தமிழ் ஈழ போராட்டத்தைப் போன்ற குழப்படி மிகுந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகில் எங்குமே காணக் கிடைக்காது. கொள்கை சாய்வுகளற்ற மூன்றாம் மனிதன் அதைப் புரிந்து கொள்ள தலைப்பட்டானானால் கிறுக்குப் பிடித்துப் போகும். என் பள்ளிக்காலத்தில் நான் நினைத்து இருந்தேன் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே பிரச்சினை. தமிழ் மக்கள் சார்பாக பிரபாகரன் தலைமையில் LTTE இருந்தது. பிறகு புலிகளுக்கும் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் சிக்கல் இருப்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு தமிழ் பேசும் இந்துக்கள் கிருஸ்தவர்களுக்கிடையே கூட LTTE யுடன் முரண்பட்ட வெவ்வேறு இயக்கங்கள் (PLOTE, TELO, EPRLF, EROS ) இருந்தன, ஒருவரை ஒருவர் துரோகிகள் என்றனர், அவர்களுக்குள் வெட்டிச் சாய்த்துக்கொண்டனர், என்பதையெல்லாம் அறிந்து கொண்ட போது “ச்சைக் ” கென்று இருந்தது. இவையல்லாமல் இந்திய ராணுவம் (IPKF) பிறகு பிரதான எதிரி இலங்கை ராணுவம். சிறிய நிலப்பரப்பில் இத்தனை ஆயுத இயக்கங்கள் ஒரே காலக் கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன என்றால், கேட்பவர் நமக்கே கிறுகிறுக்கிறதில்லையா! என் எதிரே நிற்பவன் நண்பனா எதிரியா, என்னைக் கொல்வானா இல்லை நான் முந்திக் கொள்ள வேண்டுமா என்று வாழ்நாளெல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்வதை கற்பனை செய்ய முடிகிறதா.
இறுதிப் போருக்குப் பின் அங்கிருந்து வெளிவரும் படைப்புகள் அந்தக் குழப்படியான காலக்கட்டத்தின் இருளை மெல்ல விலக்கம் செய்கின்றன. தாமதமாக என்றாலும் அந்த இருண்ட வரலாறு வெவ்வேறு பார்வைகளில் வெவ்வேறு பரிமாணங்களில் பதியப்பட வேண்டும். அவற்றில் சயந்தனின் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தன. வழமையான புலிகள் x இலங்கை ராணுவம் பரிமாணத்தில் அல்லாமல் தமிழீழ இயக்கங்களிடையே இருந்த முரண்பாடுகளையும் மோதல் போக்குகளையும் பிரதானமாகக் கொண்டு படைக்கப் பட்டிருக்கிறது அஷேரா.குருதிக்கறை படிந்த கடந்த காலத்தின் இருண்மை நிகழ்காலத்தையும் பின்தொடர்ந்து தொந்திரவு செய்கிற post war tantrum உடைய இயக்க மாந்தர்களின் கதை எனலாம் அஷேராவை.
வெறும் இயக்கங்களிடை உள்விவகாரங்களைக் குறித்த புற தகவல்களாக சுருங்கி விடாமல் அகம் சார்ந்து பல உணர்வுத் திறப்புகளைச் செய்து கொண்டே இருந்தது. குறிப்பாக அருள்குமரன் – அபர்ணா இடையே திரண்டு வரும் திருமணம் தாண்டிய உறவு கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதை affair உண்டு/இல்லை என்று எப்பக்கமும் உறுதியாக சொல்லி விடமுடிகிறது இல்லை. ஆண் – பெண் உறவுச் சிக்கல்கல் ஈழப்போரின் வரலாற்றை விடவும் பழமையானதுதானே. அதற்குரிய இடம் நாவலின் இரண்டாம் சாப்டரில் இருந்தே தொடங்கி விடுகிறது. பால்யம் முதல் தாம் வெறுக்கும் மனிதன் சரவணபவனைப்போல் தாமும் ஆகிவிட்டிருப்பதை சிக்கலான தருணம் ஒன்றில் அருள்குமரன் கண்டுகொள்கிற போதில் தம் அம்மையின் நியாயமும் அவனுக்கு விளங்கி இருக்கலாம். அது முன்னமே விளங்கித்தானோ என்னவோ அவன் அந்த உண்மையின் வெக்கையில் இருந்து விலகி விலகி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறான். “யார் என்ன சொன்னாலும் அம்மாவ பத்தி தப்பா நினைக்கக் கூடாது அப்பன்” எனும் தம் அம்மையின் வார்த்தைகளை அருள்குமரன் நினைவு கூறும்பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.
