும் உடுப்பு மாத்தகூட நேரமே இல்லாமயும் ஓடித்திரியிற காலமொண்டு வரலாம் ..” என்று சிவராசண்ணை தினமும் சொன்னார். இவ்வாறான விடயங்களில் அவர் கண்டிப்பாக இருந்தார். தலைக்கு வாராவாரம் எண்ணெய் பூசுவதிலிருந்து தலைமுடியை ஒட்டவாக மொட்டையடிக்கும் வரை அவர் கவனித்தார். மொட்டையடிப்பதற்கு ஒரு காரணமிருந்தது. இடையில் ஓடிப்போனவர்களை ஊரில் கண்டுபிடிப்பதற்கு மொட்டை ஒரு அடையாளமாயிருந்தது. ஊர்களில் மொட்டையர்களுக்கு இரண்டு வியாக்கியானங்கள் இருந்தன. ஒன்று, தந்தையையோ தாயையோ இழந்திருந்தார்கள். மற்றையது இயக்கத்தை விட்டு இடையில் பாய்ந்து வந்திருந்தார்கள்.

படர்தாமரைக்குப் பூசுகிற வெண்ணிறக் களிம்பு உடலில் படும்போது சற்று குளிர்ந்த உணர்வாய் இருக்கும். ஆனால் அதற்கும் கடி சொறி நின்ற பாடில்லை. ஒருநாள் சிவராசண்ணையிடம் சொன்னான். “இதை விடச் சுப்பரான மருந்தொன்று இருக்கு அண்ணை. வேப்பமிலையை இடிச்சு அரைச்சு அதுக்குள்ளை கொஞ்ச மஞ்சள் துாளையும் சேர்த்துப் பிசைஞ்சு அரையில பூசிட்டுக் கிடக்க எரியிற எரிவில விடியக்காலமை தோலோடை உரிஞ்சு எல்லாம் போயிடும்.” அவர் விழுந்து விழுந்து சிரித்தார். பெரிதாக சத்தம் வராது. கீச்சிடுவதுபோல இருக்கும். “டேய், இவன் உங்களுக்கு ஹெமிக்கல் அடிக்கப் பாக்கிறான்டா,” என்று அருக்காக நடந்து சென்ற மூன்று பேரை அழைத்துச் சொன்னார்.

இவனை விடவும் ஒன்றிரண்டு வயதுகள் குறைந்த மூன்று பெடியங்கள் அங்கிருந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு முழங்காலில் ஆறாத புண்ணொன்று இருந்தது. அவனைச் சுழியன் என்று அழைத்தார்கள். காரணப் பெயராக இருக்கக் கூடும். மெலிந்த உடல்வாகு. தொளதொளத்த காற்சட்டை போட்டிருந்தான். குறுகுறுத்த கண்கள் ஓரிடத்தில் நின்றதாயில்லை. சற்று மேலேறிய நெற்றியில் தலைமயிர் இரண்டு பக்கமும் சுழித்துக் கிடந்தது. விளையாட்டாக மரமொன்றில் ஏறியபோது, தவறி விழுந்ததில் முழங்காலில் கல்லுக்குத்தியிருந்து நாட்பட்டிருந்தது. இவன் மருத்துவரான பின்னர் பார்த்த முதல் வைத்தியம் அது. சுழியன் கால்களை நீட்டி அங்கிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டான். புண்ணை வட்டமாய்ச் சுற்றி தோல் காய்ந்து கறுத்திருந்தது. நடுவில் ரோஸ் நிறத்தில் ஆறாத புண்..

“உமக்கு எத்தினை வயசு,” என்று கேட்போது சுழியன் நிமிர்ந்து பார்த்து குறும்பாகச் சிரித்தான். பின்னர் அமைதியாயிருந்தான். ஐதரசன் பேரொட்சைட்டை பஞ்சில் ஒற்றிக் காயத்தில் தேய்த்தபோது “ஊ.. ” என்று கத்தினான். பன்டேஜ் துணியை நான்காய் எட்டாய் மடித்து காயத்தில் வைத்து சுற்றிக் கட்டினான். சுழியன் எழுந்து நடந்தபோது சற்றுக் கெந்துவது போலிருந்தது. “நன்றி டொக்டர்..”

சுழியன் ஒரு விடயகாரனெத் தோன்றியது. அவனை அரசியல் துறைக்கு சேர்க்கக் கூடும். நேற்றோ அதற்கு முன்தினமோ, பேசிக்கொண்டிருந்த போது, “டொக்டர், உங்களுக்குத் தெரியுமோ, வெளிநாட்டுப் பள்ளிக்கூடங்களில ஒரு முறையிருக்காம். ஒரு சின்னப் பிள்ளையிட்டை ஒரு எழுத்தைச் சொல்லி உடனை அந்தப்பிள்ளையின்ரை மனதில அந்த எழுத்தில தொடங்கிற ஒரு இடத்தின்ரை பெயர், ஒரு பொருளின்ரை பெயர், ஒரு ஆளின்ரை பெயரைக் கேட்பினமாம். இப்ப, அமெரிக்காவில ஒரு பிள்ளையிட்டை, கி என்ற எழுத்தில தொடங்கிற ஒரு இடம் சொல்லச் சொன்னால் அது கிங்ஸ்டன் எண்டும். ஒரு ஆளின்ரை பெயர், கிளிண்டன் எண்டும். ஒரு பொருள் கீபோர்ட் எண்டு சொல்லும்….” என்று சொன்னான். ஆங்கிலத்தில் கி என்றொரு எழுத்து இல்லையெனச் சொல்லலாமா எனத் தோன்றியது. சொன்னால் அவனது உற்சாகம் வடிந்து விடும் போலிருந்தது.

இவன் “அதற்கு இப்போ என்ன” என்பதைப் போலப் பார்த்தான். சுழியன் மேலே அண்ணாந்திருந்தான். பின்னர் “டொக்டர், நீங்க இ்ப்ப என்னைக் கேளுங்கோ..” என்று இவனது தொடையைச் சுரண்டினான்.

சட்டென்று எழுத்தெதுவும் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் யோசித்தான். “சரி.. அதே.. கி.. ஒரு இடம், ஒரு ஆள்.. ஒரு பொருள் சொல்லும் பாப்பம்..”

சுழியன் சிரித்தான். முழுப்பற்களும் வெளித்தெரிந்தது. பிறகு “இடம் கிளாலி, ஆள் கிட்டு, பொருள் கிரேனைட்..” பட படவென்று சொன்னான். திரும்பவும் அண்ணாந்து பார்த்திருந்தான்.

கிடைக்கிற நேரங்களில் சுழியனோடுதான் பேசிக்கொண்டிருந்தான். அலைவரிசை நன்றாக ஒத்திருந்தது. இனிமேல் இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்று தென்னவன் ஓடர் போட்ட பிறகு வேறும் யாரையேனும் சேர்த்துத்தான் கதைக்க வேண்டியிருந்தது. தென்னவன் அங்கு இரண்டாவது பொறுப்பில் இருந்தார். முகாமில் நிற்பது குறைவு. சீருடையல்லாத சாதாரண உடைகளை அணிந்தபடி காலையில் வெளியேறுபவர் அரிதாக சிலநாட்கள் முழுவதுமாக முகாமில் நிற்பார். அவர் வயதையொத்த நிறையப்பேர் அங்கிருந்ததாலேயோ என்னவோ, பொறுப்பாளர் என்றொரு நினைப்பு அவர் மீது தோன்றுவதில்லை.

ஒரு நாட் காலை கணக்கெடுத்தபோது, காணாமற்போயிருந்த இரண்டு பேர் நேற்றைய நாள் முழுவதும் ஒன்றாயிருந்து குசுகுசுத்துக்கொண்டிருந்தனர் என்று தெரியவந்தபிறகு, இரண்டு பேர் கூடியிருந்து கதைப்பதற்கு தென்னவன் தடைவிதித்தார். இயல்பாய் இரண்டுபேர் கதைப்பதற்குரிய சூழல் வாய்த்தாலும் கூட மௌனமாக கடந்துபோவது ஒருவித அந்தரமான சூழலாயிருந்தது. சும்மாவாகிலும் மூன்றாம் நபரை வைத்துக்கொண்டே கதைக்க முடிகிறது.

அப்படியொருமுறை இன்னும் இரண்டுபேரை வைத்துக்கொண்டு “எனக்கெண்டா அரசியல்துறைதான் சரி. சண்டை சரிவராது” என்று இவன் சொன்னதுதான் வினையாகிப் போனது. அதுவும் வேறேதோ பேச்சினிடையே பொதுவாகத்தான் சொல்லியிருந்தான்.

அன்றைக்கு மாலை சுழியன் மருந்து கட்ட வந்திருந்தான். காயம் முழுதாக ஆறியிருந்தது. “இனி மருந்து தேவையில்லை” என்றான். “அதை நான் சொல்லோணும்” என்றான் இவன். உண்மையில் மருந்து தேவைப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் வெள்ளை பன்டேஜ் துணியை மருந்தில் ஒற்றிக் கட்டினான். அதுவே கடைசிக்கட்டானது.

