மூன்றாவது ஈழப்போரின் பத்தாண்டுகள்

சித்திரை பத்தொன்பது! மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து 10 வருடங்களாகிறது.

1995 சித்திரை பத்தொன்பதாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலித் தாக்குதல் மூலம் ரணசுறு, சூரயா என்ற இரண்டு கப்பல்கள் தகர்க்கப்படுவதோடு மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிறது.

94 இன் இறுதியில் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இரண்டாம் கட்ட ஈழப்போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தையின் நகர்வினூடே அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய ஹெலிகளில் எந்த விதமான அதிகாரங்களுமற்ற பிரமுகர்கள் வந்து இறங்கினார்கள். பேச்சுவார்த்தைகளின் முடிவில் முடிவெதனையும் எடுக்க முடியாதவர்களாக, அனைத்தையும் அரச தலைமைக்கு அறிவிக்கிறோம் என ஏறிச் சென்றார்கள்.

மீண்டும் வந்தார்கள். மீண்டும் சென்றார்கள். பேச்சு வார்த்தை என்ற பெயரில் இந்தக் கூத்து தொடர்ந்தது.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அப்படியே தான் இருந்தன. யாழ்ப்பாணத்திற்கான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக நீக்கப்படாமல் அப்படியே தான் இருந்தது. இன்னமும் ஆபத்து நிறைந்த கிளாலி கடனீரேரியூடாகத் தான் மக்கள் பயணம் செய்தனர்.

இவ்வாறான மக்களின் அடிப்படை பிரச்சனைகளே முதலில் தீர்க்கப்பட வேண்டியவை என புலிகள் தரப்பு வற்புறுத்திய போதும் அரசு அதனை அசட்டை செய்தது.

பொருளாதார தடைகளை நீக்கி, மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பூநகரி இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரை சற்று பின்னகர்த்துமாறு புலிகள் கோரிக்கை முன்வைத்தனர்.(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)

அரசு அதனை நிராகரித்தது. பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக புலிகள் அறிவிக்க மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் தமிழர்கள் சந்தித்த இழப்புக்கள் அதிகமானவை. ஒரு இரவில் 5 லட்சம் மக்கள் தம் வேரிலிருந்து பிடுங்கியெறியப்பட்டது இக்காலத்தில்த் தான்.

இராணுவ படையெடுப்புகளுக்கும், குண்டு வீச்சுக்களுக்கும் அஞ்சி இருக்க இடம் இல்லாமல் வீதிகளிலும், மரநிழல்களிலும், கோயில்களிலும், காடுகளிலும் அவர்கள் தஞ்சம் புகுந்திருந்தமை இக்காலத்தில்த்தான்.

அதே வேளை யாழ்ப்பாண இழப்பு உட்பட ஆரம்ப பின்னடைவுகளிற்கு பின்னர் போரியல் உலகம் வியக்கும் தொடர் வெற்றிகளை புலிகள் பெற்றுக் கொண்டதும் இக்காலத்தில் தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தொடர் சண்டையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கும் யுத்தம் என்ற பெயரில் தமிழர் வாழ்விடங்களை அழித்து முன்னேறியிருந்த இராணுவத்தினரை (தெற்காசியாவில் அண்மைக்காலங்களில் அதிக நாள் நடந்த சண்டை அது) இரண்டு நாட்களில் விரட்டி அடித்து அவர்களது பழைய நிலைக்கு அனுப்பிய அதியுச்ச வியப்புச் சமர் இக்காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது.

ஆனையிறவென்கின்ற யாராலும் அசைக்க முடியாதென அமெரிக்க ராணுவ தளபதிகளே சொன்ன நிலத்தை வென்றெடுத்ததும் இதே ஈழப்போரில்த்தான்.

புலிகளைப் பொறுத்தவரை தமது இராணுவ கட்டமைப்பிலும் பல உயரங்களை இக்காலத்தில் தொட்டிருக்கிறார்கள்.

விமான எதிர்ப்பு பீரங்கி படையணி என்னும் கட்டமைப்பின் ஊடாக ஏவுகணைப் பயன்பாட்டினை புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அப்பாவி மக்களின் அழிவுக்கும் புலிகளின் இழப்புக்களுக்கும் காரணமாயிருந்த விமான குண்டு வீச்சுக்கள் ஓரளவுக்கு தடுக்கப்பட்டன. அதன் பின்னரே ஈழ வான் பரப்பில் சிங்கள அரச விமானங்களின் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

96 இல் முல்லைத் தீவு ராணுவ முகாம் தாக்குதலோடு நீண்ட தூர எறிகணைகளான ஆட்லறிகளை கைப்பற்றியதன் ஊடாக இன்னொரு படிநிலையில் கால் பதித்தார்கள்.

இன்றைக்கு அரச மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற விமானப்படை தோற்றமும் இதே காலத்தில் தான் நிகழ்ந்தது. (நேற்றும் கிளாலி கடற்பரப்புக்கு மேலாக விமானமொன்று வன்னிப்பகுதிக்கு சென்று மறைந்ததாக இராணுவ தரப்பு சொல்கிறது.)

மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்க முன்பு சந்திரிகா அரசு என்ன செய்ததோ அதனையே இப்பொழுதும் செய்கிறது. அதே இழுத்தடிப்பு.. அதே காலங்கடத்தல்..

ஆனால் புறச் சூழ்நிலை மாறியிருக்கிறது. இப்பொழுது உலக நாடுகளிடம் புலிகள் தொடர்பான நன்மதிப்பும், வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அதனை மிகச் சரியாக புலிகளும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

புலிகளைச் சீண்டி யுத்தத்திற்குள் இழுக்க திட்டமிட்டே அரச இராணுவம் முயல்கின்ற போதும் பொறுமை காக்கின்ற புலிகளின் இயல்பு ஆச்சரியமளிக்கிறது. தமது அரசியல் விவேகத்தினை மிகத் திறம்பட புலிகள் வெளியுணர்த்துகின்றனர்.

வெளிப்படையாகவே என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாது முழிக்கும் அரச கபடத்தை தோலுரித்து உலகெங்கும் புலிகள் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இனி….

யுத்தம் ஒன்றை யாருமே விரும்பவில்லை. யுத்தம் செய்பவர்கள், யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்தவர்கள் என எவருமே விரும்பவில்லை. ஒரு வேளை யுத்தமொன்றே யதார்த்த நிலையிலும் சரியான தீர்வாக இருக்குமென்ற நிலை வரின்…

அவ்வாறான யுத்தம் ஒன்றைத் தொடங்கச் சொல்வதற்கான முழு உரிமையும் யுத்தம் செய்பவர்களுக்கும், அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்ற மக்களுக்குமே உண்டு!

மாறாக தனிமனித வாழ்நிலை மேம்படுத்தலுக்காக தேசங்கள் தாண்டி வந்து, விருப்பப்பட்டும், விரும்பாமலும் மாசாமாசம் காசு கொடுத்து விட்டு அங்கே என்னவாம் நடக்குது என செய்திகளில் தேடி.. உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.

By

Read More

வருசப்பிறப்பு – ஒரு கலவைப் பதிவு

வருசப்பிறப்பு தமிழர்களுடையது இல்லை என சொல்லியாயிற்று. நல்லது. அது யாருக்கு வருடப்பிறப்பாக இருக்கிறதோ, எவரெல்லாம் (தமிழர்களேயாயினும்) அதனைத் தம் வருடப்பிறப்பாக கொள்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் எனது வாழ்த்துக்கள்.

சென்ற முறை இந்த வருடப்பிறப்பு நாள், நான் யாழ்ப்பாணத்தில் ஊரில் நின்றேன். சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஊக்குவிக்கும் பரிசில் வழங்கும் நிகழ்வு ஒன்று, அன்று என் ஊரில் நிகழ்ந்தது. தவிர சில நிகழ்ச்சிகளும் நடந்தன. இறுதியில் நடந்தது இசை நிகழ்வு ஒன்று.

நீண்ட காலத்திற்கு பிறகு ஊரில் நான் மேடையேறினேன். ம். அந்த இசை நிகழ்வில் நான் அறிவிப்பாளனாக இருந்தேன்.

மேடையில் நின்று பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. 95 க்கு முதல் ஒரு நிகழ்வென்றால் வரும் சனக்கூட்டத்தின் பத்தில் ஒரு பங்கினரும் வந்திருக்கவில்லை. காரணம் தொலைக்காட்சி. அதிலும் அன்று சன் டிவியில் Boys படம் போட்டிருந்தார்கள்.

பெரிதாக நிகழ்ச்சியை நீட்டிப்பதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. வந்திருக்கின்ற பத்துப் பதினைந்து பேருக்காக இங்கே பாடிக்கொண்டிருப்பதிலும் பார்க்க வீட்டுக்கு போனால் Boys படம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன்.

நிகழ்வு முடியும் நேரத்தில்தான் அந்த ஆசை எனக்கு வந்தது. ம்..

என்னாலும் பாட முடியுமா என்பதை அங்கே சோதிக்கலாமா என்று நினைத்தேன்.

இறுதிப்பாடல்.. ‘இதைப் பாட நான் அழைப்பது’ என்ற பீடிகையுடன் என்னை நானே அழைத்து பாடத் தொடங்கினேன்.

‘சொல்லத் தான் நினைக்கிறேன்.. சொல்லாமல் தவிக்கிறேன்..’ என்ற பாடல் அது. (நிறைய நாளுக்குப் பின்னர் ஊருக்கு வந்த சயந்தன் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் இந்தப் பாடலைப் பாடுகிறான் என எனது அத்தான் நினைத்தாராம்.)

