மகாப் பிரபுக்கள்

கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார்.

கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு அப்பால் விநாசித்தம்பியின் வீட்டுக் கிணறு இருந்தது.

ஐயாவிற்குப்பிறகு கனகுராசா கக்கூசுக்கு மேலுமொரு பெருமையைச் சேர்த்தார். ஊருக்கு மின்சாரம் வந்தபோது முதன்முதலாய் லைற் ஒளிர்ந்த கக்கூசும் அதுதான். அன்றைக்கு கக்கூசுக்குப் போன கனகுராசா “அன்னம்மா லைற்றைப் போடு” என்று கத்தினார். இருண்ட குகையில் தீபம் ஏற்றியதுபோல வெளிச்சம் அங்கு பரவியது. கனகுராசா இரு கைகளையும் மேலே குவித்து “சிவபெருமானே, செகசோதியாக இவள் எரிகிறாள்” என்று பரவசம் மேலிடக் கூவினார். அதற்குப் பிறகு, அவர் கக்கூசுக்குப் போவதற்கு (அதாவது வருவதற்கு) இரண்டு விடயங்கள் நிபந்தனைகள் ஆயின.
1. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சற்றுச் சூடான நீர் குடிக்க வேண்டும்.
2.பகலோ இரவோ காமாட்சி விளக்கு தலைக்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

கனகுராசாவின் ஐயா முன்னர் அரைச்சுவரில்தான் கக்கூசைக் கட்டினார். மேலே கூரையில்லை. எழுந்து நின்றால் நீதிமன்ற குற்றவாளிக் கூட்டுக்குள் நிற்பதைப் போலத் தோன்றும். கனகுராசரின் மகன் குமாரலிங்கம் வளர்ந்து பெரியவனாகி, அவனை ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பும் வரை அது அப்படியேதான் இருந்தது.

குமாரலிங்கத்திற்கு ஒரு பழக்கமிருந்தது. கக்கூசின் உள்ளே நுழைந்து ஓலையால் அடைத்த தட்டியினால் வாசலை அடைப்பான். அரைச்சுவர் அவனது இடுப்பளவில் முடியும். சுற்றும் முற்றும் கம்பீரமாகப் பார்ப்பான். பிறகு “கனம் கோட்டார் அவர்களே, நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை” என்றவாறு உட்காருவான். எப்போதாவது வயிற்றில் ஏடாகூடமாகி “போய்க்கொண்டே” இருந்த நாட்களில் கூட இந்தப் பழக்கத்தை அவன் கை விட்டானில்லை. வேகமாக வயிற்றைத் தடவியபடி “ஓட்டத்தை தடுத்திருக்க வேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இந்த சட்டத்தைப் பேசுவோர். செய்தார்களா.. வாழவிட்டார்களா என் கல்யாணியை..”

கனகுராசர் முதலில் ஓலைத் தட்டிக்குப் பதிலாக கக்கூசுக்கு அரைக்கதவு ஒன்றினைப் போட்டார். தபாற்கந்தோர்களில் உள்ளதைப் போலிருந்தது அது. தகரக் கதவு. பல இடங்களில், துருவேறி கை வைத்தால் சொரிந்து விடும் என்பது போல அது இருந்தது. ஏற்பு ஆக்காமலிருக்க கவனமாகக் கையாள வேண்டியிருந்தது.

வாளியை மற்றக் கைக்கு மாற்றியபடி கனகுராசர் முறைத்தார். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தெரிந்தன. வாளிக்குள் இருந்து தண்ணீர் சொட்டுச் சொட்டாக நிலத்தில் சிந்தி புழுதி மணலில் வட்டப்புள்ளிகளைப் போட்டன

“இங்கே ஒரு கிழவன் அடக்கிக் கொண்டு இத்தனை நேரமாக நிற்பதாவது தெரிகிறதா” என்று அவர் கத்தினார். பிறகு சற்றுக் குரலை அடக்கி “நான் உள்ளே போய்விட்டு வர எப்பிடியும் அரை மணித்தியாலம் ஆகும். அப்பொழுது கக்கூஸைப்பற்றி நன்றாக விவரிக்கலாம், எனக்கு இப்பொழுது வயித்தைக் கலக்குது. மூத்திரம் வேறு முட்டுது, ஆத்திரத்தைக் கிளப்பாமல் முதலில் என் பாத்திரத்தை வார்ப்புச் செய்” என்றார்.

பதிலுக்குக் காத்திராமல் நடந்தார். எழுபது வயதாகிறது. உடலில் சுருக்கங்கள் தோன்றியிருந்தாலும் நடையில் தளர்வில்லை. குறுகுறுவென்று வேகமான நடை. மத்தியான வேளைகளில் வாசிகசாலைக்குப் போவதாயினும், பின்னேரப் பொழுதில் கள்ளுக்குப் போவதாயினும் நடந்தே போய் வருவார். தவறணையில் அளவு கணக்கின்றிக் குடித்த நாட்களில் மட்டும் வேலிகளையும் மதிச்சுவர்களையும் தடவியபடி வீட்டுக்கு வந்து சேர்வார்.

