ஆறா வடு – அருண்மொழி வர்மன்

நண்பர் சயந்தனின் ஆறாவடு நாவலை ஒரே நாவலில் வாசித்து முடித்தேன்.  எனக்குத் தெரிந்து எமது தலைமுறையச் சேர்ந்த ஈழத்தைச் சேர்ந்தவரிடம் இருந்து வந்திருக்கும் முதலாவது நாவல்.  நான் வாழ்ந்த சூழல், நாட்களை மீளவும் நினைவுக்குக் கொண்டுவந்திருக்கின்ற நாவல்.  எனக்கு மிகவும் பிடித்தும் இருக்கின்றது, வாழ்த்துக்கள்

புத்தகத்தின் பக்கங்கள் சற்றே பளுப்பேறிய வெள்ளையாக இருக்கின்றது, எழுத்துக்கள் கறுப்பில் இருக்கின்றன, அட்டை நீல நிறத்தில் இருக்கின்றது, நாவலின் ஓரிடத்தில் மஞ்சள் சிவப்பு நிற முக்கோண வடிவக் கொடிகள் பற்றிக் கூறப்படுகின்றது.  இதை கறுப்பு, வெள்ளை, சாம்பல் என்று எப்படி வகைப்படுத்துகின்றனரோ தெரியாது ;((

By

Read More

ஆறா வடு – ரமேஸ் ஸ்டீபன்

சயந்தனின் “ஆறாவடு” நாவல் விமர்சனக் கூட்டம் இன்று நடைபெற்றது. முரளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள். (மண்டபம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மண்டபம் இல்லை.) என்.மகாலிங்கம் தலமைதாங்கி இருந்தார். மயூ மனோ, ராபேஃல் மற்றும் இப் புத்தகம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் நிலாந்தனின் கட்டுரையை முரளி வாசித்திருந்தார்.

87இல் தொடங்கி 2003 வரையான காலப் பகுதிகளுக்கிடையே இந்நாவலின் கதை நகர்ந்து செல்லிறது. விமர்சனம் செய்தவர்களும், பின்னர் கருத்துகள் வழங்கியவர்களும் இந்நாவல் தொடர்பாக தமது பல்வேறு பட்ட அபிப்பிராங்களை வழங்கியிருந்தார்கள். இந்நிகழ்விற்கு வந்தவர்களில் கணிசமானவர்கள் இந்நாவலை ஏற்கனவே வாசித்திருந்தது இந்நிகழ்விற்கு இன்னும் வசதியாக இருந்தது.

இலங்கையில் இந்திய இராணுவத்தின் வருகையும், அவர்களுக்கும் புலிகளுக்குமிடையிலான சண்டை, இந்திய இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கிய தமிழ் குழுக்கள், அவர்களுக்கிடையில் அகப்பட்டிருக்கும் தமிழ் மக்கள், அவர்களின் வாழ்வு, துயர், இடப்பெயர்வு, புலிகளின் இராணுவ, அரசியல் நகர்வுகள், காதல், வெளிநாட்டுப் பயணம் என்று நகர்ந்து செல்லும் நாவல், அண்மையில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான படைப்பு.

இக்கூட்டத்தில் விமர்சனம் செய்த ராபேஃல்லின், இந்நாவல் குறித்த கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன். நான் நாவல்களை அதிகம் வாசித்து சிலாகிப்பவன் அல்ல. ஆனால் இந்நாவல் நான் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்வங்களையும், இச்சம்பவங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் என்னையும், என்போன்றவர்களையும் பாதித்திருந்ததனால் இந்நாவலை வாசிக்கத் துாண்டியது. அந்த வகையில் அக்காலப் பகுதியில் பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்ற பல சம்பவங்களை ஒரு திரட்டாக தந்திருக்கும் ஆசிரியரின் ஆளுமையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரம் இந்நாவலில் வரும் சம்பவங்கள் என்னை மிக ஆழமான உணர்விற்கு இட்டுச்செல்ல வில்லை என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலங்களில் எனது கிராமத்தில் இருந்த போது மாலை ஆறு மணி இருட்டிக் கொண்டு வரும்போது ஒரு விதமாக நெஞ்சு பட படக்கத் தொடங்கி விடும். எதிர்பாரா நேரமெல்லாம் பெருமூ்ச்சு தன்பாட்டில் வந்துபோகும். நாய்களின் ஓலம் வயிற்றைக் குமையும். இப்படியே இந்த உணர்வு அதிகரித்துச் செல்லும். நடுச்சாமத்தில், சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியில் போகப் பயம்.  இந்திய சிப்பாய்களும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் குழுக்களும் வேலி ஓரத்தில் படுத்திருப்பது போன்று தோன்றும், இதனால் யன்னல் வழியாக சிறு நீர் கழிக்க வேண்டி வரும். அந்த நேரம் பூவரசம் சருகுகளின் மேல் சிறுநீர் விழவும் அது எழுப்பும் சத்தத்தினால் சடுதியாக சிறுநீரை நிறுத்தும் போது ஏற்படும் வலி சொல்லி மாளாது.