காலையில் துவக்குகளோடு (பொல்லுகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) பயிற்சியை முடித்துவிட்டு எல்லோரும் வரிசையாக உட்கார்ந்தார்கள். ஒவ்வொரு வரிசையும் ஒரு குரூப்பாயிருந்தது. ஒவ்வொரு குரூப்பிற்கும் ஒரு பெயர் இருந்தது. அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் வரிசையின் முதலிடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இவன் பேப்பர் வாசித்தான். இடையே “ஓயாத அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட ஆட்லறி எத்தனை மில்லிமீற்றரிலானது” என்று கேட்டான். அது சிவராசண்ணை அறிமுகப்படுத்திய வழக்கம். பெடியங்கள் உன்னிப்பாக செய்தியைக் கேட்கிறார்களா என்று அறிகிற முறை. நாலைந்து பேர் கை உயர்த்தினார்கள். அவர்களை கைகளை கீழே விடும்படி சொன்ன சிவராசண்ணை, ஆறாவது வரிசையில் ஆகப் பின்னிருந்தவனைப் பார்த்து “நீ சொல்லு” என்றார். அவன் “நுாற்று ஐம்பத்து ஒன்று..” என்றான். பிறகு பலமாக தலையை ஆட்டி “இல்லை, இல்லை நுாற்று ஐம்பத்து ஐந்து..” என்று இழுத்தான். பின்னர் முடிவாக “ சரியாத்தெரியேல்லை. ஆனால் அந்தக் குழலுக்கை போற அளவுதான்” என்றான். சிரிப்பலைகள் பறவைகளின் சிறகடிப்பைப்போல எழுந்து அமிழ்ந்தன.

ஏழாவது வரிசையாக மோட்டர் சைக்கிள் குரூப் இருந்தது. அதில் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மற்றைய வரிசையில் ஆட்கள் குறைகிற போதெல்லாம் மோட்டர்சைக்கிள் வரிசையில் ஆட்கள் அதிகரித்தார்கள். வாரத்திற்கு இரண்டு பேராவது நிச்சயமாக அதில் இணைந்தார்கள். இயக்கத்தில் இணைந்த கொஞ்ச நாட்களிலேயே வீட்டுக்குப் போகப் போகிறோம் என்றவர்களும், பயிற்சி தொடங்க முன்னரேயே ஓட முயற்சித்து வழிகளில் மாட்டிக்கொண்டவர்களும் அந்தக் குரூப்பிலேயே விடப்பட்டிருந்தார்கள்.

சிவராசண்ணை மோட்டர் சைக்கிள் குரூப்பிலிருந்து ஒருவனை எழுப்பினார். “நீ இண்டைக்குப் போகலாம்” என்றார். அவனுக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போனது. மகிழ்ச்சியின் உச்சத்தில் நெளிந்தான். மற்றவர்கள் அவனை ஒருவித ஏக்கத்தோடு பார்ப்பது போலிருந்தது. அவன் வீட்டுக்குப் போக விரும்புகிறேன் எனச் சொல்லி மூன்று மாதங்களாவது ஆகியிருக்கும். அப்படிச் சொன்னபோது அவன் இயக்கத்தில் இணைந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தன.

போகும்போது சிவராசண்ணை இவனையும் இன்னொருவனையும் வரச்சொன்னார். அவரது துண்டாடப்பட்ட காலின் மீதி, மடித்துக் கட்டிய சாரத்தின் கீழே தொங்கியபடியிருந்தது. வலது கையின் தோளிடுக்கில் ஊன்றுகோலைத் தாங்கி கெந்தி நடந்தார். இவன் அவருக்கு அருகாக அவரைத் தாங்குமாற்போல நடந்தான். சிவராசண்ணையால் எவருடைய தயவுமின்றி நடக்க முடியாது. சண்டையொன்றில் வலதுகாலை முழங்காலுக்கக் கீழே இழந்திருந்தார். மட்டக்களப்பின் காடுகளுக்குள் சண்டை நடந்ததாகச் சொன்ன ஞாபகம்.

அவரது உடம்பில் வேறும் காயங்களை இவன் கண்டிருக்கிறான். இடது முதுகைப் பிளந்த காயமொன்றை தோல் சற்றே திரட்சியாக மூடியிருந்தது. ஒருமுறை கிணற்றடியில் சிவராசண்ணை குளிப்பதற்கு தண்ணீர் அள்ளி வார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் காயத்தைக் கண்டான். அவனையுமறியாமல் “புறமுதுகு” என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. கண்களை இறுக்கி மூடி நாக்கை கடித்துக் கொண்டான். ஏதேனும் பனிஸ்ட்மென்ட் கிடைக்குமோ எனத் தோன்றியது. சிவராசண்ணை முகத்திலிருந்த சவர்க்கார நுரையை வழித்தபடி சிரித்தார். “சண்டைக்குள்ள நிண்டு பார் மகனே.. அப்ப தெரியும்” என்றார்.

சிவராசண்ணைக்கு இருபத்தாறு வயதுகள் இருக்கலாம். குளித்து முடித்து நெற்றியில் திருநீற்றினை அள்ளிப் பூசினார் என்றால் அவரை ஒரு இயக்கக்காரர் என அடையாளம் காண்பது வெகு சிரமம். தென்னவன் வாக்குவாதப்படுவார். “என்ன கருமத்துக்கு இந்தச் சாம்பலைப் பூசுறீங்கள், இல்லாத கடவுளுக்கு இதெல்லாம் என்ன கோதாரிக்கு எண்டு எனக்கு விளங்கேல்லை..”

சிவராசண்ணை பதிலுக்கு விவாதிப்பதில்லை. “இரிக்கிதோ இல்லையோ, இதொரு நம்பிக்கை” என்பதோடு முடித்துக் கொள்வார்.

சற்றே உயரமாயிருந்த மேசையில் ஒற்றைக் காலால் உந்தி ஏறி சிவராசண்ணை உட்கார்ந்து கொண்டார். ஊன்றுகோல்களை சாய்த்து வைத்தார். காட்டின் தடிகளை வரிசையாக அடுக்கி அமைத்திருந்த நீண்ட இருக்கையில் இவனையும் மற்றவனையும் உட்காரச் சொன்னார். சற்று நேர அமைதிக்குப் பிறகு “என்னடா, தமிழ்செல்வன் அண்ணனுக்கு பதிலா உன்ன அரசியல் துறைக்குப் போடோணும் எண்டு சொன்னனியாம், அவ்வளவு பெரிய ஆளா நீ ” என்றார்.
இவன் பதைபதைத்துப் போனான். வார்த்தைகள் சிக்கின. “அம்மாவாணை நான் அப்பிடிச் சொல்லேல்லையண்ணை” என்று அழுமாப்போல பதில் சொன்னான். “நாங்கென்ன வேலைக்கா ஆக்களேடுக்கிறம் ” இதைச் சொல்லும் போது அவருக்கும் சிரிப்படக்க முடியவில்லை. முகத்தை்திருப்பி மறைத்துக் கொண்டார். இவன் அமைதியாய் நின்றான்.

“இண்டைலரிந்து மெடிக்ஸ விட்டுட்டு சொல்லுறவரைக்கும் மெஸ்ஸில நில்.. போ..”

சுரத்தில்லாமல் வெளியேறினான். அதுநாள் வரையான உற்சாகமெல்லாம் உடைத்து வெளியேறி வழிந்து தீர்ந்தாற்போல இருந்தது. மற்றவன் பாவம், அவன் நேற்று “புலனாய்வுத்துறைதான் எனக்கு விருப்பம்” என்றிருந்தான்.

“நீ என்ன.. அம்மானுக்குப் பதிலா உன்னை ஐ க்கு பொறுப்பா போடணும் எண்டு சொன்னியாம்..” என்று சிவராசண்ணை அவனை விசாரித்துக் கொண்டிருந்தது கேட்டது. தகடு குடுத்த அந்தக் கறுப்பாடு யாராக இருக்கும் என்று இவன் யோசிக்கத் தொடங்கினான்.

இயக்கத்திற்குச் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே இவனை நிகழ்ச்சியொன்றில் பேசுமாறு சிவராசண்ணை கேட்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. மற்றைய நாட்களில் படுக்கைக்கு முன்னர் ஏதேனும் படம் போடுவார்கள். ஒளிவீச்சுக்களாகவோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில தாக்குதல் படங்களாகவோ இருக்கும். பெரும்பாலும் ரம்போ வின் படங்கள் தான். இவனுக்கு சண்டைப்படங்களில் ஆர்வமிருந்ததில்லை. ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்தான்.

ஞாயிறு நிகழ்ச்சிகளில் வில்லுப்பாட்டுக்கள் கவிதைகள் பாடல்கள் பேச்சுக்கள் என சிவராசண்ணை ஆட்களைப் பிடித்து ஒழுங்கு செய்திருந்தார். எல்லோரும் ஏதாவது ஒன்றில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவார். அப்போதெல்லாம் “நாங்கள் சண்டைக்குத்தான் வந்தனாங்கள், உதுகளுக்கு இல்லை” என்று சிலர் வாக்குவாதப்படுவார்கள். “இதுகளை விட்டுட்டு, முதல்லை எங்களை ட்ரெயினிங்குக்கு அனுப்பிற வேலையைச் செய்யுங்கோ” என்பார்கள்.
“கூடி வரும் வரைக்கும் பொறுமையா இரிக்க வேணுமெண்டதும் ஒரு போராளிக்கு முக்கியம்தான். சரி ஏன் சண்டைபிடிக்க வந்தனி எண்டதையாவது ஏறிச் சொல்லு”

சுழியன் நன்றாகப் பாடுவான். கைகளைப் புறத்தே கட்டியவாறு முகத்தில் உணர்ச்சியேதையும் காட்டிக்கொள்ளாமல் மேலே கூரையைப் பார்த்தவாறு பாடுவான். “சின்னச் சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்..” குழந்தைமையான அவனது குரல் அந்தப் பாடலுக்குப் பொருத்தமாயிராது. ஆனாலும் அவன் பாடி முடிக்கும் வரை நிசப்தம் சூழ்ந்திருக்கும். யாருக்கும் அதை கலைத்துப் போட மனம் வராது.

