வாழ்வு

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரை
ஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு காரணம். அது தவிர திரைப்படங்கள் ஆகட்டும் அல்லது பாடல்கள் ஆகட்டும் நாம் எமக்கான உதாரணங்களாக இந்திய சினிமா மற்றும் இசையினையே முன்னெடுத்துப் பார்ப்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ) ஈழப் போராட்டப் பாடற்களத்தில் புதுவை இரத்தினதுரைக்கு பெருமளவு பங்கிருக்கிறது.

பாடற்களம் தவிரவும் கவிதைப் பரப்பிலும் இவர் அறியப் படுகிறார். புலிகள் அமைப்பில் இணைவதற்கு முன்பே இவரது கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. ஆரம்பத்தில் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கின்றார் என அவரது முன்னைய கவிதைகள் சொல்கின்றன. பிற்காலங்களில் கூட தனது சில பல கவிதைகளில் என் ஜேவிபி தோழனே என விளித்திருக்கிறார். தனது மே தின கூட்டங்கள் குறித்து நினைத்திருக்கின்றார்.

ஆயினும் எது கவிதை என்ற சுழலில் அவரும் சிக்காமல் இல்லை. விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வியாசன் என்னும் புனைபெயரில் எழுதிய கவிதைகளை, அவர் தற்போதைய எண்ணக் கருக்களுக்கேற்ப அவை கவிதைகளா என தனக்குத் தெரியாதெனவும், ஆனால் அவற்றை உரைச் சித்திரங்கள் எனத் தன்னால் கூற முடியும் எனவும் சொல்கிறார்.

உலைக் களத்தில் வெளியாகும் புதுவையின் உரைச்சித்திரங்கள் நிறைந்த வீச்சைக் கொண்டவை. சம காலத்தின் மீதான அவரது பார்வையைச் சொன்னவை. அவரது கோபங்களைக் கூறியவை. (புலம் பெயர் தமிழர்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய இரண்டு வரிகள் அண்மைக் காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமாதானத்திற்கான காலத்தில் அவர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்திருந்த போது அவரை விமர்சிக்க அது பெருமளவு பயன்பட்டது.)

94 இல் ஆட்சிக் கட்டிலேறிய சந்திரிகா அரசுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலத்தில் அவர் உலைக்களத்தில் எழுதுகிறார்.

மேடைக்குப் புதிய நடிகை வந்தாள்
நல்ல நடிப்புடன் நாடகமாடினாள்
கதையற்ற கலைப்படைப்பு என்பதால்
பெரிய படிப்புக்காரியின் பொய் வேடம்
நீண்ட காலத்துக்கு நிலைக்க வில்லை.
இடை வேளையுடன் திரை விழுந்தது.
ஈழத் தமிழர் ஏமாளிகள் என்ற கதை
திருத்தியெழுதப்பட்டதை
அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
இனி அமைதிக்கு வந்த அன்னப்பறவை
குண்டுகள் சுமந்து வந்து கொட்டும்.
கொட்டட்டும்.

95 ஒக்ரோபர் 30 யாழப்பாண இடப்பெயர்வின் பின்னர் துயர் சுமந்து இடிந்து போயிருந்த காலத்தில் அவரது படைப்புக்கள் சோகத்தைச் சுமக்கின்றன.

இடைவெளியற்று இடி விழுகிறது எமக்கு
அவலம் அன்றாட வாழ்வாச்சு
கறிக்கு உப்பானது கண்ணீர்
நாசித்துவாரங்கள் காற்றையல்ல
கந்தகத் துகள்களையே சுவாசிக்கின்றன.
அடுத்த நேர உணவு எந்த அகதி முகாமில்..
யாரறிவார்..

அதே நேரம் பொதுமக்களை நோக்கிய நம்பிக்கை அறைகூவல்களாக இருந்திருக்கின்றன.

எரியுண்டு போகுமா எம்மண்
நடவாது
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலங்கிட முடியும்..
மழை நீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது
அசையாதென்பதறிக
எந்நாட்டு மக்களையும் எம் தேசம் வரவேற்கும்
படையோடு வருபவர்க்கு எம் தலைவாசல் மரமிடிக்கும்.
குமாரணதுங்காவின் குடும்பத் தலைவிக்கு
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.

