பனை – சாதியின் ஒரு நெம்புகோல், சாதியின் ஆப்பாகுமா?

சாதியத்தை வெறுமனே வர்க்கப் பார்வையற்று அணுகிவிட முடியாது. நிலத்தின் மீதான அதிகாரம் சாதியத்தை தக்கவைக்கும் இன்னொரு விடயமாகும்.
புலிகள் குடிமைத் தொழிலை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த காலத்திற்குச் சமாந்தரமாக சாதிய அசமத்துவத்தின் வேர் சொத்துடைமையுடன் தொடர்புடையது என்ற கோணத்தில் ஆதாரம் சஞ்சிகையில் 1992 ஜனவரி, மார்ச் இதழ்களில் தொடங்கப்படட உரையாடல் இது.

கோழி வளர்ப்பு தனியொரு சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு தொழிலல்ல. விவசாயமும் அப்படியே. எந்தச் சாதியும் விவசாயம் செய்யலாம். கால்நடை வளர்ப்பும் சாதிக்கென்று வரையறுக்கப்பட்டதொன்றல்ல. எந்தச் சாதியும் கால்நடை வளர்க்கலாம். ஆனால் அந்தோ பரிதாபம். பனையுடன் தொடர்புபட்ட பிரதான தொழில்கள் அனைத்துமே குறிப்பிட்ட சாதிக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல அத் தொழிலும் அச்சாதியும் குறைந்த சமூக அந்தஸ்த்து உள்ளதாக கருதவும் படுகிறது. இதுதான் இங்குள்ள பிரச்சனையாகும்.


புலிகளுடைய ஆதாரம் இதழில் 1992இல் வெளியான கட்டுரை

இச் சாதிக் காரணி எவ்விதம் தோற்றம் பெற்றது. இன்று எவ்விதம் செயல்படுகிறது. சாதியின் கோரப்பிடியில் இருந்து பனை என்ற இந்தக் கற்பகதருவை விடுவிக்க அவசியமான சமூக பொருளாதார நிலமைகள் என்ன என்பவற்றை தொடர்வோம். 

ஐரோப்பிய வருகையின் போதான யாழ்ப்பாண சாதி அமைப்பு 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை ஆண்டான்களையும் அடிமைகளையும் கொண்டாய் இருந்தது. ஆண்டான்களாக (அடிமைகளின் சொந்தக்காரர்களாக) இருந்த மேற்தட்டினர் உயர் சாதியினர் எனக் கருதப்பட்டவர்காளக இருந்தார்கள். 

அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது

முன்னைய அடிமை முறையினை ஆராய்ந்த சட்ட அறிஞர்கள் இது றோமானிய அடிமை முறையுடன் ஒப்பிடக் கூடியதாய் இருந்தது என்று கூறியுள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து அடிமைகள் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளார்கள். ஆண்களையும் பெண்களையும் அடிமைகளாக வைத்திருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட அடிமைகளாகவே கருதப்பட்டார்கள். அடிமைகளும் கால்நடைகளும் நிலத்துடன் தொடர்புபட்ட ஒரு சொத்தாகவே கருதப்பட்டனர். 

அடிமைகளிலும் விட ஒரு சிறு அளவு சுதந்திரமுடைய குடிமைகளும் இருந்தார்கள். இந்த அடிமை குடிமைகளின் வழித்தோன்றல்களே பின்னைய ஒடுக்கப்பட்ட சாதியினராகும். 

முன்னைய ஆண்டான்களின் வழித்தோன்றல்களே இன்று ‘உயர்சாதியினர்’ என்று கருதப்படும் வெள்ளாளராகும். 

இந்த ‘உயர்சாதியினர்’ ஆண்டான்களாகவும் (அடிமைச் சொந்தக்காரர்களாகவும்) அதே நேரத்தில் நில உடமையாளர்களாகவும் ‘நயினார்’ என்றும் ‘கமக்காரர்’ என்றும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். 

