ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன்.
தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை.
தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து வளர்ந்தவன் என்றாலும் (யாழ்ப்பாணத்தில் அவை தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் சத்தியமாய்ப் பார்க்கவில்லை!!!) அவற்றில் வரும் பேச்சு மொழி வழக்கு பெரிய அளவில் என்னளவில் கவனத்துக்குரியதாக இருந்திருக்கவில்லை.
(ஆயினும் உண்மையான சென்னைத் தமிழிற்கும் படங்களில் பேசப்படுகின்ற சென்னை சார்ந்த மொழிப் பேச்சு வழக்கிற்கும் என்னால் வித்தியாசம் உணர முடிகிறது. நேரடியாக தமிழக தமிழரோடு பேசும் வேளையில் நாம் பிறிதொரு பேச்சு வழக்கினை உடைய ஒரு நபரோடு பேசுகிறோம் அவர் பேசுவதை கேட்கிறோம் என்கிற உணர்வு வருகிறது. ஆனால் திரைப்படங்களில் அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை)
யாழ்ப்பாணத்து தமிழ் என பொது மொழியினூடு பேசினாலும் யாழ்ப்பாணத்திலும் வட்டார வழக்குகள் இருந்தன.
எங்கள் கிராமத்திற்கு அருகிருந்த ஒரு கிராமம்!
முழுதும் வேறுபாடாக கதைப்பார்கள்.
பேசும் போது ஒரு சுருதியில் பேசுவார்கள். (சில வேளை நாம் பேசுவதும் அவர்களுக்கு அப்பிடித்தான் தெரிகிறதோ என்னவோ?)
ஐம்பது சதம் என்பதை அம்பேயம் என்பார்கள். அது எங்களுக்கு சிரிப்பாயிருக்கும். (நாங்கள் அம்பேசம் என்று சொல்வது ஏதோ சரி என்ற நினைப்பு எங்களுக்கு இருக்கும்)
யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி சென்ற பின்னர் தான் படங்களில் கவனிப்பு பெறாத தமிழகத்தின் பல கிராமங்களைச் சேர்ந்தவர்களின் வட்டார வழக்கு மொழியை எதிர் கொண்டேன்.
வன்னியில் நாமிருந்த பகுதிகளில் பெருமளவு வசித்தவர்களின் பூர்வீகம் இந்தியா!
மலையகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் இலங்கையின் இனக்கலவரங்களோடு வன்னிப் பகுதிகளுக்கு வந்து காடு வெட்டி வாழ்விடம் அமைத்து இன்று அந்த மண்ணின் குடிகளாகி இருக்கிறார்கள்.
நாமிருந்த தென்னங்காணியின் முழுப் பராமரிப்புப் பொறுப்பிலிருந்தவரின் பூர்வீகம் இராமநாதபுரம்! அது போலவே அங்கு பணிபுரிந்த பலர் தமிழகத்தோடு பிணைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களிடம் தமிழக ஊர்களின் பேச்சு வழக்கு மொழியினை அறிந்து கொண்டேன். அப்போதும் அவர்களை நையாண்டி செய்வதற்காகத் தான்.
அவர்கள் ஏதாவது சொன்னால்.. அப்படியா என்று இழுக்க ஓமோம் அப்பிடித்தான் என்பார்கள் அவர்கள்.
(இந்த ஓமோம் என்ற சொல்லை தெனாலியில் ஜெயராம் ஓமம் என்பார்)
எங்கள் பேச்சு வழக்கில் தேனீர் குடிப்பது என்றே பழகி வந்ததால் அவர்கள் அதை சாப்பிடுவதாய்ச் சொல்கின்ற போது அதையும் கிண்டலடிப்பேன்.
தேத்தண்ணி சாப்பிட்டு விட்டு சோறு குடிக்கிறீர்களா?
அவர்களும் ஏதாவது நாம் பேசும் போது திடீரென பேந்தென்ன (பிறகென்ன) என்பார்கள்.
அவர்களிடம் பேசியதும் பழகியதும் எனக்கு இந்தியாவில் பயன்பட்டது.
மண்டபம் முகாமில் எமக்கான பதிவுகள் முடிந்து ‘நம்ம ரூம் எங்கேருக்கு சார்” என்று அங்கிருந்த ஒரு அதிகாரியைக் கேட்ட போது அவர் ஒரு மாதிரியாக பார்த்தார்.
நீ ஆல்ரெடி இந்தியாக்கு வந்திருக்கியா?
ஐயோ இது வேறை பிரச்சனையளைக் கொண்டு வந்துவிடும் எண்டதாலை இல்லையில்லை.. இப்பதான் முதல்த்தரம் வாறன் என்று என் வாலைச் சுருட்டிக்கொண்டேன.
ஆனாலும் திருச்சியில் கடைகளில் வலிந்து தமிழக வழக்கில்த்தான் பேசுவேன். (ஒரு பாதுகாப்பிற்குத்தான்.)
அங்கு மாற்றிக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களை திரும்பவும் வழமைக்கு கொண்டு வர எனக்கு சில காலம் எடுத்தது. (உதாரணங்கள்: சேர் (Sir) வோட்டர் (Water) சொறி (Sorry) இவற்றை சார், வாட்டர் சாரி என தமிழகத்திற்கு ஏற்றால்ப்போல மாற்ற வேண்டியிருந்தது.)