என்னால் பாட முடியவேயில்லை. அதுவும் இசையுடன் இணைந்து பாட முடியவேயில்லை. இசை மெதுவாகப் போகின்ற நேரங்களில் நான் வேகமாக பாடினேன். ‘அடடா இசை மெதுவாகப் போகின்றதே’ என உணர்ந்து நான் பாடலின் வேகம் குறைக்க இசை வேகமானது.

பாடலுக்கு இடையிலான ஒரு இசை ஒலிக்கும் நேரம். பிரதான கீபோட் வாசித்துக் கொண்டிருந்தவர் என்னை கண்களால் அழைத்து காதுக்குள் ‘மெதுவாக என்னோடை சேர்ந்து வாரும்.. என்னோடை வாரும்..’ என்றார்.

‘இவர் ஏன் என்னை தன்னோடு வரச் சொல்கிறார்’ என யோசித்தேன். ‘ஒரு வேளை நிகழ்ச்சி முடிந்த பிறகு சாமான் கட்டுறதுக்கு ஆள் தேவையென்ற படியால் கேட்கிறாரோ’ என்ற நினைப்பில் சரியான ரைமிங்கில் பாடவேண்டிய சரணத்தை விட்டு விட்டேன்.

இசை தொடர்ந்தது. பிறகும் ஏதோ ஒரு கட்டத்தில் பாடத் தொடங்கி… மொத்தத்தில் சொதப்பி முடித்தேன்..

அதுவே இறுதிப்பாடல் என்ற படியால் பெரிதாக பிரச்சனையில்லை. முடிக்கும் போதும் ‘என்னாலும் பாட முடியுமா என பரிசோதித்துப் பார்த்தேன். அதற்கு உங்களைப் பலிக்கடா ஆக்கியதற்கு மன்னிக்க வேண்டும்’ என சொல்லித் தான் முடித்தேன்.

இறங்கி வரும் போதே யாரோ சொன்னார்கள்.. ‘நாய்க்கேன் போர்த்தேங்காய்..’

மேடையில் நான் பாடும் போது அழைத்து ‘தன்னோடு வரும்படி’ சொன்னவரிடம் போய்.. ‘என்ன உங்களோடை வரச் சொன்னனியள்.. ஏதாவது உதவி வேணுமோ’ என்று கேட்டேன்.

அவர் தலையில் கை வைத்தார்.. ‘என்னோடு.. எனது இசையோடு வரச் சொன்னதாக’ சொல்லி அவர் சிரித்தார். ஆனாலும் நான், ‘இவன் வாசித்தால் எனக்கென்ன’ என்ற ரீதியில் பாடியதாகவும் சொன்னார்.

ஒருவித அவமானம் தான். ஆனாலும் என்ன.. நான் பாட மாட்டேன் என்று எனக்கும் எல்லோருக்கும் உணர வைத்ததே அந்த நிகழ்வு தானே..

அன்றைய தினம் சன் டிவியில் Boys போட்டதாக சொன்னேனில்லையா.. யாழ்ப்பாணத்தில் boys படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அந்தப் படம் திரையிட்ட ஒரு காட்சியுடன் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. அத்தோடு உத்தியோகப்பற்றற்ற முறையில் முழுவதுமாக தடை செய்யப்பட்டு விட்டது.

இது சரியானதா தவறானதா என்பவற்றுக்கு அப்பால் இந்த தடை, அதன் நோக்கத்தை எந்தளவிற்கு நிறைவேற்றியது என்றால் ‘நிறைவேற்றவில்லை’யென்பதே பதில்

ஏனெனில் யாழ்ப்பாணத்திலிருந்து Boys படம் பார்க்க யார் யார் எல்லாம் விரும்பினார்களோ, அவர்களெல்லாம் அந்த படத்தை பார்த்து விட்டார்கள். இளைஞர்களாக, பிரத்தியேகமாக வாகன ஒழுங்கு செய்து கொழும்பு வந்து அந்தப் படத்தைப் பார்த்துப் போன இளைஞர்களை அறிந்திருக்கிறேன்.

இதுவே நிலைமையாயிருக்க அவ்வாறான ஒரு தடை அதன் நோக்கத்தை எட்டவேயில்லை என்பதே உண்மை.

தவிர புதுவருட தினத்தன்று சக்தி தொலைக்காட்சியில் Boys படம் திரையிட்டார்கள். கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் சக்தி, யாழ்ப்பாணத்திற்கென தனியான கோபுரம் அமைத்து யாழ்ப்பாணத்திற்கும் சேவை நடத்துகிறது.

திரைப்படம் தொடங்கி சில நிமிட நேரங்களில் யாழ்ப்பாணத்தில் படம் நிறுத்தப் பட்டு விட்டது. ஆனால் கொழும்பில் ஒளிபரப்பு தொடர்ந்தது. யாழ்ப்பாணத்தில் அதற்கு பதிலாக ராதிகாவின் சிறகுகள் படம் போட்டார்கள்.