அவரது கவிதைகளில் எள்ளலும் கேலியும் ஆங்காங்கே தொனிக்கிறது. 96 இல் யாழ் குடா நாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிய பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டு நகருக்குள் வாழச்சென்ற சில பிரபலங்கள் மீதான தனது எள்ளலை இப்படிச் சொல்கின்றார்.

புராதன வாழ்வின் பெருமை அறியாது
நிவாரண வரிசையில் நிற்பதே தொழிலென
எட்டியுதைக்கும் கால்களுக்கு முத்தமிட்டபடி
புத்திஜீவிகள் சிலர் உன்னைப் பார்த்து புன்னகைக்கலாம்.
சிங்கக் கொடியேற்றும் போது
நந்திக் கொடியேற்றவும் நாலு பேர் இல்லாமலா போய் விடும்?
கும்பிட்டு வாழமாட்டோம் எழுதியவன்
உள்ளே வந்துள்ளான்
கூப்பிட்டழைத்துக் கொடியை ஏற்றுக.
வானம் எம் வசமென்று வாழ்த்துப் பாடிய சிலரை
இங்கு காணவில்லை.
சந்தக் கவிஞர்களல்லவா
உனக்கு வந்தனம் பாட வந்திருப்பார்கள்.
வாசலில் நிற்க வைக்கவும்.
சாமரம் வீச இவர்களே தகுதியானவர்கள்.
குவேனியின் பிள்ளைகளுக்கு குற்றவேல் செய்ய
காட்டாற்று வேகக் கதைக்காரன்
வீட்டுக்கு வந்தள்ளார்.
பதவியுயர்வுக்காக உனக்குப் பாதபூசை செய்வார்
பழைய பேப்பர் வழங்குக
அவர் பாடநூல் அச்சிடட்டும்..
பகையுடன் இனி உறவில்லையெனப் பாடியவரே
உமக்கு என்ன நடந்தது
உள்ளி கண்ட இடத்தில் பிள்ளைபெறும் வித்தையை
உமக்குச் சொல்லித்தந்தது யார்.?

பொதுவாக இவரது இத்தகைய உரைச் சித்திரங்களில் பிரதேச பேச்சு வழக்குக் கதையாடல்களும், பழமொழிகளும் நிறைந்திருக்கும். ஈழத் தமிழரின் அரசியல் வரலாற்றைச் சொல்லும் போது

காற்றுக்கொதுங்கிய போர்த்துக்கீசனின்
கண்ணிலெம் தாயகம் தெரியும் வரை
தலையில் கட்டிய தலைப்பாகையை
முதுகில் தொட்டுப் போவதென
உயர்ந்த வாழ்வுக் குரியவராய் இருந்தோம் நாம்.
எம்மை நாமே எழுதினோம்.
வெடிமருந்துடன் வந்தவனை
வேலும் வாளும் வெல்ல முடியவில்லை
வேற்றொருவனின் காலில் விழுந்தோம்.
கிணற்றில் விழுந்த குங்குமச் சரையாய்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கரைந்தோம்.
யானைகள் மிதிக்கும் சேனைப்புலவாய்
மாறி மாறிப் பலரின் மகுடத்தின் கீழ்
நாறிக் கிடந்தது நம் வாழ்வு
வெள்ளைக் காரன் வெளியெறிய போது
சேனநாயக்காவிற்கு சிம்மாசனம் கிடைத்தது.

குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயம் புதுவை இரத்தினதுரை, தான் தேர்ந்தெடுத்த போராட்டப் பாதையினூடு தன்னோடு பயணித்த சக தோழர்களின் பிரிவுகளையும் பதிவு செய்திருக்கிறார். இந்திய அரசிடம் 5 அம்சக் கோரிக்கையை முன் வைத்து சாகும் வரை உண்ணா நோன்பிருந்து மரித்த திலீபனை அவர் தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளையெனப் பாடுகின்றார்.