யாழ்ப்பாணத்தில் நிலவிய நிலஉடமைமுறை றயத்வாரி முறையை ஒத்ததாகும். ஐந்தோ பத்தோ வீதமானவர்களுக்கு எண்பதோ தொன்னூறோ வீதமான நிலம் சொந்தமாய் இருப்பது ஜமின்தாரிய முறை எனப்படும். அவ்விதமான ஜமின்தார்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை. மாறாக நாற்பதோ ஐம்பதோ வீதமானவர்களுக்கு சுமார் தொன்னூறு வீதமான நிலம் சொந்தமாய் இருந்தது. மீதிப்பேர் நிலம் இல்லாதவர்களாகும். இந்த நிலம் இல்லாதவர்களில் ஒரு பகுதியினர் இந் நில உடமையாளர்களில் சார்ந்து வாழ்ந்தார்கள். இவ்வித நில உடமை முறையே றயத்வாரி முறையாகும். இவ்விதம் சார்ந்து வாழ்ந்தவர்கள் அடிமைகளாகவும் குடிமைகளாகவும் இருந்ததே யாழ்ப்பாணத்தின் விசேட குணாம்சமாகும். 

யாழ்ப்பாணத்தின் இந் நில உடமையாளர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான தனி ஒரு சாதியாகவும் ‘உயர்சாதியாகவும்’ ஆண்டான்களாகவும் இருந்தார்கள். இதனால் இச்சாதியே அனைத்து வழியிலும் சமூக ஆதிக்கம் பெற்ற சாதியாக இருந்தது. 

எமது கவனத்திற்குரிய அக்காலகட்டத்தில் ஏராளமான நிலங்கள் தரிசு நிலங்களாகவே இருந்தன. பனங்காடுகளும் இவற்றில் உள்ளடங்கும். காணியில் தனி உடமையை நிலைநாட்டுவதற்கு இறுக்கமான சட்டங்கள் இருக்கவில்லை. சாதி அமைப்பும் ஆண்டான் அடிமைச் சமூக ஒழுங்குகளுமே மிகச் சக்திபெற்ற எழுதாச் சட்டமாக இருந்தது. இதன்படி அனைத்துக் காணிகளும் வெள்ளாளரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. 

பனையும் பனங்காணியும்கூட இந்த ‘உயர்சாதியின்’ கட்டுப்பாட்டிலேயே இருந்தன. தானே உதிர்ந்து விழும் பனம்பழங்களையும், பனை ஓலைகளையும், பனைகளையும் கூட இவர்களின் அனுமதியின்றி யாரும் எடுக்கமுடியாது. ஏராளமான பனை வளவுகள் அடிவளவுகள் என்றே அழைக்கப்பட்டன. இவ் அடி வளவுகளில் ‘அடிக்கு’ அல்லது ‘வெளிக்கு’ மலசலம் கழிக்கப் போவதாலும்கூட கமக்காரனிடம் அனுமதி பெறவேண்டி இருந்தது. 

கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது.

அடிமை குடிமைகளையும் ஏனைய ஒதுக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட சாதிப்பிரிவினரையும் பொருளாதாரத்தில் வளரவிடக்கூடாது என்பதற்காக பனை படு பொருட்களை தானும் அனுபவியாது பிறரும் அனுபவியாது தடுத்துவரும் ஒரு போக்கு உயர்சாதியினரிடம் நிலவி வந்தது. 

கள்ளோ அல்லது கருப்பணியோ ஒரு விற்பனைப் பண்டமாக இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. சுருங்கச் சொல்வதானால் பனைக்கு ஒரு பணப்பெறுமானம் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. பனை சீவல், ஓலை வெட்டுதலழ, பனைமரம் பிளத்தல், சிலாகை அறுத்தல், பெட்டி கடகம் பொத்துதல் போன்ற தொழில்கள் கூலி எதுவும் இன்றி அடிமைகளைக்கொண்டே செய்யப்பட்டன. ஆகையால் இவ்விதம் பெறப்பட்ட பொருட்கள் ‘உயர்சாதியினருக்கு’ சொந்தமானதாகவே இருந்தன. இவர்களே யாழ்ப்பாண எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள் என்றபடியாலும், அடிமை குடிமைகள் சுதந்திரமாக எதையும் கொள்வனவு செய்யும் உரிமை அற்றிருந்தபடியாலும் இப்பொருட்கள் ஒரு விற்பனைப் பண்டமாக மாறவில்லை. இதனால் பனம்படு தொழில்களில் ஒரு வளர்ச்சி ஏற்படவில்லை. 