போர் அவலங்களுக்கு இணையாக தாய்மை _ காதல் _ காமம் என பெண்மாந்தர்கள் முக்கியத்துவம் பெற்று இடைப்படுகிறார்கள். அவர்கள்மேல்தான் நாவலே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. ஒரு நாள் அவந்தி அருள்குமரனிடம் சொல்கிறாள் “எல்லா ஆண்களுமே வாசல் கதவை தட்டித்தான் பார்ப்பார்களாம். வாசலில் வைத்தே கதைத்து அனுப்புவதா அல்லது உள்ளே அழைத்து கதிரையில் உட்கார வைப்பதா அல்லது அதற்கும் உள்ளேயா என்பது பெண் தீர்மானிப்பதுதானாம்”
திருச்சியில் இருந்தபோது இலங்கை அகதிகள் முகாமைத் தாண்டித்தான் எனது அறைக்கும் பணியிடத்திற்கும் சென்று வந்து கொண்டிருந்தேன். அதன் உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்படி பிழைக்கிறார்கள் என்பதும் தெரியாது. செய்தி தாள்களிலோ சேனல்களிலோ கூட முகாம் வாழக்கையைக் குறித்த எந்தப் பதிவும் நமக்கு அறிய கிடைப்பதில்லை. சிறிய பகுதி என்றாலும் கூட மண்டபம் அகதிகள் முகாமின் வாழக்கைப் பாடுகளை நுணுக்கமாக அஷேராவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முகாமிற்கு வரும் கியூ ப்ரான்ச் அதிகாரி அருள்குமரனை பார்த்து சொல்கிறார் “பிழைக்கப்போன இடத்தில பிழைப்பைப் பார்க்காமல் வீணாகச் சண்டை பிடித்து சாகிறீர்கள்”. இதை இந்திய அரசின் நிலைப்பாடாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆரம்பம் முதலே இந்த ஒற்றை வரியின் மேல்தான் தமது தமிழீழ கொள்கையை இந்தியா கட்டமைத்து கொண்டிருக்கிறது.
உண்மையைச் சொல்கிறேன் – அஷேரா என்கிற தலைப்பில் எனக்கு உவப்பில்லை (உம்மை யார் கேட்டது ) இச்சா என்கிற தலைப்பில் கூட எனக்கு உவப்பில்லாமல்தான் இருக்கிறது. ஆனால் நாவல் பிடித்து இருந்தது. மத்திய ஆசிய பகுதியின் பழமையான தாய் தெய்வமாம் அஷெரா. செவ்வியல் தன்மையை அடையவிருக்கிற நாவலுக்கு ஆறாவடு, ஆதிரையைப் போன்ற வடிவான தமிழ் பெயர் ஒன்றை வைத்திருக்கலாம் என்கிற மனக்குறை ஏற்பட்டுவிட்டது. நாவலின் கருவிற்கு முக்கியத்துவம் இல்லாத ஆனால் தவிர்க்க இயலாத ஒற்றுமை ஒன்றை கவனித்தேன். பிரதான பாத்திரங்கள் அனைத்தும் “அ ” வரிசையில் பெயரிடப்பட்டிருக்கின்றன – அருள்குமரன் , அற்புதம், அபர்ணா, ஆராதனா, அவந்தி, அரங்கன். சயந்தனுடைய நாவல்களும் அப்படியே – ஆறாவடு, ஆதிரை, அஷேரா. இந்த “அ” வில் என்னவோ இருக்கிறது.
அஷேரா… பெயரைக் கேட்டதும் ஏதோ சுவிட்சர்லாந்து பெண் தெய்வமோ? வரலாறு சம்பந்தப்பட்ட கதை என்றுதான் வாசிக்கத் தொடங்கினேன். அருள்குமரன்….எங்களில் ஒருவன்.. கூடவே 90களில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து இளைஞன்….நாவல் முழுவதும் அவனுடன் கூடவே பயணித்தேன்… அவன் அம்மா “ அப்பன் அம்மாவை பிழையாக நினைக்க கூடாதென்ற “ இடத்தில் நெஞ்சடைத்துப்போனேன்.
அமலி அக்கா… எரிச்சலை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்… உண்மைகள் கசப்பானவைதானே… என்னைப்பொறுத்தவரை ஒரு சிறுவனின் உணர்வுகளோடு விளையாடிய ……. அவ்வளவுதான்.
ஆராதனாக்களை எல்லா இளைஞர்களும் சந்திப்பதில்லை. சந்திப்பவரகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பேன்.
குமரனுடன் கூடவே இந்தியாக்கு பயணித்தேன். மண்டபம் முகாமின் சுயங்கள் மனதை வலிக்கச் செய்கின்றன். குமரன் அங்கிருந்து புறப்பட மனது சமாதானமானது. அவந்தி… கடைசியில் காலை வாரிட்டா… அபர்ணா ஆறுதலா இருந்தாலும் கடைசியில ..அடப்போம்மா…அற்புதத்தார்… அற்புதத்தார்தான். இதையெல்லாம் தவிர்த்து நகைச்சுவை அருமை… இன்னும் நினைத்து ரசித்துச் சிரிக்கிறேன்.
