ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும் பட்டு ஓய்ந்த வயதொன்றின் மனநிலையோடு பதட்டமின்றி நிதானத்தோடு வாழ்க்கையின் ஒவ்வொரு தரிசனங்களையும் அவற்றின் உயிர்த்தன்மை கெடாதபடிக்கு அணுகி கதை தன்னைத்தானே நகர்த்திச் செல்வதைப்போல நீ ஒரு நாவலை எழுத வேண்டுமென்றார். “சரி” என்றேன்.

நேரிற் சந்தித்தபோது “இதைப்படி இதைப்படி” என்று அவர் தெரிவு செய்துதந்த புத்தகங்களில் அரைவாசி, இன்னமும் படிக்காமற் கிடக்கின்றன. பிரான்ஸிஸ் கிருபாவின் கன்னி நாவலை “எங்கே, இதை நீ டிகோட் செய் பார்க்கலாம்” என்று சொல்லி ஆண்டுகளாயிற்று.

ஆனாலும், நேர்கோட்டு முறையில், இரண்டு தலைமுறையைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் ஒரு பெரிய நாவலில் சொல்லவேண்டுமென்ற கனவு எனக்கிருந்தது.

0 0 0

எனது அப்பம்மாவிற்கு எண்பது வயதுகளாகிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இப்பொழுதும் கடலில் இறங்கினால் கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு “பிறநீத்தம்” அடிப்பதில் “விண்ணி”. எனது சிறிய வயதில், வெள்ளைச் சேலையை என் இடுப்பில் சுருக்கிட்டு மாரிகாலக் கிணற்றில் இறக்கி மேலே நின்று வட்டமாகச் சுற்றி வருவார். அவர் பிடியை இலேசாக்குவதும் நான் நீரில் மூழ்கி “குய்யோ முய்யோ” என்று கத்துவதும் அவர் சரக்கென்று சேலையை இழுத்து என்னை நீர்மட்டத்திற்கு கொண்டுவருவதும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மேலே நின்று “காலை அடிச்சு நீந்து” என்று அவர் சொல்வது கிணற்றுச் சுவர்களில் எதிரொலித்து ஐந்தாறு தடவை காதுகளில் நுழையும்.

நீரில் உடலைச் சமநிலைப்படுத்தி, மூழ்காதிருக்க எட்டொன்பது வயதுகளிலேயே கற்றிருந்தேன். அப்பம்மா என்னை கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தினார். “தவக்களையள்தான் கிணத்துக்கை நீந்தும். மனிசன் கடல்லதான் நீந்துவான்” என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். கடலின் மீதான நெருக்கத்தை எனக்கு அவர்தான் ஊட்டினார். விரியும் கடலைக் கண்டால் எனக்குள் உருவாகும் பரவசம் அவர் தந்தது. மன்னார் இலுப்பைக்கடவையிலிருந்து இந்தியாவிற்குப் படகேறிய போது, ஏதேனும் நடந்தாலும், இருக்கட்டுமென – இறுக்கமான அரைக்காற் சட்டையும், பனியனும் அணிந்து செருப்புமில்லாது ஏறிய நம்பிக்கை அவர் தந்தது. (அது அளவுக்கதிகமான நம்பிக்கை என்பத நடுக்கடலில் புரிந்தது வேறுவிடயம்)

கச்சைதீவு போன கதை, அவரது அண்ணனின் மகன் கடலிற்காணாமற்போய் இரு வாரத்தின் பிறகு இந்தியாவிலிருந்து வந்த கதை, ஒருவருக்கு மீன் பாடு அதிகமென்றாலும் ஊரே கொண்டாடும் கதை, ராவணன் மீசைக் கதை, ஆமை கடற்கரையில் முட்டையிடும் கதை, உலக யுத்த காலங்களில் குண்டுவீசினால் ஒரு தடியை பற்களில் கடித்தபடி படுத்திருக்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கதை முதலானவற்றை அப்பம்மாவிடம் கேட்டு வளர்ந்தேன்.

“ஒரு கல் எறியவே, ஒரு கிளி பறக்கவே” என்ற ஒரேயொரு பாடலைத்தவிர்த்து அவருக்கு வேறு பாடல்கள் தெரியாது. அதுகூட “இரு கல் எறியவே, இரு கிளி பறக்கவே.. மூன்று கல் எறியவே, மூன்று கிளி பறக்கவே..” என்று ஏறுவரிசையிற் போகிற ஒரு டுபாக்கூர் பாடல்தான். நித்திரைகொள்ளும் நேரம் அருகிற்படுத்திருந்து பாடுவார். துாங்கும்போது அவர் என் தலையை “உணாவத்” தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாயே நான் கிறங்கிச் சுருண்டுபோய்விடுவதால் எத்தனை கல் எறிந்தார் என்றும் எத்தனை கிளிகள் பறந்தன என்றும் எனக்குத் தெரியாமலே போயிற்று. கல்வி சார்ந்த கதைகளோ நீதிக்கதைகளோ அவருக்குத் தெரியாது. தன்னுடைய பெயரை மட்டுமே – அதுவும், மூன்று சுழி “ண” இல், பின்னிரண்டு சுழிகளை எப்பொழுதும் மறந்துவிடுவதால் அதனை “எ” என்பதாகவே எழுதத்தெரிந்தவர் அவர். பூரஎம்.

ஆனால் அவரின் ஒப்பாரி மட்டும் ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்திருக்கும். அப்பம்மா தனது முப்பது வயதிற்கு உள்ளாகவே கணவரை இழந்திருந்தார். ஏழு பிள்ளைகளில் நால்வரை, நோயிற்கும், விபத்திற்கும், பொலிடோலுக்கும் பலிகொடுத்திருந்தார். நான் பிறந்த ஐந்தாவது மாதம், அவரது ஆறாவது மகன் இருபத்தி மூன்றாவது வயதில் காதலிற் தோல்வியென்ற ஒரு காரணத்தை எழுதிவைத்துவிட்டு பொலிடோலைக் குடித்துவிட்டு அது உடலிற் “சுவறும்” வரை உடலைக் குலுக்கி ஓடி விழுந்து செத்துப்போனார்.

அப்பம்மா அத்துயரங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே அழுத்தி வைத்திருந்தார். திடீர்திடீரென அவை ஒப்பாரிகளாக வெடித்துச் சிதறின. கல் அடுப்பில் செம்பாட்டுமண் நிரப்பிய பெரிய தாச்சிச்சட்டியில் கச்சான் வறுக்கும்போது பிசிறலாக விரியும் மெல்லியதொரு அழுகை பிறகு ஒப்பாரியாக விரியும். கணவனினதும் பிள்ளைகளினதும் நினைவுகளும் அவரின் கனவுகளும் அந்த ஒப்பாரியில் வழிந்தோடும். அப்பொழுது நாங்கள் அவர்வை இடையீடு செய்வதில்லை. விலகியிருப்போம். என்னைக் கண்ணுற்றால் “சித்தப்பனைத் தின்ன வந்தவனே, உன் சிரிச்ச முகத்தில அவர்ன் பொட்டு வைச்சானே” என்றழுவார்.

சித்தப்பா பொலிடோல் குடிப்பதற்கு சற்று முன்பாக வீட்டிற்கு வந்தாரென்றும் காலையிலேயே குளிக்க வார்க்கப்பட்டு பாயிற் படுத்திருந்த என்னை கிணற்றடிக்குத் துாக்கிச் சென்று குளிக்கவார்த்தாரென்றும், சிரட்டைக்குள்ளிருந்த கறுத்தப்பொட்டை நெற்றியில் பெரிதாய் இட்டு தன் தோளோடு சாய்த்துக் கொஞ்சினார் என்றும் அப்பம்மாவின் ஒப்பாரிகளே எனக்குச் சேதி சொல்லின. ஊரின் சாவு வீடுகளுக்குச் சென்று “ஒரு பாட்டம், இரண்டு பாட்டம்” என்ற கணக்கில் அழுவது அவரது வழமை. ஒத்த வயதில் நான்கு பெண்கள் ஒன்றாய்க் குந்தியிருந்து அருகிருப்பவர் தோளைக் கையால் அணைத்தபடி ஒப்பாரி வைப்பார்கள். அது இறந்தவருக்கான அழுகையாக இருப்பதில்லை. அது சொந்தத் துயரத்தின் குரல்.

அப்பம்மா தனது முப்பது வயதில் கோயில்களில் கச்சான் விற்கத்தொடங்கினார். தொடர்ந்து 28 வருடங்கள் அவர் கச்சான் விற்றார். கச்சான்காரப் பூரணத்தின்ரை பேரன் அல்லது ஆயாச்சியின்ரை பேரன் என்றுதான் நான் ஊரில் அறியப்படத் தொடங்கினேன். மூன்றாவது வகுப்பில் பள்ளிக்கூடத்தில்………………. க்கு காதல் கடிதம் கொடுத்துப் பிடிபட்டபோது, ………………………. ரீச்சர், “கச்சான் விக்கிற பூரணத்தின்ர பேரனுக்கு, மில் கார …………………. மகளைக் கேட்குதோ” என்றுதான் பிரம்பால் விளாசினார்.

அப்பம்மா கச்சான் அடுப்பில் அல்லாடிக் கொண்டிருந்த புகையும், இரவில் எண்ணப்படும் சில்லறைக் காசுகளின் கிணுங்கல் ஒலியும்தான் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களின் ஞாபகங்களாக இருக்கின்றன.

நிலமை சீராக இருந்த முன்னாட்களில் தொலைதுாரக் கோயில்களுக்குச் சென்று தங்கியிருந்து யாவாரம் செய்து வருவாராம். தனியொருவராக மன்னார் கேதீஸ்வரத்திற்கு கேரதீவு சங்குப்பிட்டி “பாதையில்” சென்று திருவிழா முடித்து வந்த கதைகளையும், சாட்டியில் அந்தோனியார் கோயிலுக்குச் சென்று தங்கி வந்த கதைகளையும் அறிய நேர்கிறபோது எத்தகைய ஆளுமையும் வைராக்கியமும் நிறைந்த பெண் அவர் என்று ஆச்சரியமாயிருக்கிறது.

பனையோலையால் பின்னப்பட்ட கடகம் ஒன்றினுள் தனித்தனிப் பைகளில் கச்சான், சோளம், கடலை முதலானவற்றைக் கட்டுவார். கோயிலில் அவற்றைப் பரப்பி வைப்பதற்காக மேலே மூன்று வட்டமாக இழைக்கப்பட்ட சுளகுகளை அடுக்குவார். அவற்றின் மேலே பெட்டிக்குள் பெட்டி என்றவாறாக ஐந்தாறு பனையோலைப் பெட்டிகள் இருக்கும். பத்து ரூபாச் சுண்டு, ஐந்து ரூபாச் சுண்டு, ரண்டு ரூபாச் சுண்டு என அளவில் வேறுபடும், வெளிப்பார்வைக்குத் தெரியாத- உள்ளே அளவைக் குறைத்துத் தகரமடிக்கப்பட்ட சுண்டுப் பேணிகள், சுருக்குப் பைகள் என அனைத்தையும் பெட்டியில் திணித்து இழுத்துக் கட்டி தலையில் ஏற்றி நிமிர்ந்து நின்றாரென்றால் பிறகு கையால் பிடிக்க வேண்டியதில்லை. கையை விசுக்கி விசுக்கி வேகமாக நடப்பார். தலையில் கடகம் தன்பாட்டில் பதுங்கிக் கிடக்கும்.

அப்பம்மாவிடம் ஒரு பழக்கமிருந்தது. தலையில் கடகத்தை ஏற்றி “படலையை” தாண்டும் முன்பாக அவர் எனது தங்கச்சியை தனக்கு முன்னால் வரச்சொல்வார். அத் தருணம் பார்த்து வாசலைக் கூட்டுவதுபோல நான் விளக்குமாறோடு நின்று “சொறிச்சேட்டை” செய்வேன். “ச்சீச் செடியே..” என்று திட்டிவிட்டு திரும்பிச் சென்று கடகத்தை இறக்கி மறுபடியும் முதலேயிருந்து தலையில் ஏற்றி வருவார்.

