சாரலின் ஆரம்ப காலங்களில் இருந்தே தனித் தன்மையான எள்ளலுடன் கூடிய சயந்தனின் எழுத்துகளுடன் எனக்கு பரீட்சயம் உண்டு, சயந்தன் ஒரு நல்ல சிறுகதை சொல்லி. சயந்தனின் ஏற்கனவேயான அறிமுகம் ஆறாவடு நாவலை வாசிக்க தூண்டியது.கனடாவில் வெளியீடு நடக்கும் என அறிவிப்பு வராத ஒரு தரணத்தில் இந்தியாவில் இருந்து அந்த நாவலை எனது நண்பி ஒருவர் அனுப்பி இருந்தார். எந்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படித்து முடிப்பது எனது வழக்கம் அல்ல. நிதானமாய் ஒவ்வொரு வரிகளையும் அனுபவித்து வாசிப்பதே எனது வழக்கம், ஆறாவடுவயும் நிதானமாய் அனுபவித்தே வாசித்தேன். குறிப்பிட்ட இரண்டு சமாதான காலபகுதிகளில் நடந்த போரின் அனர்த்தங்களை பதிவு செய்து போகும் நாவலில் ,
வாசகனின் வாசிப்பின் உச்சம் என,
“அகிலா திமிறினாள், சின்ன பொடியன் திடீரென எழுந்து இவனை மிரட்சியுடன் பார்க்க தொடங்கினான் ,,,
” எடே வேசை மகனே பண்டார வன்னியா ,,, என்ற வரிகளுடன் தொடரும் அந்த முழு பந்தியும்,
வெளிப் படலையை இரண்டு இளஞர்கள் தட்டினார்கள் அதற்கு சற்று நேரம் கழித்து அவர்கள் தேவபாலுவையும் தட்டினார்கள் என்ற மொழியின் வீரியமும்,
மொழிபெயர்ப்பாளர் நேரு அய்யா, “நான் கண்களை மூடி நீங்கள் இல்லை என்று நினைத்து பார்த்தேன் எவ்வளவு சந்தோசமாக இருந்தது” என்பதுவும் அதற்கு அமுதன் ” நானும் கண்களை மூடி நீங்கள் இல்லை என்று நினைத்து பார்த்தேன் உங்கள் குடும்பம் எவ்வளவு கஷ்டபடுகுது” என்பதுவும், இவாறான கேள்விகேட்கும் ஒரு வெளியை யாரும் அனுபவித்ததாகவோ அனுமதித்ததாகவோ இல்லை என்பது வேறுவிடயம். இப்போ இருக்கும் யதார்த்தம் புரிந்தவர்களுக்கு இது கதை சொல்லின் யுக்தி. காலங்கள் செல்ல இவ்வாறான இலகு நிலை இருந்தது என்னும் ஆபத்தான நினைவு கூறலுக்கு ஆதாரமாகும் ஆபத்தும் உண்டு.
“சண்டையில் நிக்கிற நேரங்களில் காயபடலாம் என்றோ செத்து போவேன் என்றோ நினைப்பெதுவும் எனக்கு வருவதில்லை ,,,,,,, “நான் சாவினை விரும்பவில்லை” என்ற சுய விமர்சனத்துடனான விமர்சனமும்.
“எனக்கு இயக்கத்தில் கோபம் வந்தது பின் நான் தானே இயக்கம் என்ற நினைப்பும் வந்தது பிறகு சனங்களில் கோபம் வந்தது” என்ற வரிகளில் மக்களை விட்டு அந்நியமாதலின் வேர்விடுதலை சொல்லி நிற்கும் வரிகளும் மனதில் பெரும் சுமையை கொண்டுவந்தது.
சயந்தனின் இந்த நாவலை வாசித்துக்கொண்டு வரும் போது வேனில் இருந்து இறக்கி கட்டலுக்க ஏற்ற கொண்டு போன அரிசி பருப்பு கருவாட்டு சிற்பத்துக்கும் கணக்கு எடுத்துகொண்டது என் மனது. அப்பவே இது சின்ன வள்ளம் கரையில இருந்து பெரும் கடல் வரை மட்டும் போகுதாக்கும் என்று கணிக்க தொடங்கியது. மொத்தம் அறுபத்தி ஆறு பேர் .இந்த மீன்பிடி ரோலர் தான் (நாவலாசிரியரின் சொல்லில் வள்ளம்) இத்தாலி வரை போகபோகின்றது என மனது நம்பவில்லை , இதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக Craftsmanship சறுக்க தொடங்கியது போல இருந்தது.