சென்ற இடமெல்லாம் தீ மூட்டி எரித்து விட்டு
அந்த இராமன் கூட அயோத்தி திரும்பினான்.
திலீபனே நீயேன் திரும்பி வரவில்லை.
வழி நிறைய எம்முற்றம் பூத்த வீரியக் கொடியை
அழியா முதலென்றல்லவா அழகு பார்த்தோம்!
அதை வேரோடிழுத்து வெய்யிலில் போட்டது
இமயம் உயரமெனும் அகம்பாவம்.
‘கந்தன் கருணை’ யிலிருந்துன் கால் நடந்த போது
கோயில் வீதியே குளிர்ந்து போனது.
கூட்டி வந்து கொலுவிருத்தினோம்.
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்தபடி
வீற்றிருந்தாள் முத்துமாரி.
பன்னிரண்டு நாட்களாக உள்ளொடுங்கி
நீ உருகியபோது
வெள்ளை மணல் வீதி விம்மியது.
உன்னெதிரே நின்று எச்சில் விழுங்கியபோது
குற்றவுணர்வு எம்மைக் குதறியது.
வரண்டவுடன் நாவு அண்ணத்தில் ஒட்டியபோது
திரண்டிருந்த சுற்றம் தேம்பியது.

இவர் ஈழப் போரில் நிகழ்ந்தேறிய சகல சமாதானப் பேச்சுக்களையும் ஒரு வித எச்சரிக்கையுணர்வுடனே அணுகியிருக்கிறார். வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை முன்னிறுத்தியே அவை பற்றிப் பேசுகிறார். சமாதானப் பேச்சுக்கள் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு மாவீரர் தினத்தில் அவரது உணர்வுகள் இவ்வாறு இருந்திருக்கின்றன..

இம்முறை துயிலுமில்ல வாசல்
திறக்கும் போதே
என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டால்
பதிலேதும் உண்டா எம்மிடம்..?
சம்பூ கொணர்ந்தோம்
சவர்க்காரம் கொணர்ந்தோம்
சீமெந்தும் முறுக்குக் கம்பியும்
செல்போனும் கொணர்ந்தோம் என்று
சொல்ல முடியுமா அவர்களுக்கு

2004 இறுதியில் சுனாமிக்கு உறவுகளைத் தின்னக்கொடுத்ததெம் தேசம். அந்த வலியின் அவலங்களை அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் இவை.

முள்முடி சூடி
முதுகிற் பாரச் சிலுவை சுமந்த
பாவப்பட்ட மக்களின் பயணப்பாடு முடிந்தது.
இயேசுவே
எம்மையேன் இரட்சிக்க மறந்தீர் சுவாமி
ஆலமுண்ட நீல கண்டனே
எம்மைச் சாவு தின்றபோது தாங்காதிருந்ததற்கு
அன்று மட்டும் உமக்கென்ன அலுவல் இருந்தது பிரபு
அல்லாவே பிள்ளைகளைக் கைவிட்டதேனோ?
புத்தபெருமானே
வெள்ளம் வருகுதென்றாயினும்
சொல்ல வேண்டாமா..?
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டீர்
நாம் தான் தனித்துப்போனோம்

நிகழ்காலத்திலான அவரது கவிதைகள் சமாதான மாயையில் சிக்கிப்போன நிலைபற்றிச் சொல்கின்றன. சலிப்பினையும் விரக்தியினையும் ஏமாற்றத்தினையும் அவை பேசுகின்றன.

இந்தத் தடவை வானப் பயணம் போனவர்
வந்து இறங்கியதிலிருந்து
ஆவியாய் வெளியேறிக் கரைகிறது
மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..
மேசையிலமர்ந்து பேசுவதென்பது
பூதகியிடம் பால் குடிப்பதைப் போன்றதே
உறிஞ்ச வேண்டும்
விழுங்கக் கூடாது
சிரிக்க வேண்டும்
சிக்குப்படக்கூடாது

சமாதானத்தின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்ட இன்றைய நிலையின் நாளைய நோக்குக் குறித்து எழுதும் கவிஞர் புதுவை இரத்தின துரையின் உலைக்கள வரிகள் இவை