இதே போன்று இந்திய இராணுவம் தங்கி இருந்த கட்டிடம் அவர்கள் அவ் இடத்தை விட்டுச் சென்று ஆறு மாதங்கள் ஆகியும் அவர்களோடு இருந்த ஒருவித எண்ணை மணம் அந்த இடத்தை விட்டு அகலாமல் இருப்பதும், அந்த மணத்தை சுவாசிக்கும் போதெல்லாம் அவர்கள் பற்றிய எண்ண ஓட்டங்களும் ஒருவித அச்ச உணர்வும் ஏற்படுவதை இந்நாவல் மூலமாக இதுபோன்ற சம்பவங்களை வாசிக்கும் போது ஏற்படவில்லை என்பதே எனது கருத்து. இப்படி இருக்க வேண்டுமா? அல்லது இருக்கக் கூடாதா என்ற வாதங்களுக்கு அப்பால் எனது உணர்வினையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அதே போல் இந்நாவலில் வரும் குண்டு பாப்பா சம்பவமும் அதீத கற்பனையாகவே எனக்குப் படுகிறது. இந்திய இராணுவத்தின் கொடுமை தாங்க முடியாதவை, ஆனால் சாதாரண பின்னணி கொண்ட பெண் அந்தச் சூழலில் வீர வசனம் பேசி குண்டை வெடிக்க வைப்பது யதார்த்தம் அற்றதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இப்படி இந்நாவல் பற்றி பல விடையங்களை பேசிக்கொண்டே போகலாம். எது எவ்வாறாகிலும் இந்நாவலின் முக்கியத்துவம் தவிர்க் முடியாதவையே

By

Read More

ஆறா வடு – பிராகாஷ் வெங்கடேசன்

சயந்தனின் ஆறாவடு படித்து முடித்தேன். பொதுவாக சயந்தனின் எழுத்துகள் எந்தவித கோட்பாட்டு கட்டமைப்பை மனதில் கொண்டும் எழுதப்படுபவை இல்லை என்று நம்புகிறேன். நிகழ்வுகள் மனிதனை விளிம்புக்கு தள்ளும்போது சிந்திப்பதும், சிந்தனையின் எல்லையாக தினப்படி வாழ்க்கை அமைவதும் என சயந்தன் செய்வது ஒரு bottom-up approach. யமுனா எத்ரிஸ் கிழவனின் அத்தியாயத்தை சுட்டிக்காட்டி அதில் நாவல் சர்வதேச தளத்துக்கு செல்வதாக எழுதியிருந்தார். என்னளவில் ஈழ சூழலை நுணுக்கமாக பதிவு செய்த அனைத்து அத்தியாயங்களிலும் நாவல் சர்வதேச தளத்திலும் சேர்ந்தே பயணிக்கிறது. இந்திய ராணுவத்தின் வக்கிரங்களை படிக்கும் ஒரு காஷ்மீறியோ, வடகிழக்கை சேர்ந்தவரோ அல்லது காங்கோவில் இருப்பவரோ அல்லது ராணுவ கண்காணிப்பில் இருந்த எந்த ஒரு சமூகத்தினராலும் இதை உள்வாங்கிக்கொள்ள முடியும், நிலாமதி உலகத்தில் காலம் காலமாக நடக்கும் போர் சூழலில் சிதைக்கப்படும் பெண்களின் குறியீடு.