ஒருநாள் இவன் சமகால அரசியல் குறித்துப் பேசினான். முதலிரு வார்த்தைகளை உதிர்க்கும் வரை தயக்கமா நடுக்கமா என உய்த்துணர முடியாத உணர்வொன்று ஒட்டியபடியிருந்தது. நீண்ட காலத்தின் முன் சிறுவயதில் பள்ளிக்கூட மேடையொன்றில் ஏறி “நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் சுத்தம் சுகம் தரும். சுத்தமாயிருப்பதற்கு சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும் ” என்றுவிட்டு அழுதுகொண்டு இறங்கி ஓடியவன்தான் பின்னர் மேடைகள் பக்கம் எட்டியும் பார்த்திருக்கவில்லை.

இங்கே மேடையில் மைக் எதுவும் இருக்கவில்லை. அதுவே முன்னிருந்தவர்களுக்கும் இவனுக்குமான நெருக்க உணர்வொன்றைத் தோற்றுவித்தது. குரலைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தான். “நீங்கள் இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று நிறுத்திய போது எந்த விடயமென்பதில் இவனுக்கே குழப்பமிருந்தது.

“யாழ்ப்பாணத்தைப் புலிகள்… ” என்றவன், நிறுத்திவிட்டு மீண்டும் முதலிருந்து தொடங்கினான். “யாழ்ப்பாணத்தை நாங்கள் விட்டுவிட்டு வந்ததை எல்லாரும் தோல்வியென்கிறார்கள். ஆம். அது ஒரு ராணுவப்பின்னடைவுதான். ஆனால் உங்களுக்குத் தெரியும். யாழ்ப்பாண மக்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்த உடனே ஐநா செயலாளர் பூத்ரஸ் பூத்ரஸ் காலி தனது கவலையை தெரிவித்திருக்கிறார். தனது கரிசனையைச் சொல்லியிருக்கிறார். இதுவொரு அரசியல் வெற்றி. எங்கள் மக்கள் தங்களது பிரச்சனையை இன்று உலகப்பிரச்சனையாக்கியிருக்கினம். நீங்கள் இந்த விடயத்தை தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும்” என்று நிறுத்தினான். பேசிக்கொண்டிருந்தபோது கைகள் உயர்வதிலும் தாழ்வதிலும் அப்படியும் இப்படியும் அசைவதிலும் ஒருவிதமான கம்பீரத்தினை உணர்ந்தான். பூரிப்பாக இருந்தது. பெரும்பாலும் அப்போதே அரசியல் துறை கனவு உதித்திருக்க வேண்டும்.

சிவராசண்ணை தொடர்ந்து பேசு என்பதுபோல சைகை செய்தார். “எங்களுக்காக தமிழகத்திலே அன்பர் ஒருவர் தீக்குளித்து தன்னைக் கொடுத்துள்ளார். அவருக்கு எமது வீரவணக்கங்கள்”

அவரது பெயர் அப்துல் ரவூஃப் என்பது இவனுக்குத் தெரிந்திருந்தது. சொல்லவா விடவா என்று சற்றுக் குழம்பி அன்பர் என்றே முடித்துக் கொண்டான். சிவராசண்ணை கைதட்டினார். இறங்கி நடந்தபோது தென்னவன் தோள்களைத் தட்டி “கலக்கிட்டீர்” என்றார்.

அன்றைக்குப் பிறகு இவன் தொடர்ச்சியாப் பேசினான். வகுப்பெடுக்க வருகிற பொறுப்பாளர்களிடம் கேள்விகள் கேட்டான். மற்றையவர்களின் கேள்விகள் எப்போதும் ஒரேமாதிரியிருந்தன. “எப்ப எங்களை ரெயினிங்குக்கு அனுப்புவியள், எப்ப சண்டைக்கு அனுப்புவியள்” என்ற ரகக் கேள்விகள். முகாமிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே ஆட்களைப் பயிற்சிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இவன் அனுப்பப்படவே இல்லை. அதுபற்றி இவன் அலட்டிக் கொண்டதும் இல்லை. இவன் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கேள்விகளைக் கேட்டான். பதில்களும் அப்படியே இருந்தன.

“எங்களிடம் விமானங்கள் இருக்கிறதா..”

“ஓம், பலாலியிலும் வவுனியாவிலும் நிற்பவை எங்கடைதான்.. ஆயுதங்களை வாங்கி ஒருநாள் எங்களிடம் மொத்தமாகத் தருவதைப் போல, விமானங்களையும் தருவார்கள்.”

“ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்களோ..”

“நாங்கள் இல்லை. ஆனால் அவர் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையென்று நினைக்கிறீரோ..”

“மாத்தையா எங்கை..”

“இந்தக் கேள்விக்கான பதில் உங்கடை போராட்ட குறிக்கோளுக்கும், நோக்கங்களுக்கும் எந்த விதத்திலும் உதவியாயிருக்காது.”

மெஸ் நினைத்தது போல கஸ்டமாக இருக்கவில்லை. சிலவேளைகளில் குசினிக்குப் போய் சாப்பாடு எடுத்து வரவேண்டியிருந்தது. அதற்கு கூடவே இரண்டு பேரை சிவராசண்ணை அனுப்பி வைத்தார். நடந்துபோய் மாட்டுவண்டியில் எடுத்து வந்து மீண்டும் வண்டிலைக் கொண்டுபோய் விடவேண்டும். குசினியிலும் மோட்டர்சைக்கிள் குரூப்பிலிருந்தவர்களே வேலை செய்தார்கள். போகிற நேரமெல்லாம் “எங்களை எப்ப விடுறதெண்டு சிவராசண்ணை உன்னட்டை ஏதாவது சொன்னவரா” என்று இவனிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவன் எப்போது பார்த்தாலும் “மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்தில வீடு திரும்ப முடியல்ல” என்று பாடியபடியிருப்பான்.

குசினிக்குப் போகிற வழியில் பிள்ளைகளின் முகாமின் வாசலில் இருந்த கூட்டில் இருவர் அல்லது மூவர் சென்ரிக்கு இருப்பார்கள். நீளக்காற்சட்டை அணிந்து சற்றே பெரிய சேர்ட் போட்டிருப்பார்கள். இடுப்புப் பட்டி அணிந்திருப்பதில்லை. உள்ளே சிரிப்புச் சத்தங்களும் கேட்கும். இதற்காகவே இவனோடு குசினிக்கு வரப் பிரியப்படுபவர்களும் உண்டு. பிள்ளைகளை நேராக எதிர்கொள்ள நேர்கையில் சிரிப்பதா, அல்லது முகத்தை உம் என்று வைத்திருப்பதா என்பதில் இவனுக்கு குழப்பமாயிருந்தது. பெரும்பாலும் தலையைக் குனிந்து கொண்டு கடந்துவிடுவான். கூட வருபவர்கள் சிலவேளைகளில் அவர்களைப் பார்த்து “எப்பிடி, ஒரே பம்பலாப்போகுது போல..” என்பார்கள்.

“வேலையைப்பார்த்துக் கொண்டு போம்..” என்று பதில் வரும்.

சென்ற கிறிஸ்மஸ்ஸின் போது பிள்ளைகள் முகாம் வந்திருந்தார்கள். அன்று பெரிய பெட்டிகளில் கேக், மைலோ மில்க், கன்டோஸ் என்பனவும் வந்திருந்தன. இவன் கிறிஸ்மஸ் தாத்தா ஆகியிருந்தான். பிள்ளைகளில் அவளும் இருக்கலாம் என்று சட்டெனத் தோன்றியது. “நான் இணைந்தபடியால் அவளும் இணைந்திருக்கக் கூடும், கணவன் இறந்தால் தீக்குளிக்கிற மனைவியைப் போல.. ”

தாத்தாவின் முகமூடி வசதியாகப்போனது. யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவராகத் தேடினான். அவள் இல்லை. மெல்ல மெல்ல இன்னதென முடியாத ஏமாற்றம் இவனில் படர்ந்தபடியிருந்தது.