அப்படியொருநாள், பின்னேர வெயில் எறித்துக்கொண்டிருந்தது. முடக்க முடக்கக் குடித்துவிட்டு வந்தவர் பாதையோர வேலிக்குள் தடுமாறிச் சரிந்தார். அரையில் கிடந்த வேட்டியும் அவிழ்ந்தது. கண்களுக்குள் வெள்ளையும் சிவப்பும் பச்சையுமாய் எல்லா வண்ணங்களிலும் புள்ளிகள் மின்னின. விழுந்து கிடந்ததை மூளை கிரகித்தது.

மோட்டர் சைக்கிளில் வந்த இரண்டு இயக்க இளைஞர்கள் அவரைத் துாக்கி நிமிர்த்தினார்கள். கண்களைப் புழுந்திப் புழுந்தி இளைஞர்களைப் பார்த்தார் கனகுராசர். திரும்பவும் விழுந்து படுத்தார்.

கனகுராசரின் கக்கத்துக்குள் கை வைத்து மீண்டும் அவரைத் துாக்கி நிறுத்திய போது அவர் கீச்சிட்ட குரலில் சொன்னார். “விடுங்கோடா என்னை, எனக்கு பங்கர் வெட்டிற தெம்பில்லை. மண்வெட்டியைத் துாக்கவே முடியாது.”

“எணை, உங்கடை வீடெங்கயணை..”

“ஏன், எல்லாரையும் அள்ளிக் கொண்டு போப்போறியளே.. வீட்டில ஆருமில்லை. நான் தனிக்கட்டை”

போராளிகளுக்குச் சிரிப்படக்க முடியவில்லை. அருகிலாக சைக்கிளில் போனவரிடம் கனகுராசாவின் வீடு எங்கு இருக்கிறதென விசாரித்தார்கள், அவரைக் குண்டுக் கட்டாகத் துாக்கி கால்களை விரித்து மோட்டர் சைக்கிளில் இருத்தினார்கள். இரண்டு இளைஞர்களுக்கும் நடுவிலாக கனகுராசர் ஒரு பூனைக்குட்டியைப் போல இருந்தார். பின்னாலிருந்தவன் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். வழி முழுக்கத் திமிறியபடி வந்தார். “இறக்குங்கோடா என்னை, மயிராண்டியளே..”

வீட்டின் வாசலில் அவரை இறக்கினார்கள். “வீட்டில ஆருமில்லயே..”

மனிசி ஓடிவந்தா, கனகுராசர் கொஞ்சம் தெம்பாகியிருந்தார். தலையைக் குனிந்தபடி உள்ளே போனார்.

கக்கூசிற்குள் உள்ளிருந்து கனகுராசர் பெருங்குரலெடுத்துச் சிரித்தார். “ஹாஹா ஹாஹா ஹா” கதவிடுக்குகளினால் சுருட்டுப் புகை வெளியேறியது. “பிடிக்காது, இப்படியெல்லாம் நடந்தது என்றால் எவனுக்கும் பிடிக்காது. நம்பமாட்டாங்கள். கனகுராசரின் கைலியை அவிழ்த்தெறிந்து விட்டு அவரின் ஆண்குறியில் ஏறி மிதித்தார்கள் என்றால் மனது நிறைகிறவர்களுக்கு இதெல்லாம் வெறும் மாயத் தந்திரமாய்த் தோன்றும்” என்று சத்தமிட்டவர், தனக்குள் “சீஸன் தெரியாதவன்” என்று முணு முணுத்தார்.

கக்கூசுக்குள்ளிருந்து இப்படிச் சத்தமாகக் கதைப்பது கனகுராசருக்கு பழகிவிட்டிருந்தது. எதையோ மறந்து திடீரென நினைவு வந்தவராக உள்ளிருந்து அவர் கத்துவார்.

“அந்த அரைப்பைக் காய்ச்சு,”

“எண்ணெயைப் பதமாச் சுட்டு கிணத்தடிக்கு கொண்டுவா”

“சுருட்டணைஞ்சு போச்சு. நெருப்பெடுத்து வாறியே”

இதனாலேயே குமாரலிங்கம், இவர் கக்கூசுக்கு லைற் போட்ட அடுத்தநாள், வெளிச்சுவரில் “ஒளி, ஒலி ஏற்பாடு கனகுராசு” என்று எழுதியிருந்தான். உள்ளே “தயவு செய்து அமைதி பேணவும்” என்றும் அவனால் பள்ளிக்கூட சோக் பீஸினால் எழுதப்பட்டிருந்தது. அவன் இருக்குமட்டும் பெரிதாகத் தோன்றவில்லை. வெளிநாட்டுக்குச் சென்ற பிறகு “தயவு செய்து அமைதி பேணவும்” என்பதை வாஞ்சை மிகுந்து விரல்களால் கனகுராசர் தடவுவார். குமாரலிங்கம் அவருக்கு ஒரேயொரு பையன். அடைத்துக் கொள்வதைப் போலிருக்கும். மனதுதான். எப்போதாவதுதான் கக்கூசு அடைத்துக் கொள்ளும்.