ஆனால் அன்றிரவே சன் தொலைக்காட்சியில் அந்த திரைப்படத்தினை போட்டார்கள். அதுவும் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் கேபிள் ரி வி க்களின் வரவில் எல்லா வீடுகளிலும் சன் உடபட செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் கிடைக்கின்றன.

காலையில் படத்தை நிறுத்தியதன் நோக்கம் மாலையில் அடிபட்டுப் போனதே…

இவ்வாறான தடையுத்தரவுகள் பண்பாடு தொடர்பான கடும் நடவடிக்கைகளின் ஒரு அடையாளமாக இருக்குமே தவிர நடைமுறையில் அதுவும் தற்போது சாத்தியப்பட போவதில்லை.

புலிகளால் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்ட காலத்தில் அது குறித்த உடன்பாடில்லாத கருத்தினை தெரிவித்தவர்கள் பலர். விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் தனது நூலில் புலிகளின் இந்த முடிவில் தனக்கு உடன்பாடு இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

By

Read More

முகங்கள்

‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.

பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.

‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.

அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.

இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..

‘யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ’

‘நிகழ்ச்சி முடிய போய் பேசிப் பாக்கலாம். ஏதாவது கவிதையைப் பற்றித்தான் பேச வேணும். அவளுக்கும் கவிதை எழுத தெரிஞ்சால் எவ்வளவு நல்லது? ‘

‘எப்பிடியிருந்தது நிகழ்ச்சி.. நல்லாயிருந்ததோ’

‘ம்.. உங்கடை கவிதையள் நல்லாயிருந்தது.’

‘எங்கை படிக்கிறியள்’

‘…இஞ்சை தொகுப்புரை தர உம்மை கூப்பிட்டாச்சு போம்..’ பக்கத்திலிருந்தவன் தட்ட வேட்டியைச் சரி செய்து கொண்டு எழுந்தான். வியர்த்தது.

‘விசரர்.. ஒரு ஏ சி ஹோலை புக் பண்ணியிருக்கலாம்..’

குரல் செருமினான். அவள் இவனையே பார்த்தபடி.

‘அப்பொழுது சொன்னதையே இப்பொழுதும் சொல்கிறேன். நாம் ஆண்ட பரம்பரை. மீளவும் ஆளுவோம். அதை யார் தடுத்தாலும் எதிர்த்து போராடுவோம். ‘

காடு அமைதியாயிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த அமைதி கலையும்.

அவர்கள் அவசர கதியில் பங்கர்களுக்குள் நிறைந்த நீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது..’ யாரோ ஒருவன் பாடினான்.

‘ச்சூய்… காட்டுக்குள்ளை கழுதை வரப்போது. பாட்டை நிப்பாட்டு.’ அது அவன் தான். எப்போதும் போலில்லாமல் இன்று அதிகமாய் பேசியும் சிரித்தும் கொண்டிருந்தான்.

பாடியவன் நிறுத்த ‘சரி சரி பாடு நான் பகிடிக்கு சொன்னன்.. நல்லாத்தான் இருக்கு’ என்றான்.

அவன் பாடவில்லை. எல்லோரும் அமைதியானார்கள்.

‘இன்னுமென்னடா ஒரு ஐஞ்சு மணித்தியாலம். பிறகு எல்லாம் சரி.. பிறகு இங்காலைப் பக்கம் அவன் வந்து பாக்க மாட்டான்.’

மீண்டும் அவனைத் தவிர எல்லோரும் அமைதியாயிருந்தார்கள்.

‘பாட மாட்டியோ.. சரி போ நான் பாடுறன்..’ அவன் பங்கருக்குள் இறங்கி சேற்று நீரை வெளியிறைத்தான்.

‘எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது
இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது’

பஸ் சிரிப்புக்களால் நிறைந்தது.

‘பிறகெங்கையடா அவள்’

‘காணேல்லை. தேடினன் போயிட்டாள் போல’

‘சரி விடு.. எப்பிடி எங்கடை விசிலடி’

‘கலக்கிட்டியள்.. ‘

‘எங்கை வேட்டி..’

‘அது சும்மா.. உள்ளை ஜீன்ஸ் போட்டிருந்தன். நிகழ்ச்சி முடிய வேட்டியை கழட்டி எறிஞ்சிட்டன். அதை மனிசன் கட்டுவானே.. சும்மா ஒரு பிலிம் காட்டவெல்லோ அது கட்டினது. எப்பிடி என்ரை கவிதையள்’

‘அந்த மாதிரி.. நல்லா உணர்வு பூர்வமா இருந்திச்சு.. கேட்கறவனுக்கு கட்டாயம் ஒரு பீலிங் வந்திருக்கும்.’

உள்ளுக்குள் பெருமையாயிருந்தது.

‘ம்.. சரி நாளைக்கு படம் பாக்கப் போவமே? ‘

‘புதுசா தமிழ்ப் படம் ஒண்டும் வரேல்லையே’

‘தமிழ்ப்படத்துக்கு ஆர் போறது. இங்கிலிஷ் படத்துக்கு போவம்.’