இயக்கத்தில் சேரும்போதே அவளைப்பற்றிக் கேட்டார்கள். பத்தோ பன்னிரெண்டு கேள்விகள் அடங்கிய றோணியோவில் அச்சிடப்பட்ட ஒரு தாளில் கடைசிக் கேள்வியாக அது இருந்தது. காதல் உண்டா.. ஆம் எனில் விபரம்.. பெயர்.. முகவரி

ஆம் என்று விபரங்களைக் கொடுக்கலாம் எனத் தோன்றிய எண்ணத்தை பிறகு மாற்றிக் கொண்டான். அந்தக் காதலை நிறுத்திக் கொள்வதா தொடர்வதா என்பதில் இன்னுமொரு தெளிவு ஏற்படவில்லை. முகாமிற்கு வந்த முதல்நாட்களின் இரவுகளில் சட்டென்று வருகிற விழிப்பு, கூடவே அவளது நினைவையும் அழைத்து வரும். வீட்டில் படுத்திருக்கவில்லை என்ற நினைப்பும் சேர வெறுமையான உணர்வொன்று நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அவளுக்குச் சொல்லாமல் எதற்காக நான் இயக்கத்திற்கு வந்தேன் என்று இரண்டொரு தடவைகள் எழுந்த கேள்வி பிறிதொருநாள் ஏன் இயக்கத்திற்கு வந்தேன் என்பதில் வந்து நின்றது. நல்ல வேளையாக அப்படியொரு கேள்வி படிவத்தில் இருந்திருக்கவில்லை.

அதிகாலையிலிருந்து தலைக்கு மேல் விமானங்களின் இரைச்சல் கேட்கத் தொடங்கியிருந்தது. துாரத்தே வெடி அதிர்வுகள் உற்றுக் கேட்டாலன்றி, மற்றும்படி பெரிதாக கேட்கவில்லை. மினுமினுக்கிற சில்வர் சாப்பாட்டுத் தட்டுக்கள் எதுவும் வெளியில் இருக்கக் கூடாதென்று தென்னவன் சொன்னார். அடர்த்தியான காட்டுமரங்களின் கிளைகளைத் தாண்டி ஊடுருவுகின்ற சூரிய ஒளி, சில்வர் தட்டில் பட்டுத் தெறித்து விமானிக்கு சமிக்கையைக் கொடுக்கலாம் என்பதை நம்ப முடியாதிருந்தது. எதற்கும் இருக்கட்டுமென்று கால்களுக்கடியில் அகப்பட்ட ஒன்றிரண்டு கன்டோஸ் ஈயப்பேப்பர்களையும் இவன் அப்புறப்படுத்தினான்.

கிளிநொச்சிப்பக்கமாக சண்டை நடந்தது. கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றி அப்பொழுது ஆறேழு மாதங்களே ஆகியிருந்தது. புலிகளின் குரலின் செய்தியில் ஆனையிறவிலும் அணிகள் இறங்கி நிற்பதாகச் சொன்னார்கள். ஆனையிறவு என்ற பெயரைக் கேட்டதுமே முகாமில் உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. வழமையாக இப்படிச் சத்தமிடும்போது சிவராசண்ணை ஒன்றிரண்டு பேரை முறைத்துப் பார்ப்பார். சத்தம் அடங்கிவிடும். ஆனால் இப்பொழுது சிவராசண்ணை தன் முகத்திலும் புன்னகையைப் படரவிட்டிருந்தார்.

இவனும் சுழியனும் இன்னும் நாலைந்து பேரும் வானொலிக்கு அருகிலேயே இருந்தார்கள். “இந்தச் சண்டைக்கு நாங்கள், ஆகாய கடல் வெளிச் சமர் – இரண்டு அல்லது ஓயாத அலைகள் – இரண்டு” என்று பெயர் வைக்கலாம்” என்றான் இவன். வார்த்தைகள் வெளியேறிய பிறகுதான் நெஞ்சு திக் என்றது. முகத்தைத் தாழ்த்திச் சுழற்றி கூட இருந்தவர்களை பார்த்தான். யாராவது போய் பற்றி வைக்கப்போகிறார்கள்.. “தலைவரின் இடத்துக்கு என்னை நியமிக்கச் சொன்னதாக..”

மதியத்திற்கு பிறகு சிவராசண்ணை எல்லோரையும் வரிசை கட்டச் சொன்னார். “சப்ளைக்குப் போக வேண்டி வரலாம். ரெடியா இரிங்க..”

திரும்பவும் உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. இவனுக்கு நெஞ்சிடிக்கத் தொடங்கியது. ஷெல்லும் துப்பாக்கிச் சன்னங்களும் கண்டபடிக்குப் பறக்கிற ஓர் இடத்திற்கு அருகில் நிற்பதை யோசித்தாலே முழங்கால்களின் இரண்டு சிரட்டைகளும் குளிரில் பற்களைப் போல முட்டிக்கொண்டு ஆடுவதாய் உணர்ந்தான். மேலே கிபிர் வேறு..

“சத்ஜெய என்று சமருக்குப் பெயரிட்டு, உத்வேகம் கொண்டு வந்தாயா.. புலிகள் நித்திரையா கொள்வார்.. ” என்று யோசித்துக் கொண்டிருந்த கவிதை வரிகளும் மறந்து போயின.

பரந்தன் லைனை உடைத்துக்கொண்டு உள்நுழைய முடியவில்லையென்றும் ஆனையிறவில் இறங்கியவர்கள் ஆட்லறிகளை அழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திவந்தபோதுதான் போன உயிர் திரும்பி வந்தது.

முகாமில் உற்சாகமிழந்து திரிந்தார்கள். சுழியன் “ச்சே.. ச்சே..” என்றபடி திரிந்தான். “அடுத்த அடி ஆனையிறவுக்கு விழேக்கை அங்கை நான் நிப்பன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

இரண்டொரு நாட்களுக்குப் பிறகான ஒருநாட்காலை மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்து ஏழுபேரை சிவராசண்ணை வீட்டுக்குப் போகச் சொன்னார். இவனறிய இப்படி ஒரே தொகையில் ஆட்களை அனுப்புவது புதிதாக இருந்தது. அவர்களில் மாங்கிளியும் பாட்டுக்காரனும் இருந்தான். வரிசையில் முதலாவதாக இருந்த சுழியன் அவர்களை நோக்கி ஏளனத்தைப் போர்த்திய பார்வையை வீசினான். பிறகு தலையில் அடித்துக் கொண்டான். இவனுக்கு சுழியனில் எரிச்சல் வந்தது. “இவர் பெரிய மயிர்…”

அன்றைக்கு இரவே மோட்டச் சைக்கிள் குரூப்பில் சேரலாம் என திடீரென்று யோசனை உதித்தது. கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது மாதமாவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் இருக்கவேண்டியிருக்கும் என்ற நினைப்பு விசரைக் கிளப்பியது. புதிய மலக்கிடங்குகளை வெட்டுவதிலிருந்து சமைத்துப்போடுவது வரை வாட்டியெடுப்பார்கள். தப்பி ஓடினால் என்ன..

இவன் ஓடிப்போவது பிள்ளைகளின் முகாமில் சென்ரிக்கிருப்பவர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் கண்ணயரும் நேரம் எதுவெனத் தெரியவில்லை. அல்லது கண்ணயர மாட்டார்களோ என்னவோ.. அனைத்துக்கும் முதல் ஏன் விலகி வந்தேன் என்பதற்கு எதையாவது ஊரில் சொல்லவேண்டும். பயிற்சி கடினமென்று சொல்லலாம்தான். ஆனால் சூரை முட்காயங்களைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்புத் தன்னும் இல்லை. ஆகக்குறைந்தது அடிப்படைப் பயிற்சி முடித்தவர்களுக்கு முழங்கைகள் கறுத்து கண்டிய காயங்களோடு இருக்கும். அதுவும் கிடையாது.

அடுத்தநாள் பகல் முழுக்க விலகுவதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் என்று மண்டையைப் போட்டுக் குழப்பினான். அன்றைக்கு நடுச்சாமம், நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒற்றையடிப்பாதைக்கு இறங்கி நடந்தான். அருகாக நீரோடையின் சலசலப்பன்றி வேறொரு அசுமாத்தமுமில்லை. பிள்ளைகளின் முகாம் அமைதியாகக் கிடந்தது. சென்ரிக்கு இருக்கிறார்களா இல்லையா என்றும் தெரியவில்லை. குசினியைத் தாண்டி வீதியில் ஏறி மாங்குளத்தை நோக்கி நடக்கத்தொடங்கியவன் பலப்பல ஆண்டுகள் நடந்தும் நீரில் மிதந்தும் பறந்தும் வந்து நிமிர்ந்த இடம் ஐரோப்பாவின் மத்தியிலிருந்தது.

0 0 0
பெரும்பாலும் கேள்விகளை அனுப்பச்சொல்லி ஆறுதாக உட்கார்ந்து பதில்களாக எழுதியே கொடுத்துவிடுவான். நேரடிப் பேட்டிகளுக்கு ஒருபோதும் சம்மதித்தது இல்லை. அவை இக்கட்டில் மாட்டிவிடக்கூடியவை. பதிலற்ற கேள்விகளுக்கு கறுக்கும் முகத்தையும் தளம்பும் குரலையும் கமெரா காட்டிக்கொடுத்துவிடும். இந்த முறையும் கேள்விகளை அனுப்பச் சொல்லியிருந்தான். கிடைத்திருந்தன. ஒரு நள்ளிரவில் பதில்களை எழுதத் தொடங்கினான்.

கேள்வி இலக்கம் 6

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீங்கள் விலகியதற்கான காரணங்கள் என்ன..

நான் பெருங்கனவொன்றோடு அந்த அமைப்பில் இணைந்து கொண்டேன். சிங்கள அரச பயங்கரவாதத்திடமிருந்து எனது மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிற கனவு அது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அமைப்பில்..