பகைமறுப்பு/ நல்லிணக்கம் போன்றவைக்கு தீவிர அரசியல் சரித்தன்மை கொண்ட உரையாடல் தான் வழிவகுக்கும் என்பது ஒரு மித்தாக எனக்குப்படுகிறது . எல்லா shacklesஐயும் உடைக்கக shared obscenity with solidarity (“தமிழர்கள் துப்பைக்கியையும் சாமானையும்” இடம், இந்த சூழலில் சொலிடாரிட்டிக்கு வழியில்லை என்றாலும் ) கூட வழிவகுக்கலாம், தீவிர அரசியல் சரித்தன்மைகளைக்கொண்டு எதை அடைய நினைக்கிறோமோ அதற்க்கெதிராகவே விளைவுகள் அமையலாம். கதாபாத்திரங்களில் எல்லா நெகிழ்ச்சியையும் கொடுத்து விட்டு ஆனால் முழு புனைவிலும் சின்ன இழையாக இருமையை கட்டமைத்து விடும் ஆபத்தை கொண்டது omniscient narration. The novel has been largely pluralistic in character, in all sense.அதை சயந்தன் கடந்து வந்திருக்கிறார். பேரினவாத அநீதிக்கெதிராக ஆயுதங்களை மக்கள் ஏந்தும்போது அவர்களை பெடியங்கள் என்று கோழி குஞ்சாக பாதுகாத சனம் புலிகளே ஒரு அதிகார மையம் ஆகும்போது அவர்களின் சட்டமும், தண்டனைகளும் துயரத்தையே தருகின்றன. இந்த உட்சூழலே மாற்று கருத்துக்கு உந்துதலாகவும் காரணியாகவும் அமைகிறது, இயல்பாகவே. தேவிபாலாவின் கொலையும், அகிலாவுடனான தன் புதுவாழ்க்கையின் ஆசையுமே அமுதனை இயக்கத்தை நோக்கியான கேள்விகளை எழுப்பச்செய்கின்றன, அவரின் சிந்தனையின் எல்லையும் இயல்பாகவே, நேரு ஐயாவாக அமைகிறார்.

போர் சித்திரம் எனக்கு full metal jacket இன் கடைசி காட்சிகளை நினைவுபடுத்தியது. இது போக சாதி, சடங்குகள், இயக்கத்துக்கும்-சாதிக்குமான உறவு, தனி மனித சுதந்திரம், சிங்களவர்களையும் சேர்த்தே அலைக்கழிக்கும் போர் சூழல் என பல தளங்களை தொட்டுச்செல்கிறது ஆறாவடு. தீவிர அரசியல் நிலைப்பாடுகளை உரக்க சொல்லும் பிரதிகளின் மத்தியில், சமூகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத/ சன்னமாக ஒலிக்கும் போரினால் கிழிந்து ரணமான மக்களின் குரல்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்த நாவல் .

By

Read More

ஆறாவடு – ரவீந்திரன்.ப சுவிஸ்

//கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித் தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக் கிட்டத்தில் பார்த்தார்//

//எனக்கும் இயக்கத்தில் கோபம் கோபமாய் வந்தது. பிறகு நான்தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது. பிறகு சனங்களில் கோபம் வந்தது//

//பின்னால் நின்ற சனங்களுக்கு இந்திய இராணுவமா பிரபாகரனா என்பதெல்லாம் கேட்கவில்லை. அவர்கள் தம் பாட்டுக்கு ஓர் ஒழுங்கில் வாழ்க என்றும் ஒழிக என்றும் கத்திக்கொண்டு வந்தார்கள். இதனால் சிலவேளைகளில் பிரபாகரன் வாழவும் இந்தியா ஒழியவும் வேண்டியேற்பட்டது.//

//படிப்பதற்காய் போர் செய்வோம் என்று பிரச்சாரங்களில் சொன்னார்கள். முடிவில் பத்துப் பன்னிரண்டு பேரென்று ஒரேயடியாக கிளம்பி இயக்கத்துக்குப் போனார்கள். வீட்டுக்குப் போய் பள்ளிக்கூட யூனிபோர்மை கழட்டிவைத்துவிட்டு இயக்கத்துக்குப் போகும்படி பள்ளி அதிபர்கள் அழாக் குறையாக ப்ரேயர்களில் அறிவித்தார்கள்.//

//உங்களுக்கு ஆயிரம் வேலையள் இருக்கும். ஆமியைச் சுடுறது மட்டுமல்லாமல் சும்மா நிண்டவன் வந்தவன் போனவனை எல்லாம் சுடவேண்டியிருக்கும்…//

//எளிய பறைச் சாதி நீ. என்னைத் தள்ளிவிடுறியோ அகதி நாயே… இனிச் சரிவராது. ஈனப் பிறப்புகளுக்கு ஒண்டு சொல்லிறன்… இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ளை எல்லா எளிய நாய்களும் வெளியாலை போயிடணும். ஒண்டும் இங்கை தங்கேலாது…// கோயிற்காரன்.

