ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை. என்னைக் கேட்டால் சயந்தன் வேறு களங்களை நாவலாக்கியிருக்கலாம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் அந்த விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. (புலியெதிர்ப்பு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பைக் கொண்டிருப்பதாக யமுனா குறிப்பிட்டிருந்தார். உண்மையில் பங்குச்சந்தையில் எதனது பங்கு உச்சவிலையிலிருக்கிறதென்பதற்கு இது உதாரணமாகயிருக்கும்)

ஆறாவடு விடுதலைப்புலிகள் பற்றிய வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்யவில்லை. சற்றே கறாராக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றிய விபரிப்புக்களில் கிட்டத்தட்ட தென்னிந்தியத் திரைப்படங்களைத்தானது நினைவுபடுத்தியது. அதில் சித்தரிக்கப்பட்டதல்ல விடுதலைப்புலிகளின் வாழ்க்கை. தவிரவும், அதில் குறிப்பிடப்படதெதுவுமே விடுதலைப்புலிகள் மீதான ஆழமான விமர்சனங்கள் கிடையாது. அவையெல்லாம் புலிகளின் சாதாரண முகங்கள். அந்த முகங்கள் மீது சனங்களிற்கு ஆழமான விமர்சனங்களெதுவுமேயிருந்திருக்கவில்லை. செல்லக் கோபங்களுடன் சனங்கள் அனுசரித்துச் செல்லும் விடயங்களவை. விடுதலைப்புலிகள் குறித்து வெளிநாட்டிலிருந்து ஆய்வுசெய்பவர்களே சுமத்தவல்லதான மென்போக்கான விமர்சனங்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீதான பிம்பங்களை உடையவிடாத மனமொன்றின் பதிவுகள்.

http://yokarnan.com/?p=363#.UGLqA_PTwe8.facebook