கக்கூசுக்கு முழுச்சுவர் கட்டி கூரைபோடுகிற நிலை வந்தபோதும் அவர் குமாரலிங்கத்தின் கை பட்ட எழுத்துக்களை அழியாது பாதுகாத்தார். மேசன் வேலைக்கு வந்த பெடியன், “ஓமோம், தஞ்சாவூர் கோவிலில் ராசராசன் கல்வெட்டு” என்று நக்கலடித்தபோதும் “உனக்கொண்டும் தெரியாது. நான் சொல்வதைச் செய்” என்று அவனைத் திட்டினார்.

உண்மையில் கனகுராசர் கக்கூசை இரண்டு தடவைகள் புனரைமைத்தார். முதற்தடவை சீமெந்து வரத்து இருக்கவில்லை. வடக்கிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால் பதிலாக, கல்லும், சுண்ணாம்பும், கள்ளிச்சாறும், சர்க்கரையும் கலந்து கல்லறுத்து அடுக்கலாம் என்று ராமசாமி மேசன் சொன்னார். கனகு ராசருக்கு அதில் பெரிதாக நம்பிக்கையிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் அப்படித்தான் கட்டியிருந்ததாகவும், சண்டை நேரம் அதை ஆட்லறியாலேயே உடைக்க முடியாமல் பெடியள் திணறியதாகவும் ஊருக்குள் ஒரு கதையிருந்தது. சுவரில் ஓட்டையைப் போட்ட ஆட்லறிகள் ஒவ்வொன்றும் முனை மழுங்கி கீழே அகழியில் விழுந்து “புஸ்..” என்ற இரைச்சலோடு ஆறி அடங்கினவாம்.

நிறைவெறியில், கணேசுவின் வீட்டுக்குள் புகுந்து அவனின் மனைவியின் கையைப் பிடித்து இழுத்த பொன்னம்பலம் மேலும் ஒரு கதை சொன்னான். காவல்துறை அவனை இழுத்துச் சென்று கேஸைப் போட்டு ஆறு மாதம் உள்ளே தீட்டியது. அவர்களின் நீதிமன்றில் ஓர் இளம் பெண்ணே நீதிபதியாயிருந்தார். முப்பது வயதுகளிருக்கும். பொன்னம்பலம் அவரைப் பார்த்து “பிள்ளை, என்ரை மனிசியும் பூப்போட்ட சட்டைதான் போட்டிருக்கிறவ. அதுதான் குழம்பிவிட்டேன். பெரிசு படுத்தாதேயும்” என்ற பிறகு நீதிபதி ஆறுமாத கடூழியத் தண்டனையை அவனுக்கு வழங்கினார்.

தண்டனை முடிந்து வந்த பொன்னம்பலம் கனகுராசரிடம் கோட்டைச் சுவர் ஒவ்வொன்றும் கருங்கல்லைப் போல இருந்தன என்றான். ஒரு முழம் உடைக்க ஒரு நாட் சென்றதென்று கண்களை அகல விரித்துச் சொன்னான். அவனது உடல் வற்றிப் போயிருந்தது. “பூழலி மக்கள்” என்று திட்டினான். பிறகு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “நான் ஒல்லாந்தரைச் சொன்னேன்” என்றான்.

இதற்குப் பிறகே கனகு ராசர் கக்கூசையும் ஒல்லாந்தர் பொறிமுறையில் கட்ட இணங்கினார். மேசன் ராமசாமி எங்கிருந்தோ சிப்பிகளைச் சுட்ட சுண்ணாம்புச் சாக்குகளை கொண்டு வந்து இறக்கினார். கடற்கரை வெளியில் நின்ற நாகதாளி கள்ளிச் செடிகளை அடியோடு வெட்டிவந்தார்கள். சர்க்கரைக்குத்தான் தட்டுபாடாக இருந்தது. அந்தக் காலத்தில் தேனீரில் சீனிக்குப் பதில் சர்க்கரையைத்தான் நக்கிக் குடித்தார்கள். சங்கக்கடையில் வாங்கியது போக ஒன்றிரண்டு கடைகளில் மொத்தம் ஏழு கிலோ சர்க்கரைதான் கிடைத்தது. சர்க்கரைப் பையைப் பிரித்து சுண்ணாம்பில் கொட்டிய போது கனகு ராசரினதும் அன்னம்மாவினதும் வயிறுகள் ஒரு சேர எரிந்தன.

ராமசாமி மேசன் பதமாக சர்க்கரையும் சுண்ணாம்பையும் கல்லையும் மண்ணையும் கள்ளிச் செடிச் சாற்றையும் தண்ணீர் விட்டு கலந்தார். கற்கள் அரிந்தார். நான்கு நாட்களின் பிறகு கற்கள் காய்ந்திருந்தன. அதிலொன்றைக் கைகளில் ஏந்திய ராமசாமி மேசன், “யாழ்ப்பாணம் கோட்டைக்கும் உன்ரை கக்கூசுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான், அதுக்கை ஆமி இருந்தவன். இதுக்கை நீ இருக்கப் போறாய்” என்றார். “ஒவ்வொரு கல்லும் வைரம் மாதிரி வந்திருக்கு..”

