ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல்.

விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன்.

படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான்.

மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது.

தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன்.

உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்)

“யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “

“தமிழங்களுக்கு தான்”

“நமக்குமா..”

இது மலையகத்தில் வாழ்ந்த தமிழனின் கேள்வி. இந்தக்கேள்விக்குள் தொங்கிநிற்கும் அரசியல் மிகப்பெரியது. இதனை நாசூக்காக வெளிப்படுத்தும் சிறப்பு சயந்தனுக்குரியது.

மலைநாட்டிலிருந்து அன்று ஏதிலிகளாக வந்தவர்கள் பட்ட துன்பதுயரங்கள், அவர்கள்மீது பிரயோகிக்கப்பட்;ட அடக்குமுறைகள் மற்றும் மனவடுக்கள்,  மிக கச்சிதமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நானும் பல ஆண்டுகாலம் இவர்கள் மத்தியில் ஒன்றாகவாழ்ந்து, இவர்களின் துன்பதுயரங்களில் பங்கெடுத்திருக்கின்றேன்.

ஆனால் ஒரு காலத்தில் இருந்த இந்த ஒடுக்குமுறைகள் படிப்படியாக குறைந்துசென்றிருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

இதற்கு நாவலிலேயே எடுத்துக்காட்டு உள்ளது. (பக்கம் 83)

மூத்ததலைமுறையான இராசமணி “ வேலைக்காரப் பெடியன்…ஒருயோசினை இல்லாமல் தன்ர வீடுமாதிரி வாறான் போறான்…..” என கேட்க,

“ஆர் வேலைக்காரப் பெடி…” என்ற அடுத்த தலைமுறைச் சந்திராவின் கேள்வி

தான் சேகரித்த அல்லது அறிந்த தகவல்களை திரட்டி ஒழுங்குபடுத்தி வரலாற்று நாவல் ஆக்கியிருக்கிறார் சயந்தன்.

என்னை மிகவும் துருவி உழலச்செய்யும் ஒரு உரையாடல், (பக்கம் 521)

“றைபிள் எங்க?………”

“ ஐயோ அது சென்றிக்குள்ளை….மறந்துபோனம்…….”

“ (பக்கம் 317 – 319)

வெள்ளையனைக்காணவில்லை என்றதும், அவனையாராவது திட்டினார்களோ, அல்லது பொறுப்புக்கள் எல்லாம் தன்தலையில் ஏறிவிட்டது என்ற அச்சத்தில் போனானோ என பலரும் அங்கலாய்கக்கும் இடம், தனது சனத்தின் துன்பங்களை கண்டு பொறுக்கமுடியாமற்பொங்கிய இளையவர்களின் உணர்வை, தமது அறியாமையூடாக அவர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என தெரிவிக்கின்றது.

இந்த நாவல் வரலாற்று பதிவா என ஐயப்படுபட யாராவது நினைத்தால், தன்நாவலிலேயே அதற்கு அழகாக பதில்சொல்கிறார் நாவலாசிரியர். (பக்கம் 586)

“வரலாற்றுக்கென்ன….அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகுதோ அவைக்கு விருப்பமானதையும் வேண்டியதையும் சொல்லும்….”

இது நூறுவிழுக்காடு  உண்மை. வரலாற்றுக்கு உரியவர்கள் என கொண்டாடப்பட்ட அனைவரும், கிட்டத்தட்ட அந்த மண்ணில் வரலாறாகிவிட்டார்கள். இனி அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகுதோ அவைக்கு விருப்பமானதையும் வேண்டியதையும் தான் சொல்லும். இதுதான் இனி நாம் காண்பதுவும் காணப்போவதுவும். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதற்கு ஆயிரமாயிரம் தடைவ நன்றி கூறிக்கொள்ளவிரும்புகிறேன் நாவலாசிரியருக்கு.

ஓவ்வொரு உயிரின் இழப்பின்போதும் மனம் கனக்கிறது. மயில்குஞ்சன் உண்மையாகவே எங்கள் கண்முன்னால் வாழ்ந்த மனிதன். விடுதலைப்போராட்டத்தில் அவருக்கும் கணிசமானளவு இடம் உண்டு. விடுதலைப்போராட்டத்துக்கு அவர்செய்த பங்களிப்புகளை முன்னர் படித்திருக்கின்றமையால், மயில்குஞ்சனின் இறப்பு மனதை பிழிகிறது. இப்படி எத்தனை மனிதர்கள் கனவுடன் மரித்துப்போனார்கள்?….இவர்களின் உழைப்பும் உன்னதமான சேவையும் இப்படியே அழிந்துதான் போகுமோ என நான் ஆதங்கம் கொள்கிறேன்.

போர் நடைபெற்றுக்கொணடிருக்கும் மண்ணில் வாழும் மக்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்கள்?. இராணுவத்தினரின் முகாம்கள் தாக்கப்பட்டு அவர்கள் விரட்டப்படும்போது, போராளிகளை உயர்த்திபேசுவதும் அவர்களின் வீரத்தை மெச்சுவதும் அவர்களை தம் பிள்ளைகளாக கொண்டாடுவதும் இயல்பு. அதுவே போராளிகளுக்கு பின்னடைவுஏற்படும்போது அவர்கள் மீதான விமர்சனங்களாகவும் குற்றச்சாட்டுகளாகவும் நம்பிக்கையீனமாகவும் மாறிவிடுகிறது. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு என மார்தட்டுபவர்களே…தோற்கும்போது ஏற்றுக்கொள்ளமறுக்கும் துயரமான நிலைஇது.

இதை பலஇடங்களில் சயந்தன் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

பாத்திரங்கள்அனைத்தும் அதனதன் போக்கில் இயல்பாக காணப்பட்டாலும், அத்தார் மிகமிக இயல்பான, என்னை மிகவும் பாதித்த பாத்திரப்படைப்பு. அவர் திலீபனைப்பற்றி சொல்லுகிற வார்த்தை, (பக்கம் 176) இன்னமும் மனச்சாட்சியை குடைகிறவிடயமாகவே உள்ளது. “சாப்பாட்டுக்கை கையை வைச்சால் அவன்ரை ஞாபகம்தானே வருகுது” என்று அவர்உருகுகிற இடம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இப்பவும் சயந்தன் சாப்பிடும்போது, திலீபனின் நினைவு வரத்தான் செய்கிறது.

அடுத்து சந்திரா, இதையும் சயந்தன் கொண்டுவந்த ஒரு குறியீட்டுப்பாத்திரமாகவே நான் பார்க்கிறேன்.  இராணுவத்தினர் தமக்கு துன்பத்தை தரக்கூடாது என்பதற்காக, போராளிகளை அவர் நையும் இடம், (பக்கம் 209)

“பெடியங்கள் காடுகளனிக்கை சண்டையைப்பிடிக்கலாம்தானே…”என்ற அவரின் கேள்வியில் விஞ்சிநிற்பது, சுயநலம் மிக்க ஒருசாராரின் உணர்வுநிலைப்பட்ட மனநிலைதான். அடுத்தவர்களின் பிள்ளைகள் சாவதால் தமக்கு எந்தவலியும் இல்லை என வாழ்ந்த ஒரு சாராரின் பாசநிலைதான்.

சந்திராவின் வார்த்தைக்கு  மலர் பதில் சொல்லும் அழகு, (பக்கம் 210)

“குறைசொல்லுறதுக்கும் ஒரு தகுதிவேணும்…” இந்தப்பதில் எனக்கு ஏனோ பிடித்திருந்தது.

ஓரிடத்தில் ஒருபோராளியின் வீரச்சாவு பற்றி ஒரு விடயம் வருகிறது. மட்டக்களப்பில் இராணுவக்கட்டுப்பாட்டில் பெற்றோர்கள் இருப்பதால் அவனுடலை எடுத்து கருமங்கள் ஆற்ற ஒருவரும் இல்லை என்றும், பக்கத்தில் இருந்த பேரனின் உடலுக்கு கிரியை செய்யவந்த மூதாட்டி அதுகுறித்து கருத்து கூறுவதாக வருகிறது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குள் உக்கிரம்நிறைந்த போர்ச்சூழலுக்குள் இலட்சோபலட்சம் மக்களுக்குள் பல ஆயிரக்கணக்கான போராளிகளுக்குள் வாழ்ந்தவள் நான்.

எத்தனையோ பெற்றோர் இல்லாதபோராளிகளுக்கு பெற்றோர்களாய் இருந்திருக்கின்ற நிறையப்பேரை எனக்கு தெரியும். எத்தனையோ பிள்ளைகள் தமக்கு ஆறுதல் அளித்த குடும்பத்தினரை தங்கள் உரித்துடையவர்களாக பதிவுசெய்து, அவர்கள் அந்தப் போராளிகளின் இறுதிநிகழ்வுகளை செய்திருக்கின்றார்கள். இறுதிநிகழ்வுகளுக்கு மட்டுமல்ல, போராளிகளின் திருமணங்களுக்கும் கூட பலர் பெற்றோராக நின்று திருமணத்தை நடத்தியதையும் நேரில் பார்த்தவள் நான். துயிலுமில்லங்களில் உரித்துடையோர் வர இயலாத நிலையில் அந்தப்பிள்ளைகளுக்கு விளக்கேற்றி உணவுபடைத்ததவர்கள் இருக்கிறார்கள்.

