4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்

சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ?

சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த பெயரில்தான் blog எனக்கு அறிமுகமாயிற்று. ) பின்னர் காணாமல் போய்விட்டது. நான் சேமித்து வைத்திராத நிறைய நனவிடை தோய்தல் எழுத்துக்கள் அதனோடு மறைந்து போயின. ஈழத்தமிழர்கள் அதிகம் இறந்தகாலத்து நினைவுகளையே வலையில் அழுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பலமான ஆதாரமாக இருந்த தளம் அது.

பின்னர் இடையில் சாரலை ஆரம்பித்து மெல்பேணில் ஒரு நடுநிசி தாண்டிய இரவில் சக்தி வானொலிச் செய்தியொன்றை கேட்டுவிட்டு எழுதிய முதல்ப்பதிவு நேற்றுப்போல இருக்கிறது.

கடந்த வருட முற்பகுதியில் நிறைய ஒலிப்பதிவுகள் செய்தது போல இப்போதும் நிறையச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. அப்படித்தான் நண்பர்களும் சொன்னார்கள். (முழு ஒலிப்பதிவுகளையும் கேட்க இங்கு அழுத்துக) (ஒருவர் என்னை எதிர்பார்த்துக்கொண்டு பண்டத்தரிப்புச் சந்தியிலேயே குந்தியிருக்கிறாராம்.)

தவிர இங்கு குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தினையும் முடித்திட வேண்டும். தொடங்கியாயிற்று.

இப்படியான ஆண்டு விழாக்களை வலையில் கொண்டாட ஒரு மரபு உள்ளது. யாரேனும் நாலு பதிவர்களிடம் பாராட்டுப்பெற்று வெளியிடுவதுதான் அது. அதையே நானும் செய்ய நினைத்தேன். ஆயினும் கேட்கும் போது அதற்கென்ன தந்தால்ப் போச்சு என மெயில் அனுப்புவார்கள். பிறகு அதை அடியோடே மறந்து போவார்கள் என்பதனால் :)))) அந்த எண்ணத்தை கைவிட்டாயிற்று.

வேறென்ன.. வாழ்த்த வாற ஆட்கள் வரிசையாய் வாருங்கள்.. :))

By

Read More

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு சோபா சக்தியின் இரு புத்தகங்களும் தமிழ்க்கவியம்மாவின் ஒரு சில புத்தகங்களும் வாங்கிச் சென்றிருந்தேன். ( விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரின் புத்தகத்தை கொழும்பில் வாங்கியது புதிய அனுபவம் )

அப்போதைய நிலையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் குறித்த கதையாடல்கள் நிறையவே நடந்ததால் சோமிதரனிடம் இந்தியாவில் அதைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தேன். ஏற்பாடு செய்வதாகக் கூறி விட்டு அவனும் மறந்து போயிருந்தான். பிற்பாடு நானும் மறந்து போயிருந்தேன். பின்பொரு காலம் ஒரு தொடராக ஈழப்போராட்டத்தில் எனது பொய்ச் சாட்சியம் என்ற கட்டுரையைப் படித்தேன்.

000 000 000

ண்டார வன்னியன் என்னும் நாடகத்தினை எனது ஐந்தாவது வகுப்பில் எழுதி, அதில் காக்கை வன்னியனாகவும் நடித்திருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பண்டார வன்னியனாக பிரபாகரன் நடித்திருந்தார். (யாரைய்யா அங்கே புருவம் உயர்த்துவது. இது என்னுடைய வகுப்புத் தோழன் த.பிரபாகரன். பின்னாளில் 2003 களில் பல்கலைக்கழக மட்டத்தில் சோமிதரனிடம் பழக்கமாகியிருந்த, இவரைச் சந்திப்பது குறித்து நண்பர்களிடத்தில் பேசும் சோமிதரன், வெகு இயல்பாக, மச்சான் ஒருக்கா கிளிநொச்சி போக வேண்டியிருக்கு. அப்பிடியே பிரபாகரனையும் சந்திச்சிட்டு வரவேணும் என்பார்.)