இது எங்களில் ஒருவனின் ஒருத்தியின் கதைதான். நிஜங்களை நிஜங்களாக காட்டியிருக்கிறீங்கள். ஆனாலும் ஆனாலும் எங்கோ ஏதோ என்னை மௌனியாக்குகிறது… பிணைக்கப்பட்டிருக்கும் என் கைகளை உயர்த்தி தட்ட முடியவில்லை.
உங்களின் முடிவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. நான் கற்பனையில் குமரனுக்கு விசா வாங்கிக் கொடுத்தேன்.. பின்ப ஆராதனாவை sponser செய்து சந்தோஷமாக வாழ வைத்தேன்… வாழ்ந்திட்டுப் போகட்டுமே… பாவம் குமரன் எவ்வளவு கஷ்டப்பட்டான்.
ஒரு சாதாரணப் பெண்ணின் மனநிலையோடு இதை எழுதுகிறேன். புத்தகங்களை நேசிக்கும் ஒருத்தியின் கைப்பிரதி இது.எங்களின் வாழ்க்கை இவ்வளவுதானே…
மனசார நன்றியுடன் பாராட்டுகிறேன். இந்தப்பதிவுகள் காலம் சென்றும் அடுத்த தலைமுறைக்கும் நிஜங்களை கடத்தும். என் குழந்தைகளுக்காக பத்திரப்படுத்திய புத்தகங்களில் ஒன்றானது அஷேரா…
ஒன்று கேட்கட்டுமா? யாழ்ப்பாணத்து பெடியள் இவ்வளவு கெட்ட வார்த்தை பேசுவார்களா? என்னைச்சேர்ந்தவர்கள் என் முன் பேசி சத்தியமாக கேட்டதே இல்லை. வயதானவர்கள்தான் பேசுவார்கள் என்று நினைத்திருந்தேன்…அதுதான் ஒரு நெருடல்…நன்றி
என்னுடைய ஆறாவடு, ஆதிரை நாவல்களும் இதுவரை தொகுக்கப்படாத ஏழு சிறுகதைகளை உள்ளடக்கிய இறுதி வணக்கம் என்ற கதைத் தொகுப்பும் இப்பொழுது அமேஸான் கின்டிலில் கிடைக்கின்றது. வாசிப்பு அனுபவத்தை கின்டிலில் கொள்வோர் பயன்படுத்தலாம்.
சாதியத்தை வெறுமனே வர்க்கப் பார்வையற்று அணுகிவிட முடியாது. நிலத்தின் மீதான அதிகாரம் சாதியத்தை தக்கவைக்கும் இன்னொரு விடயமாகும். புலிகள் குடிமைத் தொழிலை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலத்திற்குச் சமாந்தரமாக சாதிய அசமத்துவத்தின் வேர் சொத்துடைமையுடன் தொடர்புடையது என்ற கோணத்தில் ஆதாரம் சஞ்சிகையில் 1992 ஜனவரி, மார்ச் இதழ்களில் தொடங்கப்படட உரையாடல் இது.
கோழி வளர்ப்பு தனியொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலல்ல. விவசாயமும் அப்படியே. எந்தச் சாதியும் விவசாயம் செய்யலாம். கால்நடை வளர்ப்பும் சாதிக்கென்று வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எந்தச் சாதியும் கால்நடை வளர்க்கலாம். ஆனால் அந்தோ பரிதாபம். பனையுடன் தொடர்புபட்ட பிரதான தொழில்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அத் தொழிலும் அச்சாதியும் குறைந்த சமூக அந்தஸ்த்து உள்ளதாக கருதவும் படுகிறது. இதுதான் இங்குள்ள பிரச்சனையாகும்.
இச் சாதிக் காரணி எவ்விதம் தோற்றம் பெற்றது. இன்று எவ்விதம் செயல்படுகிறது. சாதியின் கோரப்பிடியில் இருந்து பனை என்ற இந்தக் கற்பகதருவை விடுவிக்க அவசியமான சமூக பொருளாதார நிலமைகள் என்ன என்பவற்றை தொடர்வோம்.
ஐரோப்பிய வருகையின் போதான யாழ்ப்பாண சாதி அமைப்பு 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை ஆண்டான்களையும் அடிமைகளையும் கொண்டாய் இருந்தது. ஆண்டான்களாக (அடிமைகளின் சொந்தக்காரர்களாக) இருந்த மேற்தட்டினர் உயர் சாதியினர் எனக் கருதப்பட்டவர்காளக இருந்தார்கள்.
அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது
முன்னைய அடிமை முறையினை ஆராய்ந்த சட்ட அறிஞர்கள் இது றோமானிய அடிமை முறையுடன் ஒப்பிடக் கூடியதாய் இருந்தது என்று கூறியுள்ளார்கள்.
இந்தியாவில் இருந்து அடிமைகள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட அடிமைகளாகவே கருதப்பட்டார்கள். அடிமைகளும் கால்நடைகளும் நிலத்துடன் தொடர்புபட்ட ஒரு சொத்தாகவே கருதப்பட்டனர்.