கனகு ராசாவிற்கு புளுகம் தாங்க வில்லை. பின்னேரத்திற்கிடையில் ராமசாமி மேசன் முழுச சுவற்றினை எழுப்பி முடித்திருந்தார். இரண்டொரு நாளின் பிறகு மேலே சீற் போடலாம் என்றார்.

அன்றைக்கு இரவு நல்ல மழை பெய்தது. கனவில் கக்கூசிற்கு குடிபூரல் நடாத்துவதைப் போன்றதொரு விநோதமான கனவை கனகுராசர் கண்டார். அத்திவாரத்திற்கு யானைமிதி மண்ணைச் சேர்க்கவில்லை என்று குடிபூரலுக்கு வந்த யாரோ குறைப்பட்டுக் கொண்டார்கள். நிறைய மொய் சேர்ந்தது. விநாசித்தம்பி ஆயிரம் ரூபாய் போட்டது கனகுராசருக்கு ஆச்சரியமாயிருந்தது. “உலகம் அழியப்போகுது..”

காலையில் கக்கூசின் அரைவாசி முழுதும் அழிந்திருந்தது. அதன் கரையெங்கும் கற்கள் சொரிந்து விழுந்து பாதி நீரில் கரைந்தும் மிகுதி கரையாதும் இருந்தன. சுண்ணாம்புக் கூழ் நிலமெங்கும் வெள்ளையாய் ஓடியது. கரைந்தொழுகிய கற்களுக்குள் சிறு சிறு சர்க்கரைக் கட்டிகள் முழிப்பாய்த் தெரிந்தன. அன்னம்மா தலையில் கைவைத்து உட்கார்ந்தாள்.

“அருமந்த சர்க்கரை, அவ்வளத்தையும் வைரவருக்குப் பொங்கிப் படைச்சிருக்கலாம்.”

கனகுராசர் அடுத்த நாட்களில் ராமசாமி மேசனைத் தேடித்திருந்தார். ராமசாமி கூலிக்காசும் வாங்க வராமல் எங்கோ மறைந்தார்.

அதற்குப் பிறகு, நீண்ட காலத்தின் பிறகு இரண்டாவது தடவையாக ஒரிஜினல் சீமெந்தில் கனகு ராசர் கக்கூஸைக் கட்டி முடித்தார்.

0 0 0

குமாரலிங்கம் வரப்போகிறான். குழந்தை குட்டிகளோடு வரப்போகிறான். கனகு ராசர் பொங்கிப் பிரவாகித்தார். அன்னம்மா உள்ள நாட்டுப் பணியாரங்களைச் செய்து முடித்தார். கனகுராசர் குமாரலிங்கத்தையும் பேரக்குழந்தைகளைப் பற்றியுமே அதிகம் கதைத்தார். அன்னம்மாவிற்கு அது என்னவோ போலிருந்தது. ஒருநாள் கேட்டு விட்டாள்.

“என்ன இருந்தாலும் எங்கடை மகனை நம்பி வந்த பெட்டை, நீங்கள் அதோடை நல்ல வாரப்பாடு இல்லை.”

“நீ, ஆரைச் சொல்லுறாய்” என்று அன்னம்மாவை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் கனகுராசர்.

“மருமகளைத்தான்.. மகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யிறியள், அவளுக்கு என்ன பிடிக்கும் என்று ஒரு வார்த்தை என்னட்டைக் கேட்டீங்களே.. ”

கனகு ராசர் அமைதியாக இருந்தார். வெறுமையான பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. முகட்டைப் பார்த்து வெறித்தார். “ம்.. எனக்கும் கவலைதான் அன்னம்மா.. என்ரை மனசு தவிக்கிற தவிப்பு ஆருக்கு விளங்கும்.. ம்.. ”

அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிறார்”

அன்னம்மா எதுவும் புரியாமல் விழித்தாள். மருமகளின் பெயர் கவிதா தானே.. இவர் எதையோ மறைக்கிறார். மகன் வரட்டும் அவனையே கேட்டு விடுகிறேன்..என்று நினைத்துக் கொண்டாள்.

கனகுராசர் அதே கக்கூசிற்குள் பழைய மாபிள் குழியைக் கொத்திக் கிளறி விட்டு புதிதாக ஒரு கொமேட் கட்டினார். ராமசாமி மேசன் தான் வேலை செய்தார். பழைய கோபமெல்லாம் மறைந்து இப்பொழுது அவர் நல்ல வாரப்பாடு. வேலை முடித்து தண்ணீர் இணைப்பையெல்லாம் சரிபார்த்து ஒருதடவை அழுத்தினார். “ஸ்…” என்ற சத்தத்தோடு அருவிமாதிரி தண்ணீர் கொட்டியது. “சும்மா வழுக்கிக்கொண்டு போகும்” என்றார் ராமசாமி.

