இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும்.
பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!
ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று யாருக்காவது தெரியுமா?) என்ற ஒரு வகைப் பாண் அப்ப ரொம்ப பிரபல்யம். கொஞ்சம் பிந்திப் போனாலும் பாண் முடிந்து அந்த ஆட்டுக் கால் விசுக்கோத்துத் தான் கிடைக்கும்.
எனது பெரியப்பா விடிய வெள்ளனவே என்னையும் ஏற்றிக் கொண்டு சைக்கிளில் பறப்பார். சில வேளைகளில் பாண் கிடைக்கும். சில வேளைகளில் ஆட்டுக்கால் விசுக்கோத்துத்தான்.
இதற்கிடையில் பங்கீட்டு அடிப்படையில் இந்திய ராணுவமே உணவு வழங்க தொடங்கியது. அரிசி மா சீனி பருப்பு மற்றும் எண்ணெய் என்பன வழங்கப்பட்டன.
பொதுவாக இள வயதுள்ளவர்கள் இவற்றை வாங்க செல்வதில்லை. வயது போனவர்கள் தான் அதிகம் போவார்கள்.
எப்போதெல்லாம் ஆமி சாமான் குடுக்குதாம் என்று கேள்விப் படுகிறோமோ ( ஒழுங்கு முறையில் வழங்கப்படுவதில்லை.) ரண்டு மூன்று பைகளை எடுத்துக் கொண்டு ஓடுவது தான் எங்களுக்கு வேலை.
அப்ப சிறுவர்கள் தான் ரொம்ப Busy..
யாராவது இளம் வயதுள்ளவர்.. அல்லது கொஞ்சம் வலுவான தோற்றமுள்ளவர் எங்காவது தூர இடங்களுக்கு போவதென்றால் ஒரு சிறுவனையோ சிறுமியையோ தன்னுடன் கூட்டி செல்வார்.
அப்ப தான் ஆமி ஒண்டும் செய்யாது எண்ட ஒரு ஐதீகம்!!!
எங்காவது ஒரு சந்தியில் ஆமி எல்லாரையும் மறிக்கும். எல்லாரும் இறங்கி உருட்டிச் செல்ல வேணும். ஒரு இடத்தில ஒருவர் முகத்தை முழுவதுமாக மறைத்து நிற்பார். அவரைப் பார்த்தவாறு நடந்து செல்ல வேண்டும்.
அவர் இல்லை என்று தலையாட்டினால் மேற்கொண்டு போகலாம். ஆம் என்றால் அவ்வளவும் தான்.
அப்படி தலையாட்டுபவரை தலையாட்டி என்று செல்லமாக கூப்பிடுவோம்.
சந்தியிலை தலையாட்டி நிற்குதாம் வேறை றோட்டாலை போங்கோ இப்படி அடிக்கடி யாராவது சொல்ல கேட்கலாம்.
அந்தத் தலையாட்டி தன்னுடைய எந்த சொந்தப் பிரச்சனையை – அது காணிப் பிரச்சனையோ ,வேலிப் பிரச்சனையோ – மனசில் வைச்சும் தலையாட்டலாம். அப்படி தலையாட்டினால் அதுவே முடிந்த முடிவு.
இவ்வாறான ஒரு அதி நம்பகத்தன்மை வாய்ந்த எதிரிகளைக் கண்டறியும் (கண்டறியாத!!!) முறையினை ராணுவம் பயன்படுத்திக் கொண்டிருந்தது.
சிலர் சிறுவர்களை விட குழந்தைகள் இன்னும் பிரயோசனமானவர்கள் என்று கருதி யாருடை குழந்தைகளையாவது தூக்கி செல்வதுமுண்டு.
வெயிலில் குழந்தைகள் அழ கூடிய சீக்கிரம் தங்களை ஆமி விடும் என்கிற ஒரு நம்பிக்கை!
இவ்வாறான ஒரு புறச் சூழ்நிலையில் !!! நானும் ஆமியிடம் சாமான் வாங்க போனேன்.
வழமையாக நானும் பெரியப்பாவும் தான் போவது வழக்கம். சில நேரங்களில் அம்மம்மாவும் வருவா.
வட்டுக் கோட்டைச் சந்தியில் சாமான் குடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நீண்ட வரிசை
ஒரு ஆமி மா குடுக்கும். (அவர் முழுதும் வெள்ளையாய் நிற்பார்). இன்னொருவர் அரிசி. (இப்பிடி அரிசி எண்டு எழுதும் போது பசிக்கு அரிசி என்ற பதமும் வாய்க்கு அரிசி என்ற பதமும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது.)
நாங்கள் ஒரு ரண்டு மணித்தியாலமா வரிசையில நிற்கிறம். எங்கடை முறை வர இன்னும் நேரமிருக்கு. இதுக் கிடையில எங்கட அம்மம்மா ஆமிக்கு கிட்ட போய் என்னைக் காட்டி சின்னப் பிள்ளையோடு வந்திருக்கிறன். (அப்ப நான் சின்னப் பிள்ளை !) கெதியா விட முடியுமோ எண்டு கேட்டா. அதுக்கு அந்த ஆமி மற்ற எல்லாரையும் காட்டி ஏதோ சொன்னான்.
ம்.. வந்திருந்த முக்கால்வாசிப் பேர் குழந்தைகளோடும் சிறுவர்களோடும் தான் வந்திருந்தவை.
கொஞ்சம் கொஞ்சமாய்க் கிட்ட வந்திட்டம். எனக்கு கால் வேறை உளையுது. நான் சிணுங்க பெரியப்பா சினக்கிறார்.
சரியா கிட்ட வராட்டிலும் இண்டைக்கு சாமான் வாங்கிடுவம் எண்டு நம்பிற அளவுக்கு கிட்ட வந்தாச்சு.
திடீரென்று ஒரு ஜீப்பொண்டு வந்து நிண்டது. அதிலை இருந்து பட படவெண்டு குதிச்சினம். எல்லாம் இழுத்துப் பூட்டிச்சினம்.
அந்தக் காம்பிற்கு அடுத்த காம்பில பொடியள் கிரேணைட் எறிஞ்சு ரண்டோ மூண்டு ஆமி செத்துப் போச்சுதாம். அதுவும் இங்கையிருந்து போய்த்தான் எறிஞ்சவங்களாம். எல்லாரையும் உடனை செக் பண்ண தொடங்கினாங்கள்.
சாமான் தருவதை நிப்பாட்டியதாயும் இன்று போய் இனி நாளை வரும் படியும் சொன்னார்கள். (இராம நாட்டிலிருந்து வந்தவர்கள் தானே! இதைச் சொல்லத் தான் நேற்றொருவர் பகிடியாய்ச் சொன்னது நினைவுக்கு வருது. இலங்கைக்குள் நுழைந்த முதல் றோ உளவாளி அனுமர் தானாம்.)
பிறகென்ன.. நான் வெயில் என்று சிணுங்க பெரியப்பா தலையிலை ரண்டு தட்டு தட்டி கூட்டிக் கொண்டு போனார்.
நான் சிணுங்கியதால் தட்டினாரா அல்லது சாமான் தரவில்லை என்று தட்டினாரா என்று தெரியவில்லை.
பிற்குறிப்பு: பலதடவைகள் இப்படி இடை நடுவில் வந்திருக்கிறோம். இப்படி ஏதாவது நடந்திருக்கும். அல்லது சாமான் முடிந்திருக்கும். இருந்தாலும் இன்று போய் இனி நாளை வா என்று சொன்னாலும் நாளை போய் வென்று வந்த சம்பவங்களும் இருக்கிறது.