அடிமைகளிலும் விட ஒரு சிறு அளவு சுதந்திரமுடைய குடிமைகளும் இருந்தார்கள். இந்த அடிமை குடிமைகளின் வழித்தோன்றல்களே பின்னைய ஒடுக்கப்பட்ட சாதியினராகும்.
முன்னைய ஆண்டான்களின் வழித்தோன்றல்களே இன்று ‘உயர்சாதியினர்’ என்று கருதப்படும் வெள்ளாளராகும்.
இந்த ‘உயர்சாதியினர்’ ஆண்டான்களாகவும் (அடிமைச் சொந்தக்காரர்களாகவும்) அதே நேரத்தில் நில உடமையாளர்களாகவும் ‘நயினார்’ என்றும் ‘கமக்காரர்’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலஉடமைமுறை றயத்வாரி முறையை ஒத்ததாகும். ஐந்தோ பத்தோ வீதமானவர்களுக்கு எண்பதோ தொன்னூறோ வீதமான நிலம் சொந்தமாய் இருப்பது ஜமின்தாரிய முறை எனப்படும். அவ்விதமான ஜமின்தார்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மாறாக நாற்பதோ ஐம்பதோ வீதமானவர்களுக்கு சுமார் தொன்னூறு வீதமான நிலம் சொந்தமாய் இருந்தது. மீதிப்பேர் நிலம் இல்லாதவர்களாகும். இந்த நிலம் இல்லாதவர்களில் ஒரு பகுதியினர் இந் நில உடமையாளர்களில் சார்ந்து வாழ்ந்தார்கள். இவ்வித நில உடமை முறையே றயத்வாரி முறையாகும். இவ்விதம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அடிமைகளாகவும் குடிமைகளாகவும் இருந்ததே யாழ்ப்பாணத்தின் விசேட குணாம்சமாகும்.
யாழ்ப்பாணத்தின் இந் நில உடமையாளர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான தனி ஒரு சாதியாகவும் ‘உயர்சாதியாகவும்’ ஆண்டான்களாகவும் இருந்தார்கள். இதனால் இச்சாதியே அனைத்து வழியிலும் சமூக ஆதிக்கம் பெற்ற சாதியாக இருந்தது.
எமது கவனத்திற்குரிய அக்காலகட்டத்தில் ஏராளமான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருந்தன. பனங்காடுகளும் இவற்றில் உள்ளடங்கும். காணியில் தனி உடமையை நிலைநாட்டுவதற்கு இறுக்கமான சட்டங்கள் இருக்கவில்லை. சாதி அமைப்பும் ஆண்டான் அடிமைச் சமூக ஒழுங்குகளுமே மிகச் சக்திபெற்ற எழுதாச் சட்டமாக இருந்தது. இதன்படி அனைத்துக் காணிகளும் வெள்ளாளரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.
பனையும் பனங்காணியும்கூட இந்த ‘உயர்சாதியின்’ கட்டுப்பாட்டிலேயே இருந்தன. தானே உதிர்ந்து விழும் பனம்பழங்களையும், பனை ஓலைகளையும், பனைகளையும் கூட இவர்களின் அனுமதியின்றி யாரும் எடுக்கமுடியாது. ஏராளமான பனை வளவுகள் அடிவளவுகள் என்றே அழைக்கப்பட்டன. இவ் அடி வளவுகளில் ‘அடிக்கு’ அல்லது ‘வெளிக்கு’ மலசலம் கழிக்கப் போவதாலும்கூட கமக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருந்தது.
கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது.
அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது.
கள்ளோ அல்லது கருப்பணியோ ஒரு விற்பனைப் பண்டமாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்வதானால் பனைக்கு ஒரு பணப்பெறுமானம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. பனை சீவல், ஓலை வெட்டுதலழ, பனைமரம் பிளத்தல், சிலாகை அறுத்தல், பெட்டி கடகம் பொத்துதல் போன்ற தொழில்கள் கூலி எதுவும் இன்றி அடிமைகளைக்கொண்டே செய்யப்பட்டன. ஆகையால் இவ்விதம் பெறப்பட்ட பொருட்கள் ‘உயர்சாதியினருக்கு’ சொந்தமானதாகவே இருந்தன. இவர்களே யாழ்ப்பாண எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள் என்றபடியாலும், அடிமை குடிமைகள் சுதந்திரமாக எதையும் கொள்வனவு செய்யும் உரிமை அற்றிருந்தபடியாலும் இப்பொருட்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறவில்லை. இதனால் பனம்படு தொழில்களில் ஒரு வளர்ச்சி ஏற்படவில்லை.
