பின்னூட்டங்களும் திரட்டப்படுகின்றன

புளொக்கரில் அதாகப் பட்டது புதிய புளொக்கருக்கு மாறிய பின்னரும் கிளாசிக் வகை வார்ப்புருவையே விடாப்பிடியாக பயன்படுத்தும் இப்பதிவில் பின்னூட்டங்களைத் திரட்டி வெளியிடும் வசதியினை செய்திருக்கின்றேன். எனது பதிவில் பின்னூட்டமிடும் நண்பர்கள், அன்பர்கள், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றம் பெயர்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வலைப் பதிவின் சகல பக்கங்களிலும் காட்சிப் படுத்தப்படும். ( அது தவிர பின்னூட்டங்களில் தனித் தனியவும் நன்றி செலுத்தப்படும். 🙂

இந்த வசதி ஏற்கனவே wordpress சேவையில் உள்ளது. தவிர புதிய புளொக்கரின் புதிய layout முறையிலும் உள்ளதாம்.(சரியாக தெரியாது) கிளாசிக் வார்ப்புருவிலேயே இருந்து கொண்டு ஏற்படுத்திய இரண்டாவது வசதி இது. இதற்கு முதல் லேபிள்கள் மூலம் பதிவுகளை வகைப் படுத்தியிருந்தேன்.

செய்தி ஓடைகளைக் கொண்டு நமது இணைய உலாவியிலேயே புதிய பதிவுகளை மட்டுமல்ல.. புதிய பின்னூட்டங்களையும் உடனுக்குடன் படித்து முடிக்கின்ற வாய்ப்புக்கள் ஏற்படுகின்ற போதும்.. குடுமிச் சண்டை குழாயடிச் சண்டைகள் மட்டுமல்ல.. யுத்தச் 🙂 செய்திகளைப் படிப்பதற்கும் தமிழ்மணத்திற்கு வருவது தான் சுவாரசியம்.

இப்போ கருத்து இட்டவர்கள் என்னும் இப் பின்னூட்டத் திரட்டில் கருத்தெழுதியவரின் பெயரின் மீது கிளிக்குவதனால் மூலப் பதிவுக்கு செல்லலாம். அங்கு உங்கள் பின்னூட்டங்களையும் இடலாம்:)

By

Read More

நம்மைப் பிடித்த …………… போயின..

‘எங்கட பிரண்ட்சிப்பை இப்படித் தப்பா ஏன் விளங்கிக் கொண்டீங்கண்ணு எனக்கு இன்னும் விளங்கேல்லை.. ” சொல்லி விட்டு நிரோஷா திரும்பிப் பார்த்தாள்.

சாரகன் அமைதியாய் நின்றான்.

‘அவசரப்பட்டு விட்டேனோ..இன்னும் கொஞ்சம் காலம் தாழ்த்திக் கேட்டிருக்கலாமோ..” எண்ண அலைகள் உள்ளே மிதந்து கொண்டிருந்தன. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமென முடித்து விட்டு மறந்து விட்டுப்போகின்ற வழமைக்குள்ளேயே சிறு வயது முதல் வளர்ந்த அவனுக்கு காலந்தாழ்த்தல் என்பது சிரமமாயிருந்திருக்க வேண்டும்.

‘ஒண்ணு கேட்டால் சொல்வீங்களா..” நிரோஷா தான் அமைதியைக் குலைத்தாள்.

‘சொல்லுங்க”

‘இதுக்கு நானும் ஏதாவது காரணமாய் இருந்திருக்கேனா..?”

அந்த நேரத்திலும் சாரகனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி இவளால் இப்படி இலகுவாக கேட்க முடிகிறது..

“இருட்டில போகப் பயமாயிருக்கு.. ஒவ்வோர் நாளும் என் கூட வரமுடியுமா..”

“உங்களுக்கென்றதால்த் தான் என் போட்டோஸை நான் காட்டினேன்..

“எப்படி சாறியிலை நான் அழகாயிருக்கேனா..”

“உங்க நம்பர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்றெல்லாம் பேசினாளே.. ஞாபகத்திலேயே இருக்காதா..? சில சமயம் சாதாரணமாய்த்தான் இப்படியெல்லாம் பேசினாளோ..? வேறெந்த எண்ணமும் இல்லாமல் இப்படியெல்லாம் பேசக் கூடாதா..?

