லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)

போன சனிக்கு முதல் சனிக்கிழமை!

முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது பாருங்கோ!

அண்டைக்கு காலமை போல என்னோடை படிக்கிற என்ரை சிங்கள நண்பன் msn இல் Nudge ஒண்டை அனுப்பினான். நான் அப்ப போனில இருந்தன். அவரின்ரை Nudge க்கு பதிலேதும் சொல்லேல்லை.

மச்சான் லக்ஸ்மன் கதிர்காம கொல்லப்பட்டு விட்டார் எண்டான்.

நான் வேணுமெண்டே ஆரெண்டு கேட்டன்.

லக்ஸ்மன் கதிர்காம எண்டு திரும்பவும் அவன் சொன்னான்.

நல்லா குறிச்சுக் கொள்ளுங்கோ! அவன் லக்ஸ்மன் கதிர்காமர் எண்டு சொல்லேல்லை. ர் ஐ விழுங்கிட்டு கதிர்காம எண்டுதான் சொன்னவன்.

நான் அதைத்திருத்தி கடைசி R எழுத்தை Capital எழுத்தில் போட்டு அனுப்பினன்.

அங்கையிருந்து சிரிப்பு குறியொண்டை அவன் அனுப்பினான். கூடவே கதிர்காமர் ஒரு நல்ல மனிசர் எண்ட குறிப்பு வேறு!

சிங்கள மக்கள் கதிர்காமரை எப்படித் தங்களில் ஒருவராக பாக்கிறார்கள் என்பதுக்கும் அவரில எவ்வளவு நேசம் வைத்திருந்தார்கள் எண்டதுக்கும் இது ஒரு உதாரணம் எண்ட கோணத்தில தான் இந்த சம்பவத்தை நான் பாக்கிறன்.

கதிர்மாரை ஆர் கொலை செய்தது?

இது புலிகளின் வேலை இல்லை எண்டு என்னாலை அடிச்சு சொல்ல முடியாது. புலிகளும் புலிகளை ஆதரிக்கும் மக்களும் அவரை ஒரு துரோகியென்ற கண்ணோட்டத்துடன் அல்லது குறித்த ஒரு காலத்தில் போராட்டத்திற்கான ஒரு தடையாக இருந்தவர் என்ற ரீதியில் தான் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால், கதிர்காமரை கொல்லுவதற்கு புலிகளுக்கு இருந்த காரணங்களைப்போலவே வேறு சில சக்திகளுக்கும் அவரைக் கொல்வதற்கு காரணங்கள் இருந்திருந்தன என்பதை பலரும் வசதியாக மறந்து போகினம்.

எனக்கென்னவோ இவ்வாறான ஒரு தாக்குதலை புலிகளால் மட்டும் தான் நடாத்த முடியும் எண்ட கோணத்திலதான் பலரும் புலிகளை நோக்கி கரம் நீட்டுகிறார்கள்.

முன்பு போலில்லாமல் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான நேரடித் தொடர்புகள் இருக்கின்ற ஒரு காலத்தில், அதைத் தொடர்ந்தும் பேண புலிகள் விரும்புகின்ற ஒரு சூழ்நிலையில் இப்பிடியான ஒரு காரியத்தை செய்ய புலிகள் முன்வருவினம் எண்டது சாத்தியம் இல்லாதது.

வேணுமெண்டால் புலிகள் சர்வதேச நாடுகளிடம் நம்பிக்கை இழந்து, நீங்கள் செய்யிறதை செய்யுங்கோ நாங்கள் எங்கடை வழியைப் பாக்கிறம் எண்டு முடிவெடுத்து, உலகம் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்ல எண்ட ஒரு நிலையில் இப்படியான காரியங்களில ஈடுபட கூடும்.

நிறைய பேர், கதிர்காமரின் கொலையை அடுத்து புலிகள் அப்பிடியொரு முடிவினை எடுத்து விட்டினம் எண்டுதான் ஆருடம் சொல்லியிருந்தவை. அதாவது யுத்தம் ஒண்டை தொடங்குறதுக்கு தயாராய் விட்டதாகவும் அவ்வாறெனில் அதற்கு தடையாக இருக்க கூடிய கதிர்காமரை அவர்கள் கொலை செய்திருக்கலாம் எண்டும் அவை சொல்லியிருந்தவை.

