2002 இன் பெப்ரவரியில் ஒரு நாள்!
தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருக்கின்றேன். வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் நிகழும் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற நிகழ்வொன்று நேரடியாக ஒளிபரப்பாகிறது. இலங்கை அரச படைகளால் ஆங்காங்கே கைது செய்யப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் அங்கு வைத்து புலிகளிடம் கையளிக்கப்பட, புலிகள் தம் வசமிருந்த இலங்கை அரச படையினரை பதிலுக்கு விடுதலை செய்தார்கள்.
துளிர் விட்டிருந்த சமாதான நம்பிக்கைகளின் பொருட்டு நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பும் இவ்வாறான ஒரு இணக்கத்துக்கு வந்திருந்தார்கள்.
கமெரா அவ்விடத்தை முழுமையாகக் காட்சிப்படுத்துகிறது. இலங்கை அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், புலிகளின் அரசியல் மற்றும் இராணுவப் பிரிவினர், விடுவிக்கப் படுகின்ற இருதரப்புக் கைதிகள், அவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்டோர் நிறைந்திருந்தனர்.
விடுவிக்கப்பட இருப்போரில் பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாசமிருந்தவர்கள். இன்னும் சிலர் இறந்துவிட்டதாகவே கணிக்கப்பட்டவர்கள். தொலைக்காட்சி அவ்வப்போது அவர்களை மிக அருகில் உள்வாங்கிக் கொள்கிறது. ´´அவர்தான் கெனடி´´ என்றான் பக்கத்திலிருந்த நண்பன். 93இன் இறுதிகளில் பலாலித் தளத்தினில் புலிகள் நடாத்திய கரும்புலித் தாக்குதல் ஒன்றில் பங்கு பற்றியவர் அவர். அப்போதைய தொடர்பாடல் காரணங்களால் தாக்குதலில் வீரச்சாவடைந்த புலிகளின் வரிசையில் அவர் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆயினும் பல காலங்களிற்கு பின்னரே அவர் கொழும்புச் சிறையொன்றில் இருப்பது தெரியவந்தது.
கமெரா அவரைக் கடந்தும் செல்கிறது. எல்லோருடைய முகங்களிலும் ஒருவித அமைதி கலந்த மகிழ்ச்சி படிந்திருந்தது.
இப்போது விடுவிக்கப் பட்டவர்கள் தமது உறவினர்களோடு அளவளாவினர். மகனை உச்சி மோர்ந்து கொஞ்சும் தாய், அண்ணனை அரவணைக்கும் தம்பி, ஆனந்த கண்ணீர் உகும் தந்தையென உணர்ச்சிகளின் கலவைகளால் நிறைந்திருந்தது அவ்விடம்.
அதோ அந்த சிங்களத் தாயின் மகிழ்வும், அவர்களுக்கு அருகிலேயே நின்று தன் அண்ணனின் தோள்களில் தொங்கிய தமிழ்த் தம்பியின் சந்தோசமும் எனக்குள்ளும் உருவானதாய் உணர்ந்தேன் –
இந்த மகிழ்வுகளின் பின்னால் இவர்கள் எத்தனை வேதனைகளை, துயரங்களை கடந்து வந்திருப்பார்கள் ? எத்தனை வருடங்கள் இவர்களைத் தனிமையில் விழுங்கியிருக்கும்..?
= = =
பட்டாம் பூச்சி – கென்றி ஷாரியர் எழுதிய Papillon என்னும் பிரெஞ்சு நூலின் ஆங்கிலம் வழியான தமிழ் மொழிபெயர்ப்பு. தமிழில் பெயர்த்தவர் ரா.கி.ரங்கராஜன் – 800 பக்கங்களைத் தாண்டும் இந் நூலினை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்த போது மயிர்கூச்செறிதல் என்று சொல்வார்களே – அந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டேன்.
நூலின் ஆசிரியர் தனது இருபத்தைந்தாவது வயதில் கொலைக் குற்றமொன்றிற்காக ( செய்யாத கொலையென்கிறார் ஆசிரியர்) ஆயுட் தண்டனை பெற்று அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறு கோடிக்கு, பிரெஞ்சுக் கயானாவில் இருந்த கொடிய தீவாந்தர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப் படுகிறார்.
அடுத்த 13 ஆண்டு காலத்திற்கு அவர் ஒவ்வொரு சிறையாகத் தப்பித்துக்கொள்கிறார். தப்பிப்பதும், பிடிபடுவதும், அடைபடுவதுமாக 13 வருட காலத்தை, அவர் தனது விடுதலை மீதான இலக்கில் மீண்டும் மீண்டும் செலவிடுகிறார். கொடிய தீவுச் சிறைகளில் இருந்து புதைமணலிலும், ஒட்டைக்கட்டுமரங்களிலும் தப்பிப்பதுவும், மீண்டும் அகப்பட்டு இருண்ட தனிமைச்சிறைகளில் அடைக்கப்படுவதும், அதிலிருந்து வெளியேற தொடர்ந்து முயற்சிப்பதுமாக விரிகிறது கதை.
கதையில் விவரிக்கப் படுகின்ற வகையிலான கொடும் சிறைகளில் 13 ஆண்டுகள் என்பது எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. சாதாரணமாக செய்திகளில் 20 வருடம் தண்டனை, 30 வருடம் தண்டனை எனும் போது ஏற்படாத உணர்வலைகள் அத்தனை வருடங்களையும் வரிக்கு வரி விவரிக்கும் போது அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
பிரெஞ்சுக் கயானாவின் தனித்தீவுச் சிறைகளின் கொடூரத்திற்குச் சற்றும் குறைந்தனவல்ல நமது சிறைகள்!
= = =
இரவு நேர ஜெர்மன் மொழி வகுப்புக்கள் – சற்றே அவசரமான தேவையென்பதால் தினமும் நான்கு மணிநேரம் – முதல்நாள் வகுப்பிற்குள் நுழைந்த போதே அவரைக் கண்டு கொண்டேன்.
இடைவேளையின் போது வழமையான குசல விசாரிப்புக்கள் – அண்ணை தமிழோ என்பதிலிருந்து ஆரம்பித்தது. ´´எப்ப வந்தனியள்..?´´
´´ஒரு வருசமாகுது´´
——
தொடர்ந்த உரையாடலில் என்னுடைய ஏதோ ஒரு கேள்விக்கு அமைதியாய் அவர் சொன்னார். ´´ 19 வயசில இருந்து 31 வரை கிட்டத்தட்ட 12 வருசம் வெலிக்கட நாலாம்மாடியெண்டு கன இடங்களில சிறையில இருந்தன்.´´
பட்டாம்பூச்சி படிக்கும் போதிருந்த படபடப்பு எனக்குள்.
அவர் தொடர்ந்தார். ´´பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் போது இழுபறிப் பட்டு என்ரை பெயரையும் சேத்தாங்கள்´´
பிறிதொரு நாள் அவர் காட்டிய 96ம் ஆண்டுத் தமிழ்ப் பத்திரிகையொன்றில் அவர் இறந்து போனதாய்ச் செய்தியொன்று வந்திருந்தது.
= = =
அண்மைக்காலங்களில் இணையத்திலும் சரி எங்கினும் சரி ஈழத்தின் செய்திகளைக் காணும் போதெல்லாம் ஒரு வித வெறுமையும் இறுக்கமும் தொற்றிக்கொள்கிறது.
இதை நான் எழுதும் கணத்தில் நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்.
இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகியிருக்க முடியவில்லை.
நண்பரின் 12 வருட கால சிறை அனுபவங்களை அருகிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன். பதிவு செய்ய வேண்டும்.