பாவியர் போற இடம்!

பாவியர் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு சொல்லுவினம். ஆனா நான் பாவியில்லையே.. அப்பாவியெல்லோ!
அடச்சே… ஒரு நிமிச நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சுது.

150 டொலர்!

ரயிலில் கட்டணமின்றி பிரயாணம் செய்வது குற்றம் தான். அட.. ஆகக் குறைந்தது அந்தக் குற்றத்தை புரிந்திருந்தாலாவது தண்டம் அறவிட்டிருக்கலாம். போயும் போயும்.. ரயிலில் முன் சீற்றில் கால் வைத்ததற்கெல்லாம் தண்டம் அறவிடுவார்களா..?

அது குற்றம் என கண்ணுக்கு தெரியத்தக்கதாக எழுதி வைத்த பின்னரும் அவ்வாறு பிரயாணம் செய்தால் அறவிடுவார்கள் தானே!

இன்று மதியம் வகுப்புக்கள் முடிந்து வந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 30 நிமிட பயணம் அது. ஆரம்பகாலங்களில் அவ்வாறான பயணங்களிடையே புத்தகங்கள் வாசிப்பது வழமை. இலங்கையில் இருந்த வரைக்கும் எந்தவொரு ஆங்கில நாவல்களையும் வாசித்ததில்லை. இங்கே அந்த வாய்ப்பு கிடைத்த போது சரி உலக இலக்கியங்களில் ஒரு வகையை ரயிலில் அற்நிது கொள்வோம் என்ற எண்ணத்தில் வாசிக்க தொடங்கினேன். கொஞ்சக்காலம் தான்.

இடையில் ஒரு MP3 Player வாங்க, உலக இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது! என்ன இருந்தாலும் நமது தமிழ்ச்சினிமா பாடல்கள் போல வருமா என்கிற நிலைக்கு கீழிறங்கி கடைசியில் அதுவும் கைவிட்டாயிற்று. (அதற்கு Battery வாங்கி கட்டுப்படியாகவில்லை).

இப்பொழுதெல்லாம் பயண நேரங்களில் ஒரு குட்டித் தூக்கம் மட்டுமே. அது தானே.. ஓடுகின்ற வண்டியில் தூங்குவது போல சுகம் வேறு எங்கு வரும்?

இன்றும் அப்படித்தான்.. லேசாக கண்ணை மூட.. இயல்பாக ஒரு காலின் நுனி முன் இருக்கையில் முட்டிக்கொண்டது. (உன் காலை எடுத்து முன் இருக்கையில் போட்டாய் என்று எழுதேன்.)

கொஞ்ச நெரம் போயிருக்கும். தோளைத்தட்டியது ஒரு கை. சுதாகரித்து கண் விழிக்க ரிக்கெற் பரிசோதகர். ரிக்கெற்றை எடுத்து காட்டினேன். (இத்தனைக்கம் காலை உடனே கீழே எடுத்துவிட்டேன் மரியாதை நிமித்தம்)

ரிக்கெற் எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

காலை முன்னால் வைத்திருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்குதா என்று அவர் கேட்டபோது தான்.. ஓஹோ இந்த விசயத்தை அண்ணர் பெரிது பண்ணப் போகின்றார் என்று விளங்கியது.

ஏதாவது சொல்லி வைப்போமே என்று காலில் லேசான வலி என்றேன்.

தன்னிடமிருந்த குறிப்பு புத்தகத்தை விரித்து கொண்டு என் முன்பாக அமர்ந்தார். அந்த கணம் வரைக்கும் நான் எண்ணியது என்னுடைய தூக்கம் போச்சு என்று மட்டும் தான்.

இது பற்றி தான் றிப்போட் குடுக்க வேணும் என்றார். விசயம் கொஞ்சம் பெரிசு தான் என்று யோசித்துக் கொண்டு பேசாமல் இருந்தேன்.
பெயர் கேட்டார் சொன்னேன். என் பெரிய பெயரை (Family Name, அந்த Name இந்த Name சமாச்சாரங்கள் எல்லாம் சேத்து) அவர்களாக எழுதுவதற்கிடையில் எனது தரிப்பிடம் வந்துவிட கூடும் என்பதால் நானாகவே எனது பெயர் முகவரிகளை எழுதி கொடுத்தேன். தவிர களைத்திருந்தமையாலும் காலில் வலி உணர்நத காரணத்தாலும் அவ்வாறு இருக்கவேண்டியேற்பட்டது என்பதனையும் குறித்து கொடுத்தேன்.

முகவரியை உறுதிப்படுத்த வேணும் என்றார். எனது உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை குடுத்தேன். அங்கிருந்தே அவரோடு பேசினார். உறவினரும் வேலை இடத்தில் நின்று முதலில் என்னவோ ஏதோ என்று பதறி பிறகு உறுதிப்படுத்தினார்.

எல்லாம் முடிந்த பின்னர் நன்றி சொன்னார். இதை றிப்போட் பண்ணுவது தான் தனது வேலையென்றும் தண்டம் குறித்து தெரியாது என்றும் சொன்னார். கிட்டத்தட்ட 150 டொலர் வரலாம் என்றும் சொன்னார்.

