இதுவரை நுட்பக் கட்டுரைகளோ, வழிகாட்டற் குறிப்புக்களோ எழுதி எனக்குப் பழக்கமில்லை. பாடசாலையில் விஞ்ஞான மலரில் கருந்துவாரங்கள் (Black Holes) என்ற ஒரு அறிவியல் ? சிறுகதையை எழுதியது தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லையாயினும் இனி எனது வலைப்பதிவில் ஆகக் குறைந்தது வலைப் பதிவு நுட்ப விபரங்களையாவது எழுத முயலலாம் எனத் துணிந்தமைக்கு சில காரணங்கள் உள்ளன.
அண்மையில் அற்புதன் என்னும் ஒரு பதிவர் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். பெரும்பாலான பதிவர்களின் (அவர் ஈழப் பதிவர்கள் என குறிப்பிட்டிருந்தார்) இடுகைகள் இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவனவாக, நனவிடை தோய்தல்களாக இருப்பதனை அவர் சுட்டியிருந்தார். நான் உட்படப் பலர் அதையே செய்து கொண்டுடிருந்தோமாயினும் இயல்பாகவே அதில் ஒரு ஈடுபாடின்மை எனக்கு ஏற்பட்டுவிட்டதன் பிரதி பலிப்பே அண்மைக் காலமாக நான் இட்டு வந்த மீள்பதிவுகள் மற்றும் மீள் மீள் பதிவுகள்.
ஆயினும் வலைப் பதிவில் உள்ள நுட்பச் சிக்கல்களுடனும், நுட்ப விபரங்களுடனும் அண்மைக் காலமாக மல்லுக் கட்டுவது ஒரு வித ஈர்ப்பைத் தந்ததினால் அதன் காரணமாகவே என்னால் மீண்டும் புதிய ஈடுபாட்டுடன் வலையில் செயற்பட முடிந்தது.
தமிழ் வலையுலகில் துறை சார்ந்த பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. நிதி, மருத்துவம், அறிவியல், நுட்பம் போன்ற பதிவுகள் சீரான வீச்சுடன் வருவதில்லை. தமிழில் உள்ள 1000 பதிவுகளில் எத்தனை வீதம் துறை சார் பதிவாக இருக்கும் என்பது மகிழ்ச்சி தராத விடையினைத் தான் தரும்.
வலைப் பதிவுகளில் பொழுது போக்கு என்பதற்கும், பொழுது போக்குவதற்காக வலைப் பதிவு என்பதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென சில பதிவர்கள் கூறுவதில் நியாயம் உள்ளது.
இத்தகைய வரலாற்றுப் புறச் சூழ்நிலையில்.. (நல்லாத் தானே எழுதிட்டிருந்தான்..? திடீர்ன்னு ஆரம்பிச்சிட்டான்) அண்மைக் காலமாக நான் புளொக்கரில் குடைந்து, கடைந்தெடுத்த சமாசாரங்களைச் சொல்வதும், எழுதுவதும் என்னை இன்னொரு ஈடுபாட்டுடன் தொடர்ந்து இயங்க வைக்கும் என நம்புகின்றேன்.
என்னுடைய சாரல் வலைப்பதிவு புதிய புளொக்கருக்கு மாறி விட்ட போதும், இன்னமும் அது கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துகிறது. (அதிலிருந்தும் அடித்துக் கலைக்கவோ, ஆட்டோ அனுப்பித் தூக்கி ஏற்றவோ மாட்டார்கள் என நம்புவோமாக) ஆக அடிப்படையில் அது பழைய புளொக்கர் தான். புதிய Layout முறையிலான வார்ப்புருவின் மூலம் கிடைக்கும் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்த முடியாது என சொல்லப் படுகின்ற கிளாசிக் வார்ப்புருவில் இருந்து கொண்டே நான் அமைத்துக் கொண்ட வசதி வாய்ப்புக்கள் இவை
- பதிவுகளுக்கு லேபிள் இடும் வசதி : இது புளொக்கர் தரும் லேபிள் இடும் வசதியைப் பயன்படுத்தாது வேறு வழியில் பதிவுகளைத் திரட்டுகிறது. புளொக்கர், Search முறையில் லேபிள் குறிச் சொற்களை வைத்து பதிவுகளைத் தேடித் திரட்டுவதோடு, திரட்டப்படும் ஒரே வகையான மொத்தப் பதிவுகளையும் அவற்றின் உள்ளடக்கத்துடன் ஒரே பக்கத்தில் காட்டுகின்றது. இது பக்கத் தரவிறக்கலுக்கு சாதகமானதல்ல. சாரலில் பயன்படுத்தப் படும் முறை நேரடியாக பதிவுகளைத் திரட்டுவதோடு, முதலில் ஒரே வகையான பதிவுகளின் தலைப்புக்களை மட்டுமே, தருகிறது. அவற்றிலிருந்து பயனர் தனது தேர்வினைச் சுட்டி, முழுப் பதிவிற்கும் செல்லலாம். சாரலில் இவ் வகையான வகைப்படுத்தல் Drop down menu முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது எத்தனை லேபிள்கள் இட்டாலும், நமது பக்கத்தில் இடத்தினைப் பிடிக்கும் அடாத்து வேலையினைச் செய்யாது. பார்க்க சாரலின் பெரும் பிரிவுகள்