இந்தவிடயத்தில் நாவலாசிரியருக்கு தகவல்களை திரட்டிக்கொடுத்தவர்கள் இப்படியான தகவல்களை ஏன் மறந்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை பிரதேசமுரண்பாட்டை உசுப்பிவிடவாகவும் இருக்கலாம். அப்படியாயின் அது துயரமானது தான்.

பக்கம் 642

“அதெல்லாம் மற்ற ஆக்களுக்குதான்…முன்னாள் போராளியள்ள யாழ்ப்பாணமெண்டும் முல்லைத்தீவெண்டும் அம்பாறையெண்டும் வேற்றுமை இல்லை…எல்லாருக்கும் ஒரே பிரச்சனைதான்…எல்லாருக்கும் முன்னாள்கள் எண்ட ஒரேபேர்தான்… ”

உண்மை. துன்பங்களும் பிரச்சினைகளும் தான் எல்லோரையும் ஒற்றுமையுடன் வைத்திருக்கின்றது.

பக்கம் 358

அப்ப தம்பிக்கு எந்த இடம்?

யாழ்ப்பாணம், கொக்குவில்

படிச்சது

யாழ்ப்பாணம் ஹிண்டுகொலிஜ்…பிறகு ஜவ்னா யூனிவேர்சிற்றி மெடிக்கல் பக்றி…பிறகு லண்டன்ல ஸ்பெஷல் செய்தேன்…

ம்…எங்கட பக்கத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் நல்லவசதியிருந்திருந்தா இங்கயிருந்தும் டொக்டரெண்டும் இஞ்சினியர்ஸ் என்றும் நிறையப்பேர் வந்திருப்பினம்…|| முருகேஸ்வரி ரீச்சர் பெருமூச்செறிந்தாள்.

ஓம். இது வயிற்றெரிச்சல். தன்வயிற்றில் பிறக்காவிட்டாலும் இன்னொரு தாயின் பிள்ளை நல்லாயிருக்கிறதே என பெருமைப்படமுடியாத ஆற்றாமை. இது ஒருகுறுகலான பரவலான மனப்பிரச்சினை. எமது சமுகத்தின் அடிப்படை உணர்வின் வெளிப்பாடு. இந்த உணர்வில் மாற்றங்கள் நிகழவேண்டும். இதையே ஆதிரையும் விரும்புவாள் என்பது என் நினைப்பு.

போராட்டத்தை வெறுத்த சந்திராகூட இறுதியில், செல்லில் செத்துப்போவது துயரமளிக்கிறது.

நாவல் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து, நிறைவுப்பகுதிவரை இந்தந்தக்காலத்தில் ஊர்மக்களையும் ஊர்மக்களின் வாழ்க்கைமுறைகளையும் இயல்புகளையும் அப்படியே ஒரு ஆவணப்படம் பார்ப்பதுபோல அச்சொட்டாக பதிவுசெய்திருக்கிறார் நாவலாசிரியர்.

எழுதுவதென்பது மிககடினமான பணி. அதிலும் ஆர்வத்Nதூடு தகவல்களை திரட்டி, அதை தன்மொழிநடையில் இத்தனை விரிவாகவும், தளர்ச்சியில்லாமலும் பதிவுசெய்வதென்பது நினைத்துப்பார்க்க நடுங்கும் பணி.

இப்படிப்பல விதமான உணர்வுகளை, சம்பவங்களை அழகாக கோர்த்து பதிவாக்கியிருக்கும் சயந்தனின் அர்ப்பணிப்பு  விமர்சனத்திற்கு அப்பால் மெச்சுதற்குரியது. மீண்டும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுத்துலகில் சயந்தன் நிலைத்து நிற்கவேண்டும்.

–     ஆதிலட்சுமி சிவகுமார்

By

Read More

ப்ரகாஷ் சிவா

சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன்.

1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது.

இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். நான் நிறைய இரவுகளின் கொலைக்கள சம்பவங்களால் தூக்கம் தொலைத்தேன். அதற்காக சயந்தன் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை, எங்கள் நிலையை பார்த்தீர்களா என்று கெஞ்சவும் இல்லை, நம்மை நேரடியாக அவ்விடங்களுக்கு கூட்டி சென்று ஒரு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வைக்கிறார். அவரும் ஒரு இரண்டு வரி கதை பாத்திரமாக வந்து போகிறார்.

அன்றாட வாழ்க்கை பிடியில் சிக்கி தவித்த சாதாரண மனிதர்கள், அடுத்த கட்ட வாழ்க்கையில் காலடி வைக்கும் தருணங்களில் நடந்த கொடூரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்ந்தவர்கள் என்ற  சொல்லுக்கு பின்னிருக்கும் தீராவலியை நான் எப்படி விளக்கினாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது, கண்டிப்பாய் கிடைத்திருக்க வேண்டிய, சாதாரண வாழ்க்கையைக் கூட பறி கொடுத்தவர்களுடைய நிம்மதியில்லா போராட்டம் அது.

மலையக தோட்ட தொழிலாளியான சிங்கமலையின் ஒற்றையடி தடம் வழியாக புறப்படும் இந்த 664 பக்கங்கள் கொண்ட நெடும் கதையின் பெரும் பகுதி, எளிய மனிதர்களின் வாழ்வு பற்றியது, இழப்புகளின் வலியை பற்றியிருந்தாலும், இன்னொரு படி ஏறத்துடிக்கும் மனித இயல்பின் தீரா தேடல்கள் தான் களம். ஆண்களை ஏதாவது ஒரு வழியில் இழந்து விட்ட தாய்களின் நெடும்போர், அவர் வார்த்தையிலேயே சொல்லவேண்டும் எனில் தமிழன்னையின் கண்ணீர் துளி.

இலங்கை தமிழ் முதல் 50, 60 பக்கங்களிலேயே பழகி விடுகிறது, ஜெயமோகனின் காடு நாவலின் மொழியை புரிந்துகொள்ள எடுத்த சிரமங்களில் இது 5 சதவீதம் கூட இல்லை.

தனிகல்லடியை, எட்டேக்கரை தவிர மற்ற இடங்களை கூகிளில் கண்டுபிடிக்க முடிகிறது. யாழ், வவுனியா போன்ற பெருநகரங்களையும்  விட அதில் வரும் பல இடங்களை (ஆனையிறவு, கேப்பாப்புலவு பாதை, வட்டுவாகல்,தர்மபுரம், ஆலங்கேணி, இலுப்பைக்கடவை, இன்னும் பல) google map மற்றும் youtube காணொளி வழியாக படித்ததில் நான் அந்த பகுதிகளில் வாழ்ந்த, நன்கு அறிந்த ஒருவனாகவே மாறிப்போனேன்.

சாதாரண வார்த்தைகள் வழியாக வனத்தின் வேட்டையும், மலரின் ஒற்றை சைக்கிள் பயணங்களும், எட்டேக்கரில் ஒளி பாய்ச்சப்படும் டார்ச்சும், நாமகளின் உடையழகும்,  சின்னாச்சிக்காக உருவாகும் வீடு பற்றிய பிம்பங்களும், கடற்கரைகளும், போர் கலைத்து போட்ட வாழ்க்கையும், சிறுவர்கள் முன்னாள் கொல்லப்படப் போகும் வணிகனும், மயில்குஞ்சனின் வழிதவறிய காடும், இன்னும் கொஞ்சம் உணவை யாசிக்கும் கெஞ்சலும்……..  நேர்த்தியான திரைபடத்தின்  ஒலிப்பதிவை கண்முன் கொண்டுவரும் அழகுடன் மிளிர்கிறது.

500 பக்கங்களில் இருந்து ராணுவத்தினர் சோற்று பொதிகளை போடும்வரை நடக்கும் நிகழ்வுகளை நான் எப்படி விளக்கி சொன்னாலும் அது நான் உணர்ந்ததை சொல்ல இயலாது, பக்கத்துக்கு பக்கம், துப்பாக்கியால் சுட்டதில் முதுகில் ஏறிவிட்ட புல்லட்டின் மிச்சம், அந்த வலியும், வேதனையும். அதை படித்தே உணரமுடியும்.

காதல்களில், “குடும்பத்தில் ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா” என்ற கதையிறுதி வாக்கியம் தனி கதையாகவே எழுதப்பட்டிருக்க வேண்டிய கண்ணீர் காவியம்.

புலிகளை போற்றி பேசவும், தூற்றவும், ராணுவத்தின் நல்லது கெட்டதை அலசவும் சில பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன, அது சயந்தனின் அரசியல் நிலைப்பாட்டை தாண்டிய உண்மையான வாதங்களாக இருக்கக்கூடும்.