ஆனால் நிலைமை அப்பிடி இல்லை. புலிகள் இப்பவும் வெளிநாடுகள் சொல்லுறதை கேட்கினம் எண்டதுக்குக்கும் வெளிநாடுகளோடை ஒரு சுமுக உறவை பேண விரும்புகினம் எண்டதுக்கும் நல்ல ஒரு உதாரணம் சொல்லலாம்.

அதாவது பேசுவதாயிருந்தால் இடைக்கால நிர்வாக சபை மட்டும் தான் பேசுவம். அதை விட்டால் எதனையும் பேசத் தயாரில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த புலிகள் கதிர்காமரின் கொலையை அடுத்து யுத்தநிறுத்த நடைமுறைகள் குறித்து நோர்வே அனுசரனையில் இலங்கை அரசோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இணங்கியிருக்கிறார்கள். பேச்சுக்கள் வரும் வாரங்களில் ஒஸ்லோ நகரில் நடக்க இருக்கிறது என்கிறார்கள்.

இது புலிகளாக எடுத்த முடிவில்லை. ஏதோ ஒரு அல்லது கூட்டு வெளிச்சக்தி அன்பாக அல்லது அழுத்தமாக புலிகளை இந்த முடிவுக்கு இணங்கச் செய்திருக்கிறது.

யுத்தத்தை ஆரம்பிக்க முடிவெடுத்து கதிர்காமரை புலிகள் கொலை செய்திருந்தால், யுத்தநிறுத்தத்தை செம்மையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுச் சக்திகளுக்கு இணங்க வேண்டிய காரணம் என்ன?

ஏனெனில் புலிகள் உலக நாடுகளுடன் சுமுக உறவு பேண விரும்புகிறார்கள். தமிழீழ தேசிய விடுதலைப் போரின் இன்னொரு பரிணாமமாக உலக நாடுகளுடனான தொடர்பை, உறவை புலிகள் விரும்புகிறார்கள்.

வெளிநாடுகளின் அழுத்தம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்ற புலிகள் இவ்வாறான ஒரு கொலைக்குள் தெரிந்தும் காலை வைப்பார்களா?

சரி, அப்ப யார் செய்திருப்பினம்?

புலிகளை இவ்வாறான ஒரு அழுத்தத்திற்குள் தள்ளிவிட விரும்புகின்ற அல்லது இன்னும் நிறைய இலக்குகளில் இதனையும் ஒரு இலக்காக கொண்ட ஒரு சக்தியாக ஏன் இருக்க கூடாது?

அண்மையில் வசந்தனோடை கதைச்சு கொண்டிருக்கேக்கை ஒண்டு சொன்னன். இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லையாயின் எனக்கு இரட்டை சந்தோசம்.

ஒன்று புலிகள் செய்யாததற்கு!

By

Read More

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.)

நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம்.
பாலத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சைக்கிள் மோட்டர்சைக்கிள் தவிர்ந்த வாகனங்களுக்கு அந்த வீதி மூடப்பட்டிருந்தது. அந்தப்பாலத்தினை என்னால் எண்டைக்கும் மறக்க முடியாது.

95 இன் இடம் பெயர்வில் பாலத்தில் ஏறுவது ஆபத்தென எண்ணி அருகே நீர் நிலைக்குள் நெஞ்சு முட்டும் தண்ணிக்குள்ளால் நடந்த ஞாபகங்கள் அந்தப் பாலத்தை கடக்கும் பொழுதுகளில் வரும்.

கைதடி தாண்டி, சாவகச்சேரி தாண்டி, கொடிகாமம் தாண்டி எழுது மட்டுவாள் வீதியில் ஏற இப்போது நான் ஓட்டத்துடங்கினேன்.

எழுதுமட்டுவாளிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தினில்த்தான் நாங்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். தற்போது அது உயர்பாதுகாப்பு வலயம்.