- கடந்த காலப் பதிவுகளை Drop down menu இல் காட்டுதல் : இது இதற்கு முன்பும், பலரால் பயன்படுத்தப் பட்டுள்ளது. இரண்டு வருடங்களைத் தாண்டிய நிலையில் மொத்தம் 24 மாதப் பதிவுகளை இது உள் வைத்திருந்து, தேவைக்கு ஏற்பத் தரும். சாதாரண முறையில் 24 மாதங்களும் பதிவில் எத்தனை இடத்தினைப் பிடிக்கும் என்பது தெரியும் தானே..? (இது ஒரு அழகுணர்ச்சி ஏற்பாடே தவிர பெரிய அளவில் நுட்பப் பயன் இல்லை) பார்க்க காலம் எழுதிய கதை
- நமக்குப் பிடித்த வேறு பதிவுகளைத் திரட்டல் : நாம் விரும்பிப் படிக்கும் வேறு பதிவர்களுக்கு நமது தளத்தில் ஏற்கனவே இணைப்புக் கொடுத்திருப்போம். ஆனால் இந்த நுட்பத்தின் மூலம், அவர்கள் எழுதிய, எம்மைக் கவர்ந்த பதிவுகளுக்கு மட்டும் தனியாக இணைப்பினைக் கொடுக்கலாம். வேறு வலைப்பதிவுகளின் செய்தி ஓடையைப் பயன் படுத்தி கூகுள் றீடர் இந்த வசதியைத் தருகிறது. நமது பதிவர்கள், புதிதாக ஒரு பதிவு எழுதி, அது நமக்குப் பிடித்திருந்தால் (பிடிக்காவிட்டால் கூட எனக்குப் பிடிக்காத பதிவுகள் எனத் திரட்டலாம்;))கூகுள் றீடரில் ஒரு சின்னக் கிளிக் மூலம் அதைத் தெரிவித்தால் போதும். உங்கள் பக்கத்தில் அது திரட்டப்படும். ஒப்பீட்டு அடிப்படையில் இலகுவான நுட்பம். பார்க்க எனக்குப் பிடிச்சிருக்கு
- இறுதிப் பின்னூட்டம் இட்டவர்களையும் பின்னூட்டங்களின் சில வரிகளும் : இதன் மூலம் எமக்கு இறுதியாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், இப் பின்னூட்டங்களின் ஒரு சில வரிகளையும், நமது பதிவின் அனைத்துப் பக்கங்களிலும் காட்சிப்படுத்தலாம். எத்தனை பின்னூட்டங்களை வெளியிடலாம் என்பதனையும், பின்னூட்டத்தில் எத்தனை சொற்கள் காட்டப்பட வேண்டும் என்பதனையும் நாமே முடிவு செய்யலாம். புளொக்கர் கூட இவ்வாறான ஒரு வசதியைத் தருகின்றது. பின்னூட்டமிட்டவரின் பெயர் மற்றும் நேரம் என்பவற்றை நமது பக்கத்தின் முகப்பில் காட்டும் வசதியே அது (முகப்பில் உள்ள பின்னூட்டங்களை மட்டுமே). ஆனாலும் முகப்பிலிருந்து தனியான ஒரு பதிவிற்குள் நுழைந்தீர்களாயின், பின்னர் இறுதிப் பின்னூட்டங்கள் காட்டப் படாது. சாரலில் நீங்கள் எந்தப் பக்கத்தில் எப்படி நின்றாலும் இறுதியாக சாரலுக்கு வந்த (அல்லது நானாகவே இன்னொரு பெயரில் போட்ட ;))பின்னூட்டங்கள் காட்டப்பட்டுக்கொண்டிருக்கும்.பதிவர்களின் பெயர்கள் மேலே கிளிக்கினால் மூலப் பதிவுக்குப் போக முடியும். பதிவுகள் வழியாகப் பின்னூட்டங்கள் என்பதை விடுத்து முதலில் பின்னூட்டங்கள் பின்னர் அது வழியாகப் பதிவுகள் என்ற புதிய புரட்சியை இது தோற்று விக்கும்;) பார்க்க இப்போ கருத்து இட்டவர்கள்
- இது தவிர சாரலுக்கெனத் தனியான Flash Audio player: திருப்தி தரக் கூடிய வகையில் இது இயங்குகிறது. நமது MP3 கோப்பையும் ஒரு சிறிய flash (2kb) கோப்பையும் அதனுடன் ஒரு xml கோப்பையும் bandwidth பிரச்சனை வராத இடத்தில் ஏற்றும் வசதி இருக்குமாயின் இதுவே போதும் இதனைப் பயன் படுத்த. பார்க்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஒலிப்பதிவு
தொடர்ந்தும் இவை பற்றித் தனித்தனியாக நிறுவுதல் முதற்கொண்டு பயன்படுத்துவது வரை முடிந்தவரை இலகுவாக எழுத உள்ளேன். நிறைய ஆர்வமும் கொஞ்சூண்டு திறமையும் இருந்தால்ப் போதும். இவற்றை நீங்களும் உங்கள் வலைப் பதிவில் பயன் படுத்தலாம். பதிவுகளை எழுதும் போதே பரிசோதனை முயற்சியாக நீங்களும் முயற்சிக்கலாம். இவற்றை முயற்சிக்க புதிதாய் ஒரு புளொக்கரைத் தொடங்குவதும் அல்லது இருப்பதையே பயன்படுத்துவதும் உங்கள் தெரிவு. ஆனால் இத்தனை வசதிகளும் கிளாசிக் வகை வார்ப்புருவிலேயே அமைந்ததென்பதால் நீங்கள் அந்த வார்ப்புருவுக்கு மீண்டு வர வேண்டியிருக்கும்.
யுத்தம் முடிந்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகும். விரைவில் யுத்தம் முடிய ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக;)