ஒரு வேளை நிரோஷா அப்படிப் பேசியிருந்தால்… நான் காரணங்களைச் சொல்ல ச்சீ..நீ இவ்வளவு தானா என்று அவள் நினைக்கக்கூடும்..

கிட்டத்தட்ட சாரகன் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். நினைவுகளில் காலம் பின்னோக்கிப் போனது.

சாரகனின் வீட்டிற்கு இரண்டு மூன்று வீடுகள் தொலைவில்த்தான் நிரோஷா இருந்தாள். சில காலங்களுக்கு முன்னரேயே அவளை அவ்வப்போது சந்திக்க நேர்ந்தாலும் அவன் படித்த வகுப்பிலேயே அவளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் முதன்முதலாய் அவனுக்குள் ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும்.

அதிகாலை நேர வகுப்புக்களுக்கு அவள் செல்லும் போது நேரம் பார்த்திருந்து வீதியில் இறங்கி குட்மோர்ணிங் சொல்லி.. இப்படித்தான் ஆரம்பமானது.. ஆனாலும ஒவ்வொரு நாளும் இப்படிச் சந்திப்பதை அவள் தப்பாக விளங்கிக்கொள்ள மாட்டாளா என்று கவலைப்பட்ட போது தான் அவள் ஒரு நாள் கேட்டாள்..

‘சாரகன்.. காலையில க்ளாசுக்கு போறதுக்கு வீட்டில பயப்பிர்றாங்க.. ஒவ்வொரு நாளும் என் கூட வரமுடியுமா…” சாரகனின் நெஞ்சுக்கூண்டுக்குள் குரங்கொன்று ஜம் என்று வந்து உட்கார்ந்து கொண்டது அப்போது தான்.

வகுப்பை வந்தடையும் வேளைகளில் கூடி நின்று நண்பர் கூட்டம் கேலி பண்ணும். நிரோஷா எரிச்சலடைவாள்.

‘அவங்கள் அப்படித்தான்.. அதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க..” சாரகனின் உதடுகள் உச்சரித்த போதும் மனது நண்பர்களை மானசீகமாய் வாழ்த்தும்.

‘சாரகன் உங்க நம்பர் என்ன..?” ஒரு முறை கேட்ட போது சொன்னான்.

‘வாவ்.. எனக்கு ரொம்பப்பிடிச்ச நம்பர்” என்றவள் கண்களை அகலவிரித்துச் சொன்ன போது நெஞ்சுக் கூண்டுக்குள் உட்கார்ந்து கொண்ட குரங்கு சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தது.

‘நியூமராலஜியில உங்களுக்கு நம்பிக்கை இருக்கா..?” தொடர்ந்து கேட்டாள்.

‘ம்.. நிறைய..”

தொடந்தும் குரங்கின் சேட்டைகள் தொடர்ந்தன. இதனை தொடர வி;ட முடியாது என்ற நிலையில் முடிவு எப்படி இருக்கிறதோ, நினைத்ததை நிகழ்த்தி முடிப்பவன் என்ற அவனுக்குள்ளிருந்த இறுமாந்த நெஞ்சு ஒரு மாலைப்பொழுது அவளிடம் கேட்க வைத்தது.
* * *

‘என்ன சாரகன்.. நானும் ஏதாவது காரணமா..?”

‘இல்லை.. நீங்க காரணமில்லை.. நான் தான்..” சாரகன் அவசரமாய்ச் சொன்னான்.

நிரோஷா சிரித்தாள்..

‘நான் நினைச்சுக் கூடப் பாக்கலை சாராகன்… ஓ.கே.. இப்ப என்ன..? நீங்க கேட்டது கூட நல்லது தான்.. இல்லைன்னா உங்களுக்குத்தான் பிறகு கஸ்ரமாயிருக்கும்.. “

சாரகன் நாக்கு வரண்டு உதடு உலர்ந்து போயிருப்பதாய் உணர்ந்தான்.

இந்த இழப்பு வாழ்வையே அடித்துப் போட்டு சின்னாபின்னமாக்கி விடாது என்று அவனுக்குத் தெரியும்.. இரண்டு வாரமோ மாதமோ பின் மனது வழமைக்குத் திரும்பக்கூடும். அப்புறம் இச்சம்பவம் எப்போதாவது ஞாபகிக்கையில் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக மட்டுமே இருக்கலாம். ஆனால் அதுவரை ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டேயிருக்கும். அது வழமைச் செயல்களைப் பாதிக்க விடக்கூடாது என்று சாரகன் நினைத்துக் கொண்டான்.