உணவுப்பழக்கத்தைப் பொறுத்தவரையிலும்கூட நிலஉடமை சாதி ஒருவிதமான உணவையும் அடிமைகள் குடிமைகள் ஏனைய சாதியினரும் வேறோர் விதமான உணவையுமே பயன்படுத்தினார்கள். விளைவிக்கப்பட்ட அனைத்து நெல்லும் ‘உயர்சாதியினரின்’ சொந்தமாகவே இருந்தது. இதை அவர்கள் தமது உணவாக மாத்திரமே் பயன்படுத்தவில்லை. இதுவே வர்த்தக பண்டமாற்றுப் பொருளாகவும் பயன்பட்டது. நெல்லை விலையாகக் கொடுத்தே இந்தியாவிலிருந்து அடிமைகள் வாங்கப்பட்டுள்ளனர். ஐரோப்பியர்களுக்கு நெல்லு வரியாகவும் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் நெல்லை ‘உயர்சாதியினர்’ தமது கைகளில் இருந்து விட்டுக்கொடுக்கவில்லை. இதன் காரணத்தினால் அரிசிச் சோறு ஒரு ‘உயர்சாதி’ உணவாகியது. குரக்கன், சாமி, மரவள்ளிக்கிழங்கு, பனாட்டு போன்றவை சாதித் தரம் குறைந்த உணவாகின. 

19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானியர் கொண்டுவந்த சில சட்டங்களால் அடிமைகள் விடுவிக்கப்பட்டார்கள். மனிதர்களை அடிமைகளாக வைத்திருக்கும் முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது. ஆனால் அடிமை குடிமை சாதி அமைப்பு தொடர்ந்தது. 

அதேபோல் அதே காலப்பகுதியில் நிலத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டக்கூடியதும் தனிநபர் உடமை முறையே ஒரே வகை உரிமை உடமை முறையாக இருக்கக் கூடியதுமான சட்டங்கள் ஆக்கப்பட்டன. இச்சட்டத்தின் பின் ஏராளமான தரிசு நிலங்களும் அடிவளவுகளும், ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரின் குடியிருப்புக் காணிகளும் ‘உயர் சாதியினரின்’ தனி உடமை ஆகின. ‘உயர்சாதியினருள்ளே’ மிகச் சில மட்டும் பெரும் நில உடமையாளராக மாறும் புதிய நிலை தோன்றியது. ஆங்கிலம் தெரிந்தோரும் பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டோருமே அந்த மிகச்சிலராகும். 

இச்சட்டங்கள் உயர்சாதியினருக்கும் அடிமை குடிமை சாதியினருக்கும் இடையில் இருந்த தொடர்பில் சட்டரீதியான சில மாற்றங்களை ஏற்படுத்தியதே தவிர நடைமுறையில் பிரதானமாற்றங்கள் எதையும் கொண்டுவரவில்லை. 

ஆனால் சில மாற்றங்கள் ஏற்படவே செய்தன. பிரித்தானியாவின் புதிய சட்டங்களால் ‘உயர்சாதியினரிடையே’ பாரிய வர்க்கவேறுபாடுகள் தோன்றின. ஒரு புறத்தில் சிறு அளவான பெரும் நிலஉடமையாளர்களும், மறுபுறத்தில் சுமாரான அளவிலான ஏழை விவசாயிகளும் தோன்றினார்கள். இவ்விவசாயிகள் தமது பனைகளை ஓரளவு சுதந்திரமாக்கினார்கள். அதாவது சீவலுக்குக் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடிமைத் தொழிலாளர் மத்தியில் இருந்து சுதந்திர தொழிலாளர் உருவாகும் நிலை தோன்றியது. இவ் ஏழை விவசாயிகள் தமது உழைப்பைக்கொண்டே தமது தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதனால் பனையுடன் தொடர்புபட்ட சிறு குடிசைக் கைத்தொழில்களை தாமே மேற்கொள்ளவும் அவற்றை தாமே விற்கவும் தலைப்பட்டார்கள். 