1996 இல் முல்லைத்தீவில் கற்சிலைமடு அல்லது கரிப்பட்ட முறிப்பு சரியாக நினைவில்லை அங்கு பண்டார வன்னியன் தோற்கடிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வரக் கிளம்பினோம். அங்கே ஒரு நடுகல்லில் ஆங்கிலத்தில் டிறபேக் என்பவரால் பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான் என எழுதியருந்தது. அது டிறபேக்கினால் நடப்பட்ட நடுகல் என்று சொன்னார்கள். ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.

கலைஞர் கருணாநிதி பாயும் புலி பண்டார வன்னியன் எனும் ஒரு புத்தகத்தினை எழுதியிருக்கிறார் என்ற செய்தி பின்னாளில் எனக்குத் தெரிய வந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் (அதிலும் அரசியல் பிரமுகர்) எழுதியிருக்கும், ஈழ வரலாற்று நூல் என்ற ஒரு விடயத்தில் (மட்டும் என்றும் சொல்லலாம் ) அப்புத்தகம் மீதான ஆர்வம் தொடங்கியது. ஏற்கனவே முல்லை எனத் தொடங்கும் ஒருவர் (யாராவது அறியத்தரலாம் ) எழுதியிருந்த இலங்கையில் தடை செய்யப்பட்ட பண்டார வன்னியன் எனும் நாடக நூலினை வாசித்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பில் எழுதிய நாடகத்திற்காக அந் நூலில் இருந்து வரிக்கு வரி சுட்டும் இருக்கின்றேன்.

000 000 000

எஸ் பொ என்பவர் யாரென அறியும் முன்னமே அவரது சடங்கு நூலினை வாசித்திருக்கின்றேன். வீட்டின் ராணி முத்து வாசகர்கள் விபத்தாக, அவர்கள் பாசையில் தெரியாத்தனமாக, எடுத்து வந்துவிட்ட சடங்கு நாவலை, இலங்கைத் தமிழ் நாவல்கள் மேல் இயல்பாக இருந்த விருப்பில், யாழ்ப்பாணத்துப் பதின்ம வயதுக்குரிய பதை பதைப்புடனும் ஒருவித அதிர்வுடனும் வாசித்து முடித்தேன். (சடங்கு ராணி முத்து வெளியீடாக வந்திருந்தது. இதில் விசுக்கோத்து என்பதற்கு நேரே அடைப்புக் குறிக்குள் பிஸ்கட் என.. இவ்வாறு பல சொற்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்கள். )

பின்னர் பாடசாலையில், டேய் அந்தப் புத்தகத்தில இப்பிடியெல்லாம் எழுதியிருக்கடா.. இப்பிடியெல்லாம் செய்வினமடா.. என நான் விபரித்த பாங்கு கண்டு நண்பர்கள் அந்த புத்தகத்திற்காய் ஆலாயப் பறந்தார்கள். அப்போதைய வயது 14 ற்கும் குறைச்சல்தான்.

000 000 000

பொதுவாகவே நூலகம் செல்லுதல் எனது விருப்பிற்குரிய விடயங்களில் ஒன்று. கிராமத்தின் வாசகர் வட்ட நூல் நிலையத்தில், வீட்டின் உறுப்பினர்கள் வேலை செய்த காரணத்தால் அங்கு சென்றிருப்பதுவும் புத்தகங்களைத் துருவுவதும் வழக்கில் வந்திருக்க வேண்டும்.

ஒஸ்ரேலியாவின் சிட்னியில் ஒரு முறை கரன் ஒரு முகவரியில் தமிழ் நூல் நிலையம் இயங்குவதாகச் சொல்லக் கேட்டு ஒரு மாலை முழுதும் தேடி இறுதியில் அவ்வாறான ஒரு நூல் நிலையமே அங்கு இல்லையெனத் தெரியவந்தது. (ஆனால் பல காலங்களுக்கு முன்னர் இயங்கியிருந்தது.)