இன்றைக்கு பரவலான வழக்கில் இல்லாத வார்த்தைகளை அவர் உச்சரிப்பதுண்டு. சாதாரண பேச்சு வழக்கில் இப்பொழுதும் நான் உபயோகிக்கிற “பறையாமல் இரு பாப்பம்” (பேசாதிரு) என்பது அவரினது பாதிப்பாக இருக்கலாம். தவிரவும் “செடி..” “நரகத்து முள்ளு” முதலானவற்றை அவர் உச்சரிக்கும் தொனியில் அவை கடுமையான வசைச் சொற்களாக மாறியிருக்கும்.

யாவாரம் காரணமாக அவர் ஊருக்குள் பேமஸாயிருந்தார். ஆயாச்சி என்றால் ஊர் தாண்டியும் தெரியும். அப்பம்மாதான் வெற்றி என்ற போராளியை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்தார். போராட்டம் பற்றிய தத்துவார்த்தமான கோட்பாட்டுப் புரிதல்கள் அவரிடம் கிடையாது. போராட்டம் என்பதே அவரின் அக்கறைக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் வழியில் சாப்பாடு கேட்ட ஒருவனைத் தவிக்க விட்டு வர அவர் மனம் ஒப்பவில்லை. அழைத்து வந்துவிட்டார். வெற்றிக்கு வெற்றிலை மெல்லுகிற பழக்கம் இருந்தது. அவன் சாப்பிட்டு முடிய, அப்பம்மா ரோஸ் நிறச் சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி மெல்லிய புகையிலைக் காம்பு ஒன்றையும் உள்ளே வைத்து மடித்துக் கொடுப்பார்.

பின்னாட்களில் வெற்றி எங்கள் வீட்டில் ஒருவனான். பிறகு அப்பம்மாவின் ஒப்பாரியில் ஒரு வரி ஆனான்.

அப்பம்மாவிற்கு அவன் புலி, இவன் புளொட் என்றெல்லாம் பார்க்கத்தெரியாது. இம்முறை ஊரில் நின்ற போது படலையடியில் “ஆயாச்சி” என்று அழைத்து நுழைந்த இளைஞன் ஒருவன் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்களை அவரின் கையிலும் என் கையிலும் தந்தான். ஈபிடிபி தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் அவை. “ஆயாச்சி, மறக்காமல் வெத்திலைக்குப் போடணை” என்று அவன் புறப்பட்டபோது “இருந்து தண்ணியை வென்னியைக் குடிச்சிட்டுப் போடாப்பு” என்று அவனை இருத்தினார். அவர் அப்படித்தான். ஒரு கொள்கை இல்லாதவர் 😉

அவரிற்கு ஒருநாள் ஒரு இந்திய ராணுவச் சிப்பாய் மரண பயத்தைக் காட்டினான். அன்று காலையில் ரோந்து சென்று சிப்பாய்கள் மீது போராளிகள் குண்டெறிந்த சம்பவ வலயத்தில், கோயிலுக்கு கச்சான் விற்கப்போனவர் அகப்பட்டுக் கொண்டார். வழியாற் போனவர் வந்தவர் மீதெல்லாம் இந்திய இராணுவத்தினர் தாக்கத்தொடங்கினார்கள். கோப மிகுதியில் ஒரு சிப்பாய் அப்பம்மாவின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவதுபோல மிரட்டினானாம். பயத்தில் சேலையோடு சிறுநீர் கழித்துவிட்டார். கோயிலுக்குப் போகவில்லை, வீட்டிற்கு வந்து யாரோடும் பேசாது பேயறைந்தவர் போலிருந்தார். பிற்காலங்களில் அச்சம்பவத்தை விபரிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அமைதியாகிவிடுவார்.

0 0 0

கனவைச் சுமந்துகொண்டுதான் போனேன். அந்தக் கிராமத்தையும் வெள்ளந்தியான மனிதர்களையும், அப்பம்மாவையும் அவரது பாடுகளையும் வாழ்வையும் ஒரு பெரிய தரிசனமாக நாவலொன்றில் இறக்கி வைக்க வேண்டும் என்ற கனவு.

வீட்டுச் சுவரில் சுண்ணாம்பினால் நானெழுதிய பூரணவாசா என்ற பெயரும், கச்சான் காரியாலயம், உரிமையாளர் பூரணம் என்ற எழுத்துக்களும் இன்னமுமிருக்கின்றன. அப்பம்மா சொன்னார். “விதானையார் இப்பயும் கேப்பார், ஆரணை இதை எழுதினது என்று. நான் சொல்லுவன். இது என்ரை பேரன் எழுதினது என்று.”

அப்பம்மாவின் அருகிலிருந்து அவரது வாழ்க்கையைக் கேட்டேன். பிள்ளைப் பிராயத்து கனவுகளை, திருமண நாளின் வெட்கத்தை, கணவன் இறந்த நாளின் துயரத்தை, பிள்ளைகள் இறந்த நாட்களின் வெறுமையை, தந்தையைத் தாயை, உறவுகளை, கிராமத்தை, கடலை, மனிதர்களை கேட்டு முடித்தேன். இன்னமும் கேட்பதற்கு மிச்சமிருக்கின்றன.

ஆனால், இந்த இடைப்பட்ட 18 வருட இடைவெளியில் அந்த வாழ்விலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும் அந்நியப்பட்டுப்போன என்னால் அதன் உயிர்த்தன்மை கெடாத எதையும் எழுதமுடியுமெனத் தோன்றவில்லை. முடியாதுதான். அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அதன் களத்தில் பயணித்தாவது இருக்க வேண்டும். நெஞ்சில் திரண்டு ஊறியிருக்க வேண்டும்.

எனக்கு கெளுத்துமீன் முட்டையில் கறி எப்படி வைப்பதென்று தெரியவில்லை. இறால் வறை எப்படிப் பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போல இருக்கின்றன என்று அறியவில்லை. ஏலம் கூறும் நடைமுறை தெரியவில்லை. மீன் பாடுகளைப் பொறுத்து ஊருக்கு வரிசெலுத்துகிற சிஸ்ரம் விளங்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ற சித்திரத்தை மனதால் வரையவே முடியவில்லை.

என்றேனும் ஒரு காலம் வாய்க்கலாம். வயதால் உணர்கிற பருவம் கிட்டலாம். வாசிப்பினால் அதனை அடைய முயலலாம். வாழ்வை எழுத முன்னர் அதன் குறுக்குவெட்டுத் துண்டங்களையாவது எழுதிப் பயிலலாம். அதுவரை

“ஏன்ரா மேனை, எல்லாத்தையும் கேட்கிறாய். செத்தவீட்டுப்புத்தகம் அடிக்கிறதுக்கே..?” என்ற அப்பம்மாவின் வார்த்தைகள் பொய்த்திருக்க வேண்டும்.

By

Read More

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991

ரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று.

வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையிலேயே’ தெரியவில்லை. அவர்களோடு பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டுவந்து கொட்டிய அந்த இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சான், நீ புலி தானே, அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மறைக்காமல் சொல்லு…. சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது….” என்று சிங்களத்தில் கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா…. நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான்.

உபாலியின் அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்து நடுங்கினார்கள். காலையில் கக்கூசிற்கும், முகம் அலம்பவும் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் அவர்களைத் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும்  தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து பார்த்தாலே தெரிகின்ற திறந்த குழிக் கக்கூசிலிருந்து சமயங்களில் சிரிப்பான். அங்கு சிரங்கைப்போலப் பாசி படிந்த சிறிய பிளாஸ்ரிக் வாளி, நீர்க்குழாயின் கீழிருந்தது. ‘க்ளக்…. க்ளக்….’ என்று நீர் சொட்டும் ஓசை இரவில் ஒருவிதப் பேயுலக ஒலியாய்க் கேட்கும்.

மெல்லிய வெளிச்சத்தில் தூசுகள் அலைகின்றன. மூத்திரம் மூன்று கிளைகளாக வழிந்திருந்தது. இரவு தொடையிடுக்கில் சரித்துப் பெய்த வாளியைக் கால்பாதத்தால் தள்ளியிருந்தேன். அது ஒரு கோடாக வெடித்திருந்தது. இல்லை, வெடித்த வாளியைத்தான் பொலீஸ்காரன் தந்திருந்தான். மூத்திர நெடி ஊறிய சாரத்தைக் கால்களில் உரித்துச் சுருட்டி கையெட்டும் தூரத்தில் வழிந்திருந்ததை ஒற்றியெடுத்தேன். கக்கூஸிலிருந்து உபாலி ‘காலை வணக்கம்’ என்பதுபோலக் கையசைத்தான். நேற்றிரவு, சலக்கடுப்புத் தாங்கவியலா வலியில் விலங்கை அசைத்துச் சத்தமிட்டு யாரையாவது அழைக்க முயற்சித்த அந்த அகாலவேளையில் “நான் இங்கே ஒவ்வொரு சிறையாகக் கிடந்தலைகிறேன். அவள் வருடத்திற்கொரு பிள்ளை பெறுகிறாள்” என்று மனைவியைத் தூசித்துக்கொண்டிருந்தவன்  நான் மறுபடியும் மறுபடியும் மணிக்கட்டை அசைத்துச் சப்தமெழுப்பவும், “யாரடா” என்று உறுக்கினான். “எனக்குச் சலம் கடுக்குது. திறந்து விடணும்” என்று மெதுவாகச் சொன்னேன். அவன் மறுபேச்சின்றி “அடே, பத்துப்பேர் சேர்ந்து புணர்ந்து பெற்ற பொலீஸ்காரப் பயல்களே, எங்கேயடா இருக்கிறீர்கள்” என்று குரலுயர்த்தினான். சட்டென்று டோர்ச் விளக்கு ஒளிர்ந்து சூரியன் நகர்வதுபோல அருகாக வந்தது. உபாலியிருந்த திசையை நான் வாஞ்சையுடன் பார்த்தேன். அவன் “நீ படுத்தெழும்புகிற அத்தனை பேரையும் என்னால் சொல்லமுடியுமடி” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

முகத்தில் வெள்ளை ஒளியைப் பாய்ச்சியவன், “மூத்திரமா” என்று கேட்டான். தலையைக் குனிந்து ஆமோதித்துவிட்டு தொடையிரண்டையும் நெருடியபடி “திறந்துவிடுங்கள்” என்றேன்.

“நீ புலி என்பதில் எனக்கு இப்பொழுது உண்மையாகவே சந்தேகமாயிருக்கிறது” என்றவன் நீர்ப்பற்று அற்ற உலர்ந்த வாளியொன்றை உள்ளே தள்ளினான். “இதிலே பெய்து தொலை” என்றான்.

முன்னரென்றால் அழைத்துச்சென்று கக்கூசில் ஏற்றிவிட்டு நான் குந்தவும், விலங்கை இழுத்தபடி அருகிலேயே நிற்பவன், அந்தப் பழக்கத்தை இன்றைக்கு விட்டொழித்தான். ஒருவேளை குழியில் பட்டுச் சிதறும் துளிகள் அவன் கால்களில் தெறிப்பதை அவன் விரும்பாதிருக்கலாம். வெளிச்சத்தை அணைத்துவிட்டு விலகியபோது “மாத்தையா, வெளிச்சம்….” என்று இழுத்தேன்.

“நீ புணரும் போதும் நான்தான் வெளிச்சம் பாய்ச்ச வேண்டுமா….” என்ற குரல் மட்டும் வந்தது. நான் கால்களை விரித்து இடது கையினால் தொடைகளின் இடையில் வாளியை நகர்த்தினேன். விடுதலை என்ற சொல்லின் பரிபூரண அர்த்தமது. வாளியை நிமிர்த்தி, இரண்டு காற்பாதங்களிலும் கவ்வி ஒரு வேவுப்புலியின் அவதானத்தோடு சுவரோரமாகத் தள்ளிவைத்தேன்.

சற்று முன்னர் வாளியைத் தந்த போலீஸ்காரன் “வெறும் மூத்திரத்தை அடக்கத் தெரியாதவர்களா புலிகளில் இருந்தார்கள்….” என்று முணுமுணுப்பது கேட்டது.