ம்.. என்ன செய்வது சில நல்ல பழக்கங்களை 150 டொலர் குடுத்து படிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சக் காலமாகவே என்னுடைய செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வந்தன. இப்போதெல்லாம் வீட்டிலேயே சமைப்பதாலும் சாப்பிடுவதாலும் வெளிச் செலவு என்பது சரியாக குறைஞ்சு வந்தது. அப்பவே நினைச்சன். என்னடா செலவெல்லாம் குறையிதே ஏதோ நடக்கப் போகிறது என்று. இன்று நடந்து விட்டது.

ஆனி மாசம் வரையும் உனக்கு காலம் கூடாது கவனமாயிரு எண்டு அம்மம்மா அண்டைக்கும் சொன்னவ. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ? கடவுளே ஆனி மாசத்தை கெதியில முடி!

By

Read More

சிவராம்! புலிகளின் குரலிலிருந்து..

கடந்த இருபத்தொன்பதாம் திகதி புலிகளின் குரல் வானொலியின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியிலிருந்து..

By

Read More

பழைய Passwords

முற்குறிப்பு:
இணையம் பாவிக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் (முன்னமொரு காலம்) மின்னஞ்சல் முகவரிகளை அளவு கணக்கில்லாமல் பெறுவது வழக்கம். (ஓசியாக என்றபடியால் ஒவ்வொரு நாளும் ஒரு மின்னஞ்சல்).

நேற்று எனது பழைய முகவரிகளை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன்… என்னமோ மூன்று வரியில் அது பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சொல்கிறன்..

கடந்து போன காதல்கள்
இன்னமும்
கடவுச் சொற்களாக…

பிற்குறிப்பு:
கடவுச்சொல் – Password

By

Read More

ஒஸ்ரேலியாவில் சந்திரமுகி

முதல்நாள், முதல்க்காட்சி அலைமோதும் கூட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை.

இரவு ஏழு மணிக் காட்சி. ஏற்கனவே ரிக்கெற்றுக்களை பதிவு செய்து விட்டதனால்.. அவ்வப்போது ஆறுதலாக வந்து சேர்ந்த கூட்டம்..

இடிபட்டு தள்ளுப்பட்டு சட்டைகிழிந்து பேச்சு வாங்கி இவ்வாறான எந்தவிதமான அனுபவங்களும் இல்லாமல் சந்திரமுகி படம் இன்று பார்த்தேன்.

படம் ஏதோ பரவாயில்லைப்பா.. பாபாவை விட பரவாயில்ல.. இது தான் வந்திருந்த பெரும்பாலானோர் சொன்னது.

படம் ஆரம்பித்து ரஜினி தன் சப்பாத்துக்களை காட்டி வந்த போது முன்னிருந்து சிலர் மலர் தூவினார்கள். அட இங்கேயுமா?

வடிவேலு புண்ணியத்தில் தியேட்டர் சிரிப்பலைகளில் மிதந்து கொண்டே இருந்தது.

தவிர சீரியசான சில இடங்களிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது. குறிப்பாக ரஜினி யாரோ ஒரு உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ நிபுணரின் மாணாக்கன் என்ற போது சிரிப்பு தாங்க முடியவில்லை.

இன்னும் ஒரு கட்டத்தில் பிரபுவிடம் ஜோதிகாவின் நிலை பற்றி விளக்க பிரபு ‘என்ன கொடுமை இது’ என்பார். அப்போதும் எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்று தெரியவில்லை.

தேவுடா பாடலில் றிப்பீட்டு சொல்ல டிரெக்ரர் வாசு, பிரபுவின் அண்ணா ராம்குமார், ‘இன்னும் ஒருவர்’ வந்தார்கள். அந்த இன்னும் ஒருவர் யாரென்று தெரியவில்லை.

ஜோதிகா.. லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்கலக்கல்..

சந்திரமுகியாக மாறுகிற போது கண்ணும் முகமும்.. பயமாக்கிடக்கு!
கிராபிக்ஸில் பாம்பு காட்டுகிறார்கள். எதுக்கு காட்டுகிறார்களோ
தெரியவில்லை.

படம் தொடங்கும் போது கமல்காசனுக்கு நன்றி என்று ரைற்றில் போடுகிறார்கள். (எதுக்கு..)

படத்தை தொய்யாமல் கொண்டு சென்றதில் வடிவேலுக்கு பங்கிருக்கிறது.

ஜோதிகாவின் பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்ரன். அவர் பின்னியெடுத்திருப்பார் என்றனர் சிலர்.

எனக்கு ஜோவையே பிடிச்சிருந்தது.

லக்க லக்க லக்க லக்க லக்க லக்க லக்க

By

Read More

பாஞ்சாலியும் ஹெலியும்

ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் நிப்பாட்டி விட்டு ஊர் இருண்டு போய்விடும். சிலர் வீடுகளுக்கும் போயிடுவினம். உப்பிடித்தான் ஒரு சிவராத்திரிக்கு நான் பொம்பிளை வேசம் போட்டு நாடகம் நடிச்சுக் கொண்டிருந்தன். பாஞ்சாலி சபதம் நாடகம். நான் தான் பாஞ்சாலி.

