முதல் விமர்சனம்

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லையென்பதே காலம் எனக்களித்த கருணை:)

புடுங்கியிருக்கிறது என்ற சிறுகதையொன்றிற்காக கருணாகரன் அண்ணன் இந்த விமர்சனக் குறிப்பை 2009 ஓகஸ்டில் அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியாக அது எனக்குக் கிடைத்தது. எனக்கான முதல் விமர்சனமாக அமைந்ததினால் மட்டுமன்றி – அப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடாதபடி முகாம் வாழ்க்கையில் அவரது காலம் மூழ்கடிக்கப்பட்டிருந்த அச் சூழலில் அவர் எழுதியனுப்பிய அவ் விமர்சனக் குறிப்புக்கள் என்னளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தனவாக அமைந்திருந்தன.

அதனை மூன்று வருடங்களுக்குப் பிறகு நண்பர்ளோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..

குறிப்பிட்ட அந்தச் சிறுகதையை இங்கே வாசிக்கலாம்

அன்புள்ள சயந்தன்
தீபச்செல்வன் அனுப்பியிருந்த உங்களுடைய சிறுகதையை வாசித்தேன். இன்றைய புதிய வகை எழுத்துப் பிரதி அது. பின் நவீனத்துவப் பண்புடன் எழுதப்பட்டுள்ளது. மெய் விவரிப்பு அல்லது உண்மை நிகழ்ச்சிகளைப் பிரதியிடுதல் என்பது இன்றைய புதிய வகை எழுத்தில் முதன்மையாகிறது. யாழ்ப்பாண இடப்பெயர்வை மறை பொருளில் கலா பூர்வமாகச் சொல்லும் கதை அல்லது பிரதி. சிலர் இதனைக் கதை இல்லையென்றும் மறுக்கக் கூடும். மரபு ரீதியான வாய்ப்பாட்டுக்குள் அல்லது அணுகு முறைக்குள் நின்று பார்க்கும்போது அப்படித்தான் தோன்றும். ஆனால் இது மெய் விபரிப்புக் கதை. அல்லது கதை சார்ந்த புனைவியல் சார்ந்த பிரதி.
நீங்கள் முன்னர் எனக்கெழுதியனுப்பிய கதைப்பிரதிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன. எழுதும்போது அதிலும் இணையத்தில் எழுதும்போது ஒரு வகையான மொழிதலும் விவரிப்பும் ஏற்படுவதை பலரிடமும் பார்த்திருக்கிறேன். அது உங்களுக்கும் சாத்தியமாகியுள்ளது. இந்த மாதிரிப் பிரதிகள் முக்கியமானவை. அனுபவத்தை சேகரமாக்குவதிலும் தொகுப்பதிலும் வெற்றியடைந்துள்ளீர்கள்.

யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பற்றி அறிந்திராத பிற வாசிப்பாளர்களுக்கு கதை முழுதாகப் புரியாமலிருக்கலாம். அது எந்தத் தளத்தில் எந்தப் பின்னணியில் அல்லது எந்த மையத்தில் நிகழுதென்று தெரியாமல் விளங்காமல் இருக்கலாம். ஆனால் அந்த இடப்பெயர்வைத் தெரிந்தவர்களுக்கு அந்நாட்களின் அனுபவம் கண்முன் நிறுத்தப்படுகிறது.

முக்கியமானதென்னவென்றால் இந்தப் பிரதியில் பேசப்படும் விவகாரங்கள் கடுமையான விமர்சனத் தொனியும் உருவாக்கப்பட்ட புனைவு வெளிக்கெதிரானவையுமாகும். யாழ்ப்பாணத்தில் நிலை பெற்றிருக்கும் சாதீயக் கட்டுமானத்தை எந்தச் சக்தியாலும் சிதைக்க முடியவில்லை. அதே வேளை அது எவ்வாறு புதிய அதிகாரச் சக்திகளுடன் சமசரத்திற்கும் விட்டுக்கொடுப்பற்ற வகையில் போலி நடப்புடனும் இருக்கின்றது, இயங்குகின்றது என்பதை தெளிவாக சுவைபட எழுதியுள்ளீர்கள். இந்த மாதிரி எழுத்தில் ஷோபா சக்தி தேர்ந்தவர். ஆனால் அவரது எழுத்தில் நேரடியாக ஒரு தரப்பைக் குற்றம் சாட்டும் அல்லது கண்டிக்கும் இயல்பு துாக்கலாக இருக்கும். ஆனால் கலாபூர்வமாகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் எழுதுபவர்களில் அவர் முக்கியமானவர்.