‘என்ன சாரகன் பேசாமலிருக்கிறீங்க.. தொடர்ந்தும் நாங்க இப்பிடியே இருக்கலாம் என்று நான் நினைக்கிறன்.. நீங்க என்ன சொல்லுறீங்க..”

சாரகன் மீண்டும் மீண்டும் அமைதியாயிருந்தான்.

ஒரு தலைக் காதல் என்பது உண்மையில் காதல் இல்லை என்கிறார்கள் மனவியலாளர்கள். அது காதல் மீதான ஒரு ஏக்கம் தானாம். காதலோ ஏக்கமோ.. அவ்வளவு தானா.. இது தான் முடிவா..?

வேறு ஏதாவது வகையில் நிரோஷாவுடன் பேசி.. எப்பிடிப் பேசி.. நீங்க இல்லையென்றால் செத்திடுவன்.. வாழ்க்கையே இல்லாமல் போயிடும்.. இப்பிடி ஏதாவது.. அடி செருப்பாலை.. இவ்வளவு தானா நீ என்று இப்போது சாரகன் தன்னையே கேட்டுக்கொண்டான்.

‘தெரியேல்லை.. நிரோஷா.. ஆனா இந்தப் பிரச்சனைக்கு சண்டை பிடிச்சுக்கொண்டு பிரிஞ்சு போறதென்பது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கும். ஆனா அதுக்கு முதல் நான் சில விஷயங்களை மறக்க வேணும். என்னாலை முடியும்.. ” என்று தொடர்ந்தவனை ‘நிறைய அனுபவம் உள்ளவர் மாதிரிச் சொல்லுறிங்க..” என்று குறுக்கிட்டாள் நிரோஷா.. சாரகன் சின்னதாய்ச் சிரித்தான்.

‘அதுக்குப்பிறகு நான் உங்களோடை கதைக்கிறன்.. அது வரை நன்றி வணக்கம்..” கை குவித்துச் சொன்னான்..

‘கீப் இற் அப்..” என்றாள் நிரோஷா

‘உங்கட வாழ்த்தைப் பார்த்தால் ஒவ்வொரு முறையும் உனக்கு உப்படித்தான் நடக்கும். அந்த ஒவ்வொரு முறையும் இப்பிடியே செய் எண்ட மாதிரியெல்லோ இருக்கு..அப்பிடியெதுவும் நடந்தால் உங்களுக்குத்தான் அடியிருக்கு..” இயல்பான உற்சாகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை. ஆனாலும் வலிந்து வரவழைத்துச் சொன்னான்.

இப்போது நிரோஷா பலமாகச் சிரித்தாள்.

‘இந்தச்சிரிப்புத்தானே….” என்றெழுந்த மனதை ‘ச்சே.. சும்மாயிரு..” என்று சாரகன் அடக்கினான்.
* * *

அம்மாவிற்கும் என்னை அலைக்கழித்த பெண்களிற்கும் அர்ப்பணம்.. ராத்திரி நித்திரைக்குப் போகு முன் படித்த புத்தகத்திலிருந்த வசனம் சாரகனின் ஞாபகத்தில் காரணமின்றி வந்து போனது. கூடவே உதட்டோரம் ஒரு சிரிப்பும்.. அவன் புரண்டு படுத்தான்.

முன்பெல்லாம் விடுமுறை நாட்களிலும் அதிகாலை எழும்ப வேண்டியிருக்கும். இப்போது அப்படி இல்லை. பத்து பதினொரு மணிவரை தூங்க முடிகிறது.

தொலைபேசி கிணுகிணுத்தது. அருகிலேயே அது இருந்த போதும் எழுந்து சென்று எடுக்கின்ற அலுப்பில் அவன் படுத்திருந்hன். அம்மா வந்து எடுத்து விட்டு உனக்குத்தான் என்று சொல்ல எரிச்சல் வந்தது. றிசீவரை வாங்கினான்..

‘ஹலோ..”

