ஈழம் Tag Archive

வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.

புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..

அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்

இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.

இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.

வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம்! சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.

நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். சிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.

0 0 0

ஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.

0 0 0

vijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் ! விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் ! சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார்! என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

0 0 0

Facebook குறிப்புக்கள்

வேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ! இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.

* * *

தயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..

இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.

* * *

கனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..

இதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.

* * *

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

* * *

எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.
* * *

கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.

“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”

By

Read More

நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன் (ஒஸ்ரேலிய மாவீரர் தினம்) திருமா (டென்மார்க் மாவீரர் தினம்) வைகோ (லண்டன் மாவீரர் தினம்) என யாருக்கும் அந்தந்த நாடுகளுக்குள் நுழைவனுமதி கொடுக்கவில்லையாம். நல்லது.

சுவிஸில் நிகழ்ந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனது படத்தை மாவீரர் வரிசையில் செருக யாரோ முயற்சிப்பதாகவும் அதைத் தடுப்பதற்கெனவும் பலரும் பரபரப்பாக இருந்தார்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவர் பிரபாவின் மாவீரர் தின உரையை இணைக்க முடியவில்லையென அறிவித்த போது அனைவரும் கை தட்டினார்கள். இவற்றுக்கு அப்பால் தங்கள் பிள்ளைகளின் சகோதரங்களின் படங்களின் முன்னால் கண்ணீரோடு கதறலோடும் அமர்ந்திருந்தனர் பெற்றோரும் மற்றவர்களும்..

சுவிஸ் மாவீரர் நாளில் அண்மைக்காலம் வரை களத்தில் போராளிகளாயிருந்த பலரைப் பார்க்கமுடிந்தது. பலரும் பல்வேறு வழிகளில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் இன்னமும் சுவஸில் தஞ்சம் கோருவோருக்கு அளிக்கப்படும் முகாம்களிலேயே தங்கியிருக்கின்றனர். அவர்கள் போராளிகளாயிருந்தார்கள் என அறிந்தவர் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் சாதாரணமாய் வந்தார்கள் மண்டப வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்தார்கள். முடிந்த பிறகும் அவ்வாறே ஒரு எடுபிடியாய் நின்றார்கள். பிறகு போனார்கள்.

விடுதலைப்புலிகளின் மட்டு அம்பாறை அரசியல் பிரிவு தலைவர் தயாமோகன் அண்மையில் சுவிஸ் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் முன்னாளா அல்லது இந்நாளும் இருக்கிறாரா என்பதெல்லாம் தெரியவில்லை. அவருக்கு கூட அது தெரியுமா எனத் தெரியவில்லை. இதையெல்லாம் இப்போது யார் தீர்மானிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. எனக்கென்னவோ வருடா வருடம் மாவீரர் உரை தயாரிப்பதைத் தவிர இப்போதைக்கு விடுதலைப் புலிகள் தலைமைச் செயலகத்திற்கு ?? செய்வதற்கு என்ன இருக்கிறது என யோசிக்கத் தோன்றுகிறது. என்னவோ செய்யட்டும்! இறுக்கமான கட்டுக்கோப்பில் திகழ்ந்த புலிகள் இயக்கத்திற்கு இந்தக் கதி நேர்ந்திருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. தலைவர் பிரபாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடைசிக் காலங்களில் கலைத்திருந்தால் இப்படி அவரா இவரா எவரோ என்கிற குழப்பங்கள் ஏற்பட்டிருக்காதோ என எண்ணுகிறேன்.

0 0 0

புலம்பெயர்ந்த தேசங்களில் கொஞ்சம் வயசானவர்கள் தாங்கள் நாட்டுக்குப் போகப்போறம் நாட்டுக்குப் போகப்போறம் என கனகாலமாகவே சொல்லி வருகிறார்கள். போவதும் போகாது விடுவதும் அவர்களது விருப்பம். அவ்வாறு அடுத்த வருடம் போக இருப்பதாகச் சொன்ன ஒருவரின் உரையாடல் இது. “போகப்போறன். முதலொருக்க போய் நேச்சர்களைப் பாத்திட்டு வந்து பிறகு போகப்போறன். ”
“போய் என்ன செய்யப் போறியள்” – இது நான்
“வீடெல்லாம் ரிப்ரொப்பாகத் திருத்தியாச்சு.. போய் காலாட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். பின்னேரங்களில டேய்.. சின்னவா இங்கை வாடா இறக்கடா கள்ளை என்றால் சின்னவன் கள்ளு இறக்கித் தருவான். வேற என்ன வேணும்? ஒரே கொந்தாய்தான்”