0 0 0

குமாரலிங்கம் வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. பேரப்பிள்ளைகளுக்கு திறந்த முற்றமும் பின்கோடியும் புதுமையாக இருந்தன. கண்டபடிக்கு ஓடித்திரிந்து விளையாடினார்கள். அவர்களின் குழப்படியில் வீடு இரண்டாகியது. அன்னம்மா அவர்களை துாக்கி வைத்துக் கொஞ்சினாள். மருமகள் தான் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

ஒருநாள், அது நடந்தது. குமாரலிங்கம் வெளிக்குப் போய் வந்தான். கனகு ராசர் அவனைப் பெருமை பொங்க பார்த்தார். “எப்பிடி” என்னுமாற்போல இருந்தது அந்தப் பார்வை. “ஒரு மாதிரி இந்தக் கக்கூஸை முழுசாக் கட்டி முடிச்சிட்டன்”

குமாரலிங்கம் தகப்பனை ஒரு புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தான். “இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லயோ.. பழைய நிலப்பிரபுக் கூறுகளை இன்னமும் கொண்டலைகிறீர்களே.. ”

“உங்களுக்கென்று காணி, உங்களுக்கு என்று வீடு, உங்களுக்கென்று கக்கூசு, எல்லாமே நிலச்சுவாந்தர்களது மனநிலை. உங்கடை மகன் என்று சொல்லவே வெட்கமாயிருக்கு..” என்று குமாரலிங்கம் சொல்லி முடித்தபோது கனகு ராசர் நெஞ்சைப் பொத்திக் கொண்டு சரிந்தார்.

அவரை கட்டிலில் வளர்த்தியிருந்தார்கள். குமாரலிங்கம் அவரைப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். ஒருவார்த்தை பேசினான் இல்லை. கனகுராசர் அவனை அப்பாவியாப் பார்த்தார். கண்களில் நீர் கோர்த்திருந்தது. “ஒரு கக்கூசு கட்டியது குற்றமாய்யா..” என்ற சிறுபிள்ளைப் பார்வை அதிலிருந்தது. அவர் சற்று நேரத்தின் பின் மகனைப் பார்த்து “கொஞ்சம் திரும்பு” என்றார். குமாரலிங்கம் விழிகளில் கேள்விகளை ஏந்தியிருந்தான். கனகுராசர் மீண்டும் திரும்பிப்பார் என்பதாக கைகளால் சைகை செய்தார். திரும்பினான்.

தகப்பனைப் போலவே வட்டமுகம். இரண்டு கண்களுக்குச் சற்றுக் கீழே கூரான மூக்கும் மேலே அடர்த்தியான புருவங்களும் இருந்தன. தலைமுடி மேற்தலையில் முழுதுமாகக் கொட்டியிருந்தது. ஓரங்களில் படித்து வாரைியிருந்தான். ஓர் அறிவாளியின் தோற்றம் அவனிடமிருந்தது. இடது கண்ணின் சற்று கீழாக பெரியதொரு மச்சம். சிறுபிள்ளையாக இருந்த போது சிறு புள்ளியாக இருந்தது. வளர்ந்து பரவியிருந்தது. கொஞ்சம் தொப்பை போட்டிருந்தான். பியர் இன்றிக் கழியாத நாட்களின் விளைவு.

கனகுராசர் மகனைத் தொட்டுத் திருப்பினார். அவரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் குழறின. “நீ வேறு இளந்தாரிப் பெடியன். உன்னைச் சரியாக விவரிக்காவிட்டால் உன்னை அவனாகக் கற்பனை செய்துவிடுவார்கள். அது பாவம். பிள்ளைப் பூச்சி” வார்த்தைகள் தேய்ந்தன. அவர் கைகளை நெஞ்சில் குவித்தார். “அன்னம்மா என்னை மன்னிச்சுக் கொள்ளு.. உன்னை நான் இடை நடுவில விட்டுட்டு போறன்.. மருமோள், உன்னை நான் வெளியயும் வரவிடல்லை. மன்னிச்சுக் கொள்ளு.. மகன்.. நீயும் என்னை மன்னிக்க வேணும். தமிழ்நாட்டு வாசகர்களும் என்னை மன்னிக்க வேணும். உங்களுக்கு நிறைய விசயங்கள் விளங்கியிருக்காது.குறிப்பா சர்க்கரைக்கும் சீனிக்கும் என்ன வித்தியாசமென்று.. ஏனெனில் உங்களுக்கு ஏகே 47க்கும் பிஸ்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதென்று கேள்விப்பட்டுள்ளேன். ..”