உணவுப்பழக்கத்தைப் பொறுத்தவரையிலும்கூட நிலஉடமை சாதி ஒருவிதமான உணவையும் அடிமைகள் குடிமைகள் ஏனைய சாதியினரும் வேறோர் விதமான உணவையுமே பயன்படுத்தினார்கள். விளைவிக்கப்பட்ட அனைத்து நெல்லும் ‘உயர்சாதியினரின்’ சொந்தமாகவே இருந்தது. இதை அவர்கள் தமது உணவாக மாத்திரமே் பயன்படுத்தவில்லை. இதுவே வர்த்தக பண்டமாற்றுப் பொருளாகவும் பயன்பட்டது. நெல்லை விலையாகக் கொடுத்தே இந்தியாவிலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டுள்ளனர். ஐரோப்பியர்களுக்கு நெல்லு வரியாகவும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல்லை ‘உயர்சாதியினர்’ தமது கைகளில் இருந்து விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணத்தினால் அரிசிச் சோறு ஒரு ‘உயர்சாதி’ உணவாகியது. குரக்கன், சாமி, மரவள்ளிக்கிழங்கு, பனாட்டு போன்றவை சாதித் தரம் குறைந்த உணவாகின.
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானியர் கொண்டுவந்த சில சட்டங்களால் அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள். மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்கும் முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அடிமை குடிமை சாதி அமைப்பு தொடர்ந்தது.
அதேபோல் அதே காலப்பகுதியில் நிலத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டக்கூடியதும் தனிநபர் உடமை முறையே ஒரே வகை உரிமை உடமை முறையாக இருக்கக் கூடியதுமான சட்டங்கள் ஆக்கப்பட்டன. இச்சட்டத்தின் பின் ஏராளமான தரிசு நிலங்களும் அடிவளவுகளும், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரின் குடியிருப்புக் காணிகளும் ‘உயர் சாதியினரின்’ தனி உடமை ஆகின. ‘உயர்சாதியினருள்ளே’ மிகச் சில மட்டும் பெரும் நில உடமையாளராக மாறும் புதிய நிலை தோன்றியது. ஆங்கிலம் தெரிந்தோரும் பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டோருமே அந்த மிகச்சிலராகும்.
இச்சட்டங்கள் உயர்சாதியினருக்கும் அடிமை குடிமை சாதியினருக்கும் இடையில் இருந்த தொடர்பில் சட்டரீதியான சில மாற்றங்களை ஏற்படுத்தியதே தவிர நடைமுறையில் பிரதானமாற்றங்கள் எதையும் கொண்டுவரவில்லை.
ஆனால் சில மாற்றங்கள் ஏற்படவே செய்தன. பிரித்தானியாவின் புதிய சட்டங்களால் ‘உயர்சாதியினரிடையே’ பாரிய வர்க்கவேறுபாடுகள் தோன்றின. ஒரு புறத்தில் சிறு அளவான பெரும் நிலஉடமையாளர்களும், மறுபுறத்தில் சுமாரான அளவிலான ஏழை விவசாயிகளும் தோன்றினார்கள். இவ்விவசாயிகள் தமது பனைகளை ஓரளவு சுதந்திரமாக்கினார்கள். அதாவது சீவலுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடிமைத் தொழிலாளர் மத்தியில் இருந்து சுதந்திர தொழிலாளர் உருவாகும் நிலை தோன்றியது. இவ் ஏழை விவசாயிகள் தமது உழைப்பைக்கொண்டே தமது தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதனால் பனையுடன் தொடர்புபட்ட சிறு குடிசைக் கைத்தொழில்களை தாமே மேற்கொள்ளவும் அவற்றை தாமே விற்கவும் தலைப்பட்டார்கள்.
இக்காலப்பகுதிக்கு முன்வரை, கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது. இந்தக் கட்டத்தில் பனை சாதி அமைப்பின் நெம்புகோலாக மிகத்திறம்பட பயன்பட்டு வந்தது.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தமிழீழ தேசியவாதத்தின் எழுச்சிவரை (1980கள் வரை) பனை ஏக காலத்தில் சாதி அமைப்பின் நெம்புகோலாகவும், ஆப்பாகவும் செயற்பட்டு வந்தது.
19ம் நூற்றாண்டின் கடைசி சகாப்தமும் 20ம் நூற்றாண்டின் முதற் பாதியும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய கட்டங்களாகும். காலனிக்குப் பிந்திய யாழ்ப்பாணப் பொருளாதாரத்திற்கான அடி அத்திவாரங்கள் இடப்பட்டது இக்கால கட்டத்திலேயாகும். பிரிட்டிஷ்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்போது அடிமை குடிமை முறை நிலவியது உண்மை. ஆனால் பெரும் நில உடமையாளர்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. பிரித்தானியர் கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக பல பத்தாயிரக்கணக்கான ஏக்கர் மலைநாட்டுக் காணிகளை மலிவான விலைக்கு “கொள்வனவு” செய்தார்கள். இக் “கொள்வனவை” சாத்தியப்படுத்துவதற்காக பல புதிய சட்டங்களை 1880களில் பிறப்பித்தார்கள்.
மிகக்குறுகியகால அவகாசத்துள் நிலம் தமது உரிமை என்பதை இலங்கைப் பிரஜைகள் ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கும்படி சட்டரீதியாக ஆணை பிறப்பித்தார்கள். இவ்விதம் நிரூபிக்கப்பட முடியாத காணிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அரசுடமை ஆக்கப்பட்ட காணிகள் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கும் ஏனைய பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்குமாக பிரித்தானிய பிரஜைகளுக்கும் பிரித்தானிய காலனித்துவவாதிகளுடன் ஒத்துழைத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் மலிவான விலையில் விற்கப்பட்டன.