எல்லோருக்கும் உடம்பு வலித்திருந்தது. அருகருகாக அமர்ந்திருந்தார்கள்.

பருத்தித்துறை வடையும் வெறுந்தேத்தண்ணியும் நன்றாகவிருந்தன.

‘வேறை என்னடாப்பா.. ஏதாவது கதையுங்கோவன்.’

இன்னும் சில நிமிட நேரங்கள் இருந்தன. அதன் பின்பு இந்தக் காடு அதிரும்.

அவன் அருகிலிருந்தவனின் முதுகில் சாய்ந்தான். அருகிலிருந்தவன் கண்கள் பனித்ததை யாருக்கும் தெரியாமல் துடைத்தான்.

வோக்கி இரைந்தது… ‘ரூ..ரூ.. கந்தயா.. என்னெண்டு சொன்னால்..

அவன் எழுந்தான். இடுப்பில் தோளில் என எல்லாவற்றையும் பொருத்தினான். எல்லோருக்கும் கை கொடுத்தான். இருட்டுக்குள் நுழைந்து திரும்பி கையசைத்து திரும்பி நடந்தான்.

நிமிடங்கள் கரைந்தன. காடு வெடியோசையூடு அதிர துரத்தே செந்நிற பிழம்பெழுந்தது. தொடர்ந்து சடசடத்தன. நடு இரவு தாண்டி விட்டது. இனி விடியும்.

வெளியே மழை வரும் போல இருந்தது. கட்டிலிலி கால் நீட்டிப் படுத்தான் அவன்.

அன்றைய பத்திரிகை பார்வையில் இருந்தது.

கவிதைப் போட்டி..

எழுந்து உட்கார்ந்தான். இன்றைய சமகால நிலையை பிரதிபலிப்பதாய் நூறு சொற்களுக்கு கூடாமலும் ஐம்பது சொற்களுக்க குறையாமலும் கவிதைகளை அனுப்புங்கள். பரிசு முதல்ப்பரிசு 5000….

பேப்பரும் பேனையும் எடுத்தான்.

‘விழ விழ எண்டு தொடங்கினால்.. எழு எழு எண்டு அடுத்த வரி போடலாம்.. அழ அழ எண்டு ஏதாவது எழுதி அடுத்த வரியை நிரப்பலாம்.. பிறகு… ம்…. வழ வழ எண்டு ஏதாவது எழுதலாமா’ என்று யோசிக்க தொடங்கினான். வெளியே இருட்டிக் கொண்டு வந்தது.

By

Read More

நான் படம் பார்த்த கதை

சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும்.

அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don’t miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான் அதையும் நம்பிக் கொண்டு திரிஞ்சன்

தியேட்டருக்கு போற பழக்கமெல்லாம் 90 ம் ஆண்டே முடிஞ்சு போட்டுது. யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில கடைசியா ராஜா சின்ன ரோஜா எண்ட படம் பாத்த பிறகு நான் 7 வருசமா தியேட்டர்களுக்கு போனதில்லை. (பிறகு 97 இல திருச்சியில சோனா மீனா எண்டொரு தியேட்டருக்கு போய் படம் பாத்து விரதத்தை முடிச்சன்.)

யாழ்ப்பாணத்தில சண்டை தொடங்கின பிறகும் கொஞ்சக் காலம் கரண்ட் இருந்தது. அப்ப நாங்கள் படங்கள் பாக்கிறனாங்கள். பிறகு ஒரேயடியாய் கரண்ட் போச்சுது. அதோடை படம் பாக்கிறதும் குறைஞ்சு போச்சு. எண்டாலும் அப்பப்ப ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்த வீட்டில படங்கள் போடுவம்.

அந்தக் காலத்தில தான் புலியள் தணிக்கை முறையை கொண்டு வந்தினம். படம் தொடங்கும் போது முதலில புலிகளின் தணிக்கைச் சான்றிதழ் வரும். பிறகு தான் இந்திய தணிக்கை சபையின் சான்றிதழ் வரும். பாட்டுக் கட்டங்கள் போகும் போது சில இடங்களில ரோஜா பூ காட்டுப் படும். அந்த இடங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அர்த்தம்.

அந்த நேரம் சின்னத்தம்பி படம் நல்ல பிரபல்யம். எங்கடை வீட்டிலும் போட வேணும் எண்டு ரண்டு மூண்டு தரம் முயற்சித்தும் கசெற் கிடைக்கேல்லை. கடைசியா ஒரு மாதிரி கசெற் கிடைக்க ஜெனரேற்றர் வாடகைக்கு எடுத்து வந்து படத்தை போட்டால் கொஞ்ச நேரத்தில அது பழுதாப் போட்டுது. எனக்கு அழுகையே வந்திட்டுது. என்ரை அத்தான் எனக்கு நல்ல பேச்சு. ‘சனம் சாகக் கிடக்குது. உனக்கு சின்னத்தம்பி பாக்க முடியேல்லையெண்டு அழுகையோ?’