கனகுராசரின் தொண்டைக் குழியின் உருண்டை மேலும் கீழுமாக இறங்கி ஏறியது. அன்னம்மா வாயில் தண்ணீர் பருக்கினார். கனகுராசரின் கண்களில் மேகங்கள் மிதப்பதாகத் தோன்றியது. அதனிடையே அரைச் சுவர் கக்கூசு.. குமாரலிங்கம் ஒரு சிறுவனாக உள்ளே ஏறினான். நிலச்சுவாந்தர்கள் எனத் தொடங்கி கைகளை வீசி என்னமோ பேசினான். கனகுராசர் பெருமையாய் உணர்ந்தார். காலடியில் அன்னம்மா உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பேரக்குழந்தைகளின் விளையாட்டுக் குரல் காதுகளில் சிறு ஒலியாய்த் தேய்ந்தது. மூச்சுக்கள் சீரற்றவையாயின. கண்களில் பனித்திரையொன்று படர்ந்தது. அதனுாடு குமாரலிங்கம் தெரிந்தான். அச்சு அசல் சிறுவயது கனகுராசர். இதழோரம் புன்னகை வழிந்தது. ஒன்றிரண்டு தடவைகள் விக்கினார். மீண்டும் நீர் பருக்கினார்கள். அன்னம்மா பேரக்குழந்தைகளை காலடியில் நிறுத்தி “தேவாரம் பாடுங்கோ” என்றார். அவர்கள் ஆளையாள் பார்த்து முழுசினார்கள்.

கனகுராசருக்கு நெஞ்சடைப்பதாய் உணர்ந்தார். மூச்சுக்கள் முட்டி மோதின. உடலின் பாரம் குறைவதைப் போலத் தோன்றிற்று. மேகங்களில் மிதப்பதைப் போல.. கண்கள் இருளடைந்தன. தீடீரென்று ஆவேசம் கொண்டவரைப்போல அவர் எழுந்தார். “நாசமாப் போறவனே, கெதியில சாகடித்துத் தொலையேண்டா..” என்று கத்தினார்.

“இல்லை.. முன்னைப்பின்ன செத்துப் பழக்கமில்லை. அந்த அனுபவமுமில்லை. வாழ்க்கையில் செத்தேயிராதவன் சாவினைப்பற்றிச் சொல்வது இலக்கிய நேர்மையற்ற மொள்ளமாரித்தனமல்லவா..”

“ஓ…” என்று கூவியவாறு சரிந்தார் கனகுராசா.

இருண்மையைப் பசையாய்க் குழைத்துப் பூசிய நீளும் பெருங் குகையொன்றில் முன்னே விரிந்த இருள் வெளியில் சிறகடித்தபடியிருந்தது உயிர்ப் பறவையொன்று. காலங்களை விழுங்கியிருந்த வெளியின் ஆதியில் அசைவற்ற பறவையின் உடற் கூடொன்று குளிர்ந்த காற்றில் மிதந்தபடியிருந்தது. வழிமுழுதும் பறவைகள், வௌவால்களாய், அந்தம், யாருமறியாத உயிரின் ரகசியங்களை பேரொளியில் வீசியெறிந்தது. வெளியில் வெம்மைக் காற்று, பெரும் ஊழிக்காற்று..

கனகுராசர் இரு கைகளையும் “நிறுத்து நிறுத்து” என்பதைப்போல திணறி விசுக்கினார். காதுகள் அடைத்து மூச்சுத் திணறியது.

கடல் திரண்டு மேலெழுந்தது. மேலே.. இன்னும் மேலே.. இருள் நீரின் திவாலைகள் சூரியனின் தீயின் நாக்குகளில் தெறித்தன. நாவடங்கியது. பரவியிருந்த வெளிச்சத் திரளை கருகிய புகை கொஞ்சம் கொஞ்சமாய் மூடிப்படர்ந்தது. இருளானது பிரபஞ்சம், விரியும் பெருங் கருங்குகையின் சுவர்களில் மோதிவிடாதபடி ஒரு பறவை, அதன் சீரான சிறகடிப்பையன்றி நிசப்தம்….

கனகுராசரால் தாள முடியவில்லை. அவரது நெஞ்சு வெடித்ததை கடைசியாக அவர் உணர்ந்தார். கடைசி வார்த்தைகளை மூளை கிரகிக்க முன்னதாக உயிர்ப்பறவை மேலெழுந்தது. கனகுராசரின் காதுகளில் இருந்து ரத்தம் வழிந்தபடியிருந்தது.
(நிராகரிக்கப்பட்ட கதையொன்று)

10 Comments

  1. >அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.

    மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி 🙂

  2. >அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.

    மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி 🙂

  3. >“இல்லை.. முன்னைப்பின்ன செத்துப் பழக்கமில்லை. அந்த அனுபவமுமில்லை. வாழ்க்கையில் செத்தேயிராதவன் சாவினைப்பற்றிச் சொல்வது இலக்கிய நேர்மையற்ற மொள்ளமாரித்தனமல்லவா..”

    இந்த அட்டிலரி அடி விளங்குது, அதுதான் நானும் அரசியல் கதைப்பதை விட்டுவிட்டேன் !

  4. >“இல்லை.. முன்னைப்பின்ன செத்துப் பழக்கமில்லை. அந்த அனுபவமுமில்லை. வாழ்க்கையில் செத்தேயிராதவன் சாவினைப்பற்றிச் சொல்வது இலக்கிய நேர்மையற்ற மொள்ளமாரித்தனமல்லவா..”