‘ஹலோ நான் அட்சயா கதைக்கிறன்.. “

சாரகனை விட நாலைந்து வயது இளைய அவள் சில மாதங்களுக்கு முன்னர்தான் அறிமுகமானாள். அவ்வப்போது போன் பண்ணி அவள் அடிக்கும் அரட்டை சில சமயம் எரிச்சலை வரவழைக்கும். சில சமயம் பொழுது போகச்செய்யும். சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசு படுத்திப் பேசுவதும் அடிக்கடி கோபிப்பதும் அவளுக்கு வழமையானவை. ‘சின்ன வயது தானே.. அது தான் அப்படி..” என்று சாரகன் நினைத்துக் கொள்வான்..

‘சொல்லு.. ” தூங்கியெழுந்த சோர்வு அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

‘என்ன நித்திரையை குழப்பிட்டேனா..?”

‘குழப்பிட்டாய்.. இனி என்ன செய்ய முடியும்.. சொல்லு..”

‘உங்கடை பிறந்த நம்பர் என்ன..”

உள்ளிருந்து ஓடிவந்த பதில் சாரகனின் தொண்டைக்குழிக்குள் சுதாகரித்து நின்று கொண்டது. ஏதேதோ சம்பவங்களெல்லாம் ஞாபகத்தில் வந்து போகத்தொடங்கின.

‘ஏன்.. கேட்கிறாய்..”

‘நியூமராலஜி புத்தகம் ஒண்டு கிடைச்சிருக்கு.. அது தான் பார்க்கிறதுக்கு கேட்டனான்… சொல்லுங்கோ.. என்ன நம்பர்..”

‘இல்லை.. எனக்கு அதிலயெல்லாம் நம்பிக்கையில்லை.. ” என்றான் சாரகன்.

‘பரவாயில்லை.. எனக்குச் சொல்லுங்கோ..” அட்சயா விடாது கேட்டாள்..

‘ஏய் முடியாதென்று சொல்லுறனெல்லே.. விடன்..” சாரகன் உண்மையிலேயே கோபப்பட்டான். அவள் சடாரென்று தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நாட்களுக்கு அட்சயா கதைக்காது விடக்கூடும்.

நித்திரை முழுதும் முறிந்து விட அறையை விட்டு வெளியே வந்த போது எதிர் வீட்டிருக்கின்ற ராகுலன் பென்சிலும் கொப்பியுமாக எதிரில் வந்தான். இரண்டாவது வகுப்பில் படிக்கும் அவன் எப்போதாவது வந்து அண்ணா அம்மாவைப்பற்றி பத்து வசனம், உலகம் பற்றி பத்து வசனம் எழுதி;த் தாங்கோ என்பான். இன்றைக்கும் அது எதற்காகவோ தான் வந்திருக்க வேண்டும்.

‘என்னடா..” என்று கேட்டான் சாரகன்.

‘அண்ணா ரீச்சர் சொன்னவ பாரதியார் எழுதின பாட்டு ஏதாவது எழுதிக்கொண்டு வரச்சொல்லி.. சொல்லுறியளே.. எழுதுறன்..”

சாரகன் யோசிக்கத் தொடங்குமுன்னரே எதேச்சையாக அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிவந்தன..

‘நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி..” ராகுலன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

‘முழுப்பாட்டும் என்னண்ணா..”

‘கொஞ்சம் பொறு..எடுத்தாறன்” சாரகன் உள்ளே போனான்.
October 18, 2004

By

Read More

புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி..

அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும் லேபிள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்காக ஒரு வெறும் பதிவினை வெளியிட வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னைய பதிவு அதற்காகத் தான்.லேபிள்களைச் சுட்டுவதன் மூலம் திரட்டப்படும் பதிவுகள் இந்தப் பிரிவுகள் பதிவின் உள்ளடக்கத்திலேயே திரட்டப்படும்.

புளொக்கர் தரும் லேபிள் வசதிகளைப் பரிசோதித்த போது அவற்றின் லேபிள்களை சுட்டினால் அவை குறித்த முழுப் பதிவுகளும் மொத்தமாய் பதிவு உள்ளடக்கத்தோடு வருகின்றன. உதாரணமாக அனுபவம் என்ற லேபிளில் 17 பதிவுகள் இருப்பின் அந்த 17 பதிவுகளும் ஒரே பக்கத்தில் தோன்றுவது அத்துணை நல்லது அல்ல.