இக்காலப்பகுதிக்கு முன்வரை, கள் உட்பட பனையின் ஏனைய பலன்களை கூலி கொடுக்காத உழைப்பில் பெற்றுக்கொள்ளவும் பனங்காணிகளையும் பனையின் பிரயோசனங்களையும் பிறர் அனுமதியாது தடுக்கவும் சாதி அமைப்பு பயன்பட்டது. இந்தக் கட்டத்தில் பனை சாதி அமைப்பின் நெம்புகோலாக மிகத்திறம்பட பயன்பட்டு வந்தது. 

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து தமிழீழ தேசியவாதத்தின் எழுச்சிவரை (1980கள் வரை) பனை ஏக காலத்தில் சாதி அமைப்பின் நெம்புகோலாகவும், ஆப்பாகவும் செயற்பட்டு வந்தது. 

19ம் நூற்றாண்டின் கடைசி சகாப்தமும் 20ம் நூற்றாண்டின் முதற் பாதியும் யாழ்ப்பாணத்தின் பொருளாதார வரலாற்றில் மிக முக்கிய கட்டங்களாகும். காலனிக்குப் பிந்திய யாழ்ப்பாணப் பொருளாதாரத்திற்கான அடி அத்திவாரங்கள் இடப்பட்டது இக்கால கட்டத்திலேயாகும். பிரிட்டிஷ்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்போது அடிமை குடிமை முறை நிலவியது உண்மை. ஆனால் பெரும் நில உடமையாளர்கள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. பிரித்தானியர் கோப்பிப் பயிர்ச்செய்கைக்காக பல பத்தாயிரக்கணக்கான ஏக்கர் மலைநாட்டுக் காணிகளை மலிவான விலைக்கு “கொள்வனவு” செய்தார்கள். இக் “கொள்வனவை” சாத்தியப்படுத்துவதற்காக பல புதிய சட்டங்களை 1880களில் பிறப்பித்தார்கள். 

மிகக்குறுகியகால அவகாசத்துள் நிலம் தமது உரிமை என்பதை இலங்கைப் பிரஜைகள் ஆவண ஆதாரங்களுடன் நிரூபிக்கும்படி சட்டரீதியாக ஆணை பிறப்பித்தார்கள். இவ்விதம் நிரூபிக்கப்பட முடியாத காணிகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டன. அரசுடமை ஆக்கப்பட்ட காணிகள் கோப்பிப் பயிர்ச்செய்கைக்கும் ஏனைய பெருந்தோட்ட பயிர்ச்செய்கைக்குமாக பிரித்தானிய பிரஜைகளுக்கும் பிரித்தானிய காலனித்துவவாதிகளுடன் ஒத்துழைத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் மலிவான விலையில் விற்கப்பட்டன. 

இலங்கைத் தீவு முழுவதற்கும் செல்லுபடியான இந்தச் சட்டங்கள் யாழ்ப்பாணத்திலும் செயற்படுத்தப்பட்டன. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் புகையிலை மாத்திரமே யாழ்ப்பாணத்தின் பிரதான பணப்பயிராக இருந்தது. இதனால் நிலம் ஒரு வர்த்தக பண்டமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அடிமை குடிமைகள் நிலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான் நில உடமை முறையில் சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்ததே தவிர மற்றும்படி நிலமானது வர்த்தக மதிப்பு அற்றதொன்றாகவே இருந்தது. பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பனங்காடுகள் கூட தேடுவாரற்றுக் கிடந்தன. 

கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும்.

பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட இச்சட்டங்களால் இப்பனங்காடுகள் சிலதொகையான  ‘மேட்டுக்குடியினரின்’ கைகளுக்குள் சென்றடைந்தன. அவர்களின் தனிச் சொத்தாகின. ஆங்கில அறிவும், அதனுடன் அரசாங்க சட்டதிட்டங்களைப்பற்றிய புரிதலும் பெற்றிருந்த உடையார், மணியகாரர், முதலியார் குடும்பங்கள் காணிகள் தமது என்பதை நிரூபிப்பதற்கு அவசியமான சட்ட ஆவணங்களை குறுகிய கால இடைவெளிக்குள் தயாரிப்பதில் அபார வெற்றி பெற்றார்கள். படிப்பறிவில்லாத ஏனைய மக்களை ஏமாற்றி அவர்களின் பயன்பாட்டில் இருந்த காணிகளை தமதாக்கிக் கொண்டார்கள். பணத்தினை கடனாகக் கொடுப்பது, பஞ்சத்திற்கு உணவு கொடுப்பது, வெளிநாட்டுக் குடிவகை கொடுப்பது போன்ற இன்னும் பல வழிமுறைகளையும் பின்பற்றி அம்மக்களை ஏமாற்றினார்கள். 