சிங்கமலை லெட்சுமணன் என்கிற நான் மலையகத்தில் தெனியாய என்ற தோட்டத்தில் பிறந்தவன் என்பதையும் எழுபத்தியேழு கலவரத்தில் தந்தை என்னைத் தோளிலேயே காவிச்சென்று முல்லைத்தீவின் காட்டுக் கிராமமொன்றில் தஞ்சம் புகுந்தார் என்பதையும் ஏழு வயதில் மனதில் பதிந்த சிங்கள மொழியை என்னால் இன்னமும் சரளமாகப் பேசமுடியும் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்த நிலாம்தீனுக்கு, நான் சிறுவயதில் நித்திரைப்பாயிலேயே மூத்திரப்பழக்கத்தைக் கொண்டிருந்தேன் என்பதையும், வளர்பருவத்தின் விழிப்புணர்ச்சி, அதைத் தடுக்க அது அடிவயிற்றில் தேங்கிக் கடுக்கச் செய்யும் வலியை ஏற்படுத்திற்று என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ‘அமத்திய’ மூன்றாவது நாள் அவன் துப்பாக்கி சுடும் பொஷிசனில் எனக்கு முன்னால் வந்தமர்ந்தான். நெடிதுயர்ந்த உருவத்தின் ஊடுருவுகின்ற கண்களை ஒருகட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடியவில்லை.  “பெயர் என்ன என்று சொன்னாய்?”

“சோமையா ராசேந்திரன். சொந்த ஊர் ஹட்டன். பிழைக்க வந்த இடத்தில் எப்படியோ இந்தத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பணம் தருகிறோமென்றார்கள். ஆனால் இன்னமும் தரவில்லை.”

நிலாம்தீன் சட்டென்று என்னுடைய தாடையைப் பற்றிக்கொண்டு கேலியாகச் சிரித்தான். “நடிகனடா நீ” என்றான். பின்னரெழுந்து கதிரையில் கிடந்த கோப்பினைப் புரட்டியவன் “முழுப்பெயர் சிங்கமலை லெட்சுமணன்” என்றபோது நான் எனது கடைசி நம்பிக்கையையும் வழிந்தோட விட்டேன். இரண்டு முழங்காலையும் கையால் இறுக்கிக் குந்தியிருந்தேன். என் உயரத்திற்குக் குனிந்தான். “எங்க சனங்களின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது அப்பனே” என்று தூய தமிழில் சொல்லி முடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனைப் போலவே தமிழில் பேசிய மற்றுமொருவன் “தோட்டக்காட்டு நாய்க்கு முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளை என்ன வேலை” என்றவாறே மூஞ்சையில் குத்தினான்.

நான் முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்கு வந்து மூன்று மாதங்கள்தான் முடிந்திருந்தது. வந்ததிலிருந்தே மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கும் பதுளைக்குமாக அலைந்து திரிந்தேன். தொடக்கத்திலிருந்த லேசான பதற்றம் மெல்ல மெல்லப் பின்னர் தணியத் தொடங்கியிருந்தது. கண்களில் ஒருவிதத் தெளிவு. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்.

ஒருமுறை சித்திரவதையின் போது விஜேயரத்ன கொக்கரித்த குரலில் கேட்டான் “திருப்பியெல்லாம் அடிக்க மாட்டாயா புலியே…. ஏன் பயந்துபோய் இருக்கிறாய்?” விஜேயரத்ன அவ்வளவாகப் பேசுவதில்லை. பின்னொரு நாளில் அவனுக்கு பேத்தையன் என்றும் ஒரு பெயர் உண்டென்பதை அறிவேன். அவனுடைய சித்ரவதைகள் நேர்த்தியும் நுணுக்கமும் மிக்கவை. வலி எதிராளியின் முகத்தில்  வழியும்போது அவனுடைய முகத்தில் பரவும் குரூரமான பரவசத்தை நான்  முதல் நாளிலேயே கண்டுகொண்டேன். காமத்தில் உச்சத்தைத் தொட்டதைப்போல அவனுடைய முகம் கோணி நிற்கும்போது வதை சாவைத் தட்டித் தட்டித்திறக்க முயற்சிக்கும். அந்த உச்சத் தருணத்தின் பிறகு அவன் ஓயத்தொடங்குவான். நான் சித்திரவதைகளின் ஆரம்பத்திலேயே வாதையைக் கண்களால் கொட்டுவேன். ஓர் அப்பாவியைப்போல அவனைப் பார்ப்பேன். ஒருநாள் கையை ஓங்கியவன் சுளீரென்று வலிப்பு வந்தவன் போலக் கையை இறக்கினான். “வேசை மகனே, அடிக்கும்போது அப்படிப் பார்க்காதே, அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை” என்றான். விஜேயரத்ன என்னுடைய முதலாவது விசாரணையாளன்.  அன்றைக்கு ஒடுங்கிய பாதையால் அவன் என்னை இருளான விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றபோது குறடு, ஆணி, முள்ளுக்கம்பி, சோடாப்போத்தல், கொட்டான்தடி…. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டேயிருந்தேன். இருள்தான் விசாரணையாளர்களின் துணையாயிருக்கிறது. இருட்டு நம்பிக்கைகளைச் சிதைத்துவிடுகிறது. ஒளியின் கீற்றைக்கூடப் பார்க்கமுடியாத இருட்டில் தற்கொலை எண்ணங்கள் துளிர் விடுமாம் என்று படித்த நினைவிருக்கிறது. இவர்கள் என்னைத் தற்கொலை செய்ய அனுமதிக்கவில்லை. சாவுக்கு அருகாகக் கூட்டிச் செல்வதும் மறுபடியும் திருப்பி அழைத்து வருவதுமாயிருந்தார்கள்.

10689524_10153346791279951_8737033188617690887_n
உருண்டைத் தலையில் நறுக்கிய மயிரும் உட்புதைந்த தூக்கமில்லாத கண்களும் கொண்ட விஜேயரத்ன தடித்த ஒரு புத்தகத்தைக் கையில் சுழற்றியபடி வந்தான். கதிரையை இழுத்துப்போட்டு உட்கார்ந்தவன் கதிரைக் கால் அருகாக புத்தகத்தை பொத்தென்று வைத்தான். அதுவொரு காவி நிற அட்டைப் புத்தகம். புத்தகங்களைக் கண்டாலே சந்திராம்மாவின் நினைவு பெருகுகிறது…. அந்த ஓவியத்திலிருந்தவர் புத்தரா?… தெரியவில்லை. சற்றே தலையைச் சரித்த அந்த முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. கருணை சொரியும் வல்லபக் கண்கள்.

விஜேயரத்ன நிதானமாக எழுந்து என்னைச் சுற்றினான். மூன்றாவது தடவை கையிரண்டையும் முறுக்கிப் பின்னிழுத்து மின்சாரக் கம்பியினால் இறுக்கி முடிச்சிட்டான். பின்னால் சென்று சாரத்தை அவிழ்த்து விழுத்தினான். உள்ளாடையை உருவி இறக்கினான். அது உரித்த கோழியைப் போல காற்பாதத்தில் சுருண்டு கிடந்தது.

என்னுடைய குதிகால்கள் மெதுவாக உந்த முயற்சித்தன. கால்களை மடித்துக் குந்தியிருக்கச்சொல்லி மனது உறுத்தியது. ஆடைகளைக் களையும் விசாரணையாளன் அப்பொழுது அதிகாரத்தைத் தனக்குள் ஏற்றிக்கொள்கிறான். ஆடையிழந்தவன் அடிமையைப் போலத் தன்னைக் குறுக்குகிறான். இனிவரும் நாட்களில் ஆடையிழந்த பல தமிழர்கள் ஓடிப்போய்ச் சுவரோடு ஒட்டிநிற்பதையும் அவர்களுடைய தோளினைத் தொட்டுத் திருப்பும் விசாரணையாளர்கள் ‘தமிழனின் சாமான்’ என்று வெடித்துச் சிரிப்பதையும் நான் காணுவேன்.

விஜேயரத்ன கொடுப்புச் சிரிப்புடன் என்னை முழுதாக அளந்தான். நான் கண்களைத் தாழ்த்திக் கூச்சமடையப் பழகிக்கொண்டேன். தொடைகளை ஒன்றோடொன்று உரசி இடுப்பை முன்வளைத்து நெளிந்தேன். அவன் சீழ்க்கையொலியோடு கதிரையை மேலும் முன்னால் நகர்த்தி உட்கார்ந்தான். அப்பொழுது புத்தருடைய முகத்தைக் கதிரையின் கால் நெரித்தது.

“சோமையா ராசேந்திரன்…. உனக்குத் தெரிந்த வேறு யாரெல்லாம் புலிகளிடம் சூப்பிக்கொண்டு இப்படியான ஊத்தை வேலை செய்கிறீர்கள்….” உண்மையை முதலில் தானே கண்டுபிடிக்கவேண்டுமென்ற முனைப்போடு கேட்டான்.

“எனக்குத் தெரியாது.”

அவனுடைய வலது கால் உயர்ந்த வேகத்தில் என் தாடையில் இடித்து முகத்தைப் பின்னாற் தள்ளியது. மல்லாந்து விழுந்தேன். பின்மண்டையில் கிடுங் என்றது.  காதுக்குள் ஏதேதோ கூச்சல்கள். வாய்க்குள் ரத்தத்தின் செப்புச்சுவை ஊறியது. மூக்கிலிருந்து திரவம் ஒழுகுகிற உணர்வு. மேலே கூரையில் அலை அலையாக வட்டங்கள் விரிந்தன. விஜேயரத்னவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. அவன் குனிந்தபோது தலை மட்டும் இறங்கிவருவதைப் போலிருந்தது. தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். “இனி உனக்குச் சொல்ல முடியும். உண்மையச் சொல்லு.”

“நம்புங்கள்…. நான் அவர்களில் ஒருவரைக்கூட நேரே சந்தித்ததில்லை. கடிதங்களும் முகவரிகளோடு வருவதில்லை. உண்மையில் நான் என்ன செய்யவேண்டுமென்பதை அவர்கள் இன்னமும் எனக்குச் சொல்லவில்லை.”

“இந்திய நாய்…. ” என்றான் விஜேயரத்ன. முகத்தில் கணச் சலிப்பு. நான்  புழுதி கிளறும் காலக் குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறைய என் மூதாதையரின் தலைமுறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் மாத்தையா….”

அவன் உந்தி எழுந்த வேகத்தில் கதிரை ஓரடி பின்நகர்ந்தது. புத்தகத்தைக் கையிலெடுத்தவன் அதனை வகிடு பிரித்து என் தலையில் கவிழ்த்தான். கூரையைப்போல அது பொருந்தி நின்றபோது தரையிற் கிடந்த இரும்புக் குழாயைத் தூக்கினான். சற்றுமுன் வரையிலான மெதுவான வேகத்திற்குத் துளியும் பொருந்தாமல் கையை ஓங்கியபோது காற்று விசுக் என்றது. ஷக் என்ற சத்தம் அட்டையிலிருந்த  புத்தரைக் கடந்து, தாள்களைக் கடந்து நடுமண்டையில் ஊடுருவியபோது கண்கள் செருகிக்கொள்ள ஒளிரும் வண்ண அரிசித் துணிக்கைகள் விசிறின.

புத்தர் அநாதரவாகக் கிடந்தார். ‘புத்தா’ என்று வாஞ்சையோடொலிக்கும் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பதுபோலக் கேட்டது.