நான் இட்டிருக்கும் லேபிள்கள் அவற்றிற்குரிய பதிவுகளின் தலைப்புக்களையும் பதிவு பற்றிய மேலோட்டத்தினை மட்டுமே தரும். இது பக்கம் இலகுவில் தரவிறங்க ஏதுவாகிறது. என்னுடைய லேபிள்கள் பெரும் பிரிவுகள் என்ற தலைப்பில் பக்கத்தே உள்ளது.

இது பற்றிய தொழில் நுட்ப விபரங்களைப் பின்னர் எழுத இருக்கிறேன்.

By

Read More

என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்

அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது.

1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் எனக்கு எவரையுமே அறிமுகம் இல்லாதிருந்த காலத்தில் அச் சிறுகதை வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. காணாமல் போன ஒரு மகனின் தாயின் உணர்வுகளை பேசிய அச்சிறுகதை எனது அச்சில் வெளிவந்த முதற் கதையாயினும் கடந்த வருடம் நின்று திரும்பி பார்த்த போது எனக்கு அது பிடிக்கவில்லை. அதனாலேயே அக்கதை என் தொகுப்பில் இடம் பெறவும் இல்லை.

என் சிறுகதை அச்சில் வெளிவந்த ஆர்வத்தில் அடுத்தடுத்த கதைகளை எழுதத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 20 நாள் இடை வெளியில் கூண்டு என்னும் அடுத்த சிறுகதை வெளிவருகிறது. வெளிநாடு செல்ல வெளிக்கிட்டு இடைநடுவில் பிடிபட்டு திரும்ப இலங்கை வந்து மீண்டும் வெளிநாடு போகவே மாட்டன் என்றிருந்த வேளையில் இராணுவத்தால் கைது செய்யப் பட்டு விசாரணையின் பின் விடுதலையான பின்னர் மீண்டும் வெளிநாடு போக விரும்புகின்ற ஒரு பெண்ணின் கதை. கதையோட்டத்தில் எனக்கு திருப்தி தந்த சிறுகதை அது.

இவ்வேளை சில சுவாரசியமான சம்பவங்களையும் குறிப்பிட வேண்டும். நான் கதை எழுதுவதையும் அவை பத்திரிகைகளில் வருவதையும் எனது பாடசாலை நண்பர்கள் நம்பத் தயாராய் இருக்க வில்லை. கதிர் சயந்தன் எண்ட பெயரில வேறை யாரோ எழுதுகினம். நீ பொய் சொல்லாதே என்றே எல்லோரும் சொன்னார்கள். அந்தச் சமயத்தில் அவர்களை நம்ப வைப்பதற்காக நான் எழுதிய கதைகளின் பாத்திரங்களின் பெயர்களுக்கு என் நண்பர்களின் பெயர்களை இட்டேன். அதன் பின்பே அவர்கள் ஒருவாறு நம்பத் தொடங்கினார்கள்.

அக்கரை என்று நான் எழுதிய ஒரு சிறுகதை எனது இந்திய படகு பயண அனுபவத்தை மையப் படுத்தியது. சிறுகதைகளை விரும்பி வாசிப்பவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்த அந்த சிறுகதையே இலகுவாக வழி சமைத்தது.

அது வரை காலமும் தினக்குரலில் மட்டுமே எனது சிறுகதைகள் வெளிவந்தன. அந்த காலகட்டத்தில் தான் உயிர்ப்புவை நாங்கள் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்தோம். கொழும்பில் இயங்கிய தமிழாலயம் என்னும் அமைப்பின் ஊடாக அது வெளிவந்தது. (பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் சந்தித்த கருத்து முரண்பாடுகள், கொள்கைப் போரிடல்கள், மனஸ்த்தாபங்கள் என்று எல்லாவற்றையும் நாங்கள் அப்போதே சந்தித்தோம் என்பது வேறு விடயம்)

பத்திரிகைக்கு சிறுகதையை அனுப்பி விட்டு எப்ப வரும் என்று எதற்காக பார்த்து கொண்டிருக்க வேண்டும்? இப்பொழுது தான் நம்மிடமே பத்திரிகை இருக்கிறதே. அதிலேயே என் சிறுகதைகளை வெளியிடலாமே என்ற எண்ணத்தில் அதன் பின்னர் தினக்குரலுக்கு கதைகள் அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.