நீங்கள் எந்தவிதமான வாசகராக இருந்தாலும், உங்களை இத்தனை பக்க நெடுகிலும் வழிதவறாமலும், சலிப்பை தராமலும்  கூட்டி செல்லும் இயல்பான எழுத்துக்கள் இதன் சிறப்பு. இங்கே ஈழ தமிழர்கள் பெயரால் நடந்த சில ஆதாயம் மிக்க அரசியலின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளவாவது இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

என்னிடம் குறைந்தது நான்கு பக்கங்களை தாண்டும் கதை பற்றிய எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன, ஆனால் அதை பற்றி எழுதினால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய கூடும் என்ற எண்ணத்தில்தான் விரிவாக எழுதவில்லை.

அரசியல் காரணங்களோ, தனிப்பட்ட கருத்து மோதல்களோ, இலங்கை தமிழர் நிலைப்பாடுகளோ எனக்கு இதுவரை இல்லை, நான் இந்த புத்தகத்தையும் எந்த எதிர்பார்ப்பு கொண்டும் படிக்கவில்லை. ஒரு சாதாரண வாசக மனநிலையின் என் எண்ணங்களைதான் நான் எழுதி இருக்கிறேன்.

2009 போருக்கு பிறகு சர்வதேச அழுத்தம் காரணமாக, சாலை வசதிகளும், நவீன கட்டடங்கள் சிலவும், 4 ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளும், மக்கள் வாழ அமைதியான சூழலும் யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களில்  ஏற்பட்டிருக்கிறது என்றும், அவைகளெல்லாம் பாதுகாப்புக்கு வந்து இன்னமும் வெளியேறாத இராணுவ வீரர்களுக்காகத்தான், தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

அப்படி இருந்தாலும் அச்சம் முழுதும் நீங்கி, அந்த மன வருத்தங்கள் குறைந்து, புலம் பெயர்ந்த மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் நாடு திரும்பவும், வளர்ச்சி காணவும், மனித நேயம் தழைக்கவும், அந்த காயங்கள் ஆறவும் இரண்டு தலைமுறைகள் கடந்து போக வேண்டும். இனியாவது அமைதியும் நிம்மதியும் அங்கு பரவட்டும்.

சில பயணங்களை, சில பிரிவின் வலியை, சில பாடல்களை, சரியான தருணத்தில் வீசப்பட்ட வார்த்தைகளை, எதிர்பார்ப்பின்றி தரப்பட்ட அன்பை மனது சுமந்து கொண்டே திரியும், ஏனெனில் அவைதான் நமக்கான பொக்கிஷங்கள். அதில் இப்போது ஆதிரையும் இணைந்திருக்கிறது.
நன்றி சயந்தன்.

By

Read More

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார்.

தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன்

Gaza, July 9, 2014
பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.

மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை.

குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியழிக்கத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த வாரத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஜெருசலேத்தில் கொலைசெய்யப்பட்டார். இவையனைத்தும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன.

இப்பிரதேசத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு இஸ்ரேலின் பொறுப்பான பதிலுக்காகக் காத்திருந்த மக்கள், முதல்நாள் தாக்குதலிலேயே தாம் இலக்குவைக்கப்பட்டதில் உறைந்துபோயினர். ஆம், 365 சதுரகிலோமீற்றர் பரப்பும், 1.7 மில்லியன் மக்கட்தொகையும் கொண்ட காஸா நிலத்துண்டில் இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கில் குண்டுகளை வீசத் தொடங்கினார்கள். ஆகாய வழி ரொக்கெற் வீச்சுக்களிலும் குண்டுகளின் பெருவெடிப்புக்களிலும் எங்களுடைய உடல்கள் குலுங்கி அதிர்ந்தன. இதயங்கள் நொருங்கித் துகள்களாயின.

இந்த யுத்தம் எத்தனை நாட்களைத் தின்னும்..? 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா..? அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. ? இவற்றைவிட அதிக நாட்களா.. அல்லது சிலநாட்களுக்கா.. எது எப்படியோ இன்று முதல்நாள்.

Mideast Palestinians-Living Under Blockadeநேற்றிரவு ஒரு மணிநேரம்கூட என்னால் உறங்கமுடியவில்லை. வேவு விமானங்களின் இரைச்சலுடனேயே இரவு கழிந்தது.தலைக்கு மேலாக விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. புனித ரம்ஜான் மாதமென்பதால் நோன்பை முடித்து இரவிலேயே உணவு உட்கொள்வது வழமை. இரவிலிருந்தே குண்டுவீச்சுக்களும் தீவிரமடையத் தொடங்கின. இராணுவ நிலைகளையும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலியப் படைகள் குறிவைப்பதாக செய்தியில் சொன்னார்கள். விடியற்பொழுதில் இறுதியாகக் கண் சொருகும் வரைக்கும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரைச்சல்களுக்கும் வெடியோசைகளுக்கிடையும் ஓரிரு மணிநேரம் தூங்கமுடிந்தது. ஓரிரு மணிநேரம்தான். திடீரென பூமி அதிர்வது போல, படுக்கையும் வீடும் அதிர்ந்தன. மார்புக் கூட்டிலிருந்து இதயம் துள்ளி விழுந்தாற்போல உணர்ந்தேன். மூச்செடுக்கவும் மறந்த கணம் அது.

காலை துயரச்செய்திகளோடேயே விடிந்தது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்தனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகின.

வடக்குக் காசாவில் ‘அபுகவெராவின்’ குடும்பத்தில் குழந்தைகளுட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். கூரையின்மீது கூடி நின்று தாம் அப்பாவிமக்கள் என்பதை அடையாளப்படுத்தினால் தாக்குதலிலிருந்து தப்பமுடியுமென்று அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எதிரிப்படைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியுமா.. அவர்களுடைய விமானங்கள் மிகச் சாதாரணமாக ஏவுகணைகளை வீசின. படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வீட்டோடு சமாதியான புகைப்படங்கள் நெஞ்சை உருக்கின.

பலஸ்தீன வானொலிச் சமிக்ஞைகளை இடைமறித்து அவற்றில் தம்முடைய செய்திகளை இஸ்ரேல் இராணுவம் ஒலிபரப்பியது. பலஸ்தீனர்கள் தம்முடைய வீடுகளைக் காலிசெய்து பாதுகாப்பாக வெளியேற வேண்டுமாம். எங்ஙனம் சாத்தியம்.. ? காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம்.?முற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமா? தரையிலிருந்து சீறும் எறிகணைகளையும் வானத்தை மங்கச் செய்யும் விமானங்களையும் கடந்து பாதுகாப்பான வெளியேற்றம் எங்ஙனம்..?

இரவு பரவி விட்டது.நோன்பை முடித்துக்கொள்வதற்காக வானொலிகளை நிறுத்தி அமைதித் தருணங்களை முயற்சித்தோம். சாத்தியமானதுதானா அது..? விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. ? நாம் தொழுகை அழைப்பிற்காகக் காத்திருந்தோம். சோர்ந்த இதயத்தோடும் நீர்வழிந்தோடும் கண்களோடும் கைகளை மேலுயர்த்தித் தொழுதோம். இந்நாளில் தம்முடைய பிரியமான உறவுகளை இழந்தவர்களுக்காகவும், தம் வீடுகளைக் கண்முன்னே பறிகொடுத்தவர்களுக்காகவும், இறைவனைத் தொழுதோம். இன்றைய வலி மிகுந்த காட்சிகளை நினைவிற் கொண்டோம். இன்றைய முழுநாளும், இது யுத்தத்தின் முதல்நாள் என்ற நினைவு பரவியிருந்தது. இன்னமும் எத்தனை நாட்களை இது தின்னும்.. ?

இன்றைக்குப்பகல், தெற்கு இஸ்ரேல் நகரத்திலுள்ள இஸ்ரேலிய கடற்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹமாஸின் இராணுவப்பிரிவான அல்கஸாம் (Al-Qassam)தெரிவித்தது. இஸ்ரேலினுள்ளே சில மைல்களை எட்டும் உள்ளுார்த் தயாரிப்பு ரொக்கெற்றுக்கள், அப்பகுதி இஸ்ரேலியரைத் திகிலடையச் செய்திருக்கும். இச்செய்தி சிறுநம்பிக்கையை அளித்தது. ஆம். மிகக் கொடுமையான மௌனத்தை சர்வதேசம் கைக்கொள்ளும் இவ்வேளையில் அநியாயங்களைச் சகித்துக்கொண்டு மௌனமாயிருக்கத் தயாராயில்லாத புரட்சியாளர்கள் நம்முடனுள்ளார்கள் என்ற நம்பிக்கை இது. இவ்வகை ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலிற்குப் பெரியளவான இழப்புக்களை ஏற்படுத்தாதென்று தெரிந்ததுதான். பதிலடியாக நூற்றுக்கணக்கான எறிகணைகளை அவர்கள் ஏவுவார்கள். ஆனால், நாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என்பதையும் அரபு உலகிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ யாருக்காகவும் என்பதையும் உலகிற்குச் சொல்ல வேண்டும். ஏனெனில் நீதி நம்பக்கமே இருக்கின்றது. இழந்த உரிமைகளையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்கு நாம் போராடியே தீரவேண்டும்.