0 0 0 0 0 0 0 0

புத்தா…. இங்கே வந்து பாரேன்….” என்று கியோமாக் கிழவி பதற்றத்தோடு அழைக்க அறையிலிருந்து ஓடிச்சென்றேன். சந்திரசேகரனைக் கைது செய்துள்ளதாக ரூபவாஹினி சொல்லிக்கொண்டிருந்ததை கியோமா வைத்த கண் வாங்காது பார்த்தபடியிருந்தாள். “என்ன புத்தா…. இப்படியுமா உங்களுடைய தலைவர்கள் செய்வார்கள்….” நான் கிழவியின் கண்களை நேராகப் பார்த்தேன். என் உள்ளிருந்தொரு மிருகம் அவளுடைய சொற்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தது. முன்பொருதடவை “புத்தா…. ரஞ்சன் விஜேயரத்னாவைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்” என்று அலறியடித்துச் சொன்னபோதும், பிறிதொருநாள் “ஐயோ புத்தா, தொலைக்காட்சித் திரை முழுவதும் ரத்தமும் மனிதத் துண்டங்களும்…. ராஜீவைக் கொன்றுவிட்டார்கள்” என்று கத்தியபோதும் அவளுடைய கண்களில் இப்போதிருந்ததைப்போன்ற அச்சமிருந்தது. அன்றைக்குத் தொலைக்காட்சித் திரையில் ரோஸ் நிறக் காலொன்றைக் கண்டேன்.

கொழும்பின் புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த வீட்டைப் பற்றிய தகவல் கிடைத்த மாலையிலேயே நான் கியோமாக் கிழவியைச் சந்தித்தேன். நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகிய தெருவின் முடிவில் சிங்களப் பாரம்பரியமான கட்டடக்கலையில் மிளிர்ந்த வீடு அது. கொடித்தாவரமொன்று முற்றத்தின் மேலே பரவிநின்றது. கியோமாவிற்கு அறுபது வயதிருக்கலாம். தென்பகுதியின் ஏழைக்கிராமம் ஒன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் கணவரும் கியோமாவும் இந்நகரத்திற்கு வந்தார்களாம். ஓரளவு நல்லநிலையில் இருந்தபோது இந்நிலத்தைச் சொந்தமாக வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். கணவர் இறந்துவிட, இரண்டு மகன்களும் திருமணத்தின் பிறகு நகரத்தின் அடுக்கு மாடிகளுக்குப் போய்விட, வீட்டின் விறாந்தையோடியிருந்த ஓர் அறையை யாரேனும் படிக்கின்ற மாணவர்களுக்கு வாடகைக்கு விட கியோமா தீர்மானித்தாள்.

“படிக்கின்ற பிள்ளைக்கு வசதியாயிருக்கும் புத்தா…. உங்களுக்கு அல்ல, குறை நினைக்க வேண்டாம்” என்று அவள் எனக்குச் சொன்னாள்.

“நானும் படிக்கவே ஆசைப்பட்டேன் அம்மா. ஆனால் வசதியிருக்கவில்லை. இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து பொதிகளை இறக்கும் ஒரு கார்கோ கொம்பனியில் வேலை கிடைத்திருக்கிறது. இதில் காலூன்றி விட்டால் ஹட்டனிலிருக்கிற என் தம்பியைப் படிக்க வைத்துவிடுவேன். வேறிடங்களில் அதிக வாடகை கொடுக்க  வசதியில்லை. மனது வையுங்கள்.” சரளமாகக் கோர்த்த என்னுடைய சிங்களச் சொற்களுக்கு கியோமா பணிந்தாள். அடுத்த நாள் காலை அவள் என்னைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிஸ் பதிவுத்துண்டில் சோமையா ராசேந்திரன் என்ற பெயரைச் சேர்த்தாள். அதிலொரு பிரதியெடுத்து நான் வைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டை நான் வெளியில் பார்த்துக்கொண்டேன் என்றாலும், காலையில் சுடுநீர்ப் போத்தலில் தேநீர் எடுத்துவந்து “புத்தா எழுந்துகொள்” என்று சொல்வதற்குக் கியோமா தவறியதில்லை. சட்டென்று சந்திரம்மாவின் மலர்ந்த முகம் ஞாபகத்தில் வரும். அவளும் விடிகாலையிலேயே தேநீரைக் கொண்டுவந்து நீட்டுவாள். சாப்பிடும்போது தனக்காக எதையும் எடுத்து வைக்காமல் கறியையும் காய்களையும் என் தட்டிலேயே குவித்துவைப்பாள். “வளர்ற பெடியனல்லோ…”

வெளியில் செல்லாது வீட்டிலிருக்கின்ற நேரங்களில் கியோமாவும் வற்புறுத்திச் சாப்பிட அழைப்பாள். ஈரப்பலாக்காயின் கறிச்சுவை என்னில் குற்ற உணர்ச்சிகளைக் கிளறப்பார்த்தது. அப்படியொருநாள் “உன் வேலைகள் எப்படிப்போகிறது புத்தா…. தம்பி எப்படியிருக்கிறான்….” என்று அவள் எதேச்சையாகக் கேட்டபோது கையிலேந்திய சோற்றுக் குழையல் உதறித் தட்டில் விழுந்தது. அவளை வெறிக்கும் கண்களால் பார்த்தேன்.

ஹவ்லொக் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு நிரப்பிய கார், தீயின் நாவுகளால் சூழப்பட்டுப் பேரோசையோடு எழுந்து விழுந்ததும், வீதிச் சுவர்களெல்லாம் கொத்திக்கிளறப்பட்டதும், கண்ணாடி முகப்புகள் நொறுங்கித் தெறித்ததுமான அன்றைய இரவு கியோமா மேலே எனக்கு முதற்தடவையாகக் கோபம் வந்தது. அவள் தொலைக்காட்சியைக் காட்டி “பார் புத்தா…. இந்த அழிவுகளை. மனச்சாட்சியில்லாதவர்களால் இந்த அழகிய நாடு அழியப்போகிறது” என்றாள். அப்பொழுது அவளுடைய கண்கள் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தன.

என் கண்கள் குரூரமாக ஒளிர்ந்தன. “ஆம், மனச்சாட்சி இல்லாதவர்களால் இந்த நாடு அழியப்போகிறது என்பது உண்மைதான்” என்று தீர்க்கமாகச் சொன்னேன்.

“ஏன் புத்தா, இப்படியான அநியாயங்களைச் செய்ய வேண்டாமென்று தமிழர்கள் புலிகளிடம் சொல்ல மாட்டார்களா….”

நான் சோற்றுத் தட்டை நகர்த்தி விட்டு எழுந்துகொண்டேன். வெளிப்படுத்த முடியாத கோபம் பதற்றமாக உருமாறியிருந்தது. “பசிக்கவில்லையா புத்தா….”

“இல்லை” என்றுவிட்டு அறைக்கு வந்தேன். அவள் “எனக்கும்தான்” என்றாள்.

அடுத்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியற்ற கெட்ட கனவுகள் வந்தன. கைகளைப் பிணைத்துத் தெருவில் யாரோ என்னை இழுத்துச் செல்கிறார்கள். திரண்ட மனிதர்கள் வெறிகொண்ட கண்களோடு என் மீது கற்களை எறிகிறார்கள். அவர்களிடையில் அவளை நான் பார்த்ததும் தன்னை மறைத்துக்கொள்ளும் விருப்பில் கிழவி கியோமா நழுவிச்செல்கிறாள். நான் “மெத்த நன்றி கிழவி” என்று உரத்துக் கத்துகிறேன். எனக்குப் பழக்கமற்ற காட்டுப் பகுதியொன்றில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நான் மூத்திரம் நனைந்த ஆடைகளோடு “எனக்குப் பசிக்கிறது” என்கிறேன். அப்பொழுது கியோமா தட்டைப் பொத்தென்று முன்னால் வைத்து வெறும் ஈரப்பலாக்காய்க் கறியை ஊற்றுகிறாள். “சாப்பிடு புத்தா….” என்று சொல்கிறாள்.

கதவினைப் பலமாகத் தட்டுகிறார்கள். பிறகு இடிக்கிறார்கள். நான் சரேலென்று விழித்தேன். கியோமா இப்படித் தட்டுவதில்லை. மூளைக்குள் சுளீரென்றது. ‘கிழவி வேலையைக் காட்டிவிட்டாள்….’ அரைஞாண் கொடியிலிருந்த குப்பியில் கை வைத்து இழுத்தேன். அப்பொழுது கதவு ஓவென்று திறந்தது. அணை உடைந்ததும் பாய்கிற நீர் போல ஆமிக்காரர்கள் பாய்ந்தார்கள். என்னை விழுத்தி மேலே நொடியில் ஏறிக்கொண்டார்கள். தலைமயிரில் கைகளைச் செருகிக் கோதினார்கள். அரைஞாண் கொடியை பிளேடால் கீறி வெட்டியெடுத்தான் ஒருவன். பிளேற் பட்ட இடத்தில் ரத்தம் கசிந்தது. காதுமடல், காதுக்குழி, அக்குள், வாய், குதமென்று விடாமல் தேடினார்கள்.

முகத்தைத் தரையோடு அழுத்திப்பிடித்திருந்தவனின் விரல்கள் சிங்கத்தின் காலைப்போல கன்னத்தில் முழுவதுமாகப் பரவியிருந்தன. அறையைச் சல்லடையிட்டபிறகு அகப்பட்ட சோமையா ராசேந்திரன் பெயரிட்ட அடையாள அட்டையோடு வெளியே தள்ளி வந்தார்கள். நான் கியோமாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கிழவி காட்டிக் கொடுத்துவிட்டு எங்கேயோ ஓடிவிட்டாள். இரண்டு பக்கங்களிலும் பொலிஸார் என்னை இழுத்தபடி வாசலைக் கடந்து தெருவில் நடத்தியபோது முகப்பில் நான் கியோமாக் கிழவியைக் கண்டேன்.

கியோமாவிற்குப் பக்கத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் நின்றார்கள். அவர்களுக்கு நடுவில் அவள் முழந்தாளில் இருந்தாள். முதுமையில் தளர்ந்த அவளுடைய கைகளிரண்டும் முதுகின் கீழ் மடிக்கப்பட்டு நைலோன் கயிற்றினால் இறுக்கப்பட்டிருந்தன. சுருக்கங்கள் விழுந்த முகத்தின் உட்புதைந்த அவளுடைய கண்கள் இரக்கமும் பரிதாபமுமாயிருந்தன. அவள் என்னைப் பார்த்தாள். நான் சரேலென்று தலையைத் தாழ்த்தினேன். கால்கள் தொய்ய, அவளை நெருங்கினேன். கியோமா கிழவி, தன்னருகில் நின்ற சிங்களப் படைவீரனை நிமிர்ந்து பார்த்தாள் “புத்தா, இவன் நீங்கள் நினைப்பவன் மாதிரியானவன் இல்லை. அவனை வீணாகக் கொடுமைப்படுத்தாதீர்கள்….” என்று இறைஞ்சினாள். அப்பொழுது கியோமாவின் நீண்ட நரைத் தலைமயிரைப் பற்றியிழுத்து கீழே விழுத்திய படைவீரன் அவளுடைய மார்புக்கு நேரே வலது காலை ஓங்கி அந்தரத்தில் நிறுத்தினான். “ஒரு வார்த்தை பேசினாயென்றால் கிழட்டுப் பன்றியே…. மிதித்தே கொன்றுவிடுவேன்” என்றவன் “எதிரிகளை மன்னித்துவிடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாகக் கேட்டபடி அவளைக் கடந்து இழுத்துச் செல்லப்பட்டேன்.
0

(ஓவியம் கார்த்திக் மேகா)

By

Read More

அஷேரா! சிதறிய எறும்புகளின் கதை – ஜேகே

எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை.

“இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது”

‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான புறநகர்ப்பகுதிகளில் புழுங்கிக் கசிந்து, ஈழத்தின் வடக்கு கிழக்கிலும் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலும் பாய்ந்தோடும்போது உலர்ந்தும் பெண்களின் மடியில் மிதந்தும் அவர்களற்ற உலர் நிலங்களில் கற்பனைப் பயிர் செய்தும் இந்த நாவல் எனும் பெரு நதி ஓடிக்கொண்டேயிருந்தது. சமயத்தில் அது கால்கள் அற்ற கள்ளப்பூனை போலவும் அரைந்துகொண்டு திரிந்தது. வாசித்து முடித்து நாட்கள் பல சென்றபின்னரும் அதன் தீராவாசனை எங்கெனும் பரவிக்கொண்டேயிருந்தது.