முதலாவது உயிர்ப்பில் வந்த சிறுகதை ஐயோ சயந்தா நீயுமா என்று என்னை நானே கேட்க வைக்கின்ற கதை. முழுக்க முழுக்க பாலகுமாரன் பாதிப்பில் அது கிடந்தது. காதலை வெளிச்சொன்ன ஒரு இளைஞனுக்கு காதலிக்க வேண்டாம். கல்யாணம் கட்டும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று அட்வைஸ் பண்ணுகின்ற ஒரு பெண் தொடர்பான கதை அது. இளைஞன் தமிழனாயும் பெண் சிங்கள இனத்தை சேர்ந்தவளாயும் இருந்தார்கள் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி ஒரு கதையை நான் எழுதியிருக்கத் தேவையில்லை என்று தோன்றினாலும் அதுவே எனக்கு பல பெண் நண்பர்களை தேடித்தந்தது என்பது உண்மை… உண்மை… உண்மை…

அடுத்த உயிர்ப்பு இதழில் எனக்கு மன நிறைவு தந்த அர்த்தம் வெளிவந்தது. போராளிகள் என்பவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் சாதாரண மனித உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லிய அந்தச் சிறுகதையின் பெயரிலேயே என் தொகுப்பு இருந்தது. லீவில் வீடு வந்திருந்த போராளி முன் வீட்டில் இருந்த அவனோடு படித்த பெண் பற்றி கேட்பதும் அவளுக்கு கல்யாணம் முடிந்து அவள் வெளிநாடு போய் விட்டாள் என தாய் சொல்வதும் மெல்லிய இதய சுவரோரம் கூரிய முள் ஒன்று லேசாய் கீறிச் செல்வது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்படுவதும் இப்படியாக பல விடயங்களை அச் சிறுகதை தொட்டது.

அந்த போராளி எழுதி வைத்திருந்ததான

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி
முற்றத்தின் மத்தியில்
பெயர் தெரியா
ஒரு ஒற்றைப் பூமரம்
எப்போதாவது எனைச் சந்தித்து
சில மொழிகள் பேசும் இரு விழிகள்

என்ற கவிதை என்னை மிகக்கவர்நத எனது வரிகளில் ஒன்று.

சில விதி முறைகளை மீறிய காரணத்திற்காக நானும் எனது நண்பன் சேயோனும் உயிர்ப்பு ஆசிரியர் குழுவில் இருந்து நீக்கப்பட்டோம். (பலர் செய்வது போல நானும் அவனும் புதிய உயிர்ப்பு என்ற பெயரில் பத்திரிகை தொடங்குகின்ற முட்டாள்த் தனமான காரியத்தை செய்ய வில்லை. நானும் அவனும் விளம்பர பிரிவுக்கு நியமிக்கப் பட்டோம். அக்கால கட்டத்தில் தான் தமிழ் வெப் றேடியோ மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஆகியவற்றின் விளம்பரங்கள் தாங்கி உயிர்ப்பு வெளிவந்தது என்பதனை எங்களுடைய திறமை குறித்து உங்களுக்கு உணர்த்துவதற்காகவே இங்கே எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன பண்ணுவதாம்.)

அக்கால கட்டத்தில் நான் எந்த சிறுகதையையும் உயிர்ப்புக்கு எழுத வில்லை. எங்கே எனது கதைகள் புறக்கணிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம். குட்டி குட்டி கவிதைகள் எழுதி வந்தேன்.

மீண்டும் உயிர்ப்பின் ஆசிரியர் குழுவில் நான் இடம் பெற்றேன்.(தண்டனைக் காலம் முடிவடைந்ததும்?????). அதுவே கடைசி வெளியீடு என்பது எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. பேசாமல் இதழின் கடைசி பக்கத்தில் கை கூப்பி நன்றி சொல்லும் பெண்ணின் படம் போட்டு நீங்கள் இது வரை காலமும் தந்த ஆதரவுக்கு நன்றி என்று போட்டு விடலாமா என்றும் யோசித்தேன்.

அந்த இதழில் ஒரு பெண்ணின் புனை பெயரில் நான் எழுதியிருந்த முகங்கள் கதையும் எனக்கு பிடித்தது.