யுத்தத்தின் முதல் நாள் இரவில் கரைந்து போகிறது. இதுவரை 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 பேருக்குக் காயங்கள். இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது. காஸாவின் வெளியிலிருந்கும் சிலருக்கு இவை வெறும் இலக்கங்களே. ஆனால் எங்களுக்கு – காஸாவின் மக்களுக்கு, இவை புள்ளிவிபரங்கள் அல்ல. இந்த இலக்கங்கள் எங்களுடைய வலிகள், அடுத்து எவர் கொல்லப்படுவார் என்கிற துயர்.. எவ்வகைக் குண்டு வீசப்படுமென்ற அச்சம்..

இந்தப்பொழுதில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் வலிமையையும் பொறுமையையும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.

By

Read More

மணிமாறன்

அனைத்தையும் அழித்தொழித்தாகி விட்டது. அரை நூற்றாண்டு கால யுத்தத்தின் கடைசித் துளிகளில் எதை பெற்றது, எதை இழந்தது இந்த இனம். துட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவைந்த யுத்தத்தின் சத்தங்களால் திகைத்திருந்த நிலத்தின் இனியான கதை என்னவாகப் போகிறது. உலகின் காணச் சகியாத காட்சிகளையெல்லாம் வர்ணமேற்றி காட்சி உருவைப் பெரிதினும், பெரிதாக்கி முள்ளி வாய்க்காலின் கம்பி வேலிகளைப் பிடித்தபடி வெறித்திருக்கும் இந்த தமிழ்க்குடிமகளின் கண்களுக்குள் பொதிந்திருக்கும் கேள்விகளை நாம் எப்படி எதிர் கொள்வோம். அரசியல் பிழைத்தோர் அணுகுவதைப் போலன்றி தன் இணத்தின் துயரங்களையும் அதன் சமரசமற்ற யுத்தத்தையும் ஒரு முறை சொல்லிப் பார்த்தால் என்ன? எல்லாம் முடிந்தா விட்டது. இனியான வாழ்வின் துயரப்பெருங்கடலை நீந்திக் கடந்திட நம்பிக்கைத் தெப்பங்கள் தென்படவில்லையா? போர் என்றாலும், காதல் எனினும் கசப்பென்றாலும், எதுவாயினும் இனியான வாழ்க்கையை அவரவர்கள் தான் வாழ்ந்தாக வேண்டும். கலைஞன் கண்ணுறுகிறான் நம்பிக்கைப் பிடிகயிறுகள் காற்றில் ஊஞ்சலாடுகிறது. இது அவனை வண்ணி நிலத்திற்கும், வளைகுடா நாட்டிற்கும் தூக்கிப் போகிறது. கடந்து சென்ற காற்றொன்றும் வசந்தத்தை வரவழைக்கவில்லையே எனும் துக்கப் பெருமூச்சை சுமந்திட வகையின்றி வார்த்தைகளை வசமாக்கி கலையாக்குகிறான். அதுவே பெயரற்றதாக, ஆறாவடுவாகவும் மேலெழும்புகிறது. அதுவரையிலான படைப்புகளில் சந்திரா டீச்சரையும், அத்தாரையும், மலரக்காவையும் காணல்லையே ஏன்? எனும் கேள்வியில் திகைந்திருந்த சயந்தனிடம் ஆதிரை தன் கதையைச் சொல்கிறாள். ஆதிரை தான் கேட்ட கால் நூற்றாண்டு கதைகளை யாவருக்குமானதாக உருமாற்றித் தந்திருக்கிறார் சயந்தன்.

எழுதிக் கடப்பதைத் தவிர இனியெந்த மார்க்கமும் இல்லையப்பா? சயந்தா என இத்திமரக்காரி செய்திட்டாள். இரவெல்லாம் மந்திர உச்சாடணத்தை தான் வாழ்வதற்கான நம்பிக்கையை தமிழ்க் குடிகள் பெற்று மேல் எழும்புவதற்கான யாவற்றையும் தரப்போகும் அவளுக்கான படையலையே நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்திமரக்காரியின் குளக்கரையில் வழிந்தோடும் நீர்த்திவலைகளில் எறியப்பட்ட கற்கள் எழுப்பிய ஒலியும், அலையும் திசா திசைகளுக்கும் நம்மைக் கடத்தித் திருப்புகிறது. தலைமுறை தலைமுறையாக நடத்தி வந்த வாழ்வைத் துறந்து காடேகிய போராளிக் கூட்டம், இனியான நாட்களை என்னதான் செய்து கடத்தப் போகிறது எனும் துக்கமிகு கேள்விகளை எதிர்கொள்ள முடியாது தடுமாறுகிறாள் ஆதிரை.

துவக்குகள், நிகழ்த்திக் கொண்டிருந்த அதிகாரப் படலம் தற்காலிகமாக ஓய்வெடுக்கிறது. அதன் முனையில் வெறி கொண்டிருந்த இனத்துவேஷம் அதிலிருந்து கிளம்பிய ராட்சச கரும்புகை மொத்த நிலத்தையே விஷக்காடாயிருக்கிறது. போர் எனும் மகாராட்;சசன் இப்போதும் தமிழ் நிலத்தில் பதுங்கிக் கிடக்கிறான். எளிய வாழ்வையாவது வாழ்ந்து விட மாட்டோமா? எனும் ஏக்கத்திலேயே நம் தொப்புள் கொடி உறவுகளை தள்ளி மூழ்கடித்ததையே போர் எனும் மாய அரக்கன் செய்து முடித்திருக்கிறான். இந்த நொடியில் கூட வெளிப்படக் காத்திருக்கும் அதன் விஷக்கத்தி தான் கிழித்தழித்த நிலத்தினில் தான் பதுங்கியிருக்கிறது. உலக வரைபடத்தினில் உறைந்திருக்கும் கன்னி வெடிகள் திகைக்கின்றன. வல்லாதிக்க ராணுவ டாங்குகளை சிதைத்திட புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை புதைத்துச் சென்ற போராளி இப்படியாகும் என ஒரு போதும் நினைத்திருக்க மாட்டான். வாழ்வதற்கான நம்பிக்கைகள் எச்சங்களாக மிஞ்சியிருக்கும் சமகாலத்தில் இதுவும் நடக்கவே செய்யும். நிலத்தில. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மறுகுடியமர்வு நிகழும் போதே அரசியல் அதன் சூழ்ச்சியையும், தந்திரத்தையும் நிகழ்த்தி நகர்கிறது. மனமெங்கும் அச்சம் சூழ்கிறது. சுற்றிலும் புதைப்பேறிய கண்கள் சூழ்ந்திருக்க தான் புதைத்த கன்னி வெடிகளை தானே அகற்றிடும் போராளியின் மனநிலையை எழுதித்தானே கடத்திட முடியும். சிங்கள ராணுவச் சர்வாதிகார போர்படை அணியை திகைத்து திரும்பச் செய்திட புதைக்கப்பட்ட கன்னிவெடிகள் இப்போது தன்னையகற்றி வெளியேற்றிடும் முன்னாள் போராளியைப் பார்த்து நகைக்கிறதா? உயிர் மூச்சைப் பிடித்து வைத்திருக்க மேற்கத்திய தேச தொண்டு நிறுவனம் கூலியென தந்த காசை கையிலேந்தித் திரிந்த அநதப் போராளியின் மனநிலை என்னவாக இருக்கும். மொத்த இனத்தையே பித்த நிலைக்குள் தள்ளி வீழ்த்திய போர் எனும் மாய அரக்கனின் விபரீத விளையாட்மையும், அது நிகழ்த்தியிருக்கும் மனக்காயங்களையும் சொற்கள் கொண்டு சொஸ்தப்படுத்தும சித்து விளையாட்டையே நாவல் என்றும், கதைகள் என்றும், கவிதைகளாகவும் எழுதிக் கடக்கிறோம். ஆறாத வடுவாக தங்கி விட்ட யாவற்றையும் இத்திமரக் காரியின் காலடியில் ஆதிரையெனும் படையலாக்குகிறார் சயந்தன். கடைசி யுத்தத்தின் துயர் கொப்பளிக்கும் நாட்களின் வெப்பமும், குரூரமும் தாங்கிட இயலாத துயரத்தோடு நகர்கின்றன ஆதிரைச் சொற்கள்.