    இந்த அட்டிலரி அடி விளங்குது, அதுதான் நானும் அரசியல் கதைப்பதை விட்டுவிட்டேன் !

  5. //அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.// இது ஜேகே மீதான எள்ளல் என்பதையும் தாண்டி கதையின் ஓட்டத்திற்கும் உதவி இருக்கு – உங்கள் கெட்டித்தனம்.

    //தமிழ்நாட்டு வாசகர்களும் என்னை மன்னிக்க வேணும். உங்களுக்கு நிறைய விசயங்கள் விளங்கியிருக்காது.குறிப்பா சர்க்கரைக்கும் சீனிக்கும் என்ன வித்தியாசமென்று.. ஏனெனில் உங்களுக்கு ஏகே 47க்கும் பிஸ்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதென்று கேள்விப்பட்டுள்ளேன். ..”// இந்த திமிரோடான நக்கல்தான் எனக்கு உங்கள் எழுத்தில் மிகப்பிடித்த விசயம்.

    // “நீ வேறு இளந்தாரிப் பெடியன். உன்னைச் சரியாக விவரிக்காவிட்டால் உன்னை அவனாகக் கற்பனை செய்துவிடுவார்கள். அது பாவம். பிள்ளைப் பூச்சி” // இது தான் ஊமைக் குசும்பா ?

    இது தனியே ஒரு சிறு கதை, தனியே ஒரு அரசியல் பார்வை, தனியே ஒரு அங்கீகாரத்திற்கு ஏங்கும் எழுத்தாளனின் வலி, தனியே உங்கள் விமர்சனங்களின் மீதான எள்ளல்: இத்தனை பரிமாணங்களை சேர்ந்து படைத்ததில் நீங்கள் ஒரு பேய்காய் எண்டு நிருபிக்குறீர்கள்.

    // “ம்.. எனக்கும் கவலைதான் அன்னம்மா.. என்ரை மனசு தவிக்கிற தவிப்பு ஆருக்கு விளங்கும்.. ம்.. ”// இந்த இடத்தில் நீங்கள் மளுப்புகிறீர்கள் அல்லது, ஆதரவாளர்களின் காட்டமான விமர்சனத்திற்கு பயந்து அல்லது ஆதரவுக்கு நாடி சேப் பண்ணப் பாக்கிறியள் எண்டு திரும்ப பூதம் கிளம்பும். பூததிற்கு பயந்தா கிணறு கிடைக்குமா ?

    ஆனா சயந்தன் அண்ணை, உங்கள் முதிர்ச்சிக்கு நீங்கள் இந்த உணர்வை இப்படி வெளிப்பட்டு போட்டு உடைப்பீர்கள் (உங்கள் பாணியிலேயே) என்று நான் எதிர்பார்க்கவில்லை……

  6. //அந்த இரண்டு முதிர்ந்த ஜீவன்களுக்கிடையிலும் மௌனம் ஒரு புகையைப் போல படர்ந்தது சற்று நேரத்திற்கு. பின்னர் புகையைச் சுளகால் அடித்துக் கலைப்பது போல கனகுராசரின் வார்த்தைகள் மௌனத்தைக் கலைத்தன. “இன்னொரு ஒன்றரைப் பக்கத்தில் எல்லாம் முடிந்து விடும். அதற்கிடையில் புதியதொரு பாத்திரத்தை உள் நுழைக்கக் கூடாதென்று சுஜாதா சொல்லியிருக்கிரார்.// இது ஜேகே மீதான எள்ளல் என்பதையும் தாண்டி கதையின் ஓட்டத்திற்கும் உதவி இருக்கு – உங்கள் கெட்டித்தனம்.

    //தமிழ்நாட்டு வாசகர்களும் என்னை மன்னிக்க வேணும். உங்களுக்கு நிறைய விசயங்கள் விளங்கியிருக்காது.குறிப்பா சர்க்கரைக்கும் சீனிக்கும் என்ன வித்தியாசமென்று.. ஏனெனில் உங்களுக்கு ஏகே 47க்கும் பிஸ்டலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதென்று கேள்விப்பட்டுள்ளேன். ..”// இந்த திமிரோடான நக்கல்தான் எனக்கு உங்கள் எழுத்தில் மிகப்பிடித்த விசயம்.

    // “நீ வேறு இளந்தாரிப் பெடியன். உன்னைச் சரியாக விவரிக்காவிட்டால் உன்னை அவனாகக் கற்பனை செய்துவிடுவார்கள். அது பாவம். பிள்ளைப் பூச்சி” // இது தான் ஊமைக் குசும்பா ?

    இது தனியே ஒரு சிறு கதை, தனியே ஒரு அரசியல் பார்வை, தனியே ஒரு அங்கீகாரத்திற்கு ஏங்கும் எழுத்தாளனின் வலி, தனியே உங்கள் விமர்சனங்களின் மீதான எள்ளல்: இத்தனை பரிமாணங்களை சேர்ந்து படைத்ததில் நீங்கள் ஒரு பேய்காய் எண்டு நிருபிக்குறீர்கள்.