1.ஜனநாயகத் தன்மையை மருந்திற்கும் காண முடியவில்லை.
2.ஏக பிரதிநிதித்துவம் என்பது எனக்கு ஒருபோதும் ஏற்புடையதாக இருக்கவில்லை.
3.மாற்றுக் கருத்துக்களுக்கு அந்த அமைப்பு மதிப்பு அளிக்கவில்லை.
4.வலது சாரி அரசியலை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
5.மக்களை மையப்படுத்திய சரியான அரசியல் செல்நெறி அங்கு இருக்கவேயில்லை.
6…
7..
8..
மேற்கூறிய பத்துக் காரணங்களும் ஒன்று சேர்ந்து ஒருநாள் அல்லது ஒருநாள் இந்த இயக்கத்தை முற்றாகத் தோற்கடிக்கும் என்பதனை நான் அப்போதே உணர்ந்திருந்தேன்.
0 0 0
பதினைந்து வருடங்களில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக் காரணங்களைக் கண்டுபிடிக்க முடிந்த இவனுக்கு கடைசிவரை இயக்கத்தில் ஏன் இணைந்தேன் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

By

Read More

அ.இரவி (பொங்குதமிழ் இணையம்)

2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’

பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.” மீண்டும் நான் நினைத்தேன்: ‘இது ஒரு பாஷன். ஷோபாசக்தி கொரில்லா என்று வைத்தார். இப்ப இவர் இயக்கம் என்கிறார்.’

அந்த விருந்து நன்றாக நடந்தது. நான் ‘நினைத்ததை’ ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு சயந்தனுடன் மெல்லிய இருட்டுக்குள் நன்றாக அளவளாவினேன்.

ஒருசில மாதங்கள் கழிந்தன. ஒருபேப்பர் ஆசிரியர் கோபி தொலைபேசி எடுத்தார்.

“இரவியண்ணை, சயந்தனின் புத்தகம் சோக்காகத்தான் இருக்கு. நீங்கள் வாசிச்சியளோ..”

“எது..? இயக்கம் எண்ட புத்தகமோ..”

“அதுதான். ஆனால் ஆறாவடு என்ற பெயரோடு வந்திருக்கு. நீங்கள் கட்டாயம் வாசிக்கவேணும். அனுப்பி விடுறன்.”

எனக்குன் கோபியின் இரசனையில் சந்தேகமே இல்லை. படைப்பிலக்கியத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாதவர். அரசியல் கட்டுரை என்றால் அது வேறு. அம்புலிமாமாக் கதையைக் கூட அடுத்த மகாபாரதம் என்று எண்ணக்கூடியவர். அவர் ஆறாவடுவைப் புகழ்ந்தால் அது புரியக்கூடியதுதானே என்று விட்டுவிட்டேன். இரண்டொரு நாளில் ஆறாவடு வந்து சேர்ந்தது. ஒரு கிழமையின் பிறகு ‘கணிப்பிற்குரிய கதைஞன் வந்து சேர்ந்தான்’ என்று ‘ஆறாவடு’ குறித்து ஒரு இரசனைக் கட்டுரை எழுதினேன். ‘பொங்குதமிழ்’ இணையத்தில் அது வெளியாயிற்று.

அந்தக்கட்டுரையை இந்தக் கருத்துப்பட நிறைவு செய்திருந்தேன். ‘கணிப்பிற்குரிய கதைஞன்’ சயந்தன் என்பதனை அவரது அடுத்தடுத்த படைப்புக்களிற்தான் உறுதி செய்ய வேண்டும்.’

சரி, இவ்வாறுதாம் கேள்வி எழுகிறது. உறுதி செய்தாரா சயந்தன்? ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ சிறுகதை அதை உறுதி செய்ய முயன்றது. ஆனால் அது சிறுகதை என்னும் கலை வடிவமாக இருந்தமையால் நிரூபிக்க முடியாமற் போயிற்று. இப்போது சயந்தன் ‘ஆதிரை’ என்னும் புதினத்தைத் தந்திருக்கிறார். 664 பக்கங்கள். அவ்வளவு பக்கங்களிலும் விரிந்த உலகம் பெரிது. அவ்வளவு பக்கங்களிலும் உலாவிய சுமார் இருபது கதை மாந்தர்களும் ‘கணிப்பிற்குரிய கதைஞர்தான் சயந்தன்’ என்று சொன்னார்களா.. ?

ஏறத்தாள 10 நாட்களில் சயந்தன் விபரித்த உலகில் என்னால் வாழ முடிந்ததா? அழுதேனா..? சிரித்தேனோ..? ‘ஆ’ என்று வியந்தேனா..? யாவற்றுக்குமான ரசனைக் குறிப்பையே நான் எழுத விளைவது..

1977 தமிழர் மீதான இனப்படுகொலையினால் மலையகத்திலிருந்து சிங்கமலை தன் மனைவி தங்கமையை மலையின் தேயிலைக் கொழுந்துகளுக்குத் தின்னக் கொடுத்துவிட்டு வல்லியாள், லெட்சுமணன் என்னும் இரு பாலகர்களுடன் வன்னிக்கு வருகிறான்.

அதுதான் ஆதிரையின் தொடக்கப்புள்ளி.

ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், சுமார் இருபது மானுடர்கள், தளம் என்று நான்கைந்து, பெரும் நிலப்பரப்பு, முப்பத்தைந்து வருட காலமான நீண்ட வெளி, வேட்டை, வேளாண்மை, தென்னைப் பயிர்ச்செய்கை, என்று பல்வேறான தொழில். விடுதலைப் போராளிகளின் இராணுவத் தாக்குதல்கள், சிங்கள இந்திய இராணுவ வன்முறை, இனப்படுகொலைகள், சுனாமி அனர்த்தம் என்று சுற்றிச்சுழன்று இடையறாது ஒலித்த ஒப்பாரிப்பாடல் முள்ளிவாய்க்கால் ஊழியில் அலறல்கள், கதறல்களாகி 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதைக் கரைத்துவிடவில்லை. எந்த ஒரு தாய்மடியும் ஆறுதல் தரவில்லை. சுமார் முப்பத்தைந்து வருடங்களாக அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லல்பட்டுப் பயணிக்கிறோம்.

சாத்தியமற்ற ஒன்றைச் சயந்தன் ஆற்றியிருக்கிறார். இத்தகையதோர் புனைவு இவரினால் எப்படி இயன்றது? பாத்திர வார்ப்பு, புனைவு நுட்பம் யாவும் எங்கும் பிசிறு தட்டவில்லை. ஒரு பாத்திரமும் தன் உருவ அமைதியில் முரண்பட்டதல்ல. தன் வளர்ச்சியின் அடிப்படையில் தனக்குத்தான் முரண்பட்டது சந்திரா என்று உதாரணம் சொல்லப்புகுந்தேன். அல்ல.. அத்தனை பாத்திரங்களும் தம் வளர்முறைக்கு நியாயம் கற்பிக்கின்றன. நந்தன் ஆசிரியர் உட்பட.

புனைவு வழியில் இவ்வளவு சிறப்பான புதினம் ஈழத்துத்தமிழில் வந்ததில்லை. ஈழத்துப்படைப்புக்களில் பெரும்பாலானவற்றை வாசித்ததன் அடிப்படையில் சொல்கிறேன்.

இப்போது ‘புனைவு’ என்றால் என்ன என்பதை நான் விளங்கிய அளவில் சொல்லியாக வேண்டும். புனைவு என்பது ஓர் உணர்வை அல்லது பாத்திரத்தைத் தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று வாசகர் மீது அந்த உணர்வைக் கடத்திக் கவியச் செய்வது. இதுவே நான் புரிந்த அளவில் புனைவு என்பேன்.

சுய அனுபவங்களைப் படைப்பாக்கல் ‘புனைவு’ என்று யாரும் சொன்னால் ஓம் என்று ஒப்புக்கொள்வேன். அதிலும் இந்த அனுபவங்களைச் சொல்லப்போகிறேன் என்ற தெரிவு, அந்தப்பருவம், சூழலுக்குரிய மனநிலை யாவற்றையும் அச்சொட்டான வடிவத்துள் கொண்டுவருதல் இவைதாம் புனைவின் பாற்படும்.

ஆனால் பிறர் அனுபவங்களைத் தன் அனுபவமாக உள்வாங்கும் படைப்பென்பது கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை போன்றது. இது அனுபவமும், கலை நேர்த்தியும், கற்பனை ஆற்றலும் கொண்ட ஒருவரால் மாத்திரமே சாத்தியமாகும். சும்மா கூடு விட்டுக் கூடு பாய்ந்துவிடமுடியாது. இப்போதும் நாம் மெச்சத்தகுந்த படைப்புக்கள் என விளிப்பது அது புனைவு வழிவந்த உச்சங்களையே..