பிறகு கொஞ்சக் காலத்தில படங்கள் ஒரேயடியாகத் தடை செய்யப்பட்டு விட்டன. யுத்தத்தில சிக்குப்பட்டிருக்கிற மக்களுக்கு ஒரு பொழுது போக்கு ஊடகமாக இருக்கிற சினிமாவை தடை செய்தது பற்றி பரவலான விமர்சனங்கள் வந்தன.

இந்த இடத்தில ஒரு கதையை சொல்ல வேணும். படங்கள் தடை செய்யப்பட்டிருந்த 95 ம் ஆண்டில யாழ்ப்பாணம் கோட்டையில் புலிகளின் காப்பரண்களுக்கான பதுங்கி குழிகள் வெட்டுவதற்காக ஒரு குறித்த சுற்று முறையில் எங்கள் ஊரின் சங்கமொன்றினூடாக நாங்கள் அங்கை போயிருந்தம்.

கோட்டைக்குப் பக்கத்திலை முந்தி இருந்த ஒரு தியேட்டரின் முன் சுவர் மட்டும் இருந்தது. மற்றதெல்லாம் உடைஞ்சு போட்டுது. அது றீகல் தியேட்டர். (இதைப் படிக்கிற ஆரும் பழைய ஆக்களுக்கு பழைய ஞாபகங்கள் வருதோ?) அதன் முகப்பில் அங்கு கடைசியாக ஓடிய ஒரு ஆங்கில படத்தின் பெயர் எழுதப் பட்டு வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு கிடந்தது.

அதைப் பாத்து ஒரு பெருமூச்சுத்தான் வந்தது. ம்.. அந்தக் காலம் இந்த மாதிரியான படமெல்லாம் யாழ்ப்பாணத்தில ஓடியிருக்கு. (இது 95 இல் எனது அறிவுக் கெட்டிய நிலையில் எழுந்த எண்ணம்.)

பிறகு கன காலத்துக்கு பிறகு வன்னியிலை இருக்கும் போது திரைப்படங்களுக்கான தடையை புலிகள் நீக்கினார்கள். எண்டாலும் தணிக்கை தொடர்கிறது இப்ப வரைக்கும். கன காலத்தக்கு பிறகு வன்னியிலை காதல் கோட்டை, பூவே உனக்காக மற்றது மாணிக்கம் எண்ட மூண்டு படங்களை ஒரே இரவில பாத்தன்.

இந்தியா போன பிறகு அங்கை இருக்கிற குஞ்சு குருமன் எல்லாம் அஜித் அக்ரிங் சுப்பர் நக்மா டான்ஸ் சுப்பர் எண்டு கதைக்க ஐயோ எனக்கு ஒண்டும் தெரியேல்லையே எண்டு வெக்கமா இருந்தது. பிறகு ஒரு மாதிரி இந்தியாவில சும்மா இருந்த காலத்தில சினிமா ருடே சினிமா எக்ஸ்பிரஸ் அது இது எண்டெல்லாம் வாங்கிப் படிச்சு என்ரை அறிவை வளர்த்துக் கொண்டன்.

By

Read More

கேள்வி கேட்டல்! எனது உரிமை

கேள்வி கேட்டு வாழும் உரிமை!
அங்கீகரித்தே ஆக வேண்டிய அதி முக்கிய உரிமை அது!
ஈழப்பிரச்சனை பற்றி பேசும் போதும், எழுதும் போதும் அதிகம் அடி படுகின்ற உரிமையாக இது இருக்கிறது.

‘உனது கருத்தில் எனக்கு கிஞ்சித்தும் உடன் பாடு கிடையாது. ஆயினும் நீ உனது கருத்தினைச் சொல்ல உனக்கு இருக்கின்ற உரிமையை என் உயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்.’

ஜனநாயகத்திற்கு சரியான அர்த்தம் கூறும் கருதுகோளாக மேற்கண்ட வாக்கியம் அமைந்திருக்கிறது. (அதனை நான் முதலில் படித்தது ஈபிடிபி யின் ஒரு பத்திரிகை அறிக்கையிலிருந்து என்பது வேறு விடயம்… முருகா…)

அதற்கு ஈழத்தில் இடமிருக்க வில்லை என்பது உண்மைதான். முழு இலங்கையிலுமே இடமிருக்கவில்லை.

அது பற்றி அலசுவது எனது நோக்கமில்லை.

நான் எப்பிடி கேள்வி கேட்கும் உரிமையை பிரயோகித்தேன் என்பதைக் கூறுவதற்குத் தான் இந்தப் பதிவு.

நாங்கள் பள்ளிக்குடத்தில படிக்கிற நாட்களில புலியள் பள்ளிக்குடத்துக்கு வந்து சில கலந்துரையாடல்கள் நடத்துறவை. நேரடியாவே சொல்லுறன்.. கருந்துரையாடல்களின் நோக்கம் பெரும்பாலும் இயக்கத்துக்கு இணைந்து கொள்ள வேண்டிய தேவை என்ன என்பதை விளக்கிறதா தான் இருக்கும்.