எழுதுமட்டுவாளின் வீதிகள் பரவாயில்லை ரகம். ஆனால் வீதிகளில் இராணுவ பிரசன்னம் இனியில்லையென்ற அளவு அதிகம். வீதிகளிலும், கடைகளிலும் (அவர்களின் சொந்தக் கடைகளும் இருக்கின்றன. உ+ம் அப்பக்கடை அல்லது புலனாய்வு மையம்) வாகனங்களிலும் திரியும் இராணுவத்தினரை பார்க்கையில் ஏதோ இராணுவ பிரதேசத்திற்குள் வந்து மக்கள் குடியேறி இருக்கின்றது போல இருந்தது.

வீதிகளில் ஒவ்வொரு இராணுவ ட்ரக் வரும் போதும் சோமிதரன் பின்னாலிருந்து குரல் கொடுப்பான். ‘ கவனமடா.. தட்டிப்போட்டு விபத்தெண்டுவாங்கள்.’

முகமாலை இராணுவ சோதனைச்சாவடி.

நான் மோட்டச்சைக்கிள் விபரங்களை இராணுவத்திற்கு குடுக்க வேணும். சோமிதரன் போய் தனது அடையாள அட்டை விபரங்களை பதிந்து விட்டு வரவேணும்.

மோட்டச்சைக்கிளை நிறுத்தி விட்டு நான் என்னைப்பதியிறவரிடம் போனன்.

‘எந்த இடம் போறனீங்க’

‘கிளிநொச்சி’

‘ஐடென்ரிகாட்’

குடுத்தன். அதில் எனது முகவரி கொழும்பு என்று இருக்கக்கண்டவன் பிறகு சிங்களத்தில் கதைக்க தொடங்கினான். நான் திணறத்துடங்கினேன்.
மோட்டர்சைக்கிள் நம்பர் கேட்டான்.

‘நாசம்கட்ட.. ஆருக்கு தெரியும் அது? நான் நினைவில்லையென்று சொன்னன். என்னை ஒரு மாதிரிப் பார்த்தான்.

ஒருவேளை மோட்டச்சைக்கிள் களவெடுத்துக்கொண்டு போறன் எண்டு பிடிக்கப்போறானோ என்று வேறு யோசிச்சன்.

‘என்ரையில்லை எண்டு சொல்லிப்போட்டு வந்து போய்ப்பாத்துக்கொண்டு வர கேட்டன். ஓம் எண்டான். போய் நம்பர் பாத்திட்டு வர அதுக்கிடையில சோமிதரனும் வந்திட்டான்.

எல்லாம் முடிஞ்சு மோட்டச்சைக்கிளில் ஏறி வெளிக்கிட திடீரென்று ஒருத்தன் நிப்பாட்டி என்ரை பொக்கற்றை காட்டி என்ன எண்டு கேட்டான்.
ஜீன்ஸ் பொக்கற்றுக்குள்ளை துருத்திக்கொண்டு ஒரு பொருள் இருந்ததை அவன் கண்டு விட்டான். ஹி ஹி ஹி.. அது வேறையொண்டுமில்லை. அது.. ஒரு கொஞ்சம் பெரிசாப்போன சீப்பு.

எடுத்துக்காட்டினன். அவனுக்கு சிரிப்பு வந்தது.

‘எங்கை போனாலும் உதுகளை விடமாட்டியளே..’ என்று சோமிதரன் நக்கல் அடித்தான்.

ஒரு கொஞ்சத்தூரமான ஆமியுமில்லாத புலிகளுமில்லாத சூனிய பிரதேசத்தை தாண்டி இப்ப புலிகளின்ரை பகுதிக்குள்ளை நுழைகிறோம்.

‘சரி சயந்தன். நீ உவங்களிட்டை போய் எல்லா பதிவுகளையும் முடிச்சுப்போட்டு வா. அதுக்கிடையில நானொருக்கா கிளிநொச்சி போட்டு வாறன்.’ எண்டு சோமிதரன் சொல்லும் போதே விளங்கிட்டுது.

ஒரு விண்ணப்பம் வாங்கி அதை நிரப்ப வெளிக்கிட்டன். அதில மோட்டச்சைக்கிள் என்ன கலர் எண்டு கேட்டு இருந்தது. மோட்டச்சைக்கிளை பாத்தன். அதில பச்சை நீலம் கறுப்பு என எல்லா கலரும் இருந்தது. நான் எல்லா கலரையும் எழுதினன்.