தங்களுக்கான நியாயம் இதுவென்று தான் நம்புகிறது. தான் நம்பியவற்றை தன்னையொத்தவர்களையும் நம்பச் சொல்கிறது. இதற்கு மதப் பிரதிகளை வரலாற்று ஆவணமென மறு உருவாக்கம் செய்கிறது. தான் நம்பியவற்றை பிறரும் மற்றவரும் எற்பதைத் தவிர வழியெதுவும் இல்லை, ஏற்றுக் கொள்ளுங்கள். இதுதான் புராணம், இதுதான் ஐதீகம், இதுமட்டும் தான் வரலாறு. இப்படித்தான் இருந்தது இந்த நிலம் என்று நீங்கள் நம்பித் தொடர்வது என்றால் இங்கு இருக்கலாம். இல்லையென்றால் உங்களுக்கான நியாயங்களை இனி எங்களிடம் எதிர்பார்ப்பதில அர்த்மதில்லை. போர்க்கருவிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒற்றைப் பதில்களை ஏற்பதைத் தவிர உங்களுக்கு வழியெதுவுமில்லை. உலகெங்கும் நிகழ்த்தப்படுகிற ஆதிக்கக் கருத்தியல்களின் ஆதிச் சாவி மதக் கருத்துக்கள் தான். பிறரின் துயரம் ஆதிக்கவாதிகளின் நியாயமாகிவிடும் வித்தையை போர்க்கருவிகள் நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றன. ஆதிரையின் அறுநூறு பக்கங்களிலும் சயந்தன் விரித்து, விவரித்துக் காட்டித் தருவது இதைத்தான். இனத்துவேஷத்தின் உச்சத்தில் நிலத்தை நிர்மூலமாக்கிக் குதறிய மதப்பயங்கரவாதத்தின் குரூரமுகத்தினை ஆதிரைக்குள் வாசித்துக் கடக்க முடியவில்லை. வக்கற்று, வகையற்று, நாடற்று, வீடற்று, நிராயுதபாணியான போராளிகளின் பெருந்துயரத்தையே ஆதிரை தன்னுடைய முதல்க் கதைச் சொல்லாக வீசியெறிகிறாள். அதுவே ஓராயிரம் துயர்ச் சொற்களாக உருமாறி கதை கதையாக புரள்கிறது.

சிறைக் கொட்டடியின் விசாரணை வதைமுகாமிற்குள் சிக்கிக் கொண்ட ஏதிலிகளின் மனநிலையை எழுதியெல்லாம் கடக்க முடியாது. ஆற்றி;ட முடியாத துயரத்தின் பெரும்பொழுதுகள் அவை. குரூரஅபத்தத்தின் சாயல் படிந்திருக்கும் ஏதிலியின் சொற்களை திறந்து வெளியேற்றுவது எளிதானதில்லை. இருள், கரும் இருள், ஒளிக்கீற்றுப் புள்ளிகூட தென்படச் சாத்தியமற்ற மையிருள் அவனைப் போர்த்தியிருக்கிறது. சர்ப்பமென ஊர்ந்து வரும் சாவு அருகருகி வந்து திரும்புகிறது. வந்து வந்து போகும் மரண ரேகைகள் அவனைத் தற்கொலைக்குத் தூண்டாமல் இருக்கவா செய்யும்? சிங்களச் சிப்பாய்களின் தண்டனை முறைகள் உளவியல் நிபுணர்களின் யோசனைகளுக்கெல்லாம் எட்டாத வக்கிரங்கள். நம் படைப்பாளிகளால் எழுதிட முடியாது தேங்கியிருக்கும் சித்திரவதைக் குரூரங்களை எழுத வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அன்பின் வழியது உயர்நிலையெனும் பௌத்த அறநெறியின் உச்சம் மகாநிர்வாணம். துறவின் பெரும் உச்சமான நிர்வாணம் தலைகுப்புற கவிழ்ந்து சித்ரவதையின் குறியீடாகிறது. போர்க் கைதிகளை விசாரணைக் கூண்டிற்குள் நுழைத்திடும் போதே அவளை நிர்வாணமாக்கிவிடுவது சிங்களர்களுக்குள் உறைந்திருக்கும் மதத்தின் குரூரம்தான். மகாவிடுதலையின் அடையாளமான நிர்வாணத்தை அடக்குமுறையின் சாவியாக்கியதைத் தவிர இந்த கொடும் போhரினால் என்ன செய்திட முடிந்தது. இந்தப் பூமிப்பந்தினை சிதைக்கும் யுத்த வெறியர்களே எப்போது இதை நிறுத்துவீர்கள்? புத்தா நீயாவது கேட்கக் கூடாதா? என்று உரக்கக் கூவும் கியோமாக் கிழவி தங்களுடைய வன்முறைக்கும், அழித்தொழிப்பிற்கும் நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கும் சிங்களப் பேரினவாதத்தின் குறியீட்டு சாட்சி.

பசியெனும் துயரத்தைக் கடத்திடத்தானே தமிழனும், தமிழச்சிகளும் பத்தடித் தகரக் கொட்டகைக்குள் சிக்கிக் கொண்டோம். உலகின் இடப்பெயர்வுகளின் மையச்சரடு பசியைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். உலகெங்கும் தோட்டக்காரன்களாக தமிழர்களை பிய்த்தெறிந்து போட்டது பஞ்சம். தலைமுறை கடந்தும் பஞ்சத்தை விட்டகன்றிட வழிதெரியாது திகைத்த பொழுதொன்றில் பிறந்திட்ட லட்சுமணனின் கதை வேறு. யாழ்ப்பாணத் தமிழர்களின் கதை வேறு என்பதை ஆதிரை காட்சிப்படுத்தவே செய்கிறது. சிங்க மலையின் ஞாபகக் குகையைத் திறந்து நகர்கிறது மலையகத் தமிழர்களின் துயரக் காட்சிகள். நாங்கள் யார்? எனும் கேள்வியை கங்காரு குட்டியாக சுமந்தலைய வேண்டிய பெருந்துயரத்தை பஞ்சமும், பசியும் அவர்களுக்கு சாபமாக்கிப் போட்டது. மலையகத்து மனுஷக் கூட்டத்தை எழுபதுகளின் துவக்கத்தில் நெருக்கிய போர்க்கருவிகள் சிங்களர்களுடையது மட்டுமன்று. உலக வல்லாதிக்கத்தின் பெரும் ஆதிக்கப் பசியும் அந்தப் போர்க்கருவிகளுக்குள் பதுங்கியிருக்கவே செய்தது. துரத்த, துரத்த தோட்டக்காட்டை விட்டு வெளியேறியது கூட்டம். வீடென்றிருந்த தகரக் கொட்டகையை தீக்கு தின்னக் கொடுத்து ஏதிலியாக இடம் பெயர்ந்தது தமிழர் கூட்டம். எதுவுமற்றவர்களால் எங்கும் வாழ்ந்திட முடியும் என்பது நகைமுரன் தான். எது தன் நிலம் என்பதில் இன்றுவரையிலும் தீராது நீடித்திருக்கும் குழப்பம் அவர்களுடைய பாதச் சுவடுகளில் அட்டைப் பூச்சியாகப் படர்ந்திருக்கிறது.

அட்டை குடித்து செறித்தது போக எஞ்சிய ரத்தம் சுண்டிய உடலோடு சமதளத்தினில் கொட்டப்பட்ட மனிதக் கூட்டம். தன் உடலோடு ஒட்டியிருக்கும் தோட்டக் காட்டான், கீழ்சாதிக்காரன் எனும் இழிகுறியீட்டை இதுநாள் வரையிலும் கூட சுமந்தே அலைகிறது. விரட்ட, விரட்ட வெளியேறி இந்தியா தான் திரும்ப வேண்டும்? அங்கிருந்து தானே தீட்டு, தீட்டு என திட்டி ஒதுக்கிய சொற்கள் துரத்தியிடித்திட மலையேறினோம். ராணுவமும், போலீசும் இப்போது நம்மை வண்டிகளில் ஏற்றி வவுனியாக் காட்டில் கொட்டி விட்டுச் சென்று விட்டதே என திகைத்து நிற்கும் காட்சிச் சித்திரத்தை பதிவுறுத்திய வகையில் ஆதிரை தனித்த நாவலாக தன்னை வெளிப்படுத்துகிறது. சமதளக் காடுகள் அவர்களை கட்டித் தழுவிக் கொண்டது. சொந்தத் தமிழ் ரத்தத்தோடு கலந்து போனார்கள். வேறு எங்கு போக முடியும் அவர்களால். மலையகத்துக்கே திரும்புவதா? தோட்டக் காட்டான் எனும் இழிகுறியைச் சுமந்தே தமிழ் நாட்டிற்கு போவதா? யாழ்ப்பாணத் தமிழர்களோடு ஐக்கியப்பட்டிருந்திட முடியுமா? தன்னால் பேதங்களின் சூழ்ச்சிவலையில் சிக்கித் தவித்தலைகிறது நம் தமிழ் இனம் மலையை விட்டகன்ற போதினில் சிங்க இனவெறிக் கூட்டத்தால் பிடித்துச் செல்லப்பட்ட மனுஷிகள் என்ன ஆனார்கள்? திரும்பவே முடியாத பெரும் தூரங்களுக்குள் கரும்பள்ளியாகிப் போன இளங்குருத்துக்களை இழந்து தவிக்கும் அப்பன்களின் துயரத்தைக் கடத்திட முடியுமா? கதைப் பிரதிகளால். ஆதிரையை வாசித்துக் கொண்டிருந்த பொழுதினில் நாவலுக்குள் காணாமல் போயிருந்த பதின்மூன்று வயது பெண் குழந்தையை தேடி தேடி பித்தேறிய கண்களோடு நிலத்தைக் கிண்டிக் கொண்டிருக்கும் தகப்பனின் காட்சிச் சித்திரம் உருவாவதை தவிர்த்திட முடியாது. எங்கேயெங்க என் உயிர்ப்பிறவி எங்கே எனும் கேள்விகளால் திணறிக் கொண்டிருந்த ஈழப்பெருவெளியின் எழுபதுகளும் கூட தோன்றிக் கொண்டே தான் இருந்தது.