    // “ம்.. எனக்கும் கவலைதான் அன்னம்மா.. என்ரை மனசு தவிக்கிற தவிப்பு ஆருக்கு விளங்கும்.. ம்.. ”// இந்த இடத்தில் நீங்கள் மளுப்புகிறீர்கள் அல்லது, ஆதரவாளர்களின் காட்டமான விமர்சனத்திற்கு பயந்து அல்லது ஆதரவுக்கு நாடி சேப் பண்ணப் பாக்கிறியள் எண்டு திரும்ப பூதம் கிளம்பும். பூததிற்கு பயந்தா கிணறு கிடைக்குமா ?

    ஆனா சயந்தன் அண்ணை, உங்கள் முதிர்ச்சிக்கு நீங்கள் இந்த உணர்வை இப்படி வெளிப்பட்டு போட்டு உடைப்பீர்கள் (உங்கள் பாணியிலேயே) என்று நான் எதிர்பார்க்கவில்லை……

  7. கதை சுவாரசியம் என்றெல்லாம் சூரியனுக்கு டோர்ச் அடிக்கதேவையில்லை!

    பின்நவீனத்துவமும் நக்கலும் தான் உங்கள் பலம் சயந்தன் … யாரு எவ்வளவு அடிச்சு மிரட்டினாலும் மாட்டேன் எண்டு சொல்லுங்க … இப்படியே எழுதுங்க!

    அப்பவே கொமென்ட் போட வந்தனான் .. அப்ப enable பண்ணி இருக்க இல்ல .. இந்த கதையை ஏற்கனவே நாங்களும் சமாளிச்சிட்டோம்!!

    சக்திவேல் அண்ணே!
    //மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி//
    நாங்க இன்சூரன்ஸ் எடுத்தபிறகு தான் கக்கூஸ் போவம்!!

  8. கதை சுவாரசியம் என்றெல்லாம் சூரியனுக்கு டோர்ச் அடிக்கதேவையில்லை!

    பின்நவீனத்துவமும் நக்கலும் தான் உங்கள் பலம் சயந்தன் … யாரு எவ்வளவு அடிச்சு மிரட்டினாலும் மாட்டேன் எண்டு சொல்லுங்க … இப்படியே எழுதுங்க!

    அப்பவே கொமென்ட் போட வந்தனான் .. அப்ப enable பண்ணி இருக்க இல்ல .. இந்த கதையை ஏற்கனவே நாங்களும் சமாளிச்சிட்டோம்!!

    சக்திவேல் அண்ணே!
    //மெல்பனின் ஆரோ ‘கடி’ காயங்களுக்கு மருந்து தேடுவதாகக் கேள்வி//
    நாங்க இன்சூரன்ஸ் எடுத்தபிறகு தான் கக்கூஸ் போவம்!!

  9. நிசப்தம்.காம் அறிமுகத்தின் மூலமாக உங்கள் கதைகளை வாசிக்க தொடங்கினேன்…
    எங்களுக்கு சில வரிகள் புரியவில்லை… எனினும் கதையின் ஓட்டத்தில் என்னால் லயிக்க முடிந்தது.. AK 47 க்கும் பிஸ்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்ற நக்கலை சரியான இடத்தில் கையாண்டு இருக்கிறீர்கள்.
    மெல்பேர்னில் என் மனைவி ஒரு கார் விபத்தில் சிக்கி கொண்டு ஆங்கிலம் பேச முடியாமல் தவித்த பொழுது., தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவி நாடினேன் அவரும் இப்படிதான் பேச்சின் நடுவில் அதை சொல்லாதிங்கோ.., கூடுதல் கால அவகாசம் கேளுங்கோ.. என்று எங்களுக்கு உதவி புரிந்ததை இந்த நேரத்தில் ஏனோ நினைத்து கொள்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.
    நன்றி.

  10. நிசப்தம்.காம் அறிமுகத்தின் மூலமாக உங்கள் கதைகளை வாசிக்க தொடங்கினேன்…
    எங்களுக்கு சில வரிகள் புரியவில்லை… எனினும் கதையின் ஓட்டத்தில் என்னால் லயிக்க முடிந்தது.. AK 47 க்கும் பிஸ்டலுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்ற நக்கலை சரியான இடத்தில் கையாண்டு இருக்கிறீர்கள்.
    மெல்பேர்னில் என் மனைவி ஒரு கார் விபத்தில் சிக்கி கொண்டு ஆங்கிலம் பேச முடியாமல் தவித்த பொழுது., தமிழ் மொழிபெயர்ப்புக்கு உதவி நாடினேன் அவரும் இப்படிதான் பேச்சின் நடுவில் அதை சொல்லாதிங்கோ.., கூடுதல் கால அவகாசம் கேளுங்கோ.. என்று எங்களுக்கு உதவி புரிந்ததை இந்த நேரத்தில் ஏனோ நினைத்து கொள்கிறேன்.
    தொடரட்டும் உங்கள் எழுத்து பணி.
    நன்றி.

Comments are closed.