முக்கியமா விண்ணப்ப படிவத்தை தமிழில நிரப்ப சொல்லி இருந்தது. எனக்கு பக்கத்தில நிண்டவர் என்னைப்பாத்து அண்ணை ‘Super cup’ இற்கு (ஒரு மோட்டச்சைக்கிள் வகை.) என்ன தமிழண்ணை எண்டு கேட்டார்.

‘பேசாமல் ‘சுப்பர் கப்’ எண்டு போடுங்கோ எண்டு சொன்னன். ‘இல்லயண்ணை உவங்களோடை சில்லெடுக்கேலாது. ‘ எண்டு சொல்ல சோமிதரன் முதல்த்தர கோப்பை எண்டு போடுங்கோ எண்டான்.

அவர் பேசாமல் போட்டார். என்னெண்டு போட்டார் எண்டு தெரியேல்லை.
எல்லாம் முடிய நாங்கள் ஒராளைப்போய் சந்திக்க வேணும். அவர் எங்களை ஒரு சின்ன இன்ரவியூ செய்வார். அதுக்கு பிறகு விசா?? தருவார்.

நானும் சோமியும் உள்ளை நுழையுறம். வணக்கம் இருங்கோ எண்டுறார்.
‘கிளிநொச்சியில எந்த இடத்துக்கு போறியள்.’

NTT (தமிழீழ தேசிய தொலைக்காட்சி) என்று சோமிதரன் சொன்னான்.

‘நீங்கள் செய்தியாளர்களோ’ சோமியைப்பாத்து கேட்டார்.

‘இல்ல. நான் NTT க்கு பயிற்சி வகுப்பு எடுக்கிறனான். இவர் என்னோடை வாறார். ‘ இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தபிறகு நாங்கள் புறப்பட்டோம்.

கொஞ்ச நேரத்தில் பளை கடந்து ஆனையிறவு பெருவெளி வந்தது.
–இன்னும் சொல்லுவன்–

By

Read More

பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )
நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம்.

கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே என்று!

இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்! அது இப்பிடித்தான் இருக்கும். அய்.. பனங்காய்ப் பணியாரமே..


Image hosted by Photobucket.com

பட உதவி – திரு கிளிநொச்சியிலிருந்து

By

Read More

அசைலம் அடிக்கேல்லையோ- இலங்கையில் -2

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”

பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.

“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.

“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா.

எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு.

மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது.

“அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?”

யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா எண்டு அம்மா அனுப்ப, போய்ப்பார்த்த ஒரு ஜீவனிடமிருந்து இந்த கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை.

மனுசி என்ன கேட்குது என்று எனக்கு விளங்கிட்டுது. இண்டைக்கு காட் கிடைக்கிறது எண்டது யாழ்ப்பாணத்து சமூகத்தின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளில் ஒன்றாகிவிட்டது போல எனக்குப் பட்டது.

இன்னொரு பக்கத்தாலை மனுசி ஆருக்கும் என்னை கலியாணம் பேசப்போதோ என்று கூட ஒரு வெட்கம் கலந்த யோசினை எனக்கு வந்து போனது.

மகளுக்கு வெளிநாடுகளில ஆரும் காட் கிடைச்ச பெடியனா பாக்க முடியுமோ? சாதியைப் பற்றி பிரச்சனையில்லை. ஆனா காட் கிடைச்சிருக்க வேணும் எண்ட மாதிரியான கதையள் அங்கை வலு பிரபலம்.

எனக்கென்னவோ சாதி முறையெல்லாம் ஒழிஞ்சு புதுசா காட் கிடைச்ச சாதி, காட் கிடைக்காத சாதி என்று வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.

“என்ன காட் ஆச்சி” எண்டு நான் அவவை கேட்டன்.

“அதுதானப்பு! அங்கை இருக்கிற காட். அது கிடைச்சால்த்தானம் ஆரையேனும் கூப்பிடலாம். என்ரை மூத்த ரண்டுக்கும் கிடைச்சிட்டுது. கடைசிதான் பாவம். இன்னும் கிடைக்காமல் கஸ்ரப்படுறான்.”

மனுசி உண்மையிலேயே கவலைப்பட்டுது.

“ஓமணை. இப்ப கொஞ்சம் கஸ்ரம் தான்.” எண்டு சொல்லி நான் அவவை ஆறுதல்ப்படுத்த முயற்சித்தன்.