அதனாலேயே அஷேரா என்பது ஒரு இரவு. அதன் மொழியில் சொல்லப்போனால் வெளிச்சத்தின் அடியாள். நதிகள் எல்லாமே கடலின் அடியாட்கள் என்பதுபோல.
பெரும் போர் ஒன்றின் சிதறிய எறும்புகள்தான் அஷேராவின் பாத்திரங்கள். அது ஆப்கானிய போரில் சிதறியதாக இருக்கலாம். ஈழத்தின் எச்சங்களாக இருக்கலாம். ஆபிரிக்க நிலத்து எறும்புகளாக அமையலாம். வரலாற்றின் மீதங்களாகவும் இருக்கலாம். தம் கூட்டங்களினின்றும் சிதறுண்டு எஞ்சிய எறும்புகளின் அலைதலை அஷேராவில் உணரக்கூடியதாக இருக்கும். முதலில் தனித்து அலைந்து, பின்னர் தன்னையொத்த சக எறும்புகளை இனங்கண்டு அவற்றுடன் சேர்ந்து அலைந்து, முன்னே போன எறும்புகளைத் தொலைத்ததன் வினையாக ஏன் எதற்கு இயங்கினோம் என்பதையே அறியாமல் திக்கற்று திசையெங்கும் திரியும் ஒரு எறும்பின் மனநிலை எப்படி இருக்கும்? அவையே அஷேராவின் மனிதர்கள்.

அருள்குமரன். அதீத மன உளைச்சலால் (Post Traumatic Stress Disorder) பாதிக்கப்பட்டவன். குடும்பத்தில் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளிலிருந்தும் பதின்மத்துப் பாலியல் குழப்பங்களிலிருந்தும் தப்புவதற்காகப் போராட்டக்குழுவொன்றில் போய் இணைகிறான். பின்னர் தமிழ்நாட்டினூடாக கொழும்புக்கு இயக்க நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்படுகிறான். அங்கு பிறிதொரு பேரதிர்ச்சி அவனை அப்படியே அடித்துப்போட்டுவிடுகிறது. அதன் கிழிசல்களோடே அருள்குமரன் நாவல் முழுதுமே அலைகிறான். அவன் காணும் மனிதர்களையும் அந்தக் கண்களோடே அணுகுகிறான். சிலரோடு அம்மாவின் அன்புகொண்டு பழகுகிறான். பலரை அம்மா ஏற்படுத்திய அதிர்வுகளைக் கொண்டு எடைபோடுகிறான். அருள்குமரனூடாக நகரும் கதையில் வருகின்ற மனிதர்கள் எல்லோரிடத்திலும் அவனுடைய இருத்தலியல் சிக்கல்களும் தொற்றிவிடுவதும் அப்படியான மனிதர்களோடு மாத்திரமே அவன் பழக்கங்களை ஏற்படுத்துவதும் வெறும் தற்செயல்கள் அல்ல.


அற்புதம். ஈழப்போர் கடித்துத் துப்பிவிட்ட இன்னொரு எச்சம். தமிழீழம் காணப் புறப்பட்ட எண்பதுகளின் போராளிக்குழுக்களுக்கிடையே மிதிபடும் ஒரு நேர்ந்துவிட்ட எறும்பு இவன். யார் எதிரி, யார் நண்பர் என்றே தெரியாத குழப்பங்கள் நிறைந்த காலம் அது. எதற்காகப் போராடுகிறோம், யாரை எதிர்த்துப் போராடுகிறோம், யாரால் கொல்லப்படுவோம் என்று எதுவும் எவருக்குமே புரிவதில்லை. கொலையைச் செய்பவருக்கும் ஏன் அதனைச் செய்கிறோம் என்று தெரிவதில்லை. போராடப்போன அற்புதம் தமிழ்நாட்டிற்கும் போய், அங்கே போராளிக்குழுக்களால் தேடப்பட்டு, ஒரு கொலை முயற்சியில் நூலிழையில் தப்பித்து, மீண்டும் ஈழத்துக்குத் திரும்பி, முள்ளிக்குளத்திலிருக்கும் புளொட் முகாமில் தஞ்சமடைகிறான். அங்கே டம்பிங் கண்ணனை மீண்டும் காண்கிறான். டம்பிங் கண்ணன் வேறு யாருமல்லன். அவன்தான் அற்புதத்தையும் சப்பறத்தையும் பட்டுக்கோட்டை பண்ணையார் வீட்டில் சுட்டுக்கொல்ல முயன்றவன். இத்தனை காலத்துக்குப் பின்னர் அற்புதத்தைக் காண்கையில் அவனால் சந்தோசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. டம்பிங் கண்ணன் அற்புதத்தை ஆரத்தழுவி வரவேற்றபடியே சொல்லுவான்.


“மச்சான், சப்பறத்தையும் பண்ணையாரையும் சுட்டுத்தள்ளிவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோதுதான், உன்னைச் சுட மறந்துவிட்டேன் என்பது ஞாபகம் வந்தது”


இதனைத்தான் ‘காலம் ஒரு அம்மா அல்லவா?’ என்று அருள்குமரன் பின்னரொருமுறை அற்புதத்திடம் சொல்லுவான். அற்புதத்தைக் காணும்போதெல்லாம் அருள்குமரனுள் எழும் பாசமும் குற்ற உணர்ச்சியும் நமக்கும் ஏனோ மேலெழுகிறது. அற்புதங்களை ஒத்த மனிதர்களை நம் நிலமும், மனிதரும், காலமும் உயிரோடு குப்பைக்கிடங்கில் போட்டு மூடிவிட்டன என்றே தோன்றுகிறது. யாரோ ஒரு வயோதிப யூதத் தம்பதியின் கரிசனையால் அனெக்ஸ் என்ற பேரில் ஒரு கிடங்குக்குள் தன் எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்க அற்புதம் தயாராகிறார். எப்போதேனும் வழியில் எதிர்கொள்ளும் அருள்குமரன்களுக்கு தன் கதைகளைச் சொல்லி ஆசுவாசப்படுகிறார். நஜிபுல்லாவைப்போல, அருள்குமரனைப்போல அற்புதமும் ஒருநாள் அந்த அந்த ‘மோர்கார்த்தேன் சமர்’ நினைவாலயத்தில் ஏறத்தான் போகிறார். பலமுறை தடுக்கி விழுந்து மனம்மாறி இடைநடுவில் அவர் திரும்பி வருவார். ஒருநாள் முழுத்தைரியத்துடன் தனக்கான குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு உச்சியிலிருந்து குதிக்க முயற்சிக்கும்போது காவல்துறையால் தடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்படவுங்கூடும். ஏனெனில் அற்புதங்களுக்குத் தற்கொலை செய்யும் உரிமையைக்கூட இந்த உலகம் கொடுத்துவிடப்போவதில்லை.


அஷேராவின் பெண்கள். அருள்குமரனின் அம்மா. அமலி. அபர்ணா. அவந்தி, ஆராதனா எனப் பலரும் இதில் உண்டு. அருள்குமரனுக்குப் பல வார்த்தைகளின் அர்த்தங்களைக் கொடுத்துச்சென்ற பெண்கள் இவர்கள். நிம்மதி என்ற வார்த்தையோடு எப்போதுமே சஞ்சலமும் கூடவே வந்து சேரும் என்று அவனுடைய அம்மா அவனுக்கு உணர்த்திப்போனார். ‘குரூரம்’ என்ற சொல் நிலையாக அவனுள் தேங்கிப்போனதும் அப்போதுதான். ‘நிச்சலனம்’ என்ற அற்புத சொல்லை ஆராதனா அவனுக்குச் சொல்லிக்கொடுத்தாள். ஆராதனா அவனது கனவு. அமலி அந்தக் கனவின் நிகழ் வடிகால். அபர்ணாவோடுதான் இவன் தன் அந்தரங்கங்கள் அத்தனையையும் அசைபோட்டான். அபர்ணா எப்படியாவது அவன் விழுந்து கிடந்த பாதாளப் புதைகுழியிலிருந்து வெளியே மீட்டுவிடுவாள் என்று அருள்குமரன் உள்ளூர நம்பியிருக்ககூடும். அகிலனின் ‘பாவை விளக்கு’ நாவலில் வருகின்ற தணிகாசலம் இங்கே ஞாபகத்துக்கு வந்துபோவதைத் தவிர்க்கமுடியவில்லை. ‘பாவை விளக்கு’ நாவலில் வரும் பெண்களின் இருத்தலியல் மறுவாசிப்பாகவே அஷேராவின் பெண்கள் வந்துபோகிறார்கள். ஆனால் இங்கே வெறுமனே பாவை விளக்குகளாக பெண்கள் இல்லாமல் அவர்களுக்கென்று எண்ணங்களும் நியாயங்களும் அவற்றுக்கான கற்பிதங்களும் முன்முடிவுகள் இன்றி வைக்கப்படுகின்றன. பெண்களைப்பற்றிய குறிப்புகளின்போது அருள்குமரன் சற்று விலகியே நிற்கிறான். அவர்களின் கதைகளை அவர்களே சொல்லிவிடட்டும் என்று அவன் நினைக்கிறான். ஆராதனா நீங்கலாக. ஏனெனில் அவள் வேறு யாருமல்லள். ஆராதனா அவன் மனதில் எழுப்பியிருந்த இலட்சியப் பெண். அவள் ஒரு பெருங்கனவு. அதனாலேயே அவள் வந்த தடம் தெரியாமலேயே அவன் வாழ்க்கையிலிருந்து மறைந்தும் போகிறாள். அவனும் அவள் என்னானாள் என்று அறிய முயற்சி செய்யவுமில்லை.
நாவலில் வருகின்ற அவந்தி எனும் புலிப்போராளியைப் பற்றிய குறிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சலனங்கள் ஏராளம். ஒரு பெரு நதியில் அடிபட்டுச் செல்லும் சருகுபோல அவந்தியின் வாழ்வு ஈழம் முழுதும் இழுபடுகிறது. ஒரு சிங்களத்தியாக இனங்கானப்பட்டு, பெண்புலிகள்மீதான ஈர்ப்பில் இயக்கத்தில் இணைந்து, கரும்புலியாகி, பின்னர் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியாக செயற்பட முனைந்து, ஈற்றில் பண்டார வன்னியனுக்குப் பதிலாக அவளுடைய அத்தம்மா சொன்னதைப்போலவே ஒரு நவீன பராக்கிரமபாகுவாக ஓட்டோக்காரனான பிரியந்த வந்து அவளை மீட்டுப்போகிறான். அதை அறியும்போது நமக்குள் ஒரு பெரு நிம்மதி வந்து சேர்கிறது. இந்த ஒரு உயிராவது இந்தச் சாக்கடையில் வீழ்ந்து உயிரை மாய்க்காது தப்பியதே என்று ஆறுதல் கொள்ளவைக்கிறது. அதே கணம் அவள் இன்னொரு அபர்ணாவாக எங்காவது ஒரு தென்னிலங்கைக் கிராமத்தில் வாழ்ந்து கழிக்கிறாளோ என்கின்ற அச்சமும் வரத் தவறவில்லை.
நிம்மதி என்ற வார்த்தையோடு சஞ்சலமும் எப்போதும் இணைந்திருக்கும் அல்லவா?
தமிழ்நாட்டிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்வானது ‘ஒரு மரத்தில் கட்டி வைத்த நாயைப் போன்ற வாழ்க்கை’ என்று நாவலில் ஒரு குறிப்பு இருக்கும். அஷேராவின் மனிதர்கள் எல்லோருமே போர் எனும் மரத்தில் கட்டி வைத்த நாய்களைப்போலவே இழுபடுகிறார்கள். அவரவர் கயிறுகளின் நீளங்கள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் அவர்கள் விரும்பினாலுமே போர் அவர்களை இலகுவில் விட்டுவிடுவதில்லை. குண்டுவெடிப்பைப் பற்றியே அதிகம் அறியாத அபர்ணாகூட அகதியாகத்தான் சுவிற்சலாந்துக்கு வருகிறாள். அருள்குமரன் காணும் மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் எங்கோ நிகழ்ந்த போர்களால் பாதிக்கப்பட்டவர்களே. இதனாலேயே அஷேராவும் ஈழத்தரப்பிலிருந்து வெளியாகும் இன்னொரு போரிலக்கியம் ஆகிறது. ‘இன்னொரு’ என்று சொன்னதுக்கும் காரணம் உண்டு. அஷேரா நாவலை போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து தோன்றிய, ஆனால் போரினின்று விலகிய, புலம்பெயர் மனிதர்களின் வாழ்வை, பெண்களின் வாழ்வை, மனப் பிறழ்வுகளைப் பிரதானமாகப் பேசுகின்ற ஒரு பிரதியாக முன்னிறுத்தும் பல விமர்சன முயற்சிகள் நிகழக்கூடும். ஆனால் அது ஒரு தவறான கற்பிதமாகவே தோன்றுகிறது. முதலில் இதுவும் போரைப்பற்றிப் பேசுகின்ற நாவல்தான். எண்பதுகளின் அற்புதம், அருள்குமரன், அவந்தி போன்றோரின் போராட்ட அனுபவங்களை விலத்திவிட்டுப் பார்த்தால் அஷேராவில் எஞ்சும் பக்கங்கள் சிலவே. அதேசமயம் சுவிற்சலாந்தில் நிகழும் அபர்ணா, அற்புதம் போன்றோரின் கதைகளும் ஈழத்தமிழ் இலக்கியத்துக்குப் புதியவை அல்ல. ஏலவே போராளிக்குழுக்களின் உள்பூசல்களையும் கொலைக் கலாச்சாரத்தையும் அதனின்று தப்பியவர்களின் மனப்பிறழ்வுகளையும் சோபா சக்தியின் ‘ம்’ நாவல் பேசியிருக்கிறது. அந்த நாவலில் வருகின்ற நேசகுமாரனை அஷேராவின் அற்புதத்தில் அதிகமாகவே நாம் காணமுடியும். சோபா சக்தியுடைய சமீபத்திய ‘இச்சா’ நாவலின் ஆலாவையும் அபர்ணாவிடம் கொஞ்சம் காணமுடிகிறது. ஆலாவைத் திருமணம் முடித்து ஐரோப்பாவுக்கு அழைத்து வருபவனுக்கும் அபர்ணாவின் கணவன் அரங்கனுக்குமிடையேகூட அதிகம் வேறுபாடுகள் இல்லை. போதாக்குறைக்கு சயந்தனுடைய ஆறாவடு நாவலின் எச்சங்களும் அஷேராவில் இருக்கிறது. அஷேராவின் அற்புத மொழியாளுகை வேண்டுமானால் அதன் மனிதர்களைப் பிறிதொரு பரிமாணத்துக்குக் கொண்டுசெல்லலாம். பெண்களுக்கான மனப்போராட்டங்களுக்கும் சிக்கல்களுக்குமான ஒரு வெளியை அஷேரா அனுமதிக்கிறது என்பது உண்மைதான். ஆயினும் அவை என்னவோ நாவலின் உப களங்கள் மாத்திரமே. ஆதார நூல் பேசுவது போரில் நசுங்கிச் சிதறுண்ட எறும்புகளின் கதைகளையே.