கையகல நிலமும் கூட எவருக்கும் உரியதில்லை. சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்களும், இன்டஞ்செடிகள் ஊர்ந்து, நகர்ந்து சென்று உருவாக்கிய விரிசல் கோடுகளும், கோடுகளில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும், அவை வரையும் காட்சிச் சித்திரங்களும் அசாதாரணமானவை. வேற்று இயற்கைக் காட்சிகள் அல்ல அவை யாவும். யாவற்றையும் அழித்து வாழிடம் என உருவாக்கி விட்ட பிறகு அந்தந்த நிலத்திற்கு மட்டுமேயான பிரத்யேகமான மொழியும், கதைகளும் அவற்றை அழித்திடாது காப்பதற்கான நியாயங்களும் உருவாகி விடுகின்றன. பண்பாடு கலாச்சாரம் என்று தனித்தொன்று உருவான பிறகு எப்படி இவற்றை விட்டுக் கொடுப்பது என்ற மனநிலை கட்டமைக்கப்படுவதும் அதற்கான யுத்தங்கள் தொடர்வதும் தவிர்க்கவே முடியாததாகிறது. போர்தான் வரலாற்றை வடிவமைக்கிறது. போர்க்காட்சிகளே வாழ்வின் முடிச்சுகளாகின்றன. அதன் ராட்சசப் பசிக்கு உலகம் எத்தனை பலிகளை தந்து கொண்டேயிருக்கிறது என்பதையும், அப்போதையான மானுட குலத்தின் தவித்தலையும் மனதின் குறியீடே ஆதிரை. ஆதிரை ஒற்றை மனுஷியல்ல. அவள் ஒரு குறியீடு. ஒற்றைத் தன்மையில் அமையவே சாத்தியமற்ற ஓராயிரம் மனுஷிகள். சந்திரா டீச்சரும் மலரக்காவும் வாசகனுக்குள் கடத்துவது ஈழத்தின் கடைசி யுத்தத்தில் துயர்வுடைந்த பெண்களின் மன அரற்றலைத்தான். வெள்ளையக்கா, சோதிமலர், என விதவிதமான பெயர்களில் ஆதிரை உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள் நாவலுக்குள். இவர்களின் பெயர்களையெல்லாம் கண்மூடி உச்சரிக்கிற போது கரிக்கட்டையாக புகைந்து கொண்டிருக்கும் மரமும், மரத்திற்கு இடையே பூத்துப் பெருகும் செந்நிறத் தனல்களும் உருவாக்கிடும் துயரம் வாசகனை நிலைகுலையச் செய்கிறது.

புதிதாகத் துவங்கிவிட முடியாது எந்த வாழ்க்கைiயும், எதைக் கடக்கிற போதும் கடந்து சென்ற காலத்தின் காட்சிகள் அச்சுறுத்தவே செய்யும். எத்தனை வருடங்களாக துயந்திருந்த யுத்தம் இது. எவரை எவரையெல்லாம் நம்பி மோசம் போன வரலாறு இது. வெடிச் சத்தம் கேட்டுக் கேட்டு நம்பிக்கையற்றுப் போன மனிதக்கூட்டத்திடம் வாழ்ந்து விடலாம் எனும் ஆசை துளிர்விடுவது சாத்தியம் தானா? “இரவின் யோசனைகளையும், துயரமூச்சுக்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு புத்துணர்ச்சியோடு விடிகிற நாள் பிறகு நேரம் செல்லச் செல்ல தண்ணீர் ஊற்றிய நெல் முட்டையைப் போல கணக்கத் தொடங்கி விடுகிறது…” இது நாவலுக்குள் நடராசனின் சொற்களாக சயந்தன் எழுதிப்படரும் காட்சிச் சித்திரம். இந்த நிமிடத்தில் கூட சிப்பாய்க் கூட்டம் உள்நுழைந்து விடக்கூடும். வாழ்விடத்தை நிர்மூலமாக்கி புலியொன்றோ, போராளியென்றோ உதைத்து இழுத்துச் சென்று தேவாலயத்திலோ, பள்ளிக்கூடத்திலோ மனிதக் குப்பையாக்கி விட்டு வெளியேறிவிடும் என்கிற பதட்டத்தோட கடந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து தான் வாழ்வதற்கான ஆசையும், காதலும் கூட பிறக்கிறது.

நாவல் முழுக்க வரலாற்றுக் காட்சிகளால் தான் நகர்கிறது. எண்பதுகளின் நடுவில் இந்திய அமைதிப்படை வந்ததை சாக்லேட் கொடுத்து வரவேற்ற தமிழன், நம்முடைய மூதாதை நிலத்திலிருந்து நம்மை விடுவிக்க வந்த படையிது என்று நம்பியதையும், பிறகு அவர்களுடைய இச்சைக்கும், யுத்த வெறிக்கும் பலியான நிலத்தின் கதையையும் ஆதிரை நமக்கு ஞாபகமூட்டி நகர்கிறாள். அந்த நாட்களில் தமிழர்களிடையே நடந்த உரையாடல்களை பின்னோக்கி நகர்ந்து சென்று காட்டித் தரும் காட்சிகள் ஆதிரையை தமிழில் எழுதப்பட்ட ஆகச்சிறந்த வரலாற்று புனைவாக்கமாக மாற்றி விடுகிறது “கேக்கிறேன் எண்டு குறை நினைவாக்க வேண்டாம். நீங்கள் உங்களை இப்பவும் ஒரு இந்தியராகத்தான் மனசில நினைக்கிறியளா? “நாடுன்னா என்ன…. நான் பொறந்த இடமா?…. அல்லது என் புள்ளைகள் பொறந்த இடமா? …. இல்லைன்னா ஒரு வேலையும், சம்பளமும் தர்ற இடமா…… இல்லையே நானும் புள்ளைகளும் நாளைக்கு காலலே உசிரோட எழும்புவோம்கிற நம்பிக்கையத் தர்ற பூமிதான நாடு இல்லையா….” இப்படியான எதார்த்த சித்தரிப்புகளே நாவலின் பலமும் கூட. வரலாற்றின் பக்கங்களை ரத்தத்தால் எழுதியெடுத்த நிலத்தில் தனிக்கல்லடியின் கதையும். இத்திமரக்காரியின் காட்சி சித்திரமும் நாவலை தனித்ததாக்குகின்றன. தங்களுடைய ஆதித்தாயான இத்திமரக்காரியின் காலடியில் தலையற்ற முண்டமாக தன்னுடைய தமையனைக் காண்கிற துயரத்தை நாமும் கூட தாங்கிட முடியாது தடுமாறுகிறோம். ஓடித்திரிந்த காட்டையே சல்லி சல்லியாக தேடிச் சலித்த போதிலும் தலை கிடைக்கவில்லை. தலையற்ற முண்டங்களையே தந்து விட்டுச் சென்றது இந்திய அமைதிப்படை என்பது வெறும் காட்சிப் பதிவுகள் மட்டுமல்ல இவர்கள் யார் என்பதைக் கண்டறிந்த கலைஞன் இப்படிப் பதிவு செய்கிறான்….. “அதாரடி வாணரங்கள்?” “வேற ஆர், அனுமாரின்ரை வாரிசுகள் தான். அவன் அப்ப இலங்கையை எரிச்சான். இப்ப இவன்கள் நம்மள எரிக்கிறான்கள். இந்தியன் ஆமி வருகுது எண்ட உடனே சனங்கள் பட்ட சந்தோசம் இந்தக் கால் அளவு தான். அவங்கள் திரும்பிப் போறாங்கள் எண்ட உடனே சனங்கள் பட்ட சந்தோசமிருக்கே …… அது இந்தக் கடலளவு …..” நாவலுக்குள் புரள்கிற என்பதிற்கும், தொன்னூற்றிற்கும் இடையேயான இருநூறு பக்கங்களும் நம்மை வெட்கம் கொள்ளச் செய்கின்றன. தொப்புள் கொடி உறவுகள் என்று பிதற்றிக் கொண்டிருக்க, அதிகார மையம் ஆடிய ஆட்டத்தில் சிதைந்து போன வாழ்க்கையை சரிசெய்து மேலேறுவது எப்படி எனும் கேள்வியையும் கூட நம்முள் ஏற்படுத்துகிறது. தனிக்கல்லடியில் இருந்து இந்தியன் ஆமி கிளம்பிட்டது என்ற நொடியிலேயே அவர்கள் நினைத்து கொள்கிறார்கள். நல்ல வேளையாக இந்திமரக்காரி கண் தொறந்து போட்டாள் என்று