இப்பொழுதும் தமிழக வழக்கு என் பேச்சில் அவ்வப்போது இருக்கும். என்னால் அவதானிக்க முடிந்த ஒரு மாற்றம் இது. யாழ்ப்பாண பேச்சு வழக்கில் கேள்விகளின் இறுதியில் ஓ சேர்த்து முடிப்பார்கள். அதாவது அப்பிடியோ உண்மையோ என்பது போல. ஆனால் எனது வழக்கில் அவை அப்படியா உண்மையா என்றே வந்து விழுகின்றன. இது தமிழக பாதிப்பாகத்தான் இருக்கும்.
மீண்டும் கொழும்பு வந்து பள்ளியில் சேர எங்கேயும் கேட்டிராத இன்னுமொரு வழக்கு கேட்க கிடைத்தது. அது என்னோடு படித்த இஸ்லாமிய நண்பர்களினது. இருக்கிறாரா இருக்கிறாரோ இருக்காரா என்பது போலவே அவர்கள் ஈக்காரா என்பார்கள்.
சதிலீலாவதி படம் பார்த்த காலத்தில் அந்த கோயம்புத்தூர் தமிழ் அப்படியே பற்றிக் கொண்டு விட கொஞ்சக் காலம் அது போலவே நண்பர்களோடு பேசித் திரிந்தேன்.
என்ட்ரா பண்ணுறா அங்க..? ஆ… சாமி கும்பிர்றன் சாமி..
இப்பவும் அந்தப் படம் எனக்குப் பிடிக்கும். அது போலத் தான் திருநெல்வேலி வட்டார வழக்கில் ஏலே என்னலே சொல்லுற என்பது போலவும் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறேன்.
தெனாலி வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயம்! கமல் யாழ்ப்பாணத்து தமிழில் பேசுகிறாராம் என்ற போது சந்தோசமாகத் தான் இருந்தது. அதே நேரம் இது புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கான வர்த்தக குறி என்ற எண்ணமும் வராமல் இல்லை.
தெனாலி பார்த்து சிரித்தேன். மற்றும் படி அந்த யாழ்ப்பாணத் தமிழை நான் யாழ்ப்பாணத்தில் கேட்டதே இல்லை. இலங்கை வானொலி நகைச்சுவை நாடகங்களில் கேட்டிருக்கிறேன்.
காற்றுக்கென்ன வேலி என்னும் ஒரு படம். அதில் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லாரும் இலக்கண பாடம் நடாத்தும் தமிழாசான்கள் போல எடுத்திருந்தார்கள்.
கன்னத்தில் முத்தமிட்டாலில் நந்திதாவோடு வருகிற பெண்கள், அம்மாளாச்சி காப்பாத்துவா என்று சொன்ன அந்த முதியவர் இவர்கள் ஓரளவுக்கு யாழ்ப்பாணத்தமிழில் பேச வேண்டும் என்ற தமது ஆசையை நிறைவேற்றினார்கள்.
நளதமயந்தியில் பேசிய குடிவரவு அதிகாரி மௌலி மிக அழகாக பேசினார்.
ஆக இந்த தமிழ் கேட்பவர்கள் எல்லாம் இதில் தேன் ஒழுகுகிறது, பால் வடிகிறது என்னும் போது இது கொஞ்சம் மிகையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
யாழ்ப்பாணத்தமிழை சுத்தமான தமிழ் என்று சொல்ல முடியுமா? தமிழக நண்பர்கள் வாங்க என்கிறார்கள். நாம் வாங்கோ என்கிறோம். இதிலே எங்கு வந்தது சுத்தம்? பேசும் லயத்திலா? ஒரு வேளை இருக்கலாம். எங்களுக்கும் கோயம்புத்தூர் தமிழ் ஒரு லயத்தில்த் தானே கேட்கிறது.
ஒன்றைச் சொல்ல முடியும்!
இலங்கையின் எந்தப் பகுதி வட்டார மொழியாக இருப்பினும் அவர்கள் அதிகமாக ஆங்கிலம் கலப்பதில்லை. அதற்காக மகிழூந்து பேரூந்து என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனாலும் தொடர் பேச்சு ஒன்றில் சில வசனங்கள் தமிழிலும் சில வசனங்கள் ஆங்கிலத்திலுமாக பேசுவதில்லை.
அதாவது “Do you know something? yesterday நான் கோயிலுக்கு போனன். I couldn’t Believe it.. என்னா நடந்திச்சின்னா wow.. what a surprise” என்ற மாதிரி..
இப்படி பேசுபவர்கள் குறித்து நான் அடிக்கும் ஒரு கருத்து! அவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அதனால்த்தான் அடிக்கடி தமிழ் கலந்து கதைக்கிறார்கள்.
அது போலவே தமிழ் தெரிந்த இன்னொருவரோடு தமிழில் பேசுவது தாழ்வானது என்ற எந்தச் சிக்கலும் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இல்லை.
இலங்கையில் தொடர்ந்து இந்த நிலை சாத்தியப் படக்கூடும். வெளிநாடுகளில் இப்போது பிறந்து வளரத் தொடங்கிவிட்ட இலங்கையைச் சேர்ந்த அடுத்த தமிழ்த் தலைமுறையிலும் இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.
என்னைக் கேட்டால் உதட்டைப் பிதுக்கிக் கொள்வேன்.