ஆதிரை நம்முள் உலாவவிட்ட கதை மாந்தர்கள் வெறும் பெயர்கொண்டு மாத்திரம் பரிச்சயம் கொள்ளவில்லை. இதில் வருகின்ற சந்திரா எதனாலும் வன்முறை கண்ட சமயமெல்லாம் உரத்து ஏசியோ, மௌனமாகத் தன்னுள் குமைந்தோ தன் ஒவ்வாமையை வெளிப்படுத்துவாள். எப்போதும் அவளிடம் விடுதலைப்புலிகள் பற்றிய கடுமையான விமர்சனம் உண்டு. அவளது கணவன் அத்தார் விடுதலைப்புலிகளின் கடும் விசுவாசி. ஒருமுறை மாவீரர் நாளுக்குச் செல்ல முடியாதவாறு கடும் காய்ச்சல் அத்தாரைப் பீடித்தது. சாமம் போல அத்தார் ஓங்காளித்துச் சத்தியெடுத்துத் திரும்பியபோது மூன்று சுட்டி விளக்குகள் எரிந்தன. அவற்றைப்பார்த்தபடி சந்திரா இருந்தாள். அத்தாரை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள். “இயக்கம் விடுற எல்லாப் பிழைகளையும் இந்தப்பிள்ளைகள் தங்கடை தியாகத்தால் வென்று விடுறாங்கள்” (பக்கம் 304)

இந்த இடத்தில் நான் உறைந்து போனேன். தொடரூந்தில் இருக்கிறேன் என்ற எந்த உணர்வுமில்லாமல் ‘ஆ..’ என்ற ஒலி என்னிலிருந்து வெளியேறியது. ஆதிரையினுள் இருந்து சந்திராவை உணர்ந்தவர்கள் யாரும் சந்திராவை வியப்பாக நோக்கார். அவள் அப்படித்தான் என்கின்ற விம்பத்தை சயந்தன் எம்முள் கட்டமைத்துவிட்டார். அதுவே புனைவு. எம்முள் இரத்தமும் சதையுமாக நுழைந்தவர்களில் சந்திரா ஒருத்தி. மேலும் பலர் உள்ளனர். அத்தார், சங்கிலி, மீனாட்சி, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், நாமகள், வினோதினி, மணிவண்ணன், மயில்குஞ்சன், மலரக்கா, நந்தன் சேர், சிங்கமலை என்று அவை நீள்கின்றன. அத்தனை பாத்திரங்களும் முதலிலிருந்து முடிவு வரை உறுத்தல் இல்லாதவாறு வளர்க்கப்பட்டிருந்தன. பாத்திரங்கள் ஒருபோதும் தத்துவம் பேசவில்லை. மனிதம் பேசுகிறது. அது பிரச்சாரமாக அல்ல. போகிற போக்கில் அப்பாத்திரங்களின் செயல், உச்சரிக்கும் வார்த்தைகள், மனிதத்தைப் பேசிவிடுகின்றன. இங்கு யாரும் தீயவர் அல்லர். பலவீனம் உள்ளவர்கள். சிங்களக் காடையர்கள், சிங்கள இராணுவம், இந்திய ராணுவம் என்கிற கொடியவர்கள் பாத்திரங்கள் ஆகவில்லை. கூட்டமாகத்தாம் நிற்கின்றன.

ஆதிரை நாவலின் அத்தனை பாத்திரங்களிலும் மனிதம் எப்படியோ வெளிப்பாடுகொண்டு நிற்கிறது. ஒரு போராளி மாவீரன் ஆகின்றான். அவனுக்கு ஈழச்சடங்கு செய்யப் பெற்றோர் இல்லை. இங்கிருந்த கிழவியொருத்தி வித்தாக வீழ்ந்து கிடக்கும் மாவீரனைப் பார்த்ததும் கூறுகிறாள். “என் ராசா.. என்னையப் பாரய்யா.. நானும் ஒனக்கு அம்மாதான்யா.. உறவுண்ணு கண்ணீர் வடிக்க உனக்கு யாருமில்லைன்னு கலங்கிடாத.. வருசா வருசம் நான் உனக்குத் திவசம் பண்ணுறேன்யா.” (பக் 305)

இவ்வாறான வார்த்தைகளை, சம்பவங்களை ஆதிரையில் காண்கிறபோது அதை எவ்வாறு நோக்குவதென்று தடுமாறுகின்றேன். இக்காட்சியை சயந்தன் நேரில் தரிசித்தாரா..? அல்லது புனைவின் பாற்பட்ட ஒன்றா..? நேரிற் கண்டதாயின் அதன் தெரிவும் புனைவின் பாற்பட்டதாயின் அச்சிந்தனையும் சயந்தனை மனிதத்தின் உச்சத்தில் ஏற்றி வைத்துவிடுகிறது.

இது மாத்திரம் சந்தர்ப்பமல்ல. 595ம் பக்கத்தில் ஓரிடம். நான் படித்த எந்த இலக்கியத்திலும் காணாத காட்சி அது. ராணி திருமணம் முடித்த இளம் வயதில் சிந்து என்ற மகளைக் கொடுத்துவிட்டுப் புருசன் காணாமற் போகின்றான். காலப்போக்கில் மணிவண்ணன் என்பவனுடன் ராணிக்குக் காதலும் உடல் ரீதியான உறவும் ஏற்பட்டுவிடுகிறது. முள்ளிவாய்க்கால் ஊழி நிகழ்கிற நேரம், மணிவண்ணன் உதடுகள் சற்றே விரிந்திருக்க புன்னகைப்பதுபோல அநாதரவாக இறந்து கிடக்கிறான். தன் மகள் சிந்துவுடன் வந்த ராணி அதைக் காண்கிறாள். சிந்து அருகில். ராணி உதடுகளைக் கடித்து அழுகையை அடக்க முயற்சிக்கிறாள். ஓர் அடி எடுத்து வைக்க முடியாமல் கால்கள் சோர்கின்றன. பெற்ற மகளைப் பார்க்க முடியவில்லை ராணியால். சிந்து தாயின் இரண்டு கன்னங்களையும் கைகளில் ஏந்தி கெஞ்சுவதைப்போன்ற கண்களைக் காண்கிறாள். சிந்து சொல்கிறாள். “நீங்கள் அழுது தீருங்கோ அம்மா” ராணி ஓவென்று வெடித்தாள். மணிவண்ணனின் காலடியில் புழுதிக்குள் விழுந்து புரண்டு அலறினாள்.

“ஓ” என்று கதறிவிட்டேன். நான் இருந்த தொடரூந்துப்பெட்டியில் எவருமில்லை. எனக்கு மேலும் வாசிப்பைத் தொடரமுடியவில்லை. இவ்வாறான புனைவு எப்படிச் சாத்தியமாயிற்று என்று திகைத்தபடி இருக்கின்றேன். ராணியின் மனநிலையையும் சிந்துவின் மனநிலையையும் எப்படி ஒருவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது..? உண்மை என்னவென்றால் ‘அது அவ்வாறுதான் இருக்கவேண்டும்’ என்று சயந்தன் விரும்பினார். அவரது அறம் அவருக்கு அதைத்தான் உரைத்தது. அதனாற்தான் மகத்தான படைப்பாளியாகவும் மானுடத்தை நேசித்தவனாயும் சயந்தனால் இருக்க முடிகிறது.

ஆதிரை ஈழ தேசச் சமூகத்தாரில் உள்ள அத்தனை வகை மாதிரிகளையும் அதன் குண இயல்பு குன்றிடாமல் பாத்திரங்களாகக் கொண்டுவருகிறது. பாத்திரங்களுக்கிடையிலான இணைவும் இயல்பும் எங்கும் விலகிப்போகவில்லை. அது தொழில்நுட்பத்தின் நேர்த்தி. ஆனால் புனைவு முனைப்புப்பெறாமல் அது சாத்தியமில்லை.

எந்த ஒரு மூன்றாம் உலக நாடுகளின் சமூகவியல் போலவே ஈழத்துத் தமிழ்ச் சமூகமும் பல முரண்பட்ட சமூக நிலைக் கருத்துக்களைக் கொண்டுள்ளன. சாதியமைப்பு, பிரதேசவாதம் அவற்றில் முக்கியமானவை. அவை பிரதான முரண்பாடுகள் அல்ல. தமிழ் சிங்கள இன உறவு குறித்த பிரதான முரண்பாட்டைப் பேசுகிற சமயம், இச்சிறுசிறு முரண்பாடுகளின் சித்திரம் வரையப்படுகிறது.

வெள்ளாம்பிள்ளை சந்திரா, தாழ்த்தப்பட்டவர் என அறியப்பட்ட அத்தாருடன் ‘ஓடி’ வன்னிக்கு வந்துவிடுகிறாள். அத்தார் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னாலும் இறுதிவரை அவன் என்ன சாதியென்று சொல்லப்படவில்லை. இறந்தபிறகு ஓர் உரையாடலில் அது தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் அனாதையாகச் சிதைந்த உடலை ஒருவர் அடையாளம் காட்டுகிறார். “இந்த அம்பட்டக்கிழவனை எனக்குத் தெரியும் .அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப்பொம்பிளையைக் கட்டியிருந்தவர். ” (பக் 592)

பல்லாயிரக்கணக்கில் சாவு விரிந்த அந்த மணல் வெளியில் சவங்களிலும் சாதி சொல்லும் ஒருவன் காட்டப்படுகிறான். சாதி வெறியின் கோரமுகத்தை இப்படி வெளிப்படுத்த முடிந்தது.. சயந்தனின் புனைவு அங்கும் கட்டியம் கூறி நிற்கிறது.