நெஞ்சுக்குள் அலையெற்றிய
மாயக்கனவுகள் வெளியேற
நிஜமனிதர்களாக நிற்கிறோம் இப்போது.
மினுங்கிய மின்சாரமற்று
தொடர்புக்கிருந்த தொலைபேசியற்று
செப்பனிடப்பட்ட தெருவற்று
மாவற்று – சீனியற்று – மருந்தற்று
ஏனென்று கேட்க எவருமற்று
கற்காலத்துக்குத் திரும்புகிறோம் மீண்டும்.
கணினிகளையும் காஸ்சிலிண்டர்களையும்
வீட்டு மூலையில் வீசிவிட்டு
மெருகு குலையா மதில்களின் மின்குமிழ்களையும்
விறாந்தையின் தரைவிரிப்புகளையும்
மாடியிற் பூட்டிய அன்ரனாக்களையும்
அசுமாத்தமின்றி அகற்றிவிட்டு
பதுங்கு குழிக்குப் பால்காச்சிவிட்டோம்.
விடுவிக்கப்பட்ட ஊர்களை
விடுதலைபெற்ற தேசமென வெளிச்சம் செய்து
ஆடிய கூத்துக்கள் ஒவ்வொன்றாய் அகல
மீண்டும் நிஜத்துக்குத் திரும்பியது அரங்கு.
இப்போ மயக்கம் கலைந்த மனிதர்களைச் சுமந்து
மாரீசப் போர்வை கலைத்துக் கிடக்கிறது மண்.
இன்றைய விடிகாலையிற் துயில்நீங்கி
தாய்நிலம் வாய்திறந்து பாடும்
விடுதலைப்பாடல் பரவுகிறது வெளியெங்கும்.
மனச்சாட்சியின் கதவுகள் திறந்தபடி
எல்லோர் முகங்களிலும் அறைந்தபடி
கேட்கும் பாடலை உணரமுடிகிறதா உன்னால்?

ஒரு உண்மையான பிற்சேர்க்கை:
2002 இல் நானும் நண்பர்களும் ஆரம்பித்த எழுநா என்னும் இணையத்திற்காக புதுவை இரத்தினதுரை அவர்களிடம் பெற்ற வாழ்த்து இது தனிப்பட என் சேமிப்பில் இல்லையாயினும் மினிவெளியில் ஏதோ ஒரு மூலையில் இருந்தது.

இன்று புது உதயம் எழுகிறது.
இணையமதை
வென்று நிலைத்து விடும் விருப்பில்
எழுநா எனும்
கன்றொன்று இன்று கண் திறந்து கொள்கிறது.

நன்றென்று வாழ்த்தி
நான் மிதந்து கொள்கின்றேன்.

நீளக்கிடக்கின்ற நிலமெல்லாம்
நெடிதுயர்ந்து
ஆளும் நிலை தமிழுக்காகுமெனும்
நம்பிக்கை சூழ்கிறது.

எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..
உங்கள் தொண்டு மிக நெடிது.
வாழ்வீர்.
புதிய தொரு வரலாறு உமக்காகும்.

எழுநாவால் எழும் உலகு.
இனித்தமிழ்
தொழுதுண்டு வாழாதெனச் சொல்லி
நீ துலங்கு..

இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. ஆரம்பத்தில் இணையத்திற்கு உயிர்ப்பு எனத்தான் பெயரிட்டோம். புதுவையின் கவிதை கூட உயிர்ப்பு என்ற பெயரை மையப்படுத்தியே இருந்தது. (உயிர்ப்பால் உயிர்க்கும் உலகு என்றவாறாக..) ஆனால் சடுதியாகச் சில காரணங்களால் அதனை எழுநா என மாற்ற வேண்டியேற்பட்டது. கவிதையையும் மாற்ற வேண்டும். அவரும் மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில சரியான பிசி.. வேறை வழியில்லாமல் ஆங்காங்கே நானே கை வைக்க வேண்டியதாய்ப் போனது. ஆயினும் அது அவருக்கு அறிவிக்கப் பட்டது.

