தேவிகா கங்காதரன்

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது வீதிக்கு அண்மையில் மிதிவெடி அகற்றும் காலம் வரை ” ஆதிரை ” நாவலில் பேசப்பட்டுள்ளது.

எடுத்துக் கொண்ட கரு காரணமாக ஒரு பெரிய நாவலாக வெளிப்பட்டிருக்கிறது ஆதிரை.தமிழர் வாழ்வும், இலங்கைத்தீவில் அவர் வாழ்வில் ஊடாடும் நெருக்கடிகளும், சவால்களும், கொலைகளும், இழப்புக்களுமே மலிந்த இந்த வாழ்வினைப் பதிவு செய்வதென்பது இலகுவான காரியமல்ல.எழுத்துக்கான சயந்தனது அர்ப்பணிப்பும், உழைப்புமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது என நினைக்கிறேன். மலையகத்தில் பிறந்து முல்லைத்தீவைச் சேர்ந்த காட்டுக்கிராமமொன்றில் வளர்ந்த சிங்கமலை லெட்சுமணன் என்னும் இளைஞன், சித்திரவதைக்கூடமொன்றில் இராணுவ விசாரணையாளர்களால் விசாரிக்கப்படும் காட்சியொன்றுடன் நாவல் ஆரம்பிக்கிறது.கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இவனது பின்னணி அறியாது இருப்பிடம் கொடுத்த கியோமாக்கிழவியை இராணுவத்தினன் “எதிரிகளை மன்னித்து விடலாம்,துரோகிகளை மன்னிக்க முடியாது”என்று முடியைப் பற்றி இழுத்து பற்களை நெருமும் கட்டம்,அட, அப்ப அந்தப் பக்கமும் எதிரி,துரோகி என்னும் ஒரே சமன்பாடுதானா என எஎண்ண வைக்கிறது.

மலையகத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் யாழ் நகரில் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆசிரியர் பணி புரியவென்று மலையகம் செல்வோரே முகவர்கள் போல் தமது உறவினர்,நண்பர்கள் வீடுகளுக்கு இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.வேலு என்னும் சிறுவன் இப்படித்தான் எமது அயல் வீடொன்றில் வேலைக்கு வந்து சேர்ந்தான்.அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து அழுது அடியும் வாங்குவான்.தன்னை வந்து கூட்டிச் செல்லும்படி எங்களைக் கொண்டு ரகசியமாகக் கடிதம் எழுதுவித்துத் தனது தந்தைக்கு அனுப்புவான்.தீபாவளி ,பொங்கலுக்கு அவன் தந்தை வந்து சம்பளப்பணத்தையும் வாங்கிக் கொண்டு நாலைந்துநாள் விடுமுறையில் அவனை அழைத்துச் செல்வார்.இன்னொருநாளில் வேலுவின் தம்பியோ, தங்கையோ அழைத்து வரப்பட்டு இன்னொரு வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.இப்படி வந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததையும்.

வசதி படைத்த குடும்பங்கள் எந்த விசாரணையுமின்றி தப்பிக் கொண்டதாயும் அயலவர்கள் பேசிக்கொண்டார்கள். இப்படி எமக்கு அறிமுகமான மலையக மக்களில் சிலர் 1977ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின் வவுனியா முல்லைத்தீவுப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்த கதையும் அதைத் தொடர்ந்து ஆண்டுவாரியாக தமிழர் பிரதேசங்களில் இடம் பெற்ற அடக்குமுறைகளும், வன்முறைச் சம்பவங்களும் அதற்கெதிராக காட்டுக்குள் இளைஞர்கள் ஆயுதப்பயிற்சிபெற்று பல்வேறு இயக்கங்களாகச் செயற்பட்டதையும் நாவல் சொல்லுகிறது.

கானகமும்,அங்கு வாழும் விலங்குகளும் ,வேட்டையும், மரஞ்செடிகொடிகளுமாய் இயற்கையுடன் ஒன்றி வாழும் மனிதர் மீது திணிக்கப்பட்ட போர் எத்தகையஅழிவுகளை அவர்கள் மீது ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஒரு இனத்தின் கனவுகளையும், இலட்சியங்களையும்,இழப்புக்களையும் வெளிப் படுத்த விரும்பும் போது அந்நாவலில் கதாபாத்திரங்கள் வார்க்கப்படும் விதமே அந்தப் படைப்பைப் பூரணப்படுத்துகிறது.நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய வேறுபட்ட குணாதிசயங்களுடன் படைக்கப் பட்டிருக்கின்றன. ஆச்சிமுத்துக்கிழவி,சந்திரா ,மீனாட்சி,மலர் என்று ஏராளமான பாத்திரப் படைப்புக்களிடையே யார் இந்த ஆதிரை என்றறியும் ஆவலுடனும்,எங்காவது இந்தப் பாத்திரத்தை மனதில் வாங்கத்தவறி விட்டேனா என்ற ஐயத்துடனும் 651 பக்கங்களைக் கடந்தேன்.

ஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.

ஆதிரை என்பவள் மணிமேகலையின் அமுதசுரபியில்” பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக “என்று முதலில் உணவிட்டவள் பெயர்.இந்நாவலில் வருபவள் யார் என்ற விடை இறுதி அத்தியாயத்தில் கிடைத்தது.எல்லைக்காவல் கடமையில் இறுதி மூச்சு வரை இருந்தவளே அவள்.மனம் அசை போட்டதை எழுத்தில் கொண்டு வந்தது சிலவேளை நாவலாசிரியர் மனப்பாரத்தைக் குறைத்திருக்கலாம்.ஆனால் வாசகர் நெஞ்சில் அழிக்கப்பட்ட வாழ்க்கையின் நினைவுகளை,பெறுமதிகளை அழியாத சித்திரமாகப் பதியச் செய்து விட்டார்.

அண்மையில் ஈழத்தின் வலிகளையும் கண்ணீரையும் சுமந்து சில நாவல்கள் வெளிவந்துள்ளன.அதனுடன் சம்பந்தப்பட்ட மக்களாக இருப்பதினால் மட்டுந்தானா இந்தப் படைப்புகளுடன் எம்மால் இணைந்து பயணிக்கமுடிகிறது?

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் படைப்பது இலக்கியத்தன்மையற்றவையென்றோ, அழகியலைக் காணவில்லை என்றோ குறைத்து மதிப்பிடும் பார்வைகளையும் அண்மையில் கண்டோம். தமது வலியை, அனுபவங்களை படைப்புக்களில் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இக்கருத்துக்கள் கட்டுப்படுத்துவதற்கு இடம் கொடுத்து விடாது எழுதும் படைப்பாளிகளுக்கு ஆதரவாக நல்ல வாசகர்கள் என்றும் இருப்பார்கள்.