கேள்விகள் என்கின்ற ஒரு சிறுகதை திருமறைக் கலாமன்றம் வெளியிட்ட கலைமுகம் என்னும் இதழில் வெளிவந்தது. அக்காலப் பகுதியில் கலைமுகத்தின் ஆசிரியராக இருந்தவன் எனது நண்பன் சோமிதரன். கிட்டத் தட்ட ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே அக் கதையை என்னிடமிருந்து வாங்கி இந்தா வருது அந்தா வருது என்று கொண்டிருந்தான். உது வேலைக்காவாது என்று கருதி விட்டு அச்சிறுகதையை நான் சுடரொளிக்கு அனுப்பியிருந்தேன். பிறகும் பல காலத்தின் பின் ஒருவாறு கலைமுகம் திருமுகம் காட்டியது எனது கதையோடு . நல்ல வேளை சுடரொளியில் வரவில்லை என்று ஆசுவாசப் பட்டபோது அட.. அடுத்த வார சுடரொளியில் அச்சிறுகதை வெளிவந்தது. சோமிதரனிடம் நான் நன்றாகவே வாங்கி கட்டிக்கொண்டேன்.

2003 ஏப்ரல் 20 மீண்டும் தினக்குரலில் எனது சிறுகதை வெளிவருகிறது. கலக்குறே சயந்து என்று என்னை நானே பாராட்டிக் கொள்கின்ற சிறுகதை அது. போர் மையம் கொண்டிருந்த காலத்தில் வன்னியில் அடைக்கலம் தேடியிருந்த இளைஞன் ஒருவன் போர் ஓய்ந்த பின் மீண்டும் வன்னிக்கு போகின்றான். அவனது நினைவுத் தடத்திலிருந்த ஒரு பெண் தொடர்பான கதை தான் அது. வெட்கம் என்ற பெயரில் அது வந்தது. (ஆட்டோகிராப் படம் வெளிவர முன்னமே அது வந்து விட்டது என்பதை இத்தால் அறிய தருகிறேன்.) அதுவே இது வரைக்கும் என்னுடைய இறுதிக் கதை.

(இவை தவிர காதலை வித்தியாசமான கோணத்தில் அணுகுதல் என்ற பார்வையில் அல்லது போர்வையில் கண்ட கேட்ட ஒரு காதல் பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு வித்தியாசமான தீர்வு கொடுத்து கதையாக்கி நான் எழுதுகின்ற சிறுகதைகள் சஜீ என்ற பெயரில் சுடரொளியில் அவ்வப்போது வெளிவரும். அம்மாவுக்கு கூட தெரியாமல். அம்மாவுக்கு தெரிஞ்சா படிக்கிற வயசில என்ன காதலும் கத்தரிக்காயும் என்று பேசுவா)
September 29, 2004

By

Read More

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..

பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த தமிழீழ எழுச்சிப் பாடல்களில் சிலவும் என் கடந்த காலங்களை நினைவு படுத்தியே நிற்கின்றன.

திலீபன் அழைத்தது சாவையா இந்தச் சின்ன வயதில் அது தேவையா என்ற பாடலைக் கேட்கையில் 87 இல் எங்கள் வீட்டின் கட்டட வேலைகள் நடந்த காலம் நினைவுக்கு வருகிறது.

கிழக்கு வானம் சிவக்கும் நேரம் என்னும் பாடலைக் கேட்கின்ற போதெல்லாம் 93 இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் எனது ஆரம்ப நாட்கள் ஞாபகத்தில் வருகின்றன.

ஓடு ஓடு நீ ஓய்ந்து விட்டால் வரும் கேடு என்ற பாடலில் 95 இன் வரலாற்றுத் துயரம் யாழ்ப்பாண இடம் பெயர்வு நினைவில் எழுகிறது.

சின்ன சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊரிழந்தோம் என்ற பாடல் எனது வன்னி நாட்களை நினைவில் இழுக்கிறது.

ஆரம்ப காலங்களில் தமிழ்ச் சினிமாவில் வெளிவந்த சில எழுச்சி மிகு பாடல்கள் தான் தமிழீழ விடுதலைப் போரின் பரப்புரைக்கு பயன்படுத்தப் படும் பாடல்களாக இருந்திருக்கின்றன.

ஊமை விழிகள் திரைப் பட பாடலான தோல்வி நிலையென நினைத்தால் அவ்வகையான ஒரு பாடல்.