ஒரு உண்மையற்ற பிற்சேர்க்கை:
தம்பி சயந்தா உன் சாதனை மிகப்பெரிது என்று கூட ஒரு வரியைச் சேர்க்கலாம் என்றிருந்தேன். ஆனா சோமிதரன் தன்ர பேரையும் போட வேணுமெண்டான். சோமி உன் ஆற்றலைக் காமி என்றோ சோமி நீ எங்க குல சாமி என்றோ போட்டிருக்கலாம் தான். எண்டாலும் போடேல்லை 😉

By

Read More

அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம்

மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

அல்லது ?

நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் புறப்பட்ட ஒரு றோலர் படகு கரைக்கு வெகு சமீபமாகக் கவிழ்ந்ததில் 150 பேர் செத்துப் போய் சில காலங்கள் தான் ஆகியிருந்தது.

ம்.. ஒரு மூன்று மாத காலம் ஆகியிருக்கும்.

முல்லைத் தீவின் தேவிபுரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் இரு பிள்ளைகளையும் வெறும் உடலமாக கொண்டு வந்து இறக்கினார்கள். செத்துக் கிடந்த மூத்தவன் வீதிகளில் கண்டால் சிரிப்பான். பேசிப் பழக்கமில்லை. ஆனால் அவர்கள் மூன்று பிள்ளைகள் என்று தெரியும்.

அன்றைய இரவே இன்னொரு பிள்ளையையும் பிணமாக கொண்டு வந்து இறக்கினார்கள்.

அந்தக் குடும்பத்தில் அந்தப் பொழுதில் அவர்களுக்காக அழுவதற்காக யாருமிருக்கவில்லை.

இதோ என்னையும் இந்தக் கடலுக்கு துரத்தி விட்டிருக்கிறது காலம். முல்லைத் தீவில் புறப்பட்டு வன்னியை குறுக்காக கடந்து முழங்காவிலுக்கு வந்த இரண்டு வாரங்களில் இலுப்பைக் கடவைக்கு இரண்டு மூன்று தடவை வந்து விட்டேன். அத்தனை தடவையும் புறப்படும் படகுகளில், ஏதாவதொரு காரணத்தினால் எனது பயணம் தள்ளித் தள்ளிப் போனது.

95 ஒக்ரோபர் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கித் தொடங்கிய ஓட்டம் கொடிகாமம், எழுதுமட்டுவாள், முல்லைத்தீவு, முழங்காவில் என நீண்டு இன்று இலுப்பைக் கடவையில் வந்து நிற்கிறது, அடுத்த சுற்றுக்கு தயாராக.

இலுப்பைக் கடவையென்ற அந்த நிலத்தில் என்னால் இலகுவாக கரைய முடியவில்லை. எழுதுமட்டுவாள் ஆகட்டும், முல்லைத்தீவு ஆகட்டும் இயல்பாக, இலகுவாக அந்தச் சூழ்நிலைக்குள் என்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது. இலுப்பைக் கடவையிடம் நான் தோற்றுத்தான் போனேன்.

கரையில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மருத்துவ முகாம் நடாத்திக் கொண்டிருந்தனர். வேறு மருத்துவ வசதிகள் அங்கு கிடையாது. ஏதாவது பாரதூரமான நோய்கள் எனில் அவர்களூடாக மன்னார் மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டும்.

எனக்குள் நிறைய எண்ண அலைகள்

கிளாலிப் பயணம் போலவே இதுவும் இருக்குமா?

கிளாலியில் கடந்தது, யாழ்ப்பாணத்தையும் வன்னி பெரு நிலப்பரப்பையும் இணக்கும் கடல் நீரேரி. நிலங்களுக்கிடையில் உள் நுழைந்த கடல்.

இங்கே கடக்கப் போவது இலங்கையையும், இந்தியாவையும் இணைக்கும் பாக்கு நீரிணை.

வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். பயணத்தில் நேவி கவிழ்ப்பானோ.. அலைகள் கவிழ்க்குமோ.?

கரையைப் பார்த்தால் அவ்வளவு அலைகள் இருக்காது போலத்தான் தெரிந்தது. முல்லைத்தீவில், மணற்காட்டில் சீறி உயர்ந்தெழுந்து கரை வரும் வங்க அலைகளுடன் ஒப்பிடுகையில் இந்தக் கடல் அமைதியின் சொரூபம். இருப்பினும் இடையில் கிளம்பலாம். எவர் கண்டார்?

