திருமண நிகழ்வுக்காக பெண் பார்க்கப் போகும் ஒரு வழக்கம் தமிழகத்தில் ( இந்தியா.) உள்ளதென்பதை எனது பதின்மங்களில் தமிழக சமூக நாவல்களிலும், திரைப்படங்களிலும் நான் அறிந்து கொண்ட போது, அவை கதைக்கு சுவாரசியம் சேர்க்கச் சொல்லப்படுகின்றன எனத்தான் நம்பியிருந்தேன். கதைகளிலும், படங்களிலும் பெண் பார்க்கும் நிகழ்வில் சில சமாசாரங்கள் எப்போதும் நடைமுறையில் இருக்கும். பஜ்ஜி சொஜ்ஜி, பெண்ணைப் பாடச் சொல்லி கேட்பது, நேரடியான சீதனப் பேச்சுக்கள், வீட்டுக்குப் போய் கடிதம் போடுகிறோம் என்பவையே அவை. அதிலும் குறிப்பாக பெண்ணைப் பாடச்சொல்லிக் கேட்பதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடக்குமா என்ற சந்தேகத்திலேயே இது வெறும் கதையாயிருக்கும் என நினைத்ததுண்டு.
ஆனால் பெண் பார்க்கச் செல்லும் பழக்கம் அங்கு பெரும்பாலும் நடைமுறையில் உண்டென்பதை சில நண்பர்கள் மூலமாகவும், தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நேயர்களிடமிருந்தும் பின்னாளில் அறிந்து கொண்டேன்.
ஈழத்தில் இவ்வாறான பெண் பார்க்கச் செல்லும் நடைமுறை தற்போதைய வழக்கில் இல்லை. நிறையப் பண்பாட்டுத் தொடர்புடைய தமிழகத்திடமிருந்து இந்த வழக்கம், நமக்கும் முன்பு நடைமுறையிலிருந்து பின்னர் அருகியற்றதா, அல்லது இந்த நடைமுறை அறவே இல்லையா என்பதை பழம்பெரும் பதிவர்களான மலைநாடன், சின்னக்குட்டி, கானா பிரபா போன்றவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ஈழத்தில் திருமணம் நிச்சயிக்கப் பட்ட பின்னர் வேண்டுமானால் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்கு செல்வதுண்டே தவிர பெண் வீட்டுக்குப் போய் அங்கு வைத்து பிடித்தால் நிச்சயம் செய்யலாம் என்ற நடைமுறையில்லை.
நிறுவன ரீதியான திருமண முகவர்கள், மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் எனப் பரவலாக அங்கும் நடைமுறை வந்துவிட்டாலும் அவற்றின் மூலம் கிடைக்கப் பெற்ற சாத்தியமான இடங்களுக்கு தமது உற்றார், உறவினர், அன்புச் சித்தப்பா, ஆசை மாமா என ஒட்டுமொத்தமாய்ச் சென்று, பொண்ணுக்குப் பாடத்தெரியுமா என்று எவரும் ஈழத்தில் கேட்காமல் விட்டதேன் என யோசிக்கிறேன்.
பெரும்பாலும் மூன்றாவது நபர் ஒருவர் இருதரப்புக்கும் இடையில் உறவினைப் பேணுவார். நிறுவன முகவர்கள் தவிர, இடை உறவினைப் பேணும் இவர்களைத் தரகர் என முடியுமா தெரியவில்லை. கிராமப் புறங்களில் நாலு பேருக்கு நல்லது செய்யலாம் என நினைக்கும் யாராவது ஒருவர் தான் இந்தப் பணியில் ஈடுபடுவார். பெட்டையின்ர படம் ஒண்டு தரட்டாம் எண்டதில இருந்து பிடிச்சிருக்காம் சாதகம் தரட்டாம் என்பது வரை எல்லாம் இவர் ஊடாகத் தான் பேசி முடிக்கப்படும். வெறும் மீடியேற்றர் என்றாலும் கூட அவ்வப்போது கிளம்புகின்ற சின்ன சின்னப் பிரச்சனைகளை சமரசம் செய்ய உதவுவார்.
ஒருவேளை பெண்ணை நேரடியாப் பார்க்கும் தேவையிருந்தால்க் கூட கோயில்களிலேயோ வேறெங்காவது வீடுகளிலோ பார்த்து விடுவார்கள்.
இரு வீட்டுக்கும் இணக்கப் பாட்டுக்கு வருவதை ஈழத்தில் முற்றாக்கியாச்சு என்று குறிப்பிடுவர். இணக்கம் எட்டப்பட்டுப் பின்னர் முறிந்தால் சம்பந்தம் கலைஞ்சு போச்சு என்று சொல்வதுண்டு. சம்பந்தம் குழைக்கிறது என்று ஒன்றும் உள்ளது. நான் நினைப்பது சரியானால் அது இது தான். இரு தரப்பும் இணக்கம் ஏற்பட்டால் அதாவது முற்றாக்கினால் மாப்பிள்ளை வீடு தனது சுற்றம் சூழ பெண் வீட்டுக்குச் சென்று அளவளாவும். அன்று ஒரு முருங்கை மரம் கூட பெண் வீட்டில் நட்டு வைப்பார்கள். (எல்லாம் திட்டத்தோடு தானோ..:)
என்னிடம் உள்ளது இரு கேள்விகள்.
பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?
ஈழத்தில் எப்போதாவது இவ்வாறான பெண்பார்க்கும் நடைமுறை வழக்கில் இருந்ததா..
முடிந்தால் ஈழத்துக் கல்யாண வழக்கில் உள்ள விசேட சொற்களையும் குறிப்பிடுங்களேன். உதாரணமாக முற்றாக்கியாச்சு.. சம்மந்தம் குழைத்தல்..