பின்னர் தமிழீழ விடுதலைப் போரிற்கென தனித்துவமான பாடல்களை தயாரிக்கத் தொடங்கிய காலங்களில் தமிழக கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானவையாக இருந்திருக்கின்றன.

தேனிசை செல்லப்பாவின் குரல் இன்னமும் எங்கள் நினைவில் நிற்கின்றது. வாணி ஜெயராம், மலேசியா வாசுதேவன், இசையமைப்பாளர் வைத்திய நாதன், மனோ ஆகியோரும் குறிப்பிடக் கூடிய அளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.

வாணி ஜெயராமின்
நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை

என்ற பாடல் கேட்பவர்களின் கண்ணீரை வரவழைக்கும்.

மலேசியா வாசுதேவன் பாடிய
நடடா ராசா மயிலைக் காளை நல்ல நேரம் வருகுது
நடடா ராசா சிவலைக் காளை நாளை விடிய போகுது
பொழுது சாயும் நேரம் – இது
புலிகள் வாழும் தேசம்

என்ற பாடல் நம்பிக்கை ஊட்டுகின்ற ஒரு பாடல்.

மனோ இன்னுமொரு பெண் பாடகியுடன் இணைந்து பாடிய பாடல் காதல் வயப்பட்டிருந்த இரு உள்ளங்கள் விடுதலைப் போரில் இணையும் பொருட்டு தம் காதலை தியாகம் செய்வதாய் அமைந்திருந்தமை கவனிப்புக் குரியது.

தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என்
தேசமெங்கும் குண்டு வந்து வீழும்
கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள்
கையில் கூட ஆயுதங்கள் ஏறும்

என்று ஆரம்பிக்கின்ற பாடல் இப்படி தொடர்கிறது.

காவலுக்கு வந்த பேய்கள்??? கடிக்கும் நாளையில் – ஒரு
காதலென்ன மாலையென்ன இந்த வேளையில்?
எங்கள் புலி வீரர் அவர் இருக்குமிடம் போறேன். – தமிழ்
ஈழம் வந்தால் வாறேன்.

தவிர ஒரு சிறுமியின் குரலில் தமிழக பாடகி ஒருவர்(பெயர் நினைவில்லை) பாடிய காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
என்ற பாடல் அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு மிகப் பிடித்த பாடலாக இருந்தது.

வாணி ஜெயராம் பாடிய வீசும் காற்றே தூது செல்லு என்ற பாடலின் பல வரிகள் பத்து ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்பது ஆச்சரியமாய் இருக்கிறது. அது இதுதான்.

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு

கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ – கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ

இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது..

கால ஓட்டத்தில் தமிழகத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடல்கள் எங்கள் தாயக தேசத்திலேயே உருப் பெற தொடங்கின.

தாயகத்தில் வெளியான ஆரம்ப கால பாடல்களில் பாடகர் சாந்தன் மற்றும் சுகுமார் ஆகியோரின் பங்களிப்பு நிறையவே இருந்தது. சாந்தன் பாடிய எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம். தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடிப்போகிறோம் என்ற பாடலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ஒரு சிறுவன் இராணுவ சோதனைச் சாவடியில் ஒரு பாட்டுப் பாடுமாறு இராணுவம் கேட்க பாடிக் காட்டினானாம்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரும் கவிஞருமான புதுவை இரத்தினை துரை அவர்கள் பெருமளவில் எழுச்சிப் பாடல்களை எழுதியிருக்கிறார். அவரின் பாடல்களில் இது வரை என்னைக் கவர்ந்தவை கரும்புலிகள் என்கிற ஒலிப்பதிவுத் தட்டில் வெளிவந்த அத்தனை பாடல்களும் தான்.

அநாமதேயமான அந்த வரிகள் பல கேள்விகளின் முடிச்சுக்களை அவிழ்க்கின்றன.

ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் – இவை
ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள்
பேரிரைச்சலோடு ஒரு வெடி வெடித்திடும் – இங்கு
போக விடை கொடுத்த நெஞ்சம் துடி துடித்திடும்

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய் விடுவீர்கள்
போன பின்னர் நாம் அழுவோம் யாரறீவீர்கள்.
October 31, 2004

By

Read More

× Close