இலங்கைத் தீவு முழுவதற்கும் செல்லுபடியான இந்தச் சட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் செயற்படுத்தப்பட்டன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் புகையிலை மாத்திரமே யாழ்ப்பாணத்தின் பிரதான பணப்பயிராக இருந்தது. இதனால் நிலம் ஒரு வர்த்தக பண்டமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அடிமை குடிமைகள் நிலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் நில உடமை முறையில் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்ததே தவிர மற்றும்படி நிலமானது வர்த்தக மதிப்பு அற்றதொன்றாகவே இருந்தது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பனங்காடுகள் கூட தேடுவாரற்றுக் கிடந்தன.
கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும்.
பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களால் இப்பனங்காடுகள் சிலதொகையான ‘மேட்டுக்குடியினரின்’ கைகளுக்குள் சென்றடைந்தன. அவர்களின் தனிச் சொத்தாகின. ஆங்கில அறிவும், அதனுடன் அரசாங்க சட்டதிட்டங்களைப்பற்றிய புரிதலும் பெற்றிருந்த உடையார், மணியகாரர், முதலியார் குடும்பங்கள் காணிகள் தமது என்பதை நிரூபிப்பதற்கு அவசியமான சட்ட ஆவணங்களை குறுகிய கால இடைவெளிக்குள் தயாரிப்பதில் அபார வெற்றி பெற்றார்கள். படிப்பறிவில்லாத ஏனைய மக்களை ஏமாற்றி அவர்களின் பயன்பாட்டில் இருந்த காணிகளை தமதாக்கிக் கொண்டார்கள். பணத்தினை கடனாகக் கொடுப்பது, பஞ்சத்திற்கு உணவு கொடுப்பது, வெளிநாட்டுக் குடிவகை கொடுப்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளையும் பின்பற்றி அம்மக்களை ஏமாற்றினார்கள்.
இவ்விதமாக யாழ்ப்பாணத்தில் சட்டரீதியான ஒரு நிலக்கொள்ளை நடைபெற்றது. பெரும் நில உடமையாளர்கள் என்ற புதியதோர் வர்க்கம் தோற்றம் பெற்றது. யாழ்ப்பாணம் வர்க்க ரீதியாகபிரிபடும் போக்கில் ஒரு திடீர் பாய்ச்சல் ஏற்படுகின்றது.
இந் நிலக்கொள்ளைக்கும் பனைக்கும் என்ன தொடர்பு..? நிறையத் தொடர்பு உண்டு. பிரித்தானியரால் விடுவிக்கப்பட்ட அடிமைச் சாதிப்பிரிவினரும், குடிமைச் சாதிப்பிரிவினரும், இடைநிலைச் சாதிப்பிரிவினரும், நிலவுடைமையாளர்களாக மாறியோர் தவிர நொந்துபோன நிலையில் இருந்த ‘வெள்ளாளரும்’ பனங்காணிகளையே தமது குடியிருப்புக் காணிகளாகவும் அடிவளவுக் காணிகளாகவும் பயன்படுத்தி வந்தார்கள். அதில் விழும் பனம் பழம், பனை ஓலை போன்றவற்றை தாம் அனுபவித்தும் வந்தார்கள். இதனால் பனம்படு பொருட்களின் பாவனை நொந்துபோன மக்கள் மத்தியில் ஒரு வழமையாக இருந்தது.
நிலக்கொள்ளையைத் தொடர்ந்து நிலமும் அதில் உள்ள பனை மரங்களும் பெரும் நில உடமையாளர்களின் சொத்தாக மாறுகிறது. குடியிருக்கவும், அடிவளவாகப் பயன்படுத்தவும், பனம்பொருட்களை அனுபவிக்கவும் நில உடமையாளர்களின் அனுமதி பெறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பனையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பனை அடிமைப்படுத்தப்படுகிறது. பனை என்ற இயற்கைத் தாவரம் சமூக பொருளாதார அர்த்தத்தில் இயற்கைத்தாவரம் என்ற நிலையை இழக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரும், பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள ஏனைய சாதிப்பிரிவினரில் பெரும்பான்மையோடும் ஏதோ ஒரு வழியில் ‘உயர்சாதி மேட்டுக்குடி நில உடமையாளர்களில் தங்கி நிற்க வேண்டிய சமூக பொருளாதார நிலமை தோற்றுவிக்கப்படுகிறது.
ஆம். இங்கு அடிமைப்படுத்தப்பட்ட பனை, சாதியின் நெம்புகோலாகச் செயற்படுகிறது. கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும். இல்லையேல் வேறு ஆட்களைப் பயன்படுத்தி பனம் பாளைகள் வெட்டி வீழ்த்தப்படும்.