திடீரென்று ஹெலிச்சத்தம் கேட்கத் தொடங்கிட்டுது. பலாலியிலிருந்து காரைநகருக்கு போற ஹெலி எங்கடை ஊர் தாண்டித்தான் போறது. உடனை இங்கை லைற் எல்லாம் நிப்பாட்டியாச்சு. லைற்றைக் கண்டால் கட்டாயம் சுடுவான். அதனாலை போன பிறகு நிகழ்ச்சியை தொடரலாம் எண்டு இருந்தம்.

எங்கடை கஸ்ர காலம் ஹெலி என்ன அசுமாத்தம் கண்டிச்சோ.. சுடத் தொடங்கிட்டான். நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சுடவில்லை. அவன் வேறு எங்கோ சுட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் இருந்த இடத்தில இருந்து பாக்க நல்ல கிளியரா தெரியுது சுடுறது. அதுவும் இருட்டில சுடுறதை பாக்க வடிவா இருக்கும்.

நாடகம் பாக்க வந்த சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடத் தொடங்கிட்டுதுகள். நான் பாஞ்சாலிக்காக நீலக்கலர் சீலையும் கட்டி நல்லா மேக்கப் எல்லாம் போட்டிருந்தன். எங்கடை அம்மம்மா என்னை ஒரு கையில இழுத்துக்கொண்டு வீட்டை ஓடத்தொடங்கினா.

‘கட்டின சீலையோடை ஓடுறது’ எண்டு சொல்லுவினமே அப்பிடி நானும் ஓடுறன். சீலையோடு ஓட கஸ்ரமாகவும் கிடந்தது. மடிச்சுக் கட்டிப்போட்டு ஒரே ஓட்டம்.

ஹெலி சுட்டுட்டு போயிட்டுது. நான் வீட்டை இருக்கிறன். ஓடி வரும்போது தலைமுடி எங்கேயோ றோட்டிலை விழுந்திட்டுது. எனக்கு கவலையாயிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாசம் பழகினது. உண்மையா எனக்கு பொம்பிளை வேசம் போட்டு நடிக்க விருப்பம் இல்லை. என்ன செய்யிறது. நாடகம் பழக்கிறவர் வீட்டுக்கு தெரிஞ்ச ஆள். அவர் கேட்டா வீட்டில ஓம் எண்டு விடுவினம். நானும் வேண்டா வெறுப்பாப்பாத்தான் பழகிறனான். எண்டாலும் பழகின பிறகு நடிக்க முடியெல்லை எண்ட நினைக்க கவலையாயிருந்தது.

திரும்ப நிகழ்ச்சி தொடங்கிற சத்தம் கேட்குது. வீட்டில இருக்க எனக்கு கேட்குது. பாஞ்சாலி சபதம் மீண்டும் தொடரும் எண்டுகினம். எப்பிடித் தொடரும். பாஞ்சாலி வீட்டிலயெல்லோ இருக்கிறாள்.

காரைநகருக்கு போன ஹெலி திரும்பவும் பலாலிக்கு போகும் எண்ட படியாலை வீட்டில ஒருத்தரும் விரும்பவில்லை திரும்பி நாடகத்துக்கு போறதை.

அப்ப எனக்கு நாடகம் பழக்கினவர் வீட்டை சைக்கிளில் ஓடிவாறார்.

அங்கை நாடகம் தொடங்கிட்டுது. நீ இங்கை இருக்கிறாய். கெதியிலை வந்து சைக்கிளிலை ஏறு. எண்டார்.

என்ரை சீலை எல்லாம் குலைஞ்சு போய் கிடந்தது. ஏதோ அப்பிடியும் இப்பிடியும் செய்து சரியாக்கி விட்டார்.

‘சேர் என்ரை தலைமுடி எங்கேயோ விழுந்திட்டுது’ எண்டு சொன்னன். பரவாயில்லை ஏறு எண்டு என்னைக் கொண்டு போனார். ஒரு வேளை ‘நவீன பாஞ்சாலி’ எண்டு பேரை மாத்தப் போறாரோ எண்டு நினைச்சுக் கொண்டு போனன்.

பிறகென்ன நீளக் கூந்தல் எதுவும் இல்லாமல் ஒட்ட வெட்டின என்ரை தலையோடை நான் பாஞ்சாலியாக நடிச்சன். அதுக்கு பிறகு என்னை எல்லாரும் ஆம்பிளை பாஞ்சாலி எண்டு தான் கூப்பிடத் தொடங்கிட்டாங்கள்.

பாஞ்சாலிப் படம் இப்ப கைவசம் இல்லையெண்ட படியாலை இன்னொரு பொம்பிளை வேசம் போட்ட நாடகத்தில இருந்து எடுக்கப்பட்ட படமொண்டை போடுறன். பாருங்கோ


Image hosted by Photobucket.com

By

Read More

× Close