மணற்காட்டில் ஒரு முறை கரையில் வந்து சுழற்சியை முடித்துச் செல்லும் அலையொன்றின் இடையில் சிக்கி என்னை முழுவதுமாய் தண்ணீர் மூடி உள்ளே வைத்துச் சுழற்ற, என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், செத்துப் போகும் கணம் இதுதானாக்கும் என நினைத்தேன். பாவம் பிழைத்துப் போகட்டும் என அலை விட்டுப்போன இடத்தில் திக்கித் திக்கி திணறிக் குழறியது ஞாபகத்தில் வந்தது.

பயணத்தின் போது அரைக் காற்சட்டையும், உடலோடு ஒட்டிய ரி சேட்டும் போட வேண்டும். சப்பாத்தோ செருப்போ அணிவதில்லை என முன்பே நினைத்திருந்தேன்.

கடலில் நீந்தியிருக்கிறேன். நீச்சல் பழகியதே திருவடிநிலைக் கடலில்த் தான். ஆனால் இலக்குத தெரியாத நிலையில், எங்கு போகிறோம், எங்கு நிற்கிறோம் என்று தெரியாத சூழ்நிலையில், என்னால் நீந்த முடியும் என்ற எண்ணம் துளியும் எனக்கு இல்லை.

ஆயினும் ஐந்து பத்து நிமிடங்களாவது சாவைத் தள்ளிப் போடும் ஆசை அது. யாருக்குத் தெரியும், யாராவது மீனவர்கள் காப்பாற்றக் கூடும். அல்லது நேவியே பிடித்து சுட்டுக் கொல்வதற்கான மனநிலை இல்லா விட்டால் மன்னார் நீதி மன்றத்தில் நிறுத்தலாம். அதுவரைக்குமாவது நீந்தலாமே

இத்தனை கடந்து இது தேவைதானா? இந்தப் பயணத்தைத் தவிர்த்திருக்கலாமோ?

அலையும்

By

Read More

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

1995 , ஒக்ரோபர்,30

மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.


Image hosted by Photobucket.com

இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.

8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.


Image hosted by Photobucket.com

இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அன்று புரிந்தது.

குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.

By

Read More

காலமும் கதைகளும்

காலம் 1

மீண்டும் இடம் மாறிப் பூத்தது பூ

அவளோடு அதிகம் பேசச் சொல்லும் மனசு. அதை அடக்கும் புத்தி!

‘வழியாதே! கௌரவமாய் இரு”

அவளைப் பார்க்கும் கணங்களில் மனசு மட்டும் பற்றி எரிய மெல்லிய புன்முறுவலோடு சேர்த்து வணக்கம் உதிர்க்கும் உதடு.

தேவைக் கேற்ப பேசினானேயாயினும் சில சமயங்களில் அத் தேவைகளும் திணிக்கப் பட்டனவாயிருந்தன அவள் அறியாமல்!

அவளும் பேசுகிறாள் தன் தேவைக் கேற்ப, அவையும் திணிக்கப் பட்ட தேவைகளோ என்று எண்ணுகையில் அங்கே நிகழிகிறது முதல்த் தவறு!

‘எல்லோரும் இருக்க ஏன் என்னிடம் மட்டும்”!! என்ற படு பிற்போக்குத் தனம் உதித்தது!

காலம் 2

ரெலிபோனில் அழைத்தான்.

‘உங்களோடு கொஞ்சம் பேசலாமோ”

‘சொல்லங்கோ”

‘இவ்வளவு நாளும் கதைச்சதை விட வித்தியாசமாய் இருக்கும். பரவாயில்லையா”

மௌனம் நீடித்தது.

‘வேண்டாம். அப்பிடி எதுவும் கதைக்க வேண்டாமே”

நாக்கு உலர்ந்திருந்தது. தண்ணீர் குடித்தான்.!

‘சரி.. கொஞ்ச நாளாய் அப்பிடி ஒரு எண்ணம் மனசில.. கேட்டேன்.. அவ்வளவும் தான்.!”