பிரதேசவாதம் பேசப்படும் இடங்களும் இவ்வாறுதான். ஆனால் என் மேலான ஆச்சரியம் என்னவெனில் வகை மாதிரிப் பாத்திரங்கள் வந்து, புனைவுடன் பொருந்திப்போகிற அம்சம் என்பதே. பிரதான முரண்பாட்டைச் சிதைக்காத வண்ணம் அவ்வகை மாதிரிப் பாத்திரங்கள் இயங்குகின்றன.

சந்திரா அத்தார் என்கிற சாதிய முரண்பாடு மாத்திரமல்ல, முத்து என்கிற மலையாள வம்சாவளிப் பிள்ளைக்கும் வன்னியைச் சேர்ந்த வெள்ளையனுக்கும் ஏற்படும் திருமண உறவிலும் பிரதேசவாதம் தலை துாக்குகிறது. அவ்வாறே சாரகன் என்ற யாழ்ப்பாணிக்கும் நாமகள் என்ற வன்னிப் பெட்டைக்கும் இடையிலான காதலில் பிரதேசவாதம் முளைவிடுகிறது.

இவ்வாறு பலவகை மாதிரிப்பாத்திரங்கள் அச்சொட்டாகப் பொருந்திப்போகின்ற அதே சமயம் ஒன்றுமே பிரதான கதைப்போக்கை இடையூறு செய்ததாகத் தெரியவில்லை. இவற்றினை வெறும் வார்த்தைகளால் கடந்துபோய்விடமுடியாது. ஒரு படைப்பாளி தன் புனைவுத்திறனை அதி உச்சத்தில் வைத்துப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

ஆதிரை பேசிய அரசியல் பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை. ஆயினும் சொல்லியே ஆகவேண்டிய சில விசயங்கள் உள்ளன. ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்பு இது. விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளை் யாவற்றையும் அனுதாபத்துடன் நோக்குகிறது. விடுதலைப் போரில் சக பயணியாகக் கூட வருகிறார் சயந்தன். வழியில் எதிர்ப்படும் முட்களையும் கற்களையும் அப்புறப்படுத்திவிட்டு பாம்பு, தேள், மற்றும் விஷ ஐந்துக்களை நசுக்கிவிட்டு பற்றைகளை விலக்கி குறுக்கேயிருந்த கொப்புக்களைத் தறித்துப் பயணிக்கிறார் இப்புனைகதை ஆசிரியர். மானுடக்கூட்டத்திலிருந்து அவர் விலகிச்செல்லவில்லை. அவர்களில் ஒருவர். அத்துன்ப துயரங்களில் ஒன்றோடு ஒன்றானவர்.

மானுட தர்மத்தை விரோதிப்பவர் விடுதலைப்புலிகளிடம் மாத்திரம் குற்றம் கண்டனர். அல்லது விடுதலைப் புலிகளையும் சிங்கள அரச பயங்கரவாதத்தையும் சமப்படுத்தினர். விடுதலைப்புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியது, கட்டாய ஆட்சேர்ப்பு நிகழ்த்தியது, ஒருபடி மேலே போய் மக்களைக் கொன்றது என்பதை முதன்மைப்படுத்தி தம் நச்சு வார்த்தைகளை உமிழ்கின்றனர்.

ஆனால் விடுதலைப் புலிகள் மக்களுக்கு அரணாக நின்றதும், மக்களின் துன்ப துயரில் பங்குகொண்டதும், மக்களைக் கொன்றவனைக் கொன்றதும், மக்கள் தப்பியோட வழிகாட்டியதும், தாம் தவறி வீழ்ந்த இடத்தை ஒப்புக்கொண்டதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. தெரியவும் மாட்டாது. ஆதிரை புனைவு நிலையில் நின்று உலகிற்குக் கோடி காட்டியது.

ஆதிரை புதினத்தை கையில் துாக்கி உயரத்திலேயே பிடிக்கிறேன். முள்ளிவாய்க்கால் ஊழியைக் காட்சிப்படுத்திய அதன் திறன் கண்டு. அய்யோ என்ற குழறல்களும், சடலம் சடலமாகச் சரிந்து கிடப்பதுவும், பதுங்கு குழிக்குள் உணவு கிடையாக் கொடுமையும், சதைத் துண்டங்களும், கந்தக மணமும் என்று மாத்திரம் முள்ளிவாய்க்காலை காட்டவில்லை.

அந்த அவலங்களுக்கிடையில் ஓர் உயிர்ப்பு இருந்தது. அந்த வதைபடல்களுக்கு இடையிலும் ஒரு வாழ்வு இருந்தது. சூரியன் சுடர்ந்தான். சுட்டெரித்தான். ஆகாயத்தில் நிலவும் ஜொலித்தது. நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. அதைச் சயந்தன் அழகாகப் புனைந்தார்.

ஒருத்திக்குத் திடீர்க் கல்யாணம் நடக்கின்றது. ஆனால் அது கல்யாணம் அல்ல. ஒரு தாலியை எடுத்துத் தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்கிறாள். அவளுக்கு உண்மையில் திருமணம் ஆகாமல் விடுகிறது.

“அம்மா செத்திட்டாவோ” என்று கேட்ட மகள் அடுத்த கணம் கேட்கிறாள். “கஞ்சி வடிச்சிட்டியளே.. குடிக்கலாமே..” (பக் 580) சாவைச் சாதாரணமாகக் கடந்து போவதும், சன்னக் கோதுகளை பேணியிற் குலுக்கிச் சிறார்கள் விளையாடுவதும் அந்த அவலத்திற்குள்ளும் உயிர்ப்பூ மலர்வதைக் காட்டுகிறது.

ஓர் இடம் வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு முழுமையாக ஆதிரையை வாசிக்க முடியவில்லை. ஷெல் கூவுகிற ஒரு நள்ளிரவு. அத்தாரும் சந்திராவும் பதுங்கு குழிக்கு வெளியே ஒருவர் கையை ஒருவர் பற்றியவாறு நித்திரை கொள்ள முயன்றனர். திடீரென்று ஒரு பேரொலி. ஒளிப்பிளம்பு. அத்தார் அவனை மூடியிருந்த மண் துகள்களையும் புகையும் உதறிக்கொண்டு எழுந்து “சந்திரா” என்று அலறினான். “சந்திரா இருக்கிறியா..” என்று கத்தினான். “போயிட்டியா..” மெல்ல முணுமுணுத்தான். ‘ஷெல்லடி கூடுதண்ண, வாங்கோ போவம்’ வெள்ளையன் அத்தாரின் கையைப்பற்றினான். “டேய் நாயே, ஒருக்காச் சொன்னா கேட்கமாட்டியா.. குடும்பத்திலை ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டும் நம்பி வந்தவளடா.. ஒரு அனாதையா விட்டுட்டு வரச்சொல்லுறியா..”

அத்தார் சந்திராவின் தலையைத் துாக்கி மடியிற் கிடத்தி “என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாமெல்லே..”

பிறகு உடல் சிதைந்து வலது கண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையைப் பார்த்து ஒருவன் அடையாளம் காட்டுகிறான். “இந்த அம்பட்டக்கிழவன்………….” (பக் 592)

(முள்ளிவாய்க்கால் ஊழியின் சித்திரம் தனித்த ஒரு புதினத்தை வேண்டி நிற்கிறது)

முள்ளிவாய்க்கால் ஊழிச்சித்திரத்தின் இறுதி வார்ப்பு இப்படியாக அமைந்தது. கையில் துப்பாக்கி வைத்திருக்கின்ற போராளி லெமன் பப் பிஸ்கற் சரையை இரு சிறு பிள்ளைகளிடம் கொடுக்கின்றான். அப்பொழுது முத்து கேட்கிறாள். “அப்ப உங்களுக்கு..” போராளி சொல்கிறான். “இனித் தீன் வீண்” (பக் 599)

சயந்தன் எழுதிய ஆதிரை என்னும் புதினத்தை பதினைந்து நாளில் தொடரூந்தில் போகவர வாசித்தேன். இரண்டுநாட்கள் வாசிப்பதை நிறுத்தினேன். பல சந்தர்ப்பங்களில் வாசிக்கவிடாமல் கண்ணீர் திரையிட்டது. திருப்பித் திருப்பி வாசித்தேன். பல சந்தர்ப்பங்களில் அச்சூழலில் நான் இல்லை. வேறோர் உலகத்தில் இருந்தேன். இடையிடை என்னை அறியாது ஆ என்று ஒலிக்குறி. இறங்கவேண்டிய இடத்தை அடிக்கடி தவறவிடப்பார்த்தேன், என்று அந்த நாட்கள் பதட்டத்தால் நிறைந்தது. காரணமில்லாமல் அடிக்கடி அழுதேன். இன்னமும் அடிக்கடி அழுவது ஓயவில்லை.

அப்படித்தான் வியப்பும் விலகவில்லை. எப்படி இந்தப் புனைவு சாத்தியமாயிற்று..? எந்தக் கை இதை எழுதியது? அரசியல், ஆக்கம், புனைவு எனும் சகல தளத்திலும் இதனை முதல் நுால் என்பேன்.