தமிழீழத்தில் பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். எமது மக்களின் வாழ்விடங்கள் நகரம், கிராமம், குறிச்சி என வகைப்படுத்தப்படுகிறது. இவைகள் ஒன்றுக்கொன்று சமனான வளர்ச்சி அடைந்தவையும் அல்ல. சமுதாயத்தில் சமனாகக் கணிக்கப்படுபவையும் அல்ல. தமிழ் சமுதாயத்தின் சமூக வடிவம் பல முரண்பாடுகளைக் கொண்டது. சமூக வர்க்க வேறுபாடுகளையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய முரண்பாடுகளையும் கொண்டதாய் அமையப்பெற்றது. அப்படிப்பட்டதோர் நிலையிலேயே இன்றைய சமூக வாழ்வு இருக்கிறது.
தமிழீழத்தின் வளங்கள் பொதுவாக ஒன்றுதான். மனிதர்களும் ஒரே இனத்தோர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமூக ஒடுக்குமுறை – பொருளாதார ஒடுக்குமுறை காரணமாக ஒரு பகுதி மக்கள் முன்னேற முடியாதபடி – தஙகள் வாழ்வு நிலைகளை உறுதிப்படுத்த முடியாமல் ஒதுக்கப்பட்டார்கள்.
இத்தகையை மக்கள் கல்வி வாய்ப்பை இழந்து பொருளாதாரத்தில் பின்தங்கி சமூகத்தின் கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டார்கள்.
இப்படியாக ஒடுக்கப்பட்ட சமூக அந்தஸ்த்து குறைந்த மக்கள் வெளிப்படையாக சீரற்ற குடிசைகளையும், குடிநீர் போக்குவரத்து வசதியற்ற வாழ்விடத்தையும் கொண்டிருந்தனர். கந்தல் உடையுடனும் பரட்டைத் தலையுடனும் கல்வியறிவற்று இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்று தமிழீழத்தின் ஒரு பகுதி மக்கள் இவ்வாறாக அல்லது இதில் சிறுது வித்தியாசத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மக்கள்தான் இந்த மண்ணின் ஆணிவேராகப் பாய்ந்து நிற்கிறார்கள். இந்த மண்ணுடன் பிரிக்க முடியாமல் பிணைந்து நிற்கிறார்கள். எத்தகைய சூழலிலும் தங்கள் மண்ணை விட்டு ஓடாமல் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இந்த மண்ணின் பசளையாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.
இந்த மக்களின் பலத்தை, பலவீனத்தை, இவர்களின் நிலையை எமது இயக்கம் நீண்ட அரசியல் சமூக பொருளாதார ஆய்வுகளுக்கு ஊடாகவும் அனுபவங்களுக்கு ஊடாகவும் உணர்ந்துள்ளது.
இந்த மக்களின் அரசியல் சமூக பொருளாதார விடுதலை என்பதே எமது தேசத்தின் முழுமையான விடுதலை என்பதை ஏற்றுக்கொண்டு எமது இயக்கம் இதற்கான அரசியல் செயற்திட்டங்களை முன் வைக்கிறது. இப்படிப்பட்ட பல செயற்பாடுகளை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். முதலாவதாக யாழ் நகரத்தை அண்டியுள்ள அரியாலைப் பகுதியில் இருக்கின்ற பூம்புகார் கிராமத்தில் எமது அரசியற் செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்.
பூம்புகார் கிராமம் ஒரு புதைமணல் வீதியில் ஆரம்பித்து அவ்வீதியின் முடிவுடன் முடிகிறது. ஒரு புறத்தே கடலை எல்லையாகக் கொண்டு நிற்கும் அந்தக் கிராமத்தின் வளமாக கடலும், தென்னைகளும், பனைகளும் இருக்கின்றன. மற்றும்படி மணல் நிறைந்த பூமி. பெருமளவிலான மூலதனமற்ற கூலித் தொழிலாளர்களையும் சிறியளவிலான கடல்தொழிலாளர்களையும் கொண்டு அக்கிராமம் இருக்கின்றது.
பூம்புகார் கிராமத்தில் உள்ள பிள்ளைகளில் பலர் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை. பாடசாலைக்குச் செல்பவர்களிலும் பெரும்பாலானவர்கள் பள்ளிப்படிப்பை இடைநடுவில் விட்டுவிடுவார்கள். இதற்குக் காரணம் – பாடசாலை, கிராமத்திலிருந்து 3 மைல் தூரத்தில் இருந்தது. போக்குவரத்து வசதி இவர்களுக்கு முற்றாக இருக்கவில்லை. வைத்தியசாலை 8 மைல் தொலைவில் இருந்தது. இதற்கெல்லாம் மேலாக கிராமத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையுள்ள 1 கி மீற்றர் நீளமான வீதி புதைமணலாக இருந்தது. இந்தப் புதை மணல் வீதியில் நடப்பதற்கு இந்தக் கிராமத்தவர்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள்.
மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.