அத்தியாயம் நாலில் ஆறு மாதங்களின் பின் வீடு திரும்பும் சிவராசன் ஒருவித துர்நாற்றத்தை உணர்கிறார் நீட்டி நிமிந்து படுத்திருக்கும் ஊனம் வழிந்துகொண்டிருக்கும் புழுக்கள் நெளியும் எலும்பு கூடை காண்கிறார் இதிலும்அத்தியாயம் ஐந்தில் பெரிய மார்புகளை உடைய நிலாமதி மார்புகளுக்கு இடையில் கிரனைடை ஒளித்து வைத்தலும் Craftsmanshipன் சறுக்கலின் அதீதம்.
அந்த பாரிய இடபெயர்வின் பொது யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட முதியவர்களை போலவே வீட்டு வளர்ப்பு நாய்களும் கட்டா காலி நாய்களும் கைவிடபட்டிருந்தன. எது கிடைத்தாலும் உண்பதற்கு அவை பசியோடு அலைந்து திரிந்தன யதார்த்தம் அவ்வாறெனில் சிவராசனின் அம்மாவின் மிஞ்சிய எலும்புக்கூடுகள் கிடைப்பதே ஆச்சரிய பட கூடிய விடையம். நிரப்பப்பட்ட ஐந்து கிளாஸ் தண்ணீருடன் வயதான எழுந்து நடக்க முடியாத அம்மா எவ்வளவு நாள் உயிர் வாழ்ந்திருக்க முடியும் ? நாய்களின் பசிக்கு அவவின் உடம்பு எத்துபடவில்லை என வைத்து கொண்டாலும் அவர் ஆறு மதங்களில் திரும்பி வரும்போது காய்ந்து கருவாடகிய அம்மாவின் உடலும் எலும்புகளுமே சிவராசனுக்கு கிடைத்திருக்கும்.
குண்டு பாப்பா என அழைக்கப்படும் நிலாமதிக்கு தெரியும் எவன் எப்ப பார்த்தாலும் முதலில் எங்க கண்ண, கைய வைப்பான் என, அதுவுமல்லாமல் கிரனைட்ட அதனை தொட அதனை நன்கு அறிந்தவர்கள் கூட உடலுடன் வைத்திருக்க பயப்பிடுவார்கள் அதனை மார்புகளுக்கு இடையில் புதைத்து வைத்தாள் அது குளிர்ந்தபடி இருந்தது என்பது யார்தார்த்தமிழந்ததாக இருந்தது எனக்கு.
ஏனோ “ஒழிக்க இடமில்லாம போய் விதானையார் வீட்டில ஒழித்தானம்” என்ற பழமொழி நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை. இந்த நான்காம் அத்தியாயம் ஒரு இடைசெருகலாக யதார்த்தத்தை மீறிய ஒன்றாக இருந்தது. அதில் நிலாமதிக்கு கொடுத்த விவரண அளவு பயணத்துக்கு பயன்படுத்திய ரோலருக்கு கொடுக்கப்படவில்லை. சென்றி பொயின்ட்களில் பெரிய, சிறிய மார்புகளின் அளவுகளில் இந்திய அமைதி காக்கும் படை வித்தியாசம் கொண்டிருக்கவில்லை. அவர்கள் வரிசையில் நின்ற பெண்களின் முலைகளை தொட்டு பார்பதற்கு என்ன “பொம்”ஆ என தொட்டு தடவி கசக்கி பார்த்தவை எல்லா சென்றி பொயின்ட்களிலும் நடந்தவை தான். என்னை பொறுத்தவரை இந்தியன் ஆமியின் கொடுரத்தை சயந்தனின் ஆறாவடு குறைவாகவே சொல்லி இருக்கிறது.