எனக்கும் ஆறுதலாயிருந்தது. ஏனென்றால் எல்லாம் உந்த சமாதானத்தாலை தான் எண்டு மனுசி சொல்லவில்லை.

ஆனா எனக்கு இன்னொருவர் அப்பிடிச்சொன்னார். அவரும் வெளிநாடு தான். ஐரோப்பா நாடுகளில இப்ப கோடைகாலம் எண்ட படியாலை நிறையப் பேர் விடுமுறையில தமிழீழத்துக்கு வந்திருக்கினம். விடுமுறை முடிய தங்கடை இடங்களுக்கு போறதுக்கு முதல் தங்கடை பிள்ளையளுக்கு தமிழீழத்தின் அருமை பெருமைகளை அவை சொல்லிக்கொண்டிருக்கினம்.

அதுகள் தங்களுக்குள்ளை டொச்சிலையும் பிரெஞ்சிலையும் இங்கிலிசிலையும் கதைச்சுக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஒரு மல்ரி கல்ச்சர் சிற்றியாக்கி, மாட்டு வண்டிலயும், ஆட்டுக்குட்டியையும் விநோதமாக பார்த்துக் கொண்டிருக்குதுகள். ஒரு காலத்திலை நான் ரெயினைப் பார்த்த மாதிரி.

இதுக்குள்ளை இங்கிலிஷ் கதைக்கிற ஒரு பிள்ளையின்ரை அம்மா சொன்னா. இப்ப டொச்சிலையோ பிரெஞ்சிலையொ படிச்சால் பிற்காலத்தில எங்கடை நாடுகளில வந்து வேலை எடுக்க முடியாதென!. இப்ப இவன் இங்கிலிசில படிக்கிற படியாலை ஒரு காலத்தில எங்கடை நாட்டில வந்து வேலை செய்யலாம் என்ன? நல்ல வேளை நாங்கள் நேரத்தோடை லண்டன் போனது.

நான் அந்த பிற்காலத்தில எங்கட நாட்டுக்கு வந்து வேலை செய்யப்போற பெடியை பார்த்தன். கொசுக்கடியில முகம் எல்லாம் வீங்கி, தடிமனாலை குரல் எல்லாம் அடைச்சு, பெடியை பாக்கவே பாவமா இருந்தது. அவனுக்கு வெயில் ஒத்துக்கொள்ள வில்லையாம் எண்டு அவன்ரை அம்மா சொன்னா.

தனக்கு தமிழீழம் எண்டொரு நாடு சிறீலங்காவில இருக்கு எண்டு அறிவூட்டப்படுகிற ஒரு குழந்தையின் அப்பா தான் அந்த கேள்வியை என்னை கேட்டார்.

“ஏன்.. அசைலம் அடிக்கேல்லையோ.. ஒஸ்ரேலியாவில கஸ்ரமோ?”

தெரியாதெண்டு சொன்னன்.

“விசாரிச்சு பாக்கவில்லையோ?” எண்டு கேட்டார்.

“எனக்கு இப்ப என்ன அவசரம்? வேலை செய்யிறன். படிக்கிறன். அசைலம் பற்றி யோசிக்கவில்லை.” என்று சொன்னன்.

“ஓ.. முந்தி சண்டை நடக்கும் போதாவது அசைலம் அடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்லலாம். இப்ப ஒண்டும் இல்லைத்தானே…” எண்டு அவர் சொல்லிக்கொண்டிருக்க எனக்கு பத்திக்கொண்டு வந்திச்சு. என்ன செய்ய வயசுக்கு மூத்த ஆக்களை எடுத்தெறிந்து பேசி எனக்கு பழக்கம் இல்லையெண்ட படியாலை பேசாமல் இருந்தன்.

யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்டாயிற்று. பஸ்ஸில் தான் வந்தேன். பயணங்களின் போது அது விமானப்பயணமாயினும் எதுவாயினும் எனக்கருகிலிருப்பவர் யாராயிருக்கும் என எதிர்பார்ப்பதும் பின்னர் ஏமாந்து போவதும் தான் எனக்கு அமைந்த வாழ்க்கை. ஆனால் அன்று வழமை மாறியிருந்திச்சு.