மேற்சொன்ன அன்பரை விடுங்கள் ஐம்பதுகளைத்தாண்டியிருந்தார். மடிப்புக்களும் சுருக்கங்களும் இன்னும் போயிருக்காது. இவ இருபத்தாறு வயதுப் பெண் பிரான்சில் இருந்து வந்திருந்தா. சிறுவயதிலேயே புலம் பெயர்ந்தவ. ஒரு சந்திப்பில் மாற்றமுடியாத நமது பண்பாடான யாழ்ப்பாணத்தில எவ்விடம் என்ற கேள்வியோடு ஆரம்பித்து அவ நெருங்கிக் கொண்டிருந்தா. அவர் சொல்கிற நபர்களை நான் அறிந்திருந்தேன். மில்கார பாலுவைத் தெரியுமா என்று அவ கேட்டா. (தெரியாமல் இருக்குமா) அவையிட ஆட்கள்தான் நாங்கள்.. ஒரிஜினல் ……… என்ற அவவின் வார்த்தைகளை சத்தியமாக ஜீரணிக்க முடியவில்லை என நான் எழுதுவது ஏதோ அதிர்ச்சித் தொனிக்காக அல்ல. அது ஒருபோதும் எதிர்பாராதது. அவவுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்..? ஏன் டூப்ளிக்கேற்றும் உண்டோ என்று கேட்பதைத் தவிர..

எப்போதோ எழுதி வைத்திருந்த ஒரு சிறுகதைக்கு அதன் பிறகே நான் புடுங்கியிருக்கிறது என்று தலைப்பிட்டேன். புலம்பெயர்ந்த உலகச் சமூகங்களில் அரசியல் மற்றும் சமூகக் கருத்தியலில் ஒரு செத்த இனமாக நாங்கள் உருவாவதுபோலத் தெரிகிறது. நாங்கள் ஒட்டுண்ணிகள். அவ்வளவே..

0 0 0

vஅண்மைக்காலமாக எனது பதிவுகள் இரயாகரனின் தமிழரங்கத்தில் வெளியாகின்றன. ஒரு ஊடகத்திற்கு குத்தப்பட்ட முத்திரையைக் கொண்டே அதில் வெளியாகிற பதிவுகளின் நபர்களும் பார்க்கப்படுகிற சூழல் நிலவுகிறதெனினும் அதனை நான் அலட்டிக் கொள்ளவில்லை. பொது வெளியில் ஏதோ ஒரு வழியில் வெளிவந்துவிட்ட பிறகு அது எங்கிருந்தும் வரட்டும். அது பேசுகிற பொருளைப் படிப்பவர்கள் படிக்கட்டும். மற்றவர்கள் இவனொரு விலைபோனவன் என்று சொல்லட்டும். தமிழரங்கத்தில் வெளியாகிற பதிவுகள் தம்முடைய நியாயப்பாடுகள் அல்லது விருப்பங்களுக்கு ஏற்று “தமக்குச் சரிப்பட்டு” வரக்கூடிய உடன்பாடுகளுக்கு உட்படுகிறதாக அமையின் அவற்றை வெளியிடுகிறார்கள் என நினைக்கிறேன். உதாரணமாக இந்தப்பதிவின் முதல் இரண்டு பகுதிகளும் “அவர்களுக்குச் சரிப்பட்டு” வரக்கூடியதாக அமையலாம். அமையின் அவர்களாகவே எடுத்துப் போடுகிறார்கள். பெரும்பாலும் பதிவெழுதும் போதே “அவர்களுக்குச் சரிப்பட்டு வரும்..” “வராது” எனப் புரிந்து விடுகிறது. மற்றும்படி இதனை வெளியிடவும் என தமிழரங்கத்திற்கு அனுப்புவதோ “லிங்” கொண்டு சென்று குத்தும் விளம்பரப்படுத்தல்களையோ செய்வதில்லை.