அப்ப 14 ,15 வயசில எல்லாம் இயக்கத்துக்கு சேருவது நடந்து கொண்டிருந்தது தான். புலிகள் பகிரங்கமாக 18 வயதிற்கு மேலேயே உறுப்பினர்களை சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னது 2000 ம் ஆண்டுக்கு பின்னதாகää ஒலரா ஒட்டுணுவைச் சந்தித்த பின்னர் தான்.

கட்டாய ஆட்சேர்ப்பு குறித்து அப்போதே பேசப்படும். இது பற்றி சில வார்த்தைகள் இப்போது பேசினால் நல்லது. கட்டாயமாக கடத்திக் கொண்டு போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக் குறித்து நான் வாழ்ந்த காலத்தில் நேரடியாய் அறிந்தது இல்லை. கட்டாயமாக கடத்திக் கொண்டு போனார்கள் என்று சொன்னவர்கள் இரண்டு வகையில் இருந்தார்கள்..

ஒரு வகை புலிகளுக்கு எதிரானவர்கள்.

மற்றவர்கள் சுவாரசியமானவர்கள். ஆர்வக் கோளாறில் இயக்கத்துக்கு சென்று இணைந்து விட்டு, பயிற்சி கடினம் போன்ற சிரமங்களினால் பத்துப் பதினைந்து நாட்களில் திரும்பி வந்தவர்கள் தங்கள் மானம் கெட்டுப் போய் விடக் கூடாதே என்பதற்காக சொல்கிற ஒரு திருகுதாளம்.. ‘நான் விரும்பிப் போகேல்லை.. இழுத்துக் கொண்டு போட்டாங்கள்.’

(ஆயினும் புலிகளின் சில கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இளைஞர்கள் வற்புறுத்தலாக கூட்டிச்செல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதனை அண்மைக்காலத்தில் அறிந்திருக்கிறேன். 2002 இல் மட்டக்களப்பு சென்று வந்த எனது பத்திரிகையாள நண்பன் சொன்னது கேட்டு கவலைப்பட்டேன்.)

சிறுவர்கள் இயக்கத்துக்கு சேர்கிறார்கள். நிலையான வதிவிடம், சரியான வருமானம் ஏதுமற்ற குடும்பம் இதற்குள் இருக்கின்ற ஒரு சிறுவன் ஆகக் குறைந்தது ஒரு வேளைச் சாப்பாடாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இயக்கத்தில் சேர்கிறான்.

அவனுக்கு சிறுவர்களுக்கான உலக அமைப்புக்கள் தெரியாது. அவர்களை எப்படி அணுகுவது என்று தெரியாது. அவர்களுக்கு எது தெரிகிறதோ அதைச் செய்கிறார்கள். புலிகள் இயக்கத்தில், சிறுவர்களை சேர்க்கிறார்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் அவ்வாறு சிறுவர்கள் சேராது இருப்பதற்கு என்ன செய்ய வேணுமோ அதைச் செய்யலாம். இது உலக நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

(இப்போது கிளிநொச்சியில் யுனிசெப்பின் அனுசரணையோடு அமைப்பில் இணைந்த 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு (அவர்களில் குடும்ப ஆதரவு அற்றவர்களுக்கு) புனர்வாழ்வு அளிக்கும் மையங்களை புலிகள் செயற்படுத்துகிறார்கள்.)

ஏதோ சொல்ல வந்தன்.. சரி.. பள்ளிக்குடத்துக்கு புலியள் கருத்தரங்குக்கு வாறவை. வந்தால் கதைச்சுப்போட்டு ‘உங்கடை கேள்வியளைக் கேளுங்கோ எண்டுவினம்.’

அப்ப வழமையா ஒரு நடைமுறை இருந்தது. கேள்வியளை பேப்பரிலை எழுதிக்குடுத்தால் எல்லா கேள்வியளையும் வாங்கிட்டு பிறகு ஒவ்வொண்டா பதில் சொல்லுப்படும்.

நான் கேள்வி எழுதிக் குடுக்கிறதிலை விண்ணன். இண்டைக்கு மீற்றிங் எண்டால் உடனை கொஞ்சக் கேள்வியள் றெடி பண்ணிடுவன். இப்ப நினைச்சால் சிரிப்பாக் கிடக்கு. ஒண்டும் உருப்படியான கேள்வியள் இல்லை.

என்ரை கேள்வியளைப் பாருங்கோ..

‘ரஜீவ் காந்தியை நீங்கள் தான் கொலை செய்தீர்களா’

‘மாத்தையா எங்கை அவருக்கு என்ன நடந்தது.’

‘உங்களிடம் விமானங்கள் இருக்கா’

(இதெல்லாம் 94 களில கேட்ட கேள்விகள்.)

உந்தக் கேள்விகளையும் மதிச்சுப் பதில் சொல்லுவினம்.