அதனாலேயே அஷேராவும் இன்னொரு ஈழத்துப் போரிலக்கியமாக ஆகிவிடுகிறது.
இங்குதான் இவ்வகைப் போரிலக்கியங்கள் பேசுகின்ற அரசியலையும் குறிப்பிடவேண்டியிருக்கிறது. ஈழப்போரிலக்கியம் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்கின்ற ஒருவித ஸ்டீரியோடைப் இங்கு விதைக்கப்பட்டுவிட்டது. அது பல புலம்பெயர் இலக்கியவாதிகளால் முன்மொழியப்பட்டு பற்பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல இலக்கியவாதிகளால் வழிமொழியப்பட்டும் விட்டது. அவையே இங்கே பலரால் பெரிதும் கவனிக்கப்படுகிறது. கவனிக்கப்படுவதால் அவையே தொடர்ந்து எழுதப்படவும் செய்கிறது. இது ஒரு சுழல். அவ்வகை எழுத்துகளில் எண்பதுகளில் முரண்பட்ட போராளிக்குழுக்களின் கதைகள் இருக்கவேண்டும். அதிலும் புலிகள் அல்லாத குழுக்களின் பார்வையில் கதைகள் நகரவேண்டும். சகோதரப் படுகொலைகளும் தமிழ்நாட்டில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றே ஆகவேண்டும். நடு நடுவே இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களையும் குறிப்பிடலாம். ஆரம்பத்தில் புலிகள் மீதான ஒரு கொண்டாட்ட மனநிலை தோற்றுவிக்கப்பட்டுப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கெதிரான ஒரு விமர்சனப்போக்கு முன்னிலைப்படுத்தப்படவேண்டும். முடிந்தால் புலிகளின் அநியாயங்களைப் பூதாகரப்படுத்தினால் நன்று. ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் புலிகள்மீதும் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டம் மீதும் ஏதேனும் ஒரு மென்போக்கு இருந்தால் அது தவறு என்பதை நிறுவுதல்வேண்டும். புலிகள் செய்யாத வன்முறையா? என்ற எள்ளல் மொழியும் வேண்டும். நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்வது காலத்தின் கட்டாயம் என்று அதற்கு விளக்கம் கொடுத்துவிடலாம். நாம் நமக்கிடையே சண்டையிட்டு, சகோதரப்படுகொலைகள் செய்து, தவறான போரைத் தவறான மனிதர்கள்மீது ஏவியதாலேயே தோற்றோம் என்கின்ற ஒரு உய்த்தறிதல் முத்தாய்ப்பாய் அங்கே வைக்கப்படும். சோபா சக்தி தொடக்கிவைத்த ஆட்டம் இது. தமிழ்நாட்டின் தீவிர இலக்கியவாதிகள் மத்தியில் இந்தக் களம் நன்றாக விலைபோக ஆரம்பிக்கவே அடுக்கடுக்காக இப்படிப்பட்ட போரிலக்கியங்கள் வந்து குவியத்தொடங்கின. பொதுவாக அவை புலம்பெயர் தமிழர்களிடையே இருந்துதான் ஆரம்பத்தில் தோன்றியிருக்கவேண்டும். குரலற்றவர்களின் குரல்கள் என்று சொல்லிச் சொல்லி விளிம்புகளைப் பற்றியே பேசிப் பேசி அவற்றை அதிகார மையமாக்கி முன்னைய மையத்தை விளிம்பில் தள்ளிவிடும் அரசியல் இது. சயந்தனும்கூட விரும்பியோ விரும்பாமலோ இந்தக் குழியிலேயே இன்னமும் வீழுந்து கிடப்பதுபோலவே தோன்றுகிறது.


இவ்வகை இலக்கியப்பிரதிகள்மீதும் அவற்றைக் கேள்விகள் இன்றிக் கொண்டாடும் ஒரு தீவிர இலக்கிய வாசக வெளிமீதும் எதிர் விமர்சனம் வைத்தே ஆகவேண்டியிருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு தம் சொந்த மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் ஏதிலிகளாக ஈழத்தமிழர்கள் அல்லற்படுவதற்கும் பிரதான மூல காரணம் சிங்களப் பேரினவாதமும் அதன் ஒடுக்குமுறையும்தான். அதனைப் பதிவு செய்யாமல் விடுவதன் நோக்கம்தான் என்ன? அப்படியொன்றும் தீவிர இலக்கிய வெளியில் அவை விரிவாகவும் பரவலாகவும் பதிவுசெய்யப்படவுமில்லை. ஆனால் சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தமிழர் பயன்படுத்திய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் காரணங்கள் ஆராயப்படாமல், அவை மழுங்கடிக்கப்பட்டு ஏனைய எல்லாமே இங்கே பேசப்படுகின்றன. இப்போது வெளியாகும் போரிலக்கியங்களை மாத்திரம் ஈழ இலக்கியமாக வாசிக்கும் ஒரு வாசகருக்கு ஈழப் பிரச்சனையின் ஆதார காரணங்கள் தெரியப்போவதில்லை. ஒரு தேவையற்ற போராட்டம் தேவையற்ற முறையில் அதிகாரப் பாசிஸ புலிகளாலும் சகோதரப் படுகொலைகளாலும் தோற்றது என்ற எண்ணப்பாட்டை மாத்திரமே அந்த வாசகர் அடையக்கூடும். அஷேரா ஒரு படி அதிகம்போய் புலிகள் கொழும்பில் செய்த குண்டுவெடிப்பில் இறந்த பள்ளிச்சிறுவர்களைப் பற்றி விலாவாரியாக பேசுகிறது. நாவலின் எங்கோ ஒரு மூலையில் செஞ்சோலை சிறுவர் நிலையக் குண்டுத்தாகுதலும் ஓரிரு வரிகளில் கடந்துபோகிறது. இதுதான் இங்கே சிக்கல். போராட்டம் ஏன் தோற்றது என்றும் எண்பதுகளின் போராளிக்குழுக்களின் உட்பூசலைப் பேசுவதிலும் தவறில்லை. புலிகளின் அட்டூழியங்களும் யுத்தக்குற்றங்களும் பதிவு செய்யப்படவேண்டியதுதான். அவை ஏற்படுத்திய பேரதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மன அழுத்தங்களை எழுதுவதும் முக்கியமானதுதான். ஆனால் அவை மட்டுமே முன்னிறுத்தப்படுவதன் ஆபத்து அதீதமானது. அதனிலும் மோசமானது எல்லாக்குற்றங்களுக்குமான ஒரு போலிச் சமநிலையை நடுவுநிலைமை என்ற போர்வையின்பேரில் ஏற்படுத்திச்செல்வது.


இலங்கை அரசு செய்த யுத்தங்குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்கும் பத்து வருடங்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துளி நீதிகூடக் கிடைக்காத சூழலில், தம் சொந்த மண்ணில் தாம் இழந்த சொந்தங்களை நினைவுகூருவதற்காக எழுப்பியிருந்த ஒரு சிறிய நினைவுத்தூபியைக்கூட நொறுக்கித்தள்ளும் ஒரு பிசாசு இராணுவ ஆட்சி தொடரும் தேசத்தில், தம் முன்னாலே பிடித்துச்செல்லப்பட்டச் சொந்தங்களைத் தேடித் தேடித் தொடர்ந்து போராடி அயர்ந்து போய்க்கிடக்கும் மனிதர் உள்ள தேசத்தில், தம் உறவுகளின் இறந்த உடல்களைப் புதைக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையிருக்கும் நாட்டில், தம் சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு ஆண்டுக்கணக்கில் தொடர் போராட்டம் செய்யும் மக்கள்கூட்டத்தின் மத்தியில், தம் தொன்மங்களில் சிங்களப் பௌத்த காவியை விரித்து இராணுவப் பிரசன்னத்தோடு தொல்பொருள் ஆதாரங்களை மாற்றும் ஒரு காலகட்டத்தில், தம் குடும்பங்களைப் பிரிந்து படகுகளில் தப்பியோடி அடைக்கலம் தேடிவந்த நாடுகளில் வாழ அனுமதியின்றி சிறைப்பட்டு, தம் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆவதை செல்பேசித் திரைகளில் பார்த்து பெருமூச்சு விடுகின்ற தமிழ் அகதிகள் சூழ் இவ் உலகத்தில் ஈழப்போர் இலக்கியங்களாக நாம் திரும்பத் திரும்ப அந்த ஒரே சோற்றைப் பற்பல வடிவங்களில் கொடுத்து அடையப்போவதுதான் என்ன? மொழியின் அபரிமிதமான எல்லைகளையும் கற்பனைத் திறனால் புதிய எழுத்துவடிவங்களையும் தொடக்கூடிய சயந்தன் போன்ற எழுத்தாளர்கள் திரும்பத் திரும்ப எண்பதுகளின் பூசல்களையே சிருட்டித்துக்கொண்டிருப்பது அயர்ச்சியையே ஏற்படுகிறது.