போர்க்களத்தின் கடைசிக் காட்சிகளும், போரினில் காயம்பட்டு திரும்பி பின் வாழ்ந்திட எத்தனிக்கும் மனிதர்களின் மனநிலை என்னவாக இருந்தது என்பது மிகவும் முக்கியமான பதிவு. வரிப்புலியனாக களமாடியவன் வெள்ளையனாக திரும்பிய பிறகு அவனுடைய அடுத்த வேளைச் சோற்றிற்கு அல்லாடுகிறவனாக மாறிப் போகிறான். எதையும் இயல்பாக ஏற்கும் மனநிலையை போர் எப்போதும் ஏற்படுத்துவதில்லை. வரிப்புலியின் புலிப்படையிலிருந்து வெளியேறி வருகிறான். அவனுடைய விருப்பத்தின் பாற்பட்டதல்ல. காயம்படுவது களத்தின் இயல்புதான். களப்பணியானால் தியாகியாக்கிடும் நிலமிது. மாவீரர் நாளின் காட்சிகள் எழுதப்படாத ஈழ இலக்கியமே இல்லை தான். காயம்பட்டது உடலில் தான் என்றாலும், மனிதின் ஆன்மபலத்தை களம் ஏற்பதில்லை. உடலுக்குள் ஏறிய வெடிகுண்டு வதைக்கிறது மனதை. தன்னுடைய நிலத்தில் தான் உலவித் திரிந்த காட்டில் என்ன தொழில் செய்து பிழைப்பது எனும் கேள்வியில் வாடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள் போராளிகள். முன்னாள் போராளியை யாழ்ப்பாணமென்றாலும் சரி வல்வெட்டியாகினும் சரி ஏற்பதில்லை, துவக்குகளோடும், கன்னி வெடிகளோடும் திரிந்த வெள்ளையன் தேங்காய் உரித்திடக் கூடத் திரணியற்றவனாக நிற்கிறானே எதன் குறியீடு இது. இரண்டாயிரத்தின் துவக்கத்தில் எல்லோருக்குள்ளும் முகிழ்த்திருந்த சொற்களைத்தான் நாவலுக்குள் மயில் குஞ்சனும், வெள்ளையனும் அத்தரும் பேசிக் கொள்கிறார்கள். “நம்முடைய காலத்திலாவது பொடியங்களோட காலம் வந்திரணும்….” இந்த எளிய ஆசையை காலம் எப்படி நிர்மூலமாக்கி கலைத்துப் போட்டது என்பதையும் ஆதிரை அடுத்த அடுத்த கதைகளாக்கித் தொடர்கிறாள்.

எல்லாவற்றையும் செரித்து தின்று மேலேறுவதற்கான தந்திரத்தையும் ‘தைரியத்தையும் காலமே அவர்களுக்குவழங்குகிறது. இத்திமர மரக்குளத்தின் நிலழில் விளையாடித்திரிந்த பிள்ளைகளைப் போர்க்களம் நோக்கித் திருப்பியது காலம் தான். அமைதிப் பேச்சுவார்த்தையின் போதான மகிழ்வினைதுளியளவு நீடித்திருக்கச் சாத்திய மாற்றதாக்கி துவக்குகளையும்’டாங்கிகளையும் கன்னி வெடிகளையும் சுமந்திட நிர்பந்தித்ததும் கூடகாலம் தான். அந்த மகா அரக்கனின் விளையாட்டில் தோற்று விழுகிற தன் குழந்தைகளை தேற்றி மேலேற்றுகிறாள் இந்திமரக்காரி. போர் சிதைந்துக் கொண்ணடேயிருக்கிறது மனித வாழ்க்கையை. தான் பார்க்கச் சாத்தியமற்றககாட்சிகளையெல்லாம் அது குரூரமாக விரிக்கிறது. தன் உடலையே பிணமாக பார்த்திட முடியுமா?தன்னுடைய அண்ணனின போராளி உடல் கிடத்தப்பட்டிருக்கிறது’ அது நான் தான் என்று உறுதியாக நம்புகிறான். இன்று கிடத்தப்பட்டிருக்கும் உடல் என்னுடையதாக இல்லாமல் இருக்கலாம். நிச்சயமாக நாளையோ’ நாளை மறுநாளோ என்னுடையதாகப் போகிறது என்பது தான் போர்களக் காட்சிகள் உணர்த்திச் சென்றிருக்கும் நிஜம்.

கடைசி யுத்த களத்தின் காட்சிகளும் முள்ளி வாய்க்கால் துயரங்களும்’அண்டை தேசத்தவரின் அரசியல் சூழ்ச்சிகளில் வீழ்ந்து போன இன எழுச்சிப் போர்க் காட்சிகளும்வரலாற்றில் ரத்தக்கறைக் கொண்டு எழுதப்பட்டு விட்டது. போர்க்களத்தில்; சண்டமாருதம் செய்த புலிப்படையை பிள்ளைப்பிடிப்பவர்களைப் போல் சித்தரிக்கும் அரசியல் சூதை நாவல் கட்டுடைத்துக் காட்டுகிறது பல்வேறு இடங்களில் பேச்சு வார்த்தைகள். இனி தொடர்வதற்கான நம்பிக்கைகள் அற்றுப் போய்விட்டது. சமாதான மேசைகள் அகற்றப்பட்ட பிறகுஆயுதங்களை கைவிட்டு எப்படி விலகிட முடியும். ஆயுதங்கள் தூக்கி சுமக்க ஆளின்றி கைவிடப்பட்டு நிலத்தில் விழுந்துவிட்டது. வெற்றி இப்போது சாத்தியம் என்று சொல்லிமட்டும்தான் போர்களத்தில் நிற்க முடியுமா? அப்போதைய நாட்களில் தான் பள்ளிக்டத்துப் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிடாது படையணியில் ஐக்கியமானார்கள். புலிப்படைப் போராளிகள் உழைப்பாளிக் குடும்படுங்களில் இருந்தே உருவாகி வளர்ந்தார்கள். துட்டு உள்ள தமிழர்கள் எப்படியாகினும் லட்சம் செலவிட்டு அகதியாக வெளியேறி பிரென்ஸ்ற்கும், இன்ன பிற தேசங்களுக்கும் நம்முடைய பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் வெகுகுறியாக இருந்தார்கள். போர் தொடருமா? தேசம் கடந்த ஈழ அரசுஅமையுமா? பேச்சு வார்த்தை நீடித்துத் தொடருமா? எதுவும் நிச்சயமற்றதாகவும், உல்லாமும் கூட சாத்தியமானதாகவும் கூட காலம் தன்னை உருமாற்றிக் கொண்டிருப்பதை நாவல் காட்சிப்படுத்துகிறது. முள்வேலிக் கம்பிகளுக்குப் பின் உறைந்திருக்கும் பல்லாயிரம் கண்களில் இருந்து தெறித்து விழக் காத்திருக்கும் வார்த்தைகளாலேயே இனியான தமிழ்க் கதைகளை எவராலும் எழுதிட முடியும்.

நேர்கோட்டினில் கதைப் பிரதியை எழுதிய சயந்தனின் கைமீறிப் போன வார்த்தைகளை கோர்த்துத் தந்தவள் இந்திமரக்காரிதான். இந்திமரக்காரியின் சொற்கள் யாவும் முள்ளிவாய்க்காலின் பெரும் கதைகளைச் சுமந்து செல்லும் மாய உடல்களை அணங்குகளே தேர்ந்தன. அணங்கு தேர்ந்தெடுத்த சயந்தன் எனும் மாயாவி ஆடித் தீர்த்த பேயாட்டமே ஆதிரை என்றறிக வாசகா. ஆறாத வடுவாக தேங்கி விட்ட வரலாற்றைக் கீறித்தந்த சயந்தன் ஆதிரைக்குள் இறங்கினானா என்று பிரித்தறிய முதுடியாத பகுதிகள் நாவலின் கடைசி இருநூறு பக்கங்கள். ஆதிரையைக் கையிலெடுத்த வாசகன் அவனவன் தோதிற்கு கதைப் பிரதியை அழைத்துக் கொள்ளும் விசித்திரமும் கூட நடந்தேறுகிறது தமிழ்வாசகப் புலத்தில். ஆதிரையின் கதைப் பாடலை எந்தத் தடத்திலும் கண்டறிந்திட சாத்தியமே அற்ற வெண் பேராளிகளின் போர்ச் சங்கநாதம் என்கிறான் மற்றவன். தமிழ்நிலத்தின் தனித்த மகாகாவியம் என்கிறான் பிறிதொருவன். இவை மட்டும் தான் எனச் சொல்வதற்கும் இல்லை. இவையில்லை என ஒதுக்கித் தள்ளிடவும் வழியில்லை. ஆதிரைகளின் கதைமொழியை அவரவர் திசைவழியில் எடுத்திட ஒருநூறு திறப்புகளைக் கொண்டிருக்கிறது. அவையாவற்றையும் தனக்குள்ளே பதுக்கி வைத்திருக்கிறாள் ஆதிரை. தோட்டக் காட்டான் என நகைத்து புறமொதுக்கப்பட்டவன் விடுதலைப் போராளியான வம்ச சரித்திரம் இது. கலையவே மறுத்து இறுகியிருந்த வெள்ளாள மோஸ்தரய்யும், யாழ்ப்பாண மேதைமையையும் கலைத்து அடுக்கிய கலாச்சார பதிவிது. யுத்தச் சத்தங்களையே தங்களுடைய வாழ்வின் தினசரி பாடலாக வரித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் திரளின் வரலாற்றுப் புனைவாக்கமிது. கதைகளை கதைக்குள் அடுக்கி, அடுக்கி மடக்கு விசிறியாக்கி சயந்தன் விரிக்கிற காகித வெளிகளில் ரத்தக் கவிச்சியடிக்கிறது. விசிறிகளின் மடிப்புகளை நீவிடும் மந்திரம் கற்ற வாசகன் இறக்கிட முடியாத ஆதிரையை சுமந்தலைகிறான். இனியான ஈழத்தின் கதைப் பாடல் ஆதிரையென்று அறிந்த பிறகு யாவரும் தான் அவளைச் சுமக்க வேண்டும். ஆதிரையை சுமந்தலையும் வாசக சாபத்தை வரமாக பெற்றுத் தொடர்க வாசகா!