இனியொரு தளத்தில் இரயா குறித்த அசோக் யோகன் எழுதிய பதிவொன்றினைப் படித்தேன். அதில் இரயாவின் விமர்சன மொழி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. என் சின்ன வயதுகளில் ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். தெளிவாகவே அவர் தனது வார்த்தைகளில் தன்னையொரு சாதிய மேலாளர் எனக் காட்டிக் கொள்வார். “நாய்ச்சாதி.. நலமெடுத்த நாயே.. நக்கிப்பிழைக்கிற எளிய வடுவா.. அவனோடை படுத்த முண்டம்.. மூதேவி ” இப்படியாகத்தான் அவரது வசவுகள் நீளும். பாடசாலைகளுக்குள்ளும் அவை நீண்டிருந்ததாகத்தான் படித்தவர்கள் சொன்னார்கள். அவ்வப்போது இரயா பயன்படுத்தும் வசவு மொழிகளும் வாத்தியார் மொழிகளோடு பெரிதும் வேறுபடுவன அல்ல. அவற்றைப் படிக்கும் போதெல்லாம் எனக்கெழுகிற உணர்வு என்னவெனில் “நல்ல வேளையாக இரயாகரனின் கையில் ஆயுதங்கள் இல்லை” என்பதுவே..

0 0 0

ஒன்றிரண்டு இணைப்புக்கள்
புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும் – பூராயம்
ஈழத்தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்? -கீற்று

By

Read More

இந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?

அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து ….

antonதமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி வீரர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப் பட்டனர்.

இந்திய தூதர் திரு டிக்சிட் அவ்வேளையில் புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப் பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு டிக்சிட்டுடன் தொலைபெசியில் கதைத்த போது அவர் என்னை பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சனையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகி தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

அந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப்படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதி படைகளிடம் கையளிக்கப் பட்டிருந்தது. அத்துடன் மாவட்ட தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமைய தமிழ் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப் பட்டிருந்தது.

இந்த அமைதிச் சூழலில் எதுவித குற்றமும் புரியாத போர் நிறுத்த விதிகளையும் மீறாத கைது செய்து தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்த்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.

இந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே பழக்கமானவர். வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட்சி ங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம் தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்து தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும் ஒரு சிறிய பிரச்சனையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது குற்றம் சாட்டினார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தை கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்ன போது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென்று இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவ தளபதி எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்திய தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.

000

மறுநாள் காலை ஆகஸ்ட் 4ம் நாள் நான் பலாலிக்கு வருகை தந்து திரு டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது குரல் தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கை கடைப்பிடிப்பதாகச் சொன்னார். புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதர் சொன்னார்.

எமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப் படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே ஜெயவர்த்தனா பிரகடனம் செய்துள்ளார். அதன் பிறகு நம் போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முயல்வது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும். என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்கு சுட்டிக் காட்டினேன்.

பலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு சிறை வைக்கப் பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன்.

இந்தியத் தூதர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாகவே நின்றனர். போராளிகளை கொழும்பு கொண்டு செல்வதற்கான சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டிற்கு தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப்படைத் தளபதி ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து புலிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி பிரச்சனை தீர்க்கப் படும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு இந்தியத் தூதர் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார்.

நான் ஏற்கனவே இந்திய அமைதிப்படைத் தளபதியுடன் உரையாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கும் மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்து விட்டார். தான் ஒரு இராணுவ கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப் பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் விவாதம்.

அன்று நான் அவரைச் சந்தித்த போது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர் (டிக்சிட்) இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். சிறிலங்கா இராணுவத்திற்கும் எனது படையினருக்கும் நிச்சயமாக மோதல் வெடிக்கும் என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் புலிகள் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர் இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.

எதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில் எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மானத்தை எழுத்தில் வரைந்து அதில் எல்லோரும் கையொப்பமிட்டு அந்த கடிதத்தை பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி அவமானப்பட்டு உயிர் நீப்பதை விட இயக்கத்தின் போரியல் மரபுக்கு அமைவாக தமது உயிரைத் தாமே அழித்து கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ளத் தாம் உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் பிரபாகரனுக்கு எழுதியுள்ளார்கள். சயனைட் விசக் குப்பிகளை அனுப்பி வைக்குமாறு கடித முடிவில் உருக்கமாக கேட்டிருக்கிறார்கள்.