இவ்விதமாக யாழ்ப்பாணத்தில் சட்டரீதியான ஒரு நிலக்கொள்ளை நடைபெற்றது. பெரும் நில உடமையாளர்கள் என்ற புதியதோர் வர்க்கம் தோற்றம் பெற்றது. யாழ்ப்பாணம் வர்க்க ரீதியாகபிரிபடும் போக்கில் ஒரு திடீர் பாய்ச்சல் ஏற்படுகின்றது. 

இந் நிலக்கொள்ளைக்கும் பனைக்கும் என்ன தொடர்பு..? நிறையத் தொடர்பு உண்டு. பிரித்தானியரால் விடுவிக்கப்பட்ட அடிமைச் சாதிப்பிரிவினரும், குடிமைச் சாதிப்பிரிவினரும், இடைநிலைச் சாதிப்பிரிவினரும், நிலவுடைமையாளர்களாக மாறியோர் தவிர நொந்துபோன நிலையில் இருந்த ‘வெள்ளாளரும்’ பனங்காணிகளையே தமது குடியிருப்புக் காணிகளாகவும் அடிவளவுக் காணிகளாகவும் பயன்படுத்தி வந்தார்கள். அதில் விழும் பனம் பழம், பனை ஓலை போன்றவற்றை தாம் அனுபவித்தும் வந்தார்கள். இதனால் பனம்படு பொருட்களின் பாவனை நொந்துபோன மக்கள் மத்தியில் ஒரு வழமையாக இருந்தது. 

நிலக்கொள்ளையைத் தொடர்ந்து நிலமும் அதில் உள்ள பனை மரங்களும் பெரும் நில உடமையாளர்களின் சொத்தாக மாறுகிறது. குடியிருக்கவும், அடிவளவாகப் பயன்படுத்தவும், பனம்பொருட்களை அனுபவிக்கவும் நில உடமையாளர்களின் அனுமதி பெறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பனையின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பனை அடிமைப்படுத்தப்படுகிறது. பனை என்ற இயற்கைத் தாவரம் சமூக பொருளாதார அர்த்தத்தில் இயற்கைத்தாவரம் என்ற நிலையை இழக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினரும், பொருளாதார ரீதியில் கீழ் நிலையில் உள்ள ஏனைய சாதிப்பிரிவினரில் பெரும்பான்மையோடும் ஏதோ ஒரு வழியில் ‘உயர்சாதி மேட்டுக்குடி நில உடமையாளர்களில் தங்கி நிற்க வேண்டிய சமூக பொருளாதார நிலமை தோற்றுவிக்கப்படுகிறது. 

ஆம். இங்கு அடிமைப்படுத்தப்பட்ட பனை, சாதியின் நெம்புகோலாகச் செயற்படுகிறது. கீழ்ப்படிவுடன் செயற்படுபவனுக்கே பனங்காணியில் குடியிருக்கும் உரிமை வழங்கப்பட்டுவந்தது. பனம் பொருட்களை நுகரும் உரிமை இருந்தது. சீவலுக்கு பனை வழங்கப்பட்டது. எதிர்ப்புக் காட்டினால் பனை மறிக்கப்படும். அதாவது சீவலுக்கு வழங்கப்பட்ட உரிமை இரத்துச் செய்யப்படும். ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவினர் தமது மனித உரிமைகளுக்காகப் போராடினால் பனைகள் மறிக்கப்படும். இல்லையேல் வேறு ஆட்களைப் பயன்படுத்தி பனம் பாளைகள் வெட்டி வீழ்த்தப்படும். 

தொடரும்..