ஆறாவடு நாவலில் நான் அலைக்கழிக்கபட்ட இடங்கள் இப்படிப் பல. புதியதோர் உலகம், கொரில்லா… என ஈழப் போராட்ட இயக்கங்களுக்குள் பயணிக்க வைக்கும் நாவல்கள் வரிசையில் இப்போ சயந்தனின் ஆறாவடு வந்திருக்கிறது. பேசப்படவேண்டிய நாவலாக இதுவும் தன் இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கதைசொல்லி தன்னை ஒரு சுயவிசாரணை செய்யும் புள்ளிகளை ஆங்காங்கே வரைந்து செல்கிறார். எந்தத் துதிபாடலுமின்றி, ஆர்ப்பாட்டமுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. முரண்களை அருகருகே வைத்து வாசகனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும் போக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

யாழ் மேலாதிக்கத்தின் சாதிய வெறி உறுமும் இடங்களையும், பெண்கள் மீதான ஆண்வக்கிர வீணிகள் ஒழுகும் இடங்களையும் நாவல் காட்டிச் செல்கிறது. “முன்னாள் செருப்புக் கள்ளனும் இந்நாள் தேசத்துரோகியும்” என்ற வார்த்தைகளுக்கிடையில் இயக்கத் தண்டனைகள், இந்திய இராணுவத்துடன் சேர்ந்து செயற்பட்ட இயக்கங்களின் நிர்ப்பந்தங்கள், பழிவாங்கல், தற்காப்பு… என்றெல்லாம் வெளிகளை காட்டிச் செல்வதன்மூலம், “துரோகி” போன்ற ஒற்றைச் சொல்லாடலை தகர்த்துச் செல்கிறது நாவல்.

இந்திய இராணுவ காலம், ரணில் உடனான சமாதான காலம் என்பவற்றினூடாக வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். மொழி பெயர்ப்பாளராக இருந்த நேரு மாஸ்டர் மூலம் இயக்கம் மீதான விமர்சனங்கள் முளைத்த இடங்கள் எளிய பதில்களால் எதிர்கொள்ளப்படுவதை நயமாகச் சொல்கிறார் கதைசொல்லி. மேலிடத்திலிருந்து ஊற்றப்படும் நியாயப்படுத்தல்களை கைமண்டையில் ஏந்தி தாகமும் தீர்த்து, சிந்தவும் விடும் பதில்கள் அவை.

“பெட்டைச் சேட்டை” விடுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையின் சுவாரசியத்தின் பின்னால் உள்ள கொடுமை, தனது பிள்ளையின் பிறந்தநாளன்று பிள்ளையை முதுகில் சவாரி ஏற்றி விளையாடிக்கொண்டிருந்தவனை கொன்ற “துரோகி ஒழிப்பு” கொடுமை, இந்திய இராணுவத்தோடு சேர்ந்தபின் அல்லது சேர்க்கப்பட்டபின் அந்த இயக்ககரார்களின் அட்டகாசம், பின் இந்திய இராணுவத்தால் கைவிடப்பட்ட அவர்களின்மீது பாய்ந்த “துரோகி ஒழிப்பு”… என்றெல்லாம் நாவல் அழைத்துச் செல்கிறது.

சிங்கள தமிழ் அகதிகளாக இத்தாலிய கடற்பயணத்தின் போதான மனிதாபிமான உறவுமுறைகள் கவனமாக சொல்லப்பட்டிருக்கின்றன. கடற் பயணத்தை அதன் ஈரத்தோடும் இருட்குவியலோடும் அலைக்கழிப்போடும் அந்தப் படகு மனிதர்களின் மனவெளிகளாக வரைந்து செல்கிறது.

இயக்கத்துக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள் அல்லது அதன் நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட பெற்றோர்களின் துயரங்களை நாவலில் காணவில்லை. புலிகளால் துயருற்ற முஸ்லிம்களின் குரலையும் காணவில்லை. நாவலில் எல்லாவற்றையும் உள்ளடக்குதல் சாத்தியமா என்ற கேள்வி முக்கியமானது என்றபோதும், போராட்ட யுத்த அரசியல் பரப்புக்குள் கதைசொல்லி நிற்கும்போது மேற்கூறிய விடுபடல்கள் புறக்கணிக்க முடியாதது.