‘கேட்டதும் நல்லது தான்..”

நல்ல வேளை நானும் ஏதாவது காரணமோ என்று அவள் கேட்கவில்லை!

‘வேறை என்ன .. நான் உங்களோடு பிறகு கதைக்கிறன்!” துண்டித்தான்.

காலம் 3

‘நான் நினைச்சன்! இனி என்னோடு கதைக்க மாட்டியள் எண்டு”

சிரித்தான்!

‘நான் என்ன செய்ய.. ரொம்பவும் திறந்த மனசு எனக்கு! நினைத்தவுடனை கேட்டன்..”

‘எனக்கும் தான்.. கேட்டவுடனை மாட்டன் என்றேன்.. அதை விட்டுவிட்டு யோசிக்க வேணும்.. ரைம் வேணும் என்றெல்லாம் கேட்க வில்லை பாத்தீங்களா”

‘அப்புறம்..”

‘…………………………”

‘…………………………”

காலம் 4

மீண்டும் அவளையும் தன்னையும் ஏமாற்றுவது போலிருந்தது!

அவளோடு சண்டை பிடித்து விலகியிருக்கலாம்!

மனக்குரங்கு மறுபடியும்!

இம் முறை ஆழமாகவும் விரிவாகவும் அர்த்தமாகவும்!

‘எனக்கெப்ப கல்யாணம் கட்ட வேண்டும் என்று தோன்றுதோ அப்ப நான் கட்டுவன்.! அதுக்கு முதல் காதல் என்பதெல்லாம் கிடையாது.!”

‘சரி.. நான் உங்களை கல்யாணம் கட்டுறன்.. என்ன சொல்லுறியள்?”

‘இதுக்கு ஓம் என்றால் காதலிக்கலாமே?”

‘அதைத் தானே நானும் கேட்கிறன்”

‘…………………”

‘………………….”

‘சரி எனக்கு உங்களை பிடிக்க வில்லை என்று சொன்னால் … இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று நினைக்கிறன்.”

பிரச்சனை முடிவுக்கு வந்தது!

‘இப்ப உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கும். உணர்வுகள் எனக்கும் விளங்கும்.. இன்னும் கொஞ்சக் காலத்திலை நினைச்சு பாருங்கோ சிரிப்பாக இருக்கும்.. “

உண்மைதான்.. சின்னப் பிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறது.

காலம் 5

‘நான் பிசாசு கதைக்கிறன்!”

‘அட என்ரை முன்னால் காதலியும்.. இந்நாள் சகோதரியும்.. சொல்லு!” ஒருமைக்கு தாவி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.

‘சகோதரி எண்டால் அடி வாங்குவாய்! இப்ப நீ பெரிய ஆள். போன் பண்ணுறதுமில்லை.. கதைக்கிறதும் இல்லை”

‘ஓம்.. முந்தி ஒரு தேவை யிருந்தது.. இப்ப அப்பிடி இல்லைத் தானே.. பிறகென்ன.. சரி.. முந்தி நான் அடிக்கடி எடுத்து கதைக்கும் போது தம்பி வேறையொரு பிளானோடை தான் இப்பிடி எல்லாம் கதைக்கிறார் எண்டு நினைக்க வில்லையா”

‘இல்லை.. நீ அப்பிடி தெரிஞ்சிருந்தால் அப்பனுக்கு அப்பவே புத்தி சொல்லியிருப்பனே”

‘அப்ப அளவுக்கதிகமா வழிய வில்லையெண்டு சொல்லு..”

காலம் 6

‘ஏன் எங்களுக்கெல்லாம் உங்கடை காதல் கதைகளை சொல்ல மாட்டியளோ?”

‘ஆறுதலாச் சொல்லுவம் எண்டிருந்தன்..! அதுக்குடனை வந்திட்டுதா?”

‘வாழ்த்துக்கள்..!”

‘நன்றி.. “

-மறுபதிப்பூ-

By

Read More

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

‘கட்டின சீலையோடை ஓடுறது’ எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

‘சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது’ எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை ‘நவீன பாஞ்சாலி’ எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ


Image hosted by Photobucket.com

By

Read More

× Close