அஷேராவில் சொல்லாமல் விடப்பட்ட கதைகளே என்னை இன்னமும் நெருடிக்கொண்டிருக்கின்றன. அவந்தியும் பிரியந்தவும் எங்கோ ஒரு சிங்களக் கிராமத்தில் வாழக்கூடிய வாழ்க்கையில் ஒரு நாவல் விரியக்கண்டேன். அவந்தி அவ்வப்போது நிலாமதியோடு தான் பேசிய பராக்கிரமபாகு பற்றிய உரையாடல்களின் அபத்தங்களை எண்ணிப்பார்ப்பாள் அல்லவா? தன் கதைகளை அவள் குழந்தைகளுக்குச் சொல்வாளா? அல்லது அவளது இரகசியங்கள் அப்படியே புதைந்து போகுமா? அபர்ணாவும் அரங்கனும் என்னானார்கள்? அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து வாழ்வின் அன்றாடங்களுக்கு இசைவாக்கப்பட்டுவிடுவார்களா? அல்லது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒருநாள் மீண்டும் பெண்களுக்கான அவசர உதவி நிலையத்தில் அவள் போய் நிற்பாளா? இம்முறை அந்த நிலமும் மொழியும் ஏற்படுத்தியிருக்கும் பரிச்சயங்கள் அவளுக்குத் தனியாக வாழக்கூடிய தைரியத்தைக் கொடுத்திருக்கலாம் அல்லவா? அருள்குமரன் அவளுக்கு வெறும் ஞாபகமாக வந்துபோவானா? அற்புதத்தின் குறிப்புகளில் அவன் இருப்பானா? அமலி̀ அவனை மறந்திருப்பாள் அல்லவா? சரவணபவனுக்கு இறுதிக்காலத்தில்கூட அருள்குமரனின் அம்மாவின் நினைவுகள் வந்திருக்குமோ தெரியாது. அற்புதம் தற்கொலைக்கான கணங்களைத் தாண்டிவிடவேணுமே என்று உள்ளம் பதைபதைக்கிறது. அல்லது அவர் மரணமேனும் அதிக துன்பங்களின்றி நிகழட்டும்.


அந்த ராக்கினி மாதா இவர்களுக்குத் தன் குருதியைக் கொடுத்து இரட்சிப்பாளாக. சர்ப்பங்கள் கேசத்தினின்றும் இறங்கிச்செல்லட்டும். அஷேராவின் மடிக்குருதி எல்லாம் பாலாகட்டும். அவள் முலைப்பாலூட்டும் அந்த முப்பத்தெட்டுக் குழந்தைகளும் அந்தப் பாலைக் குடித்துக் களித்த அயர்ச்சியில் நிம்மதியாகத் தூங்கட்டும்.


அவர்களது நிம்மதியிலாவது சஞ்சலம், குரூரம் என்ற வார்த்தைகள் அண்டாதிருக்கட்டும்.

By

Read More

அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் சயந்தனின்  ஐந்தாவது நூலும்  மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது  சிறுகதைத் தொகுப்பான அர்த்தம்,  நாவல்களான ஆறாவடு, ஆதிரை  ஆகிய நூல்களை  நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு  நாவலைத் தவிர, மற்றைய நூல்கள் பற்றி ஏதாவது குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. இப்போது,  இந்த நூல் பற்றி. மீண்டும் கலைமுகத்தின்  இதே பத்தியில் எழுதும் சந்தர்ப்பம் வந்தபோது முன்பு எழுதியது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நூலை வாசித்தபோது, அது என்னுள் ஏற்படுத்திய அதிர்வும், அதன் கதை சொல்லும் அழகும், அவரை ஒரு நல்ல கதை சொல்லியாக அடையாளம் காட்டின. அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயங்களும் ஒவ்வொன்றும்  தனித்தனியே நல்ல சிறுகதைகளாக அமைந்திருப்பதாகவும்,  அதேவேளை ஒரு நாவலுக்கேற்ற வகையில் வகையில் சீராக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றும் எழுதியிருந்தேன். அவருடைய நூலையும், யோ.கர்ணனினது நூலையும் அடிப்படையாக வைத்து எழுதிய அந்தக் குறிப்பில், அவர்கள் இருவரது அனுபவமும் ,அறிவுடன் இணைய,  தேடலும் விரிவடையும் என்றும் அப்போது அந்த விரிவு இரண்டு அற்புதமான படைப்பாளிகளை நமக்கு  உருவாக்கித் தரும் என்றும் எழுதினேன். எனது அந்த நம்பிக்கை, நான் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே சிறப்பாக நிறைவேறியிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக  அமைந்திருக்கிறது சயந்தனின் இந்த நாவல் ஆஷேரா.

சயந்தனின் கதை சொல்லும் முறையும், கதை சொல்லும் மொழியும்  அவரது தனித்துவமான முத்திரைகள். அவரது கதா மாந்தர்களை வைத்து அவர் கதை சொல்லவில்லை. அந்தக் கதா மாந்தர்கள் இரத்தமும் சதையுமான தமது சுயத்துடன் எங்கள் முன் நடமாடுகிறார்கள். வாழ்வின் நியாயங்கள், அவை பற்றி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள், அவற்றைப் பேணுதலும் மீறுதலும் பற்றிய நியாயங்கள், ஆசாபாசங்கள் என்று அவர்கள் எதையும் எங்கள் முன் ஒளித்துவைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் மிக எளிமையும், நட்புணர்வும், கோபமும், இயல்பான நகைச்சுவையும் கொண்ட சாதாரண மனிதர்கள். பெரிதும் உணர்வுகளால் வழிநடத்தப்படுபவர்கள். கழிவிரக்கத்தில் தவிப்பவர்கள். யுத்தம் ஏற்படுத்திய, இயல்பான அமைதி அறுந்துபோன வாழ்வியல் நெருக்கடியின் சுமையை தம் மனதின் அடியாளத்தில் சுமந்தபடி பெரும் அலைக்கழிவுடன் நடமாடுகிறவர்கள். இந்த நாவல் ஒரு  பெருங்கதையல்ல; ஒரு குடும்பத்தின் அல்லது குழுமத்தின் வரலாறு அல்ல; அல்லது சில இலட்சிய கதைமாந்தர்கள் பற்றிய புனைவும் அல்ல. இது ஒரு தேசத்தின் பெரும் யுத்த காலகட்டத்தில் வாழ்ந்து சிதறுண்ட, தம்முள் ஏதோ ஒருவகையில் தொடர்புள்ள, ஒரு சில மாந்தர்களை, அவர்களின் அவலங்களை, அலைக்கழிவுகளைப் பேசுகின்ற ஒரு சமூகத்தின் கதை. அந்தவகையில் அது யுத்த பூமியிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் சுவிஸ் நாடு வரையான பல விதமான ஒன்றுடனொன்று மாறுபட்ட சூழ்நிலைகளில் அந்த மாந்தர்கள் வாழ்வதற்காக நடாத்தும்- தாம்  விரும்பாமலே பெரும் மலையாக அவர்கள் முதுகில் அழுத்திக் கொண்டிருக்கும் கடந்தகால துயரச் சுமைகள் ஏற்படுத்தும்  மன அழுத்தங்களுடன்  நடாத்தும்-  போராட்டங்களுடனான வாழ்வு பற்றிய சித்திரம் இது.

யுத்தத்தின் பின்னான  காலத்தில் புலம்பெயர் தேசங்களில் இருக்கும் படைப்பாளிகளால் எழுதப்பட்ட நாவல்களின்  இரண்டாம் கட்ட நாவலாக இதைக் கூறலாம். புலம்பெயர்ந்து வந்தபோதும், அவர்களால் இன்னமும் புலம்பெயர்ந்த நாடுகளுக்குரிய மனிதர்களாக வாழ முடியாமல், அதற்காகத் தம்மைத் தகவமைக்கும் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காக, தம்மைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் புலத்து நினைவுகளுடன் போராடுகின்ற, அடுத்தகட்ட வாழ்வின் ஆரம்பக் கால கட்டத்தையும் அதன் சவால்களையும் பேசுகின்றது இந்த நாவல்.

சயந்தனது மொழி மிகவும் இயல்பானது, காட்சிகளால் கதையை நகர்த்துவது. கதை நடக்கும் ஒவ்வொரு புள்ளியும் மிகத்துல்லியமான  காட்சியாக விரியும் சிறப்பான காட்சிப்படுத்துதலைக் கொண்டது. பாத்திரங்களின் உருவங்கள், குணாதிசயங்கள், அவர்களது நடத்தைகள் அவர்களது நினைவோட்டங்கள் போன்ற அனைத்தையும்  காட்சிகளாகவே விரித்துக் காட்டுகின்ற மொழி.

இந்த நாவல் குறிப்பாக எந்தக் கதையையும் சொல்லவில்லை, எந்த வரலாற்றையும் கூறவில்லை, எந்த கதைசொல்லல் உத்திகளிலோ அல்லது திருப்பங்களிலோ அது தங்கியிருக்கவில்லை. அது நம்முன் யுத்த கால சூழலில் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு அலைந்த மனிதர்கள் சிலரின் வாழ்க்கையை மையாமாகக் கொண்டு  ஒரு இரண்டு தசாப்தகாலத்திய அவர்களது  வாழ்க்கையை எம்முன் திறந்து காட்டியிருக்கிறது. அருள்குமரன்,அற்புதம், அபர்ணா, அவந்தி, ( சயந்தனுக்கு இந்த அ’ வரிசையில் என்ன ஒரு விருப்போ புரியவில்லை)  என்று நீளும் பாத்திரங்கள், வரலாற்றுச் சம்பவங்கள், அவர்கள் இயங்கிய பிரதேசங்கள், குறிப்பான வாழ்விடங்கள் என்று எல்லாம் இந்த வரலாற்றை விரித்துக்காட்டும் வெவ்வேறு அடையாளப் புள்ளிகள்.

இந்த நாவல் பற்றி இதுவரை பல வாசிப்பனுபவக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.  பல்வேறு கோணங்களிலும் ஒரு பரவலான விரிவான உரையாடலுக்கு உரிய ஒரு நாவல் இது என்ற முறையில் இன்னும் பலவும் எழுதப்படக் கூடும். எழுதப்பட வேண்டும். காலம் கடந்து வாழும் ஒரு நாவலுக்கான அனைத்துச் சிறப்புகளையும் கொண்ட ஒரு நாவல் இது.

இது ஒரு அறிமுகக் குறிப்பு என்ற விதத்தில் இப்போதைக்கு இவ்வளவு போதும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நாவல். வாழ்த்துக்கள் சயந்தனுக்கு!

By

Read More

அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்

சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம் நோக்க வேண்டும். அதே சமயம் நாவலின் நகர்வு ஈழப்போரின் தாக்கத்தின் விளைவுகளை மீட்டிச் சென்றதையும் கொஞ்சம் கவனிக்கவே வேண்டும். இலங்கையில் வாழ்பவர்களும், புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் தமது படைப்புகளில் ஈழப் போர் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த பதிவுகளை வலிந்து சேர்த்துக் கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியாதுள்ளது. இதனை பல வாசிப்பினூடாக உணர்ந்து கொண்டுள்ளேன். இதில் ஏதும் அரசியல் நோக்கங்களோ அல்லது இலாப நோக்கங்களோ இருக்கக் கூடும் என்ற பலரது கருத்துக்களை செவிமடுத்திருந்த போதும் அவ்வாறாக வெளி வரும் படைப்புகளை வாசிக்கத் தவறுவதில்லை. வாசிக்கக் கிடைத்த புலம்பெயர் இலக்கியவாதிகளின் படைப்புகளில் அதிக நெருக்கம் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு பெரும்பாலான புலம்பெயர் தேசத்து இலங்கை வாசிகள் யுத்தத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுச் சென்றதன் தாக்கமாகக் கூட இருக்கலாம். ஒரு வகையில் நோக்கும் போது பிறந்த இடம், இயக்கங்களின் சம்பந்தம், இடம்பெயர்ந்த வழி, நெஞ்சோரம் பட்ட வலி என அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றே தோன்றியது. அனுபவங்களை புனைவுகளுடன் இணைத்து நாவலாக உருவேற்றும் போது அதில் சுவாரஸ்யமான பல அடுக்குகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அவற்றை ஒழுங்கமைத்து கொண்டு செல்லும் யுக்தியே படைப்பை நிலைக்கச் செய்கிறது எனலாம்.