கதைசொல்லி தன்னை மிதப்பாகக் காட்டும் எந்த உத்தியையும் பாவிக்கவில்லை. மாறாக தன்னையும் சம்பவங்களையும் வாசகனின் விசாரணைக்கு திறந்துவிடுகிறார். முரண்களை அருகருகே வைத்துச் செல்வதன்மூலம் வாசகனிடம் பிரதியை விட்டுச் செல்கிறார். இலக்கிய உலகில் இதுவரை அறியப்படாமல் இருந்த சயந்தனின் முதல் நாவல் அவரை நல்லதோர் படைப்பாளியாக அடையாளம் காட்டியுள்ளது

By

Read More

ஆறா வடு – ராஜசுந்தரராஜன்

“ஆறா வடு” வாசிப்பதற்கு முந்தி நான் சயந்தனை வாசித்ததில்லை. “ஆறா வடு” வாசித்த பிறகு இரண்டு நாட்களுக்கு வேறு எதையும் வாசிக்க முடியாமல் இருந்தேன்.

ஹிந்துகள் அடிமைகளாக இருப்பதற்கே தகுதியுள்ளவர்கள் என்று எனக்கேனோ சிறு வயது முதலே ஓர் எண்ணம் வடுக்கொண்டுவிட்டது. அவர்களுக்குள் ஒற்றுமைக்கான ஒரு பொதுக் காரணி (common factor) இல்லையென்று படுகிறது. இந்தியாவில் இஸ்லாமிய, கிருஸ்துவ மேலாதிக்கமும் இலங்கையில் பௌத்தக் கையோங்கலும் அது காரணமாகத்தான் நேர்ந்தது/நேர்கிறது என்னும் நினைப்பிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை.

“ஆறா வடு” நாவலை வாசித்து வருகையில் இது எனக்கு மேலும் உறுதிப்பட்டது. சாதி, பெண்ணடிமைத்தனம், குழுப் பிரிவினை யுத்தம் என இப்படி ஹிந்துகள் எங்கிருந்தாலும் பிளவுண்டுதான் கிடக்கிறார்கள்.

//எளிய பறைச்சாதி நீ.. அகதி நாய்.. ஈனப் பிறப்பு// என்றெல்லாம் பேசிய கோவிற் கிழார், இயக்கத்தாரால் செருப்புத்தண்ணி குடிப்பிக்கப்பட்ட பிறகும், என்ன சொல்லுகிறார்? //”நான் இனி இந்தக் கோயிலுக்கு, சாகும் வரை வரமாட்டன். இந்தக் காளி கோயில் இனி இந்தக் கதிரவேலனுக்குச் சொந்தமில்லை..”// அதாவது, இனத்தாரை அரவணைக்க வேண்டும் என்கிற புத்தி வரவில்லை. உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிற கைகழுவல்தான் நடக்கிறது.

பிறகும் எளியவர்கள் ஓரொருவரும் போராடுகிறார்கள். நம்பி ஒப்புக்கொடுத்து ஏமாறுகிறார்கள்.

சிங்களர்களைப் பற்றி அவதூறு பேசாமலே சிங்களர்களுக்கும் சேர்த்து இனப்போர் அழிவுகளைப் பேசுகிறது இந் நாவல். //பண்டார இராணுவத்தில் இணைந்தான். மகாவம்சம் நீள்வதைப் பற்றி அவன் யோசித்திருக்கவில்லை. சம்பளத் தொகை மேலும் அதிகரிக்குமா என்பதாகவே அவன் நினைப்பு இருந்தது. அதிகாரிகள் ஒருபக்கத்தாலும் புலிகள் மறுபக்கத்தாலும் அவனை வதைத்தெடுத்தார்கள். எல்லாவற்றைப் பார்க்கிலும் கொடும் வதையாகக் கனவுகள் இருந்தன…. முதலாவது வாரம் ஓர் இரவில் அலறி எழுந்ததும் மூளையைப் போட்டுக் கசக்கினான். இரண்டாவது வாரம் இடைத்தரகர் மூலம் ஏஜன்ஸியை சந்திக்கக் கூடியதாகவிருந்தது. மூன்றாவது வாரம் முடிவதற்கு முன்பாக இத்தாலிக்கு வள்ளமேறினான்.//

தமிழினத்துக்கு மட்டுமல்ல உலகளவும் போராளிகளுக்கு நேரும் நிலையாமை இது என்று இந் நாவலில் கட்டைக்கால் வழியாக செயந்தன் உணர்த்தி இருப்பது இலக்கிய உச்சம்.

வாசித்தோம், சரி, …?

எரி நடுவில் விறைத்தெழும் பிணமாக உணர்கிறோம்.

By

Read More

× Close