பின்னர் அங்குள்ள ஒரு அவுஸ்ரேலிய நூல் நிலையத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதாக கேள்விப்பட்டுச் சென்றால்.. ரமணிச் சந்திரனும் லக்ஸ்மியும் தான் நிறைந்திருந்தார்கள். இவற்றுக்கு எதற்காக அங்கத்துவராக வேண்டும் எனத் திரும்பி விட்டேன்.

இங்கே சுவிசில் உள்ள நமது மாநில நூல் நிலையம் ஒன்றில் வேர்ஜினியா அங்கத்துவராக இருக்கின்றார். ஆரம்ப காலங்களில் ஜெர்மன் மொழியில் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்களைப் பெற, அவர் பெற்ற அங்கத்துவம் அப்படியே இருந்தது. அங்கே தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்ற செய்தியும் எனக்குத் தெரியும். ஆனாலும் ரமணிச் சந்திரன்களும், லக்ஸ்மிகளும்தானே என்ற முடிவில் அந்தப் பக்கம் போக வேண்டும் என்ற ஆவல் மேலிட்டதில்லை.

இன்று மாலை வேறொரு தேவைக்காக அங்கு சென்ற போது வாசலிலேயே ஒரு அறிவித்தல், புதிய தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என ஜெர்மன் மொழியில்..

போய்த்தான் பார்ப்போமே என அப்பகுதிக்குச் சென்றால்.. ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜெயமோகன், சோபா சக்தி, எஸ் பொ என்ற கணக்கில் புத்தகங்கள்.. பெரிய பெரிய குண்டுப் புத்தகங்கள்.. நான் வாசிக்க வேண்டும் என விரும்பிய புத்தகங்கள்..

ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலையும், பாயும் புலி பண்டார வன்னியனையும் எடுத்துக்கொண்டேன். கூடவே சடங்கினையும்..

இன்னும் இருக்கிறது.

அந்த நூலகத்திற்கான தமிழ்மொழி இணைப்பாளர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் அவர் சாதாரணமானவரில்லையெனப் புரிகிறது

By

Read More

ராஜராஜ சோழனும் எழுத்தாளர் பாமரனும்..

ஐரோப்பாவில் (மற்றும் ஒஸ்ரேலியாவில்) ஒளிபரப்பாகும் நிகழச்சியொன்றை பாமரன் தொகுத்து வழங்குகிறார். ஏதோ ஒரு வகையில் பிரபல்யமானவர்களை அழைத்து அவர் காணும் செவ்வி சுவாரசியமாக இருக்கும். ( ஆரம்பத்தில் அந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது என்றே தெரியாமல் பாமரன் இருந்தார் என காற்று வாக்கில் ஒரு செய்தி. உண்மையா செல்லா சார் ?)

சில பல காலங்களிற்கு முன்னால் எழுத்தாளர் சாரு நிவேதாவை அழைத்து அவர் உரையாடிய போதான சில சுவாரசிய சந்தர்ப்பங்களைச் சொல்கிறேன்.

ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்த வரைக்கும் அவர்கள் எவரையும் தமிழக/ இந்திய இலக்கிய கனவான்கள் எட்டியும் பார்த்ததில்லை. ஆனால் ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைய புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு அவர்கள் சென்ற பின்னர் அவர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் மரியாதையும் தன்னை ஆச்சரியத்தில் ஆழத்துகிறதாக அவர் சொன்னார். கூடவே உதாரணமாக எஸ் பொ ஈழத்தில் இருந்தவரை அவரை யாரும் திரும்பியும் பார்த்ததில்லையாம். ஆனால் அவர் ஒஸ்ரேலியா சென்ற பின்னர் அவருக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்கும் தமிழக இலக்கிய வாதிகளை நினைக்கும் போது அமெரிக்க மாமா சாக்லெட் கொண்டு வருவார் என அங்கலாய்க்கின்ற சிறுபிள்ளைகள்தான் நினைவுக்கு வருகின்றனர் என்றார் சாரு நிவேதா. (அப்பிடியா ..?)