அந்தவகையில் சயந்தனின் அஷேரா பல விடயங்களை முன்வைத்து புனையப்பட்டுள்ளது. இயக்கங்களின் தோற்றமும் நோக்கமும் ஒன்றாக ஒரே காலத்துடன் இருந்தாலும் அவை பயணித்த பாதைகளும் பயன்படுத்திய யுக்திகளும் வெவ்வேறானவை. ஒவ்வொரு போராட்டங்களிலும் நாம் பார்ப்பது இத்தகைய உட்பூசல்களும், கருத்து முரண்பாடுகளும்,யார் கை ஓங்கி நிற்றல் என்ற எண்ணப்பாடுமேயாகும். முப்பது வருடங்களுக்கு முன்னர் தமிழீழத்தை பெற எத்தனையோ இயக்கங்கள் தோன்றிய போதும் அதனைப் பெற முடியாததற்கான காரணம் அபத்தமானது. அதை நினைத்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? என்று தெரியவில்லை. அதேவேளை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களும் உட்பூசல்களும் ஒருகட்டத்தில் சொந்த இனத்தையும் சகோதரங்களையும் கொலை செய்யும் அளவில் வன்முறையையும், வக்கிரத்தையும் விதைத்துச் சென்றமையைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

பேரினவாத சிங்கள இராணுவம் கொன்ற தமிழ் மக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இயக்கங்களின் பெயரில் நடைபெற்ற கொலைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மன்னிக்க முடியாத ஈனச் செயலாகவே அவை பார்க்கப் பட வேண்டியது.

டொமினிக் ஜீவா ஒரு பேட்டியில் இயக்கங்கள் குறித்தான கேள்வியின் போது” சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” எனச் சொன்னதாக எங்கோ படித்த நினைவு. ஒவ்வொரு படைப்புகளிலும் இயக்கங்கள் குறித்தான ஒரு சில பதிவுகளை வாசிக்கின்ற போது அவர் சொன்னது என் நினைவில் வந்து போவது தற்செயலான செயலாகத் தெரியவில்லை. ஒரு சமயம் தமிழ் ஈழத்தாகம் நம் இளைஞர்களை வன்முறையாளர்களாக உருவாக்கி விட்டதோ என்றும், சகோதரத்துவத்தை பலி கொடுத்து விட்டதோ என்றும், பல இளைஞர்களின் எதிர்காலத்தை புலம் பெயர் தேசங்களில் அநாதரவாகக் கைவிட்டதோ என்றும் தோன்றியது.

இந்நாவலில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் ஈழப் போரின் தாக்கத்திற்கு உட்பட்டிருப்பதைக் காணலாம். இயக்கங்கள் உருவாக உதவிய புலமே பின்னர் இயக்கத்தில் இருந்தவர்களுக்கும், இயக்கத்தில் இருந்து தலைமறைவாக வாழ விரும்பியவர்களுக்கும், அகதி அந்தஸ்த்துக் கொடுத்து வாழ வழிசெய்தது. மண் சொந்தமானால் பல இன்னல்கள் விலகும் எனக் கனவு கண்டவர்கள் கூட சொந்த மண்ணில் வாழ முடியாது போன சாபக்கேட்டை நினைக்கையில் மனம் கொஞ்சம் கனக்கத்தான் செய்தது. சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞன் தமிழ் ஈழம் மலர்ந்தால் சீதனம் கொடுக்கத் தேவையில்லை என்று தனது இரு அக்காக்களுக்காக இயக்கத்திற்கு வந்திருப்பான். அருள் குமரன் ஒரு பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொண்டு அந்தப் பயத்தில் இயக்கத்தில் சேர்ந்து கொள்வான். இவ்வாறாக அற்ப காரணங்களுடன் இயக்கத்தை நாடியோர் பல அற்புதமான செயல்களை செய்து விட்டு சென்றதையும் இங்கு பதிவு பண்ணியுள்ளார். தாம் இயக்கத்தில் இருந்த நாட்களில் இருந்த இயக்கத்திற்கு விசுவாசமாகவும் அதே வேளை ஏனைய இயக்கத்தவர்களை ஜென்ம விரோதிகளைப் போல கொலை செய்ததையும் நினைத்து குற்றவுணர்வு மேலிட குமுறுபவர்களும், இயக்கச் செயற்பாடுகளில் அசகாய சூரத்தனத்தைக் காட்டியவர்களின் பெருமையையும் அங்கங்கே பதிவிட்ட படி நகர்கிறது நாவல். புலம் பெயர் தேசத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் அருள்குமரனும் அற்புதமும் இலங்கையில் இயக்கத்து உறுப்பினர்களாக சந்தித்திருந்தால் அவர்களில் யார் யாரை கொன்றிருப்பரோ என எண்ணத் தோன்றியது. ஈழத்தில் தொலைத்த சகோதரத்துவத்தை புலத்தில் தேடும் மனிதர்களாக அவர்கள் தெரிந்தார்கள். அதேவேளை, பண்ணையார் போலவும், அடைக்கலம் கொடுத்த கிழவி போலவும் யாராவது தமிழ் ஈழத்தைப் பெற்றுக் கொடுத்தால் போதும் என்று அனைத்து இயக்கத்தவர்களையும் ஆதரித்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தானே. ஈழப்போரின் மற்றுமொரு பரிமாணத்தை இந்நாவல் காட்டிச் செல்கிறது. ஆம், போருக்காக தமது குடும்பம், கடமை, ஆசை, காதல், இளமை, காமம் என அத்தனையையும் விலையாகக் கொடுத்தவர்களின் வாழ்க்கையைத் தான். புலத்தில் தேடிக் களைத்துப் போனவர்களின் சாட்சிகளாக இங்கு அருள்குமரனும் அற்புதமும் உருவப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நாவலின் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே இலட்சிய புருஷர்களாகவோ அல்லது இலக்கிய மாந்தராகவோ இல்லாமல் யதார்த்தங்களுள் ஒன்றிப் போனவர்களாக இருப்பது சிறப்புத்தான் ஆனால் யதார்த்தம் என்ற பெயரில் அளவுக்கதிகமாக தூசணங்களை அள்ளித் தெளித்திருந்தமை கொஞ்சம் சங்கடத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர்கள் தங்களது எழுத்துக்களின் ஊடாக வசவுகளை காவிச் செல்வதை தவிர்க்கலாம் எனத் தோன்றியது. குறிப்பாக பெண்களின் உறுப்புகள், பாலியல் சார்ந்த தூசண வசவுகளை இல்லாதொழிக்க வேண்டும் என்று போராடுபவர்களின் மத்தியில் இவ்விதமாக சிறந்த எழுத்தாளர்களால் எதிர்கால சந்ததியினருக்கு போய்ச் சேர்வதைத் தான் ஏற்க முடியவில்லை. இவ்விதமான எழுத்துக்களை ஆதிரை மற்றும் ஆறாவடு எழுதிய எழுத்தாளரிடம் எதிர்பார்க்காததால் ரொம்பவே வருத்தப்பட்டேன். அத்துடன் அங்கங்கு உவமைப்படுத்தவும் பெண் உறுப்புகள் பயன்படுத்தப்பட்டமையும் வெறுப்பை ஏற்படுத்தின. பெண்களின் உறுப்புகளும், பாலியல் சார் தூசணங்களும் ஒரு சிலருக்கு கிளர்ச்சியைத் தூண்டலாம் அதனால் அவ்விதமான வாசகர்களிலும் இவற்றை வெறுக்கும் வாசகர்கள் அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

அவை தவிர அஷேரா மிக நுணுக்கமாக எழுத்தப்பட்ட யதார்த்தங்களுடன் கூடிய புனைவு. காமம் காதலை விட அதிகம் நுகரப்பட்ட ஒன்று. அதற்கு பால் பேதம் கற்பித்து ஒருவருக்கு ஒரு சட்டம் இயற்றி தண்டிக்கும் இச்சமூகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைய முயற்சித்திருக்கிறார். காமப் பசியை போக்கிக் கொள்ள பெண்கள் தேர்ந்தெடுக்கும் வழி வகைகளையும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் சமூகத்தினால் திணிக்கப்பட்டவையே என்பதை மறுக்க முடியாது. அருள்குமரனின் தாய் இறப்பதற்கு முன் சொன்ன வார்த்தைகளில் தொக்கி நின்ற வாழ வேண்டும் என்ற ஏக்கம் , சமூகத்தின் மீதான பயத்தில் காணாமல் ஆக்கப்பட்டது. அதேவேளை ஆண்கள் தமது உடற்பசிக்கு பெண்களின் இயலாமையையும், போக்கிடமில்லாத நிலையையும், தனித்திருக்கும் சூழலையும் வெகு இலகுவாக பயன்படுத்திக் கொள்வதையும் அதனால் சமூகத்தின் பலிக்கு ஆளாகி அப்பெண் இறந்தாலும் எவ்விதத்திலும் தமக்கு பலி நேராமல் தம்மைக் காத்துக் கொள்வதிலும் கவனமாக இருப்பதை அங்கங்கு குறிப்பிடத் தவறவில்லை.

அனுதாபம் தேடியும் அதிகாரத்தைப் பிரயோகித்தும் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் இந்நாவலில் காணக்கூடியதாக இருந்தது. அற்புதம் தன் காமத்திற்கு இரவில் பெண்களை ஆபாசமாகக் காட்டும் டிவி நிகழ்வுகளையும், ஒரு செம்மறி ஆட்டையும் பயன் படுத்தியதை சாதாரணமாய் எடுத்துக் கொண்ட அருள் குமரனால் அபர்ணாவை புரிந்த கொள்ள முடியவில்லை என்பது சமூக வளர்ப்பு. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் அருள்குமரனை காதலிப்பதாக அபர்ணா சொல்லாத போதும் அவள் தனித்திருப்பதை பயன்படுத்த நினைத்த அருள்குமரனின் ஆண் மனம் அவள் தன் கணவனுடன் சேர்வதை விரும்பாமலும் அதேவேளை கணவனுடன் அவள் சேர்வதை ஒரு தவறான செயலாகவும் ஒவ்வொரு முறையும் அவளை தூசண வார்த்தைகளால் பேசுவதும் அருவருக்க வைத்த செயலாக இருந்தது. கணவனிடம் அடிவாங்காமல் தப்பிக்க அவனது பலவீனமான காமத்தை அவள் பயன்படுத்தியதை அருள்குமரன் கொச்சைப் படுத்திப் பேசியது; தன் கணவனிடம் கூட ஒரு பெண் காமத்தை வெளிப்படுத்துவது தவறு என்பதைத் தானே குறிக்கிறது. அவ்வாறெனில், இவ்வளவு காலமும் அவனது தாயை அவன் நிச்சயமாக தவறானவளாகவே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறான் என்பது உறுதியாகிறது.

இவ்வாறானவர்களால் பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கு மட்டுமேயானது பெண்களுக்கு அது இல்லை என்பதாக சமூகத்தில் கடத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

எந்தவொரு ஆணிடமும் பெண்கள் தமது அந்தரங்கங்களைப் பகிர முடியாது. ஏனெனில் அதன் அர்த்தமும் பொருளும் அவளை அன்றி எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதை அபர்ணா மற்றும் அருள்குமரனின் கலந்துரையாடல் உணர்த்தியது. இயல்பாகவும் அக்கறையுடனும் உரையாடும் பெண்களை தவறாகவும் தம்மீது காதல் வயப்பட்டவர்களாகவும் நினைத்து ஏங்குவதும் பின் அவ்வாறு இல்லை என்றான போது அவர்களை அவதூறாகப் பேசுவதும் இன்றளவும் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

எது எப்படியோ சயந்தனின் நாவல்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. அதே வேளை உச்சபட்ச புனைவுகளைக் கொண்டு இறுதியில் கதையின் கதாபாத்திரத்தில் இருந்து சாமர்த்தியமாக தன்னை விடுவித்துக் கொண்டார்.

By

Read More

× Close