நம் காலத்தின் காவியத்தையும் அதைப்பாடியவனையும் பற்றி இதுவரை பறைந்தேன்.

www.ponguthamil.com

By

Read More

யூட் ப்ரகாஷ்

“ஆதிரை” என்ற இலக்கிய செழுமை நிறைந்த ஒரு தரமான நாவலை விமர்சிக்கும் தகைமை எனக்கில்லை. எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து விலாசம் காட்டி கொண்டிருப்பதை கண்முன் கொண்டு வந்த மனசாட்சியின் மறுவுருவத்தை, வாசித்த ஒரு சாதாரண வாசகனாக எனது வாசிப்பனுவத்தை பகிருவதே, இந்த பதிவின் நோக்கமாக அமைகிறது.

“எதிரிகளை மன்னித்து விடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாக கேட்டபடி அவளை கடந்து இழுத்து செல்லப்பட்டேன்”

1991ல் கைதாகி சித்திரவதைக்குள்ளாகும் லெட்சுமணனின் அவஸ்தையில் ஆரம்பிக்கும் நாவல், 2008 ஆண்டின் கடைசி நாளில் முகமாலை காவலரணில், ஜோன் தமிழரசி என்ற ஆதிரை குப்பியடித்து வீரமரணமடையும் பதினாலாவது அத்தியாத்திற்கிடையில் மூன்று தசாப்த விடுதலை போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை மண்ணின் மணம் மாறாமல் பதிவு செய்கிறது, சயந்தனின் “ஆதிரை” நாவல்.

“தீர்வுகளை சொல்லாமல் வெறுமனே கேள்வியளை மட்டும் கேக்குற புத்திசாலிகளெல்லாம் மொக்கு சாம்பிராணிகள்”

இயற்கை என் நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி என்ற தேசிய தலைவரின் பொன்மொழிகள் உட்பட ஏதிலி, ஓயாத அலைகள், புகலிடம், சுதந்திர பறவைகள், வெற்றி நிச்சயம், படுகளம் என்ற பொருள் பொதிந்த வலிய வார்த்தைகளை தலைப்புகளாக அமைத்தது நாவலின் சிறப்பம்சங்களில் ஒன்று. யாழ்ப்பாண தமிழர் அறிய விரும்பாத 1977ன் மலையக தமிழர்களின் இடப்பெயர்வுடன் தொடங்கி பின்னர் முஸ்லிம்களின் இடப்பெயர்வு, யாழ்ப்பாண இடப்பெயர்வு, இறுதி யுத்தத்தின் போதான இடப்பெயர்வுகள் என நாவல் இடப்பெயர்வுகளையே வாழ்க்கையாக வாழ்ந்த ஒரு இனத்தின் நிலைகண்ணாடியாகிறது.

“நாடுன்னா என்ன.. நான் பொறந்த இடமா.. இல்லைன்னா ஒரு வேலையும் வேலைக்கு சம்பளமும் தர்ற இடமா.. இல்லையே .. நானும் புள்ளகளும் நாளைக்கும் காலேல உசிரோட எழும்புவோம்கிற நம்பிக்கையைத் தாற பூமி தானே நாடு.. இல்லயா”

இடப்பெயர்வுகளோடு அந்த இருண்ட யுகத்தில் இடம்பிடித்த படுகொலைகளும் ஆதிரையில் நம்மை மீண்டும் உலுப்பி எடுக்கின்றன. ஒவ்வொரு படுகொலையும் உறவை இழந்த உறவினூடாகவும் நட்பை தொலைத்த நண்பனூடாகவும் காட்சிப்படுத்தப்பட, படுகொலைகளை செய்திகளாக மட்டும் வாசித்து வேதனைப்பட்ட எங்கள் உள்ளங்களில், படுகொலைகள் விட்டுச்சென்ற வலியை உணரவைக்கிறார் சயந்தன். ஒதியமலை படுகொலையில் இவ்வளவு நடந்ததா என்று அலற வைத்த சயந்தன், சுனாமியிலும் செஞ்சோலையலும் முள்ளிவாய்க்காலிலும் கண்கலங்க வைக்கிறார். பிரமனந்தாறு சுற்றிவளைப்பு மனதை உறைய வைக்க, சகோதர படுகொலைகளால் நம்மை நாமே அழித்த வரலாற்றை மீண்டுமொருமுறை “ஆதிரை” பதிவு செய்கிறது. ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகளை திருகோணமலையிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு இளம் தாயின் கதாபாத்திரத்தினூடாக சயந்தன் விபரிப்பது சயந்தனின் தனித்துவம்.

“இனிமேல் இந்த மண்ணில் சாவு ஒரு குழந்தைப்பிள்ளை மாதிரி எங்கட கையைப் பிடித்துகொண்டு திரியப்போகுது அத்தார்”

ஆச்சிமுத்து கிழவி சும்மாடு கோலித் தலையில் வைத்து உரப்பை சுமந்து தனிக்கல்லடியிலிருந்து ஒதியமலைக்கு நடந்த நடைப்பயணம், இரு முறை வாசித்து இன்புற்ற பக்கங்கள். தாய்நிலத்தின் இயற்கை வளத்தை , அதன் எழிலை எங்கள் இனத்தின் வாழ்வியலுடன் இணைத்து வரைந்த அழகிய எழுத்தோவியங்கள் இந்த பக்கங்கள். நாவலில் காதல் எம்மண்ணின் சாயலோடு விரசம் இல்லாமல் அழகாக விபிரிக்கப்பட்டிருக்கிறது.

“விடுதலைத் தத்துவங்களும் சுதந்திர கோஷங்களும் வெறும் பழிவாங்கல்கள் எண்ட அளவில குறுகிப்போச்சுது”

இந்திய இராணுவத்தின் யாழ் ஆஸ்பத்திரி படுகொலையும் நாம் கேட்டறிந்த வன்னிகாடுகளில் அந்நிய இராணுவம் அரங்கேற்றிய அட்டூழியங்களும் ஆதிரையில் பதிவாகின்றன. இந்திய இராணுவத்தை எதிர்கொண்ட புலிகளின் தீரமிகு சமரை சயந்தன் எழுத்துருவாக்கிய விதம் மெய்கூச்செறிய வைக்கும்.

“திலீபன்.. அவனுக்கென்ன போய்ச்சேர்ந்திட்டான் நாங்கள் தான் வேகி சாகிறம்”

சுனாமி முல்லைத்தீவை அண்டிய கணங்களையும் அது விட்டு சென்ற அழிவுகளையும் சயந்தன் விபரித்த விதம் பதைபதைக்க செய்தது. சுனாமி அடித்ததும் புலிகளின் மீட்பு அணிகள் களத்தில் இறங்கி செயற்பட்டதை வாசிக்க, இன்று ஒரு ஜுஜூப்பீ மாகாண சபையையே முறையாக நடத்த நாங்கள் படும் திண்டாட்டம் நினைவில் வந்தது.

“கடல் ஒரு அரக்கியை போல விறைத்து செத்த குழந்தைகளை அங்குமிங்குமாகத் தாலாட்டியது”

பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்கமும், பாதுகாப்பு வலயங்களில் சனம் பட்ட அவஸ்தையும், வட்டுவாகல் பாலமும், இறுதிவரை சளைக்காமல் இயங்கிய புலிகளின் நிர்வாகமும், அரப்பணிப்புடன் இயங்கிய வைத்தியர்களும், தப்பி செல்ல எத்தனித்த மக்களை புலிகள் எதிர்கொண்ட விதமும் என போரின் இறுதி நாட்கள் “படுகளம்” எனும் அத்தியாத்தில் பதிவாகிறது.

“அத்தாருடைய காதுகளை தடித்த தோல் வளர்ந்து மூடிக்கொண்டது”

ஜெயமோகனின் “காடு” நாவலுக்கு இணையான வாசிப்பனுபவத்தை “ஆதிரை” தந்தது. அன்றாட வாழ்வின் கதாபாத்திரங்களின் பார்வைகளினூடே விரியும் காட்சிகள், புலி ஆதரவு புலி எதிர்ப்பு கருத்துகள், வன்னி காட்டு வாழ்க்கையை விபரித்த அழகியல் என ஆவலை தூண்டி, அலுப்படிக்காமல் அடுத்த பக்கங்களை புரட்ட வைத்த நாவல் “ஆதிரை”.

“ரெண்டாம் தர பிரஜைகளாக நாங்கள் உணராத எல்லாமே கெளரவமான தீர்வுதான்”

“ஆதிரை” புத்தகத்தை சென்னையிலிருந்து இயங்கும் இணைய புத்தகாலயத்தில் (அதான் online bookshop) வாங்கலாம். வீட்டுக்கொரு பங்கர் வைத்த இனம் நாங்கள், ஆளுக்கொரு புத்தகம் வாங்கி இனமானம் காப்போம். “ஆதிரை” வாங்கும் போது, சயந்தனின் “ஆறாவடு” குணா கவியழகனின் “நஞ்சுண்ட காடு”, “விடமேறிய கனவு” புத்தகங்களையும் வாங்கி எங்கள் இளம் எழுத்தாளர்களை ஊக்கிவியுங்கோ. ஒரே நேரத்தில் பல புத்தகங்கள் வாங்கிறது மலிவும் பாருங்கோ.

“காலம் ஒரு அரக்கனடா”

ஆதிரை
மண் சுமந்த வலியையும்
இனம் பட்ட வேதனையையும்
மனங்களில் பதிய வைத்த,
மண்ணின் வாழ்க்கைச் சித்திரம்
தமிழன்னையின் கண்ணீர்

http://kanavuninaivu.blogspot.com

By

Read More

× Close