அன்றிரவு பிரபாகரனைச் சந்தித்த போது ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு அத்துலத் முதலியின் வஞ்சகம் டிக்சிட்டின் கையாலாகத்தனம் அமைதிப்படைத் தளபதியின் அகம்பாவம் எமது போராளிகளின் அவல நிலை ஆகியவற்றை விளக்கினேன். எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி இந்தியாவுக்கு நாம் ஒத்துழைத்த காரணத்தினால்த்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம் என்றார் பிரபாகரன். போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நடந்தால் ஏற்படும் பாரதூரமான விளைவை இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.

மறுநாட் காலை அக்டோபர் 5 பலாலி விமானத் தளத்திற்கு சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரனின் செய்தியைத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். இறுதி தடவையாக முயன்று பார்க்கின்றேன் என்றார். சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அன்று மதியம் உணவுப் பொருட்களுடன் பலாலித் தளம் சென்று எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின் போது அவர்களின் வேண்டுகோளை நான் நிறைவு செய்தேன். புலிகளின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.

அன்று மாலை அளவில் சிறிலங்கா விமானத் தளத்தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா போராளிகளை வலுவந்தமாக விமானத்தில் ஏற்ற தனது படையணிகளுக்கு உத்தரவிட்டார். சிங்கள இராணுவத்தினர் போராளிகளை நெருங்கிய போது அவர்கள் அனைவரும் சயனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரசாவை தழுவிக் கொள்ள மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள்.

இந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக்கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராக கோசங்கள் எழுப்பினார்கள். காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள். இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக்கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். புலிபோராளிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர் தமிழ் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டு கோள் விடுத்தார்.

87 அக்டோபர் 7ம் நாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் கே சி பாண்ட் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர் ஜி ஆகியோர் கொழும்பிற்கு வருகை தந்து ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினார். இராணுவ பலத்தைப் பிரயோகித்து புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அறியத் தரப்பட்டது. ஜெயவர்த்தனாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை புலிகளுக்கு எதிராகத் திருப்பி விட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாண குடாநாடு மீது படையெடுத்து அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து புலிகளை நிராயுதபாணிகளாக்கும் பவான் நடவடிக்கையை அக்டோபர் 10ம் நாள் ஆரம்பிப்பதென முடிவாயிற்று.

1987 அக்டோபர் 10ம் நாள் இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. அன்றைய நாள் அதிகாலை ஈழமுரசு முரசொலி ஆகிய நாளிதழ்களின் செயலகங்களிற்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர் பத்திரிகை கட்டடங்களையும் குண்டு வைத்து தகர்த்துடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். புலிகளின் தொலைக் காட்சி நிறுவனமான நிதர்சனம் தீவை த்து கொழுத்தப்பட்டது.

இந்திய புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களும் நீடித்தது.

இணைப்புக்கள்

1. இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்த அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய இலங்கை ஒப்பந்தந்தின் கடப்பாடுகளுக்கு அமைய தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இராணுவம் அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்திய தளபதிகளின் கருத்தாகும். 1992 இல் தான் எழுதி வெளியிட்ட The IPKF in Sri Lanka என்ற நூலில் இந்திய இராணுவ தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப் பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்.

புலிகளுக்கு எதிராக படைப் பலத்தை பிரயோகிக்க வேண்டுமென்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது. நாம் கடும் போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி ஒரு முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சி சூழ்நிலைக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாது தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தை கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்கு புறப்பட்டுச் சென்றார். புலிளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங் கடும் முயற்சிகள் எடுத்தார். தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிஸ்டவசமாக அவ்வேளை அவர் கடும் சுகவீனமுற்று அமெரிகாவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். சென்னையில் பண்டுருட்டி இராமச் சந்திரனை சந்தித்த திபேந்தர் சிங் ரஜீவ் காந்தியுடன் பேசி போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் படி சொன்னார். ஆனால் அமைச்சர் பண்டுருட்டியாரின் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தனது ஆலோசனைகளுக்கும் ஆட்சேபனைகளுக்கும் மாறாக புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப் பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இதுவொரு அரசியல் முடிவென்றே கருதினார் அவர்.

2.
இந்திய -புலிகள் யுத்தம் ஆரம்பமான பின்னர் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கையில்,
அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.

By

Read More

× Close