மற்றும் எல்லா ஊர்களிலும் ஒரு “வெற்றியை” ஒத்த ஒரு புலிவீரன் இருந்தான். இந்திய அமைதி காக்கும் படை வெளியேற போவதாக அறிக்கைகள் வர ஆரம்பித்த காலம் களவுகளும் அதிகரிக்க தொடக்கி இருந்தது. 1989 ம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களது வீடு அன்றைய முன் இரவில் முன்றாவது வீடாக ஆயுததாரிகளால் கொள்ளை அடிக்கபட்டது. அன்றைய இரவில் கொள்ளையர்களுக்கு ஆட்காட்டியாக வந்த வாசலில் நின்றவனை சாந்தன் மூன்று முறை மேல் வெடி வைத்து கைது செய்தான். தினமும் வெள்ளை சீருடை அணிந்து பாடசாலை செல்லும் மாணவனாய் அவனை கண்டிருக்கிறேன். கைது செய்யபட்டவன் அடுத்தநாள் உப்புமோட்டை சந்தியில் வைத்து சாந்தனால் சுட்டு கொல்லபட்டான். வடமராட்சியில் “தும்பனை” போலவே கோண்டாவிலில் சாந்தன் இருந்தான். அவன் அனைத்து இந்திய அமைதிபடைக்கும் கல்லூரியில் படிக்கும் மாணவனாகவே இருந்தான். சாந்தனால் இலக்கு வைக்கபட்டவர்களுக்கு மட்டுமே அவனை யார் என தெரிந்திருந்தது. அவ்வாறு அவனை தெரிந்தவர்களுக்கு அவனை காட்டி கொடுக்கும் சந்தர்பத்தை அவன் விட்டு வைக்கவில்லை. இந்திய அமைதி படையிலும் பலர் அவனை தெரிந்துகொண்ட ஆச்சரிய கண்களுடன் இறந்துபோய் இருந்தார்கள். இறுதியில் இந்திய அமைதிப்படை வெளியேற போகின்றதென்ற ஒரு அசன்டையீனமான நாள் ஒன்றில் ஒரு சுற்றுவளைப்பில் சாந்தன் சயனைட் குப்பி கடித்து செத்து போனான். செத்த பின் இவன் தான் “சாந்தன்” என அறிந்த இந்திய அமைதி படை அவன் தலையை வெட்டி கொக்குவில் சந்தியில் காட்சிக்கு வைத்தது.அதுவே அவர்கள் வெளியேற முன் செய்த இறுதி வீரமாகவும் இருந்தது.
இப்பிடி ஏராளம் கதைகள் எல்லா ஊர்களிலும் உண்டு. இவ்வாறான நாவலுக்கான தொடர் களம் இருந்தும் சயந்தனின் ஆறாவடு, நாவல் ஒன்றை வாசிக்கும் அனுபவத்தை கொடுக்க தவறி சிறுகதைகளாகவே எனது வாசிப்புக்குஉள்ளானது. இது எனது வாசிப்பின் அனுபவம் மட்டுமே. இது எனது வாசிப்பின் குறைபாடாகவும் இருக்கலாம்.
இந்த நாவலில் கப்பல், மற்றும் பயணத்தின் விபரணம் குறைவாகவே விபரிக்க பட்டிருக்கிறது.ஆனாலும் அதனை ஈடு செய்வதாக அட்டைபடம் இருந்தது. அட்டை படத்தை வரைந்தவர் யார் என்னும் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாதது வருத்தத்துக்கு உரியது. கரையில் இருந்து அரிசி பருப்பு கருவாடு போன்றவற்றை ஏற்றும் போது அதன் அளவுகள் நீண்டதொரு கடல் பயணத்துக்கு ஏற்றதாய் இருக்கவில்லை. நீண்ட போராடம் ஒன்றில் பங்கு பற்றிய “அமுதனின்” கவனத்தில் இது பட்டிருக்கவேண்டும் இந்த ஒரு விடயமே பயணத்தின் தகிப்பை சொல்ல போதுமானது, அது சொல்லாமல் தவிர்கபட்டிருகிறது.
அந்த மீன்பிடி ரோலரும் பயணமாந்தர்களும் கடலும் அலைகளும் ஒரு நூலிழையாய் நாவல் முழுவதும் வருதல் தவிர்த்து அப்பப்போ கப்பலுக்கு என நடந்திருக்கும் என்று தேடி பார்க்கும் ஒரு வாசக அனுபவத்தை கொடுத்து அது விடுபட்டு தொடர்பின்றி இருந்தது.