பூம்புகார் கிராமத்தவர்கள் பொதுவாக வறுமையில் வாடினார்கள். கடல் அருகில் இருந்தது. ஆனால் தொழில் செய்யக்கூடிய உபகரண வசதிகள் அவர்களிடம் இல்லை. அவற்றைப் பெறுவதற்குரிய பணவசதியும் இல்லை. வலை இன்றி மீன்பிடிக்க முடியாது. அதே மாதிரித்தான் மற்றத் தொழிலாளர்களும் நிரந்தரமற்ற கூலி வேலையையே செய்து வந்தனர்.
வேலையற்ற நாட்களெல்லாம் இவர்கள் எல்லோருமே பட்டினியால் வாழவேண்டி இருந்தது.
இந்தக் கிராமத்தைப் பார்த்ததுமே, இங்கு வாழும் அறியாமை இருளை நீக்க வேண்டும் என்றும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் எமது இயக்கம் முடிவெடுத்தது. இதற்காக செல்வி. மிதுலாவின் தலைமையில் விடுதலைப்புலிகள் மகளிர் அணியினரின் ஒரு குழு அங்கு முகாமிட்டது.
எமது மகளிர் அணியினர் அந்தக் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை கவனித்து நிவர்த்தி செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் உடனடியாக கிராமத்தின் மணல் வீதியை செப்பனிடத் தொடங்கினார்கள். பெருமளவு அந்தக் கிராமத்தவரின் பங்களிப்போடு அந்த வீதி மிக விரைவாக செப்பனிடப்பட்டது. இன்று சகல வாகனங்களும் வந்துசெல்லக்கூடிய வீதி ஒன்று அந்தக் கிராமத்தவர்களுக்கு உண்டு. அதே நேரம் மருத்துவ வசதிக்காக ஒரு முதலுதவிச் சிகிச்சை நிலையத்தையும் மேலதிக விலை கொடுப்பதைத் தவிர்ப்பதற்காகவும், மக்கள் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பதற்காகவும் ஒரு மக்கள் கடையையும் எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். அவர்களின் பிரதான வேலைத்திட்டமாக வருங்கால சந்ததியின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பள்ளிக்கூடம் அமைப்பதையும் அங்கு வாழும் மக்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதையுமே வகுத்திருந்தனர்.
அந்த வகையில் இன்று 5ம் ஆண்டுவரையானதொரு பள்ளிக்கூடம் சிறந்த கட்டிட வசதிகளுடன் இங்கு எழுந்துள்ளது. இதனால் இக்கிராமத்து மாணவர்கள் தங்கள் கிராமத்திலேயே சிரமமின்றித் தொடர்ந்து கல்வியைக் கற்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
ஒரு கிராமத்தின் வாழ்க்கைத்தரம் உயருவதற்கு தொழில் வாய்ப்பு அவசியமானது. அந்த வகையில் அக்கிராமத்தின் மூல வளங்களை அடையாளங்கண்டு அதற்கேற்ற தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது அவசியமானது.
பூம்புகார் கிராமத்தைப் பொறுத்தவரை அருகில் கடல் இருக்கிறது. கடல் தொழிலுக்குரிய வசதிகளைச் செய்துகொடுத்தால் இக்கிராமத்தின் ஒரு பகுதியினர் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆகவே இதற்குரிய முன்னேற்பாடுகளை எமது மகளிர் அணியினர் செய்து வருகின்றார்கள். இதே போன்று இங்கு தென்னைகள் நிறைய நிற்கின்றன. எனவே இங்கு ஓர் தும்புத் தொழிற்சாலையை எம்மவர்கள் அமைத்துள்ளார்கள். இத் தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர்வரை வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். இவற்றுடன் பெண்களுக்கென முப்பது பேருக்கு பன்ன வேலைப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக்கிராமத்தில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் பல கைத்தொழில்களை பயிற்றுவிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கிராமம் தன் விடிவை நோக்கிய பாதையில் இப்போது நடக்கத்தொடங்கி உள்ளது.
இவ்வேலைத் திட்டத்தை நிர்வகிக்கும் செல்வி மிதுலா குறிப்பிடுகையில் பூம்புகார் கிராமத்தில் நாம் பல வேலைத் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் இந்த வேலைத் திட்டங்களைச் செய்வதனால் அந்தக் கிராமத்தில் அவல நிலை மாறிவிட்டது என்றில்லை. உண்மையில் சொல்வதானால் இந்தக் கிராமம் முன்னேறுவதற்குரிய வேலைத் திட்டங்களை இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம். எங்கள் இலக்கு இன்னமும் தொலைவில்தான் இருக்கிறது. இனிமேல்தான் இந்தக் கிராம முன்னேற்றத் திட்டம் இடையூறுகளையும் சிரமங்களையும் சந்திக்கவேண்டிவரும். அதற்கு உள்ளாகவும் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இக்கிராம மக்களின் ஆர்வம், கடின உழைப்பு, முன்னேற வேண்டுமென்ற உறுதி அந்த நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது என்றார்.