அவளுக்கு என்னை விட வயசு குறைவு. லண்டனில் படித்துக்கொண்டிருக்கிற அவளும் விடுமுறையில் வந்து திரும்பினாள். எனக்கு பக்கத்த சீற். தனியத் தான் வந்தாள். லண்டனில் ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் படிக்கிறாளாம். நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம்.

லண்டன் பற்றி நிறைய சொன்னாள். லண்டனில் தமிழ் இளைஞர்கள் படும் கஷ்டங்கள் பற்றி சொன்னாள். அகதி அந்தஷ்த்துக்கள் ஏற்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளும் வேதனைக்குள்ளும் ஆகிறார்கள் என்றாள். ஒரு அறையை சில நேரங்களில் 5 க்கும் மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றாள். சரியான அனுமதியில்லாததால் அடிமாட்டு விலைச் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றாள். மணித்தியாலத்துக்கு மூன்று அல்லது நான்கு பவுண்ஸ் தான் சில சமயங்களில் கொடுக்கிறார்களாம். எவ்வளவு தான் கஷ்ரப்பட்டாலும் வீட்டிலிருந்து பெற்றோர் கதைக்கும் போது அதையெல்லாம் மறைத்து சந்தோசமாக பேசிச் சிரித்து மகிழ்விக்கிறார்கள் என்றாள்.

லண்டனிலிருந்து வருகின்ற ஒரு பேப்பரில் அண்மையில் றெபேக்கா என்பவர் எழுதியிருந்த ஒரு கட்டுரை பற்றி அவளிடம் விசாரித்தேன். I would never marry a tamil man என றெபேக்கா எழுதிய காரணங்கள் சரியானவை தானா என கேட்டேன்.

நாங்கள் பேசிச் சிரித்து வருவதை எமக்கு அருகிலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண் பார்த்துக் கொண்டே வந்தார். முறிகண்டி தாண்டியதும் தான் கேட்டார்.

“வீட்டை வந்து போறியள் போல” அவளைப்பார்த்து தான் கேட்டா.

“ஓம். லீவில வந்து போறன்.”

“எந்த நாடு?”

“லண்டனுங்கோ..”

அவ தன்ரை மகள் ஜேர்மனியில எண்டா. மகள் இப்ப புருசனோடையும் பிள்ளையளோடையும் கொழும்பில வந்து நிக்கிறதாகவும் தமிழ்ச்செல்வன் ரண்டு கிழமை காலக்கெடு விதிச்சிருக்கிற படியாலை என்னவும் நடக்கலாம் எண்டு கொழும்பில நிக்கிறதாகவும் இந்த இடைப்பட்ட காலத்தில நுவெரெலியா கண்டிப்பக்கம் போகலாம் எண்டு தன்னையும் கூப்பிட்டவையாம். ரண்டு கிழமை முடிய யாழ்ப்பாணம் வாறதைப்பற்றி யோசிப்பம் எண்டவையாம்.

“தம்பி அப்ப நீர் லண்டனுக்கு போய் எவ்வளவு காலம்” எண்டு அவ என்னைப்பார்த்து கேக்க எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிட்டுது.

“இல்லைங்கோ.. நான் லண்டனில்லை. நான் கொழும்பு” எண்டன்.

மனுசி கொஞ்சம் குழம்பிப் போன மாதிரி இருந்திச்சு. மனுசி எங்களை என்னெண்டு நினைச்சுப் பார்த்திருக்கும் எண்டதை நான் நினைச்சுப் பார்த்தன். கொஞ்சம் சங்கடமாவும் கொஞ்சம் வெக்கமாகவும் இருந்திச்சு.

நான் மனிசியைப் பாத்தன். அவ இப்ப கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்திச்சு.

ஓ.. அப்ப இனி இவ உம்மை கூப்பிட வேணுமென்ன? மனுசி திடீரென்று கேட்டுது.

எனக்கு இதுக்கும் மேலையும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்திச்சு. வலு விபரமா அவவுக்கு நான் எடுத்துச் சொன்னன்.

