நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது.
இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும் இதையும் செய்து தான் பார்த்து விடுவோமே என்ற ஒரு ஆர்வத்தில் இது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிப்பதிவுகள் இடையூறு இல்லாத, இரைச்சல் இல்லாத, வானொலித் தரத்தில் அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. அவ்வாறில்லாமல் வெறும் இரைச்சல்களோடும், விக்கி விக்கியும், ஸ்.. என்ற சத்தங்களோடும் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் அது தொடர்ந்து கேட்கின்ற ஆர்வத்தைக் கொடுக்காது என்று நாமறிவோம்.
இந்த உரையாடல் ஈழத்தின் போர்ச் சூழலில் வெளியான திரைப்படங்கள் குறித்துப் பேசுகின்றது. நமது இளைய நாட்களில், நாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழக சினிமா தடைக்கும், தணிக்கைக்கும் உட்பட்டிருந்த பொழுதுகளில் ஈழத்தில் இருந்து வெளியான திரைப்படங்கள் மீது எமக்கு இயல்பாகவே ஈடுபாடும் ஆர்வமும் இருந்தது. அது குறித்து பேசும் வசந்தன், சிநேகிதி, விஜெ சந்திரன், சயந்தன் இவர்களோடு மலைநாடானும் இணைந்து கொண்டிருக்கிறார். (சோமிதரன் கேரளாவில் படப்பிடிப்புக்களில் இருப்பதனால் அறுவராகி அறுவாராகாமல் தப்பித்தோம்;)
இந்த ஒலிப்பதிவு கடந்த சித்திரைப் பொங்கலுக்கு வர இருந்தது. ஆயினும் இன்று வரை அதன் தொகுப்பு வேலைகள் முடியாத படியால்.. இப்படி ஒன்றைச் செய்தோமென, பிலிம் காட்டவாவது ஒரு முன்னோட்டமாக சில பகுதிகளை வெளியிடுகிறோம். (சிநேகிதியின் உரையாடல் தெளிவின்மையாக இருப்பதனை சி.ம கலையகம் கவலையுடன் உணர்ந்து கொள்கிறது:(