ரஜீவ் கொலை தொடர்பாக நேரடியாக ஒரு பதிலும் சொன்னதா நினைவில் இல்லை. மாத்தயா விவகாரம் பற்றி அரசல் புரசலா சொல்லுவினம். நடக்க இருந்த ஒரு சதி முறியடிக்கப்பட்டிருக்கிறது எண்டு சொல்லியிருக்கினம். விரைவில பகிரங்கமா அறிவிப்பினம் எண்டும் சொல்லியிருக்கினம். (ஆனாலும் மாத்தயா விவகாரத்தில் என்ன நடந்தது முதல் அவருக்கு எப்ப மரணதண்டனை வழங்கப்பட்டது என்பது வரை நான் 2002 கடைசிகளில் அடேல் பாலசிங்கத்தின் புத்தகத்தில இருந்து தான் தெரிஞ்சு கொண்டன்.)

பிளேன் பற்றின கேள்வியளுக்கு சிரிச்சுக் கொண்டே பலாலியில நிக்கிற ஆமியின்ரை பிளேனெல்லாம் எங்கடை தான் எண்டுவினம்.

என்ன செய்யறது.. ‘சித்தாந்தத்தனமாவும்’ ‘அறிவு பூர்வமாவும்’ கேள்வி கேட்க எனக்கு தெரியேல்லை.

ஒரு முறை மேஜர் சிட்டு கருத்தரங்கு வைக்க வந்தவர். அவர் ஒரு பாடகர். சோகம் ததும்புகின்ற பாட்டுக்களுக்கு அவரின் குரல் அந்த மாதிரி இருக்கும். மீற்றிங் தொடங்க முதல் பெடியள் எல்லாம் அவரைப் பாடச் சொல்லி கத்தினாங்கள். நான் மீற்றிங் வைக்கத்தான் வந்தனான் பாட இல்லை எண்டு சொன்னார். நாங்களும் விடேல்லை. கடைசியா உயிர்ப்பூ படத்தில அவர் பாடின சின்னச் சின்ன கண்ணில் எண்ட பாட்டை பாடிட்டுத் தான் மீற்றிங் தொடங்கினார்.

97 இல ஜெயசிக்குறு சண்டையில அவர் வீரச்சாவடைந்து விட்டார். தினத்தந்தி பேப்பரிலை அதுக்கு முக்கியத்தவம் குடுத்து செய்தி வந்தது. அதைப் பாத்த உடனை எனக்கு கவலையாயிருந்தது.

இப்பிடி நான் கேள்வி கேட்டுத் தான் வளந்தனான். என்னை விட எங்கடை அம்மம்மா இன்னும் வலு கெட்டிக்காரி. இந்தியன் ஆமி காலத்தில ஒரு நாலு இயக்கப் பெடியளுக்கு களவாச் சாப்பாடு குடுத்து குடுத்து, அவையள் நல்ல பழக்கம். (இந்தியன் ஆமி காலத்தில உப்பிடி சாப்பாடு குடுத்த அனுபவம் யாழ்ப்பாணத்தில எல்லா குடும்பங்களுக்கும் இருக்கும்.) அதை ஞாபகம் வைச்சு அவையில ஒருவர் நாங்கள் யாழ்ப்பாணத்தில இருந்த கடைசிக் காலம் வரையும் அவ்வப் போது வீட்டை வருவார்.

அம்மம்மா துணிச்சலா கேப்பா.. ‘என்ன தம்பி வாங்கிற பவுண் எல்லாம் திருப்பித் தருவம் எண்டு சொல்லுறியள்.. உண்மையாத்தருவியளோ..’ (கொடுத்த அடுத்தவருடமே குலுக்கல் முறையில் அந்தக் கடனை இரண்டு பவுணில் புலிச்சின்னம் பொறித்த தங்கக் காசாக எங்களுக்கு தந்து விட்டார்கள். அம்மம்மாவிற்கு இன்னும் அதிஸ்டம் வாய்க்கவில்லை. ஒவ்வொரு மாவீரர் தினக் காலங்களிலும் குலுக்கல் முறையில் குறித்த தொகையினர் தெரிவு செய்யப்பட்டு வாங்கிய கடன் மீளக் கொடுக்கப் படுகிறது.)

நாங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தை விட்டு இடம் பெயர்றதுக்கு கொஞ்ச நாளைக்கு முதல் அவர் வீட்டை வந்திருந்தார். அம்மம்மா கேட்டா ஒரு கேள்வி.. ‘என்னவாம்.. யாழ்ப்பாணத்தில இருந்து சனத்தை எழும்பச் சொல்லப் போறியளாம்.. நீங்களும் விட்டுட்டு போக போறியளாம்.. என்ன அதுக்கோ நாங்கள் காசு தந்தம்?’

பார்க்கப் போனால் அம்மம்மாவிற்கும் சித்தாந்ததனமாகவும் அறிவுஜீவித்தனமாகவும் கேள்வி கேட்க தெரியாது போல கிடக்கு!

By

Read More

× Close