ரண்டு பேரும் சின்னப்பிள்ளையளா இருக்கேக்கையே நினைச்சன். எண்டாலும் இப்ப உப்பிடி நடக்குது தானே.. எண்டு மனுசி சமாதானம் சொன்னா

பிறகு மனுசி லண்டன் நிலவரங்கள் பற்றி அறியத்தொடங்கினா.

கனநேரத்துக்கு பிறகு நான் எதிர்பார்த்த அந்த கேள்வியை அவ கேட்டா.

“அப்ப உமக்கு லண்டனில காட் கிடைச்சிட்டுதோ?”

பிற்குறிப்பு: ஓமந்தை சோதனை சாவடியில் இறங்கி ஏறிய போது அவ லண்டன் பெண்ணைப் பார்த்து கேட்டாவாம். உமக்கு அந்த பெடியனுக்கு பக்கத்தில இருக்கிறதுக்கு ஒரு மாதிரி இருந்தா சொல்லும். சீற்றை மாத்துவம்.

எனக்கு அது தான் பிடிச்சிருந்தது. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணை தன் மகளாக நினைத்து அக்கறையோடை கேட்டா பாருங்கோ அங்கை தான் அவ ஒரு தமிழ் பொம்பிளையா நிக்கிறா. என்ன! அவவை மாதிரியான ஆக்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில இருக்கினம்.

தொடர்ந்தும் சொல்லுவன்

By

Read More

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.

தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா.

இது எனக்கு முதலாவது அற்றாக்.

அனந்தன் அது நானில்லைங்கோ அது அவர் என்று என்னைக்காட்டி நெளியுறான்.

சேயோன் சிரிசிரியெண்டு சிரிக்கிறான். எட நாசம் கட்டினது. என்ரை மூஞ்சையைப்பாத்தா வெளிநாட்டில இருந்து வந்தவன் மாதிரி தெரியேல்லையாம். நான் என்ன செய்யிறது.

என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.

எண்டாலும் என்ரை முகம் கொழு கொழு மொழு மொழு எண்டு இல்லையாம். வெளிநாடுகளில இருந்து வாறவை அப்பிடித்தானாம் இருக்கிறவை.

நான் என்னத்தை செய்ய? என்ரை முக விருத்தம் அப்பிடி!

இப்ப நான் சோமிதரனோடை கிளிநொச்சிக்கு போறன். ஒரு பின்னேரப் பொழுது. கிளிநொச்சியில திட்டமிடல் செயலகத்தில க.வே பாலகுமாரனை சோமிதரன் ஏதோ ஊடக அலுவலாய்ச் சந்திச்சு கதைச்சுக் கொண்டிருந்தான். நான் அந்த இடங்களை சுத்திப் பாத்துக்கொண்டிருந்தன்.

இப்ப பாலகுமாரன் என்னோடை கதைக்கேக்கை சொன்னார். நான் முதலில நினைச்சன் நீர் லோக்கல் ஆள் எண்டு.

இது எனக்கு ரண்டாவது அற்றாக்.

பிறகு சோமிதரன் சொன்னான். நீ கை இல்லாத கலர் பனியன் போட்டுக்கொண்டு வாறதுக்கு பதில் உப்பிடி வெள்ளைச் சேட்டோடை வந்தால் எப்பிடித் தெரியும் நீ வெளிநாடு என்று?

எட! இது வேறையோ? நான் வெயிலுக்கு வெள்ளைச் சேட்டுத்தான் நல்லது எண்டு போட்டுக்கொண்டு போனனான்.

இப்ப திரும்பவும் கொழும்பில! படிச்ச பள்ளிக்குடத்துக்கு போறம். நான் சேயோன் நிரஞ்சன் மற்றது ஜெயகாந்தன் ஜீவன். எல்லா ஆசிரியர்களையும் சந்திச்சு கதைச்சம்.

என்னடா ஒரு அற்றாக்கையும் காணவில்லையே என்று நான் நினைக்கிறன். நினைக்க விழுகுது அடி!

ஒரு ரீச்சர் கேட்டா! அவுஸ்ரேலியாவில வெயில் கூடப் போல..

நான் சேயோனைப் பாத்துட்டு எனக்குள்ளை சிரிச்சன். ‘ அப்ப கனடாவில எப்பிடியிருக்கும் வெயில்’

(தொடர்ந்தும் கதை சொல்லவன்)

By

Read More

× Close