வெளிநாடுகளில் இருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களைக் கூட தமிழக இலக்கியவாதிகள் தோள் மீது சுமக்கிறார்கள் என்ற பேச்சினுடே பரீசிலிருந்து வரும் தகுதியற்ற எழுத்தாளர்களையெல்லாம் தமிழகத்தில் காவடி சுமக்கிறார்கள் எனச் சொன்ன சாரு நிவேதா உடனடியாகவே சோபா சக்தி ஒரு திறமையான எழுத்தாளன். நான் அவரைச் சொல்லவில்லை. மற்றவர்களைச் சொல்கிறேன் என என் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். (மற்ற எழுத்தாளர்கள் யாருங்க.. )

அதுதவிர புலம் பெயர்ந்த தேசங்களிலெல்லாம் தம் மண் மீதான வேரறுப்பின் துயரங்களைச் சுமந்து திரிகின்ற ஈழத்து மனிதர்கள் அவற்றை இலக்கியமாக்க முடியும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யாமல் தம் துயரங்களை மறக்க அதிகம் மது அருந்துகிறார்கள் என ஒரு புதிய செய்தியையும் சாரு சொல்லிச் சென்றார். (அப்படியா ஈழத்துக் குடிமக்களே 🙁 )

இன்னொரு தடவை பாமரன் பெயரியல் நிபுணர் ? இராஜஇராஜ சோழனை செவ்வி கண்டிருந்தார். செவ்வியில் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என கூறிக்கொண்டிருந்தவர் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா என மாற்றியதால்த்தான் அங்கு இனமுரண் ஏற்பட்டது என கண்டு பிடித்தார். பதிலுக்கு பாமரன் அப்படியானால் 56 களில் அங்கே கலவரமும் இனமுரணும் ஏற்பட்டதே.. அது பெயர் மாற்றுவதற்கு முன்னர்தானே என ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.

அதற்கு பெயரியல் (டக் கென வாசிக்க பொரியல் எனத் தெரிகிறது ) நிபுணர் என்ன சொன்னார் என்றால் பெயர் மாற்றிய பின்னர் தானாம் இருதரப்பும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்களாம். அதாவது பெயர் மாற்றிய பிறகே தமிழர்கள் திருப்பியடிக்கத் தொடங்கினார்கள். பெயர் மாற்றாது விட்டிருந்தால் சிங்கள அதிகாரம் மட்டுமே தமிழர்களை அடித்துக் கொண் (ன்றி) டிருக்கும்.

பெயர் மாற்றிய புண்ணியவானுக்கு கோடி நன்றி..

அப்புறம் இந்தியாவின் பெயரை United States of India என மாற்றச் சொன்னார். USI நல்லாத்தான் இருக்கு. ஒரு தபா மாத்தித்தான் பாக்கிறது 🙂

By

Read More

நகல்த் துளி எத் துளி

இலையினில் தெறித்த துளிகளில் ஒன்று மட்டும் அசல் துளி அல்ல. அது எத்துளி..?

Photobucket - Video and Image Hosting

Photoshop Tutorial ஒன்றிலிருந்து

By

Read More

சைவக் கோழி சாப்பிட்டிருக்கீங்களா..

அண்மையில் ஒரு உறவினரின் நிகழ்வொன்றிற்குச் சென்ற போது இப்படியொரு சேவலைச் செய்து வைத்திருந்தார்கள். பார்க்க அழகாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அசப்பில் அசல் போலவே இருக்கிறதல்லவா..

By

Read More

× Close