By

Read More

சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு ஐந்து சதப் பெறுமதியைக் கூட அளிக்க முடியவில்லை. நாளைக்கே இதைச் சீமான் சொன்னாலும் இதே நிலையிலேயே தொடர்வேன். ஏனெனில் இதுவும் அதுவும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நிற்க,

ஜெயமோகனது இந்த இனப்படுகொலை தொடர்பான கூற்று, மற்றும் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் மனிதாபிமானத்தோடுதான் நடந்துகொண்டார்கள், மற்றதெல்லாம் புலிகளின் பிரச்சார நுட்பம் என ஒரு ஜெனரல் சொன்னார் என்ற முன்னைய கருத்து, ஆயுத விடுதலைப் போருக்கு எதிரான அவரது கருத்து நிலை என அனைத்துமே மையம் கொண்ட மனநிலையானது ஓர் இந்தியப் பெரும் தேசிய மனநிலையாகும். இந்தியா என்கின்ற ஒற்றை அரசின் (state) ஒருமைப்பாட்டையும், உறுதித்தன்மையையும் கட்டுக்குலையாமல் பேணுவதற்கு, இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் மனங்களைத் தொடர்ந்தும் அதே மாயையில் வைத்திருப்பதற்கு, ஈழம் பற்றி, காஷ்மீர் பற்றியெல்லாம் இப்படியான கருத்துக்களை உருவாக்குவதும், பரப்புவதும் அவர்களுக்கு நிபந்தனையாகிறது. அதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்து வருகிறார்கள். அது ஜெயமோகன் மட்டுமல்ல, இலக்கியம், எழுத்தென்ற இந்தப் பரப்பிலேயே வேறும் பலரும் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அவர்களோடு நம்மிற் பலர் வலு கூலாகக் குலாவுகிறார்கள் என்பதும் உண்மை.

0 0 0

தீபன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஒரு கேள்விக்கு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஷோபா சக்தி அளித்த பதில், சுவிற்சர்லாந்துப் பத்திரிகையொன்றில் கவனப்படுத்தப்பட்டு வெளியாகியிருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் இளவேனிலோடு உரையாடியிருக்கிறேன். ஒரு சர்வதேச மேடையை அழுத்தமான ஒரு பதிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நான் சொன்னபோது இதெல்லாம் நம்மூருக்குத் தெரிய வராதா என்று அவர் கேட்டிருந்தார். நான் சிரித்துக்கொண்டே, உங்களூர் பத்திரிகையாளர்களுக்கு அவரிடம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தவிர கேட்பதற்கு வேறு எதுவும் தெரியாதே… என்று சொல்லியிருந்தேன்.

இனப்படுகொலையைப் பற்றிய ஐநா வரையறைகள், சர்வதேச சட்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படுகொலையைச் சந்தித்த அந்த இனத்தின் குரலே முதன்மையானதும் முழுமையானதும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஈழத் தமிழர்கள் பட்ட வாதையின் குரல்தான் இனப்படுகொலைக்கான உச்ச ஆதாரம். மற்றெவரைப் பற்றியும் நானெதற்கு அலட்டிக்கொள்ள வேண்டும்…?

0 0 0

ஜெயமோகன் ஆதிரையைச் சிலாகிப்பதால் எனக்கும் அவருக்குமிடையில் ஓர் உறவு உள்ளோடிக்கொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள் போலுள்ளது. அது அவர்களுடைய தவறுமல்ல, தமிழ் இலக்கியச் சூழல் பெருமளவுக்கு இவ்வாறு “உள்ளாலதான்” ஓடுகிறது.

ஆயினும் அவர்கள் நினைப்பதைப்போல நமக்கிடையில் அப்படியெதுவும் இல்லை. நான் இதுவரையில் அவருடைய 3 நாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன். (ஏழாம் உலகம் – மிகப் பிடித்த நாவல், உலோகம் – குப்பை, வெள்ளையானை – எனது சிற்றறிவுக்கு மொக்கை) ..

ஜெயமோகன் மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு இலக்கிய பீடம், ஜாம்பவான், ஆசான், குரு, ஆதர்சம்.. இப்படியெவரோடும் எனக்கு ஒட்டுமில்லை. உறவுமில்லை. உட்பெட்டிச் செய்தியில்லை. தொலைபேசி உரையாடலில்லை. நேரிற் சந்திப்பும் இல்லை. இதிலொரு திமிரோடுகிறது என நினைத்தாலும் பரவாயில்லை, எனக்கொரு முன்னுரை, பின்னுரை, அணிந்துரை என்ற பெயரில் உங்களது அங்கீகாரத்தையும் வழங்குங்கள் என நான் யாரிடத்திலும் இதுவரை கை நீட்டியதில்லை.

ஓர் ஈழத்து எழுத்தாளளிள் ஆகக்கூடிய இலக்கு தமிழகத்தின் அங்கீகாரம்தானா என்ற கேள்வி சில காலமாகவே என்னைத் தொடர்கிறது. ஈழத்திலிருந்து கிடைக்கும் பாராட்டைவிட, தமிழகத்திலிருந்து கிடைத்தால் ஏன் வானுக்கும் பூமிக்கும் இடையில் துள்ளிக் குதிக்கின்றோம்.. எந்தப் புள்ளியில் அது உயர்ந்து நிற்கிறது.. அதில் செல்வாக்குச் செலுத்துவது நமக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையா…
இன்னொரு வகையில் ஈழப் படைப்புக்களுக்கான தமிழக அங்கீகாரம் பற்றி எனக்கு ஒரு சந்தேகமிருக்கிறது. ஈழத்தமிழர்கள் ஓர் அடிபட்ட இனம், பாவப்பட்ட இனம், தோல்வியுற்ற இனம் என்ற பரிதாபத்தை அவர்களின் படைப்புக்களில் ஓர் ஆறுதலாகத் தடவி “பாவப்பட்டதுகள், சந்தோசப்படட்டும்” எனத் தரப்படுகின்ற ஓர் இலக்கியச் சலுகையா அது.. எனின் அவ்வாறான ஒரு சலுகையை ஆதிரை தவிர்த்துக்கொள்ளவே விரும்புகிறது..

0 0 0
எழுத்து எனக்குத் தவமல்ல. எழுத்து எனக்கு வாழ்வுமல்ல. அதற்கும் வெளியே வாழ்வு காதலும் களிப்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால் எழுத்தை எனக்குத் தவிப்பு என்று சொல்லலாம். அது என் தனிப்பட்ட தவிப்புத்தான். தொண்டைக்குள் முட்போல சிக்கிக்கொண்டிருக்கிற தவிப்பு. ஒவ்வொரு முறையும் அடங்கிய பிறகு நான் விரைவில் மீண்டுவிடுவேன். மற்றும்படி என் எழுத்தால், இனத்திற்கு விடுதலை வாங்கித் தருவேன் என எனக்குச் சீன் போடத்தெரியாமலிருக்கிறது. சமூகம் பெரிய மனது பண்ணி அதை மன்னிக்க வேண்டும். நான் ஓர் இலக்கியச் செயற்பாட்டாளனும் அல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் செயற்படுவேனாயின் ஈழம்தான் எனது செயற்படுகளமாயிருக்கும்.

0 0 0
கடைசியாக
எனக்கு ஒரு விடயம் புரியாமலிருக்கிறது. ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்கிறார். ஆம் அது உள்நோக்கம் கொண்ட கருத்துத்தான். ஆனால் அதே இனப்படுகொலையின் பங்காளியெனப்படுகின்ற திமுகவின் பிரச்சார பீரங்கியாயிருந்த மனுஸ்யபுத்திரனின் முன்னும் பின்னும் நம் ஓரிரு ஈழப் பிள்ளைகள் குலாவித் திரிகிறார்களே இது எங்ஙனம் சாத்தியம்.. ? என்ன சமன்பாடு..

By

Read More

× Close