உங்களுடைய இந்தக் கதையில் விமர்சனமும் உண்மைச் சுட்டுதலும் தெளிவாக முன்வைப்பட்டுள்ளன. அத்துடன் பிரதியின் உள்ளே கேலியும் நகைச்சுவையும் அதனோடிணைந்த துயரமும் இருப்பதையும் இயங்குவதையும் உணர முடிந்தது.

நண்பர் ஷோபா சக்தி ஒரு இடத்தில் குறிப்பிட்டதைப்போல பள்ளன் இல்லாத வேறு சாதியில் எவன் மரம் ஏறுகிறான்.. அம்பட்டனைத்தவிர வேறுயார் தலை மயிர் வெட்டுகிறார்கள்.. வண்ணானைத்தவிர வேறு சாதியில் எவராவது துணி வெளுக்கத் தயாரா.. பறையனை விட வேறு யாராவது மலம் அள்ளவும் பறை அடிக்கவும் வருவார்களா.. என்ற தொனி உங்கள் கதையிலும் ஒலிக்கிறது. போராட்டத்தின் போது சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற போலி அபிப்பிராயத்தையும் போலி நம்பிக்கையையும் மிகச் சாதாரணமாக மிக இயல்பாகச் சொல்லி வருகிறீர்கள்.. அசல் யாழ்ப்பாணத்துக் கதை. அசலான பாத்திரங்கள். அசலான நிகழ்வுகள். எதுவும் பாதிக்காத யாழ்ப்பாணம். அல்லது எந்தத் தாக்கத்திற்கும் ஈடுகொடுத்து தன் கரையாத தன்மையைக் காப்பாற்றும் யாழ்ப்பாணம் இதுதான்.

இதனால்தான் இந்தச் சிந்தனையாலும் மனப்பாங்கினாலும்தான் நமது அரசியலே இந்தளவுக்கு சேதங்களை விளைவிக்கும் படியானது. இதனாற்தானே ஐரோப்பா வரை அமெரிக்கக் கண்டம் வரை அவுஸ்ரேலியாவுக்கும் கூட யாழ்ப்பாணத்தின் சாதி போய்ச் சேர்ந்தது.

ஆனால் ஒரு விசயம் சயந்தன், யாழ்ப்பாணத்தை விட வலிகாமத்தை விட வசதிகளில் வாழ்க்கை அமைப்பில் தென்மராட்சி ஏதோ குறைந்த மாதிரி ஒரு அபிப்பிராயம் தொனிக்க கதை எழுதப்பட்டுள்ளதே.. நீங்கள் இதைத் திட்டமிட்டிருக்க மாட்டீர்கள். ஆனால் அப்படித் தோன்றுகிறது. குறிப்பாக மலசலத்துக்கு பற்றைக்குப் போவது. குளிப்பதற்கு மறைப்பு இல்லை. இது ரவியண்ணை வீட்டில் மட்டும்தானா அல்லது தென்மராட்சியின் குறியீடா.. அதே வேளை பத்மாக்காவை விடவும் ரவியண்ணை மேலானவராக இருப்பது மனப்பாங்கில் தென்மாராட்சியினர் வேறுபட்டவர்கள் புரிந்துணர்வு மிக்கவர்கள் என்றும் கொள்ளலாம்.

கதை மொழி மிகச் சுவாரசியமானது. அ.முத்துலிங்கம் ஷோபாசக்தி இருவரும் எனக்குப் பிடித்தவர்கள். அத்துடன் கருணாகரமூர்த்தியும். இது இன்னொரு வகையான தினுசு. இந்த மாதிரி சுவாரஸ்யம் ததும்ப உண்மை நிகழ்ச்சிகளை விவரிப்பதில் இரவி அருணாச்சலம் கெட்டிக்காரர். இப்போது சயந்தனும் இந்த வரிசையில்.. மகிழ்ச்சியே..

எழுதுங்கள் சயந்தன். இன்னொரு கதை பற்றி இன்று பிரபா சொன்னான். கிடைத்தால் வாசிக்கலாம்.

அன்புடன் கருணாகரன்
07/08/2009